முல்லை நிலம் அடிப்படைப் புரிதல்களும், மீட்பும்
தமிழ்தாசன்

by olaichuvadi

 

நியூட்ரினோ திட்டம், தேக்கு, தைல, தேயிலை தோட்டங்கள், தாது சுரங்கங்கள், குவாரிகள், எஸ்டேட் பங்களாக்கள், பழங்குடி மக்கள் விரட்டியடிப்பு, காடு அழிப்பு இவையனைத்தும் குறிஞ்சி நிலம் மற்றும் அதன் மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள். பசுமைப் புரட்சி, மீத்தேன், கெயில், ஆற்றுமணல் கொள்ளை, குளிர்பான நிறுவனங்கள் மற்றும் தொழிற்ச்சாலைகளின் தண்ணீர்க் கொள்ளை என இவை அனைத்தும் மருத நிலத்தின் மீதும் அதன் மக்கள் மீதும் நிகழ்த்தப்படும் வன்முறைகள். அணு உலைகள், அனல் மின் நிலையம், தாது மணல் கொள்ளை, ஸ்டெர்லைட் காப்பர் வேதி ஆலை, கடல்நீரை நன்னீராக்கும் ஆலை, இறால் பண்ணைக் கழிவுகள், ராட்சச மீன்பிடி எந்திரங்கள் என இவையனைத்தும் நெய்தல் நிலத்தின் மீதும், அம்மக்கள் மீதும் நிகழ்த்தப்படும் வன்முறைகளாகும். இப்படியாக அரசின் ஒவ்வொரு பேரழிப்பு திட்டத்தை ஒவ்வொரு திணையின் அழிவோடு பொருத்திப் பார்க்க முடியும். காரணம் குறிஞ்சி, மருதம், நெய்தல் திணைகளைப் பற்றி நாம் உரையாடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் முல்லை திணை மீது நிகழ்த்தப்படுகிற பேரழிப்பை நாம் அத்திணையோடும் அதன் மக்களோடும் நாம் இணைத்துப் பார்ப்பதில்லை. ஏனெனில் முல்லை நிலம் என்னவென்று நமக்கு தெளிவாக வரையறை செய்து கற்பிக்கப்படவில்லை. எதோ அடர்ந்த சமவெளி காடுதான் முல்லை நிலம் என்று நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது.

சமவெளிக் காடுகள் பெரியளவில் தமிழக சூழலில் இல்லாத போது முல்லை நிலம் என்பது எதைக் குறிக்கிறது? திணையியல் கோட்பாட்டை அறிவியல் நோக்கில் காணாமல் இலக்கணமாக மட்டுமே அணுகியதன் விளைவுதான் இது. அதன்படி முல்லை என்பது காடும் காடு சார்ந்த இடமும் என்ற அளவிலேயே நாம் புரிந்து கொண்டுள்ளோம். குறிஞ்சியில் மலைக்காடுகளும், நெய்தலில் அலையாத்திக் காடுகளும் பரவி இருக்கும் போது முல்லை நிலத்தில் சுட்டப்பட்டும் காடு என்பது எவ்வகையானது? முல்லை நிலத்தின் காடும் காடு சார்ந்த வாழ்வியலும் எப்பேர்ப்பட்டது? இன்று உயிர்ப்புடன் இருக்கும் முல்லை நிலம் ஏதேனுமுண்டா என்ற கேள்விகள் நமக்கு எழக் கூடும். எனவே இச்சூழலில் முல்லை நிலம் குறித்த ஒரு உரையாடலை, ஆவணப்படுத்தும் பணியை துவங்குவது காலத்தின் கட்டாயமாகிறது.

மான்கள், நரிகள், முயல்கள் வாழும் சின்னச்சின்ன புதர்காடுகளை, குன்றுகளை கொண்டு, எப்போதாவது வெள்ளம் ஓடும் காட்டாறு பாயும், கால்நடை மேய்ச்சலுக்கு தகுதியான மானாவாரி பயிர்கள் விளையும் ஒரு செழிப்பான நிலப்பரப்புதான் முல்லை நிலம். அதாவது புஞ்சை நிலம். இன்னும் சொல்லப்போனால் முல்லை திணையில் காடு என்பது மானாவாரி காட்டை குறிப்பதாகவும் உள்ளது. இன்றும் வரகு, சோளம், குதிரைவாலி போன்ற தவசங்களை விதைக்கும் வேளாண்மையில் ஈடுபடும் மக்கள் வேலைக்குப் போவதை ‘காட்டுக்கு போகிறோம்’ என்றே கூறுகின்றனர். வயலை வயக்காடு என்கிறோம். முல்லை நிலத்தின் தொழில் கால்நடை மேய்ப்பது. பட்டிக்காடு என்பது முல்லை நிலத்தை குறிக்கிறது. ஆடுகளை நிலங்களில் அடைத்து வைக்கும் இடத்துக்கு பட்டி என்று பெயர். காடு என்பது சோளம், கம்பு, சாமை போன்ற தவசங்கள் விளையும் காடு.

முல்லை நிலத்தின் விளைதவசங்களான தினை பற்றி சங்க இலக்கியம் 73 இடங்களில் குறிப்பிபட்டிகிறது. தினைக்கு இறடி, ஏனல், இருவி என்ற பெயர்களும் உண்டு. வரகு என்ற தவசம் பற்றி சங்க இலக்கியத்தில் 29 இடங்களில் குறிக்கப்படுகிறது. மக்களிடம் இன்று புழக்கத்தில் உள்ள குதிரைவாலி பற்றி சங்க இலக்கியம் பதிவு செய்ததாக தெரியவில்லை. காட்டாறு மருத நிலத்தில் உள்ளது போன்ற வற்றாத ஆறு அல்ல. காட்டாறு ஆண்டின் சில நாட்கள் மட்டுமே தண்ணீரைக் கொடுக்கும். அதனால் முல்லை நிலத்தில் ஆண்டுமுழுதும் நெல்லை விளைவிக்க முடியாது. எனவே உணவுக்கும், பாலுக்கும் கால்நடைகளை சார்ந்து வாழ வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டது. அதற்கேற்ற பொருளுற்பத்தியில் மக்கள் ஈடுபட்டார்கள். ஆடுகளையும் அதன் ஆவினங்களையும் மேய்த்து, அதன் பயனாய் வரும் பொருட்களை துய்த்தும், விற்றும் வாழும் வாழ்க்கையைக் கொண்ட ஆயர்கள் முல்லை நிலத்தின் மக்களாவர்.

பாலோடு வந்து கூழோடு பெயரும்‘ அதாவது பசுக்களின் பாலைக் கொண்டுவந்து வீட்டிலே கொடுத்துவிட்டு வீட்டில் இருந்த சோற்றைக் கொண்டு செல்லுவதை குறுந்தொகை கூறுகிறது. முல்லை நிலம் அரசாட்சியின் தொடக்க இடம் என்று கூறலாம். தமிழில் ‘கோன்’ என்ற சொல் அரசனைக் குறிக்கும். கால்நடைகளை மேய்க்கும் கோல் என்பதே கோன் என்று ஆனது. கோன்மை என்றால் ஆட்சி செய்தல் என்று பொருளாகும்.

உலகமயத்திற்கு பின்பு முல்லை நிலம் பேரழிப்பை சந்தித்துள்ளது. விவசாயிகள் என்றதும் நெல், கோதுமை விளைவிக்கும் பாசன விவசாயிகள்தான் நமக்கு நினைவுக்கு வருகிறார்கள். அந்த பார்வை என்பதே உலகின் 65 சதவீத உணவுத் தேவையை ஈடுகட்டும் சோளம், கம்பு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு போன்ற தவசங்களை விளைவிக்கும் உழைக்கும் மக்கள் மீதான மிகப்பெரும் வன்முறைதான். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் ஒவ்வொரு இடத்திலும் 1000 ஏக்கருக்கு அதிகமான நிலப்பரப்புகளை அரசு ஆக்கிரமித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது முல்லை நிலத்தைதான். மேய்ச்சல் நிலமும், உழவும் தொழிலும் அற்றுப் போய், முல்லை நிலத்து உழைக்கும் மக்கள் கட்டிட அல்லது நிறுவனக் கூலிகளாக மாற்றப்பட்டுள்ளனர்.

நரிகள் ஊளையிடாத கிராமங்களே இல்லை என்பார்கள். இன்று எந்த ஊர்களிலும் நரிகள் இல்லை. அவ்வகையில் மான்கள், நரிகள், முயல்களின் வாழ்விடமாக இருந்த முல்லை நிலத்து பல்லுயிரிய சூழல் அழிக்கப்பட்டுள்ளது. காவிரி, வையை, தாமிரபரணி போன்ற மருத நிலத்தின் பேராறுகள் குறித்து பேசிக் கொண்டே இருக்கிறோம். சிற்றாறுகள், காட்டாறுகள் உள்ளிட்ட முல்லை நிலத்து நீராதாரங்கள் பல இன்று முற்றிலும் அழிந்து விட்டது. தொல்லியல் நோக்கிலும் முல்லை நிலத்து ஆறுகள் கூடுதல் கவனம் பெறுகிறது. சுமார் பதினைந்து இலட்சம் ஆண்டுகளுக்கும் முந்தியதாக கருதப்படும் பழைய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் வடதமிழ்நாட்டில் காணக்கிடைக்குமளவுக்கு தென்தமிழகத்தில் கண்டறியப்படவில்லை. எனினும் இராபர்ட் புரூஸ்புட் என்ற ஐரோப்பிய அறிஞர் விருதுநகர் மாவட்டம் ஆவியூரில் பழைய கற்கால சில்லு ஒன்றை கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார். இடைக்கற்கால மனிதன் வாழ்ந்த தடயங்கள் மதுரை மாவட்டம் புதுப்பட்டி, சிவரக்கோட்டை போன்ற இடங்களிலும் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வூர்கள் மதுரை – விருதுநகர் மாவட்டத்தில் ஓடும் காட்டாறான குண்டாற்றின் கரைகளில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஆதிமனிதன் வாழ, நாகரிகமடையத் தகுந்த சூழலை முல்லை நிலத்துக் காட்டாறுகள் உறுதி செய்துள்ளன. தமிழகத்தில் அதிகம் அழிக்கப்பட்டிருப்பது அவ்வாறான முல்லை நிலத்து காட்டாறுகள்தான். கிருதுமால், குண்டாறு, வரட்டாறு, கௌண்டா ஆறு, பாலாறு, திருமணிமுத்தாறு, உப்பாறு, சிலம்பாறு, சாத்தையாறு, மஞ்சமலையாறு என மதுரை மாவட்டத்தில் மட்டுமே ஏறக்குறைய 10-க்கும் மேற்பட்ட காட்டாறுகள் உள்ளன. அவற்றில் பாதி அழிந்தும் பாதி அழிவின் விளிம்பிலும் உள்ளது. நகரத்து மக்களுக்கு அவை ஆறுகளென்றே தெரியாத வண்ணம் ஆக்கிரமிக்கப்ட்டுள்ளது.’ஆறுகளிலிடமிருந்து மனிதர்களை அப்புறப்படுத்த வேண்டுமா? பாலம் காட்டுங்கள் போதும்‘ என்ற புதுமொழி நினைவுக்கு வருகிறது.

பறையடித்தலும், ஏறுதழுவதலும் முல்லை நிலத்தின் சிறப்புக் கூறுகளாகும். ஆவினங்கள் அதிகமுள்ள பகுதியில்தான் அதன் தோல்களை கொண்டு உருவாக்கப்படும் பறையும் அதனோடு தொடர்புடைய கலையும் உருவாகியிருக்க முடியும். தொல்லிசைக் கருவியான பறை இன்று முற்போக்கு இயக்கங்களின் மேடைகளில் மட்டுமே ஒலித்து வருகிறது. அதே போல ஜல்லிக்கட்டுக்குத் தடை என்பது முல்லை நிலத்து மக்கள் மீதான தாக்குதலே. உழவு, ஏற்றம், வண்டி, தாம்பு முதலிய வேலைகளுக்கு காளைகளே ஏற்றவை.

காளைகள் காயடிக்கப்பட்ட பின் எருது என்னும் பெயர் பெரும். மாடு என்பது பசு, காளை இரண்டையும் குறிக்கும் பொதுச்சொல்லாகும். எருமை மருத நிலத்தின் குறியீடு போல மாடு முல்லை நிலத்தின் குறியீடு. செல்வமென்ற சொல் மாட்டினை குறிக்கிறது. சங்க இலக்கியத்தில் ஒன்றான கலித்தொகையில் ‘முல்லைக்கலி’ ஏறுதழுவுதலை விவரிக்கிறது. அவற்றில் காளைகளின் வகைகள், அவற்றின் சீற்றம், காளைகளைத் தழுவிப் பிடிக்கும் ஆண்களின் வீரம் ஆகியவை பேசப்பட்டுள்ளன. ‘போர்’ பற்றிய புறப்பொருள் இலக்கணத்தில் முதல்திணை வெட்சி. ‘வெட்சி ஆநிரை கவர்தல்’. அதாவது வெட்சிப் பூவைப் சூடிச் சென்று ஆநிரைகளைக் (மாட்டு மந்தை) கவர்ந்து வருதலை விவரிக்கும் திணை. ஆநிரை மீட்டல் கரந்தை திணை. ஆக பழக்கமற்ற முன்பின் அறிமுகமற்ற காளைகளை கையாள்வது, எதிர்கொள்வது, அதனை வசப்படுத்துவது ஒரு போர் கலையாக, தொழிலாக இருந்துள்ளதைக் காணமுடிகிறது. இதனுடைய பண்பாட்டு நீட்சியே சல்லிக்கட்டு. எருதுக்கட்டு, ஏறுதழுவுதல், மாடு பிடித்தல், மாடு விடுதல், மஞ்சுவிரட்டு என பல்வேறு பெயர்களில் சின்ன சின்ன வேறுபாடுகளுடன் இவ்விளையாட்டு இன்றும் தமிழகத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டு மாட்டினங்கள் ஏறக்குறைய இருபதுக்கும் மேற்பட்டவை. நாட்டு மாடுகள் உயிர்த்திருப்பதே சல்லிக்கட்டு உள்ளிட்ட விளையாட்டுகளினால்தான்.

சல்லிக்கட்டுக்குத் தடை என்பது முல்லை நிலத்து மக்கள் மீதும், தமிழர் பண்பாட்டின் மீதும் தொடுக்கப்படும் போர். இவ்வாறாக முல்லை நிலத்தின் ஒவ்வொரு இயங்கியல் கூறுகளும் அழிக்கப்பட்டு வரும் நிலையில் முல்லை நிலம், அதன் மக்கள், அவர்களின் பல்லுயிரிய சூழல், அவர்களின் உற்பத்தி சார்ந்த பண்பாட்டு வாழ்வியல் ஆகியவற்றை அடையாளப்படுத்துவதும், ஆவணப்படுத்துவதும்தான் முல்லை திணை மீட்பு போராட்டத்தின் முதல் பணி.

பிற படைப்புகள்

Leave a Comment