புன்னகையில் மிளிரும் பேரொளி
புகைப்படக்கலைஞர் நவீன் கௌதம் உடன் ஓர் உரையாடல்

by olaichuvadi

நவீன் கௌதம்

‘சுயம்பு’ என்கிற தலைப்பில் உயிர்ப்பின் பேரொளியாய் மிளிர்கிற பெண்களின் புன்னகைகளைப் படம்பிடித்து வருகிறார் நவீன் கௌதம். புகைப்படக்கலை மற்றும் பயணங்களின் மீது பெரும் ஈடுபாடு கொண்ட இவர் தன் பயணங்களில் எதிர்ப்படுகிற மனிதர்கள், தாவரங்கள், நிலக்காட்சிகள், சடங்குகள் என பலவற்றையும் புகைப்படங்கள் வழியே காட்சிப்படுத்தி வருகிறார். புகைப்படக்காரனாக தனது பயணங்களிலேயே ‘சுயம்பு’  புகைப்படத் தொகுப்பு தனித்துவமானது என்றும் பெரும் நிறைவை அளிப்பதாக இருக்கிறது என்று கூறும் நவீன் கௌதமிடம் ‘சுயம்பு’ புகைப்படத் தொகுப்பு குறித்து உரையாடினோம்…    

சுயம்பு என்கிற இந்த புகைப்படத் தொகுப்பைப் பற்றி பேசுவதற்கு முன்னதாக, இந்த ‘சுயம்பு’ என்கிற வார்தையையை எங்கிருந்து எடுத்துக்கொண்டீர்கள் அல்லது இந்த தொடருக்கு ஏன் ‘சுயம்பு’ என்கிற தலைப்பு?

நான் அதிகமாக புத்தகங்கள் படிப்பவனல்ல. எப்போதாவது எங்கிருந்தாவது ஒன்றைத் தொடங்கவேண்டுமில்லையா? அப்படியாக புத்தகங்கள் வாசிக்க நினைத்தபோது அது புகைப்படம் எடுப்பதற்கும் எந்தவகையிலாவது உதவிகரமாக இருக்கவேண்டுமென நினைத்தேன். அதனால் நான் வண்ணதாசனிலிருந்து வாசிக்க ஆரம்பித்தேன். அவருடைய கவிதைகளில் பெரும்பாலானவற்றை என்னால் ஒரு சட்டகத்துக்குள் காட்சியாக கொண்டுவரமுடியும் என்பதைப் போல இருந்ததால் நான் தொடர்ந்து வண்ணதாசன் கவிதைகளை வாசித்தேன். அப்படி ஒரு முறை வாசிக்கும்போது இந்த கவிதையைக் கடந்துவர நேரிட்டது.

“தானாய் முளைத்து
தானாய் வளர்ந்து
தானாய் பூத்து
தானாய் காய்த்து
தானாய் கனிந்து
தானாய் உதிர்கிற
எல்லா விதையும் சுயம்பு
எல்லா காடும் சுயம்பு”

இந்த கவிதையிலிருக்கிற ‘சுயம்பு’ என்கிற வார்த்தை என்னை கூடுதலாக கவனிக்கவைத்தது. இந்த வார்தையைப் பற்றி வண்ணதாசனிடமே கேட்டபோது, அவர் கூடுதல் விளக்கத்தைத் தந்ததுடன் மற்றுமொரு கவிதையையும் குறிப்பிட்டு வாசிக்கச் சொன்னார். அதிலிருந்து வாழ்வின் எத்தனையோ நெருக்கடியான சூழ்நிலைகளில் வீழ்ந்து, தன்னை உயிர்ப்பித்துக்கொண்டு அதிலிருந்து மீண்டெழுந்து விழுந்த இடத்திலேயே விருட்சமாக வியாபித்து நிற்கிற பெண்கள் ஒவ்வொருவரும் விதையைப் போல சுயம்புவே என்கிற புரிதலுக்கு என்னால் வரமுடிந்தது. அதனால் என்னைச் சுற்றியிருக்கிற, நான் கடந்துவருகிற பெண்களை பதிவுசெய்கிற தொடருக்கு ‘சுயம்பு’ என்கிற பெயர் பொருத்தமாக இருப்பதாக தோன்றியதால் அந்தத் தலைப்பிலேயே தொடர்ந்து பதிவுசெய்து வருகிறேன்.

சுயம்பு தொடர் எங்கிருந்து ஆரம்பித்தது?

சென்னையில் வாரயிறுதிகளில் இயங்குகிற புகைப்படக்கலைஞர்கள் குழுவில் நான் உறுப்பினராக இருக்கிறேன். அந்தக் குழுவானது இப்போதும் சென்னையில் வருடாந்திர புகைப்படக் கண்காட்சியை நடத்திக்கொண்டு வருகிறது. அந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகிற புகைப்படங்கள் ஒரு கருப்பொருளை பேசுவதாக இருக்கவேண்டுமென்பது அடிப்படை கட்டுப்பாடு. நான் அந்தக் குறிப்பிட்ட வருடம் எனது புகைப்படங்களுக்கான கருப்பொருளுக்காக யோசனை செய்துகொண்டிருந்தேன். தவிர அது நான் மனதில் அமைதியில்லாமல் ஒருவித விரக்தியுடன் திரிந்துகொண்டிருந்த காலம். அந்த சமயத்தில் நான் வேலை பார்த்த அலுவலகத்தில் ஒரு அம்மாவும் எனது அறையெடுத்து தங்கியிருக்கிற வீதியில் ஒரு பாட்டியும் நான் அவர்களை நிறைய உதாசீனபடுத்தியபிறகும் என் மீது அக்கறையுடனும் பரிவுடனும் இருந்தார்கள். இத்தனைக்கும் அவர்களுடைய வாழ்க்கையே அப்போது நிலையாமையின் பிடியில்தான் சிக்கிக்கொண்டிருந்தது.

எனது அமைதியின்மையை புரிந்துகொண்ட அவர்கள் என்னுடைய பிடிவாதத்தையும் அறிந்தேயிருந்தார்கள். அவர்கள் என்னிடம் காரணங்களையோ விளக்கங்களையோ ஒருபோதும் கேட்டதில்லை. என்னை எப்படியாவது அன்றைக்கு சாப்பிடவைத்துவிட வேண்டுமென்பதே அவர்களுடைய மெனக்கெடலும் தேவையுமாக இருந்தது. என்னுடைய அலுவலகத்தில் தூய்மைப்படுத்துகிற வேலை செய்கிற அம்மா அவருடைய வீட்டிலிருந்து தினமும் எனக்காக சாப்பாடு கொண்டுவந்து என்னுடைய மேசைமீது வைத்துவிட்டுச் செல்வார். நான் அதை கண்டுகொள்ளாமல் கடந்துகொண்டிருந்தபோதும்கூட அடுத்தடுத்த நாட்களும் அப்படியே தொடர்ந்துகொண்டிருந்தது. போலவே என்னுடைய வீதியில் நான் தினம் சந்திக்கிற பாட்டியும். அந்த அம்மா இரவு சாப்பாட்டுக்கு எடுத்துக்கொண்டிருந்த பிரயத்தனங்களை இந்த பாட்டி என்னுடைய காலைச் சாப்பாட்டிகற்காக எடுத்துக்கொண்டிருந்தார். பிடிவாதமென்பது மெல்ல கரைந்து ஒருநாள் இல்லாமல் போவதுதானில்லையா? நாட்கள் செல்லச் செல்ல மெதுவாக அவர்களுடைய நேசத்தின் பரிமாறலில் என்னை நான் தேற்றிக்கொண்டேன் என்றுதான் சொல்லவேண்டும். பிறகு அவர்களின் புன்னகைகளைப் பெற்றுக்கொண்டு தொடங்குகிற என்னுடைய நாட்கள் அவர்களின் புன்னகையோடுதான் நிறைவு பெற்றுக்கொண்டிருந்தன.

அப்போதுதான் ‘ஒரு உயிர் பசித்திருப்பதை பெண்ணென்பவள் எளிதாக கண்டுகொள்கிறாள், மேலும் அவளுடைய கண்முன்பாக பசித்திருக்கிற உயிரை தன்னால் முடிந்தவரை ஆற்றுவதற்கு முனைகிறாள்’ என்று உணர்ந்தேன். பெண்ணென்பவள் உயிர்த்திரளை உய்ப்பிக்கும் பெருந்தாய் என்பதை என்னுடைய வாழ்நாளில் நிறையமுறை உணர்ந்திருக்கிறேன். இந்த உயிர்ச்சங்கிலி அறுந்துபோகாமல் கடத்திக்கொண்டு வந்திருக்கிறபடியால் பெண் சுயம்புமாகிறாள். அந்த உணர்தலின் தொடர்ச்சியாக அந்த வருட புகைப்படக் கண்காட்சிக்கு ‘சுயம்பு’ என்கிற தலைப்பில் நான் என்னுடைய நாட்களில் கடந்துவந்த பெண்களில் சிலரது படங்களை காட்சிப்படுத்த நினைத்தேன். கண்காட்சி முடிந்தபிறகும்கூட என்னுடைய பாதையில் எதிர்ப்படுகிற பெண்களை தொடர்ந்து பதிவு செய்யவேண்டுமென நினைத்தேன். ஒருகட்டத்தில் அது எனக்கு ஆத்மார்த்தனமான விசயமாகவே மாறிப்போய்விட்டது. இப்போதும் அவர்களை நான் தொடர்ந்து பதிவு செய்துகொண்டிருக்கிறேன்.

உங்களுடைய ‘சுயம்பு’ தொடர்ப்புகைப்படங்களில் எல்லாருமே பெரிதாகச் சிரித்துக்கொண்டிருக்கிறார்களே? அந்த சிரிப்புக்குப் பின்னால் பிரத்யேகமான காரணங்களெதுவும் இருக்கின்றனவா?

நிச்சயமாக. அந்தச் சிரிப்புதான் இந்தப் புகைப்படங்களை தொடர்ந்து எடுப்பதற்கு என்னை உற்சாகமூட்டிக்கொண்டிருக்கின்றன. அந்தப் புன்னகைகளை கழித்துவிட்டுப் பார்த்தால் இந்தத் தொடரில் எதுவுமில்லையென்று தோன்றுகிற அளவுக்கு அந்தப் படங்களுக்கு ஜீவனைத் தந்துகொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் இப்படி பெரிதானச் சிரிப்பு எதுவுமில்லாமல் தான் பதிவுசெய்துகொண்டிருந்தேன். பிறகொருமுறை, ஒரு பாட்டியிடம் “நீங்க அழகா இருக்கீங்க பாட்டி” என சொன்னதும் அவருக்கு சிரிப்பைத்தாண்டி வெட்கம் வந்துவிட்டது. அது அவ்வளவு அழகாக இருந்தது. அப்போதிருந்து நான் அந்த சிரிப்பையும் சேர்த்து பதிவு செய்யநினைத்தேன். பெரும்பாலான படங்களில் நீங்கள் பார்ப்பது சிரிப்பைத்தாண்டிய அவர்களின் வெட்கத்தைத்தான். அந்த வெட்கத்தை அல்லது சிரிப்பைப் பெறுவதற்கு அவர்களிடம் உண்டுபண்ணி கொள்ளவேண்டியிருக்கிற பிணைப்புதான் நான் மேலே குறிப்பிட்டிருக்கிற  ‘ஆத்மார்த்தமான’ என்பதற்கான பொருள். குழந்தைகள் உடனே சிரித்துவிடுவார்கள்; ஏனெனில் அவர்களுக்கு சிரிப்பதற்கென்று பிரத்யேகமாக காரணங்களெதுவும் தேவையில்லை. ஆனால் பெரியவர்கள் சிரிப்பதற்கான காரணத்தை நாம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் அல்லது சிரிப்பதற்கான சூழ்நிலையை உண்டாக்கிக் தரவேண்டும். அதற்குப்பிறகு நீங்கள் அவர்களிடத்தில் பெற்றுக்கொள்கிற ஒற்றைப்புன்னகை அவ்வளவு பெரிய வெளிச்சம்.

ஒருமுறை வட இந்தியாவின் சில பகுதிகளை சுற்றிபார்ப்பதற்காக ரயிலில் போய்க்கொண்டிருந்தோம். அப்போது என்னோடு பயணித்த பெண்களில் சிலரை இறங்கும்போது புகைபடமெடுக்க நினைத்தேன். அப்போது கேமிராவும் கையுமாக நிற்கிற என்னிடத்தில் அவர்கள் இயல்பாக புன்னகைக்கிறார்கள். அவர்களில் ஒருவரிடத்தில், “உங்களுடைய புன்னகை அழகாக இருக்கிறது” என்று அப்போதுதான் கேட்டு தெரிந்துகொண்ட இந்தி வார்த்தைகளில் சொன்னேன். பதிலுக்கு அவர்களெல்லோருமே சேர்ந்து பெரிதாகச் சிரித்தார்கள். பிறகுதான் நான் இந்தி வார்த்தைகளை அரைகுறையாக கேலிக்குரிய உச்சரிப்புடன் சொன்னதற்காக சிரிக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டேன். அங்குச் சென்றபிறகு பல இடங்களில் சந்தித்த பெண்களில் சிலரையும் நான் புகைபடமெடுத்தேன். அவர்களிடத்திலும் நான் அதே தவறுகளுடன்தான் ஹிந்தி பேசினேன்; இந்த முறை தெரிந்தே!

 

சந்திப்பிலிருந்து புகைப்படமெடுத்துக்கொண்டு விடைபெறுகிற வரையிலான தருணங்களை விவரியுங்களேன்?

கேமிரா எப்போதும் என்னுடன் இருக்கும்தான். அதற்காக சந்திக்கிற எல்லாரையும் புகைப்படமெடுத்துவிட முடியாது. அல்லது புகைப்படமெடுக்க வேண்டுமென்பததற்காகவே மனிதர்களை சந்திக்கவும் முடியாது. நான் நிறைய ஊர்ச்சுற்றுபவன். அதுவும் கிராமத்துச் சாலைகள் கூடுதல் இஷ்டம். அப்படியான பயணங்களில் ஓய்வுக்காக மரநிழலில் இளைப்பாறுகிறபோது, சாப்பிடுவதற்காக சிறிய சாலையோர கடைகளுக்குச் செல்கிறபோது அல்லது வெறுமனே வேறெதையாவது படமெடுக்க திரிந்துகொண்டிக்கிருக்கிற போது எதிர்படுகிற மனிதர்களிடம் பேச்சுக்கொடுத்து உரையாடுவது வழக்கம். விருப்பமானதொன்றும் கூட. எனக்கு எல்லா மனிதர்களின் கதைகளையும் தெரிந்து கொள்ளவேண்டுமென்கிற ஆர்வம் இயல்பிலேயே இருக்கிறது. அப்படி வளர்கிற உரையாடலில் அவர்களைப் பற்றி, அந்த ஊரைப் பற்றி, அங்கிருக்கிற கோவில்கள், ஆறுகள், ஏரிகள் மற்ற சிறப்புகள் பற்றிக் கேட்டு தெரிந்துகொள்வேன். சமயங்களில் உரையாடல் சுவாரஸ்யமாக நீள்கிறபோது அவர்களாகவே நிறைய தகவல்களை அள்ளிவீசிவார்கள். அந்த ஊரின் வரலாறு, விளைச்சல், ஊரின் பெரியப்புள்ளிகள் இன்னுமதிகமென போகும். சில மனிதர்கள் அவர்களுடைய சொந்த வாழ்க்கையைக்கூட மூன்றாவது மனிதனென்பதை மறந்து என்னிடம் சொல்லிக்கொண்டிருப்பார்கள். எப்போதாவது பெரிதான ஆறுதல் தேவையிருக்கிறபடி வருத்தங்களில் போய் முடிவடைகிற உரையாடல்களும் இருந்திருக்கின்றன. அப்போதெல்லாம் வார்தைகளாலான ஆறுதலால் ஆவதொன்றுமில்லை என்று தெரியவருகிறபோது எனக்கு உண்மையிலேயே வருத்தமாக இருக்கும்.

பிறகு அங்கிருக்கிறவற்றை புகைபடமெடுக்கத் தொடங்குவேன். எடுத்தவற்றை அவர்களிடத்தில் காட்டுவேன். ஏனெனில் பெண்களை புகைபடமெடுக்க முனைகிறபோது அது பாதுகாப்பு பற்றிய எச்சரிக்கையுணர்வை அவர்களுக்கு இயல்பாகவே வரவழைக்கும். அந்த பயத்தை நான் போக்கவேண்டியிருக்கும்; தவிர அது எனது கடமையும் கூட. ஏற்கனவே எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர்களிடத்தில் காட்டுவேன். மேலும் நான் அப்படி பதிவுசெய்துகொண்டிருக்கிற எனது பயணத்தைப்பற்றியும் எடுத்துச் சொல்வேன். அவர்கள் சம்மதித்தப் பிறகு அவர்களை படம்பிடித்து உடனே அவர்களிடத்தில் காட்டி, “இவன் நம்மை நல்லவிதமாகத்தான் படம்பிடித்திருக்கிறானென” உணரவைத்த பிறகே அவர்களிடத்திலிருந்து விடைபெற்று நகர்வேன். இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், பெரும்பாலோனோர் தாங்கள் பெரிதாக சிரிக்கிற புகைப்படங்களைப் பார்த்துவிட்டு “பல்லையெல்லாம் காட்டிகிட்டு இது நல்லவா இருக்கு” என்று சந்தேகமாக கேட்பார்கள். ஆனால் இந்தத் தொடரில் நீங்கள் தரிசிப்பவையெல்லாமே “இது நல்லவா இருக்கு” என்று அவர்கள் சந்தேகமாக கேட்ட சிரிப்பைத்தான்.

சுயம்பு தொடருக்கான பயணத்தில் சுவாரஸ்யமான அல்லது குறிப்பிட நினைக்கிற மனிதர்கள் அல்லது விஷயங்கள் ஏதாவது?

சென்னை லலித் கலா அகாதமியில் கண்காட்சியில் சுயம்பு தொடர்ப்புகைப்படங்களை காட்சிப்படுத்தியிருந்தபோது அந்த அலுவலகத்தில் தூய்மைப்பணியில் இருக்கிற இரண்டு பெண்கள் அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பொதுவாக எனது புகைப்படங்களை காட்சிப்படுத்துகிறபோதெல்லாம் தள்ளி நின்று பார்வையாளர்களின் வெளிப்பாடுகளை கவனிப்பது வழக்கம். புகைப்படங்கள் பற்றிய நுட்பநுணுக்கங்கள் எதுவும் அறிந்திராத ஒரு பொது பார்வையாளனின் வெளிப்பாடுதான் கலைஞனுக்கு முக்கியமான விமர்சனமாக நான் பார்க்கிறேன், அந்த வகையில் அவர்களிரண்டு பெரும் என்னுடைய புகைப்படங்களை ஒவ்வொன்றாக பொறுமையுடன் பார்த்து தங்களுக்குள்ளாக பேசிக்கொள்கின்றனர். முக்கியமாக படங்களில் இருபவர்களுடைய பெரிய சிரிப்பு இவர்களையும் புன்னைகைக்க வைக்கிறது. ” அந்தம்மா அப்படி சிரிச்சிருக்கு பாரேன், இங்க பாரு இந்தம்மாவோட தெத்துப்பல்ல” என்று கருத்துச் சொல்லிக்கொண்டிருந்தனர். அது பின்னாலிருந்து பார்ப்பதற்கு எனக்கு உணர்வுப்பூர்வமானதாக இருந்தது. சிறிதுநேரம் கழித்து அவர்களிடத்தில் சென்று, “உங்களையும் இது மாதிரி போட்டோ எடுக்கவா” என்று கேட்டபோது அவர்கள் ஆச்சர்யமடைந்தார்கள். “எங்கள எதுக்கு தம்பி, நாங்க என்ன அழகாவா இருக்கோம், அதும் இந்த டிரஸ் ல?” என்று பின்வாங்கினார்கள். ‘நான் எடுத்து உங்களுக்கு காமிக்குறேன் பார்த்துட்டு சொல்லுங்க” என்று சொல்லி அவர்களிருவரையும் புகைப்படமெடுத்து அவர்களிடம் காட்டினேன். “ஏ நீ பாரு எப்படி இருக்க, நான் பாரு எப்படி சிரிச்சிருக்கேன்னு” என்று சொல்லி சந்தோசப்பட்டுக்கொண்டார்கள். பிறகு என்னிடம் திரும்பி “நல்லாருக்கு தம்பி, எடுத்தப்புறம் பார்க்குறப்போ அங்க இருக்கவங்க போட்டோ மாதிரி எங்களோடதும் அழகாத்தான் இருக்கு” என்று சொல்லி நகர்ந்தார்கள்.

ஒருமுறை நாங்கள் நண்பர்கள் சேர்ந்து வால்பாறை சென்றிருந்தோம். நாங்கள் அங்குச்சென்று இறங்குகிறபோது சூழல் எங்களுக்கு பனிக்கம்பளத்தை விரிந்திருந்தது. உண்மையில் அன்றைக்கு நாங்களெல்லோருமே குழப்பத்திலிருந்தோம். ஆனால் அந்த உச்சிமலையில் காற்றைப்போல விசிறிக்கொண்டிருந்த மெலிதான மழை எங்களை மிகவும் லேசாக்கிவிட்டிருந்தது. எங்களுடைய வருத்தங்களையெல்லாம் தூள் தூளாக்கி பள்ளத்தாக்குகளில் வீசியெறிந்தது. தொடர்ந்து எங்கள் உதடுகளை தேநீர்க்கோப்பையில் நனைத்துகொண்டேயிருந்தோம். சமயங்களில் மழை நிரம்பிய கோப்பைகள் கூடுதல் சுவையோடிருந்தன. பிறகு தூறிக்கொண்டிருந்த சாரல் மழையாக கனமெடுக்கத் தொடங்கியது. அப்போது தேயிலைக் காடுகளில் வேலைக்குச் சென்றிருந்தர்வகள் நனைந்துகொண்டே தங்களது வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். பொதுவாகவே எனக்கு மலைகளில் வசிக்கிற மனிதர்களை ரொம்பப் பிடிக்கும். அவர்களுடைய உடை, உணவு, பழக்கவழக்கங்கள் எல்லாவற்றிக்கும் மேலாக கேமிரா முன்பாக அவர்கள் காட்டுகிற வெட்கம்.

அவர்கள் தங்களது தலையில் தேயிலை மூட்டைகளை சுமந்தபடி மழைக்கு தங்கள் உடம்பு முழுக்க சாக்குப்பையால் மூடிக்கொண்டு வேகமாக நடந்துபோய்க்கொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்கு முன்பாகச் சென்று அவர்களிடத்தில் பேச்சுக்கொடுத்துக்கொண்டே அவர்களை மழையோடு சேர்த்து புகைப்படமெடுக்கத் தொடங்கினேன். அவர்கள் தங்கள் வெட்கத்தை பதிலாக தந்துகொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு அம்மாவுக்கு என்னுடைய அம்மா வயதிருக்கும். நான் மழையில் நனைவதை பார்த்து, “தங்கப்புள்ள மழையில நனையாத, சாக்குக்குள்ள வா” என்று அவர் காட்டிய அவசரமும் அக்கறையும் மழையைவிடவும் ஈரமாயிருந்தது. அவரிடத்தில் நான் பெற்றுக்கொண்ட அந்த மழைச்சிரிப்பு என் வாழ்க்கைக்குமானது. அவரைப் போன்றவர்களிடத்தில் பெற்றுக்கொண்டிருக்கிற புன்னகைகள் என்னை இன்னுமின்னும் மனிதர்களை சந்திக்கச்சொல்லி தூண்டுகின்றன.

இந்த சுயம்பு தொடர் எப்போதாவது நீங்கள் புகைப்படத்துறையை தேர்ந்தெடுத்துப் பயணித்துக் கொண்டிருப்பதற்காக பெருமையாக உணர வைத்திருக்கிறதா?

சர்வநிச்சயமாக. நான் ஏற்கனவே சொன்னதுபோல இத்தொடர் என்னை நிறைய இடங்களில் உளப்பூர்வமாக பெரும் நிறைவை நோக்கிக் கூட்டிச் சென்றிருக்கிறது. இந்தத் தலைமுறையில் நமக்கெல்லாம் புகைப்படமென்பது சாதாரண விஷயமாயிருக்கிறது. நம் ஒவ்வொருவரிடத்திலும் நூற்றுக்கணக்கில் நம்முடைய புகைப்படங்கள் இருக்கின்றன. ‘பாஸ்போர்ட்’ அளவு புகைப்படங்களைக் கூட தேவைப்படுகிற நேரத்தில் ஒன்றோ இரண்டோ பிரிண்ட் செய்துகொள்கிற வசதி நமக்கு வாய்த்திருக்கிறது. அப்படியே பத்து அல்லது இருபது புகைப்படங்களை ஒன்றாக பிரிண்ட் செய்திருந்தாலும் அதை பத்திரமாக வைத்திருப்பது என்பது தேவையில்லாத ஒன்று. ஆனால் நமக்கு முந்தைய தலைமுறை அல்லது அதற்கு முந்தைய தலைமுறையில் புகைப்படங்கள் என்பவை நிச்சயமாக பொக்கிஷங்களாகத்தான் இருந்திருக்கின்றன. ஒரேயொரு “பாஸ்போர்ட்” அளவு புகைப்படத்தை மட்டுமே தன்னுடைய கடந்தகால புகைப்பட நினைவாக, தன்னுடைய இளமைக்கால சாட்சியாக வைத்துக்கொண்டு அவ்வபோது அதையெடுத்துப் பார்த்துக்கொண்டு பழைய நாட்களை அசைபோட்டுக் கொண்டிருக்கிற நிறைய மனிதர்களை எனக்குத் தெரியும். என்னிடத்தில் என்னுடையதென ஒரேயொரு புகைப்படம்தான் இருக்கிறது என்கிறபோது அந்த புகைப்படத்தின் மதிப்பை நான் வார்த்தைகளில் சொல்லாமலேயே நீங்கள் உணர்ந்துகொள்வீர்களென்று நம்புகிறேன். அப்படியானவர்களிடம் சென்று அவர்களை சிரிக்க சிரிக்க சில புகைப்படங்கள் எடுத்து பார்க்கத் தருகிறபோது பதிலுக்கு வெளிப்படுத்துகிற அவர்களுடைய உணர்வுகள் எல்லாமே என்னை எப்போதும் ஆத்மதிருப்திக்கு உட்படுத்திக் கொண்டிருக்கின்றன.

ஒருமுறை நான் காரைக்குடிக்குச் சென்றிருந்தபோது அங்கு ஒரு அரண்மணைக்குச் சொந்தக்கார பெண்ணொருவரை சந்தித்தேன். அவர் இதுவரை சந்தித்த பெண்களிடமிருந்து வேறுபட்டிருந்தார். எப்படிச் சொல்கிறேனென்றால், இதுவரை நான் சந்தித்தவர்கள் எல்லோரிடத்திலும் ஒரு உரையாடலென்பது அவசியமாயிருந்தது. ஆனால் அவரிடத்தில் உரையாடலென்பது அவசியப்படாமல் என்னால் அவரைப் படமெடுக்க முடிந்தது. சமயங்களில் இதுபோதுமா என்று தன்னுடைய சைகைகளால் என்னிடம் கேட்டு நான் சொல்வதற்கேற்ப தன்னை சரிசெய்து கொண்டார். ஒரு பெண்ணிடத்தில் உரையாடிலெதுவுமின்றி நேராக அவருடைய புன்னகையைப் பெற்றுக்கொண்ட தருணத்தில் என்னை நினைத்தும் என்னுடைய கேமிராவை நினைத்தும் எனக்குப் பெருமையாக இருந்தது.

சுயம்பு தொடருக்காக புகைப்படம் எடுத்தவர்களை மறுபடியும் எப்போதாவது சந்திருத்திருக்கீர்களா? அந்த இரண்டாவது சந்திப்பின் அனுபவம் எப்படியிருந்தது?

ஒருமுறை நான் ஒருமலைக் கிராமத்திற்குச் சென்றிருந்தபோது அங்கு ஒரு வயதான பாட்டியிடம் பழகியிருந்தேன். அவரைப் புகைப்படமும் எடுத்திருந்தேன். மறுபடி மூன்று ஆண்டுகள் கழித்து மறுமுறை அந்த கிராமத்திற்குச் செல்ல வாய்த்தபோது அந்த பாட்டியைத் தேடிச்சென்று அவரிடம் பேசத்தொடங்கும்போதுதான் அவருக்கு என்னை நினைவில்லையென்பதை உணர்ந்தேன். பிறகு நான் ஏற்கனவே அங்கு வந்திருப்பதையும், அவரைப் புகைப்படமெடுத்திருந்ததையும் நினைவுபடுத்தினேன். பிறகு நினைவிலிருந்து என்னைக் கண்டுகொண்டு நிகழ்காலத்திற்கு வந்தார். அவர் அவருடைய புகைப்படத்தை பார்க்கிற போது ஒருவித வருத்தம் மேலோங்குவதை என்னால் கவனிக்க முடிந்தது.. நான் புகைப்படமெடுத்த சமயத்திலிருந்ததைவிடவும் இப்போது வலுவிழந்து காணப்பட்டார். தவிர அவருடைய முன்வரிசையிலிருந்து இரண்டு மூன்று பற்கள் காணாமற்போயிருந்தன. யாருக்காகவும் காத்திருக்காமல் பறக்கிற காலத்தினுடைய வேகத்தின் சுவடுகள் அவருடைய முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. புகைப்படத்தைப் பற்றியிருக்கிற நடுங்குகிற கைகளில் எல்லாவற்றினுடைய நடுக்கத்தையும் நான் அன்று கண்டுகொண்டேன். எதையோ இழந்துகொண்டு வருகிறாற்போல அவருக்கும் எனக்கும் ஒருசேரத் தோன்றுகிறது. அதற்குப்பிறகு அந்த இடத்தில் சூழ்கிற அமைதியில் எண்ணிக்கையில்லாத வார்த்தைகளின் இரைச்சலிருந்தது.

மனிதர்களை நீங்கள் மிகைப்படுத்துவதுப் போல ஒரு தோற்றமிருக்கிறதே, சுயம்பு தொடர் உங்களுக்கு அதைச் சொல்லிக்கொடுத்ததா?

மற்றவர்களுக்கு மிகைப்படுத்துவது போல தோன்றுமானால் நிச்சயமாக நான் மிகைப்படுத்தித்தான் பேசுகிறேன். இங்கு மனிதர்களையும் மற்ற உயிர்களையும் மிகைப்படுத்திப் பார்க்காமல் நம்மால் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழவே முடியாது. பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் இங்கு வாழ்வதே பெரும் சாதனையாக இருக்கிறபோது இன்னுமும் மற்றவர்களின் சிரிப்புக்கு காரணமாகிற மனிதர்களால்தான் அமைதியென்கிற வார்த்தை அதன் அர்த்தத்தை தாங்கிப்பிடித்திருக்கிறது. இதை சுயம்புவின் பெரும்பாலான பெண்கள் எனக்கு புரியவைத்திருக்கிறார்கள். எல்லோருக்குள்ளுமிருக்கிற ஏதோவொன்று நிச்சயம் கொண்டாடக்கூடியதாக இருக்கும். அப்படி ஒவ்வொரு விஷயத்துக்காக ஒவ்வொருவரையும் கொண்டாடத் தொடங்குகிறபோது இந்த இடம் இன்னுமே அழகாகும். அப்படி நூற்றுக்கணக்கான மனிதர்களிடம் இருக்கிற நல்லப்பக்கங்களை காட்டிக்கொடுத்தற்காகவே நான் என் கேமிராவை பெரிதும் நேசிக்கிறேன். ஏனெனில் சமயத்தில் நான் மறந்து போகிற மனிதர்களைக்கூட என்னுடைய கேமிரா அவ்வபோது நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கிறது. இப்போது திரும்பிப்பார்த்தாலும் என்னுடைய பாதையென்பது நூற்றுக்கணக்கான புன்னகைகளின் ஒளியுடனே இருக்கிறது, அந்த ஒளியில் என்னுடைய தனிப்பட்ட வலிகளும் வருத்தங்களும் என் கண்களுக்கு தெரிவதேயில்லை.

பிற படைப்புகள்

Leave a Comment