சுகுமாரன் கவிதைகள்

by olaichuvadi

இன்னொருமுறை சந்திக்க வரும்போது

இன்னொருமுறை சந்திக்க வரும்போது
உனக்காக
ஒரு துண்டு பூமியைக் கொண்டு வருவேன்.
திரும்பும்போது
துகள்களின் பெருமூச்சை எடுத்துச் செல்வேன்.

இன்னொருமுறை சந்திக்க வரும்போது
உனக்காகக்
கையளவு சமுத்திரத்தை முகந்து வருவேன்.
விடைபெறும்போது
அலைகளின் நடனத்தைக் கொண்டு போவேன்

இன்னொருமுறை சந்திக்க வரும்போது
உனக்காக
ஒருபிடிக் காற்றைப் பிடித்து வருவேன்
படியிறங்கும்போது
உயிரின் துடிப்புகளைக் கணக்கிட்டு நடப்பேன்.

இன்னொருமுறை சந்திக்க வரும்போது
உனக்காக
ஆகாயத்தை விண்டு எடுத்து வருவேன்
பிரியும்போது
விண்மீன்களின் முணுமுணுப்பைக் கேட்டுச் செல்வேன்.

இன்னொருமுறை சந்திக்க வரும்போது
உனக்காக
அணையாத் தணலைப் பொத்தி வருவேன்
எதுவும் மிஞ்சாத
அக்கினித் தூய்மையாகத் திரும்புவேன்.

விண்ணில் தெரியுது பூமி

மழைக்கு முன்
கூரைமறைப்பில் ஒதுங்கினேன்
உல்லாச நீர்க்குறும்பியாக
ஓடிவந்து ஒண்டினாள் குட்டி மிடுமிடுக்கி

கூரைக்கு வெளியில் எட்டிப் பார்த்துச் சொன்னாள்

‘வானமும் பூமியும் சண்டை போடுது’

நானும் அண்ணாந்து பார்த்தேன்
அட, ஆமாம்
ஆனால் விண்ணுக்கும் மண்ணுக்கும்
என்ன பகை?
என்று முதல் விரோதம் என்ற கேள்விகளுடன்.

அணியில் திகழ்வது

வெட்சிப் பந்தின் தனிமலர் மீது
கால்பாவாமல் அந்தர மிதப்பாகப்
பட்டுப்பூச்சி தேனுண்ணும் காட்சி
எதற்கு உவமையாகும்?

முன்விளையாட்டில்
இணையின் இதழ்ச்சுரப்பை
ஒற்றி உறிஞ்சும் மென்மைக்கு

ஒருவேளை
அபூர்வக் கூடலின் அற்புத நொடிக்கும்.

கணிப்பு

இன்னும்
ஒரு இலை துளிர்த்தால்
முழுமையாகும் இந்த மரம்

இன்னும்
ஒரு துளி மழை விழுந்தால்
பூரணமாகும் இந்தக் கடல்

இன்னும்
ஒரு விண்மீன் சுடர்ந்தால்
விரிவாகும் இந்த வானம்

ஆனால்
அந்த இலை துளிர்க்க
அந்த மழை துளிக்க
அந்த மீன் சுடரக்
கணித்திருப்பது
பதின்மூன்றாம் மணியில்.

ஆன்ம விசாரம் – 2

சீடன் கேட்டான்:

‘ஆசானுக்கும் மாணவனுக்கும்

தகுதிகள் என்ன குருவே?’

ஆய கலைகள் அனைத்தும் தேர்ந்த குரு
அவசரமாகச் சொன்னார்:

‘நரைத்த மண்டையிலிருந்து
கருத்த முடியைப் பறிப்பவன் ஆசான்
கருத்த தலையிலிருந்து
வெளுத்த முடியைப் பிடுங்குபவன் சீடன்’

பிற படைப்புகள்

Leave a Comment