ச.துரை கவிதைகள்

by olaichuvadi

 

நத்தை

எனக்குள் எப்போதுமே
வாழ்விற்கும் சாவிற்குகும் இடையே
நகர்கிற சிறு நத்தை இருக்கிறது
அதன் உணர்கொம்புகள்
எனது மகத்தான நாட்களை
கட்டி இழுக்கிறது
என் பிசுபிசுத்த கன்னங்கள்
நீர் காயாத வாடைகாற்றின் சாளாரங்களாகின்றன
கொடும் வெயிலுக்குள் இறங்கும்
பாதங்களை காண்கிறேன்
யாராலும் கண்டெடுக்க முடியாத
நிறமுள்ள வாழ்வே
எதற்கு மத்தியில்
என்னை வைக்கபோகிறாய்
நாளொன்றுக்கு கூட ஓயாது
உலாவும் நத்தையே
சற்றே நீ ஓய்வெடுக்கலாம் இல்லையா.

 

கசிதல்

நானொரு அழுகல்கனி
இதை எங்களூர் சலவைகாரர்தான்
முதலில் சொன்னார்
சென்ற போகத்தில் அவர்
எடுத்து சென்ற உடையில்
அத்தனை அடர்த்தியான சாறுகளாம்
தேய்க்கும் போது கூடுதலாக
மூன்று கைகளை கொடுத்து
இறைவன்தான் உதவினாராம்
அதை கேட்டதும்
எனது அழுகல் உடலை சுற்றிப்பார்தேன்
அதில் எனக்கு அருவருப்பு இல்லை
ஆனால் கேள்வி இருந்தது
நான் எங்கிருந்து அழுகத்தொடங்கினேன்
எனது பாதங்களை புரட்டினேன்
முதுகை திருப்பினேன்
அறைகளை நோட்டமிட்டேன்
குளிர்வடர்ந்த சப்தங்களால் கத்தினேன்
நான் எங்கிருந்து அழுகத் தொடங்கினேன்
வதையானேன்
மார்பில் கத்தியை இறக்கினேன்
ஏகாந்தத்தை புகைத்தேன்
நெஞ்சு கமழியது
புத்திமந்தமடைந்தது
கனிகளை வீசினேன்
நான் எங்கிருந்து அழுகத் தொடங்கினேன்
எல்லாம் வல்ல பூஜ்ஜியமே
முதலில் நான் எங்கிருந்து கசிந்திருப்பேன்
எமது பேரழகு செவியே
முதல் முதலாக நீ எந்த சொல்லுக்கு திறந்தாய்
அந்த சொல்லுக்குதான் நான் கசியத்தொடங்கினேனா
அந்த சொல்லென்ன
அது அத்தனை அடர்த்தியானதா
அப்படியென்றால்
பால்யத்திலே காதுகள் முந்திக்கொண்டு முதிர்ச்சி பெருகின்றன என்பது உண்மைதானா.

 

கர்தோன்

இன்று முழுக்க ஏனோ கர்தோன் நினைவு
அவன் எனக்கு கொடுத்த சங்குமுள்ளை
எங்கு வைத்தேன் என நினைவில்லை
கர்தோன் ஒரு நாய்
கடைசியாக அவனை பார்த்தபோது
நான் சரியாகமாட்டேன் என
கண்களாலேயே சொன்னான்
இங்கு யாரும் சரியானவர்கள் இல்லை
கர்தோன் என நானும் சொன்னேன்
பிறகு தன் தலையை குப்புற கவிழ்த்தி
தொண்டையிலிருந்து
இரத்தம் வடிய வடிய சங்குமுள்ளொன்றை
துப்பி எனக்கு பரிசாக கொடுத்தான்.

பிற படைப்புகள்

Leave a Comment