இருளின் வடிவம்
யுவன் சந்திரசேகர்

by olaichuvadi

 

இந்த ஊரில் பொதுவாகவே மழை குறைவு. மழைக் காலத்தில்கூட, சராசரி மழை அளவு மிகவும் குறைவாக இருக்கும். ஒவ்வொரு கோடையிலும் ஒவ்வொரு தெருவிலும் புழுதி பறக்கத் தண்ணீர் லாரிகள் குறுக்கும் மறுக்கும் ஓடிக்கொண்டிருக்கும். புதிதாக ஆழ்கிணறுகள் தோண்டும் ஓசை அதிர்ந்து கொண்டிருக்கும். நிலத்தடி நீர் என்ன, ஞாபகங்களா? தோண்டத் தோண்ட ஊறுவதற்கு? எப்போதுமே இல்லாவிட்டாலும், எப்போதாவது சில தடவை  மழை பெய்யும் போது செந்திருவின் ஞாபகம் வந்துவிடும் எனக்கு. ஒவ்வொரு வேளையிலும் ஒவ்வொரு முகபாவத்துடன், ஒவ்வொரு நிலையில் அவள் சித்திரம் உதிக்கும். கேலியாக ஓரிரு வார்த்தைகள் உதிர்ப்பாள்; குறுகுறுவென்று உற்றுப் பார்ப்பாள்; ‘இரு இரு, ஓடாதே’ என்று பதட்டமாக அழைப்பாள்; கிசுகிசுத்துக்  கலங்கும் இருளுருவமாகத் தெரிவாள். எப்படியானாலும், உடனடியாக என் உச்சந்தலையை வருடுவாள். அப்போது, இருளின் செதில்கள் முற்றாக உதிர்ந்து, நிலைத்து நிற்கும் சுடர் ஆகிவிடுவாள்.

மழைதான் என்றில்லை, தொடுத்த கனகாம்பரப் பூக்கள், சற்றே உள்ளூர் மணம் கமழும் முகப்பவுடர் வாசம், எண்ணெய் அகல் அணைந்தவுடன் எழும் தீய்ந்த திரி வாசனை, துலக்கமற்ற இருட்டுப்  பரவிய பின்னந்தி வேளை  என்று எது வேண்டுமானாலும் செந்திருவை நினைவுபடுத்தும். விளைந்த ஆண்மகனின் குறுகுறுப்பும், சின்னஞ்சிறு வயதின் வெகுளித்தனமும் ஒருங்கே நிறைந்து தளும்பும் என் மனம்.

ஆமாம், எனக்குள் முழுமையாக நுழைந்த முதல் பெண்ணுருவம் செந்திரு தான். பெண் என்னும் அனுபவம் இருளா, வெளிச்சமா என்ற சஞ்சலம் ஆரம்பித்ததும் அவளிடமிருந்துதான். வாஸ்தவத்தில் அவள் அத்தனை அழகியாகக்கூட இல்லாமல் இருந்திருக்கலாம்; நினைவின் ஆழத்தில் புதைந்துகிடக்கும் தொல்படிமத்தை(fossil என்பதை அப்படித்தானே சொல்கிறார்கள்? அதனுள் உறைந்து மீந்திருக்கும் வண்டலை உயிர்ப்பிக்க முடியும் என்கிற மாதிரிக்கூட எங்கேயோ வாசித்த நினைவு) நினைக்க நினைக்க அந்த உருவத்தின்  அழகு கூடத்தான் செய்கிறது – முதன்முதலாக உள்ளே நிரம்பிய பெண்பிம்பம் என்பதாலோ என்னவோ. 

இடையில் ஒரு தடவை நேரிலேயே செந்திருவைப் பார்க்கக் கிடைத்தது – அப்போது நாற்பதைத் தாண்டியிருந்தேன். ஹோஸ்பெட் கடைத்தெருவில். ஹம்ப்பியின் உஷ்ணத்தில் விஜயநகர சாம்ராஜ்ய இடிபாடுகளைப் பார்த்துவிட்டு சோர்ந்த மனத்துடன் திரும்பியிருந்தேன். கடைவீதியில் இருந்த குறுந்தகடுகள் விற்பனைக் கடையில் ஏதாவது தேறுமா என்று பீராய்ந்துகொண்டிருந்தபோது, அபூர்வமான திரவிய வாசனை என்னை ஈர்த்தது. உரசாத குறையாகப் பக்கத்தில் நின்று, அடுத்த பெட்டியிலுள்ள குறுந்தகடுகளைப் புரட்டத் தொடங்கிய இளம்பெண்ணை ஓரக்கண்ணால் பார்த்தேன்; ஆஹா, செந்திரு!

ஒரு கணம்தான். அந்த முகமும் உடலும் தத்ரூபமாக  செந்திருவேதான். என்றாலும், வெளிறிய வெண்கலத் தோலின் நிறம் காட்டிக் கொடுத்துவிட்டது. வெளிநாட்டுப் பெண். கிரீஸ்காரியாகவோ, இத்தாலியப் பெண்ணாகவோ இருக்கலாம். சிற்பத்தைப் போலத் திருத்தமாய்ச் செதுக்கிய முகம், ரத்தசோகை கண்ட மாதிரி வெளுத்திருந்தது. நான் நடுவயதை எட்டியபிறகும், செந்திரு மட்டும் அதே பிராயத்தில் இருப்பது எப்படி சாத்தியம் என்று மானசீகமாகத் தலையில் குட்டிக் கொண்டேன். ஆனால், பக்கத்தில் நின்ற வதனத்தின் பேரழகு, திரும்பத்திரும்ப ஓரக் கண்ணால் பார்க்கத் தூண்டியது. கண்களின் வெண்மையும் ஆழமும், நாசியின் கூர்மை, நிரந்தரக் குறும்போடு சுழித்திருக்கும் கீழுதடு… இன்னும் பொருத்தமாக, லேசாகக் கொசுத்தூறல் வேறு போட்டது அப்போது! ஆனால், அவள் செந்திரு இல்லை என்பதை அழுத்தி உரைத்த மிக முக்கியமான இன்னொரு வித்தியாசம், மூக்கு.  
செந்திரு, மூக்கின் இரண்டு புறங்களிலும் அகலமான மூக்குத்திகள் அணிந்திருப்பாள். அவற்றினளவே பெரிய தோடுகளும். காதிலும் மூக்கிலுமிருந்து ஒளிவீசிய வெள்ளைக் கற்கள்.

அவள் முகத்துக்குள் ஒரு விளக்கு பொதிந்திருக்கிற மாதிரி பிரமை தட்டும். பளபளக்கும் புடவை – பட்டாகக்கூட இருக்கலாம்.  அப்புறம் அந்தக் கண்கள். அவ்வளவு பெரிய கண்களை பின்னர் நான் பார்த்ததேயில்லை. அவற்றில் இருந்த சிரிப்பையும்தான். நிரந்தரச் சிரிப்பையும் தாண்டி அவற்றில் பார்க்கக் கிடைத்த துயரத்தின் நிழல். இந்த ஒரு அம்சம் நான் நேரடியாகப் பார்த்தபோது எனக்குத் தெரியவில்லை – பிராயம் முற்றியபோது திரும்பத்திரும்ப நினைவில் வந்து பீடித்த விழிகளில், ருசியின் வேரில் மறைந்த நஞ்சுபோலப் பதிந்திருந்த துக்கம்  எனக்குப் புரியவந்தது.

சராசரியைவிட சற்றுப் பெரிய உதடுகள். தாம்பூலப் பற்கள் தெரியப்  புன்னகைக்கத் தயாராய் இருந்த அவற்றின் சுழிப்பு. சிற்பம்போல இருந்த உடலின் மினுங்கும் ஐம்பொன் நிறம். செந்திரு இன்றிருந்தால் எண்பதைத் தாண்டியிருக்கும் வயது. இன்னமும் இருக்கிறாளா என்று யாருக்குத் தெரியும்? ஆனால், எனக்குள் இருக்கும் பிம்பம் இளமை குன்றாமல் தகித்தபடிதான் இருக்கிறது. சும்மா நாலைந்து புள்ளிகள் மட்டுமே வைத்து எனக்குள் வரையப்பட்ட கோலம் அவள். நினைவுக்கு வருகிறவற்றை  மட்டும் சொல்லட்டுமா?

நித்யகல்யாணப் பெருமாள் சந்நிதியில் நிசப்தம் மண்டியிருக்கும். கைநிறையத் துளசியை வாங்கிக்கொண்டு நகர்வோம். ஆடு தழை தின்கிற மாதிரி, நாக்கு மதர்க்கமதர்க்கத் திருத்துழாய் மெல்லுவதற்கு எனக்கு ரொம்பப் பிடிக்கும். கவுரி தான் என்னைத் தடுத்தாண்டவன்; ‘தொளசியெ ரொம்பத் திங்காதடா, அப்பறம் பொண்டுகனாயிருவ.’ என்று எச்சரித்தான். எனக்குக் கொஞ்சங்கூடப் புரியவில்லை. ஏதோ குறைபாடு நேர்ந்துவிடும் என்கிற அளவுக்கு அச்சம் தட்டி, அதற்கப்புறம் ஓரிரு இலைகளை மெல்லுவதோடு நிறுத்திக்கொண்டேன்.

தொடர்ந்த உரையாடல்கள், வேறு பல அறிமுகங்கள் வழியே, அவன் விடுத்த மிரட்டலின் உண்மையான பொருள் எனக்குப் புரியவந்தபோது, கவுரிசங்கரின் குடும்பம் ஊரைவிட்டே போயிருந்தது. கோடை விடுமுறை என்பதால், அதிக சிக்கல்கள் இல்லாமல் உடனடியாக வெளியேறி விட்டார்கள்.

அவன் கதையையும் இன்னொரு நாள் விரிவாகச் சொல்லவேண்டும். அதாவது, அவன் அப்பாவின் கதை. தனியார் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராய் இருந்த, எப்போதுமே அழியாத பிறைச்சந்திரன்போல நெற்றியில்  கோபிச்சந்தன முத்திரை தரித்த,  அழித்தால் நாலு ஆள் செய்யுமளவு ஆகிருதி கொண்ட, எல்லாரிடமும் சிரித்துப் பேசுகிற, கோபமே வராது என்ற சிறப்பியல்பு கொண்ட அபிராமன் சாருக்கு அப்படியொரு முடிவு சம்பவிக்கும்  என்று யார்தான் எதிர்பார்த்திருப்பார்?

போலீஸ் நாய் பெருமாள் கோவில்வரை ஓடி நின்றுவிட்டது என்றும், மோப்பப் பாதையில் மிளகாய்ப்பொடியைத் தூவினால் அதனால் சரியாக நுகர முடியாது என்றும் அகிலா மாமி என் அம்மாவிடம் சொன்னபோது, பூகோளப் புத்தகத்தில் மனத்தைச் செலுத்த  முடியாமல் நானும் அதே இடத்தில்  இருந்தேன்.  

அதை அப்புறம் சொல்லலாம். பெருமாள் சந்நிதி பற்றித்தானே சொல்லிக் கொண்டிருந்தேன்? திருத்துழாய் வாசனையும், பச்சைக் கற்பூரமும் நைவேத்திய நெய்  மணமும் சாந்தமும் நிரம்பிய சந்நிதியில் கண்மூடிக் கைகூப்பி நின்றிருந்த என்னை ஆள்காட்டி விரலால் இடுப்பில்  குத்தி, ‘‘டேய், செந்திருடா. செந்திரு.” என்று பரபரத்தான் கவுரி. குழம்பியவாறு கண்ணைத் திறந்த எனக்கு, அதற்குப் பிறகு மூட முடியாமலானது.  அவன் கண்ணால் சுட்டிய திசையில் பார்த்துத் திகைத்தேன்.

பின்னால் நின்ற பக்தை பெருமாளை வேண்டிக் கண்களை மூடியிருக்க, அவள் இடுப்புக் குழந்தை செந்திருவின் நீண்ட ஜடையைப் பற்றி இழுத்தது. திரும்பிப் பார்த்தவள் புன்சிரித்தபோது, சுவாமி சந்நிதி முழுக்க உபரியாக ஒளி பரவிவிட்ட மாதிரிப் பட்டது. வழக்கத்தைவிட வேகமாக லொட்டென்று என் தலையில் சடாரியை வைத்தார் பட்டர்; இமைக்காமல் நான் பார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டாரோ என்னவோ. இந்த வயதிலேயே போட்டியாக வருகிறானே என்ற கோபம்கூடக் காரணமாய் இருந்திருக்கலாம். ஆமாம், சந்நிதியில்  சகலருமே, பெருமாள்மீது ஒரு கண்ணும் செந்திருமீது ஒரு கண்ணுமாகத்தான் நின்றிருந்தார்கள் – பெண்கள் உள்பட. நாலைந்து நிமிடங்கள் அந்தப் பெண்மணியைப் பார்த்துக்கொண்டே இருந்திருப்பேன். மின்னல்போல ஓடிய  நிமிடங்கள். கோவிலுக்கு வெளியே இழுத்து வந்த கவுரி, கோவில் மதிலுக்குத் தென்புறத்தில், ஊரைவிட்டு வெளியேறும்  இரட்டைச் சாலைக்கு மறுசிறகில், பிரம்மாண்டமாய்ப் படர்ந்திருந்த தாசிக் குளத்தின் கரைமீது கூட்டிப் போனான்.

பாண்டிய ராஜா காலத்தில் இந்த ஊரில் கோலோச்சிய தெலுங்குதேச தாசியொருத்தி, தன் சொத்துகள் அத்தனையும் விற்று வெட்டிய கண்மாய் இது என்று கதை உண்டு. ஊர் ஜனங்களின்மீது அவளுக்கு அவ்வளவு பிரியம் ஊறியதற்கு என்ன காரணம் என்று பின்னாட்களில் பலதடவை வியந்திருக்கிறேன்… ஆனால், அவளால் எத்தனை குடும்பங்கள் நிலைகுலைய நேர்ந்ததோ, குறிப்பாக ஏதாவது குடும்பத்தின் சாபத்தைத் தவிர்க்க முனைந்திருப்பாளோ என்றெல்லாம் தோன்றியது ஒருதடவை. எனக்குள் இருக்கும் எந்த நூற்றாண்டு ஆசாமிக்கு இந்த மாதிரி யோசனை ஓடுகிறது என்று விதிர்த்து, இது சரியில்லையே என்று மானசீகமாகத் தலையில் குட்டிக்கொண்டேன். நீர்ப்பரப்பின் மையத்தில் அடர்த்தியாய் மண்டியிருந்த கருவேலம்புதர்களுக்குள் இருள் மண்டியிருந்தது.  நீச்சல் தெரியாத எனக்கு அந்தப் புதரைப் பார்க்கும்போதெல்லாம் நடுமுதுகில் அச்சம் ஊறும். கண்ணுக்குப் புலப்படாத கையொன்று, என் கணுக்கால்களைப் பற்றி நீருக்குள் இழுக்கிற மாதிரி பிரமை தட்டும். கால்களை ஊன்றி நிற்பதற்கே பெரும் பிரயத்தனம் வேண்டியிருக்கும். ஆனால், அன்றைக்குக் குளத்தில் நிரம்பி நிலவொளியில் அலையாடும் நீரைப்  பார்த்தபோது அத்தனை பரவசமும் கிளர்ச்சியும் ஊறியது ஏன் என்று  அன்றும் புரியவில்லை; இன்றும் புரியவில்லை.

குளத்தின் கரையிலிருந்து பார்த்தால் கோவில் மதிலுக்கு இணையாகப் போகும்  தெற்குரத வீதி வீடுகள் பத்துப் பதினைந்தின் பின்புற வரிசை தெரியும். அவற்றில் ஏதோவொன்றைச் சுட்டிக்காட்டி, “அதான் அவ வீடு” என்றான் கவுரி. அத்தனை வயதான, அவ்வளவு அழகான பெண்மணியை ஒருமையில் சொல்கிறானே என்று தோன்றியது. அடுத்து அவன் சொன்ன வாக்கியம் நிஜமாகவே புரியவில்லை – “ஹும். காசிருந்தா நாமளும் போகலாம்.” ஒரு பெருமூச்சு வேறு விடுத்தான்; பெரிய மனிதன் மாதிரி. ஆனால், செந்திருவைப் பன்மையில் குறிப்பிட்ட யாரையுமே நான் பார்த்ததில்லை என்பதும் நிஜம்தான்; இத்தனை வருடம் கழித்து, நானுமே ’அவள் இவள்’ என்றுதானே சொல்கிறேன்? 

கவுரி என்னைவிட ஒரு வயது பெரியவன். ஒன்பதாம் வகுப்புப் படித்த அவன் மட்டும் இல்லாதிருந்தால், அந்த ஊரின் பல இடங்களுக்கு நான் போகவே வாய்த்திருக்காது. பல சமாசாரங்கள் தெரியாத அசடனாகவே நான் பெரியவனாகியிருப்பேன். பின்னால் ஒரு தடவை தோன்றியது: அப்படியும் சொல்வதற்கில்லை – இரண்டு மூன்று வருடங்கள் பிந்தி நானாகவே தெரிந்துகொண்டிருக்கக் கூடும். சீக்கிரமே தெரிந்ததால் எனக்கு விளைந்தது நன்மைதானா என்றுகூட சந்தேகம் எழுந்ததுண்டு.

பெண்களை அவர்கள் அறியாமல் உறுத்துப் பார்த்துப் பின்தொடர்வதை ஒரு கலையாகவே பயின்று வைத்திருந்தான் கவுரி. எனக்கும் சில நுணுக்கங்கள் சொல்லிக் கொடுத்தான் – ஆனால், அந்த சமாசாரங்களையெல்லாம் அவ்வளவு சுலபமாகக் கற்றுக்கொண்டுவிட முடியாது. அன்றைக்கேகூட, நாலைந்து தடவை செந்திருவின் கண்களை என் பார்வை நேரடியாய்ச் சந்திக்கிற மாதிரித்தான் ஆகிவிட்டது.

செந்திரு. பின்னாளில்  ஏதோ ஒரு சிறுகதையிலோ நாவலிலோ இந்தப் பெயரைப் பார்த்தேன். லாசராவா ஜானகிராமனா நினைவில்லை. வயது ஆக ஆக மறதி கூடிக்கொண்டே போகிறது. சமீபத்தில் நடந்தவை வேகமாக மறக்கின்றன. என்றோ எங்கோ ஆழத்தில் புதைந்தவை தற்சமயம்போலத் தத்ரூபமாக மானசீகத்தில் நிகழ்கின்றன. எனக்கு மட்டும்தான் இப்படியா எல்லாருக்குமேவா என்று தெரியவில்லை. ஆனால், ஒவ்வொருமுறை நினைவிலெழும்போதும், தொட்டுவிடும் தூரத்தில் செந்திரு நிற்பது மட்டும் மாறுவதில்லை. 

எப்படியோ, அவளை எனக்குச் சுட்டிக்காட்டிய  கவுரிசங்கர் பிற்பாடு என்ன ஆனான் என்பதே தெரியாமல் போய்விட்டது. தகப்பனாரின் அகால மரணத்தையொட்டி அவர்கள் குடும்பம் வேறு ஊருக்குப் போய்விட்டது. விசாரணைக்கு வந்த காவல் அதிகாரி, அந்தக் குடும்பத்தை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார் என்று  அகிலா மாமி அம்மாவிடம் சொன்னாள்.

கவுரியின் வீட்டுக்கு நான் அடிக்கடி போவேன். காமிக்ஸ் புத்தகங்கள் ஏகப்பட்டது வைத்திருந்தான். வாசிக்கவும் தருவான். அவனுடைய அப்பா வேலைபார்த்த தனியார் பள்ளியில் பிரமாதமான நூலகம் இருந்தது. அவர்வேறு இவனுக்கு ஏகப்பட்ட புத்தகங்கள் கொண்டுவந்து தருவார்.

நீ ஏன் ஒங்கப்பா  ஸ்கூல்லெ படிக்கல்லே கவுரீ? என்று ஒருநாள் கேட்டேன். உதட்டைப் பிதுக்கினான். வலதுகை சுட்டுவிரலையும் கட்டைவிரலையும் சேர்த்து ஒருமாதிரி சுண்டிக் காண்பித்தான். எனக்கு உடனே புரிந்து விட்டது – இந்த மாதிரி மறைமுகக் கல்வியொன்றை எனக்குப் போதித்ததால்தான் இன்றுவரை கவுரியை மறக்க முடியாமல் இருக்கிறது. அவன் நுட்பமாகத் தெரிவிக்கும் சில விஷயங்கள் புரிந்துவிட்டதாக உணரும் மாத்திரத்தில், எனக்குக் கொஞ்சம் வயதும் உயரத்தில் ஓரிரு அங்குலங்களும்  கூடிவிட்ட மாதிரி உணர்வேன். ஆனால், அவர்கள் வீட்டுக்குப் போனால், அதிக நேரம் இருந்து பேச அமையாது. கைக்குக் கிடைத்த புத்தகங்களை எடுத்துக்கொண்டு, அவசரஅவசரமாகத் திரும்புகிற மாதிரி ஆகிவிடும். கவுரி வெளிப்படையாய்த் தெரியாதபடி என் புட்டத்தில் தார்க்குச்சியால் குத்திக் கிளப்பிவிடுகிறான் என்று தோன்றும். அவனுடைய அம்மா எப்போது கத்த ஆரம்பிப்பார் என்று சொல்வதற்கில்லை. எந்நேரமும் படுத்தே கிடப்பார் அவர். எப்போதுமே தலைவிரிகோலமாக இருப்பார். கத்தும் வேகத்தில் குமுறி அழவும் செய்வார். அழுக்கேறிய மஞ்சள் கயிறு, மூக்கில் காதுச்சவ்வுகளில்  செருகிய ஈர்க்குச்சி, மூட முனையும் மேலுதட்டுக்குள் அடங்க மறுக்கும் பற்கள், அவற்றினிடையே பெரும் இடைவெளி  என  இருக்கும் சதைப் பிடிப்பற்ற முகம் எண்ணெய் படிந்து, இன்னும் விகாரமாகித் தெரியும். 

கவுரியின் தாய்மொழி கன்னடம். ‘பேக்கு, பேடா, மசிரு’ என்கிற மாதிரிச் சில சொற்கள் மட்டுமே அவனுடைய உபயத்தால் எனக்குத் தெரியவந்திருந்தன. அந்த அம்மாள் பேசும் அல்லது திட்டும் வேகத்தில் கன்னடக்காரர்களுக்கே புரியுமா என்பது சந்தேகம். ஒருமுறை, நான் இருக்கும்போதே ஆத்திரம் வலுத்து பீட்டி மாஸ்டர்மீது சப்பாத்திக் குழவியை விட்டெறிந்தார். மாஸ்டர் தலைகுனிந்து பொறுத்துக்கொண்டிருந்தார். கவுரி என்னை அவசரமாக வெளியில் அழைத்துக்கொண்டு வந்தான். அவன் முகத்தில் அவமானம் கறுப்பாகப் படர்ந்திருந்தது. 

பாவம், அம்மாவுக்கு ஏதோ மனசு சரியில்ல போல.

என்று நான் கேட்காமலே சொன்னான்.

ஒன்னையும் ஒன் தங்கச்சியையும் இப்பிடித்தான் அடிப்பாங்களா கவுரீ?

என்று சந்தேகம் கேட்டேன். அசட்டுக் கேள்விகள் நிரம்பிய குப்பைக்கூடை மாதிரி அந்த நாட்களில் இருந்தேன் என்பதை நினைத்தால் சிலசமயம் எனக்கே கூசிக் குறுகி விடுகிறது. ஆனால், கவுரி நிதானமாகச் சொன்னான்:

எங்களெத் திட்டக்கூட மாட்டாங்கடா சம்பத்து. அப்பா மேலதான் கோபத்தைப் பூரா காட்டுவாங்க. ஏன்னே தெரியலே. 

என் மனத்தில் ஊறிய கேள்வியைத் தானே முன்னுணர்ந்தவன் மாதிரி, அடுத்த விநாடியே தொடர்ந்தான்…

இந்த மனுஷனுக்குக் கோபமே வராதுடா. ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டெக் காட்டும் போதுகூட, ‘அடுத்தவாட்டி நல்ல மார்க்கு எடுத்துரணும் கவுரி? என்னா, எடுப்பேல்ல?’ன்னு கேப்பாரு. அவ்வளவுதான். அதுக்கு மின்னாடியே கையெளுத்துப் போட்ருவாரு.

ஓரிரு மார்க்குகள் குறைந்தாலே இலுப்பக்கரண்டியைத் திருப்பிப் பிடித்துக்கொண்டு ஆவேசமாய் நெருங்கும் அம்மாவின் நினைவு வந்தது எனக்கு. அந்தக் கரண்டியை அடுக்களையிலிருந்து என்னையே எடுத்துவரச் சொல்லுவாள், பழிகாரி.  

கோடை விடுமுறைக்குத் தானும் தங்கையும் சித்தப்பா வீட்டுக்கு நஞ்சன்கூடு  போகப் போவதாக கவுரி சொன்னபோது, எனக்குள் ஒரு பள்ளம் விழுந்தது. புத்தகப் பஞ்சம் ஏற்பட்டுவிடுமே என்பதைவிட, சாயங்காலப் பொழுதுகளை எப்படிக் கழிப்பது என்று பெரும் கவலை படிந்தது எனக்குள்.  

ஆனால், நல்லவேளையாக,  ‘விளக்கு வைக்கறச்சே வீடு திரும்பிறணும்’ என்கிற விதியைத் தளர்த்தியிருந்தாள் அம்மா – ஏழாம் வகுப்பு முடிந்த பிறகு. ‘டாண்ணு எட்டு மணிக்கு வீட்டுலெ இருக்கணும்.’ என்று ஆக்கினாள். ஆனால், கவுரி இல்லாமல் தெருவில் அலைவதில் என்ன சுவாரசியம் இருக்கப் போகிறது? சுரத்தே இன்றித் தலையாட்டினேன். 

எங்கிட்டெ இருக்குற காமிக்ஸ் மொத்தத்தையும் குடுத்துட்டுப் போறேண்டா. கவலெப்படாதே
என்று பிரியமாய்ச் சொன்னான் கவுரி. கிட்டத்தட்ட ஐம்பது புத்தகங்கள். பாவம், அவதிஅவதியாய் ஊரைவிட்டுப் போகும்போது அவற்றைத் திரும்பி வாங்கிக்கொள்ள மறந்துவிட்டான். ஊருக்குப் போய், ‘என் பிரிய சம்பத்துக்கு’ என்று ஆரம்பித்த  போஸ்ட்கார்டில், ‘அந்தப் புஸ்தகங்களை என் அன்பளிப்பாக வைத்துக்கொள்ளவும்’ என்று எழுதியிருந்தான். அந்த வரியை எத்தனை தடவை படித்திருப்பேன் என்கிறீர்கள்? ஒவ்வொரு முறையும் மளுக்கென்று கண் நிரம்பிவிடும். பிற்பாடு, பால்யத்தின் இறகுகள் உதிரஉதிர, அந்தப் புத்தகங்களும் ஒவ்வொன்றாய்க் காணாமல் போன விதம் இப்போதுவரை மர்மமாய்த்தான் இருக்கிறது.

அதைவிட மர்மமான சமாசாரங்களெல்லாம் அந்த விடுமுறையிலேயே நிகழக் காத்திருந்தன.  

ஊர் எல்லைக்கும் வெளியில் இருந்தது நித்யகல்யாணப் பெருமாள் கோவில்.வாரத்தில் இரண்டு நாட்களாவது அங்கே அழைத்துச் செல்வான் கவுரி. சந்நிதித் தெருவில் நுழையும் போதே, இன்னிக்குக் கல்கண்டு சாதம்டா.

இன்னிக்கி சக்கரைப்பொங்கல். என்று முன்னறிவிப்பு செய்வான். வெகுநாட்களுக்கு என்னை ஆச்சரியம் பீடித்திருந்தது. எப்படி இவனுக்கு முன்பே தெரிந்திருக்கிறது? அக்கார அடிசில் விநியோகமான அன்று சூட்சுமம் புரிந்தது – அன்றைக்கு வழக்கத்தைவிடவும் கொஞ்சமாய்க் கொடுத்தார் பட்டர். இரண்டாம் தடவை கைநீட்டவே அனுமதிக்கவில்லை. கரண்டியாலேயே ‘தள்ளிப்போ’ என்று விலக்கினார். 

இப்பிடி மூக்குப்பீ அளவு குடுத்தா எப்பிடி வோய்? கடவாய்லெ கூட ஒட்டாது.

என்று முனகியவாறே கருடாழ்வார் சந்நிதி நோக்கி நடந்தான் கவுரி. தீபாராதனை காட்டிக்கொண்டிருந்த சேமியா என்ற சௌமியநாராயணன் இவனைப் பார்த்ததும் ‘இரு’ என்று சைகை காட்டினான். தூபத்தட்டில் விழுந்த இரண்டு ரூபாயை எடுத்து மடியில் சொருகிக்கொண்டு வெளியில் வந்தான். பிறகென்ன, தன் பெரியப்பாவிடம் சொல்லி, இரண்டு தொன்னைகள் நிறையக் கொண்டுவந்து தந்தான். நெய் மணம் அபாரமாய் இருந்தது. என்ன, நாலாவது வாய் விழுங்கும்போது திகட்டியது. ஆனால், கவுரி ஊருக்குப் போன மறுநாள் நான் போனபோது, என்னைத் தெரிந்தமாதிரியே காட்டிக்கொள்ளவில்லை, அந்த சேமியா. நல்லவேளை, அன்றைக்கு வெண்பொங்கல்தான்.

உண்மையில் அன்றைக்கு பெருமாள்கோவில் போக நான் உத்தேசித்ததற்குக் காரணம், கவுரி ஊரிலில்லாதது  அல்ல; கைக்குழந்தையோடு தமையன் வீடு வந்திருந்த  ராஜி அத்தை திரும்பிப்போய்விட்ட பிறகு, வீடு முழுவதும் நிரம்பிவிட்ட வெறுமையோ, மானசீகத்தின் செவியில் அவ்வப்போது ஒலித்து மங்கிய கொலுசுச்சத்தத்தின் பிரமையோகூட அல்ல; அத்தை புறப்பட்டுப்போன கொஞ்ச நேரத்தில்,  காபிப் பொடி இரவல் வாங்கிப்போக வந்த அகிலா மாமி. செம்பா, அது யாரு ஜட்காலே ஏறிப்போனது, நம்ப ராஜியா? என்றாள். அம்மா சாவதானமான குரலில் சொன்னாள்: என்னாச்சு மாமி? பகல்லெயே பசுமாடு தெரியமாட்டேங்கறதே! சிரித்தாள். மாமியின் முகம் மாறியது. இல்லே, கனகாம்பரத்தை இவ்வளவு அள்ளி வச்சுண்டுருக்காளே, செந்திரு வாட்டம்? அதான் அடையாளம் தெரியல்லே… என்று பதிலடி கொடுத்தவுடன், அம்மாவின் முகமும் மாறிவிட்டது. மாமியுடனான உரையாடலில் நிலவிய சகஜபாவம் சட்டென்று காணாமல் போனது. மாமியின் அபிப்பிராயத்துக்கு பதில் சொல்லாமல், தொடர்ந்து சாய்பலகையில் கடுகை உருட்டினாள்.

கொஞ்சம் நிறையவே அள்ளி, வேகமாக உருட்டின மாதிரி எனக்குத்தான் பட்டதோ என்னவோ. மனமொட்டாமல் ஏதோ பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். கொஞ்சநேரத்தில் மாமிக்கும் அலுத்திருக்க வேண்டும். வந்த நோக்கத்தைத் தெரிவித்தாள். அம்மா வேகமாக பதில் சொன்னாள்:அடாடா, இன்னிக்குக் காத்தாலெதான் தீந்தது மாமி. மார்க்கட்டுக்குப் போனா,  எனக்கும் காக்கிலோ வாங்கிண்டு வரேளா… என்று கண்களில் சிரிப்பேயில்லாமல் அம்மா சொன்னது நினைவு வருகிறது. நேற்றுத்தானே அப்பா காபிப்பொடி  வாங்கி வந்தார்? சம்புடம் நிறையக் கொட்டி வைத்தாளே அம்மா? சின்னவர்கள் மட்டும்தான் பொய் சொல்லக்கூடாது போலிருக்கிறது. அம்மா அப்படிக் கடுகடுவென்று முகத்தை வைத்துக்கொண்டதற்குக் காரணத்தை யூகிக்க முடிந்தது – அத்தைமீது அம்மாவுக்கு அத்தனை பிரியம்.

அம்மாவிடம் இரண்டு சந்தேகங்கள் கேட்டேன். ஒன்று, வழக்கமான அசட்டு சந்தேகம். காபிப்பொடி நேத்தித்தானேம்மா வாங்கிண்டு வந்தது? மாமி கேட்டப்ப ஏன் அப்பிடிச் சொன்னே?

அம்மா  முறைத்தாள். சம்பந்தமில்லாத பதில் சொன்னாள்: கண்ணையும் காதையும் மூடிண்டு படிக்கற வேலையப் பாத்தாத் தேவலெயே. ஏற்கனவே மார்க்கு ஒவ்வொண்ணும் தலைகீழாத் தொங்கறது – வவ்வாலாட்டம். வழக்கமாக இந்த இடத்தில் நான் கேட்டிருக்கக்கூடிய பதில்கேள்வியே வேறு. ‘கண் ணை மூடினா எப்படிப் படிக்கறதாம்?’ என்று கேட்டு மேற்கொண்டு வசவு வாங்கியிருப்பேன். ஆனால், அன்றைய நிலைமையில், இரண்டாவதை முன்னிட்டுத்தான் முதல் கேள்வியே எழுந்ததா, இயல்பாகத் தாவிவிட்டேன்:

செந்திரு மாதிரின்னு அத்தையைச் சொன்னதாலெயா?

இந்த முறை அம்மா என்னைப் பார்த்த பார்வையின் அர்த்தம் கொஞ்சம்கூடப் புரியவில்லை – அதில் இருந்தது பிரியமா, பெருமிதமா, தர்மசங்கடமா, ஆச்சரியமா. ஆனால், தரையில் எனக்கருகில் உட்கார்ந்திருந்தவள் எழுந்தாள். என் தலையை ஒரு தடவை அழுத்திக் கலைத்துவிட்டு உள்ளே போனாள். எனக்கு செந்திருவைப் பார்க்கவேண்டும் என்று தோன்றிவிட்டது. எப்படிப் பார்ப்பது? கவுரி இருந்தால் ஏதாவது திட்டம் உருவாக்கியிருப்பான். ஆனால், அவனிடம்கூட என் விருப்பத்தை வெளிப்படையாய்த் தெரிவித்திருப்பேனா என்ன!

கோவிலின் உட்பிரகாரத்தை மூன்றுமுறை வலம் வந்துவிட்டேன். எங்கேயும் செந்திருவைக் காணவில்லை. ஒருவேளை தினசரி வரும் வழக்கம் கிடையாதோ? மனத்தில் லேசாக சோர்வு படிந்தது. அத்தோடு, இன்னொரு ஏமாற்றமும் சேர்ந்து கொண்டது. பெருமாள் கோவிலில் நுழையும்போதுகூட, அறிகுறியேயில்லை; வெண் பொங்கலில் நிரடிய முழு மிளகைக் கடித்த காரம் நாவோரத்தில் கணகணக்க, கருடாழ்வார் சந்நிதி நோக்கிப் போகும்போது கொசுத்தூறல் போட்டது. பக்கத்தில் வந்தவரிடம், ‘டைம் என்னண்ணா’ என்று கேட்டேன் – அனிச்சையாக மணிக்கட்டை உயர்த்தியும் காட்டினேன்; கவுரி இப்படித்தான் கேட்பான்.

ஏழேகால்…

என்று சொல்லிவிட்டுப் போனார். எட்டுமணிக்குள் வீட்டை எட்டிவிட வேண்டுமே என்று பதட்டமானது. கோவில் வாசலை விட்டு வெளியேறுகிறேன், தூறல் வலுத்தது. நனைந்த தலையுடன்  வீடு திரும்பினாலும் அம்மா திட்டத்தான் செய்வாள். 
திடீரென்று மழை வேகமெடுத்தபோது, சந்நிதித்தெருவில் நேரேயோ, அல்லது திரும்பவும் கோவிலுக்குள்ளோ ஓடாமல் தெற்குரத வீதி நோக்கி ஏன் ஓடினேன் என்பது இன்றுவரை புரியவில்லை. ஆழ்மன சமிக்ஞை எதுவோ தூண்டித்தான்  நான் ஓடியிருக்க வேண்டும். தாசிக்குளத்தின் கரையிலிருந்து பார்த்தபோது பின்புறம் தெரிந்த வீட்டின் அடையாளம் எனக்கே தெரியாமல் எனக்குள் பதிந்திருந்ததோ என்னவோ.

தரையில் கால் பாவாமல் நான் ஓடியபோது பின்னோக்கிப் பாய்ந்த எந்த வீட் டிலும் ஒண்டுவதற்கில்லை. எல்லா வீடுகளிலும் திண்ணைகளைக் கம்பி அழியால் மூடியிருந்தது. அந்த வீட்டில் மட்டும்தான் மூடாத திண்ணை. வாசல் சார்ப்பில் இருள் படர்ந்திருந்த வீட்டின் முன்முற்றப் படிக்கட்டை அண்டினேன். தலையிலிருந்து நீர் சொட்டிக்கொண்டிருந்தது. உடல் லேசாக நடுங்கியது. கதவுத் தாழ்ப்பாள் விலகும் சப்தம் லொடக்கென்று  கேட்டது. சட்டென்று வாசலில் ஜமக்காளம் விரித்த மாதிரி நெடுக்குவசத்தில் வெளிச்சம் படர்ந்தது.
உள்ளாறெ வா தம்பீ.

என்று  இதமாக வெதுவெதுத்த குரலுக்குரிய முகம் எட்டிப்பார்த்தது. சொட்டச்சொட்ட  நனைந்தது வீண் இல்லை. மூன்று படிகள் இறங்கிவந்து, என் முன்னங்கையைப் பிடித்து லேசாக இழுத்துக்கொண்டு போனாள்.

அடெடே, இப்பிடியா நனைவாக?

என்றவாறு, கொடியில் கிடந்த தேங்காய்ப்பூத் துவாலையை எடுத்து என் தலையைப் பரபரவெனத் துவட்டினாள். துவாலையில் இருந்தா, அவள் மெலிதாகப் பூசியிருந்த பவுடரிலிருந்தா என்று தெரியவில்லை – மிருதுவான மணம் எழும்பி என்னைக் கிறக்கியது. விளக்கு வைக்கும் நேரத்தில் அம்மா ஏன் பவுடர் போட்டுக்கொள்வதில்லை என்று கேள்வி எழுந்தது. அதைக் கலைத்தபடி, உள்ளறையிலிருந்து சீப்புடன் திரும்பினாள் செந்திரு. தானே தலையை வாரிவிட முனைந்தவளிடம், அவசரமாகச் சீப்பைப் பிடுங்கினேன்.

ஏன் நான் வாரிவிடக் கூடாதாக்கும்? ஐயமாரு வூட்டூப் புள்ளையா!

அந்தக் குரலில் இருந்த கேலி எனக்குப் பிடித்திருந்தது. தொடர்ந்து கேலி செய்ய மாட்டாளா என்று ஆசையாகவும் இருந்தது. அவள் மறுபடியும் உள்ளே போனாள்.  உடம்பில் மெலிதாக சூடு ஏறுவதும், அவளுடைய அருகாமையை இன்னமும் வேண்டி ஆவல் துளிர்ப்பதும் என்று எனக்குள் நடந்த எல்லாமே புதுசாக இருந்தன. அதேசமயம் இனம் தெரியாத பயமும் எழுந்தது. ஏனோ, யாராவது பார்ப்பதற்குள் அந்த வீட்டை விட்டு இறங்கி ஓடிவிடவேண்டும் என்று தோன்றியது. 

திரும்பியவள் கையில் இருந்த சிறு எவர்சில்வர் தட்டில் ஒரு லட்டும், தேன் குழலின் ஒரு பாதியும் இருந்தன.

கவுரி சேக்காளிதானே நீயி. அவென் ஊருக்குப் போயிட்டான்னு, தனியாக் கோயிலுக்கு வந்தியாக்கும்? எடுத்துக்க. ஓம் பேரு என்னா…

சம்பத்து…

என்று எனக்கே சன்னமாகக் கேட்கும்படி நான் தயங்கியதற்குக் காரணம், அவளுக்கு என்னைத் தெரிந்திருக்கிறதே என்பதுதான்; அவளானால் தவறாகப் புரிந்துகொண்டு விட்டாள் போல.
எங்க வூடுகள்லெயெல்லாம் சாப்புட மாட்டீங்கல்ல?!…

கடைசி அட்சரம் முடிவதற்கு முன்பாகவே முழு லட்டை வாயில் திணித்திருந்தேன். அவள் தொடர்ந்து ஏதோ கேட்டாள் – வாய் திறந்து பதில் சொல்ல முடியாமல் தவித்தது நினைவிருக்கிறது. சுவரில் மாட்டியிருந்த பழங்கால மரக் கடிகாரத்தின்மீது என் பார்வை தன்னிச்சையாய்ப் பதிந்தது. ஐயோ, எட்டு மணி….

இரு தம்பீ, இன்னம் தூறல் முளுக்கா விடலே…

என்று அவள் பதறும் குரல் முதுகில் கேட்க, தலையை ஆட்டிக்கொண்டே வேகமாக வெளியே வந்தேன். பரவாயில்லை, மழை பெருமளவு விட்டிருந்தது. வீதியில் ஆள் நடமாட்டம் தொடங்கியிருந்தது. வேகமாக வீடு நோக்கி நடந்தேன். லட்டு வாசனை அம்மாவுக்குத் தெரியாமலிருக்க வேண்டுமே என்று புதுக்கவலை உதித்தது.

இதற்கு மிகச் சரியாகப் பத்து நாள் கழித்து, கவுரியின் குடும்பம் ஊர் திரும்பியது. ஆனால், அவனுடன் தனியாக இருந்து பேச வாய்க்கவில்லை. சந்தர்ப்பம் அப்படி. எந்நேரமும் அவர்கள் வீட்டு வாசலில் போலீஸ்காரர்கள் இருந்தார்கள். வீட்டுக்கு யார் வந்தாலும் துருவித்துருவி விசாரித்தார்கள். இரண்டு நாட்களாக அந்தத் தெருவே கொஞ்சம் பரபரப்பாகத்தான் இருந்தது. தினத்தந்தியில் வந்திருந்த செய்தி வேறு பரபரப்பை அதிகப்படுத்தியிருந்தது. எங்கள் வீட்டில் வாங்குவது தினமணி. அதில் சிறு குறிப்பாகக் கூட வராத சமாசாரம், தந்தியில் நாலு பத்திக்கு வந்திருந்தது நினைவிருக்கிறது.

ஆசிரியர் மரணத்தில் மர்மம்! என்று கொட்டை எழுத்திலும், அதைவிடச் சற்றுச் சிறிய அளவிலான உபதலைப்பில், கொலையா தற்கொலையா – போலீஸ் விசாரணை! என்றும் போட்டிருந்தது.

உண்மையில், பரக்கத் திறந்திருந்த ஜன்னல் வழி, தொங்கும் பாதங்கள் மட்டும் தெரிந்ததைப் பார்த்து மிரண்டுபோன பேப்பர்க்காரப் பையன்தான் அக்கம்பக்கத்துக்குத் தகவல் சொல்லியிருக்கிறான்; அப்புறம் போலீஸ் வந்தது. ஆனால், சித்ரா முடி திருத்தக பெஞ்சில் கிடந்த  தந்தியில், ’நள்ளிரவில் ஏதோ ஒலி கேட்டதாக அண்டை வீட்டார் சொல்கிறார்கள்’ என்றெல்லாம் போட்டிருந்தது.

தினத்தாளில் வராத சில தகவல்களை, அகிலா மாமி அம்மாவிடம் தெரிவித்தாள். கவுரி வீட்டுக்கு மூன்றாவது வீடு அவர்களுடையது. தற்கொலை செய்து கொண்டவருக்குத் தொடையில் காயம் இருக்குமா? ஆனால், கொலை என்னும் பட்சத்தில், வீடு உள்பக்கம் தாழிட்டிருந்தது எப்படி? அதிலும், பூட்டிய வீட்டுக்குள் பீடித்துண்டுகள் வேறு கிடந்ததாம்; அபிராமன் சாருக்கு புகைப்பழக்கம் கிடையாது என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். இன்னும் சில கேள்விகளை அகிலா மாமி எழுப்பினாள். எனக்குக் கோவையாக நினைவில்லை. இடையில் ஒரு தடவை அம்மாவின் காதோடு ஏதோ சொன்னாள் – உதட்டசைவுகூடத் தெரியாத நெருக்கத்தில் அவள் சொன்னது என்னவென்று அம்மாவிடம் கேட்டால் தொலைத்து விடுவாள் தொலைத்து. ஆனால், அவர்கள் யாருக்குமே தெரியாத ஒரு சங்கதி எனக்குள் இருந்தது. கடைசிவரை கவுரியிடம் அதைப் பகிர்ந்துகொள்ள இயலாமல் போனது பற்றிய ஆதங்கம் இதை மீட்டுச் சொல்லும் இப்போதுகூட எனக்குள் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

கவுரியின் குடும்பம் ஊர் திரும்புவதற்கு இரண்டு நாள் முன்னால், பெருமாள் கோவிலுக்கு மறுபடி போனேன். இந்த முறை செந்திருவைப் பார்க்கும் ஆவலால் அல்ல- கவுரியும் இல்லாமல், அவன் கொடுத்த படக்கதைப் புத்தகங்களும் படித்துத் தீர்ந்தபிறகு, பாறாங்கல் மாதிரி கனத்த சாயங்காலத்தைப் புரட்டி நகர்த்தியாக வேண்டும். தவிர, துணைக்கு யாருமில்லாதபோது, தாசிக்குளத்தின் நீர்ப்பரப்பைக் கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டிருந்து, ’நான் பெரியவனாகிவிட்டேன்’ என்பதை எனக்கே ஊர்ஜிதப் படுத்திக்கொள்ளவேண்டும்.
பெருமாள் கோவிலுக்குச் சற்று முன்னால், குறிப்பாகச் சொல்வதென்றால், பாலன் தியேட்டர் இருக்கும் சாலையில், ஒரு சிவன் கோவில் இருந்தது. பெருமாளைச் சேவித்துவிட்டு, தாசிக்குளத்தின் கரையில் அதிக நேரம்  தனியாக நிற்கப் பிடிக்காமல் – பயமாக இருந்தது என்றே சொல்லலாம் – திரும்பிவரும் வழியில் சிவனையும் பார்த்துவிடலாம் என்று என் கால்கள் தாமாக முடிவெடுத்தன.

பெருமாள் கோவில் அளவுக்கே பெரிய கோவில்தான் இதுவும். ஆனால், அங்கேயிருக்கும் கோலாகலச் சூழலும், கூட்டமும் இங்கே இருக்காது. மொத்த ஊருமே சிவனைக் கைவிட்டுவிட்டது என்கிற மாதிரித் தென்படும். வெளிப்பிரகாரத்தின் பின்பகுதி கிட்டத்தட்ட இருட்டாகவே இருக்கும். அந்தக் கோவிலில் இருக்கும் நறுமணத்துக்கு நேர்மாறாக, இந்தக் கோவிலில் நுழைந்த மாத்திரத்திலேயே ஒருவிதப் புழுக்கை மணமும், எண்ணெய்ப் பிசுக்கு மணமும் மூச்சை அடைக்கும். முன்பு ஒரு தடவை வந்தபோது இந்தக் கோவில் குருக்கள் தன் நண்பரிடம் சொல்லிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது.

பின்னே, இவருக்கு ஒய்ஃபோடெ என்னைக்கும் ஒரசல்தானே ஓய். பொறந்தாத்துக்கு வெரட்டறது, மாமனாரோடெ தகராறு, பொண்டாட்டியோடெ சரிக்குச் சரியா டான்ஸாடித் தோக்கடிக்கறது… போறாக்கொறைக்கி, அவ பக்கத்திலே இருக்கும்போதே சின்னவீட்டைத் தலைல தூக்கி வச்சிக்கறதுன்னு எவ்வளவு அழிச்சாட்டியம்? இதே மச்சினனைப் பாரும், அஃபீஷியலா ரெண்டு சம்சாரம். ஊரறிய எத்தனையோ கோபிமார்களோடெ சகவாசம். ஆனா, அத்தனைபேர்ட்டயும் பேதமில்லாதெ அபிமானம். பொம்மனாட்டிகள் கூட்டம் அவரெப் பாக்கத்தானே ஆசெப்படும்?!

இவர் பேசப்பேச மற்றவர் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தபடியே, நெற்றியில் அப்பியது போக மீந்த திருநீறை முன்னங்கைகளில் தடவிக்கொண்டார்.

தாசிக் குளத்தின் கரையில் விட்டுவந்த அச்சம், தனியாக இருந்த சிவனைப் பார்த்தவுடன் மீண்டும் துளிர்த்தது. சந்நிதி பூட்டியிருந்தது. வெளியில் இருந்த தூணில் யார்யாரோ சிந்திப் போயிருந்த விபூதியை எடுத்து இட்டுக்கொண்டேன். இதுவரை ஒழுங்காக இருந்த மனம் திடீரென்று ஏனோ குரங்குச்சேட்டை ஆரம்பித்தது. வெளிப் பிரகாரத்தின் பின்னம்பக்கத்தில் படர்ந்திருக்கும் இருட்டைப் பார்க்க விழைந்தது.

இப்போதுவரையிலும் இந்தக் குழப்பம் நீடிக்கிறது. கொஞ்சம்கூட உத்தேசித்தே இராத வேலைகளைக் கணநேர முடிவில்  செய்து ஆறாத் தழும்புகளை உருவாக்கிக்கொள்ளும் வழக்கம் என் மரணத்தோடுதான் நிற்கும் என்றேபடுகிறது.

பின்னே, மின் ரயில் புறப்படும்வரை காத்திருந்துவிட்டு, புறப்பட்ட நொடியில் ஏற்பட்ட திடீர்த் தீர்மானத்தில் இறங்க முடிவெடுத்து, நாலைந்து பேரை முழங்கைகளால் இடித்து அகற்றி, வேகமெடுக்க முனைகிற ரயிலிலிருந்து குதித்து இறங்கி, கால் இடறி நடைமேடையில் விழுந்து, முன்பின் தெரியாத சகலரிடமிருந்தும் ஏச்சுகளையும் அறிவுரைகளையும் ததும்பத்ததும்ப வாங்கிக்கொண்டு தலைகுனிந்து நடை மேம்பாலம் நோக்கி நடப்பதையெல்லாம் எந்தக் கணக்கில் வைப்பது?

ஆயிற்றா, பயம் நிரம்பிய  பூனை மாதிரி பம்மிப்பம்மிப் பிரதட்சிணம் தொடங்கினேன். மேற்குப் பிரகாரம் ஆரம்பித்துச் சற்றுத் தள்ளிவரை மங்கலான வெளிச்சம் இருந்தது. அது இருளாக மாறும் இடத்தில் மனித உருவங்கள் இரண்டு நின்றிருந்தன. தொடர்ந்து கதைகள் வாசித்து, நிகழ்வுகள் மற்றும் புனைவுகள் நகரும் திக்கையும் தடத்தையும் அறியும் வித்தை கைவரப்பெற்ற  யாருக்கும், அந்த உருவங்கள் இன்னார் என்பது இப்போது தெரிந்திருக்கும். ஆனால், அந்தப் பிராயத்தை எட்டியிராதவன் என்பதால் எனக்குள் பெரும் திகைப்பு கவிந்தது. அதை என்றுமே என்னால் விவரிக்க முடியாது. ஆனாலும், உங்கள் யூகத்தில் ஒரு பாதி சரி. பெண்ணுருவம் செந்திருவேதான். அந்த உருவத்தின் வடிவம் அவ்வளவு துல்லியமாக எனக்குள் பதிந்திருந்தது. தவிர, அவள் அங்கே இல்லை என்றால், என் உள்ளுணர்வு அந்த இடத்துக்கு என்னை இழுத்து வந்திருக்கக் காரணமேயில்லை.

மற்ற உருவத்தைப் பற்றித்தான் குறிப்பாக ஏதும் சொல்ல முடியவில்லை. அது ஆணுருவம் என்பதில் சந்தேகமேயில்லை. அபிராமன் சார்  போலவே  இருந்தது என்னுடைய பிரமையாகக்கூட இருக்கலாம். பின்னர் வந்த நாட்களில் நடந்த சம்பவங்களையொட்டி, அது அவர்தான் என்று என்னளவில், நானாகவேகூட, உறுதி செய்து கொண்டேனோ என்னவோ.  
பெண்ணுருவம் மெலிதாக அழுதுகொண்டிருந்தது; ஆணுருவத்தின் அசைவுகளில் அபாரமான பிரியமும் ஆறுதலும் தெரிந்தது. ஓரிரு விநாடிகளில் ஆணுருவத்தின் தோளில் சாய்வதற்கு முன்னேறியது பெண்ணுருவம்.

அவர்கள் இருவரும் இறுக்கி அணைத்துக்கொண்டதை நிஜமாகவே நான் பார்த்தேனா, அல்லது பின்னாளைய யூகம் பூர்த்திசெய்து தந்த காட்சியா அது என்பதும்கூட தெளிவில்லாமல்தான் இருக்கிறது. ஆனால், அந்தக் காட்சி மானசீகத்தில் நிரம்பும்போதெல்லாம் தன்னியல்பாக உள்நாக்கில் பரவும் லட்டுவின் ருசியில் தித்திப்பு சற்றும் குறையவில்லை. சில நாள் கனவுகளில், அந்த ஆணுருவம் நானாகவேகூட இருந்ததுண்டு. இது அனைத்தையுமே தெர்மோகோல் மாளிகையாக ஆக்கும் வேறொரு கேள்வியும் இருக்கத்தான் செய்கிறது – அத்தனை விஷயங்கள் அறிந்து வைத்திருந்த கவுரிசங்கருக்கு  இந்த விஷயம் தெரியாமல் இருந்தது எப்படி? அல்லது, தெரிந்தேதான் சொல்லாமல் இருந்தானோ?

பிற படைப்புகள்

Leave a Comment