விடியல்
இரா.சிவசித்து

by olaichuvadi

 

பொழுதடைய பொறுக்காமல் வானம் கொக்கு முக்காடு போட்டுக் கொண்டது. “தவுடன்” வாசலை முழி உருட்டி விசாரித்தான். இனிமேல் வெளியே நகர முடியாது என்பது தெளிவு. எப்படா வீட்டைவிட்டு மந்தைக்கு ஓடலாம் என்றிருந்தவனை மழை வந்து அமுக்கிவிட்டது. ஏற்கனவே தவுடனுக்கு ஒரு வாரமாக  காய்ச்சல். “ரெம்ப நாளா வாசனூர் காச்சக்காரி அம்மனுக்கு போட்ட நேத்திக்கடங் இன்னுங் கழிக்காமலே கெடக்கு” யென்று நாலு நாளாக நாளும் பொழுதுமாக “ஓயுமா-ஒழியுமா” என்றில்லாமல் அம்மாக்காரி அனத்தி எடுத்து விட்டாள். நேற்றைக்குத்தான் தவுடனுக்கு உடம்பு கொஞ்சம் உசுப்பட்டது. நண்டு கொழுத்தால் வலையில் தங்குமா? சாரத்தை இடுப்பில் இறுக்கிக் கெட்டிக்கொண்டு, ஊறிய எச்சிலை வாசலில் நின்றபடியே எட்டி வெளியே துப்பினான். எந்தச் சாமி புண்ணியமோ வாய்க்கசப்பு கொஞ்சம் குறைந்திருக்கிறது. மெல்ல ஒரு எட்டு போய் வந்திருக்கலாமேயென மனசு ஒரு நிலையில்லாமல் வந்தது. ஒரு வாரமாக செழிப்பான தீவனமேதும் கிடையாது. என்னத்தையோ ஒண்ணுக்குப் பாதியாக உள்ளுக்குள் போனதும் ஓங்கரித்துக் கொண்டு வெளியேதான் வந்தது. நாக்குக்கு சொனை வந்ததுதான் தாமதம். உடனே லாலாக் கடை அலுவாவும், சிவேரி சுப்பையா புள்ள கடை மைசூர்பாவும் நினைவில் வந்து விழுந்தது. மறுபடியும் மழையைப் பார்த்தான். இன்னமும் ஏறியடித்தது. உப்பு உறப்பகத் தின்றால் கூட தேவலதான்.

“ஏய்யா, கொஞ்சானம் சாப்டுட்டு ஓரங்கு” என்று அம்மாக்காரி சோற்றில் கீரக் கொழம்பு சாரை மட்டும் ஊத்திக் கிளறிக் கொண்டு வந்து வைத்தாள். தவுடனுக்கு முகத்தில் அடிப்பது போல இருந்தது. பெடதியை சொரிந்து கொண்டே “மதியங் வச்ச கொழம்புல இம்புட்டு கீரைய மட்டும் இருத்து ஒரு கிண்ணில வச்சா தொட்டுக்கிறதுக்காது ஆவும்ல” என்றான். “ராத்திரிப்போல கீரைய தின்னா செரிக்காது. ஏற்கனே மேலுக்கு சொவமில்லாம கெடந்துருக்க” “அக்காட்ட இத்தினிப்போல ஊருகாயாச்சு வாங்கியாவேங்” “நெனச்சேங், பின்ன அப்புடியே அயத்துப்போனே சரி இந்த ஒரு நேரத்துக்கு கஞ்சி மாரி கரைச்சு தாரேங் உள்ள தள்ளு, நாளைக்கு காலைல உண்டானதப் பாப்போம்”. இதுவே சாதாரண நாளில் என்ன சோறு, தண்ணி, கஞ்சி, கறி, புளி என தவுடன் சடைத்திருப்பானென்றால் “உனக்கெல்லாங் ஈர மண்ணத் தின்னு இடியோலத் தண்ணிய குடிச்சாத்தாங் ” என பதிலுக்கு அம்மாக்காரியும் வணங்கியிருப்பாள். சில வட்டம் அவளிடம் நேரத்தோதும் தொண்டத்தண்ணி இருப்பும் வாய்த்தால், “நீ கைப்புள்ளையா தொட்டில்ல கெடக்கைல ஒருநா சோத்த வடிச்சுட்டு சட்டிய தூக்கி ஆற வச்சுட்டு, வெளிய ஒரு வேலையா போய்டேங். உங்கக்காக்காரி உன்னைய பாத்துக்கிடுதம்னு மண்டைய ஆட்டிட்டு ஆளு அங்கிட்டு நவண்டதும் வெளாட ஓடிட்டா. நானும் உங்கப்பாவும் வந்து பாக்கைல நீ படுத்தமானிக்கே மோண்டு விட்டுருக்க போல! அது அப்புடியே தரைல விழுந்து சோத்துல தெரிச்சுருக்கு. இப்பென்ன? நம்ம புள்ளதான?னு கேட்டுட்டு எடுத்து வச்சு சாப்டாரு. உன்னயப்போல வேணுங்க நேரமேல்லாங் தோணுதத திங்கதுக்கு தட்டழிஞ்சா நம்ம கூட்டாளி பாடு ஓடிக்கிடுமா?” என கிளைக் கதையொன்றை அவிழ்த்திருப்பாள்.

தவுடனுக்கு நாக்கு நீண்டு கழுதபெறண்டு போனதெல்லாம் அவன் மோட்டாரில் ஓடப்புறப்பிட்டதற்கு பின்புதான் என்ற எண்ணம் அவளுக்கு, “கருமலைக்குப் போய் கல்லொடைக்க வேலயா? ஆஞ்சு ஓஞ்சு வந்து இருக்காளுகிட்ட சடைக்கதுக்கு? மனம் போல ஊர்வழி சுத்திக்கிட்டு, கடகாட்டுல பெறக்கித் தின்னுக்கிட்டு, என்னமோ கொம்புல உழுது குண்டில மரமடிச்ச மானிக்கு ஒய்யாரத்துல போய் நிக்கியே என்ன?” என பல நினைப்பு அவளுக்குள் இருக்கலாம். தவுடனுக்கு எப்ப விடியும் என்பதுதான் ஒரே குறி!

“சிவேரி, விஸ்நாப்பேரி, தெக்குச் சத்திரம், வடக்குச் சத்திரம், ராயிரி, ராயிரி, ராயிரி, ராயரெய்…” என வெரக்கிடையில் ரெண்டாக மடித்த ரூவா நோட்டுக்களும், தொடை இடுக்கில் சுருட்டிச் சேர்த்த சாரமுமாக வேனின் முதல் படிக்கட்டில் நின்று கொண்டு தவுடன் சத்தம் குடுத்தானென்றால் இன்னும் ஐந்தே நிமிடத்தில் வண்டி சிவகிரி பஸ்டாண்டை விட்டு வெளியே கிளம்பப் போகிறது என்று பொருள். மடக்கிய ரூவாத்தாளால் நாடி மயிரை தேய்க்கும் போதெல்லாம் தவுடனுக்கு ஒரு கெறக்கம் குடுக்கும். ஊரான் முதெலென்றாலும் கைமாராத வரைக்கும் தம்பணம் தானே! விடிவதற்கு முன்னமே நடையைப் போட்டு வண்டியைப் பார்க்க வந்தானென்றால் ஈக்கிமாரை எடுத்த வேகத்தில் “பரட்டு பரட்டு பரட்டு” தான். தூசி தும்பு ஒரு பொட்டு இல்லாமல் பூராவற்றையும் பிறக்கி வெளிஎரிந்துவிட்டு ஒரு துடைப்பு. வண்டியயொன்றும் பல்லிளிக்காது என்பதுதான் தவுடன் வேலைப்பாட்டில் ஒரு குறை.

அடுத்துத்தான் முக்கியமான கட்டம். முகரையை நாலு முறை கழுவி, நாலு முறை கண்ணாடி முன்பு நின்று, சரி பாத்துக் கொண்டு வலது புறம் உள்ள பூக்கடைப்பக்கம் போவான். சாமி போட்டாவுக்குப் போட! ரெண்டு மாதத்திற்கு முன்பு முதலாளிமார்கள் சேர்ந்து திருச்செந்தூரில் ‘ஏத்தம்’ பாக்கப் போன போது வாங்கிய முருகன் படம். பூச்சரம் கட்டிக் கொண்டிருக்கும் பொம்பளயாள் மகளிடம் பேச்சுப் பழக்கம் போட பெரும்பாலும் வாய்க்காது. இருந்தாலும் அந்தப் புள்ளையை பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு ஒரு ‘இது’ வந்து போகும். அந்த இதோடவே “முந்தி முந்தி விநாயகனே முப்பத்து முக்கோடி தேவர்களே” பாட்டைப் போட்டால், பாட்டு முடியவும் பொழுது விடியவும் சரியாக இருக்கும்.

சாமத்தில் ஒரு தடவை முழிப்பு தட்டியது. அரவமில்லாமல் எழுந்து துணிமணிப்பையை பிரித்து சட்டைக்குள் சுற்றி வைத்திருந்த “கேசட்டை” எடுத்துத் தடவிப் பார்த்தான். சந்தோசம் ஒரு புறம் தன்னைப் போல வந்தது. பூக்கடைக்காரி தண்ணி தெளித்து சரம் கோர்க்கும் போது இது, வண்டி விஸ்வநாதப்பேரியைத் தொடும்போது அது. வழக்கமான ஸ்டண்டடிப்புகள் போக நல்ல நாள் பொல்ல நாளுக்கு வலசை மாறினால் இது, என ரகத்துக்குத் தக்கன சேர்த்தது. சாதா கேசட் எல்லாம் கிடையாது. நயம் TTK 90 கண்ணாடி கேசட். அடேயப்பா! சன்னப் பிரயாசையா அதுக்கு, முதுகு பழுக்க மூர்த்தி அண்ணன் குடுத்த குடுப்புக்கு காரணமான சங்கதியும் இதில் அடக்கம். அன்று சனக்காடு தாங்காத கூட்டம். கழுத்துப் பட்டையில் வேர்த்து ஊத்திக் கொண்டிருந்ததை எரிச்சலோடு துண்டால் பிடதியை துடைத்தபடி இருக்கையில் இருந்தவாக்கில் மூர்த்தியண்ணன் வெளியே எட்டிப்பார்த்தார்.

“போனா போன எடம், வந்தா வந்த எடம்னு எங்கனதாங் போய் ஒழிஞ்சாங்” என்றிருந்தது. வாசனூர் காச்சக்காரியம்மனுக்கு நேத்திக்கடன் போடவோ, சங்கரன்கோவில் போய் மாவிளக்கு எடுக்கவோ, தலையணைக்கோ சாஸ்தா கோயிலுக்கோ குடும்பம் குட்டியாக தனசனம் மட்டும் போகவோ டிராக்டரை விட்டு வேறு வழி தேடும் போதுதான் பவுசும், கொழிப்புமாக வந்தது ‘செல்லப்பிள்ளை’ என்ற மகேந்திரா மேக்சிக்கேப் வேன். இதுதான் என ஆபர் போவதெல்லாம் என்றைக்காவதுதான். மீதி நாளெல்லாம் விடிய முன்னமே வண்டி இராயகிரியை விட்டு கிளம்பி சிவகிரி பஸ்ஸ்டாண்டு வந்துவிடும். பின்பு சௌரியம் போல ஆள் சேருவது பொறுத்து இராயகிரி டூ சிவகிரி ’ஸ்சண்டிங்’தான்.. அன்று வண்டி வேறு பக்கம் போக வேண்டும். தேவதானத்தில் தேரோட்டம் என்பதால் வண்டி நிறைந்து வழிந்தது. சிவகிரி தாண்டி வடக்க போகும் வண்டி எல்லாமும் ரெண்டு மணி நேரத்திற்கு அங்கோ இங்கோ இம்மினி ஓடாது. அந்த நேரத்தில் வேன்காரர்கள் காட்டில்தான் மழை. மூர்த்தியண்ணனுக்கு மூக்குக்கு மேல் கோவம் வந்து ஸ்டேரிங் மீது படுத்த படி வெளியே பார்த்துக்கொண்டிருப்பது அப்படியொரு நாளில்தான்.

“இந்தா… மோண்டுட்டு வாரேன்னு ஓடுன மெளா எங்க போய் ஒழிஞ்சாங். செத்த நாய பெடதில அடிச்சு இழுத்துட்டு வந்தாத்தான்” என்ற முனங்கலோடு மேற்கொண்டு மூன்று முறை ஆரன் அடித்த போது முத்து மியூசிக்கல்ஸ் பக்கமிருந்து விழுந்தடித்து தவுடன் ஓடி வந்தான். சடார் என்று கதவைத் திறந்து வெளியே இறங்கிய வேகத்தில் முதுகோடு ஒரு வப்பு. “எவ உனக்கு அவுத்துப் போட்டு ஆடுதான்னு அங்கன ஒடுத! ஏறு முண்ட வண்டில” “ஏனே” முதுகை ஒரு சுழிப்பு சுழித்துக்கொண்டு படிக்கட்டில் தொத்து போட்டபடி “தேவதானம், தேவதானம், தேவிபட்டணம்…. தேவதானம்” கட்டக்கடைசி சத்தத்தை ஒரு முறை ஏத்திக் கொடுத்தான். “ஏ…. வண்டியெடுப்பா! இப்பயே தெணறுது. மந்தைல மாட்ட அடச்ச மாரி ஆளு ஏத்திக்கிட்டு” என பின் சீட்டில் பிதுங்கிக் கொண்டிருந்த மாடசாமிக் கிழவர் சத்தங் கொடுத்தார். “ஒரு நாளு ஒரு பொழுது ஒரு எடத்துக்கு போவ வண்டி இல்லையேன்னு இவங் வேனுல ஏறிட்டம்னா இவனுகளுக்கு வந்த கிராக்கி” என வந்ததில் இருந்து கிழவர் புலம்பியதும் தவுடன் முதுகில் வெழு விழ ஒரு காரணம். பெருசும் கடுசான ஆள். வண்டி மொதலாளிக்கு சொந்தமும் கூட. “எல்லாம் மேம்போக்கா மினுக்கத்தாங் லாயக்கு, வேலப்பாடுகள் காணாது” என போகிற போக்கில் சொல்லி விடுவார். “அண்ணாச்சி! ஒரு ரெண்டே நிமுசம் தாய்புள்ளையா ரெண்டாளு அந்தா அங்க வருது பாருங்க, வண்டி எங்கிட்டுனு தெரியாம பரிதாவத்துல தேடுதுக” என்ற தவுடன் சட்டென பொம்பளையாளைப் பார்த்து மறுசத்தம் கொடுத்தான். 

“க்கா, தேரோட்டம் பாக்கவா? வேற வண்டியெல்லாங் கெடயாது. விருட்டுனு ஆளோட வந்து ஏறுங்க. பெரியாளுக சடைக்காகல்ல, வாங்க வாங்க” அதே வேகத்தில் கிழவர் பக்கம் திரும்பி “வந்ததும் கெளம்பிருவோம். ஒரு மாயத்துல போய் எறங்கிறலாம், இன்னா இருக்க தேவதானத்துக்கு போய்கிட்டு, நீங்க பெரியாளு, நாங் இம்புட்டு பய! எங்கிட்ட போய் வேகப்பட்டா என்னத்துக்காவேங்” என்றதும் கிழவர் தலையை ஆட்டிவிட்டு பெறாக்கு பார்க்கத் தொடங்கினார். “தாயோளில வாயி” என தனக்குள்ளயே சொல்லிக்கொண்ட மூர்த்தியண்ணனுக்கு சிரிப்புதான் வந்தது. இந்த வாய் எங்கு மடியும் எங்கு நிமிரும் என்று அவருக்குத்தான் தெரியும். வண்டி கோவிலூரைத் தாண்டும் போதே கடும் நெருக்கடி “ஏணே, ண்ணே, ண்ணாச்சே” என சத்தம் கொடுத்துக் கொண்டே சன்னல் வழி பாதி உடம்பை நீட்டிக் கொண்டு, வலது கையால் வண்டிக் கதவில் ரெண்டு தட்டுத் தட்டி எருமை மாட்டுக்கு பங்காளி முறைபோல நின்றிருந்தவர்களைத் திருப்பி “கோச்சுக்கிறாம கொஞ்சம் போல வெளவிக்கிட்டைகன்னா ஒரு ஓரமா வண்டியோடிரும்” என நெளிவு சுழிவாக தவுடன் பேச, இம்மினி இம்மினியாக மூர்த்தியண்ணன் நகர்த்த ஒரு வழியாக வண்டி தேவதானம் வந்துவிட்டது. நோட்டும் சில்லரையும் ஆள்கள் இறங்க இறங்க தவுடன் கைக்கு மாறியது. இப்படியான நேரங்களிலும், பூக்குழி நாட்களிலும் இலவச மோர் பந்தல் கட்டாயம் உண்டு.

மேற்கே ஒரு கூரைச் சாய்ப்பு தெரிந்தது. “ஏண்ணே, இன்னுங் பத்து நிமுசம் ஆவும்லா இருங்க செத்தோடத்துல வாரேங்” “ஒரே ஆடர் மயிறு போடுததுலதாங் இருப்பாங் இங்க எவ ஒன்னைய அழைக்காலாங்?” “ஆமா அழைக்க வேண்டியதாங், இந்தா தொண்டைய நனைக்க! உங்களுக்கு என்ன நல்லா கவட்டைய விரிச்சுக்கிட்டு உக்காந்துக்கிட்டு ஒட்டுவீக, உள்ள என்னல்ல மினுக்குதாக” “ஏலே, ஏ….லே…. ரொம்பப் பேசாதல, நீ பிதுக்குதுக்கு மேலயா” “ஏணேய்” “நடிக்காதல” “நானே நேத்திய புள்ள என்னைப் போய்க்கிட்டு” “நேத்திய புள்ளயா? நாளைக்கு புள்ள பெத்துருவ” “ஏணே” “என்னால ஓணே! இம்மிட்டுக்கானு பூவ வாங்க, மண்ட பொட்டலா போற வரைக்கு பரட்டு பரட்டுன்னு தேய்க்க! அவ அம்மாக்காரி இருந்தா ஒரு நட நடக்க இல்லாட்டி ஒரு நடநடக்க. நீ தாங் நேத்திய பயலோ” ரெண்டு போனி மோர் குடிக்கவும் ஒரு தெளிச்சு வந்தது. நிழல் பார்த்து சாய்ந்து கொண்டு கூட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சாரத்தின் அடியால் முகம் துடைத்துவிட்டு வெயில் தாழ நிழலில் சாய்ந்திருந்தனர். சர்பத்துக்கடை, கொடைக்கம்பி பலூன் கடை, அச்சு வைக்கும் கலர் மருதாணி கடைகள், அப்பள பஜ்ஜி – போண்டா கடைகள் என நிறைந்திருந்த கூட்டம் இப்போது மெல்லக்களையும் போக்கு தெரிந்தது. தேரோட்டம் முடிந்திருக்க வேண்டும். விரட்டிப்பிடித்த ஒன்பது திருப்பு அடித்தாகி விட்டது. இப்போதே கிளம்பினால் இன்னும் ரெண்டு திருப்பு அடிக்கலாம். “ஏணே, பிரபுவும் பானுப்பிரியாவும் ஒரு படத்துல குடுத்துப்பாகல்ல அதென்ன படம்? அதுல ஒரு பாட்டு….” “எலேய்! இதுக்குத்தாங் காலைல குடுப்பு வாங்குன!” மட்டியை கடித்தபடி கையை பொத்துனாப்பில் வைத்து ஓங்கினார். முதுகை சுழித்துக் கொண்டு. “ஏணே, இது என்ன பழக்கம்னு பழகீருக்கீக, அப்பத வாங்குனதே சுரீர்னு புடிச்சது. அவுக மறுவுடியும் ஓங்கிட்டு வாராக! முதுவுக்கு வாயிருந்தாலும் அழுதுருக்கும்” “உனக்கு ஓரக்க மாட்டிக்கில்ல அறுதலி” கையை ஓங்கியபடி மூர்த்தியண்ணன் சிரித்தார். இவர் சிரிப்பைத் தவிர்த்து கொஞ்சம் தள்ளி இயல்புக்கு மீறியபடி பொம்பளயாட்கள் சிரிப்பொலி கேட்டது, கூடவே கிழவர் சத்தமும் கடுங்கோவத்தில் வந்தது.

“என்ன உங் வீட்டு ஆம்பள கிட்ட இல்லியோ! காணாததக் கண்டது போல வாயப் பொலக்காளுக ஒவ்வொருத்தியும்”. இறுக்கிப் பிடித்த வேட்டியோடு கிழவர் வெகு வெகென வண்டியப் பார்க்க வந்து கொண்டிருந்தார். “ஏணே! பாட்டுக்கு நடுவுல கூட பானுப்பிரியா சிரிச்சமாரி வரும்ல! அந்தப் பாட்டவும் பதிய சொல்லிருக்கு” தவுடன் நீட்டி நிறையும் முன்பு மறுபடியொரு குடுப்பு முதுகில் விழுந்தது. “அந்தாளு தெசப்புடுங்கா ஓடியாந்து வண்டிக்கதவ தடவிக்கிட்டலைதாங் ஊரான ஊருல என்ன இம்சைய இழுத்தாம்னு தெரியலயேனு நான் பாக்கேங். ஒனக்கு பாட்டு மயிறு கேக்கு! மீன் புடிக்க வந்தா ரெண்டு கண்ணும் மொதப்புக்கட்டைல குறியா இருக்கனுமுடா” வண்டியை நெருக்கும் போது மூர்த்தியண்ணனுக்கு சங்கதி பிடிபட்டுவிட்டது. வெடுக்கென கதவை துறந்து கிழவரிடம் “உள்ள இருங்கண்ணாச்சி” என்றார். நடந்த கதை இதுதான் கூட்டத்தை விலக்கிக்கொண்டு  ராச நடை போட்ட கிழவர் வேட்டி நுனி எங்கோ பட்டு இழுக்க மனுஷன் அந்தக் கூட்டத்திலேயே அம்மணக்குண்டியாக நிக்க வேண்டி வந்துவிட்டது. “ஆனாலும் பெரியாளு உள்ள ஒரு தாலியும் போடாம என்னையும் பாரு, ஏங் மானியவும் பாருனாய்யா வருவாங்” பெரிய கொத்தனார் முருகேசன், மூர்த்தி காதோரம் சொல்லிச் சிரித்தார். மூர்த்தி அண்ணனுக்கும் சிரிப்புதான், சரி சிரித்து மேலும் உழவடிக்க வேண்டாம் என சத்தமில்லாமல் நகண்டு கொண்டார். வழக்கம் போல ஆள் அடைத்துக் கொண்டு வண்டி திமிறியது “சிவேரி, சிவேரி, சிவேரி…..ய்” என சத்தம் கொடுத்தபடி தவுடன் வண்டியேறாமல் நின்ற படியே சன்னல் ஓரம் இருந்த கொத்தனார் அண்ணனைப் பார்த்தான் சொல்லி வைத்தது போல ரெண்டு பேருக்கும் நக்கல் சிரிப்பு வந்தது. தவுடன் வாய் நிமிறும் நேரமிது. “ஏணே, ஒரு சொலவட சொல்லுவாகல்ல, ‘தேவதானங் தேரோட்டம் திரும்பி வந்தா நாயோட்டம்’ னு! சரியாத்தாங் இருக்கு” விசியம் தெரிஞ்ச பூக்காரப்புள்ள வண்டிக்குள் இருந்து சிரிக்கவும் தவுடனுக்கு பானுப்பிரியா சிரித்த பாட்டு பிடிபட்டது. “பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ” சத்தமாகப் பாடியபடியே முதல் படியில் ஏறி கதவில் ஒரு தட்டு தட்டி “போட்டு போட்டு போட்டே…..” என்றான்.

மற்ற நாளென்றால் நகக்கண்ணில் குளிராட்டுவதற்கு இசவாக மடமடவென்று பச்சத்தண்ணியள்ளி தலையில் ஊத்திவிட்டு ஓட்டமெடுத்திருப்பான். இன்று அம்மா நெகச் சூட்டில் வெண்ணி சோமாறி வைத்திருந்தாள். மருந்து குணப்படுத்தியது எல்லாம் பாதிதான், மீதி தெளிந்து வரக் காரணம் மூர்த்தியண்ணன் வந்து பார்த்தபோது சொன்ன செய்தி! முழு உசார் இல்லையென்றாலும் புரியத்தான் செய்தது. “எலேய்! பழய வண்டிய கழிச்சுப் பத்தீட்டு புது வண்டிய எறக்கிட்டாறு மொதலாளி, வந்து பாத்தைனா அசந்து போவ”. இது போதாதா ஆளை எழுப்ப! தவுடன் முதலில் வண்டியேறியது இதே போல ஒரு காலையில்தான். ஆவி பிடிப்பதற்கு என்று பூச நாயக்கர் வீட்டில் தண்ணிக் கொப்பரை கொதிக்கும் போது சுடு தண்ணீரில் போட எலுமிச்சை இலையும், நொச்சி இலையும், வேப்பிலையும் பறித்துக் குடுப்பது தவுடன் வேலை. செய்தால் வாங்கித் திங்க வாரத்திற்கு ஒரு முறை சில்லறை தேறும். அப்படியொருநாள் போகும் போது வீட்டுஆட்கள் எல்லாரும் எங்கோ கிளம்பும் தோரணையில் கோப்பு கட்டிக் காத்திருப்பது தெரிந்தது. வீட்டு வாசலில் ’செல்லப்புள்ள’ வண்டியும் நின்றிருந்தது. பாவநாசம் போவதற்காக அமர்த்தியிருகிறார்கள். சட்டி பானையெல்லாம் தவுடன் சின்னையாதான் வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தார். “ஓடியா நீயும் வண்டில ஏறு” தவுடனுக்கு ஒன்றும் அகப்படவில்லை ஒழுங்காப் படித்திருந்தால் அப்போது ஐந்தாவது போயிருக்க வேண்டும். ஒரு வருடம் பிந்தியதால் நாளாப்பு படித்துக் கொண்டிருந்தான். “சும்மா வா, எந்தக்காலம் இதெல்லாங் பாக்க, வீட்டுல ஓங் சித்தப்பங் சொல்லிக்கிருவாங்” என ஆளும் பேருமாக சொல்லவும் தவுடன் வண்டியில் ஏறிக்கொண்டான். கூழ்பானத்தாத்தா பேரனும், காட்டுராசு மாமா பயலுகளில் நடுவுள்ளவனும் சேர்ந்து “இராயேரி அதுக்கடுத்து உள்ளாறு, அப்புடியே வடக்குட்டு ராசபாளையம் தெக்கிட்டு புளியங்குடியோட ஒலகம் முடியுது” எனச் சகட்டி மேனிக்கு விட்டதெல்லாம் வசகெடான பொய்கள் என்று அன்றைக்குத்தான் தெளிவானது.

ரெண்டாவது சன்னல் ஒட்டி உள்ள பெட்டியில் உக்காந்திருந்த தவுடனுக்கு சந்தோசம் ஒரு புறம், ஆச்சர்யம் ஒரு புறம். வண்டியில் வந்த அண்ணன் ஒருவர் தவுடன் தோளைத் தொட்டு “இதக் கொண்டு போய் டிரைவர் அண்ணன் கிட்டக் குடுத்துப் போடச் சொல்லு” என கேசட் ஒன்றை நீட்டினார். கேசட் அட்டையில் மீசை தாடி மலுங்கச் சிரைத்த வெலேரென்ற ஆள் மேலே பார்க்க சேவேரென்ற பெண் ஒருவள் அவன் கழுத்தில் சாய்ந்திருந்தாள். “ஏதோ புதுப்படம் போலுக்கு” என எண்ணிக்கொண்டே டிரைவரிடம் தவுடன் நீட்டும் போது. “இங்க புலியெல்லாங் வருமோ”என வண்டியில் வந்த பொடுசுள் ரெண்டு சன்னல் வழியாகத் தெரிந்த புலிப்படம் போட்ட பலகையைப் பார்த்து கேட்டுக் கொண்டிருந்தனர். தவுடனுக்கு ஒரு நொடி திக்கென்றது. வசகேடாக ஏதோ ஒரு காட்டில் சிக்கிக் கொண்டது போன்ற பயத்தில் ரெண்டு பக்கமும் பார்த்தான். மலங்காட்டுப் பாதை செடியும், புதருமாக இருந்தது. மழை மூடாக்கு விலகியது போல அதே நொடியில் கேசட் ஓடத் துடங்கியது. “காட்டுவழியே….. ஹீ கரிச்சான் குருவீகளா பாதகத்தி காத்திருக்கா மனச அறிவீகளா”.  அது வரையில் தவுடன் கேக்காத தொனியிலான குரல். அந்தச் சூழலோடு பிணைத்து கிறக்கம் கொடுத்த கையேடு மறுவரிகள் வரும்போது வண்டி முழுவதும் உற்சாகம் பொங்கியது. அப்புடி ஒரு நாள் ஆபர் போகும் போது போட்டு விடுவதற்காகவே அதையும் கேசட்டில் தவுடன் பதிந்திருந்தான்.

“ கிக்கி கிக்கி என்று வண்ணக்கிளி ஒன்று சத்தமிட்டே செல்லும் கூக்கூ கூக்கூ என்று கானக்கருங்குயில் சித்தம் தன்னை கொல்லும்” ஒண்ணுக்கடித்து விட்டு ஓடி வந்தவனை இந்த வரிதான் சட்டென நிறுத்தியது. சுந்தரண்ணன் பழக்கடையின் ஓட்ட டேப்பிருக்காடர் இப்படி அழகான துல்லியத்தில் படிக்காது. ஒரு எட்டு எட்டிப்பார்த்தான் அதே இடத்தில் “முத்து மியூசிக்கல்ஸ்” புதிதாக முளைத்திருந்தது. இந்த மூன்று மாதமாக எங்கிட்டுக்கூடியாவது பத்து நிமிடம் அந்த இடத்தில் போய் பட்டறையைப் போடாவிட்டால் தவுடனுக்கு பொழுதடையாது. ஏகதேசம் தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் எதையாவது கொண்டு வந்து விடுவான். “அண்ணே, பொட்டோடு பூவும் கொண்டு தாவும் மயில்தாங்’னு ஒரு ஊடால ஒரு வரி வருமா அந்தப் பாட்டு பதிங்க” “எல, ஏய் திருவாத்தாங்! இப்புடிச் சொன்னா எங்கிட்டு கூடி பதிய? ஒரு கூறு கணக்கு வேண்டாமா” “எணே, மொதவரி நெனவுக்கு வரமாட்டிங்குல்லா! முந்தானாத்து மதியம்போல கூட ஓடினிச்சா அதே பாட்டுதான்” “முந்தா நாளு நூறு பாடு ஓடுச்சு” “எணே, எணே, எணே….! இன்னியொரு வரி நாவவம் வருது அத வச்சு புடிச்சுருவீகளா?” “சொல்லு பாப்பம்” “சித்தாட போட்ட சின்ன மணித் தெரு சில்லென்னு பூத்த செவ்வரளி பூவு செப்பால செஞ்சு வச்ச அம்மன் செல தான்” “எலேய்! பாட்டெல்லாம் பயங்கரமா பாடுதியே! யாருக்குடா இப்புடி பெறக்கி எடுக்க” தவுடனுக்கு சிரிப்பு பொங்கிக் கொண்டு வந்தது. “ஏணே! அதெல்லாங் ஒண்ணுங் கெடையாதுண்ணே!” “உங்கல்யாணத்துக்கெல்லாங் என்னைய கூப்புடுவயாடா” “நல்லாருப்பைக! அந்த பாட்டவும் பதியுத லிஸ்ட்ல போட்டு வைங்க” இவ்வளவுதான் பின் ஆளைப்பிடிக்க முடியாது ஒரே ஓட்டம்.

இன்றப்படி ஓடி மறைய வழி கிடையாது. பாதியடி முழுவதும் பதம் தப்பிப்போன உளுத்தங்களிபோல சேறு. முதலில் குதிங்கால் தரையில் அழுத்த பொன்னம் பொத்தி நடக்க வேண்டும். இல்லையென்றால் சிலிப்பர் மிதியடி வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் சடக்கு சடக்கென்று கைலி முழுக்க சக்திப் பொட்டு வைத்துவிடும். நாலு எட்டு நடையில் பூசநாயக்கர் காடு. போன வருடம் இதே இடத்தில் வைத்துத்தான் தவுடனிடம் அவர் கேட்டார். “புதுமாடங் கொடுக்கு, விருட்டு விருட்டுனு எந்த கோட்டய புடிக்கப் போற?” “மொழாளி, எங்கனு போவச் சொல்லுதீக” என சிரித்தபடியே “சோடாக் கம்பேனி கணபதியா வீட்டு மச்சுல தண்ணிட்டாங்கி கட்டுதாகல்லா! அதுக்கு கையாளாக் கூப்புட்டாக” “சரி, இன்னைக்குப்போ வேண்டாங்கல! அதே போல இப்பம் நாங் சொல்லுதத மனசுல வச்சுக்கோ. கற்குவேலோட வண்டி இருக்குல்ல ‘செல்லப்புள்ள’ மின்ன நீயொரு வட்டம் கூட வந்தைல்ல அதே வண்டிதாங். வண்டியோட்டுத பய கூட ஓடுததுக்கு தோதா ஒரு பய பாக்கனும்னு எங்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாங். கூடயே போய் அவன ஆத்திப் போத்தி நடந்து வண்டியெடுக்க படிச்சுட்டைனு வையு!  நாளைக்கு ஓங்கைல ஒரு தொழில் இருந்துக்கிடும். இப்பம் போற வேலைய முடிச்சுட்டு ஒனக்கு இது ஆவும்னு தோனுனாச் சொல்லு”. மறுநாளே வண்டிக்கு வந்துவிட்டான். போன வாரத்தோடு ஒரு வருடமாகிவிட்டது. சாமயாமத்தில் கருங்கல் கொண்டு கதவில் எரியும் எரிகொம்பு பேயும், கொட்டாரத்தில் பதுங்கிக் கொண்டு சடக்கு சடக்கென்று சத்தம் கொடுக்கும் சப்பாணிப் பேயும் இப்போது தவுடனை பயமுறுத்துவதே கிடையாது. ஏதோ நினைவு வர, சாரத்தில் சொருகி இருந்த கேசட்டைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். அது கொடுத்த ஊக்கத்தில் விட்ட நடை நேராக மந்தைக்கு வந்து முட்டும் போது ஜோடித்து இறங்கிய தேர் போல வண்டி நின்று கொண்டிருந்தது. முன்னைக்கு போல ரெண்டு நிறம் கிடையாது பல கலர் வண்டி. முன்னாடி உள்ள கண்ணாடி ரெண்டும் வண்டியில் இருந்து ஒரு சாண் முன்னுக்குத் தள்ளி கொக்கி போல இருந்தது. பழையதை விட நீளம். இழுத்து அடிக்கும் கதவு கிடையாது. வாசப்படியில் நிக்கவும் முடியாது. கதவே ரெண்டாக மடிந்து மூடிக் கொள்ளும் போல “என்ன மெரண்டு போய் நின்னுட்ட” வண்டியை ஒரு துடைப்பு துடைத்து நிமிர்ந்த மூர்த்தியண்ணனுக்கு சந்தோசமும் பெருமையும்.

“ஒடம்பு இப்பம் தேவலயாடா”. தவுடன் ஒப்புக்கு “ம்ம்” என்று தலையசைத்தான். “என்னடா திட்டுமுட்டடிச்சுபோய் நிக்க, இந்தா சாவி தொறந்து போ உள்ள. நம்ம வண்டிலே! ஏறு” என்றார். இருட்டும் குளிரும் முழுதாக அகலவில்லை என்றாலும் தவுடன் உள்ளங்கை வேர்த்துவிட்டிருந்தது. உயர உயரமாக வெல்வெட் உறைபோட்ட பெரிய சீட்டுகள். சத்தமில்லாமல் தவுடன் முன்னாள் போய் உக்காந்து கொண்டான். “கெளம்புவோம்”என கதவை திறந்து வலது புறமாக ஏறி உள்ளே அமர்ந்த மூர்த்தியண்ணன் சிரிப்போடு பட்டன் ஒன்ற அழுத்தினார். “பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ” பாட்டு ஓடியதும் ஏதோ ஒரு விநோதத்தை தவுடன் உணர்ந்து கொண்டான். “எப்புடி! இதத்தான அன்னைக்கு கேட்ட?” என்றவர் தவுடன் கையில் இரு தகடு போன்ற தட்டை வைத்தார். ‘சீடி’ டா! ஏகப்பட்ட பாட்டு பதியலாம். இனி கேசட்க்கு வேலையே கெடயாது. முன்னாடி ரெண்டொரு வட்டம் பாத்திருக்கேன். இப்ப நம்ம கைக்கே வந்துருச்சு. சீடியப் போட வேண்டியது பாட்ட கேக்க வேண்டியது” சொல்லிக்கொண்டே போட்ட வண்டி லைட் திட்டான மஞ்சள் ஒளியை பாதையில் பாச்சியது. இயலாமையில் கெடந்து நெறிபடுவது போல உள்ளுக்குள் தவுடனுக்கு அழுத்தியது.

“நேத்திக்கு நல்ல மஞ்ச வெயில் அடிச்சதுடா” என்ற மூர்த்தியண்ணன் வண்டியைத் திருப்பி மந்தையை விட்டு வெளியே எடுத்தார். “என்னத்தையோ பாடான பாடு பட்டு ஓஞ்சு போயாச்சு, ரெண்டாவுதா ஆம்பள பெறந்தாம்னு கேக்கவும்தாங் தூரத்துல மஞ்ச வெயிலடிக்க மாதிரி ஒரு நெனப்பு” என அப்பா சொல்லிக் கொண்டது நியாபகம் வந்தது. ஒரு நிலையில் உக்கார முடியவில்லை. கையையும் பிசைந்து கொண்டே இருந்தான். “என்ன இவனே ஒண்ணுமே பேசமாட்டிக்க இன்னும் ஒரு வடியாதாங் இருக்கா” என மூர்த்தியண்ணன் கேக்கும் போது என்னது தோன்றியதோ தவுடனுக்கு  “எண்ணே, நாங் வண்டியடுத்து படிக்கட்டுமா” என்றான். சிரிப்பு கலந்த அக்கரையுடன் பாதையையும் அவனையும் பார்த்து சரி என்பது போல மூர்த்தியண்ணன் தலையாட்டவும் விடியவும் சரியாக இருந்தது.

பிற படைப்புகள்

Leave a Comment