நியோ
நாட்சுமே சொசெகி தமிழில்: கே. கணேஷ்ராம்

by olaichuvadi

கோகோகுஜி மடாலயத்தின் பிரதான வாயிலில் காவல் தெய்வமாக விளங்கும் நியோவை மாபெரும் சிற்பியான யுன்கே செதுக்கிக் கொண்டிருப்பதாக ஊரெங்கும் ஆரவாரப் பேச்சு நிலவியது. நான் அங்கு சென்று சேர்வதற்கு முன்பே ஒரு பெரும் கூட்டம் கூடியிருந்தது. அவரவர் மனம் போனபோக்கி்ல் சிற்பியின் பணியைப்பற்றி பொறுப்பற்ற முறையில் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

மடாலய வாயிலுக்கு முப்பது அல்லது நாற்பது அடிக்கு முன்பே செந்நிறப் பைன் மரம் ஒன்று நீலவானை நோக்கி நெடிந்துயர்ந்து நின்றது. மரத்தின் மையப்பகுதி ஓடுகள் பாவப்பட்ட வாயிலை முற்றிலும் மறைத்தவாறு விசும்பின் எல்லைகளை ஊடுருவியது. பைன் மரத்தின் பச்சை இலைகளும் வாயிற்கதவின் உதிரச் சிவப்பு வண்ணமும் ஒன்றுக்கொன்று வேறுப்பட்ட தன்மையில் அற்புதமாக விளங்கின. மேலும் பைன் மரம் மிக அழகிய சூழலில் வியாபித்திருந்தது. நம் பார்வையை மறைக்காத வகையில் மரத்தின் மையப்பகுதி குறுக்காக வளைந்து மடாலயத்தின் இடது பகுதியை காட்சிப்புலத்திலிருந்து பிரித்து எடுத்து அதன் கிளைகளை அகலப் பரப்பி கூரையை நோக்கி நீண்டது.  பண்டைய காலத்தின் பிரம்மாண்ட நிலக்காட்சியைப் போல தோற்றமளித்தது. காலத்தினூடே வெகுதொலையில் பயணித்து காமகுரா யுகத்தினுள்ளே பிரவேசிப்பதாக உணர்ந்தேன்.

விந்தை என்னவெனில் அங்கு கூடியிருந்த பார்வையாளர்களோ என்னைப்போல பத்தொன்பதாம் நூற்றாண்டின் மெய்ஜி காலத்தைச் சேர்ந்த தலைமுறையினர்.

அவர்களுள் அனேகம் பேர் ஜின் ரிக்‌ஷா எனப்படும் கை ரிக்‌ஷா  ஓட்டுநர்கள். சாலையோர சந்தைக்காக காத்துக்கொண்டிருத்தலின் சோர்வினைப் போக்கவே அவர்கள் அங்கு திரண்டிருந்தனர்.

“பிசாசைப் போல் எத்தகைய பெரிய உருவம்?” என்றான் ஒருவன்.

“மனித உருவை செதுக்குவதை விட மிக அதிகமான பிரயத்தனம் நிச்சயம் தேவைப்படும்” என்றான் இன்னொருவன்.

மூன்றாவது மனிதன் இவ்வாறு ஆர்ப்பரித்தான், ”ஓ, அட! இது ஒரு நியோ தானே? இக்காலத்திலுமா நியோ செதுக்கப்படுகிறது? நியோ போன்ற உருவங்கள் கடந்த காலத்தின் சின்னங்கள் என்றல்லவா நினைத்தேன்!”

“நியோ மிக வலிமையுடன் தென்படுகிறான் இல்லையா?” என்றான் நான்காம் ஆள்.

“பழங்காலத்தில் நியோவை ஒத்த வலிமை உடையவன் எவனும் இல்லை என்று சொல்ல கேட்டிருக்கிறேன். எப்படி இருந்தாலும் நியோ, யாமாடோ டோகே நோ மோட்டோ வை விட வலிமையானவன் என்று எனக்குத் தெரியும்” தொப்பி அணியாத அம்மனிதனின் சட்டை உள்பக்கமாக மடித்து விடப்பட்டிருந்தது. அவன் கல்வியறிவு அற்றவனாகத் தென்பட்டான்.

பார்வையாளர்களின் இத்தகைய பொறுப்பற்ற சொற்களைச் சிறிதும் பொருட்படுத்தாது யுன்கெய் தன்னுடைய உளி மற்றும் மர சுத்தியுடன் செதுக்கிக் கொண்டே இருந்தான். அவர்களை கிஞ்சித்தும் சட்டை செய்யாமல் உயர்ந்த பீடத்தின் மேல் நின்றபடியே அதி சிரத்தையுடன் நியோவின் முகத்தை செதுக்கத் தொடங்கினான். யுன்கெய் சிறிய கவிகை உடைய தொப்பியை அணிந்து, சட்டையின் தொளதொள பகுதிகள் பின்புறமாக மடக்கி கட்டியபடியே காணப்பட்டான். அது பழங்காலத்தில் பிரபுக்கள் அணியும் உடையா அல்லது அங்கி மாதிரியான மேலாடையா என்று என்னால் அறிய இயலவில்லை. ஆனால் அவனது உடை மிகப் பழங்காலத்தைச் சேர்ந்தது. மேலும் அது இரைச்சலுடனும் உளறல்களுடனும் வாழும் தற்கால நவீன மனிதர்களின் உடைகளின் பாணியை விட மிகவும் வேறுபட்டு இருந்தது. அவ்வளவு காலமாக யுன்கெய் இவ்வாறு தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான் எனும் விஷயம் மிக மர்மமானது என்று எண்ணியவாறே நான் தொடர்ந்து அவனை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தேன். ஆனால் யுன்கெய் அச்சூழல் தனக்கு விசித்திரமானது அன்று என்பதைப்போல தனது ஆற்றலை எல்லாம் ஒருங்கிணைத்து செதுக்கிக் கொண்டிருந்தான்.

சிற்பியை உற்று நோக்கியபடியே இருந்த ஓர் இளைஞன் என்னிடம் திரும்பி வியப்பு மேலிட இவ்வாறு கூறினான் “யுன்கெயை பொறுத்தவரை அவன் நம் அனைவரையும் கண்டுகொள்ளவே இல்லை. இப்பரந்த உலகில் ஆகச்சிறந்த நியோ மற்றும் யுன்கெய் ஆகிய இருவர் மட்டுமே வசிப்பதாக அவன் எண்ணுவது போல தெரிகிறது. எத்தகைய அற்புதமான மனநிலை!”.

அவனது கருத்து என் ஆர்வத்தைத் தூண்டியது. ஆகையால் அந்த இளைஞனை நோக்கி நான் திரும்புகையில் அவன் மேலும் தொடர்ந்தான். “அவன் உளியையும் சுத்தியலையும் எவ்வாறு பயன்படுத்துகிறான் என்று பார்! அற்புதமாக அகஉலகின் ஆற்றலினுள் ஆழ்ந்திருக்கிறான்!”.

யுன்கெய் அப்போதுதான் மிகப்பெரிய விரற்கடை அளவுள்ள புருவங்களை நீளவாக்கில் செதுக்கினான். செங்குத்தாக உளியைத் திருப்பும் அத்தருணத்தில் உடனே தன் மர சுத்தியலை சற்றே சிற்பத்தின் தலையை நோக்கிச் சாய்வாக செலுத்தினான். கடினமான மரத்தில் இவ்வாறு இலகுவாக உளி பட்டதும் திண்மையான மரத்துண்டு சிதறித் தெறித்தது. அடுத்த கணத்தில் மிகப் பெரிய மூக்கு சினத்தில் விரிந்த கோலமாய்ச் சீற, சிலையின் முகத்தில் துடி ஏறியது. யுன்கெய் தன்னுடையத் திறமையைப் பற்றி சிறிதும் சந்தேகம் கொள்ளாமல் மிகத் துணிவுடன் உளியை நுட்பத்துடன் பயன்படுத்தினான். தான் எண்ணியபடியே புருவங்களையும் மூக்கையும் காட்சிப்படுத்தும் அபரிமிதமான ஆற்றலுடன் தன் உளியால் செதுக்கும் அவன் கலை எத்தகைய அற்புதம் வாய்ந்தது!’ என்று எனக்குள் அவனைப் பாராட்டி வியந்தேன்.

அருகில் இருந்த இளைஞன் இவ்வாறு கூறினான் “அவன் கண்களையும் மூக்கையும் உளியால் செதுக்கவில்லை. தன் மர சுத்தியலால் மரத்தினுள் ஆழப் புதைந்திருக்கும் புருவங்களையும் மூக்கையும் வெட்டி வெளியே கொணர்கிறான். அவ்வளவுதான். அது பூமியின் ஆழத்தில் இருந்து கற்களை அகழ்ந்து எடுப்பதுப் போன்றது. அவனால் தவறிழைக்கவே இயலாது”.

அப்போதுதான் முதன்முறையாக அந்த இளைஞன் சொல்வதைப்போல் சிற்பக்கலையை மிக எளிதான விஷயமாக எண்ணத் துவங்கினேன். அவன் விவரணையின் மதிப்பீட்டின்படி அதை எவரும் இலகுவாக பயிலலாம் என்று எண்ணினேன்.

ஒரு நியோவை செதுக்க வேண்டும் என்ற திடீர் ஆசையால் தூண்டப்பட்டு என் வீட்டை நோக்கி விரைந்தேன். உடனடியாக உபகரணப் பெட்டியிலிருந்து உளியையும் ஓர் இரும்பு சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் சென்றேன். சமீபத்தில் அடித்த புயல் காற்றில் விழுந்த ஓக் மரங்களில் இருந்து வெட்டப்பட்ட மரக்கட்டைகளை ஒரு வியாபாரியிடம் இருந்து வாங்கி அவற்றை விறகு கட்டைகள் ஆக மாற்றி அடுக்கி இருந்தேன். அதிலிருந்து ஒரு பெரிய மரத்துண்டை எடுத்து மிகச் சிரத்தையுடனும் ஆவலுடனும் செதுக்க துவங்கினேன். ஆனால் துரதிருஷ்டவசமாக அதிலிருந்து நியோ வரவில்லை. இரண்டாவது மரத்திலும் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை. மூன்றாவதிலும் நியோ வெளிப்படவில்லை. இவ்வாறு அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகளை ஒன்றன்பின் ஒன்றாக வெறியுடன் செதுக்கத் துவங்கினேன். ஒன்றின் உள்ளிருந்தும் நியோவின் உருவம் புலப்படவில்லை.

இறுதியாக நான் ஒரு முடிவிற்கு வந்தேன். அதாவது மெய்ஜி காலத்தினுடைய எந்த ஒரு மரத்தின் ஆழத்திலும் நியோ மறைந்து இருக்கச் சாத்தியமில்லை.

இவ்வாறாக நான் தற்காலம் வரை யுன்கெய் ஜீவித்திருக்கும் சூட்சமத்தை அறிந்து கொண்டதாக உணர்ந்தேன்.

 

பின்குறிப்பு

நியோ – ஜப்பானிய பெளத்த மடாலயங்களின் வாயிலில் காணப்படும் உக்கிரமான இரு காவல் தெய்வங்கள்.

யுன்கெய் -12ஆம் நூற்றாண்டில் ஜப்பானில் வாழ்ந்த மாபெரும் சிற்பி ஆவார். அவர் தன்னுடைய தந்தையுடன் 1164 ஆம் ஆண்டில் செதுக்கிய புத்தரின் சிலை மிகவும் புகழ் வாய்ந்தது. 1176 ஆம் ஆண்டில் அவர் இறக்கும் வரை கலை நுட்பத்துடன் கூடிய நிறைய சிற்பங்களைச் செதுக்கினார்.

கோகோகுஜி மடாலயம் டோக்கியோவில் உள்ளது.

காமகுரா  காலகட்டம் (1180 – 1333) ஜப்பானிய கலையின் பொற்காலம் எனக் கருதப்படுகிறது.

மெய்ஜி காலகட்டம் (1868 – 1912) நவீன ஜப்பானின் தொடக்கம் என கருதப்படுகிறது.

நாட்சுமே சொசெகி (1867-1916)

ஜப்பானிய புனைவெழுத்தின் இன்றியமையாத எழுத்தாளுமையாக விளங்குகிறார் நாட்சுமே சொசெகி. உலகெங்கும் அவரைப் பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்களும்  ஆராய்ச்சிக் கட்டுரைகளும் எழுதப்படுகின்றன. நவீன ஜப்பானிய மனிதனின் அகச் சிடுக்குகளையும் மேற்குலகின் தாக்கத்தினால் எற்பட்ட அந்நியமாதலின் அடையாளச் சிக்கல்களையும் தன் புதினங்களிலும் சிறுகதைகளிலும் வெளிப்படுத்தினார் சொசெகி.டோக்கியோ பல்கலையில் ஆங்கில இலக்கியம் பயின்று அரசின் உதவித்தொகை பெற்று இங்கிலாந்தில் இரண்டு வருடம் இலக்கிய படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் டோக்கியோ பல்கலையிலே ஆங்கில பேராசிரியராக சிலகாலம் பணியாற்றினார். மேலை இலக்கியக் கோட்பாடுகளைத் தீவிரமாக விமர்சித்து சீன மற்றும் ஜப்பானிய இலக்கியங்களைத் மையப்படுத்தி அவர் எழுதிய “இலக்கியக் கோட்பாடு” (Theory of Literature) இன்றளவும் அதிகமாக வாசிக்கப்படும் விமர்சனப் பிரதி.

தன்னுடைய ‘ஐ ஆம் எ கேட்’, ‘போட்சான்’, ‘குசமாகுரா’  ‘கொக்கொரோ’ ஆகிய நாவல்களாலும் மற்றும் சிறுகதைகளாலும் உலகெங்கும் தீவிரமாக வாசிக்கப்படும் சொசெகி தனது பேராசிரியர் பணியைத் துறந்து முழுநேர எழுத்தாளரானார். தொழில்மயமாகும் ஜப்பானில் பெருகிய தனிமையும் மேற்குலகின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட கலாச்சார பின்னணியும் கலந்து இழையோடும் படைப்புகளில் ஜப்பானின் முதல்தர  உளவியல் புனைவு எழுத்தாளராக விளங்குகிறார் நாட்சுமே சொசெகி. அகுதாகவா  தன்னுடைய ‘சுழலும் சக்கரங்கள்’  எனும் நெடுங்கதையில் சொசெகியை தன்னுடைய ஆசான் என்று அன்புடன் குறிப்பிடுகிறார்.

பிற படைப்புகள்

Leave a Comment