தீடை   
ச. துரை

by olaichuvadi

ஊத்தங்கரை தேவாலயத்தின் உள் சுவர்கள் அதிர  அதிர மேரியின் குரல் கனத்துக்கொண்டே  போனது.  அவளது கேவல் உடைந்து அந்த தேவாலயமே ‌அழுவது போல் குலுங்கிக்கொண்டிருந்தது.

அவர்கள் மூவரைத் தவிர தேவாலயத்தில் யாருமில்லை. தாமஸ் தனது பிரெஞ்ச் தாடியின் நடுவிலிருந்த வெள்ளை முடியை நாக்கை நீட்டி தொட்டுப்பார்த்தான். ஆரோக்கியராஜ் கதறி அழும் மேரியை பார்த்தபடியே தனது நெஞ்சுசட்டையை பிடித்தபடி பரிதாபமாக நின்றுக்கொண்டிருந்தான். அவனது அந்த பாவனை அவனை குற்றவாளியாகவும் அதற்கு தனது சட்டையை தானே பிடித்து கேள்வி கேட்பதுபோலவும் இருந்தது. தேவாலய சுவர் ஓவியங்கள், முன் நிறுத்தப்பட்டிருந்த சிறு சிறு சிலைகள் தேவ வசனங்களை உள்ளுக்குள்ளே வாசித்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தாமஸ் மெதுவாக வழிபாட்டுத் தலத்தை நோக்கி நடந்தான். அங்கு எரிந்துக்கொண்டிருந்த எல்லா மெழுகுகளையும் பார்த்தவன். எரியாத ஒரு மெழுகுவர்த்தியை எடுத்து திரும்பி மேரியைப் பார்த்தான்‌. மேரி தாமஸை வாயைத் திறந்து கேவியபடியே விட்டு விட்டு பலமாக அழுதாள். தாமஸ் ஆரோக்கிய ராஜை சற்று மாறுபட்ட பாவனையில் பார்த்தான். அதை கடுமையான பாவனையென்று சொல்லி விட முடியாது ஆனால் தாமஸின் பிரெஞ்சு தாடி அவனது முகத்தை கடுமையாக போல் காட்டியது. தாமஸ் மெழுகுவர்த்தியை ஏற்றினான். அந்த மெழுகின் தனி ஒளியின் கீழ் நின்றபடி கர்த்தரின் முகத்தைப் பார்த்தான். அவ்வளவு பிரகாசமாக ஜொலித்தார் கர்த்தர். அந்தக் காட்சியை பார்க்க அவனுக்குஅவ்வளவு கொண்டாட்டமாகி விட்டது கிட்டத்தட்ட தனது ஜெபமே  நிறைவேறியதை போல உணர்ந்த தாமஸ் மகிழ்ச்சியில்  திரும்பி மேரியை பார்த்தான். அவள் விடாமல் அழுதபடி நின்றாள். ” மேரி ஒருவேளை நாள் மட்டும் இந்த மெழுகை ஏற்றாமல் நேராக கர்த்தரின் முன் வந்து நின்றிருந்தால் இந்த எல்லா மெழுகுகளையும் கர்த்தர் எனக்காக ஏற்றி வைத்த மாதிரி இருந்திருக்கும்” என்றான்.

இப்போது ஒரு கணம் மேரியின் அழுகை நின்று மீண்டும் தொடங்கியது. தாமஸ் தனது பிரெஞ்ச் தாடியின் வெள்ளை முடியை மீண்டுமொரு முறை நாக்கால் தொட்டபடி அவர்களை நோக்கி வந்தான். ஆரோக்கியராஜ் தனது சட்டையின் பிடியை விடாமல் தாமஸை பார்த்தபடி “கர்த்தர்ட என்ன வேண்டுன” என கேட்டான்.

“அது கர்த்தருக்கு தெரியும்” என்றான் தாமஸ்.

மேரியின் அழுகை மேலும் பலமானது. தாமஸையும் ஆரோக்கிய ராஜையும் திரும்பித் திரும்பி பார்த்தவள் பலமாக தலையில் தட்டியபடி அழுதாள். தேவாலயத்தின் மூலை முடுக்கு தூண்களெல்லாம் சப்தம் பட்டு வெடித்தது. தாமஸ் மேரியை பார்த்தபடியே படு மெளனமானான். திடீரென கதவு திறக்கும் சப்தம். இரண்டு பேரும் திரும்பி பார்த்தார்கள். இயேசு சிலையின் ஓரத்தில் இருந்த கதவு திறந்தது. உள்ளிருந்து பாதர் ஜெயபால் வெளியே வந்தார். கீழே தலை கவிழ்த்து அழுதுக்கொண்டிருந்த மேரியின் கேவல் இருந்த சுவடே தெரியாத வண்ணம் நின்றிருந்தது.

அவள் அழுகையை நிறுத்தியிருந்தாள். சிலை மாதிரி எழுந்து நின்றாள். ஜெயபால் அவர்களை பார்த்தார். ” யாருவே அது எப்ப வந்தீங்க! ரெம்ப நேரம் காத்திருக்கேளா? வந்ததும் மணி அடிச்சுருந்தா அப்பவே வந்திருப்பேன்ல்லையா” என சொன்னார்.

தாமஸ் அவரை பார்த்து சிரித்தபடி “பாரவால்லை பாதர் காத்திருந்து கர்த்தரை பார்க்குறதுதான் மோட்ச வழி” என்றான்.

பாதர் சிரித்தபடியே மேரியை கூர்ந்து பார்த்தார். ” ஏய் புள்ளை நீ மேரி தானா” என கேட்டார். மேரி சன்னமாக அவ்வளவு கலை நயத்தோடு ஒரே ஒரு இன்ச் மட்டும் தலையை கவிழ்த்து பட்டென்று நிமிர்த்தினாள். பாதர் குழப்பத்தோடு திரும்பி ஆரோக்கிய ராஜை பார்த்தார். “நீ மேரி கணவன்தானே”என கேட்டார்.  ஆரோக்கியராஜ் தாமஸை ஒரு முறை பார்த்துவிட்டு “ஆமாம் பாதர்” என்றான்.

 “உங்களுக்குள்ள என்னவே பிரச்சனை” என கேட்க இரண்டு பேரும் தலை குனிந்தார்கள். தாமஸ் தனது பிரெஞ்ச் தாடியின் நடு வெள்ளை முடியை நாக்கால் தொட்டு பார்த்தான்.

 “நீங்கதான் இவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்களா பாதர்” என கேட்டான்.

பாதர் ஜெயபால் “ஆமாம்” என கூறினார். தாமஸ் எதுவும் பேசவில்லை. “ஊருக்குகே தெரியுமே இவங்க கணவன் மனைவியென்று” என்றார் பாதர். ” எனக்கு மட்டும் தெரியாமல் வந்துட்டேன் பாதர்” என்றான் தாமஸ். பாதருக்கு புரியவில்லை தாமஸை எப்படி பார்த்தாலும் அவன் நினைவில்லாதவனாக கொஞ்சம் கூட பார்க்காதவனாகதான் தெரிந்தான். பாதருக்கு அதற்கு மேல் அங்கு நிற்க உடன்பாடும் இல்லை “சரி உங்களுக்கு என்ன பிரச்சனையோ எதாருந்தாலும் கர்த்தரிடம் சொல்லுங்கள் அவர் தீர்ப்பார்” என கூறியபடி இயேசுவை பார்த்து நகர்ந்தார். பாதர் ஜெயபாலும் அவரது பங்கிற்கு ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி கர்த்தருக்கு வைத்தார். பாதர் ஜெயபாலுக்கு கர்த்தர் தன்னையே பார்ப்பது போல இருந்தது. கிட்டத்தட்ட இது இன்று நேற்று அல்ல ஜெயபால் தனது சிறுவயதில் இருந்து பார்க்கிறார்.

கர்த்தர் அவரை பார்த்தபடியே இருப்பதை அந்த துல்லியமான பார்வையை ஒருபோதும் இயேசுவும் பாதரிடம் இருந்து விலக்கியதும் இல்லை. ஒரு மெல்லிய புன்னகையை கர்த்தருக்கு கொடுத்தார் பதிலுக்கு கர்த்தரும் கொடுத்தார். இருவரும் புன்னகைத்தபடியே இருக்க தலையை குனிந்த ஜெயபால் மேடையின் மீது ஏறினார். பிதா சுதன் பரிசுத்த பெயரால் ஆமென் என கூறினார். மூவரும் ஆளுக்கொரு திசையாகி நின்றனர்.

பாதர் ஜெயபால் அவர்களை நோக்கி இரு கைகளையும் விரித்தார். மூவரும் மண்டியிட்டனர்.”ஆண்டவர் இயேசு உம்மோடு இருக்கிறார்” என தொடர்ந்தபடியே தேவ வசனங்களையும் அவர்களுக்கான நற்செய்தி ஜெபத்தையும் வழங்கத் தொடங்கினார். மேரி முக்காடிட்டு நாடிக்கு கீழ் இருகைகளையும் வைத்து அழுத்தியபடி அழுதாள். பாதர் ஜெயபாலின் ஜெபமும் அந்த கனத்த குரலும் அத்தனை பலமாக அவர்களின் மீது விழுந்தபடியே தொடர்ந்தது. தாமஸ் மண்டியிட்டு பாதர் ஜெயபாலையும் அவருக்கு பின்னிருந்த இயேசுவையும் பார்த்தபடியே தனது பிரெஞ்ச் தாடியின் வெள்ளை முடியை மீண்டுமொரு தடவி நாக்கால் தொட்டான்‌. அவனது மனதுக்குள் என்ன ஓடுகிறதென்று யாராலும் கண்டுவிட முடியாது அவ்வளவு பெரிய புதையலாக இருந்தான். ஆரோக்கிய ராஜ் வந்ததில் இருந்து இப்போது வரை அதேபோல்தான் ஏதோ பாவம் செய்த முகம். ஒரு வித பயமிருந்தது. அந்த பயத்தின் வியர்த்த முகம் விரைத்து அத்தனை முதிர்ந்து போய் இருந்தது‌. எப்போது வேண்டுமானாலும் வெடித்து அழுது விடுவான் போல அப்படி இருந்தான். ஜெபம் முடிந்தது மூவரும் எழுந்து நின்றார்கள்.

பாதர் மேரியை நோக்கி தலையசைத்தார். மேரி மேடைக்கு அருகே செல்ல கீழிறங்கி வந்தவர். எதையோ ஜெபித்து மேரியின் தலைமேல் கை வைத்தார். அதன் பின்னேயே அதேபோல் மற்ற இருவருக்கும் செய்தார். மூவரும் அந்த தேவாலயத்தின் ஆளுக்கொரு இடத்தில் தனித்தனியாக அமர்ந்தார்கள். அந்த ஜெபத்திற்குப் பிறகு யாரும் யாரையும் சரியாக திரும்பி கூட பார்க்கவில்லை. பாதர் ஜெயபால் மேடையில் இருந்து கீழிறங்கி கூண்டை நோக்கி நகர்ந்தார். மூவரும் பாதரை பார்த்தார்கள். அவர் கூண்டின் கதவை திறந்து உள்ளே அமர்ந்தார். முன்னிருந்த மேஜையின் மீது வைத்திருந்த பைபிளை திறந்து சில வரிகளை வாசித்தார் “கர்த்தரே” உச்சரித்து ஆமென் என்றார். மேலிருந்து தொங்கிய கயிற்றை பிடித்து மெல்ல அசைத்தார். ஒரு மணிசப்தம் கேட்டது. மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். பாதர் பைபிளை வாசித்தபடியே இருந்தார். மூவரில் யார் முதலில் அங்கே போவது எப்படி தொடங்குவது என குழப்பமாகிவிட்டது. பாதர் ஜெயபால் மீண்டும் ஒருமுறை மணியை அடித்தார். தாமஸ் தனது பிரெஞ்ச் தாடியின் வெள்ளை முடியை மீண்டுமொரு தடவை நாக்கால் தொட்டான்‌. ஆரோக்கிய ராஜ் தனது நெஞ்சு சட்டையை அழுத்தி பிடித்தான். மேரி அடுத்தவொரு கேவலுக்கு தயாரானாள். அவள் முகம் இறுகியது. பாதர் ஜெயபால் பைபிளை வாசித்தபடியே இருந்தார். தனது கண்ணை மெதுவாக கூண்டின் வலை ஜன்னல் மீது வைத்தார் யாரும் வரவில்லை என உணர்ந்ததும். “பாவங்கள் சாத்தானின் உடையது” என்றார் அவர்கள் மூவரில் யாரும் முன்வரவில்லை. “பாவங்களை நீங்கள் உங்களோடு வைத்திருக்கும் போது நீங்கள் சாத்தானின் உடல்கள் ஆகிறீர்கள்” என்றார். மூன்றாவது முறையாக மணியை அடித்தார். சற்று பலமாக மேலும் இரண்டு முறை அடித்தார். யாரும் வரவில்லை. பாதர் ஜெயபால் வேகமாக திரும்பி பார்த்தார். யாருமே இல்லை எப்போது மூன்று பேரும் வெளியேறினார்கள் என்று பாதருக்கு தெரியவில்லை. பைபிள் வாசிப்பதை நிறுத்தி கூண்டை விட்டு வெளியே வந்தார். திரும்பி இயேசுவை பார்த்தார். இயேசு அதே புன்னைகையோடு பாதர் ஜெயபாலை பார்த்துக்கொண்டிருந்தார். பாதர் ஜெயபால் குழப்பமாக இயேசுவை பார்த்து “கர்த்தரே” என்றார்.

தேவாலயத்தை விட்டு வெளியேறியவர்கள் அந்த பரந்த மணல்பரப்பின் மீது நடக்கத்தொடங்கினர். அந்த மணல்பரப்பு முடிந்ததும் சவுக்கை காடு வரும் அதை கடந்த பிறகு ஊத்தங்கரை வந்துவிடும் அங்குதான் மேரி வீடு உள்ளது. தேவாலயத்தில் இருந்து முதலில் கிளம்பியது மேரிதான். அதனால் அவள் முன்பாக நடந்துக்கொண்டிருந்தாள். வேகவேகமாக நடந்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு பின்னேயே ஆரோக்கியராஜ்  “மேரி மேரி நில்லு பிள்ளை நில்லு” என கத்தியபடியே ஓடிவந்து கொண்டிருந்தான். அவர்கள் இருவருக்கும் பின்னே தாமஸ் மெதுவாக நடந்துக்கொண்டிருந்தான். அவனிடம் சிகரெட் இருந்தது. திரும்பி ஒருமுறை தேவாலயத்தை பார்த்தான். கனிசமான தொலைவு வந்துவிட்டதை உணர்ந்ததும் சிகரெட்டை பற்ற வைத்தான். இப்போது மேரியின் முகத்தில் இறுக்கம் இருந்தது. அழக்கூடிய பெண்ணாக இல்லை. முற்றிலும் மாறுபட்டிருந்தாள், நடந்தபடியே கூந்தலை முடிந்தாள். அவளது இரப்பர் செருப்பு சடப் சடப்பென சப்தமிட்டது. அந்த சப்தத்தில் இருந்து செருப்பு மணலை வெளியே வீசிக்கொண்டிருந்தது. ஆரோக்கியராஜ் ஓடிவந்து மேரியின் ஒரு கையை பிடித்தான். “எங்க போற” என கேட்டான். அவள் எதுவும் பேசவில்லை. “எங்க மேரி போற” என மீண்டும் கேட்டான். “கடலுக்கு” என்றாள். ஆரோக்கிய ராஜ்க்கு எதுவும் புரியவில்லை. அவளுக்கு முன்னே வந்து நின்றான். “அங்க இருந்துதானா எல்லாம் ஆரம்பிச்சது அதான் அங்கயே முடிக்கலாம்னு போறேன்” என்றாள்.

ஆரோக்கியராஜ்க்கு மீண்டும் அந்த பரிதாப முகம் வந்தது.  தனது நெஞ்சு சட்டையை தானே பிடித்தான். அவளது இடதுகை பக்கம்  மண்டியிட்டாள். கிட்டத்தட்ட ஒரு மாதா முன் மண்டியிடுவது போல தலையில் அடித்து அழுதான். இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்த தாமஸ் தனது பிரெஞ்ச் தாடியின் வெள்ளை முடியை நாக்கால் தொட்டபடி சிகரெட்டை தூக்கி வீசிவிட்டு அந்த பரந்த வெண்மணலில் அவர்களை நோக்கி ஓடிவந்தான். அவர்களை நெருங்கியதும் ஓட்டத்தின் வேகத்தை குறைத்து மேரியின் வலது கைபக்கம் மண்டியிட்டாள். இருவரையும் மேரி பார்த்தாள். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்கள் அப்படி தன்முன் மண்டியிட்டு இருப்பது அவளுக்கு சுமையாக படபடத்தது. இரண்டு கையாலும் தனது வாயை மூடினாள். அந்த சமயம் அவளுக்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை மயங்கி தொப்பென அந்த மணலிலே சரிந்தாள். ஆரோக்கிய ராஜ், தாமஸ் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். பதறியடித்து மேரியின் காலை ஒருவனும் தலையை ஒருவனும் பிடித்து தூக்கியபடி ஓடினார்கள். அந்த பரந்த தரவைக்கு இடது புறமாக ஆரோக்கிய ராஜ் மேரியின் உடலை இழுத்தான். தாமஸ் கெட்டியாக மேரியை தன் பக்கமாக இழுத்தான்.

ஆரோக்கிய ராஜ் எரிச்சலில் கத்தினான்.”ஏய் முட்டாள் இந்த பக்கம்தான் கிணறு இருக்கு”. பிறகு தாமஸ் அவன் இழுவைக்கு மேரியை இலகுவாக விட இருவரும் கிணற்றை நோக்கி ஓடினார்கள். கிணற்றுக்கு இன்னும் சிறிது தூரம் போக வேண்டும்.  மேரியின் தலையை பிடித்திருந்த ஆரோக்கிய ராஜ் சொன்னான்.

“கனமாருந்தா சொல்லு நானே தூக்கிகுறேன் மேரியை ஆஸ்திரேலியன் கப்பல்ல நூறு நூறு கிலோ பேரலை தனியாளா தூக்கிகிட்டு மூணுமாடி மேல போவேன் உனக்கு கனமாருந்தா சொல்லு நான் தூக்கிட்டு போறேன்” என்றான் தாமஸ்.

ஆரோக்கியராஜின் உடலுக்கு எரிச்சலின் உச்சம் கனத்தது. ஆ’வென கத்திக்கொண்டே வேகமாக ஓடினான். அவனுக்கு சற்றும் அசராமல் தாமஸ் ஓடினான். “இப்ப ஏன் வந்த” என கத்தினான் ஆரோக்கிய ராஜ். தாமஸ் எதுவும் பேசவில்லை அமைதியாக தூக்கியபடியே பின்தொடர்ந்தான். “பேரலை தூக்கிட்டே நாள் கடத்தி செத்துருக்கலாம் நீ இப்ப ஏன் வந்த” என மீண்டும் கத்தினான். அவனது கடும் சொல்லை தாங்க முடியாத தாமஸ் பதிலுக்கு கத்தினான். அவர்களது இம்சைமிகுந்த அலைச்சலை பார்த்து பொறுக்காத அந்த பரந்த வெண்மணல் சொல்ல வார்த்தையில்லாது காற்றால் மணலை அள்ளி அவர்கள் மீது வீசியது. இரண்டு பேரும் கண்களை மூடியபடி தள்ளாடினார்கள். ஓட்டம் தடையானது மேரியின் தலையை தூக்கியபடியே ஆரோக்கிய ராஜ் அவனது கண்களை கசக்கினான். அதே போல் தாமஸ் செய்தான். ஒரு கட்டத்தில் இரண்டு பேரும் நின்றுவிட்டார்கள். மேரியை மணலின் மேல் வைத்து இருவரும் அவளுக்கு அருகிலே அமர்ந்தார்கள். மேரியின் கை தனியாக திசையை பார்த்து மெல்ல விரிந்தபடி கிடந்தது அதில் மணல் துகள் துகளாக சேர்ந்து கொண்டிருந்தன‌.

இருவரும் உடலை உதறினார்கள். தாமஸ் சட்டையை கழற்றினான். அதை பார்த்த ஆரோக்கிய ராஜ் “ஏய்” என சப்தமிட்டபடி திரும்பி மேரியை பார்த்தான். அவள் மயங்கி இருப்பது உறுதியானதும். அவன் அதற்கு மேல் பேசவில்லை. “ஐந்து நிமிடம் உட்கார்ந்து போகலாம்” என்றான் தாமஸ். ஆரோக்கிய ராஜ் மேரியை பார்த்தான். “அவளுக்கு ஒன்னுமில்லை சின்ன மயக்கம் தான். மூச்சு நல்லா சீராகவே இருக்கு மணல்ல வைக்கும் போது உணர்ந்தேன்” என்றான் தாமஸ். ஆரோக்கியராஜ் மேரியின் தலை மாட்டிலும் தாமஸ் அவளது கால்மாட்டிலும் அமர்ந்தார்கள். தாமஸ் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தான்.ஆரோக்கியராஜ் தாமஸை பார்த்தபடியே இருந்தான்.

“ஏன் வந்த” என மீண்டும் கேட்டான் ஆரோக்கிய ராஜ் .

தாமஸ் எதுவும் பேசவில்லை சிகரெட் பிடித்தபடியே இருந்தான். ” நீ வர்ற வரை நல்லாருந்தோம் இந்த பத்து வருடமும் நான் அவளை அப்படி பார்த்துக்கிட்டேன். நீ வந்த இப்படி ஆகிடுச்சு போயிடு என்றான்” ஆரோக்கிய ராஜ். அதுவரை புகைத்துக் கொண்டிருந்தவன். புகைப்பதை நிறுத்தினான். “அதை மேரி சொல்லட்டும் போறேன் ஐந்து நிமிடம் ஆச்சு எழுந்திரு” என கூறினான் தாமஸ். இருவரும் மீண்டும் எழுந்து மேரியை தூக்கியபடி நடந்தனர். பின்னே மேரியின் காலை பிடித்தபடி வந்துக்கொண்டிருந்த தாமஸ் ஒரு மாதிரியான மனநிலைக்கு போய்விட்டான். முகத்தை இரண்டு முறை ஆட்டினான். தனது பிரெஞ்ச் தாடியின் வெள்ளை முடியை நாக்கால் தொட்டான். அவனுடைய வாழ்வு இது. அதை அவனே இனி என்ன சொன்னாலும்  சரிகட்ட முடியாதநிலை ஆனாலும் ஆரோக்கிய ராஜ் அப்படி கேட்டதும் அவனால் பொறுக்க முடியவில்லை பலமாக சொன்னான்.

“நான் என்ன செய்வேன் வழக்கமா அடிக்குற காத்து அன்னைக்குனு பார்த்து வழுத்துருச்சு காத்து வழுக்க வழுக்க என்னாச்சுனே தெர்ல முழிச்சு பார்த்தா வெளிநாட்டு கப்பல் ஏதேதோ மொழில பேசுறான்.

இந்த ஊத்தங்கரை குடில நானொரு கடலாடி அதாவது தெரியுமா உனக்கு? மீன் சாப்டவே இரண்டு வருஷமாச்சு! அதுவொரு ஆஸ்திரேலியன் சரக்கு கப்பல்னு அதை தெரியவே எனக்கு மூனு வருஷமாச்சு அவனுங்க கூட இருந்து நம்பிக்கையாகி பழகி வெளிய வர்றதுக்கு என்னென்ன பண்ணேன் தெரியுமா? தினமும் மேரியை நினைச்சு எப்படிலாம் அழுவேன் தெரியுமா? இப்ப நீ கேட்கலாம் ஏன் வந்தனு எனக்கு தெரியும் நான் வந்தது மேரிக்காக! வேற எதையும் நினைக்கலை அவளை அவ்ளோ விரும்புறேன்” படபடத்தான் தாமஸ்.

(மேரி விழித்து விட்டாள் இருவரும் கவனிக்காமல் தூக்கியபடியே நடந்துக்கொண்டிருந்தார்கள்) என்னால் அங்கேயே குடியும் குடித்தனமுமா இருக்க முடியாதா? இந்த பத்து (தாமஸ் வார்த்தை திணறியது) பத்து வருஷத்துல ஒரு விரல் ஒரு நினைப்பு எவ மேலயாவது பட்டுருக்குமா? கேட்குறான் நாயி ஏன் வந்தனு!” என தாமஸ் சொல்ல ஆக்ரோசமாக ஆரோக்கியராஜ் திரும்பினான். மேரியின் தலையை பிடித்தபடியே யாரவே நாய்னு சொல்ற” என கேட்டான் ஆரோக்கியராஜ். “உன்னதான்வே அடுத்தவன் பொண்டாட்டிக்கு புருஷன் இருக்கானா இல்லையானு தெரியாமல் கல்யாணம்கட்டுன உன்னதான்வே” என்றான் தாமஸ்.

இருவரும் ஆசுவாசமாக கத்தினார்கள் அவர்களது சப்தம் கேட்டு மேரி கால்களை வேகமாக அசைத்தாள். தலையை ஆட்டினாள். இருவரும் ஒரு கனம் மேரியை பார்த்தார்கள். கிணற்றின் அருகே வந்திருந்தார்கள். மேரியின் கால்களை கீழிறக்கி தாமஸ் வேகவேகமாக ஓடிப்போய் கிணற்றில் நீர் வாறினான். அதை பார்த்த ஆரோக்கிய ராஜ் மேரியின் தலையை கீழே வைத்து அவனும் கிணற்றிற்கு ஓடினான். இருவருக்கும் தங்களில் யார் நீரை அள்ளுவது என சண்டை ஏற்ப்பட்டது. இதை பார்த்துக்கொண்டிருந்த மேரி செய்வதறியாது கத்தினாள். அவர்களுக்கு அவளின் குரல் காதுகளை தொடவில்லை. என்ன செய்வதென புரியாது அவளே மெதுவாக எழுந்து அவர்களை நோக்கி நகர்ந்தாள். அவர்கள் பலத்த சப்தத்தோடு கத்திக்கொண்டிருக்க வாளியை எடுத்து அவளே தண்ணீர் இரைத்தாள் அந்த சப்தம் கேட்டு இருவரும் அமைதியானார்கள். தனித்தனியாக பிரிந்து ஒதுங்கி நின்றார்கள். தண்ணீரை இரைத்து முகம் கழுவினாள். இருவரையும் ஒருமுறை பார்த்தாள்.பார்த்தபடியே தண்ணீர் குடித்தாள். பிறகு வாளியை தூக்கி கிணற்றில் வீசினாள். இருவரும் பதறிப்போய் மேரியை பார்த்தார்கள். “ஏம்பின்னாடி ரெண்டு பேருமே வராதீங்க” என கூறியபடி நடக்கத் தொடங்கினாள். ஆரோக்கியராஜின் பரிதாபமான அந்த முகம்  உடனடியாக அவனுக்குள் வந்தது. அவன் மேரி மேரி என கத்தினான்.

தாமஸ் தனது பிரெஞ்ச் தாடியின் வெள்ளை முடியை நாக்கால் தொட்டான்.

*

தாமஸ் ஒரு சிறந்த கடலாடி அவனுக்கென்று அந்த ஊத்தங்கரையில் அவன் அப்பா ஒரு படகை விட்டு சென்றிருந்தார். அதில்தான் தினமும் மீன்பிடிக்க போவான். யாரையும் உடன் வைத்திருக்க மாட்டான். தனியாளாக போவான் கொஞ்சமாவது ஓய்வுக்கென்று ஒத்தாசைக்கென்று கரை வந்தாலும் யாரையும் மீன்கூடை தூக்க கூட அனுமதிக்க மாட்டான். அவனை அவன்தான் கவனிக்க வேண்டும் அதில் அவ்வளவு உறுதியாக இருந்தான். அவனுக்கு மேரியை சிறு வயதில் இருந்து தெரியும். தாமஸ் அனைத்தையும் இழந்த பிறகு வெகு சிறு வயதிலே தாய் சுபா இறந்த பிறகு மேரியின் வீட்டில் இருந்துதான் பல நாட்களில் உணவு வந்தன. தாமஸ் அவர்களை அப்படியே என்னவென்றே தெரியாத உறவாக பிடித்துக்கொண்டான். தாமஸ் பிடித்து வருகிற மீன்களின் சிலதை மேரியின் வீட்டுக்கு கொடுப்பான். தாமஸ் அப்பா அம்மா இல்லாதவன் அவனுக்கென்று இருந்த ஒரே ஆறுதல் மேரி வீடு மட்டும்தான். கரடு முரடாக யாருமில்லாது வளர்ந்தாலும் அவனுக்கும் வாழ ஆசை இருந்தது. அதனாலே மேரியை அவர்கள் திருமணம் செய்ய சொன்னதும் முற்றிலுமாக ஒப்புக்கொண்டான்.

மேரியும் சிறுவயதில் இருந்தே தாமஸை பார்த்தவள். அவனை எப்போதும் தனது வீட்டு ஆணாகவே சிறுவயதிலே எண்ணியிருந்தவள். அவளுக்கும் தாமஸ் மீது ஆசையிருந்தது. அதனால்தான் அந்த திருமணம் நிறைவேறியது. மேரி தாமஸை அவ்வளவு அன்பாக பார்த்துக்கொண்டாள். தாய் தந்தை இல்லாத தாமஸை அவ்வளவு மூச்சாக பேணி வந்தாள். தாமஸ் தனது சிறு வயதில் இருந்தே கிடைத்து வந்த எல்லா துயரங்களில் இருந்தும் விலகி போனான். அவனது ஆத்மா மேரியுடன் இணைந்து போனது தினமும் கடலுக்கு போய் வந்ததும் அவளே மோட்சம் என கிடந்தான்.

அக்டோபர் பதினெட்டாம் நாள் வெகு சீக்கிரமாகவே கடலுக்கு போனான். கரையில் அவ்வளவு காற்று இல்லை நிலா வெளிச்சமும் இல்லை சுருங்கி போய் இருந்தது. படகு எந்த தள்ளாட்டமும் இல்லாமல்  அவ்வளவு நேர்த்தியாக போனது. தாமஸ் ஒரே ஆள் என்றாலும் ஆறு பாகத்திற்கு வலை விரிப்பான். அவ்வளவு கெட்டிக்காரன். இரண்டு மூன்று பேர் சேர்ந்து இழுக்க கூடிய அளவுதான் ஆனாலும் அதை அவன் தனியாக செய்வான். தையத்தை கயிற்றில் கட்டினான். தையம் என்பது இரும்பு‌ குண்டாகும் அதை கயிற்றில் கட்டி கடல் நீருக்குள் இறங்குவார்கள். அப்படி இறக்கும் போது தையம் நீரின் அடியில் பாறைகள் இருந்தால் இரும்பு குண்டின் சப்தமும் அதிர்வுகள்  கயிற்றின் மூலமாக காட்டிக்கொடுத்துவிடும்.  நீரின் அடியில் மணல் இருந்தால் அப்படியே தையத்தில் அதிர்வு முற்றிலும் வேறுபடும். பாறைகள் அடர்த்தியாக இருக்கும் இடத்தில் வலைவீசமாட்டார்கள். வலைகள் சேதமடையும். அதை கண்டறியும் முறைதான் இந்த தையம் இறக்குதல்‌. அன்று தாமஸ் தையத்தை இறக்கும்போது முற்றிலும் பாறைகளாக இருந்தன. அவன் கடலின் மீது மெதுமெதுவாக படகை திருப்பி மணலை தேடிக்கொண்டிருந்தான். கரையில் அவ்வளவு நேரம் அமைதியாக கிடந்த கடல் சில நாட்டிகல் கடந்ததும் சற்று காற்று வழுக்கத்தொடங்கியது. படகில் எரிந்த மின்விளக்கும் விட்டுவிட்டு எரிந்தது. தாமஸ் இது போல் பல இரவுகளை பார்த்தவன். தேர்ந்த கடலாடி என்பது வெறும் மீன்களை பிடிப்பது மட்டுமல்ல கடலோடு போராடுபவனுக்கு கொடுக்கிற பெயர். கரையில் தெய்வமே என வணங்கி கடலில் ஏறுகிறவன் கடலுக்குள் அதோடு சண்டை செய்கிறவனாக மாறிவிடவேண்டும். அவன்தான் கடலாடி. ஒரு கட்டத்தில் காற்று வழுக்க வழுக்க தையத்தின் கயிற்று திசை படகின் கீழ் வரை இழுத்துச்சென்றது. தையத்தை மேலே எடுத்தவன்.

விளக்கை பார்த்தான் விளக்கு முற்றிலுமாக அணைந்திருந்தது. படகு செல்லும் திசை முழுக்க இருட்டாகி இருக்க எங்கு போகிறது என்று அவனால் சரியாக கணிக்க முடியவில்லை.

தாமஸ் இப்போது கடலோடு போர் செய்ய தயாராகிவிட்டான். வேகவேகமாக ஓடிச்சென்று படகை திசை திருப்பினான். படகை நிறுத்த வேகத்தை குறைத்தான். எஞ்சினை திருப்பியபடி வெளிச்சமற்ற இருளில் அந்த பெரும் காற்றின் இரைச்சலுக்குள் கடலை பார்த்தவன் திடீரென ” வா ஒரு கை உன்னை பார்த்துடுறேன்”  என்றான் கடலை பார்த்து. நீருக்கு அடியில் இருந்த பாறைகள் படகில் உரசுவது அவனுக்கு கேட்டன. படகின் தளத்தில் காதை வைத்து கேட்டான். நிறைய பாறைகள் அடந்த பகுதி என அவனுக்கு தெரிந்ததும் வேகவேகமாக படகை திருப்பி வேகத்தை கூட்டினான். படகு படுவேகமாக சென்றது அந்த இருட்டின் எதிரில் உள்ள கருமை எல்லாமே கடலாக இருந்தது. சிறிது நேரத்தில் படகு பாறையில் உரசும் சப்தம் நின்றது. ஆனால் அடுத்த சில வினாடிகளிலே படகு பெரும் சப்தத்தோடு எதிலோ மோதி நின்றது. அவனால் அது என்னவென்று புரியவில்லை. ஆனால் அது பாறையல்ல என்பது மட்டும் அவனுக்கு தெளிவாக தெரியும். காற்று முழுமையாக நின்றிருந்தது. துடுப்பை எடுத்து படகின் முன் பகுதியில் நீட்டினான் மணலாக இருந்தது. அவனுக்கு புரிந்துவிட்டது படகு தீடையில் மோதி நின்றுவிட்டது என்று. தீடை என்பது கடலுக்கு நடுவில் கடல் அரிப்பில்  கடலின் மேட்டுபகுதியில் நீர்  உள்வாங்கும் போது ஏற்படுகிற சிறிய அளவேயான நிலப்பரப்பு. அந்த மணல்பரப்பு அதிக நேரம் இருக்காது எப்போது காற்று வழுந்தாலும் உடனடியாக கரைந்து விடும்.

இப்போது தாமஸ் தனியாளாக தீடையில் இறங்கினான். கொஞ்சம் இருள் பழகியிருந்தது. மீண்டும் மணல்பரப்பு நீராவதற்குள் படகை தள்ள வேண்டும் ஒரே ஆளாக அது அவனால் முடியுமா என தெரியவில்லை ஆனால் அந்த கடலாடி இப்போது தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. கடலோடு தாமஸ் சண்டை செய்தே ஆகவேண்டும். தீடையின் மணல்பரப்பு சக்தியாக இருந்தது கால் நன்றாகவே மணலுக்குள் புதைந்தது. கிட்டத்தட்ட முட்டிவரை அவனது கால் புதைந்த மறுகனத்திலே அங்கு நீர் ஊறத்தொடங்கியது. படகின் முன்பகுதி நன்றாக புதைந்துவிட்டது. தாமஸ் தள்ளினான் படகு துளிகூட நகரவில்லை. மொத்த பலத்தோடு தள்ளினான்.

நீர் ஊற்றெடுத்து குமிழும் சப்தம் அதிகமாகின. படகின் மீது ஏறினான் படகு முழுக்க சகதியாகின தண்ணீர் குடித்தான். மீண்டும் தீடையில் இறங்கி தள்ளினான். அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த கடலின் மீது யார் அந்த கல்லை வீசினார்கள் என தெரியவில்லை திடீரென காற்று வழுத்தது. தீடையை சுற்றியிருந்த அமைதியான நீர் சற்று அலையாக மாறியது. அவனது காலுக்கு கீழ் ஏதோ மணலில் ஊறுவதாக தெரிந்தது. கையை தண்ணீருக்குள் விட்டு ஊறுவதை பிடித்தான் அது வழுக்கியது கெட்டியாக இறுக்கி பிடித்து அதை நீருக்கு மேலே எடுத்தான். தட்டையான ஏதோ ஒரு மீன் இருளில் அது என்ன மீனென்று அவனுக்கு தெரியவில்லை. தூக்கி படகுக்குள் வீசினான். மீன் படகினுள் துள்ளும் சப்தம் அலைகளோடு கேட்டபடியே இருக்க கவனித்தான். அவ்வளது நேரம் சகதியாக முட்டிவரை புதைந்திருந்த தீடை இப்போது இடுப்புவரை கடல் நீராகி இருந்தது. சுற்றி தீடை முழுக்க நீராகிக் கொண்டிருந்தது.

தாமஸ் மெல்ல மெல்ல மீண்டும் படகைத் தள்ளினான் அது மெல்ல அசைந்தது ஆனால் அதற்குமேல் துளியும் நகரவில்லை. அந்த கடலாடி இப்போதும் பயப்படவில்லை அன்னார்ந்து வானத்தை பார்த்தான். எக்கி படகின் மேல் ஏறினான். நகராத படகின் நடுவே அமர்ந்தான். துள்ளிக்கொண்டிருந்த மீன் முழுமூச்சையும் இழந்து சாவகாசமாக படகின் மேல் இறந்திருந்திருந்தது அதுவும் இனி பயப்படத் தேவையின்றி அமைதியடைந்து விட்டது. படகு மெல்ல அசைந்தது. தாமஸ் எதுவும் செய்யவில்லை அப்படியே அமர்ந்திருந்தான். படகினுள் தண்ணீர் வரத்தொடங்கின. கண்களை இறுக்க மூடி மேரி என்றான். அந்த கடல் ஒரு பெரிய காற்றை வீசி அவனை அசைத்து பார்த்தது அவன் அந்த இடத்தை விட்டு அசையவில்லை. ஒரு கடலாடிக்கு கடலிடம் தோற்பதை விட வேறெந்த கெளரவமும் இருந்துவிட போவதில்லை.

ஆரோக்கிய ராஜ் ஊத்தங்கரை கடல்குடியின் கரைவலை மீனவன். ஏழ்மையான குடும்பத்தின் கடைசி வாரிசு. தினமும் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து ஊத்தங்கரையின் சோற்றுத்தரவை நோக்கி நடப்பான். ஊரே மீன்பிடிக்க படகில் ஏறும்போது இவன் மட்டும் சோற்றுத்தரவை போவான். சோற்றுத்தரவை என்பது ஊத்தங்கரையின் கரைவலை மீனவர்கள் ஒன்று கூடி கிடக்கும் கடற்கரையோர இடம். அந்தக் கரையில் ஆளுக்கொரு திசையில் கரைவலை இழுப்பார்கள். அங்கு அமர்ந்துதான் கரைவலைக்கு வலை பின்னுவார்கள் மீன்களை சேகரிப்பார்கள் பிறகு அவர்கள் தங்களோடான வேடிக்கைப் பேச்சை சுமந்து கதை அளப்பார்கள்.

ஆரோக்கிய ராஜ் படகில் ஏறமாட்டேன் என்கிற பிடிவாத மீனவன். அதற்கு கார்ணம் அவன் தந்தை ஜெபமாலை கடலோடு போனதுதான். ஒரு மீனவன் இதற்கெல்லாம் அஞ்சி படகு ஏறாமல் இருக்கலாமா என கேட்டால். ஆரோக்கிய ராஜிடம் உள்ளது கடல் மீதான பயம் அல்ல துரோகத்தன்மை. உன்னை நம்பி வந்தவர் என் அப்பா அவனை ஏன் கரையில் நீ விடலை என்கிற கேள்வியை தினமும் கேட்பான். கடல் நொடிக்கு ஒரு அலையாக பதில் கொடுக்கும். அவன் அதையெல்லாம் கேட்கவே மாட்டான். கிட்டத்தட்ட அவனுக்கு இந்த கரைவலை இழுக்க கூட விருப்பமில்லை ஆனால் என்ன செய்வதென தெரியாமல் மூன்று மணிக்கே தினமும் எழுந்து தரவைக்கு வந்துவிடுவான்.

அன்றும் வழக்கம் போலவே அவனது கூட்டாளிகள் அவனுக்கு முன்பே வந்திருந்தார்கள். வில்பர்ட்தான் அங்கு தலைமை வலையாளி அவரது துணையோடுதான் அவர்களுக்கு வலைகள் பகிர்ந்தளிக்கப்படும்.  அவர்களில் ஒருவன் படகில் ஏறி வலையை கடலின் குறிப்பிட்ட தூரத்தில் பரப்பி விடுவான். அதன் படி இரண்டு குழுவாக பிரிந்து தயாராக இருப்பார்கள். ஒருவர்  குழுவுக்கும் இன்னொருவருக்கும் சில மீட்டர் தூரத்தை  தேர்ந்தெடுத்து விலகி இருப்பார்கள் விடுவார்கள். அம்பா பாடல் சப்தமாக ஒலிக்க ஒலிக்க மூன்று நான்கு மணிநேரம் வலை இழுப்பார்கள். அப்படி இழுக்கும்போது இடுப்பில் ஒரு கயிற்றை கட்டி அதன் முடிச்சை வலையில் மாட்டி விடுவார்கள். இடுப்பு வலிக்காமல் இருப்பதற்கும் துணைக்கும். கடலில் பரந்து விரிக்கப்பட்டு ஒன்றாக இழுத்து வலையை பொதுவான ஒரே பகுதியில் இரு குழுவினரும் குவிப்பார்கள். அப்படி குவிக்கும் போது கிடைக்கிற மீன்களை பிரித்தெடுத்து விற்பனை செய்வார்கள். ஆரோக்கிய ராஜ் இவர்களோடு தினமும் இப்படி கரைவலை விரிப்பான் பிறகு சிறிது நேரம் கரைக்கு வலை இழுப்பான் . கரைவலை மீன்களுக்கு எப்போதும் ஒரு சிறப்பிருக்கும். மிக குறைந்த நேரத்தில் கிடைக்கிற நல்ல மீன்கள். அன்று கரைவலை இழுத்த பின் வில்பர்ட் உடன் எல்லோரும் அமர்ந்திருந்தார்கள்.அவர்களது கூட்டத்தில் புதிதாக ஒரு பதின்ம வயது பையன் வந்திருந்தான். சுறுசுறுவென இருந்தான். வில்பர்ட் எது சொன்னாலும் உடனே ஓடிப்போய் வேலை பார்த்தான். எல்லோரும் அமர்ந்திருக்கும் போது அவன் மட்டும் தரவையை ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு “இதுக்கு ஏன் அண்ணன் சோற்றுத்தரவைனு பெயர் வச்சாங்க” என கேட்டான்.

வில்பர்ட் இழுத்துக்கொண்டிருந்த பீடியை பாதியிலே நிறுத்தி “தெரியலைடா” என்றார். கூட்டத்தில் இருந்த இன்னொருவன். தரவையின் மணலை அள்ளி “எப்பவும் ஈரமா குலைஞ்ச சோறாட்டம் பிசுபிசுனு வெள்ளையா இருக்குதில்லையா அதனால் கூட இருக்கலாம்” என்றான். எல்லோரும் அந்த மணலின் ஈரத்தை தொட்டு பார்த்தார்கள். கூட்டத்தில் இருந்து ஒரு ஏளன சிரிப்பு கேட்டது. கரைவலையாளிகளின் மூத்த ஆள் சவேரியார் சுருட்டை இழுத்து புகையை துப்பினார்.

“அட பேத்தைகளா அந்த பையன் கேட்டதுக்கு நீங்களும் என்னென்னவோ சொல்லுறீங்க” என்றார். “சரி நீதான் மூத்த கடலாச்சே உன் வயசு இந்த கடல் உசரமாச்சே நீ சொல்லு” என்றான் வில்பர்ட்.

சவேரியார் சுருட்டை மேலும் ஒரு இழு இழுத்தபடி”இப்பதான் இந்த படகு எஞ்சின் எல்லாம் ஆனால் ஆதில இந்த ஊத்தங்கரை தொடங்குனதே கரைவலை பெயரால்தான், இப்ப நாம இங்க இருந்து பேர் ஆளுக்கொரு பாகமா கடலை பிரிச்சு வலை போடுறோம். நான் சின்னவனா இருந்தப்ப இங்க அறுநூறு பேர் கிடப்போம். காலை மூணு மணிக்கு வலை இழுக்க தொடங்குனா நாள் முழுக்கப் போகும். அள்ள அள்ள மீன் கொடுத்துட்டே இருக்கும் இந்தத் தரவைக் கடல். பிறகு படகு எஞ்சின் வந்தப்புறம் நிறைய பேர் தனித்தனியா ஆழம் பார்க்க போயிட்டாங்க. ஆனா என்ன ஆழம் பார்த்தாலும் பெருத்த முதலாளிகளை தவிர மீன்பிடியை மட்டுமே நம்பி வாழ்ற பயலுக எல்லாம் ரெம்ப சம்பாதிக்காட்டாலும் மீன்பிடி தடை காலத்துல மூணு வேளை சோத்துக்கு போதும்னு நினைக்குறவன்லாம் அப்ப திரும்ப இந்த தரவைக்கு வந்துடுவான்‌. அள்ளி அள்ளி கொடுக்கிற இந்த ஊத்தங்கரை கடல் அவனுகளுக்காக மீன்பிடி தடை காலத்துல கிள்ளி கிள்ளி நாப்பத்தஞ்சு நாளும் சமமா கொடுத்து தினமும் அடுப்எரிக்கவைக்கும். வேற எந்த தரவையில கரைவலை போட்டாலும் இப்படி நடக்காது ஏமாந்துதான் போவான். ஆனால் இந்த தரவையில் வலை போட்டா நிம்மதியோட போவான். சோத்துக்காகவது மீன் கொடுக்கும்னு நம்பி வர்ற தரவை அதான் இது சோத்துத்தரவை ” என்றார் சவேரியார்.

எல்லோரும் சவேரியாரின் பேச்சில் ஒரு கனம் அமைதியாகி விட்டார்கள். ஆரோக்கிய ராஜ் மட்டும் எதையும் கேட்காத மாதிரி அமர்ந்திருந்தான். வில்பர்ட் பீடியை தரவையின் ஈரமணலில் வைத்து அணைத்தான். எல்லோரும் எழுந்து ஏலக்குடிலை நோக்கி நகரத் தொடங்கினர். நேரம் காலை ஏழு மணியை கொண்டிருந்தது. வில்பர்ட் ஆரோக்கிய ராஜை பார்த்தான். “ஏவே ஆரோக்கியம் எம்.ஆர் கம்பெனில வண்டி ஓட்ட கூப்பிடுறாக போறியா” என கேட்டான். ஆரோக்கிய ராஜ் எதுவும் பேசாமல் நடந்தான். “தினமும் உன் அம்மை சங்காயம் போய் கஷ்டபடுது நீ கரைவலை இழுத்து  இந்த புடிக்காத கடலை பார்த்து என்ன செய்ய போற” என கேட்டான் வில்பர்ட். “போறேன்னா” என கூறினான் ஆரோக்கிய ராஜ்.

*

தாமஸ் கடலோடு போன அந்த மூன்று மாதத்திற்குப் பிறகு நிறையவே மாறிவிட்டது. மேரி முற்றிலுமாக உடைந்து போய்விட்டாள். தாமஸ் சென்ற படகை கூட கண்டறியமுடியாதபடி எல்லாம் தொலைந்து போயிருந்தது. தாமஸ் கடலில் மூழ்கி எப்படி இறந்திருப்பான்? எவ்வளவு தண்ணீர் குடித்திருப்பான்? என அவளுக்கு நினைவு வரும் போதெல்லாம் அவளைமீறி பதறி அழுதுவிடுவாள். மேரியை எல்லோரும் சமாதானம் செய்வார்கள். அவள் ஆறுதலடையக் கொஞ்சம் கூட அவளது இறுப்பு நிலைகொள்ளாது. அழுதுக்கொண்டே இருந்தாள். ஒரு மீன் முள் குத்தினாலே அவ்வளவு வலிக்கும் எந்த மீன் எப்படியெல்லாம் தாமஸை கடித்திருக்கும் என அடிக்கடி தனக்குள்ளே சொல்லிப் பார்ப்பாள். அந்த யோசனை அவளது உடலை சிறிது சிறிதாக்கி இரத்தம் ஏறாத உடலாக்கி சொற்ப நாட்களிலே எலும்பும் தோலுமானாள் மேரி. தாமஸின் இல்லாமையை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதிகாலையிலே எழுந்து விடுவாள்.  எதையோ எதிர்பார்த்து எதிர்பார்த்து அப்படியே அவள் அமர்ந்திருந்ததில் இரவு பகல் கூட தெரியாத அளவு எல்லாம் மறந்து போயிருந்தாள்.

மேரியின் இந்த நிலை பார்த்து அவளது குடும்பமே சோர்ந்து செய்வதறியாது போனது. அதன் துக்கம் நீள நீள மேரியின் தந்தையும் இறந்துபோனார். மேரிக்கு மேலும் ஒரு இழப்பு எல்லோரும் அவளை சரி கட்டினார்கள். அக்கம் பக்கத்தின் யோசனைப்படி எதாவது வேலைக்கு போ நாலு பிள்ளைங்க கூட சேர்ந்து பழகு எல்லாம் மாறுவா என மேரியின் அம்மைக்கு யோசனை கொடுக்க மேரியை எம். ஆர் நண்டு பண்ணையில் வேலைக்கு சேர்த்து விட்டாள் மேரியின் அம்மை.

தினமும் காலையில் எழுந்து எட்டு மணிக்கெல்லாம் கிளம்பி வீட்டு வாசலுக்கு வந்துவிடுவாள. ஆரோக்கிய ராஜ் மொத்தங்குடி, அச்சுவம், மோட்டல் ஆகிய குடில்களுக்கு வண்டி ஓட்டி பெண்களை ஏற்றி கடைசியாக ஊத்தங்கரை வருவான். மேரியோடு சேர்த்து சில பெண்களும் ஏறுவார்கள். இப்படியே நாட்கள் கடந்தன. மேரி கொஞ்சம் சகஜமானாள். ஒரு பெண் தனது வாழ்வில் இயல்பாக மாற அவளுக்கு முழு சுதந்திரம் எப்போதும் தேவை. ஒரு பெண்ணுக்கு கிடைக்கிற சுதந்திரம் ஆணுக்கு பலம்தான்.

மேரியால் தாமஸின் நினைவில் இருந்து முழுமையாக விடைபெற முடியாவிட்டாலும் அவள் இயல்பானாள். இரவு பகலுக்கு வித்தியாசம் தெரிந்தது. ரெம்ப இயல்பாக எப்போதாவது சிரிப்பாள் ஆனாலும் பயப்படுவாள். அவள் வேலை பார்க்கிற எம்.ஆர் பண்ணை, நண்டுகளை மொத்தமாக கொள்முதல் செய்து வெளி கம்பெனிகளுக்கு அனுப்பும் சிறு கடற்கரை நிறுவனம். மேரியோடு சேர்த்து நூற்றி ஆறு பெண்கள் வேலை செய்தார்கள். தினமும் காலை ஒன்பது மணிக்கு வேலை ஆரம்பிக்கும் சாயந்தரம் ஐந்து மணிக்கு முடிந்துவிடும். அந்த கம்பெனி. மூன்று பிரிவாக செயல்படும். ஒன்று நண்டுகளை சுத்தம் செய்வது, இரண்டு சுத்தம் செய்த நண்டுகளை அவிழ்த்து பார்சல் இடத்திற்கு மாற்றுவது, மூன்று பார்சல் செய்து தனித்தனியாக பெட்டி பெட்டியாக அடுக்கிவைப்பது. இதில் மேரி நண்டுகளை சுத்தம் செய்தல் பிரிவில் இருந்தாள். அவளுக்கென்று  மஞ்சள் நிறத்தில் மோலாடை ஒன்று கொடுப்பார்கள். அதை தனது உடைக்கு மேல் அணிந்து சுத்தம் செய்வாள். நண்டுகளின் கழிவு சதைகளில் சிதறல்களை அந்த மோலாடை தாங்கிக்கொள்ளும். அதை ஒவ்வொரு நாளும் வேலை விட்டு போகும்போது மேலாடை பயன்படுத்திய பெண்களே தண்ணீரில் உலர்த்தி காயவைத்துச் செல்ல வேண்டும். மேரி நண்டுகளை சுத்தம் செய்யும் போதும் சரி திரும்பி வண்டியில் போகும் போதும் சரி‌ யாருடனும் அதிகமாக பேச மாட்டாள். அவளுக்கென்று இழைக்கப்பட்ட இந்த வாழ்வு தன்னிச்சையாக அவளை அழைத்துப் போகிறது. அதில் அவளொரு சகதிக்குள் புகுந்து வெளியெரும் மீனைபோல நீந்திக் கொண்டிருந்தாள். ஆறு வருடங்கள் இப்படியே நகர்த்தன. இப்போது முற்றிலுமாக மேரி தனது வாழ்வில் இருந்து அனைத்தையும் மறந்துவிட்டாள். அந்த எம்.ஆர் நண்டு பண்ணை அவளுக்கு நண்டுகளை அவிழ்க்கும் பிரிவில் இருந்து பெட்டி போடும் பிரிவுக்கு மாற்றியிருந்தது.

ஒருநாள் காலை எப்போதும் வண்டி ஓட்டுகிற ஆரோக்கியராஜ் அன்று வரவில்லை. வேறு ஒருவர் வண்டி ஓட்டி வந்திருந்தார். வழக்கமான வேலை முடிந்து மாலை மேரி வீடு திரும்பும் போது வீட்டின் வாசலில் நிறைய செருப்புகள் கிடந்தன‌. உள்ளே ஆரோக்கிய ராஜ் மற்றும் அவனது அம்மா அமர்ந்திருந்தார்கள். “மேரியை ஆரோக்கியத்துக்கு கொடுங்க” என சொன்னாள் ஆரோக்கியம் அம்மை. மேரியின் அம்மா எதுவும் பேசவில்லை. மேரியின் முடிவுதான் என கூறினார்.

மேரி ஆரோக்கிய ராஜை சொற்ப நாட்கள்தான் முகம் பார்த்திருப்பாள். அவனும் அப்படிதான். மேரி வீட்டின் அறைக்குள் சென்று தனியாக அமர்ந்துவிட்டாள். ஆரோக்கிய ராஜ் எதையும் பேசவில்லை. நாளை முடிவை சொல்லுங்க என கூறி அவர்கள் சென்றுவிட்டார்கள்.

மறுநாள் காலை ஆரோக்கிய ராஜ் வண்டி ஓட்டி வந்திருந்தான். மேரி அவனை சில தடவை பார்த்தாள். அவனும் பார்த்தான். கம்பெனி வந்ததும் அனைவரும் இறங்கினார்கள். மேரி மட்டும் இறங்கவில்லை. அவனுக்குப் பின் இறுக்கையில்தான் மேரி அமர்ந்திருந்தாள்.

“என் கணவர் இறந்து ஆறு வருடமாச்சு கடலோட போயிட்டார் இந்த கடலே கதினு இருந்தவர் உங்களுக்கு தெரியுமா” என கேட்டாள் மேரி.”தெரியும்” என்றான் ஆரோக்கிய ராஜ். “என் அப்பா கடலோடு போய் இருபத்தி இரண்டு வருஷமாச்சு தெரியுமா?” என ஆரோக்கிய ராஜ் கேட்டான்.”தெரியாது” என்றாள் மேரி. “நீ இப்படியே இருக்க கூடாது மேரி உனக்கு நான் இருக்கேன்” என்றான் ஆரோக்கிய ராஜ்.

அவளுக்கு கண்களெல்லாம் சொக்கியது. ஒரு இழப்பில் இருந்து வெளிவரவே ஆறு வருடமாகிற்று. மற்றுமொரு துயரமாகி விடுமோ என பயந்தாள்.”நீங்க கடலுக்கு போவிங்களா” என கேட்டாள். ஆரோக்கிய ராஜ் சிரித்தபடி “மாட்டேன்” என்றான்.

அவளுக்கு ஏதோ நம்பிக்கை ஆரோக்கிய ராஜ் தாமஸை போல மறைந்து விட மாட்டான் என்று அவள் நம்பிக்கையில் சிரித்தாள் அது அவ்வளவு அழகாக இருந்தது. ஒரு பெண்ணுக்கு அவளது இழப்பை ஈடுசெய்ய சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவளை பயம் காட்டாத ஆண் . பாதர் ஜெயபால் அப்போதுதான் அந்த ஊத்தங்கரை தேவாலயத்தின் பாதிரியராக புதிதாக வந்திருந்தார். அவர் நடத்திய முதல் திருமணம் மேரி, ஆரோக்கிய ராஜ் திருமணம். அத்தனை பிரதிநிதிகள் சாட்சியமாக இயேசுவின் வார்த்தைகளால் மணமக்களை போற்றி சிறப்பாக நடத்தினார். ஊத்தங்கரை குடிலே அவ்வளவு மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமாக அவர்களை வாழ்த்தியது. மேரி ஆரோக்கியராஜ் இருவரும் சமமான மாண்புமிகுந்த தம்பதிகளாக வாழ்ந்தனர். இரண்டு பிள்ளைகளை பெற்றெடுத்தார்கள். இரண்டும் பெண் பிள்ளைகள்.

திருமணமாகி பத்து வருடங்கள் கடந்தன. கிட்டத்தட்ட மேரிக்கு பதினாறு வருடங்கள் கடந்தன தாமஸ் நினைவுகள் அகன்று. அவளை அவளாக ஆரோக்கியராஜ் பார்த்து வந்தான்.

*

அந்த காலை ஊத்தங்கரை முழுமையாக மாறிப்போயிருந்தது. எல்லாமும் கலவரநயத்தோடு வீதிகள் உருமாறி கொண்டிருந்தன.

ஊத்தங்கரை குடில் மீது யார் கண்ணுக்கும் தெரியாத மாபெரும் கருவாடு ஒன்று காய்ந்தது கொண்டிருந்தது.என்றைக்கும் இல்லாத கவுச்சி முழுமையாக ஆட்கொண்டிருந்தது குடிலை. அப்போது அந்த பிரெஞ்சு தாடி அணிந்த ஒருவன் தான் மேரியின் கணவன் என்று சொல்ல டீக்கடையில் நின்ற வில்பர்ட் அவனை கன்னத்தில் அறைந்து விரட்டிக் கொண்டிருந்தார். வில்பர்ட் உடன் எல்லோரும் அவனை அடிக்க துடித்தார்கள்.அப்போது வண்டி ஓட்டி வந்துக்கொண்டிருந்த ஆரோக்கியராஜை நிறுத்தி அவனை முன் நிறுத்தினார்கள். மேரிக்கு திருமணமானது பெரும்பாலும் அந்த ஊரில் யாருக்கும் தெரியாது. ஆரோக்கிய ராஜ் செய்வதறியாது கூட்டத்தில் இருந்து அவனை விலக்கி தனியாக அழைத்து வந்தான். “யார் நீ” என கேட்டான். நான் “தாமஸ்” என்றான்.

ஆரோக்கிய ராஜ் தலைமீது எண்ணற்ற சிதறல்கள். அவனால் அதை நம்ப முயலவில்லை. அவனை திரும்பி போகும்படி கத்தினான். அவன் மேரியை பார்ப்பதாக கூறினான். ஆரோக்கிய ராஜ் கோபம் தலைக்கெறியது தாமஸை கூர்ந்து மிக நெருக்கமாக போய்பார்த்தான்.  தாமஸ் எந்தவித அசட்டையும் செய்யாமல் தனது பிரெஞ்ச் தாடியின் வெள்ளை முடியை நாக்கால் தொட்டான்.

மேரி அவர்கள் இரண்டு பேரும் வேண்டாம் என சொல்லி சென்ற பிறகு ஆரோக்கிய ராஜ் தாமஸ் இரண்டு பேரும் அந்த கிணற்றடியிலே அமர்ந்திருந்தார்கள். மேரி தூரமாக சென்று மறையும் வரை மறைந்த பிறகும் அவர்கள் அங்கிருந்து நகரவேயில்லை. இரண்டு கணவன்களும் தங்களில் மேரி யாருக்கு தன்னை ஒப்புக்கொடுப்பாள் என குழப்பத்தில் இருந்தார்கள். அதில் தாமஸ் மிக அலட்சியமாக இருந்தான். அது ஆரோக்கியத்துக்கு அவ்வளவு கோபம் கொடுப்பதாக இருந்தது. தாமஸ் மேலும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தான். அந்த பரந்தவெளி காற்று அவனை பற்ற வைக்க விடாமல் விளையாடியது அதைபார்த்துக்கொண்டிருந்த ஆரோக்கியராஜ் தாமஸிடம் இருந்து லைட்டை வாங்கி கையை குவியலாக்கி நெருப்பை எரிய வைத்தான். அதனுள் சிகரெட்டை பற்ற வைத்த தாமஸ் நன்றி சொன்னேன். காற்று சற்று மெதுவாக வேகத்தை குறைக்க “இந்த உலகத்துலயே மிகப்பெரிய கருணையை கடலிடம்தான் இருக்கு” என்றான் தாமஸ். தாமஸை நிமிர்ந்து பார்த்தான் ஆரோக்கியராஜ்.”நான் அப்படி நினைக்கலை தாமஸ் ஏன்‌ சின்ன வயசுல எங்க அப்பனை கொன்னு போட்டுச்சு. இப்ப உன்னை உயிரோட விட்டுருக்கு இந்த உலகத்துலயே கடல்தான் கருணை இல்லாதது” என்றான்.

தாமஸ் சிகரெட்டை நன்றாக உள்ளிழுத்து புகையை ஊதியபடியே .  “உங்க அப்பா பெயர் ஜெபமாலை தானே” என கேட்டான். ஆரோக்கியத்திற்கு அதிர்ச்சி “உனக்கு எப்படி தெரியும்” என கேட்டான்.”இந்த தாமஸ் முதல்ல கடலாடி ஆரோக்கியம் பிறகுதான் மேரிபுருஷன்”  “உன் அப்பாவை எனக்கு நல்லா தெரியும் அவர் உண்மையான மீனவன் இந்த ஊத்தங்கரையோட ஒரே நவரத்தினம் உன்னை மாதிரி பயந்து இல்லை கடலோடு சண்டை செய்வாரு” என்றான் தாமஸ். ” நான் அப்படியில்லை எங்க அப்பா போனதும் கடல் போவதை முற்றிலும் நிறுத்திட்டேன்” என்றான் ஆரோக்கிய ராஜ் “ஒரு கடலாடி தன்னோட கடைசி பிள்ளையும்  கடல்லதான் இறங்கணும் நினைப்பான். நீயொரு கோழை” என்றபடியே தனது பிரெஞ்ச் தாடியின் வெள்ளை முடியை நாக்கால் தொட்டான் தாமஸ்.

அந்த வெண்ணிலம் சற்று இருளத்தொடங்கியது. ஆரோக்கிய ராஜ் இதயம் படு வேகமாக படபடத்தது. தனது வாழ்வில் இப்படியொரு நாள் வருமென்று அவன் கனவிலும் நினைத்திருக்க மாட்டான். அவன் மேரியை திருமணம் செய்யும் போது எப்படி துடிதுடிப்பான காதலோடு இருந்தானோ அப்படிதான் இப்போதும் இருக்கிறான். எங்கிருந்தோ திடீரென ஒருவன் வந்து நான்தான் தாமஸ் என்கிறான். அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் மேரி மீது எந்த கோபமும் அவனுக்கு இல்லை. அவள் மீதிருந்த காதல் அவனுக்கு அப்படியே இருந்தது. மேரி  கோவித்துக்கொண்டு போகலாம் அதற்காக நான் மேரியை இழக்க முடியாது என தெளிவாக இருந்தான்.

“கொஞ்சம் புரிஞ்சுக்க தாமஸ் நாங்க பத்து வருடமாக வாழ்ந்துட்டு இருக்கோம் எங்களுக்கு இரண்டு குழந்தை இருக்கு நாங்க எங்களுக்குனு ஒரு வாழ்க்கைஆரம்பிச்சு அதற்கான எல்லைகளை நோக்கி போயிட்டு இருக்கோம் நீதான் கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கணும்” என்றான் ஆரோக்கிய ராஜ்.

தாமஸ் எதுவும் பேசவில்லை. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவன்.  “என்னை ஒயின்ஷாப் கூப்பிட்டு போறியா‌” என கேட்டான்.

இருவரும் எழுந்து நின்றார்கள் துயரமாக இருந்தாலும் அதே நேரத்தில் கொஞ்சம் வேகமாகவே முடிந்த மாதிரி இருந்தது அந்தநாள். அந்த இரண்டு கணவர்களும்அந்த இடத்தை காலி செய்து ஊத்தங்கரை சந்தைக்குள் போனார்கள். அதே கவிச்சி வாடை காலையில் தாமஸ் வரும் போது எப்படி ஊர் இருந்ததோ அதே பரபரப்பு அந்த இரவிலும். அவர்கள் இருவரையும் ஒன்றாக சந்தையில்பார்த்த வில்பர்ட் ஆரோக்கிய ராஜிடம் “இவனோட ஏன் அலையுற” என கேட்டான். ஆரோக்கிய ராஜ்” ஏதுமில்லை தெரிஞ்சவர்தான்”  என கூறி அனுப்பினான். வில்பர்ட் முழுக்க குழப்பமாகவே அவர்களை விட்டு நகர்ந்தான். மதுக்கடையில் இருவரும் எதிரெதிரே அமர்ந்தார்கள். இருவருக்கும் சேர்த்து பாட்டில்கள் வந்து சேர்ந்தன. ஆரோக்கிய ராஜ் குடிப்பதில்லை என்றான். தாமஸ் நானும் குடிப்பதில்லை என்றான். பிறகு ஏன் என்பது போல ஆரோக்கிய ராஜ் தாமஸை பார்த்தான்.

மதுவை சீராக கலக்கிய தாமஸ் முதல் டம்ளரை அவ்வளவு கடினப்பட்டு உள்ளிறக்கினான். ஆரோக்கிய ராஜ் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான். இரண்டாம் டம்ளரையும் காலி செய்தான் தாமஸ். தட்டில் இருந்த திருக்கைமீனை எடுத்து பார்த்தான். எனக்கு ரெம்ப பிடித்த மீன் என்றான். ஆரோக்கிய ராஜ் எதுவும் பேசவில்லை.

ஏதோ ஒரு வகையான வேடிக்கை பார்ப்பதை போல பார்த்துக்கொண்டிருந்தான். கொஞ்சம் பேசலாமா? என கேட்டான் தாமஸ். ஆரோக்கிய ராஜ் “ம் ” என்று மட்டும் சொன்னேன்.

“திரும்பவும் சொல்லுறேன் இந்த உலகத்துலயே ரெம்ப கருணையானது கடல்தான்” ஆரோக்கிய ராஜ் எரிச்சலில்”உச்” கொட்டினான். தாமஸ் அதை காதுகளில் வாங்கிக்கொள்ள வில்லை. அவனுக்கு இப்போது கொஞ்சம் போதை ஏறியிருந்தது. காலையில் பார்த்த அந்த தாமஸ் இப்போது முழுமையாக உடைந்து போய் இருந்தான். அவனுக்கு அழ வேண்டும் போல் இருந்தது. இந்த பூமியில் யாரும் தன்னை மாதிரி இருக்க கூடாது என தோன்றியது. வாயை நன்றாக துடைத்து மேலும் ஒரு திருக்கை மீனை சாப்பிட்டான்.

“எத்தனை நாள் கண்மூடி கிடந்தேனு இன்னும் நினைவில்லை ஆரோக்கியம்.  அந்த ஆஸ்திரேலியன் கப்பல் உள்ள சின்ன சிறை இருந்தது. அது அவ்வளவுபிரகாசமான அறை. எந்நேரமும் அமைதியாகவே இருக்கும். நான் அந்த கடல்ல படகை தள்ள போராடும்போது எனது தோள் பலமாக அடிப்பட்டிருந்தது. அதற்கு அந்த கப்பலிலே வைத்தியம் பார்த்தார்கள். இவ்வளவுக்கும் நானொரு கைதி இல்லையா அவங்களுக்கு ஆனால் என்னை கவனமா பார்த்தாங்க.கிட்டத்தட்ட இரண்டு வருடம் எதையுமே பார்க்காமல் கொடுக்குறதை சாப்பிட்டு பெரிய பெரிய பேரல்களை தூக்கி அடுக்கி வைத்தே இரண்டு வருடம் கழிச்சேன். ஒவ்வொரு நாளின் இரவும் மேரி நினைப்பா இருக்கும். ஆரோக்கிய ராஜ் கூர்மையாக தாமஸை நிமிர்ந்து பார்த்தான்.

தாமஸ் தொடர்ந்தான் மறுநாள் காலையில் எல்லாம் மறந்துடும். ஒருநாள் அந்த அறையோட காவலாளியை ஒரு கைதி தள்ளிவிட்டான். அதில் அவரது கால் சுளுக்கு பிடிச்சுருக்கு. கப்பல் மருத்துவர் சில தைலத்தை தடவி விட்டு போய் விட்டார். அவரது காலை நான் கேட்டு வாங்கி சுளுக்கு எடுத்து விட்டேன். அதற்கு அந்த காவலாளிக்கு என் மேல் அன்பு வந்தது. எனக்கு அந்த அன்பு எல்லாமுமாக அந்த காலத்தில் இருந்துவிட்டது. எனக்கு அதுவே போதுமென இருந்து விட்டேன் தினமும் அவருக்கு வருகிற இறைச்சிகளில் சிலதை எனக்கு கொடுப்பார். கொஞ்ச நாட்களில் எனக்கு அவர்களது மொழி புரியத்தொடங்கி விட்டது. அவர் என்னிடம் விசாரித்தார். எனது விபரங்களை சொன்னேன். எனக்காக மிக வருத்தப்பட்டார். என்னை விடுதலை செய்யபரிந்துரைப்பதாக செலவுக்கு பணம் கொடுப்பதாக கூறினார். ஆனால் நான்தான் மறுத்து விட்டேன். எனக்கு பயம் ஆரோக்கிய ராஜ் நான் இங்கு வந்து நிற்க பயம்.அதைவிட அந்த அன்பான காவலாளியை விட்டு வர

மனமில்லை என்றான் தாமஸ். ஆரோக்கிய ராஜ் அவனை ஆச்சரியமாக பார்த்தான். காரணம் என்னவாக இருந்துவிட போகிறது தாமஸின் சிறுவயது தனிமைதான்.அதுதான் அவனை மேரி வீட்டில் இருக்க வைத்தது. மேரியை அவன் விரும்பியிருந்தாலும் எந்தவொரு பிற அன்பையும் விலக்கி வைக்க அவன் தயாராக இல்லை. ஒருவேளை அந்த காவலாளி உடன் வருவதாக சொல்லியிருந்தால் அவன் அன்றே கிளம்பி ஊத்தங்கரை வந்திருப்பான். ஆனால் அவன் அதைதான் செய்திருக்க வேண்டும். அவன் அந்த காவலாளியின் அன்பை விட்டு வந்திருக்க வேண்டும். அந்த காவலாளி அவனை விடுதலை செய்வதாக கூறிய போது ஐந்து வருடம்தான் கடந்திருந்தன. மறுத்துவிட்டான். “இந்த கடல் எனக்கு கருணையை காட்டியது. நான் அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என கூறி அழுதபடியே தாமஸ் தனது பிரெஞ்ச் தாடியின் வெள்ளை முடியை நாக்கால் தொட்டு கொஞ்சம் கடுமையானான்.” நான் அப்பவே வந்திருந்தா நாயே உனக்கில்லடா மேரி ” என்றான் திடீரென.

ஆரோக்கிய ராஜ்க்கு அதிர்ச்சியானது அருகில் இருந்த பாட்டிலை எடுத்து தாமஸ் தலையில் அடித்து இங்கேயே அவன் கதை முடிந்து விடலாம் தோன்றியது. ஆனால் அவன் பொறுமையாக இருந்தான்.

இப்போது தாமஸ் தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டான். ஆரோக்கிய ராஜிடம் மன்னிப்பும் கேட்டான். சிகரெட்டை பற்ற வைத்தான். ” இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த காவலாளி கப்பலின் மீதிருந்து தவறிவிழுந்து இறந்து விட்டார். பிறகு நான் மீண்டும் தனிமையாக்கப்பட்டேன். அப்போதெல்லாம் அந்த காவலாளி இல்லாத இடத்தை நிரப்ப எவ்வளவோ முயன்றேன். எதுவும் பயன்படவில்லை. அப்போதுதான் எனக்கு புரிந்தது ஒருவரின் இல்லாமை நிரப்புவது அவ்வளவு கடினமானது, அதை வேறு அன்பு நிரப்பும் என நம்புவது விரயமானது என்று அந்த வலிமையான விரல்களை போல அச்சு அசலான பிரதிகள் அவ்வளவு எளிதாக கிடைக்காது. அன்னைக்கு அந்த கடலுக்கு நடுவே திடீர்னு உருவான தீடை மாதிரி என் உடல் முழுக்க என் மனம் முழுக்க இருந்த தீடையெல்லாம் பார்த்தேன். அவைகள் அழிஞ்சு போகவும் கரைஞ்சு போகவும் எவ்வளோ வழி இருந்தும் நான் அவைகளை கரையவிடலை, நான் அந்த பதினாறு ஆண்டுகளில் ஒருஅஞ்சாலை மீன் மாதிரி உடம்பு முழுக்க நஞ்சோட   இருந்திருக்கேனு அப்பதான் புரிஞ்சுது.

ஆரோக்கிய ராஜ் மிகவும் கனிந்து போய் இருந்தான் தாமஸின் குரல் உடையத்தொடங்கின.”நான் வந்திருக்க கூடாது ஆரோக்கிய ராஜ். நான் நம்பிய அந்த வலிமையான விரல் எனக்காக காத்திருக்கும்னு நான் நம்பி வந்திருக்க கூடாது. ஏன் உடலில்இருந்த தீடைகள் எல்லாம் கரைஞ்சதா நம்பிதான் வந்தேன். ஆனா இங்க வந்தததும் மேரிக்கு திருமணம் ஆனது தெரிஞ்சதும் திரும்பவும் அவ்வளவு சகதியான  நிறத்திலே அந்த தீடை எனக்குள் உருவாகிடுச்சு அதுதான் அதுதான் என்னை உன்னோட போட்டி போடவச்சது. நான் மேரிக்கு திருமணம் ஆனது தெரிஞ்சதும் போயிருக்கணும். சுயநலமா இருந்துட்டேன் மன்னிச்சுடு ஆரோக்கியராஜ்” என்றான் தாமஸ்.

ஆரோக்கிய ராஜ் மனம் முழுக்க முற்றிலுமாக மாறியிருந்தது. தாமஸ் அழுவதை அவனால் பார்க்க முடியவில்லை. சமாதனபடுத்தினான். தாமஸ் தனது பிரெஞ்ச் தாடியின் வெள்ளை முடியை நாக்கால் அழதபடி தொட்டான். கண்களை துடைத்து விட்டான் ஆரோக்கியராஜ். தலையை வேகமாக மேலும் கீழும் ஆட்டிய தாமஸ் “ஒன்னு கேட்கலாமா” என கேட்டான். ஆரோக்கியராஜ் கேளுங்க என்றான்.கடந்த பத்து வருடத்தில் எப்பவாவது என்னை பற்றி மேரி பேசிருக்காளா” என கேட்டான். ஆரோக்கிய ராஜ் எதுவும் பேசவில்லை அமைதியாக இருந்தான். இல்லையா‌ என தாமஸ் கேட்டான். ஆமாம் என ஆரோக்கிய ராஜ் தலையசைத்தான். காலம் தாண்டினால் வலிமையான விரல்கள் எப்போதும் உடன் இருக்காது அப்ப நான் சொன்னது சரிதானே என கேட்டான் தாமஸ்‌. இருவரும் பெரும் அமைதிக்கு போனார்கள்.

சிறிது நேரத்தில் தாமஸ் புன்னகைத்தபடி “எனக்காக ஒருதட்டு திருக்கை மீன் வாங்க முடியுமா” என கேட்டான். ஆரோக்கிய ராஜ் எழுந்து கடைக்கு சென்றான். இந்த உலகின் மாபெரும் துயரங்கள் எல்லாம் மாபெரும் விநோதங்களை சுமந்தவை. அவைகளின் பளு அத்தனை‌ இலகுவானது ஆனாலும் அவைகள் சுமக்க கடினமாகவே இருக்கும் . அப்படிதான் இன்று தாமஸ், மேரி, ஆரோக்கிய ராஜ் வாழ்வில் நிகழ்ந்திருக்கிறது.ஆரோக்கிய ராஜ் திருக்கையை வாங்கி திரும்பி பார்த்தான். அவ்வளவு நேரம் அமர்ந்திருந்த தாமஸ் இருக்கை காலியாக இருந்தது. திருக்கையை திருப்பிகொடுத்தவன். வீட்டுக்கு நேராக போனான். மேரி முற்றிலுமாக மாறிப்போயிருந்தாள் சோகமான முகத்தோடு கதவை திறந்தாள். “இனி தாமஸ் வரமாட்டார்” என்றான். மேரி எதுவும் பேசாமல் உள்ளே சென்றாள்.

உணவு மேஜையில் பாத்திரங்கள் நிரம்பி இருந்தன. ஆரோக்கியராஜ் ஒரு பாத்திரத்தை திறந்து பார்த்தான். அதில் திருக்கை சமைக்கப்பட்டிருந்தது. மேரி திருக்கை மீனை விரும்பி சாப்டுகிறவள் அல்ல அதனால் அதை எப்போதும் சமைக்க மாட்டாள். மேரி தாமஸை பற்றி‌ பேசுவது இல்லை என்பது உண்மைதான் ஆனால் அவள் நீட்டிய அந்த அன்பின் விரல் வலிமையானது என்பதை உணர்த்துவதாக இருந்தது அந்த திருக்கை சமையல். ஆரோக்கியராஜ் எதுவும் சொல்லாமல் வழக்கம் போலவே உணவை சாப்பிட்டு வழக்கம் போலவே அவர்களோடு கலகலப்பாக பேசியபடி அறைக்குள் நுழைந்தான்..

ஒரு கடலாடி எப்போது கடலிடம் தோற்றுபோவதை கெளரவமான எடுத்துக்கொள்வான். ஆனால் வாழ்விடம் தோற்பதை அல்ல. தாமஸ் எங்கேயோ எந்த எல்லையிலோஇந்நேரம் தனது பிரெஞ்ச் தாடியின் வெள்ளை முடியை நாக்கால் தொட்டு சிகரெட் புகைத்து அந்த தீடையை முழுமையாக கடந்திருப்பான் ஆமென்.

பிற படைப்புகள்

Leave a Comment