இச்சாமதி
ஜெயமோகன்

by olaichuvadi

”இச்சாமதி என்றால் நினைத்ததை அருள்பவள்” என்று படகோட்டி சொன்னான்.

“இச்சாமதி” என்று ரமா சொல்லிக்கொண்டாள். “நல்ல பெயர், எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு பெயரை எவரும் போட்டு நான் கேட்டதில்லை”

“இது ஆற்றின் பெயர், மனிதர்களுக்கு எப்படி போடமுடியும்” என்றான் படகோட்டி.

”இச்சாமதி என்றால் நினைத்தபடி வாழ்பவள் என்றும் பொருள் கொள்ளலாம். விருப்பம் நிறைந்தவள், விரும்பியபடி ஒழுகுவதனால் இந்த ஆற்றுக்கு அப்படிப் பெயர் வந்திருக்கலாம்’’

“அது உண்மை, இந்த ஆற்றுக்கு நானறிந்தே நான்கைந்து முறை திசைமாற்றம் நிகழ்ந்துள்ளது” என்று படகோட்டி சொன்னான். “ஷ்ராவண மாதம் இதில் பெருவெள்ளம் வரும். வெள்ளம் என்றால் அப்போது மொத்த ஊர்களும் ஆற்றுக்குள் இருக்கும். காடுகளெல்லாம்கூட ஆற்றுக்குள்தான் இருக்கும். நாட்கணக்கில் எங்கும் வெள்ளம். மக்கள் மரங்களிலும் உயரமான வீடுகளின்மேலும் எறி அமர்ந்திருப்பார்கள். நாங்கள் இரவுபகலாக படகோட்டுவோம். அத்தனைபேரையும் மேடான இடங்களுக்குக் கொண்டுசென்று சேர்ப்போம்…”

“ஆண்டுதோறுமா?”

“அடிக்கடி” என்றான் படகோட்டி. “வெள்ளம் வடிந்தபின் பார்த்தால் ஆறு வேறொரு பக்கமாக ஓடிக்கொண்டிருக்கும்…இச்சாமதி தன் விருப்பப்படி சென்றுகொண்டிருப்பாள்”

“பிறகும் ஏன் இங்கே வருகிறார்கள்?”

“வேறெங்கே செல்வார்கள்? என்றான் படகோட்டி. “இந்த பகுதியில் மண் மிக வளமானது. வெள்ளம் வடிந்தால் எங்கு பார்த்தாலும் மென்மையான வண்டல்தான். களிமண் அல்ல. பொடிமண்…குழந்தையின் சருமம் போலிருக்கும். நெல், வெற்றிலை, சணல் எல்லாம் அருமையாக வளரும். ஒன்றுமே வளராத சதுப்பில்கூட கோரை வளரும். கோரைப்புல் வெட்டி விற்றாலே சாப்பாட்டுக்கு பணம் கிடைத்துவிடும்…கேட்டிருப்பீர்கள். இந்த பகுதியே வெற்றிலைக்கு புகழ்பெற்றது”

ரமா நீரில் கையை விட்டு அசைத்தாள்.

“அய்யோ….கையை எடுங்கள் தேவி” என்றான் படகோட்டி “இந்த ஆறு முழுக்க முதலைகள் உண்டு….அவற்றுக்கு அசைவுதான் தெரியும். கையோ காலோ நீரில் அசைந்தால் கவ்விவிடும். அவற்றின் வாயில் உள்நோக்கிய பற்கள். அவை விரும்பினாலும் விடமுடியாது….இழுத்துக்கொண்டு ஆழத்துக்குச் சென்றுவிடும்…”

ரமா சட்டென்று கையை எடுத்துக்கொண்டாள்.

“ஆண்டுக்கு பத்திருபதுபேரை முதலை கொண்டுசெல்கிறது…படகோட்டிகளை அதிகமும் பிடிப்பதில்லை. அவர்கள் கவனமாக இருப்பார்கள். பெரும்பாலும் பெண்களைத்தான் கொண்டுசெல்கிறது”

“ஏன்?”

”அவர்களுக்கு ஆசை…ஆற்றில் ஏதாவது காய் மிதந்து வரும்…அதை நீந்திசென்று பிடித்துக்கொள்ளலாம் என நினைப்பார்கள். இந்தப்பகுதியில் அடிக்கடி பூசணிக்காய்கள் வருவதுண்டு…சிலர் மீன்களை மேலாடையால் பிடிப்பார்கள்”

“மேலாடையாலா, மீனையா?”

“பிடிக்கலாம்… குளிப்பதாகச் சொல்லி வரவேண்டியது. ஆளில்லாத இடத்தில் கழுத்தளவு நீரில் நின்றுகொண்டு மீன்களை பிடிக்கவேண்டியது. மேலாடையை பலமுறை சுழற்றி வீசினால் ஒன்றிரண்டு மீன்கள் அகப்படுமே”

“அதை வைத்து என்ன செய்வது?”

“சாப்பிடுவதுதான்…இங்கே பட்டினி உண்டு”

”தூண்டில்போடவேண்டியதுதானே? அல்லது வலை?”

“தேவி, இந்தப் பெண்களெல்லாம் விதவைகள். அவர்கள் நியாயப்படி வீட்டைவிட்டே வெளிவரக்கூடாது. குளிப்பதற்காக வரலாம். அதை பயன்படுத்திக்கொண்டு வருகிறார்கள்” அவன் குரல் தாழ்த்தி “சிலர் துணியை வீசி வாத்துகளை பிடித்துவிடுவார்கள். நீரில் முக்கி கொன்று துணியில் சுற்றி மார்போடு அணைத்து கொண்டுசெல்வார்கள். வாத்துக்காரர்கள் முதலை பிடித்ததாக நினைத்துக் கொள்வார்கள். முதலைகள் சிலசமயம் இந்தப் பெண்களையே பிடித்துக்கொள்கின்றன. சென்றவாரம் இப்படித்தான் பிரசாந்தினி என்ற பெண்…பிராமண விதவை…அவளை நான்குநாட்கள் கழித்து உப்பிய பிணமாகத்தான் கண்டெடுத்தார்கள்….அங்கே, தெற்கு வளைவில், நாணல்புதர்களின் அருகே”

ரமா நீரின் சுழிப்புகளையும் சிலிர்ப்புகளையும் பார்த்துக்கொண்டிருந்தாள். “இப்போதே நீர் அதிகம்தான்”

“இச்சாமதியில் நீர் குறைவதே இல்லை” என்று படகோட்டி சொன்னான்.

அவள் நீரின் ஒளி கண்கூசவே புடவையை எடுத்து முகத்தை மறைத்துக்கொண்டு அதன் வழியாக பார்த்தாள். இப்போது நீண்டதூரம் பார்க்கமுடிந்தது. இருபக்கமும் பசும்புதர்கள் வந்துகொண்டிருந்தன. ஆறு ஒளிப்பெருக்காக சென்று வளைந்து மறைந்தது.

துடுப்பின் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. நீரின் ஒலி ஒரு சொல் ஆகியது. அந்தச் சொல் திரும்பத் திரும்ப ஒலித்தது. ப்ரபா – ஹா, ப்ரபா-ஹா. பிரவாகம். ஒழுக்கு.

படகோட்டி அவள் பேச்சை நிறுத்தியதுமே முனக ஆரம்பித்திருந்தான். பிறகு பாடினான்

“பாலா பாலா அமாரா நௌகா

தக்‌ஷிண திக்கே  தீரே தீரே”

அவள் அவனுடைய ஓங்கிய குரலை கேட்டுக்கொண்டிருந்தாள். படகோட்டிகள் பெரும்பாலும் நல்ல பாடகர்கள். அவர்கள் தங்கள் குரல்களை வலைபோல சுழற்றி காற்றில் வீசக்கற்றவர்கள். எல்லா பாடல்களும் எழுந்து பறந்து படபடப்பதாக அவளுக்குத் தோன்றும்.

“ஒழுகுக ஒழுகுக என் படகே

தென்திசை நோக்கி மெல்ல மெல்ல”

அவன் பல்லவியை திரும்பத் திரும்பப் பாடினான். பாட்டு அடுத்து எங்கே செல்லும் என்று அறிய அவளுக்கு ஆவல் எழுந்தது. பலமுறை பாடியபின்னர்தான் சரணத்திற்கு வந்தான்.

“தேவி ஜானகி ராமனுடன் சென்றாள்

அயோத்தியின் அரசி ராமனுடன் சென்றாள்

அவள் சென்ற ஆறு கண்ணீர்ப்பெருக்கு

அவள் அதன்மேல் ஒழுகிச் சென்றாள்!”

அதை எப்படி எதிர்பாராமலிருந்தேன்? வங்காளத்தின் எல்லா நாட்டுப்புறப்பாடல்களும் ராமாயணம்தான். படகுக்காரர்கள் எல்லாருமே தங்களை குகனின் வம்சமென நினைப்பவர்கள்.

“தேவியின் அழகை பார்த்திருந்தாள் கங்கை

தன் அன்னையா மகளா அவள் என்று

மயங்கியிருந்தாள் கங்கை

தேவியின் துயரை எண்ணி கலங்கியது காற்று

அவள் துயரை எண்ணி குளிர்ந்தது காற்று”

பல்லவி மீண்டும் பலமுறை. மீண்டும் சரணங்கள். ஜானகி தன் கண்ணீராற்றில் படகில் சென்றுகொண்டிருந்தாள். கணவனும் மைத்துனனும் உடனிருந்தபோதிலும் அவள் தனிமையில் இருந்தாள். அவள் என்றும் தனிமையில்தான் இருந்தாள்.

கரையோரம் எவரோ மஞ்சள் துணியை வீசி ’பூஹேய்” என்று கூவினார்கள். குரல் சற்றுநேரம் கழித்து வந்து சேர்ந்தது.

“ஒருவரை ஏற்றிக்கொள்ளலாம்….நீங்கள் விரும்பினால்…” என்று படகுக்காரன் சொன்னான்.

“ஆனால் நான் முழுப்பயணத்துக்கும் பணம் தந்துவிட்டேனே”

“ஆமாம், ஆனால் நீங்கள் பேசிக்கொண்டிருக்கலாமே”

“அதற்கான கட்டணம் உனக்கு, இல்லையா?

படகோட்டி உரக்கச் சிரித்தான்.

“சரி சரி, ஏற்றிக்கொள்” என்று ரமா சொன்னாள்.

படகை அவன் கரைநோக்கி திருப்பினான். படகுக்காகக் காத்திருந்தவர் ஒரு நாற்பது வயதுக்காரர். வட்டமான மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார். ஒல்லியான சிறு உருவம். கூர்மையான மூக்கு, சிறிய உதடுகள், பெரிய குரல்வளை. தொளதொளப்பான வங்காள ஜிப்பாவும் கச்சம் வைத்து கட்டிய வேட்டியும் அவரை ஆசிரியர் என்று காட்டின. கோட்டு இல்லை, அப்படியென்றால் அவர் வங்கமொழி ஆசிரியர்.

அவர் படகில் ஏறிக்கொண்டதும் “நன்றி தோணிக்காரார்” என்றபின் அவளிடம் “நான் அவசரமாகச் செல்லவேண்டும். பள்ளிக்கூடத்திற்கு இன்று நான் தாமதமாகச் செல்கிறேன். என் பசு ஈன்றுவிட்டது. அதை சரிசெய்துவிட்டு கிளம்புவதற்குள் வழக்கமான தோணி போய்விட்டது” என்றார். “என் பெயர் சுமந்துலால்… சுமந்துலால் போஸ். நான் காயஸ்தன்…”

“என் பெயர் ரமா” என்று அவள் சொன்னாள்.

“ரமா?” என்று அவர் கேட்டார்.

“ரமா முகோபாத்யாய”

“நல்லது…நீ கல்லூரி மாணவி என நினைக்கிறேன்…”

“ஆமாம்”

“கல்கத்தாவில் படிக்கிறாய். சரியா?”

“ஆமாம்”

“நான் மனிதர்களை எளிதில் கணித்துவிடுவேன்….நீ உன் தோழியின் வீட்டுக்கு விடுமுறைக்காகச் செல்கிறாய்…சரிதானே?”

“இல்லை”

“இல்லையா?” அவர் அவளை இன்னொரு முறை பார்த்துவிட்டு “நீ கல்யாணமாகாதவள்” என்றார்.

“ஆமாம்”

“உனக்கு பதினெட்டு வயது…இல்லாவிட்டால்…”

“பதினேழு”

“சரிதான்…ஆனால் தனியாகப் படகில் செல்கிறாய்” என்றார் “எந்த ஊருக்கு?”

“கோபால்நகரம்”

”அது இங்கே பக்கம்தான்…அங்கே நீ உன் எதிர்கால கணவனைக் காணச்செல்கிறாய், சரியா?”

“ஆமாம்” அவள் புன்னகைத்து “விடுங்கள், நீங்கள் ஊகிக்க முடியாது. நான் ஓர் எழுத்தாளரைப் பார்க்கச் செல்கிறேன்”

“எழுத்தாளர் என்றால்? கிராமக் கணக்குப்பிள்ளையா?”

“இல்லை, இலக்கியவாதி”

”சரிதான், கவிஞன்”

“இல்லை, கதைகள் எழுதுபவர்”

“நாடகங்களா?”

அவள் நேரடியாக “விபூதிபூஷண் பந்த்யோபாத்யாய…கேள்விப்பட்டதுண்டா?”

“விபூதிபூஷன்…. அவர் நீதிமன்றத்தில் வேலைபார்ப்பவர்தானே?”

“இல்லை”

“வரிவசூல்?”

“இல்லை”

அவர் தவிப்புடன் “எனக்குத் தெரியாதவர்கள் இங்கே எந்தக் கிராமத்திலும் இல்லை” என்றார்.

“அவருடைய தந்தையின் பெயர் மகாநந்த பந்தோபாத்யாய , காசி வாசி…”

“ஆ, தெரியும். இவர் பள்ளிக்கூட ஆசிரியர். சங்கீதகாரரான கேலட்சந்திரரின் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். இப்போது இங்கே கோபாலநகரத்தில் ஹரிபாத சம்ஸ்தானின் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். நடுவயதானவர். நல்ல தாட்டிகமாக இருப்பார்”

“இவர்தானா?” என்று ரமா உபேக்‌ஷிதா நாவலை எடுத்து அதிலிருந்த படத்தை காட்டினாள்.

“ஆமாம், இவர்தான்… இது என்ன புத்தகம்?”

“இது அவர் எழுதிய புத்தகம்”

‘பாடப்புத்தகமா? எத்தனாவது வகுப்புக்கு?”

“இது நாவல்…கதைப்புத்தகம்”

‘கல்லூரிப்பாடமா?”

ரமா ஒன்றும் சொல்லவில்லை.

“இப்போதெல்லாம் பிள்ளைகள் படிப்பதில்லை. நானெல்லாம் அந்தக் காலத்தில் ஹரிவம்சம் முழுமையாகவே படித்தவன்” என்றார். “அந்த புத்தகத்தின் பெயர் என்ன?”

“உபேக்‌ஷிதா” என்றாள்.

“கைவிடப்பட்டவள்…இங்கே பாதிப்பெண்கள் அப்படித்தான்…நிறையப்பேர் விதவைகள். எஞ்சிய பலரின் கணவர்கள்  வேலைதேடி கல்கத்தா செல்கிறார்கள். அல்லது டாக்கா செல்கிறார்கள். திரும்பி வருவது அபூர்வம்… ஆனால் விதவைகளை விட கைவிடப்பட்ட மனைவிகள் கொஞ்சம் மேல். அவர்கள் வெளியேபோய் வேலை செய்ய முடியும்”

ரமா அவரை பார்த்துக் கொண்டிருந்தாள். அவர் எப்படிப்பட்டவர் என்று தெரியவில்லை. ஏதாவது உபரித்தொழில் செய்பவராக கூட இருக்கலாம். இப்பகுதிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் நம்பமுடியாத அளவுக்குக் குறைவு.

“நான் இந்தப் பகுதிகளில் பெண்களுக்கு மணமகன் பார்த்துக் கொடுப்பதுண்டு….” என்று அவர் சொன்னார். ”கல்கத்தாவில் இருந்து வருபவர்களுக்கு இங்கே யோசிக்காமல் பெண்ணை கொடுத்துவிடுவார்கள்…எனக்கு இரண்டு ரூபாய் வரை ஊதியம் கிடைக்கும்”

“கல்கத்தாவிலிருந்து வரும் யாருக்குமா?”

“யாருக்கானாலும்….பெண்ணை என்ன செய்வது? இங்கே வைத்துக் கொண்டிருப்பதை விட தள்ளிவிடுவது மேல்தானே? கல்கத்தாவில் அவள் என்னவானாலும் பெற்றோர் கண்முன் ஒன்றும் தெரியாதல்லவா?”

”கோபாலகிராமம்” என்று படகோட்டி சொன்னான் .”நீங்கள் இறங்கிக் கொண்டால் நான் இவரை கொண்டு சென்று விட்டுவிட்டு வருவேன்”

ரமா தலையசைத்தாள்.

“இங்கே கல்கத்தா பெண்களை மணக்க விரும்பும் பணக்கார இளைஞர்கள் நிறையவே உண்டு…படித்த பெண்களை மிக விரும்புவார்கள்” என்றார் சுமந்து.

படகு கரையை அடைந்தது. மரங்களை ஆற்றுக்குள் நாட்டி உருவாக்கப்பட்ட படகுத்துறை ஒரு பாலம் உடைந்துபோய் எஞ்சிய மிச்சம் போலிருந்தது. அவள் இறங்கிக்கொண்டாள்.

“ஆசிரியர் விபூதிபூஷன் என்று கேள்…ஆசிரியர்களை எல்லாருக்கும் தெரிந்திருக்கும்” என்றார் சுமந்து.

அவள் தன் கைப்பையுடன் புடவையை தலைமேல் நன்றாக இழுத்துவிட்டுக்கொண்டு நடந்தாள். மென்மையான மணலில் செருப்பு புதைந்தமையால் நடக்கமுடியவில்லை. காலைவெயில் சுட ஆரம்பித்திருந்தது. ஆற்றிலிருந்து எழுந்த நீராவி மரங்களிடையே நிறைந்திருந்தது. ஆற்றுக்குள் இருந்த காற்றோட்டம் கரையில் இருக்கவில்லை.

அவள் ஒற்றையடிப்பாதை இரண்டாகப் பிரிந்த இடத்தில் நின்றாள். யாரிடமாவது கேட்டாகவேண்டும். ஒரு முஸ்லீம் மொட்டைத்தலையுடன் ஒரு பசுமாட்டை பிடித்தபடி மெதுவாக வந்தார். தாடியில் சிவந்த மருதாணி பூசியிருந்தார்.

“ஆசிரியர் விபூதிபூஷணின் வீடு எது?” என்றாள்.

“நேராகப்போய் அங்கே ஒரு பெரிய சாலமரத்தின் அடியில் வலப்பக்கமாக திரும்ப வேண்டும்…வீடு கண்ணுக்குத் தெரியும். மூங்கில் அழியிட்ட வீடு….நாணல்கூரை… “ என்றார்.

அவள் “நன்றி “ என்று திரும்னாள்.

அவர்  “அதற்குள் தகவல் தெரிந்துவிட்டதா?” என்றார்.

“என்ன தகவல்?”

“இன்றுகாலைதான் சாவு… உடல் இன்னும் கிடைக்கவில்லை. அது கிடைக்க வாய்ப்பில்லை…”

அவள் படபடப்புடன் “யாருடைய உடல்?” என்றாள்.

“பிறகு நீ எதற்காக வந்தாய்?”

“நான் கல்கத்தாவிலிருந்து ஆசிரியரைப் பார்க்க வந்தேன்”

“கல்கத்தாவிலிருந்தா? சரிதான். உனக்கு தெரிய வாய்ப்பில்லை” என்றார் “என் பெயர் சல்மான்… நான் நீ இந்த ஊர் என்று நினைத்தேன். எனக்கு இந்துப்பெண்களின் முகங்கள் நினைவில் இருப்பதில்லை”

“என்ன ஆயிற்று? யார் இறந்தது?”

“ஆசிரியரின் தங்கை…அவள் பெயர் ஜான்னவி, உனக்கு தெரியுமா அவளை?”

“இல்லை”

“இளம்விதவை….அவளை இன்று காலை முதலை கொண்டுசென்றுவிட்டது”

“எங்கே?” அவளுக்கு மூச்சடைத்து நெஞ்சு படபடத்தது.

“இந்த இச்சாமதி ஆற்றில்தான்” என்றார் சல்மான் “காலையில் குளிக்கப் போயிருக்கிறாள்…விடியற்காலை. முதலை கொண்டுபோய்விட்டது. அவள் அலறுவதை கேட்டு தோழிகள் அலறிக் கூச்சல்போட்டிருக்கிறார்கள். ஆனால் போய்விட்டாள்…அவ்வளவுதான். ஒருவேளை நாலைந்து நாட்கள் கழித்து உடல்பாகங்கள் கிடைக்கலாம். ஆனால் இந்த இடத்தில் பெரிய முதலைகள் அதிகம்…கிடைப்பது வழக்கமில்லை”

அவள் ஒன்றும் சொல்லமுடியாமல் நின்றாள்.

சல்மான் “அஹ் அஹ்” என ஓசையிட்டு கயிறால் பசுவை அடித்து ஓட்டிக்கொண்டு சென்றாள்.

அவள் என்ன முடிவெடுப்பதென்று தெரியாமல் நின்றாள். பின்னர் நடந்து அந்த சாலமரம் நோக்கிச் சென்றாள். அங்கிருந்து பார்த்தபோது வீடு தெரிந்தது. நாணல்கூரை தாழ்ந்து நின்றது. கட்டம்போட்ட சட்டை அணிந்ததுபோல அந்த மூங்கில் அழிகள்.

அவள் தளர்ந்த நடையுடன் அந்த வீட்டை நோக்கிச் சென்றாள்.

வீட்டின் முன் நின்றிருந்த பலாமரத்தின் இலைகளும் சருகுகளும் முற்றம் முழுக்க விழுந்து கிடந்தன. ஒட்டுத்திண்ணையில் ஒரு துடைப்பமும் ஒரு மூங்கில்கூடையும் இருந்தன. மேலே அமர்வதற்கான திண்ணையில் ஒரு மண்கூஜாவும் ஒரு நோட்டுப்புத்தகமும் இருந்தன.

அவள் முற்றத்தில் நின்று “மகாசயரே” என்று அழைத்தாள்.

பதில் இல்லை. வீட்டில் எவரும் இருப்பதுபோல் தெரியவில்லை.

“மோஷாய்…மோஷாய்!”

அவள் குரல் அவளுக்கே அன்னியமாக ஒலித்தது.

உள்ளிருந்து ஒருவர் வெளியே வந்தார். கச்சவேட்டி அணிந்து பூணூல் குறுக்கே ஓடிய பெரிய மார்புடன் திடகாத்திரமாக இருந்தார். ஒதுக்கப்பட்ட மீசை, கனமான தாடை, மல்யுத்த வீரர் போலிருந்தார்.

“யார்?” என்று கண்களைச் சுருக்கியபடி கேட்டார்.

”மொஷாய், நான் உங்களைப் பார்க்க கல்கத்தாவில் இருந்து வந்தேன்”

“கல்கத்தாவில் இருந்தா? கேலட்சந்திரர் அனுப்பினாரா?”

“இல்லை…நான் வேறு…நான் உங்களைப் பார்க்க வந்தேன்”

“நான் இங்கே தனியாக இருக்கிறேன்….இங்கே…” அவர் சுற்றும் பார்த்துவிட்டு திண்ணையைச் சுட்டிக்காட்டி “அமர்ந்துகொள்” என்றார்.

ரமா திண்ணையில் அமர்ந்துகொண்டு “நான் உங்கள் தீவிரமான வாசகி…உங்கள் நாவல்கள் இரண்டையும் பத்துமுறைக்குமேல் வாசித்திருக்கிறேன்….” என்றாள்.

அவர் முகத்தில் ஒரு திகைப்புதான் தெரிந்தது.

“இங்கு வந்தபிறகுதான் தெரிந்துகொண்டேன்…உங்கள் தங்கை…”

“ஆம், அவள்தான் வீட்டைப் பார்த்துக்கொண்டாள்”

 ”உங்கள் மனைவி?”

“கௌரி நான் அவளை திருமணம் செய்துகொண்ட ஓராண்டிலேயே இறந்துவிட்டாள். ஸ்பானிஷ் காய்ச்சல்”

“ஓ”

அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவரும் மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமல் அமர்ந்திருந்தார்.

அவள் தன்னை கலைத்து, காலத்தில் மனதை முன்னால் உந்திச் செலுத்திசொற்களை கண்டடைந்தாள். “உபேக்‌ஷிதா அப்படியே என் அக்காவின் கதை”

“ஓ” என்றார்.

“வங்கமே கைவிடப்பட்ட ஜானகி அசோகவனத்தில் இருப்பதுபோல் இருக்கிறது. பாரதமே அப்படித்தான் இருக்கிறது என்றுகூட தோன்றுகிறது”

“ம்” என அவர் தலையசைத்தார்.

“நான்  பொதேர் பாஞ்சொலியை பிரபாஸ் இதழில் தொடராகவே வாசித்தேன். அதன் பிறகு புத்தகமாகவும் வாங்கி வாசித்தேன்”

அவர் தலையசைத்தார்.

“அதை எத்தனை முறை வாசித்தேன் என்றே தெரியவில்லை. எப்போதுமே உங்கள் நாவல்களை கையில் வைத்திருப்பேன். இப்போதுகூட வைத்திருக்கிறேன்” அவளுக்குச் சொற்கள் வரத்தொடங்கின. “நான் இந்தச் சிறிய படத்தில் இருந்து உங்கள் முகத்தை உருவகித்துக் கொண்டேன். உங்களிடம் உரையாடிக்கொண்டே இருக்கிறேன். உங்களைப் பார்க்கவேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. நேற்று என்னவோ ஒரு உந்துதல். உடனே கிளம்பிவிட்டேன்”

“நீண்டதூரம்” என்றார்.

“ஆனால் எனக்கு தூரமே தெரியவில்லை. நான் பறந்து வருவதுபோல் உணந்தேன்”

அவர் கோணலாகச் சிரித்தார். பிறகு “என் இளமையில் என்னை வாசகிகள் தேடிவருவதைப் பற்றியெல்லாம் கற்பனை செய்ததுண்டு. அப்படி எவரும் வரவில்லை. இப்போது நடுவயது. நான் தனிமையை விரும்புகிறேன்….கல்கத்தாவை விட்டு கோபாலநகரம் வந்ததே மனிதர்களை தவிர்ப்பதற்காகத்தான்”

“நான் வந்தது பிடிக்கவில்லையா?”

“அப்படி இல்லை…எனக்கு என்ன உணர்வு என்று சொல்லத் தெரியவில்லை. சற்றுமுன்பு வரை இங்கே ஒரே கூட்டம்….துக்கம் பேசிக்கொண்டே இருந்தார்கள். பிறகு ஒவ்வொருவராக கலைந்து சென்றார்கள். இதற்குள் ஜான்னவியை மறக்க ஆரம்பித்திருப்பார்கள். நானும் ஒருவாரத்தில் அவளை மறந்துவிடுவேன் என நினைக்கிறேன். அவ்வளவுதான் வாழ்க்கை”

“அப்படி இல்லை…உங்கள் கதைகளில் அப்படி இல்லை. துக்கம் அப்படி கரைவதில்லை. வாழ்க்கை அப்படி பொருளற்றதாகவும் இல்லை”

“அது இலக்கியம்…இலக்கியம் என்றால் இச்சாதாரி…நாம் விரும்புவதுபோல அது தோற்றமளிக்கும்”

”இந்த ஆற்றின்பெயர்கூட இச்சாமதிதான்”

அவர் ஆம் என தலையசைத்தார்.

“நான் உங்களிடம் நிறைய பேசவேண்டும் என நினைத்து வந்தேன். ஆனால் என்ன பேசுவதென்றும் தெரியவில்லை. பேசவேண்டியதை எல்லாம் எனக்குள்ளேயே பேசிவிட்டேன் என நினைக்கிறேன். ஆனால் உங்கள் முகம் என் மனதில் தெளிவாகிவிட்டது. இனி நான் உங்களிடம் நிறையவே பேசுவேன்”

அவர் மீண்டும் புன்னகைத்தார். திரும்பி வெயில் எரிய ஆரம்பித்திருந்த முற்றத்தைப் பார்த்தார்.

“நான் உங்கள் புத்தகங்களை கொண்டுவந்திருக்கிறேன்….கையெழுத்து போடமுடியுமா?”

அவர் கை நீட்டினார். அவள் உபேக்‌ஷிதாவை நீட்டினாள் அவர் அதை வாங்கி கையெழுத்திட்டார்.

“ஏதாவது எழுதுங்கள்”

“என்ன?”

“எனக்காக ஏதாவது…”

அவர் எழுதி நீட்டியதை அவள் வாசித்தாள்.  ‘வாழ்க்கை என்பது சென்றுகொண்டிருப்பது. நின்றுவிடுவதே மரணம்’

“இச்சாமதிபோல” என்றாள்.

“நீ சொன்னாயே, என் புத்தகங்களில் வாழ்க்கையின் அர்த்தங்கள் உள்ளன என்று”

“ஆமாம்”

“அப்படியென்றால் சொல், ஜான்னவி ஏன் முதலையால் கொல்லப்பட்டாள்? அந்தச் சாவுக்கு என்ன அர்த்தம்?”

“அர்த்தம் நமக்கு பிரியமானதாக இருக்கவேண்டியதில்லை”

“சொல்”

“இச்சாமதி அவள் கேட்டதை கொடுத்திருக்கலாம்”

அவர் சட்டென்று எழுந்துவிட்டார். ஒரு கணம் கழித்து அமர்ந்தார். ஒரு சொல்லும் பேசாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.

“நான் கிளம்புகிறேன்”

“சரி”

அவள் முற்றத்தில் இறங்கியதும் அவர் ஒரு மேலாடையை எடுத்து போட்டுக்கொண்டு “நான் வந்து படகில் ஏற்றிவிடுகிறேன்” என்றார்.

படகுத்துறை வரை அவர் ஒன்றுமே பேசவில்லை. அவளும் அமைதியாக நடந்தாள். துறையில் காத்திருக்கையிலும் அவர்களிடையே பேச்சு நிகழவில்லை. ஆறு கண்கூச ஓடியது. அவர் கண்களைச் சுருக்கி நீர்ப்பெருக்கையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளுக்கான படகு வந்து மெல்ல கரையணைந்தது.

“வந்தனம் மொஷாய்” என்று படகுக்காரன் சொன்னான்.

“வந்தனம்…இவளை பத்திரமாக கொண்டுபோ”

”ஆமாம், நான் மெதுவாகத்தான் ஓட்டுவேன்” என்றான் படகுக்காரன். “ஏறிக்கொள்ளுங்கள் தேவி”

அவள் படகில் ஏறும்போது “இச்சாமதி நான் வேண்டுவதையும் தருவாள்” என்றாள்.

அவர் கண்களைச் சுருக்கி அவளைப் பார்த்தார். அடர்ந்த புருவங்கள் முடிச்சிட்டிருந்தன.

“நான் மீண்டும் வருவேன்” என்று சொல்லி அவள் படகில் ஏறிக்கொண்டாள்.

 

பிற படைப்புகள்

Leave a Comment