எக்சிட்
மணி எம்.கே.மணி

by olaichuvadi

“ ஆன்சியைப் பாத்தியா?”

“ இல்ல”

“ சுமாவ? ”

“ நீ எதுக்குப்பா இத எல்லாம் கேட்டுகிட்டு இருக்க? என் பெண்டாட்டி கூட இப்படி எல்லாம் கேக்கறது இல்ல”

“அவளுக்கு உன்னப் பத்தி என்ன தெரியும்? நீயும் நானும் என்ன எல்லாம் செஞ்சிருக்கோம்னு ஒரு பிட்டு தெரிஞ்சா கூட சோத்துல வெஷம் வெச்சுருவா. சாதாரண ஆளா நீ? “ முகத்தில் சிரிப்புடனும், உள்ளே இருந்து பொங்கி வருகிற கோபத்துடனும் அமுங்கிய குரலில் பேசுகிற வசுமதியை துளைத்துப் பார்த்தவாறு இருந்தேன். இந்தப் பெண்கள் என்று ஏதோ மங்கலாக தோன்றி மறைந்தது. இவைகளுக்கு பதில் சொல்லிப் பிரயோஜனம் கிடையாது. மேலும் நான் இப்போது மிகுந்த சோரவில் இருக்கிறேன்.

“ கொஞ்சம் கிட்ட வா ! ”

“ ம்”

“ நீ ஆடின ஆட்டத்துக்கு கிட்னி தானே காலி ஆச்சு ? ஜட்டிக்குள்ள இருக்கறது புழு வைக்கல இல்ல? ” இதைக் கேட்டு முடிந்ததும் அவள் என் பக்கத்தில் அமர விரும்பவில்லை. தூரத்தில் நடமாடியபடியிருந்த மகளை அழைத்துக் கொண்டு சென்றாள். நான் சலிப்புடன் கொட்டாவி விட்டுக் கொண்டு மூச்சுப் பிடிப்பை சமத்துக்கு கொண்டு வந்தேன். நண்பர்களில் ஒருவன் வந்து தண்ணீர் வேண்டுமா, வேறு ஏதாவது வேண்டுமா என்று விசாரித்துக் கொண்டு போனான். எப்படியோ என்னை சிலர் பார்த்துக் கொள்ள இருக்கிறார்கள். நேற்று டயாலிசிஸ் தினம். அது முடிந்ததும், சிரமம் பார்க்காமல் புறப்பட்டு கேரளா வந்து தம்பி மகள் கல்யாணத்தில் கலந்து கொண்டும் இருக்கிறேன். இதெல்லாம், என்னை நான் தூக்கிக் கொண்டு நடப்பது மாதிரி. என்னை ஒரு இடத்தில் போட்டுக் கொண்டு அமர்ந்திருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் என்ன பேசி விட்டுப் போகிறாள்?

அதற்காக சற்றே வருத்தப்படுவதற்குள், எல்லா சோர்வையும் மீறி அரித்துக் கொண்டிருந்த ஒரு எதிர்பார்ப்பின் குரலுக்கு செவி சாய்த்தேன்.  மண்டபத்தில் அலைபாய்கிற கூட்டத்தின் சந்தடிகளைக் கடந்து வாசலுக்கு அப்பால் தெரிகிற கரும்பச்சைத் தோப்பை காரணமின்றி வெறித்துக் கொண்டிருந்தேன். காற்றின் செயல்கள் புலப்பட்டன. என்றோ காடாக இருந்து மிஞ்சின கொஞ்சம் தேக்கு மரங்கள் வானுக்கு அசைந்து  மனதுக்கு ஆறுதல் சொல்லியது போலிருந்தது. நான் இங்கே கேரளாவில் இரண்டு வருடங்கள் இருந்திருக்கிறேன். மொழியோ மக்களோ பொருந்திப் போகாமல் வந்து சேர்ந்த தனிமையைக் கொண்டு நாளெல்லாம் ஒரே மரத்தைக் கூட பார்த்து பொழுது போக்கியிருக்கிறேன். ஒரு முறை பார்த்த அந்த கணத்தில் இருந்து அந்த ஒரே பெண்ணை நினைத்துக் கொண்டிருந்த வலி பொழுதுபோக்கு கிடையாது.

எதிர்ப்படுகிற ஆட்களை விலக்கி விட்டுக் கொண்டு, வசுமதி என்னை நோக்கி வருவது தெரிகிறது.

அதுதான், நான் எதிர்பார்த்து இருக்கிற செய்தி தான்.

முகம் முழுக்க பொங்குகிற ஆர்வத்துடன், “ அபி வந்திருக்கிறாள் ! ” என்றதை உள் வாங்கியவாறே நான் வாசலைப் பார்ப்பதற்குள் “ அவ ஹஸ்பண்ட் இருக்காரு. ஆளுங்க பேசிக்கிட்டு இருக்காங்க. நைசா நான் கூட்டிக்கிட்டு வரேன் !” என்று கண்ணடித்து விட்டு புடவை சரசரக்க  வேக வேகமாக சென்றாள்.

பத்தொன்பது வயதில் வந்த அந்த திகில் உள்ளில் கண் திறந்தது.

இப்போதும் பயப்படுகிறேனா?

நான் அவளை முதல்முறை பார்த்தபோது அவள் வெறும் ஒரு சிறுமியாக இருந்தாள் என்பதுதான் உண்மை. ஒரு பக்கம் பயத்துடனும், மற்றொரு பக்கம் ஆராதனையுடனும் நடந்த சிறுவனுக்கு வளரும் தோறும் அவளுடைய அழகு மேலும் மேலும் வாயடைக்க வைப்பதாக இருந்தது. அவள் தனது பின்னிய கூந்தலை முன்பக்கம் போட்டுக் கொண்டு ஒருமுறை என்னிடம் சாப்பிட்டாயா என்று கேட்ட காட்சி கண்ணில் இருந்து கலையாமல் காய்ச்சல் பிடித்துக் கிடந்தேன். சாப்பிட்டாயா என்பதற்கான அந்த உதடுகளின் அசைவு எவ்வப்போதும் இருந்து கொண்டேயிருக்க அதன் அதிர்வில் நெஞ்சு வலித்ததெல்லாம் நிஜம். நான்  அவளோடு பேச விருப்பப்படவில்லை. எங்கேயாவது அவள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க நேரும்போது அவள் கிளம்பி செல்ல பிரார்த்தனை செய்வேன். அவள் தன்னுடைய மாமன் மகன் உண்ணியைத் தான் திருமணம் செய்வாள் என்று பேசிக் கொண்டார்கள். அதுவே சீக்கிரம் நடந்தால் போதும் என்றிருந்தது. சிறிய மாற்றத்துடன், ஒருநாள் அது நடக்கவும் செய்தது. ஒரு மங்கல நாளில் அவளைக் கல்யாணம் செய்த முகுந்தன் என்கிறவனுடன் கிளம்பிச் சென்ற அபி கேரளாவில் செட்டிலாகி மறைந்தாள். மேக மூட்டங்கள் சட்டென்று விலகி ஒரு வெளிச்சம் வந்ததோ? ஒரு திருவிழாவில் பஞ்ச வாத்தியம் முழங்க அபி கையில் தீபம் ஏந்தி நின்ற ஒரு புகைப்படத்துடன், சரியாக வெந்து வராத எல்லா கவிதைகளையும் எரித்து விட்டு பிற பெண்களிடம் பேச ஆரம்பித்தேன். வசுமதி பின்னால் பழக்கமானவள் தான். அபியோடு கான்வென்டில் படித்தவள். அபியின் மீது பிரேமை கொண்டு திரிந்த காலங்களின் முழு வாதையையும் கேட்டு தெரிந்து கொண்டு அவளது புருஷன் இல்லாத ஒரு நாளில் என்னை முத்தமிடுகிறாயா என்று கேட்டாள். அது முடிந்து சில நாட்களுக்குள் உனக்கு வேண்டும் என்றால் முலையூட்டுகிறேன் என்றும் சொன்னாள். அவளுடைய நிலைப்பாடுகள் உறுதியானவை. அபியைக் கூட்டிக் கொண்டு வருவது கொஞ்ச நேரத்திலேயே நடந்தது.

நான் குனிந்து உட்காரந்திருந்த அபியை அவதானிக்க முயன்றேன். வசுமதி புன்னகைப்பது இடையூறாக இருந்தது.

“ சவுக்கியமா? ” என்கிறாள் அபி.

நான் ஆமென்பது போல தலையசைத்தேன்.

மிகுந்த தர்ம சங்கடத்துடன் பேசுவதற்கு வாய்ப்பும், திராணியும் இல்லாமல் எனது முதுமையையும், பிணியையும் யோசித்துக் கொண்டிருந்தேன். உடலின் ஒவ்வொரு திக்கிலும் ஒவ்வொரு அவஸ்தை. மனம் எப்போதும் ஒரு விதும்பலின் விளிம்பில் வெடித்து அழக் காத்திருப்பதை ஒருவரும் அறிய மாட்டார்கள். இந்த உயிர் மட்டும் நாம் கட்டிப் போட்டு வளர்க்கிற ஒரு நாயாக இருந்தால், அதை எப்போது வேண்டுமானாலும் அவிழ்த்து விட்டுவிட முடியுமாக இருந்தால் அது எவ்வளவு பளிச்சென்ற விடுதலை? இவள் எதற்கு இங்கே வர வேண்டும், என்னைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க வேண்டும்? நான் அங்கிருந்து எழுந்து செல்ல விரும்பினேன். சிறிதாக எழுவதற்கு முயன்றேன்.

“ என்ன வேணும்? ”

“ ஒண்ணும் இல்ல. சும்மா ”

“ உனக்கு இப்ப என்ன வேணும் சொல்லு? ”

“ குடிக்கறதுக்கு தண்ணி. ”

வசுமதி எழுந்தாள். என்னை இருக்க சொல்லி விட்டு நகர்ந்தவள், சட்டென்று திரும்பி “ காப்பி கொண்டு வர்றேன். சாப்பிடறியா?” என்றாள்.

“ ம் ”

அவள் போனதும் நானும், அபியும் வெவ்வேறு திசைகளில் வேடிக்கைப் பார்த்தோம். ஒரு சிறுவன் ஐந்தாறு குட்டிப் பெண்களை அதட்டிக் கொண்டு செல்பி எடுக்க முயன்று கொண்டிருந்தான். அவனது மலையாளம் கேட்க நன்றாக இருந்தது. சிறிய சிரிப்புடன் அபி பக்கம் திரும்பினேன். அவள் என்னைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். “ நீ என்ன லவ் பண்ணத கடைசி வரைக்கும் ஏன் சொல்லல? ” என்றாள். அவள் கண்கள் கலங்கின. “ டாக்டர்ஸ் என்ன சொல்றாங்க? ” என்கிறவளுக்கு விம்மல் வெடித்தது. வாய்விட்டு அழுது கைக்குட்டையால் மூடிக் கொண்டாள். அவளது உடல் அதிர்வதை நான் செய்வதறியாமல் திகைத்துக் கொண்டு நின்றேன்.

கண்களுக்குள் கண்ணீர் ததும்பி விட்டது.

பக்கத்துப் படுக்கையில் இருந்து யாரேனும் கவனிக்கிறார்களா? திருட்டுத்தனமாக துடைத்துக் கொண்டேன். டயாலிசிசில் இருப்பவர்கள் எவ்வளவு மனத்துணிவு கொண்டவர்களாயினும் சரி, ரத்த சுத்திகரிப்பு துவங்கிய சற்று நேரத்தில் அரை மயக்கத்தில் தான் இருப்பார்கள். நான் தூங்காமல், கனவு காண விரும்பாமல் ஒரு கதையை ஜோடிக்க ஆரம்பித்தேன். அது இப்படி முடிந்ததில் ஒரு சந்தோஷமும் உண்டு. ஆனால் இன்னும் இரண்டு மணி நேரத்தை ஓட்டியாக வேண்டும். மற்றபடி இந்த வார்டில் குமுறுகிற பல்வேறு மனித துயர்களை கேட்டுக் கொள்ள எனக்குப் பிடிக்கவில்லை. நான் உள்ளிட்ட அத்தனை பேருடைய மரணத்துக்காகவும் நான் வேண்டவே செய்கிறேன். எனது அடுத்த படுக்கையில் இருக்கிறவள் பத்து வயது கூட நிரம்பாத ஒரு சிறுமி. கை நரம்புகளுக்கு ஊசிகள் இறங்கியதும் ஓலமிட ஆரம்பித்து விடுவாள். அவளுக்கு அதிகமான மூச்சுத் திணறல் இருக்கிறது. குறைந்து விடுகிற இரத்த அழுத்தத்தால் அவள் செத்துப் போகவும் வாய்ப்புண்டு என்று யாரோ பேசிக் கொள்வதைக் கேட்டிருந்தேன். போதும்.

எனக்கு சஞ்சரிக்க வேறு உலகம் வேண்டும்.

அபியை நான் அழைத்து வருகிறேன் என்று சென்ற வசுமதி இன்னும் திரும்பவில்லை. எனக்கு அடிநாவு உலர்ந்து, வயிற்றில் பதட்டம் சத்தம் போட்டது. எதற்கு இந்தக் கோழைத்தானம்? நானே நேரில் சென்று அவளை ஏறிட்டால் தான் என்ன?

வெளியே மழை தொடங்கி இருக்கிறது.

தேக்கு மரத்தின் இலைகள் மீது மழை கொட்டுகிற சப்தத்தை நான் காடுகளில் கேட்டிருக்கிறேன்.

கல்யாண மண்டபத்தின் வராந்தாக்கள் விசாலமானவை. வெளியே நின்று இருந்தவர்கள் அதில் ஒதுங்கி இருக்கலாம்.

ஒரு காற்று பாய்ந்து வந்து முகத்தில் ஜில்லிட்டது.

ஒரு மழை பின்னணியாக இருக்கும்போது, எதையும் பேச முடியும் என்று மனதில் பட்டது.        

மெல்ல எழுந்தேன். யாரும் உதவிக்கு வருகிறேன் என்று வந்து பிடித்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். முன்னேறினேன். பொதுவாக ஆணின் நடையில் ஒரு கம்பீரம் இருக்க வேண்டுமில்லையா, அந்த கவனத்தையும் மேற்கொள்ள வேண்டியிருக்க, முகத்தில் ஒரு புன்முறுவலை வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாற்காலியையும் பற்றிப் பிடித்து அங்கு சேர்ந்த போது முகுந்தன் யாரோ வயதான சிலரிடம் பேசிக் கொண்டிருந்தான். சற்றுத் தள்ளி அபியும், வசுமதியும் உண்ணியுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக, அபி குனிந்து, குனிந்து சிரித்தாள். வசுமதியின் முதுகில் தட்டி சிரித்தாள். கடைசியாக சிரிப்பு தாங்காமல் முகுந்தனின் கரங்கள் மீது அடித்து சிரித்தாள்.

இப்போது நான் வந்த வழியே திரும்ப வேண்டும்.

மழையைப் பார்க்கிற எண்ணமும் மறந்து விட்டது.

எனக்கு என்னவோ இந்தக் கதையின் முடிவு உவப்பாகப் பட்டது. சற்றே திருப்தியுடன் கண்களை திறந்தபோது சிவதாசன் நின்றிருந்தான்.

புன்னகைத்தான்.

“ டேய், உன்ன விட நல்ல திரைக்கதையை என்னால் எழுத முடியும் ! “ என்று நான் சொன்னது அவனுக்குப் பிடிபட்டிருக்காது.                

பிற படைப்புகள்

Leave a Comment