மானுடன்
உருது மூலம் : சையத் முகமது அஸ்ரஃப் தமிழில் : கோ.கமலக்கண்ணன்

by olaichuvadi

 

சாளரத்தின் வழியே, கீழே அவர்கள் சென்று கொண்டிருப்பதை அவன் உற்றுப் பார்த்தான். திடீரென்று அவன் சாளரத்தை அடித்துச் சாத்தி விட்டு, திரும்பி மின்விசிறியை ஓட விட்டான். ஆனால், உடனேயே விரைந்து அவன் அதை அணைத்தும் விட்டான். பின்னர் மேசையருகே இருந்த நாற்காலியில் ‘தொம்’ என அமர்ந்து, ‘நேற்றை விடவும் –  சந்தேகமே இல்லை. அவர்கள், ஒவ்வொரு நாளும் இன்னும் இன்னும் பெரியதாகிக் கொண்டே இருக்கிறார்கள்’ என்று ரகசியக் குரலில் சொல்லிக் கொண்டான்.

சர்ஃபராஸ் தனது உள்ளங்கையிலிருந்து முகத்தைத் தூக்கி அன்வரைப் பார்த்தான்.

‘நீ இதை இரண்டு நாட்களாக மட்டும் தான் பார்த்து வருகிறாய். ஆனால் நானோ, இப்போது கொஞ்ச காலமாகவே இதை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். சன்னலை நான் சாத்தி வைத்தால் புழுக்கமாக இருக்கிறது, ஆனால் திறந்து விட்டுவிட்டாலோ இன்னும் மோசம். அவர்கள் இந்த வழியை நோக்கித்தான் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று உணர்கிறேன்.’ சர்ஃபராஸ் அமைதியானன். சற்று நேரத்திற்குப் பிறகு அவன் சொன்னான் : ‘ரொம்ப காலத்திற்குப் பிறகு நான் உன்னை இன்று சந்தித்ததை நினைத்து மிகவும் சந்தோசமாக உணர்கிறேன். ஆனால், இந்த கும்பல்…’

‘வெறும் இரண்டு நாட்களாக அல்ல. பயணத்தின் போது என்ன ஆயிற்று என்பதைத்தான் நான் ஏற்கனவே சொன்னேனே. கிராமத்திலும் கூட இதே நிலைமைதான். என்ன நடக்கப் போகிறது என்று கணிக்க முடியவில்லை.’

சர்ஃபராஸ் தனது பள்ளிப்பருவ நண்பனைக் கனிவுடன் பார்த்தான். அவன் அவனை பதினைந்தாண்டுகள் பிரிவிற்குப் பிறகு இப்போதுதான் சந்தித்திருக்கிறான். அவர்கள் பின்னோக்கி நினைவுகளை ஓடவிட்டு பலவற்றையும் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்…

சர்ஃபராஸ் தனது கிராமத்தை விட, சற்றே பெரிய கிராமத்தில் அமைந்திருந்த தாய்வழி அத்தையின் வீட்டிற்கு அருகில் ஓரிரு மைல் தொலைவில் இருந்த சிறு நகரத்திற்கு இரண்டாண்டு கல்லூரி படிப்பிற்காக அனுப்பப்பட்ட போது, இன்னும் பதின்ம வயதினனாகவே இருந்தான். கல்லூரியின் முதல் நாளிலேயே, அவன் வயதுப் பையன் ஒருவன் அவனிடமிருந்து அழிப்பானைத் தனக்காக வாங்கிக் கொண்டான். ஆனால் அவர்கள் இருவரும் ஏற்கனவே நெடுங்கால நண்பர்களாக இருந்தவர்கள். அவன், தனது ஓவிய ஏட்டில் இருந்த பலூன் வடிவ மலரினை அழித்துவிட்டு, அந்த இடத்தில் ஒரு வாத்து வடிவ விளக்கினை வரைந்த பின், அவனிடம் அழிப்பானைத் மீளத் தந்தான். வருகைப் பதிவிற்காக ஆசிரியரது அழைப்பின் போது ‘சையத் அன்வர் அலி’ என்ற பெயர் உச்சரிக்கப்படுகையில் அவன், ‘உள்ளேன்!’ என்று பதிலளித்தான்.

‘சையத் அன்வர் அலி!’ என்று சர்ஃபராஸ் மென்குரலில் ஏற இறங்க சொல்லிக் கொண்டான்.

‘இதோ! இப்போது கல்லூரியின் இனிய பழைய நாட்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறாய் தானே?’

‘ஆம், எப்படி உனக்குத் தெரிந்தது?’

‘எப்பவும் போலவே தர்திதான். ஆளு, நீ கொஞ்சம் கூட மாறவில்லை. அந்த கலை ஆசிரியரைத் தவிர வேறு யார் என்னை முழுப் பெயர் சொல்லி வருகைப் பதிவெடுக்கையில் அழைத்திருக்கக் கூடும்?’

‘தர்தி’ என்ற குறிப்பு அவனுக்கு அத்தனை உகந்ததாக படாத போதும், சர்ஃபராஸ் புன்னகைத்தான். தான் ஒரு நல்ல நிலைக்கு உயர்ந்து விட்டிருக்கும் போது, தனது நெருங்கிய பால்ய தோழன் ஒரு தொடக்கப் பள்ளியில் உருது ஆசிரியராக இருப்பதை உணர்ந்த பிறகு, அந்த சொற்பிரயோகத்தைப் பெரிதாக அவன் பொருட்படுத்தவில்லை. அவன் தனது முக்கியமற்ற நிலையினை கடப்பதற்காக எதையேனும் சொல்லித் தன்னை ஆற்றிக் கொண்டுதான் ஆக வேண்டும்.

ஆனால் பழைய அன்வர் பற்றி அவன் விரைவாக நினைத்துப் பார்த்தான். அன்வர்தானே அன்று அவனுக்குள் தளர்ந்த மனநிலையைக் களைந்து, பீதியூட்டக் கூடிய காடுகள், அச்சமூட்டும் தோப்பு மரங்கள், நகரத்திலிருந்து கிராமம் வரை நீண்டிருக்கும் மெளனமான பயமுறுத்தும் நீள் நிலங்கள் ஆகியவறின் ஊடே நடந்து கடந்து, ஒவ்வொரு நாள் பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்குச் செல்வதற்கான திடத்தினை ஏற்படுத்தித் தந்தவன்? நாட்டுப்புறங்கள் எப்படியெல்லாம் அவனை பயமுறுத்தின!

சர்ஃபராஸ் நாற்காலியில் சாய்ந்தபடி, தனது தலையின் எடையை அதன் பின் வைத்து, தனது விழிகளை மெல்ல மூடியபடி, தனது முன்னிளமையின் அந்த பயந்த காலங்களை மனதில் சுகித்தபடி, மெல்ல அவற்றிலிருந்து வெளியேறினான்.

குளிர்காலத்தின் போது, பள்ளிக்கூடத்தின் கடைசி மணி மாலை நான்கிற்கு அடித்ததும், பையன்கள் இரைச்சலை எழுப்பிய படி வீட்டிற்குச் செல்ல தலைப்பட்டார்கள். அவர்கள், தங்களது தோள்பட்டைகளில் இருந்து பள்ளிக்கூட பைகள் தொங்கியபடி, குடிகாரர்களின் தள்ளாட்டத்தைப் போன்ற நடையில் நடப்பார்கள். அவனது கிராமத்திலிருந்து ஒரு பையன் கூட கல்லூரியில் சேரவில்லை. வழியில் அவனுக்காக காத்திருந்த பீதியுணர்விலிருந்து தலையைக் குனிந்தபடி, அவன் பள்ளிக்கூட வாயிற்கதவிலிருந்து மெல்லமாகவும் அன்றி எடைமிக்கதாகவும் அன்றி இருக்கும் ஒரு தோரணையில் எட்டுவைத்து நடப்பான். சில சமயங்களில் அன்வர் அவனுக்குத் துணை வருவதுண்டு, பல சமயங்களில் வராமல் இருப்பதும் உண்டு. அவ்வாறு அவன் வரும்போதெல்லாம், தவறாமல் குளம் வரை மட்டும் கூடவே வருவான். அதைக் கடந்து வர அவனுக்கும் தைரியம் இருந்ததில்லை, ஏனெனில், குளத்தினைத் தாண்டியதுமே செப்பனிடப்படாத பாதை இடப்புறமாக சடுதியில் கீழிறங்கி, மொத்த நகரத்தையுமே பார்வையிலிருந்து தெரியாதபடி மறையச் செய்துவிடும். ஆனால் அவன் பிரியாவிடை பகர்ந்ததுமே, தனது நண்பனின் கரைந்து கொண்டிருக்கும் உளத்திடத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, தவறாமல் சில வார்த்தைகளை அள்ளி வீசுவான். ‘சர்ஃபராஸ், எதற்கும் அஞ்சாதே. நீ ஆற்றைக் கடந்து தோப்பினருகே நடக்கத் தொடங்கியதுமே யாரேனும் அங்கு நிச்சயம் இருப்பார்கள்.’

அவன் சொல்வதற்கு ஏதுமில்லாதவனாக அன்வரைப் பார்ப்பான். ஆனால் அவனுக்குள் அலையடித்துக் கொண்டிருக்கும் பீதியின் குறிப்பினை காட்டாமல் தவிர்க்கும் பொருட்டு பயம் கலந்த வீராப்புடன் பதில் தருவான் : ‘பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. தோப்பிற்கு அருகே யாராவது இருந்தால் நான் இன்னும் கொஞ்சம் இலகுவாக உணர்வேன். ஆனால், யாருமில்லை என்றால் அதற்காக பயந்து நடுங்கவெல்லாம் மாட்டேன்.’ இதைச் சொல்லி விட்டு கிராமத்தை நோக்கி தொடர்வான்.

கொஞ்ச தூரத்திற்கு இருவரும் ஒருவரையொருவர் திரும்பிப் பார்த்துக் கொள்வார்கள். அன்வர் பார்வையிலிருந்து விலகிய உடனேயே, சர்ஃபராஸ் தனது கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் புனித தாயத்தினைத் தொட்டுக் கொண்டபடி, விரைவாக குரானில் இருந்து ‘அரியாசனச்’ செய்யுளை உச்சரிக்கத் தொடங்கி விடுவான். நதிக்கரையினை ஒட்டியபடி இருக்கும் ஒற்றையடிப் பாதைக்குள் இறங்குவதற்கு முன்பாகவே அவன் குரானிலிருந்து நான்கு குல்களை உச்சரித்துவிட்டு தன் மீதே ஊதிக் கொள்வான். இவ்விதமாக, தேவ வார்த்தைகளின் கவசத்தால் ஏற்பட்ட பாதுகாப்புணர்வுடன், கூடுதல் எச்சரிக்கை உணர்வையும் வரவழைத்துக் கொண்டு தோப்புப் பகுதியை நோக்கி முன்னகர்வான். சூரியன் இந்த நேரத்தில் தான் முற்றிலும் மறைந்து கொண்டிருக்கும். குளிர்காலங்களில் வெகு விரைவிலேயே இருட்டிவிடுகிறது. மண்பாதையில் போய் கொண்டிருக்கும் சில மிதிவண்டிகளும் மணியொலி எழுப்பியபடி கடந்து போகும் மாட்டுவண்டிகளும் அவனுக்குள் கொஞ்சம் தைரியத்தைத் தந்து ஆற்றுப்பாதைக்கு முன்பு போதிய வலுவுணர்வினை ஏற்படுத்தும். ஆனால் பாதையில் அவன் கால்வைத்துவிட்ட அடுத்த கணமே அவனைச் சுற்றி ஒரு பயங்கரமான மெளனம் சூழ்ந்து கொள்ளும், அப்போது ஆலமரக் கிளையிலிருந்து, பருந்து போன்ற பறவைத் தன் இறக்கைகளை படபடவென விரித்து கிளம்பி அவனை இன்னும் கூடுதலாக பயமுறுத்தும். அவன் உறைந்து போய் உடனடியாக ‘அரியாசனச்’ செய்யுள்களை மறந்து விடுவான், அதற்கு பதிலாக குல் ஹுல்லா வை உச்சரித்துவிட்டு இரண்டிற்கும் இடையிலான நம்பிக்கையின் சாற்றலைக் காட்டியபடி சமாளிப்பான்.

தோப்பு இப்போது மெல்ல பார்வைக்குத் தெளிந்து வரும், சாயமற்ற ஆரஞ்சு நிற பகல் வெளிச்சத்தில், பனியால் சுற்றிலும் சேலை போல சூழப்படிருக்கும் போது, அந்த பழைய மாந்தோப்பின் உள்பகுதி சூரிய அஸ்தமனத்திலும் பகலிலும் ஒன்று போலவே இருண்டிருக்கும். அவன் அதை ஒரு ஞாயிற்றுக் கிழமை பிற்பகலில் பார்த்திருப்பதால், அவனால் இதைத் தனது பட்டறிவிலிருந்து சொல்ல முடியும். ஆனால், மாலையில் இந்த தோப்பு வேறுமாதிரியான ஒன்று. மரங்கள் எல்லாவற்றின் தலைப்பகுதிகளும் ஒன்றாக ஒட்டப்பட்டுவிட்டவை போல, இடையே பிளவேதும் அற்ற, ஒற்றைத் தொடர் கூரைப்பகுதியாக இருப்பது போலத் தோன்றும். மாமரத்தின் கீழே கடந்து கொண்டிருக்கையில் அவனால் தனது இதயத்துடிப்பினை தானே கேட்கமுடியும். ஜின்னா பாபா, மரத்திலிருந்து எந்த தருணமும் கீழே குதித்து விடுவார் என்று அவன் உணர்ந்து கொண்டிருப்பான்.

தோப்பினைக் கடந்து வெளியேறிய உடனேயே வேறொரு பீதி அவனைப் பிடித்துக் கொண்டு, கரும்பு களங்களின் நெடுக்காக, மேலேறியபடி இருக்கும் குறுகிய பாதையில் சென்றாக வேண்டிய அவனைப் படுத்தி எடுக்கும். உயரமான கரும்பு கட்டுக்களின் பின்னிருந்து ஓநாய்கள் வெளிப்பட்டு அவனது காலைக் கடித்துப் பற்றிக் கொள்ளும் என்ற அச்சம்தான் அது. அவனுக்கு வியர்த்தொழுகும். அதற்கடுத்து கோதுமை வயல்கள் கண்ணில் படும். மெல்ல பெரும் பகுதியை ஆக்கிரமித்திருந்த கிராமத்தின் பெரிய பெரிய மசூதிகளின் கோள உச்சங்களும் கோயில்களின் கோபுரங்களும் தென்படத் தொடங்கும். அதற்கு பிறகுதான் பயத்தால் விரைத்திருந்த அவனது உடல் மெல்ல தளர்வு கொள்ளத் தொடங்கும். அவனுக்கு பலத்தின் தடயங்கள் தெரிய ஆரம்பித்துத் தனது காலின் மரமரப்பு குறையத் தொடங்கியதும், அவன் சத்தமாக ஏதோவொரு திரைப்படப் பாடலின் ஓரிரு வரிகளை பாடத் தொடங்குவான்.

மாதத்தில் இரண்டு மூன்று தடவைகள் அவன் தோப்பிற்கருகே வரும் போதெல்லாம், ஒரு மனிதன் சரியாக தனது குடிசையினை நோக்கி கையில் மண்வாரியுடன் சென்று கொண்டிருப்பதை கண்டு கொண்டிருக்கும் பேறு அவனுக்கு இருந்தது. அத்தகைய தருணங்களின் போதெல்லாம், சர்ஃபராஸ் தோப்பினருகிலேயே நின்று, அந்த மனிதனிடமிருந்து, உதவி பெறும் நட்புணர்வுடன் அந்த மனிதனுக்கு முகமன் சொல்லும் விதமாக, தனது பயணத்தை தானே இடையில் தடைசெய்து கொண்டபடி பாடலை முனகிக் கொண்டவாறு இருப்பான்.

அந்த மனிதனும் நின்று, தனது மண்வாரியின் முனை தரையினைத் தொட்டபடி இருக்க, அவனைத் தனது விழிகளைச் சிமிட்டிய படி பார்த்துவிட்டு பதில் முகமன் செய்வான். ‘ராம், ராம், மகனே. நீ பத்வாரி ஐயாவினுடைய மருமகன், சரிதானே? அவரிடம் நான் விசாரித்ததாகச் சொல்.’

வீட்டிற்குச் செல்லும் கொடூரமான பயணத்தைத் தினமும் அவன் தொடர்வதற்கு அந்த மனிதனை தினமும் சந்திக்கக் கூடும் என்ற எண்ணமே முக்கிய காரணம். அந்த நம்பிக்கை மட்டுமே இல்லாதிருந்தால், வெகு காலம் முன்பாகவே பள்ளிக்கூடத்திலிருந்து நின்றுவிட்டுத் தனது கிராமத்திற்கே போய் சேர்ந்திருப்பான்.

ஆனால், அவன் அந்த மனிதனை நாள்தோறும் சந்தித்துக் கொண்டிருக்கவில்லை. ஒருமுறை பள்ளியிலிருந்து கிளம்ப வழக்கத்திற்கு மாறாக தாமதமாகி விட்டிருந்தது. கைப்பந்தாட்டம் நடந்து கொண்டிருந்தது. அவன் அதில் மூழ்கி நேரம் போய்க் கொண்டிருப்பதை மறந்திருந்தான். அவனுக்கு நேரத்தின் நிதர்சனம் பளிச்சென உறைத்த போது உடனடியாக சூரியனைப் பார்த்தான். அது அவன் நகரத்தில் இருந்து கொண்டிருக்கும் அப்போதே ஆரஞ்சு நிறத்தைச் சூடி தோற்றமளித்தது. வாயிற்கதவிலிருந்து வெளியேறி விரைந்து தனது கிராமத்தை நோக்கி நடையைக் கட்டினான். நதிப்பாதைக்குத் திரும்பிய போது, அந்த மனிதன் இந்நேரம் தோப்பிலிருந்து தனது குடிசைக்குப் போய்விட்டிருப்பான் என்ற எண்ணம் அவனை ஒரு துப்பாக்கி ரவை போலத் துளைத்து அவனது உடலெங்கும் கடுவலியின் அலையை எழுப்பியது. அவன் நெற்றியிலிருந்து வியர்வையைத் துடைத்துவிட்டு ஆலமரத்தின் இருண்மைக்குள் நுழைந்தான். யாரோ அதிலிருந்து கீழிறங்கி தன்னைப் பின் தொடர்ந்து வருவதைப் போன்ற உணர்வோடு வெளிவந்தான். அவனது தொண்டை அடைத்தது. ஆனாலும் அவன் மெல்ல முன்னகர்ந்தபடி இருக்க அவன் முகம் பயத்தால் வெளிறியிருந்தது. அவனுடல் கூனிக் குறுகி இருந்தது. திடீரென்று அவனுக்குப் பின்னால் இருந்து வந்த பாதஒலி நின்றிருந்தது. ஜின்னா பாபா அவனைப் பற்றிக் கொண்டு அவன் முதுகில் மாய பந்தினை எறியப் போவது குறித்த உணர்வு அவனை இறுக்கியது. அவன் தன் உள்ளத்தில் வேக வேகமாக கலிமாவை உச்சரித்தபடி, தனது விழியோரப் பார்வையால் தனக்குப் பின்னால் பார்த்தான். அது ஒரு பெரிய குரங்கு. நின்று தனது முன்னங்கால்களைத் தரையில் கிடத்தி அவனைப் பார்த்து பேய்த்தனமாக கத்தியது. ஜின்னா பாபாவின் அளவிற்கு இல்லாவிடினும் குரங்குகளிடமும் அவன் பயங்கர அச்ச உணர்வு கொண்டிருந்தான். தனது பள்ளிக்கூட பையினைக் கிடுக்கிப்பிடி பிடித்தபடியே தோப்பிற்கு முன்பாக நின்றான். தனக்கு முன்பு ஆளரவமற்ற தோப்பினாலும் பின்புறம் குரங்கினாலும் தனது பாதை அடைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தான்.

ஏற்கனவே சூரியன் அஸ்தமித்து, மரங்கள் எல்லாம் தங்களது மாலை நேர இரகசிய உரையாடல்களைத் தொடங்கிவிட்டிருந்தன. அவன் தோப்பிற்குள் அடிவைத்தான். பழைய மாமரம் மேலிருக்க, அவனது இதயம் வலிப்பு வந்தது போல துடித்துக் கொண்டிருந்தது : ஏனெனில், அதில்தான் ஜின்னத் பாபா வசித்துக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் சரியாக, அவனது வலப்புறத்தின் ஒரு புள்ளியிலிருந்து ஒரு குரல் வருவதைக் கேட்டான். ‘மகனே, இன்றைக்கு நீ மிகவும் தாமதமாக வந்திருக்கிறாய்.’

என்ன? அப்படியானால், அந்த மனிதன் இன்னமும் அங்கே இருக்கிறார்! மகிழ்ச்சியலை அவனுக்குள் நிறைந்தோடியது. அவன் இதுவரை அப்படி ஒரு மகிழ்ச்சியை அனுபவித்ததே இல்லை, அவனது ஆசிரியர் ‘எனது பசு’ என்ற அவனது கட்டுரைக்கு ‘மிகவும் நன்று’ என்று பாராட்டுக் குறிப்பு போட்ட போது கூட! அவன் தன் விழிகளை நிமிர்த்தி அந்த மனிதனைப் பார்த்தான். அவர் தனது குடிசைக்கு அருகே மரங்களின் பக்கம் பனியில் புதைக்கப்பட்டவராய் நின்று கொண்டிருந்தார். அவன் அவரை கூர்ந்து பார்த்தான். அவர் தனது ஒரு கையில் இருந்த மண்வாரியின் முனை தரையைத் தொட்டபடி இருக்க நின்று கொண்டிருந்தார், இன்னொரு கையில் தனது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வஸ்திரத்தினைக் காதுகளின் மேல் இட்டுக் கொண்டிருந்தார். பனியால் சூழப்பட்டு வேஷ்டியும் அங்கவஸ்திரமும் ஆடையணிந்தபடி நின்று கொண்டிருந்த அவர் சர்ஃபராஸுக்கு நபி எலியாஸின் சேவகனைப் போலத் தோன்றினார்.

‘வணக்கம், மனிதரே!’ என்று அவன் மகிழ்ச்சியுடன் கூவினான்.

‘நீடூழி வாழ்க, மகனே. பத்வாரி ஐயாவிற்கு எனது வணக்கங்களைத் தெரிவிக்க மறந்துவிடாதே. இரவில் நெடு நேரம் வெளியே சுற்றிக் கொண்டு இருக்காதே.’

அவன் பதிலளிக்கவில்லை. அன்று இரவுணவிற்குப் பிறகு அவன் திண்னையில் அமர்ந்திருந்த, தனது அத்தையிடம் அடைக்கலம் புகுந்து அன்று அவன் கடந்த எல்லா சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டான். கல்லூரியிப் படிப்பில் அவன் தாங்கிக் கொண்டிருக்கும் கஷ்டங்களை மட்டுமின்றி தினமும் அவன் நடந்து வரும் பாதையில் அவன் அனுபவிக்கும் துன்பங்களை எல்லாம் அவளுக்கும் அவளது கணவருக்கும் தெரிவித்துவிட விரும்பினான். அவன் தாமதமானதற்கு கைப்பந்தாட்டம் தான் காரணம் என்று தெரிந்ததும், அவனை ஆற்றுப்படுத்துவதற்கு பதிலாக அவனை வைய ஆரம்பித்தாள் அவனது அத்தை.

படுக்கையில், அவன் தன்னைப் பருத்திப் போர்வைக்குள் புகுத்திக் கொண்டு யோசனை செய்யத் தொடங்கினான் : ‘அந்த மனிதன் இறந்து விட்டால் என்ன செய்வது – நன் எப்படி நான் பள்ளியிலிருந்து திரும்பி வந்து சேர்வது?’ அந்த மனிதன் தனது மாமாவை விடவும் வெகு இளமையாகத் தெரிந்ததால், அவர் வெகு விரைவில் இறந்து போகப் போவதில்லை என்ற நினைப்பு அவனது குழம்பிய மனதை இலகுவாக்கியது.

‘சர்ஃபராஸ்’, என்றழைத்த அன்வர், ‘நீ அறிவாயா? உனது அத்தை மகள் ஆயிஷாவிற்கு நிக்காஹ் நடைபெறவிருக்கிறது. உனது அத்தை எனக்கு அனுப்பி இருந்தார்கள். இன்னொரு முறை நீ முற்றிலும் அவர்களை மறந்துவிட்டதாக புகார் சொன்னார்கள். அவரும் அவரது கணவரும் உன்னை மீண்டும் சந்திப்பதற்கு மிகவும் ஆர்வமாக, கொஞ்சம் பதற்றமாகவும் இருப்பதாகவும், நீ நிச்சயம் மணவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.’

சர்ஃபராஸ் நாணத்திற்குள்ளானான். ஆனால் அதை மறைக்கும் விதமாக, தனது தீர்க்கமான, ஆனால் ஆழமற்ற குரலில் தனது அரசுப்பணியின் கடுமையான பொறுப்புள்ள பணிகளின் நிமித்தம் எல்லோரையும் சந்திப்பதற்கு நேரமில்லாது போய்விடுவதாக தெரிவித்தான். பின்னர் அவன் தான் கைகளில் தூக்கிக் கொண்டு திரிந்த ஆயிஷாவினைப் பற்றி நினைத்துக் கொண்டான். எவ்வளவு வேகமாக அவள் வளர்ந்து விட்டாள்!

‘திருமணம் எப்போது?’

‘நாளை மறுநாள் மாப்பிள்ளை அழைப்பு நடக்கவிருக்கிறது.’

‘என்ன கொடுமை இது. இங்கு சுற்றியும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளின் நடுவே இந்த அத்தை எப்படி இப்போது போய் திருமண தேதி குறித்திருக்கிறாரோ? மக்களை எத்தனை மோசமான வெறித்தனம் பிடித்திருக்கிறது என்பதை நீதான் பார்த்தாயல்லவா? வண்டிகளிலும் றாக்டர்களிலும் கும்பல் கும்பல்களாக, மிகுந்த வெறியுடனும் ஆயுதங்களோடு பச்சையான வெறுப்புணர்வுடன் பேரணியாகச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை?’

அன்வர் அவனை வெறித்துவிட்டு பிறகு, ‘நானும் அத்தையிடம் இது திருமணத்திற்கு உகந்த நாட்கள் இல்லை என்று சொன்னேன். வெறியுணர்வு கிராமங்கள் வரையிலும் கூட பரவி இருக்கிறது. இவ்வளவு ஏன், அவர்களது கிராமத்து மக்களே கூட வேற்றுமையுணர்வுடன் இருக்கத் துவங்கிவிட்டனர். அவர்கள் மனநிலை மாறிவிட்டது. ஆனால் அவளால் செய்யக்கூடுவது தான் என்ன? ஆயிஷாவின் நிச்சயதார்த்தம் மாமாவின் சொந்த தம்பி மகனோடு செய்யப்படிருக்கிறது. அந்த பையன் இன்னும் மூன்றே நாட்களில் ஜெத்தாவிற்குத் திரும்புகிறான். மாமாவிற்கும் உடல் தளர்ந்து வருகிறது. அவர் உயிரோடு இருக்கும் போதே ஆயிஷாவிற்கு ஒரு வாழ்க்கை அமைத்துக் கொடுத்தாக வேண்டும். சர்ஃபராஸ், நீ கண்டிப்பாக வர வேண்டும். இன்றே. அண்ணியைக் கூப்பிட்டு உடனே தயாராகும்படி சொல்லிவிடு.’

‘அன்வர், நீ செய்தித்தாள்களை எல்லாம் பார்க்கவில்லையா? நேற்று முன் தினம் தான் அவர்கள் எல்லா பயணிகளையும் புகைவண்டியிலிருந்து இறக்கிவிட்டு பிறகு…’ பேசுவதை நிறுத்தினான்.

அன்வராலும் வேறேதும் சொல்ல முடியவில்லை. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அவன், ‘அப்படியானால் சரி, அண்ணியையும் குழந்தைகளையும் விட்டிலேயே இருக்கச் சொல்,’ என்று ஆமோதித்தான்.

‘ஆமாம், அவர்களையும் நான் உடன் அழைத்து வரக்கூடாது.’

‘இப்ப ஒரு மணியாகிறது. கிளம்பி போனால் ஆறு அல்லது ஏழுமணிக்கு அங்கு போய்ச் சேர்ந்திடுவோம்.’

‘ஆம். 250 இலிருந்து 300 கி.மீ. தொலைவிருக்கும்.’

நதியின் குறுக்கே இருந்த பாலத்தில் ஆட்கள் நின்றுகொண்டு மகிழுந்தின் முன்பாக அவர்களை நிறுத்தும்படி சைகை செய்தனர். இரு நண்பர்களுமே தாழ்மனநிலையை உணர்ந்தனர். தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஆயுதம் ஏதும் அவர்களிடம் இருக்கவில்லை. ஆக்ரோஷமான கும்பல் ஒன்று வண்டிகளில் எதிரே வந்து கொண்டிருந்தது. கும்பலில் இருந்து கோபமான கோஷங்களைக் கத்தியபடியே மோசமான குறிப்பிட இயலாத உணர்ச்சியுடன் தகித்துக் கொண்டிருந்தனர்.

சர்ஃபராஸ் மற்றும் அன்வர் இருவரது மனங்களுமே முற்றிலும் உணர்விழந்து போயின. கலகக்காரர்கள் மகிழுந்தின் இருமங்கிலும் சூழ, அவர்கள் இருவரும் உள்ளேயே அமர்ந்தபடி இருந்தனர். அவர்களைச் சைகையால் நிறுத்தியவர்கள், அந்த கோஷங்களுக்கு ஒத்து ஊதிக் கொண்டிருந்தார்கள். சர்ஃபராஸுக்கு உடனடியாக ‘அரியணைச்’ செய்யுள் நினைவில் எழுந்தது.

பேரணி அங்கிருந்து கடந்து விலகியதும், அதனால் தடைபட்டிருந்த மற்றவர்களும் மிகச் சத்தமாகப் பேசியபடி இருந்தனர்.

பயங்கரமான நரம்பதிர்வால் கைப்பற்றப்பட்டிருந்த சர்ஃபராஸால் உடனடியாக வண்டியைத் துவக்க முடியவில்லை. கொஞ்ச நேரம் இருவருமே ஒலியற்ற அசைவின்மையில் அங்கே அமர்ந்தபடி, இருவருமே ஒருவரை ஒருவர் ஆக்கிரமித்திருந்த பயத்தை உணர்ந்திருந்தனர்.

சர்ஃபராஸ் ஒருவழியாக மகிழுந்தினை துவக்கியதும் அன்வர், ‘குறைந்த ஆட்களோடு அவர்கள் பொதுவெளியில் வம்புகள் செய்வதில்லை. அதற்காக என்றே சிறப்பு பயிற்சி பெற்ற ஆட்களை அவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் வைத்திருக்கிறார்கள். சென்ற வெள்ளியன்று அஹமத்தை நகரத்தின் சாலையிலிருந்து தாண்டி தோப்பு பாதைக்குப் போனதுமே … திடீரென்று.. பின்புறமாக தாக்கி… ‘

சர்ஃபராஸ் தனது முதுகுத் தண்டில் ஒரு மின்னல் வெட்டியதை உணர்ந்தான். முழு உணர்வின்மையுடனேயே அவன் மகிழுந்தினை இயக்கிக் கொண்டிருந்தான். அன்வர் தொடர்ந்தான் : ‘ஒரு சிலரை இந்த கலகக்காரர்க மொத்தமாகத் தாக்கினால், மிகவும் பெயர் கெட்டுவிடும். ஆனால், ஒன்று சொல்கிறேன், நாங்கள் இவர்களுக்கெல்லாம் தயாராகத்தான் இருக்கிறோம்.’ இந்த கடைசி பகுதியை இரகசியமாக மெல்லிய சத்தத்துடன் அனவர் சொன்னான்.

அவர்கள் நதிக்கரையின் நெடுக்கே இருந்த பாதைக்கு இறங்கிய போது, அப்போதுதான் சூரியன் அமிழ்ந்திருந்தது. சர்ஃபராஸ் தனது இளமையின் நினைவுகளை அடைந்தான். அப்போதெல்லாம் இந்த மெளனமான நதிக்கரையும் தனித்துவிடப்பட்ட தோப்பும் அவனுக்கு எத்தனை அச்சமூட்டுபவையாக இருந்திருக்கின்றன.

திடீரென்று அவன் தடைப்பானில் காலை மிதித்தான். தனது முன்னங்காலை தரையில் வைத்தபடி ஒரு பெரிய குரங்கு அவர்கள் இருவரையும் பார்த்து கத்தியது. இருவரும் புன்னகைத்துக் கொண்டனர். குரங்கு விரைந்தோடி ஒரு மரத்தில் ஏறிக் கொண்டது. கிளைகளில் இடமாறி அமர்ந்த ஒரு கழுகு படபட ஓசையை அனுப்பியது. சர்ஃபராஸ் ஒருமுறை எப்படி இந்த ஓசை அவனுக்குள் கடும் பீதியைக் கிளப்பியது என்பதை எண்ணிக் கொண்டான்.

‘அது எப்போது நடந்தேறியது? அதான், இந்த கடைக்காரன் அஹமது விசயம்?’

‘இன்றிலிருந்து நான்கு தினங்களுக்கு முன்பு.’

‘அடடா!’ திசையியக்கியில் இருந்த சர்ஃபராஸின் கை ஈரமாகி இருந்தது.

துல்லியமாக என்ன ஆகி இருக்கும் என்று தெரிந்திருந்த போதும் ‘என்னாயிற்று?’ என்று அன்வர் கேட்டான்.

‘இல்லை, ஒன்றுமில்லை. அதான், இந்த சம்பவம் வெகு சமீபத்தில் நடந்திருக்கிறது. அவர்களால் கண்டு பிடிக்க முடிந்ததா…’

‘நீ விளையாடுகிறாய். ஈமச்சடங்கு முடிந்த கையோடு காவல்துறை ஆட்கள் அவர்களை திட்டத் தொடங்கி விட்டார்கள். இப்படி எல்லாம் பிரச்சனை நடக்கும் போது, அவனை விட்டை விட்டு வெளியே அனுப்பி இருக்கக் கூடாது என்றனர். தாக்கியவர்கள் எளிதாக கொலை செய்துவிட்டு இருட்டில் பதுங்கி ஓடி விடுவார்கள்.’

‘நிறுத்து! பின்னோக்கி சென்று மகிழுந்தை நிறுத்து. நாம் இனியும் போக முடியாது.’

நதிப்பாதையிலிருந்து வந்த உடனேயே தோப்பின் தரிசனம் மிதந்து வந்தது. சர்ஃபராஸ் பின்னெடுத்து மகிழுந்த நிறுத்தினான். பிறகு அவன் நடந்து வந்து தோப்பின் முன் நின்றான்.

பனியால் சூழப்பட்ட தோப்பினை வெகு காலத்திற்குப் பிறகு முதன்முறையாகப் பார்த்துக் கொண்டு நின்றான். இன்று அது அவனுக்குப் பயமூட்டவே இல்லை. அவர்கள் இருவருள்ளங்களிலும் அந்நியமான மெளனத்தின் ரீங்காரம் ஒலித்துக் கொண்டிருந்தது. அவர்கள் உரையாடலால் கூட உடைபட்டு விடாத மெளனமாக அது தோன்றியது.

ஜின்னா பாபாவின் வசிப்பிடமாக இருந்த பழைய மரத்தின் அடியில் இரு நண்பர்களும் கடந்தபடி இருக்க, சர்ஃபராஸ் திடீரென நின்று அன்வரின் கைகளைப் பிடித்து அவனது எலும்புகளுக்கு வலி சென்று தொடும் வரை அழுத்தினான்.

அன்வர் ஒரு பாதையை விழியாலேயே காட்டிய சர்ஃபராஸைப் பார்த்தான். அன்வருக்கு எதையும் காண முடியவில்லை. இருளில் சர்ஃபராஸ் சுட்டிய இடத்தையே சரியாக கண்டடைய முடியவில்லை.

இந்த முறை சர்ஃபராஸ் அன்வருடைய கைகளை இன்னும் அழுத்தமாக இறுக்கி பின்னோக்கித் திரும்பி தோப்பின் அருகே அவனை இழுத்து வந்து ஒரேநேரத்தில் தடுமாற்றமும் நிலைப்பும் கொண்டபடி இருந்தான். அவன் அன்வரை மகிழுந்திற்குள் தள்ளிவிட்டு, விரைந்து துவக்கிவிட்டு, பொறியினை முழு வேகத்திற்கு முடுக்கிவிட்டு நதிப்பாதையில் செலுத்தி, பிறகு பாலத்தைக் கடந்து கடைசியில் ஊர்ச்சாலைக்கு வந்தான். அவன் நரம்பு வெடிக்கும் அளவிற்கு அச்சத்துடன் ஓட்டிவந்தான். அவனது முகம் நடுக்கத்துடன் இருக்க, முழு உடலும் வியர்வையில் நனைந்திருந்தது.

‘சரிதான், நாம் போதுமான தொலைவிற்கு ஓட்டி வந்துவிட்டோம், இப்போது சொல்.’

சர்ஃபராஸ் மகிழுந்தினை நிறுத்திவிட்டுச் சொன்னான் : ‘அங்கே ஒரு மனிதன் இருந்தான். அவன் தோப்பின் மரங்களிடையே இருந்த ஒற்றையடிப் பாதையில் குனிந்து நின்றிருந்தான். அவன் தன் கையில் ஆயுதத்துடன் நின்றிருக்க, அதன் முனையோ தரையினைத் தொட்டுக் கொண்டிருந்தது.’

பிற படைப்புகள்

Leave a Comment