கிழிபடு முகங்கள்
பெரு.விஷ்ணுகுமார்

by olaichuvadi

 

தோல்வியடைந்த தயாரிப்பு முறைகள் – 01, 02, 03

01

காகிதங்களைப் பற்றி எடுத்துரைக்கையில் அதை உறுப்புகளற்ற மனிதனாக கூற விழையும் அஷ்ரப்-ன் விவரிப்புகள் மிருத்யூர்மனுக்கு பயனற்றதாகவே தோன்றும். காகிதத்தின் தன்மையே பேதமற்ற சரிசம நிலம்தான். அது தன்மீது நிகழ்த்திக்கொள்ளும் தருணங்களே வரலாறு, அது தன்மீது எழுதிக்கொள்ளும் நிகழ்வுகளே புனைவுகள், அதன்மீது குறித்துக்கொள்ளும் தகவல்களே சட்டதிட்டங்கள். உண்மையில் எழுதப்பட்ட கருத்துக்கள் பொருட்டல்ல. எந்த நிறத்தில் என்பதுதான் விவாதத்திற்குரியது. உறுதிசெய்யப்படாத புரளிகளால் இழுத்து மூடப்பட்ட காகித ஆலையில் தினமும் பாண்ட் காகிதங்களை தயாரிக்கும் பிரிவில் பணிபுரிந்தவர் மிருத்யூர்மன். குறிப்பிட்ட அந்நாளுக்கு முந்தையதினம் ஏற்றுமதி செய்யவேண்டிய காகித பண்டல்களை பத்திரப்படுத்திவிட்டு அதன்மேல் பாதுகாப்புத் திரையால் மூடிவைத்துச் சென்றதுவரை தயாரிப்புப் பிரிவுகளின் மேற்பார்வையாளராக அவரே அருகிலிருந்து கவனித்துக்கொண்டார்.

யாரும் எதிர்பாராத விதமாக மூடிவைத்துச்சென்ற காகிதங்கள் அனைத்திலும் எழுதப்பட்ட வித்தியாசமான எழுத்துருக்கள் ஆலையின் வழக்கத்தை நிலைகுலையச் செய்தது. காகிதங்களின் அந்த வினோத செயலுக்கு இப்போதுவரை அவரால் பொருள்காண முடியவில்லை. எழுதப்பட்டிருந்தது யாராலும் புரிந்துகொள்ள முடியாத வேறொரு மொழி. ஒருவேளை வடநாட்டு மொழியாகவும் இருக்கக்கூடுமென்று வந்திருந்த காவலர்களில் ஒருசிலர் கூறிச்சென்றனர். இரவுக்குள் தெலுங்கானாவிற்கு ஏற்றுமதி செய்யவேண்டிய அக்காகிதங்கள் மொத்தத்திலும் எழுதப்பட்டிருந்தது எதோ மந்திரங்கள் போலிருந்தன. அது நிச்சயமாய் தெலுங்கு மொழியுருக்களும் அல்ல. அது யாருக்கு யாரால் எழுதப்பட்டதென யூகிக்க முடியாத அளவுக்கு எல்லா வார்த்தைகளும் சூசகம் கலந்த சிவப்புமையால் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு பயத்தோடு கூடிநின்ற பணியாளர்களில் ஒருவர் வினவினார். உண்மையில் அது சிவப்புமையா? அல்லது இரத்தமா?

உள்ளுணர்வினைத் தூண்டி அகத்தின் அடியாழங்களை கிளறும் மண்வாசம்போல் காகிதங்களின் வாசனை நாளடைவில் உடலில் சுரக்கும் வியர்வையின் மணமாக மாறியிருந்தது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் நினைவில் தேங்கியிருக்கும் அதனோடு ஆலையைக் கடந்துசெல்லும்போதெல்லாம் உடல் மீண்டும் முப்பது வயதுபோல் நடக்க ஆரம்பிக்கும். சந்தையில் மின்திரை ஊடுருவிவிட்ட பின்பாகஒரு வெற்றுக் காகிதத்தில் எழுதப்பட்டதை சரிபார்த்து முறைப்படுத்தும் பழக்கமும் ஏறத்தாழ அனைவரிடமும் குறைந்துபோனது. அனேகமாக ஒரு காகிதம் தான் கசக்கி தூக்கியெறியப்படும்வரை தான் ஏன் பிறந்தோமென்று அறிந்துவைத்திருக்க வாய்ப்பில்லை. பயன்பாடுகளே அவற்றின் தராதரத்தை ஊர்ஜிதப்படுத்தின. பிறந்ததிலிருந்தே படுத்த படுக்கையாவே கிடக்கும் அதற்கு உணர்வு நரம்புகள் எவ்வித வேலையும் செய்யத்தூண்டாமல் வெறுமனே அதன்மீது புரியப்படும் அளவுகோலற்ற வன்முறைகளையும் கண்டுகொள்ளாதபடியான அதன் எதிர்வினை ஒரு துறவியைப் போன்றது. நீண்டுவிரிந்த கழனியைப்போல் என உவமைகூறிய சில நொடிகளில் காற்றில் பறக்க மேலெழும்பியது வெண் நிறத்திலான மெல்லிய உடல்.

எப்போதும் வித்தியாசங்களால் புனையப்பட்ட அதன் போக்கும், அறிதலுக்கு நெருக்கமான அதன் வினோதங்கள் நிறைந்த செயல்பாடுகளும் யாவும் தன்னிச்சையாய் நிகழுமே தவிர மற்றபடி சற்றும் எதிர்பாராதவை. பறப்பதென்பது தன்னைத்தானே எவ்வளவு தூரம் நிலத்திலிருத்து உசுப்பிக்கொள்கிறதென்று அதைக் காணும்போதெல்லாம் புரிந்துகொள்ளலாம்‌. இத்தனைக்கும் வலிந்து எதையும் நிரூபிக்காத அவற்றின் எத்தனங்கள் மிகவும் இலகுவானவை. அதற்கு வேண்டியவையெல்லாம் எழுத்தினூடே நிற்காமல் தூறும் நமது எண்ணங்களே. எழுதிவைக்கும் ஒவ்வொன்றும் அதற்கு இடப்பட்ட ஆணைகள். காகிதங்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பிருந்தே அதைக்குறித்து செய்யப்பட்ட கட்டுக்கதைகளும் நம்பிக்கைகளும் காகிதபுரத்தில் ஏராளம் இருந்தன.

முன்பின் அனுபவமின்றி அவை புழக்கத்திற்கு வந்தபோது அதில் எதைக்கொண்டு எழுதுவது என்பதற்கு நிறையவே யோசித்தனர். ஏனெனில் ஏறத்தாழ தமிழகத்தில் மொழிப்போர் தீவிரமடைந்த காலகட்டம் அது. ஆனால் அன்றாட பழக்கத்தில் ஒரு குடும்பத்திற்குள்ளேயே பயன்படுத்தும் சொற்களின் எண்ணிக்கை ஏதோ குறைந்துகொண்டிருப்பதாக தோன்றியது. அதை ஒருவனின் தனிப்பட்ட மனநிலை என்று சமாதானம் செய்தாலும், உண்மையில் மனிதன் தொடர்ந்து தன்னையே அறியாமல் வார்த்தைகளை கையாள்வதிலிருந்த கவனத்தை இழந்துகொண்டிருந்தான்.

இன்றைய தேதிக்கு தினசரிகளை விருப்பம்போல் மாற்றியமைக்கக் கற்றுக்கொண்ட ஒருவன் அன்றாடம் தன் அனுபவப் பதிவுகளை எழுதிச் செல்வதென்பது சற்று சிரமமான காரியம்தான். மூத்த மேலாளரான மிருத்யூர்மனுக்கும் இது பொருந்தும். ஆலையில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும் பெயரற்ற மொட்டை தாள்களைப் பார்த்துவரும் அவருக்கு சமயத்தில் காகிதங்கள் தன்னைத்தானே எழுதிக்கொள்ளும் என்ற நம்பிக்கை உண்டாகத் துவங்கியது. குற்றம்கூறவோ அல்லது தகவல்களாகவோ வெளியாகும் அறிக்கை நோட்டிஸ்கள் போன்று விபரங்கள் ஏதுமற்று கையில் சிக்கும் காகிதங்களுக்கு அவரால் வேறொரு அர்த்தப்பாடுகளை உண்டாக்க முடிந்தது. ஆலையில் உண்டாகும் கரைபடியா அத்தூய திரையின்மீது ஏதேனும் எழுதப்பட்டிருக்கிறதாவென சோதனையும் நிகழ்த்தத் துவங்கினார். ஏனெனில் காகிதங்களின் சூசகத்தை புரிந்துகொள்ளும் அவரின் திட்டங்கள் பெரும்பாலும் தவறாகவே முடிந்திருக்கிறது. வரவர தினசரி நாளிதழில்களிலும் சில கட்டுரைகளில் பெயர் எழுதப்படாமலேயே வெளியானதைக் கண்டு மிருத்யூர்மனால் எந்த செய்திகளிலும் எவ்வித விபரக்குறிப்புகளையும் கண்டறிய இயலவில்லை. பின்புதான் உணர்ந்தார். தினமும் தான் புழங்கும் காகிதங்களுக்கும், அன்றாடத்தை வரலாற்றாக்கிக்கொண்டிருக்கும் நாளிதழுக்கும் நிறைய வித்தியாசங்களை உள்ளதென. ஏதும் நிரப்பப்படாத வெற்றிடம்போல ரகசியங்கள் நிரப்பியது எதுவுமில்லை. ஆனால் நிரப்பப்பட்ட காகிதங்களும் அவருக்கு புதிர்குறையாதபடியே காட்சியளித்தது.

 நகரத்திற்குள் முதல்முறையாக காலனி ஆதிக்கம் நிலைபெற்ற காலகட்டத்திலிருந்து தற்போதைய சான்றிதழ் காலகட்டம்வரை காகிதங்கள் தமது மாறுபாடுகளை மிகவும் திட்டமிட்டே காரியம் சாதித்துக் கொள்கிறது. முடிந்தவரையில் அதன் ஆதிக்கத்தை நேரடியாக செலுத்தாமல் தம்மை ஸ்பரிசிக்கும் மானுடர்களை கைப்பாவையாய் இயக்கவும் சூத்திரம் அறிந்தது. நாளடைவில் அது பழகி அதன் நெளிவு சுழிவுகளோடு ஒத்துப்போவதற்குள் எழுத்துக்கூட்டி வாசித்துக்கொண்டிருந்த கிராமங்கள் காட்சியில் இடம்பெறும் நகரங்களாகியிருந்தன. ஆனால் மிருத்யூர்மனின் பாட்டனார் காலத்தில் இது சற்று கடினமானது.  ஓலையில் எழுதுவதற்கான கருவிகளைத் தேடி அலைந்ததே பெரும் சவாலாக இருந்திருக்கக்கூடும். ஊசிமுனை ஒன்றே உருவாக்கவும், உடைக்கவும் உதவுமென்ற அவரின் இரும்புத் தத்துவம் எழுத்தாணியைப் பரிந்துரைத்தது. கிட்டத்தட்ட சிலை செதுக்குவதைப்போல தமக்கும் கருவியளிக்கப்பட்டதாக எழுதுகையில் அவருக்கு தோன்றியிருக்கலாம். முன்பின் மொழியாக நடந்துபழகியிராத எழுதுகோலின் கால்விரல் நகத்தால் சுரண்டி வரையப்பட்ட எழுத்துக்கள் கோணலாகத்தான் உருவானது. ஆனாலும் தொடர்ந்து அதைச் செய்தனர். இங்கு நினைவில் வைத்துக்கொள்வதற்கு சிரமம்கொண்டே பல மாறுதல்களை சந்தித்திருக்கிறோம். உண்மையில் நமது தேவையை முழுவதுமாக பூர்த்திசெய்யாத ஒன்றைக் கண்டறிதலே, அதைவிட நேர்த்தியான புதியவொன்றைக் கண்டறிவதற்கான வழிகோரல்.

02

ஒன்றையொன்று அடையாளம் காண முடியாததுபோல் பரிசுத்தமாய் வடிவமைத்த காகிதப் பரப்பென பிரகாசமாயிருந்தது அஷ்ரப்-ன் முகம். ஆலையில் பணிவேண்டி வந்தவனை அன்று நீண்ட நேரமாய் ஆலையின் வாசலில் காத்திருக்கச் செய்தது மிருத்யூர்மனின் உள்நோக்கமே. அஷ்ரப் மாதூரியின் செல்ல மகன் என்பதால் சற்று மந்தப்புத்திக்காரன் என்பதையும் அவர் அறியாமலில்லை. தன் தந்தையின் முகத்தை பிறந்ததிலிருந்தே பார்க்காத அஷ்ரப்-ன் பரிசோதனையே ஆலையின் கதவுகளை திறவாமல் போனதற்குக் காரணமென தற்போதுவரை யாருக்கும் தெரியாது. வந்தவுடனே காகிதங்கள் அவனது கையொப்பத்திலிருந்து அவன் சுபாவத்தை உளவு பார்க்கத் துவங்கிவிட்டன. பணிக்குவந்த முதல்நாளே தனது பிராணியுடன் வந்திருந்த அஷ்ரப்-க்கு அன்று அதுவே தலைவலியாகிப்போனது. அந்த மிருகம் ஆலைக்குள் செய்த அட்டகாசத்தால் அவன் முதல்நாளே விசாரணைக்குள்ளானான். அன்றுதான் மிருத்யூர்மன் முதல்முறையாக கோபம்கொண்டதை அனைவரும் கண்டனர். அத்துணைபேர் முன்னிலையிலும் அவர் தன்னைநோக்கி பிரயோகித்த கழுதை என்ற வார்த்தையை அஷ்ரப்-ஆல் தாங்கிக்கொள்ள இயலவில்லை. ஆனால் மறுநாளே அதற்காக அவனிடம் மன்னிப்பும் கேட்டபோது பணியைவிட்டு விலகுவதாக இருந்த அவனது முடிவு மாறியது. உயர்தர ஸ்கிரிட்டா வகை காகித தயாரிப்புப் பிரிவில் அவனை மேல்பார்வையாளராக நியமனம் செய்தவர் அன்று ஆர்டர் செய்ய வந்திருந்தவர்களோடு சீக்கிரமே ஆலையிலிருந்து அகன்றுவிட்டார்.

அந்தவகைக் காகிதங்கள் விலை அதிகம் என்பது ஒருபுறம் இருந்தாலும் அதுபோலான ஆர்டர்கள் புறநகரில் அதிகமாக வருவதில்லை. காகிதங்களில் இருக்கும் பேதங்களை புரிந்துகொள்வதற்கு அஷ்ரப் ஏகப்பட்ட கதைகளையும், காகிதங்களின் உருவ பரிமாணங்களையும் தெரிந்துகொள்ள வேண்யிருந்தது. சிலநாட்கள் கழித்து ஆர்டர் கேட்க வந்தவர்கள்தாம் அந்த சந்தேகத்திற்குரிய நபர்கள். ஏறத்தாழ இரட்டையர்களைப்போலிருந்த அவ்விருவிருடத்திலும் எதையோ பறிகொடுத்த சோகம் அவர்களின் முக ஜாடையை மறைத்திருந்தது. அவர்கள் கேட்டுவந்த ஸ்கிரிட்டாவகை காகிதங்களில், அவர்கள் கூறிய அளவைக்கொண்டு நிச்சயம் ஒரேயொரு புத்தகத்தை மட்டுமே வடிவமைக்க இயலும். தரவேண்டிய தொகைக்கும் அதிகமான அளவில் அவர்கள் ரகசியமாய் தரமுனைந்தபோது எழுந்த சந்தேகம், மூன்று மடங்கு அதிகமான முன்பணத்தை வழங்கியபோது இன்னும் இறுக்கமானது.

காகிதங்கள் வெறும் தகவல்களின் சேகரிப்பான் மட்டுமன்று. மாறாக அவர்களுக்கு நம்பிக்கையை சுமந்திருக்கும் கலனாகவும் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறது. அவ்விரு நபர்களும் தாங்கள் கொண்டுவந்திருந்த நெகிழிக்கலனை அவனிடம் நீட்டி அதில் தற்போது அவர்களோடு இல்லாத தந்தையின் குறுதியும் அத்துடன் அவரது அஸ்தியும் கலந்திருப்பதாக உரைத்தபோது கலனை பற்றியிருந்த அஷ்ரப்-ன் கை நடுக்கமுறத் துவங்கியது. தயாரிப்பு முறைகளில் காகிதங்களை கூழ்ம நிலையிலிருந்து தாள்வடிவத்திற்கு பதப்படுத்தும் நுட்பத்தின்போது அவர்கள் அளித்த கலவையைச் சேர்க்கும்படி கூறினர். காகிதங்களை உயிரூட்டுவதற்கு இதுவுமொரு வழிமுறை. அதன்பிறகு தங்கள் தந்தையின் குறுதி கலந்த அக்காகிதங்களில் தன்னிச்சையாய் இடம்பெறும் வாசகங்கள் அவருடையதாக மாறுமென்ற அவர்களின் நம்பிக்கை அஷ்ரப்-க்கு கேலியாகப் பட்டது. கண்ணில்படாது அருவமாகிவிட்ட தந்தையை அணுகுவதற்கு தாங்கள் முயற்சிக்கும் கடைசிவழி இதுவே எனவும் தங்களுக்கு இந்த யோசனைகூறிய ஒரு மேல்நாட்டு அறிஞரைப்பற்றியும் கூறிக்கொண்டிருந்தனர். சமயங்களில் இந்த முறையின்மூலமாக உருவாக்கும் காகிதங்களின் வழியே தொலைந்துபோனவர்களோடு அல்லது தொலைந்துபோனதாய் நம்பப்படுகளோடும் பேச இயலும்.  முதலில் அதிகாரத்தொனியில் ஆரம்பித்த  அவ்விருவரும் இந்த வேலைக்கு உடன்பட மறுத்த பல காகித ஆலைகளை குறிப்பிட்டு அஷ்ரப் இடம் மன்றாடத் தொடங்கியதும் அவனுக்கு எதுவும் புரியவில்லை.

நண்பனின் மனைவி மெர்லினுடைய பிராத்தனையும் அவள் தினமும் பைபிள் வாசிக்கையில் சத்தமிட்டு வேறுயாரோ ஒருவருக்கு வாசித்துக் காண்பிப்பதைப்போல் செய்யும் காரியங்களையும் நினைத்துக்கொண்டான். அவளின் தொனி நீண்டநாட்களாக அவனுக்குள்  உறுத்தலாகவே இருந்தது. வெளிப்படையாக இதை அவளிடம் கேட்டபோது “இந்த காகிதங்களில் எழுதப்பட்டிருப்பது இயேசுவின் வார்த்தைகள். அதன்மூலம் நான் அவருடனே பேச முயல்வதாகக்” கூறினாள். இதுபோலான நம்பிக்கைகளால் மனம் எதிர்மறையாய் சஞ்சலப்படுவதில்லை என்றாலும் அவ்விருவரின் கூற்றை முற்றாகவும் நிராகரிக்கவும் இயலவில்லை. யோசித்து பதில்கூறுவதாய் அவ்விருவரையும் அனுப்பிய நாள்முதலாகவே அதுபற்றிய எண்ணங்களே அவனுக்குள் ஓடிக்கொண்டிருந்தன. ஏதோ பெருந்தவறுக்கு இழுத்துப்போகும் துவக்கநிலை காரியமாய் திரும்பத் திரும்ப அது கண்முன்னே இடைமறித்தன. அவர்கள் கூறியது ஒருவேளை உண்மையெனில் தன் தந்தையைப் பற்றி அறிந்துகொள்ளவும் வாய்ப்புள்ளதெனவும் அஷ்ரப்-க்கு தோன்ற ஆரம்பித்தது. அச்சமயம் அவன் பார்வையில் மேசையில் வைக்கப்பட்ட காகிதங்கள் வெண்மைநிர்வாணத்தில் தன் சுயநினைவு மீள முடியாதபடி கிடந்தன. அதன்மீது குழம்பிய மனநிலையில் தன்போக்கில் கிறுக்கிய ஓரிரு வரிகள் வேண்டுமென்றே அழகாக இருந்தது. அவற்றின்மீது வழிந்த பேனாவின் துளிகள் கூட்டுப்பிரார்த்தனையாக தம்மை உறையவைக்க எதேவொரு உருவத்தை வரைந்திருப்பதுபோல் தெரிந்தது. சாளரத்தின் வழியே எட்டிப்பார்த்தான். அப்போது ஆலையின் பின்புறம் ஒரு உடலின் குதத்தைப்போல வெளிநீட்டிய கழிவுநீர் குழாயின்வழியே வரும் ஆலைக்கழிவு சிவப்புநிற சாயத்தில் புகையோடு வந்தது.

03

இப்போது மட்டுமல்ல. எந்தவகையான கிறுக்கல்களையும் ஏற்றுக்கொள்ளும் காகிதங்கள் இறுதியில் காட்டுவது அந்த வெள்ளைத்திரையில் உறையவைத்த ஒரு காட்சியைத்தான். நண்பர்கள் சிலரின் தினசரி கடிதங்களையும் நாட்குறிப்பையும் படித்தவர் என்கிற முறையில் கூறவேண்டுமெனில் மனவோட்டங்களை அசைத்து எழுதவைக்கும் மையமாக காகிதங்களின்மீது எழுதப்படும் சம்பவங்களில் எப்போதும் கடந்தகாலமே எஞ்சியிருக்கிறது. ஒருவேளை காட்சி என்பதே கடந்தகாலமாகவும் இருக்கலாம். நினைவில் நிற்கும் காட்சிகள் நிகழ்காலத்தில் இல்லையெனில் நடக்கும் சம்பவங்களும் நிகழ்காலத்தில் இல்லை. பலவிதமான எழுதுகோல்களால் திக்கித் திக்கி எழுதும் பேனாக்களை தெளித்து தெளித்து எழுதப்படும் காகிதங்களில்தான் நிறம்கொண்ட மழை என்பதற்கு சாத்தியமாகிறது. ஆனால் நிஜத்தில் பெரும்பாலும் நனைந்துபோன ஒரு  காகிதத்திற்கு அதன்பின்பு அதற்கான வாழும் உரிமையே மறுக்கப்படுகிறது.

நித்தமும் தன் வயிற்றிலோ கழுத்திலோ அல்லது நெத்தியிலோகூட மழை என்ற வார்த்தை எழுதப்பட்டுக்கொண்டிருப்பது தெரியாமலேயே அது நனைந்துகொண்டிருக்கிறது. காகிதத்திற்கு தெரியாது மழை என்பது இப்படியும் பெய்யலாமென. நிறங்களால் தம்மை வரலாற்றின் குறியீடாகவும் காண்பிக்கும் ஆற்றல் கொண்ட அவை தன் இரண்டு கைகளையும் நீட்டி எல்லா புள்ளிகளையும் இணைப்பதைப்போல தனித்தனி எழுத்துக்களை ஒன்றோடொன்றாக இணைத்து மொழியாக நம்மிடம் காட்டுகிறது. எழுதிப் பழகியபின்பாக ஓவியங்களைப் போலவே மொழியில் உலவும் எழுத்துருவும் வெவ்வேறு நிறங்களில் உருவாகத் துவங்கியது. சிவப்பு, நீலம் கருப்பு என எந்த நிறமானாலும் வர்ண-பேதமின்றி உள்வாங்கும் தன்மைகொண்ட இக்காகிதங்கள் சிவப்பின் மூலம் அதிகாரத்தை மற்றும் எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்கும் தீரத்தை பிடிவாதத்தை சுட்டுகின்றது.

ஆலையில் ஒரு ஓட்டை நாற்காலியில் வீற்றிருக்கும் மிருத்யூர்மனுக்கும் சிறுவயது முதலாகவே சிவப்பின்மீதான ஈர்ப்பு அதிகம் இருந்தாலும், அது கடைசியில் அவரை வந்தடைய பதினாறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் காகிதங்களைப் பொறுத்தவரை நிறத்தில் ஒன்றுமில்லை. யார் பயன்படுத்தினாலும் ஒரே எழுத்துதானே.

காகிதங்கள் தாம் சொல்ல நினைப்பதை தானே எழுதிக்காட்டும் என்று வந்திருந்த அவ்விருவரில் ஒருவன் கூறியிருந்தான். மற்றொருவனோ ஒருவேளை காகிதங்களின்வழியே கண்ணுக்குப் புலனாக அதேசமயம் நம்மோடு பேச விழைகிற நபர்களும் எழுதியிருக்கலாம் என்றான். அஷ்ரப் கூறிய வார்த்தைகள் பிரக்ஞையாக அவருக்கு நினைவுக்குள் பதிந்துபோக மிகவும் கவனமாக நோட்டமிட்டார். அதன்பிறகு மிருத்யூர்மன் தனது நாட்குறிப்பில் சில நாட்கள் எழுதாமல் விட்ட இடங்களில் அவரது கையெழுத்தில் கூடுதலாக எழுதப்பட்ட சில வாக்கியங்களை வாசிக்க நேர்ந்தது. அது நிச்சயம் அவரே எழுதிக்கொண்டதல்ல.  

ப்ளாஸ்டிக் சொற்களை நனையச் செய்தல்  – 01, 02, 03

01

காகிதங்களுக்குப் பேய் பிடித்துவிட்டது என்ற கொஞ்சமும் நம்பத்தகாத கதைகளே ஆலை அழிந்துபோனதற்கு மற்றொரு காரணம் எனலாம். அப்படியேனும் ஆலையின் பெயர் பெரிதாகப் பேசப்படும் என்று சிலர் கண்டுகொள்ளாமல் இருக்க அறிவுரை கூறியதும் நினைவிருக்கிறது‌. எதிர்பாராத விதமாக ஆலையில் இதுபோன்ற செயல்கள் அதிகமானதும் அல்லது அப்படியான வீணான பயத்தாலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் இளைத்துபோனது. பயத்தின் வெளிப்பாடாய் அன்று நடந்த சம்பவத்திற்கு ஏராளமான ஊகங்கள் தம்மை இதனோடு இணைத்துக்கொண்டன. எனில் பூதங்களைத் தவிர சிவப்பு மையில் எழுதுவது யாராக இருக்கும்.

ஊர்க்கோயிலில் பூசாரிகள் துண்டுக் காகிதங்களில் குங்குமத்தைத் தடவி வேண்டுதலைக் கேட்டெழுதி சுருட்டி வீசுவர். வீசிய காகிதத்துண்டுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு அக்காகிதத்தில் என்ன எழுதப்பட்டதோ அது அப்படியே பலிக்கும் என்றொரு நம்பிக்கை. சிலர் அது கடவுள் எழுதியதாய் நம்பியிருக்க அஷ்ரப் மட்டும் சிலநாட்களாய் அது காகிதங்கள் தானாகவே எழுதியது எனக் கூறிவந்தான். சிவப்பு நிறம் எதிர்காலத்தையும் குறியாக காட்டவல்லது. மிருத்யூர்மனோ, பூசாரி அக்காகிதங்களில் ஏற்கனவே மெழுகை வைத்து எழுதி அதன்மீது குங்குமத்தைப் பூசி ஏமாற்றுகிறார் என்பார். அவர் கூறியதைக் கேட்க யாருக்கும் செவியில்லை. துவக்கத்தில் இதுபோன்ற ஏமாற்றுவேலைகளை முற்றாக மறுத்தவர்களுள் மிருத்யூர்மனும் ஒருவன் என்றாலும் மாதூரியைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் மிச்சமிருந்த உறுதியும் உடைந்தது.

அரபியில் வசிக்கும் தன் கணவனால் இங்கிருந்தபடியே கருவுற்ற மாதுரி தனது சுகப்பிரசவத்திற்காக எழுதிப்போட்ட துண்டுச்சீட்டின் வேண்டுதல் பொய்த்த கதை நீண்டநாட்கள் பரபரப்பாய் பேசப்பட்டது. அரபியில் தன்னோடு உறங்கும் எந்த பெண்ணையும் அவர்தன் கற்பனையில் மாதுரியாக பாவித்துக்கொள்வதான நம்பிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாதுரி இங்கிருந்தபடியே சூல்கொள்வதும் பின் சில நாளிலேயே அதை அழிப்பானைக் கொண்டு அழித்தார்போல தடையமே இல்லாமல் போகும். அன்று அவளுக்கே தெரியாதபடி கலைந்துபோன மூன்றுமாதக் கருவின் நிறமும் சிவப்பாகவே இருந்தது.

அரேபியர்களுக்கு காகிதங்கள் என்பது ஒரே நிறத்திள் பாலைவனத்தை நினைவூட்டும் மாதிரி வடிவம்போன்றதென மிருத்யூர்மன் அடிக்கடி கூறியிருக்கிறார். இரண்டுமே எளிதில் கிழிக்க முடியாதது. ஒருவேளை அரேபியர்கள் சீனாவின் மீது படையெடுக்கவில்லை என்றால் அவர்களால் கடைசிவரைக்கும் ஒட்டகத்தின் தோல்மீதுதான் எழுதிக்கொண்டிருக்கக்கூடும் என்பார். அப்போது அஷ்ரப் உயிரோடு இருக்கும் ஒட்டகத்தை நினைத்துக்கொள்வான். வெள்ளைத்தாளில் வரையப்பட்ட ஒட்டகமும், நீள் பாலைவனத்தில் நடந்துபழகும் ஒட்டகமும் ஒரே நிறத்தின்மீதுதான் நடந்துபோகின்றன. ஒரேயொரு வித்தியாசம்தான். பாலையில் அதன் பயணத்தின்போது மழை வந்தால் ஒட்டகம் அதுவரைக்கும் நம்பிய நிறம் மட்டுமே அழிந்துபோகும். ஆனால் அதே மழை காகிதத்தில் பெய்தால் பாலைவனமே காணாமல் போகும்.

மிருத்யூர்மன் மேலாளராக பணியேற்ற புதிதில் காகிதபுரத்துக்கு வந்தவள் மாதுரி. காதல் திருமணம் என்பதால் மாற்றுமதம் என்றாலும் அவளுக்கு குங்குமம் வைத்துக்கொள்வது பிடித்திருந்தது. அந்த சிவப்புநிறம் அவள் முகத்தை ஈர்க்கவைக்கும் ரம்மியத்தின் குறியீடு. அரேபியாவிலிருந்து தனக்காக அனுப்பியதாக ஒரு மிகச்சிறிய வைரக்கண்ணாடியால் முகம்பார்க்கத் துவங்கியபின்பு மாதுரி அதன்பின்பு முன்பைவிட அழகானதுபோலிருந்தாள். அந்த கதை ஊருக்குள் பரவியபோது மாதூரியின் கண்ணாடியில் முகம் பார்த்தால் வயதான பழைய முகம்கூட பொலிவாகும் என்று திரிந்தது. அந்த கண்ணாடியில் ஒரேயொருமுறை தம் முகத்தைப் பார்த்துவிடவேண்டி அவளோடு நட்பானவர்கள் அந்நாளில் அதிகமாகினர். அதுவரை ஊரில் யாருக்கும் முகமில்லை என்பதுபோலவும் மாதுரியின் கண்ணாடியே தமக்கென்றொரு முகத்தை தானமளிக்குமென்றாகியது. தன்னுடலை சீராக அலங்கரித்தபடி அந்த குறுங்கண்ணாடி முன்பாக மணிக்கணக்கில் உரையாடும் அவளுக்கு எதிரில் தெரிவது தன் கணவனின் முகம்போலிருந்தது. இதுநாள்வரை தானும் தன் கணவன் மட்டுமே பார்த்திருக்கும் இந்த கண்ணாடி வேறு யார் முகத்தையும் காட்டாது என பகுமானமாய் அவள் பதில்கூறியதுமுண்டு‌.

அந்த கண்ணாடியில் தனது முகத்தையும் புனையவேண்டுமென்ற ஆசையால் ஒரு எதேர்ச்சையான தருணத்தில் தன்னை மாதுரியிடம் அறிமுகம் செய்துகொண்டார் மிருத்யூர்மன். உடன் ஊருக்குள் எல்லோரும் முயன்றும் முடியாத செயலை நிகழ்த்துக்கொண்டிருக்கும் பெருமைவேறு. மாதுரியோ தன்னிடம் அந்த கண்ணாடி இல்லை எனவும், யாரோ அதை களவாடியதால் தனது முகத்தின் அழகிய ஜாடையொன்று பறிபோன கதையினையும் வருந்தக்கூறினாள். மிருத்யூர்மன் நம்பவில்லை. அவள் வேண்டுமென்றே பொய்யுரைப்பதாய் எண்ணிக்கொண்டு அவள் தன் வீட்டுக்கு அழைத்த ஒருநாள் திட்டமிட்டபடி அக்கண்ணாடியை குற்றவுணர்வோடு திருடியிருந்தார். அதைக் கையில்வைத்துப் பார்க்க வைரம்போல தெரியவில்லை. எடையற்று, மென்மையாக கண்ணாடியைச் சுற்றி மறைக்கப்பட்ட நெகிழிவண்ண காகிதங்கள் அதை மேலும் அழகூட்டின.

அந்த கண்ணாடி இப்போது மூன்றாவதாக ஒரு முகத்தை மிருத்யூர்மனால் உள்வாங்க நேர்ந்தது. அதன்பிறகு அவளை மீண்டும் சந்தித்தபோது அந்த கண்ணாடியைப்பற்றி அவன் வினவவில்லை‌. ஆனால் மிருத்யூர்மன் கேட்காதபோதும் மாதுரி கூறினாள் அந்த கண்ணாடியோடு தனது முகமும் களவு போய்விட்டதென. ஒருவேளை தான்தான் அதைச்செய்ததென அவள் கண்டறிந்துவிட்டாளோ என்கிற சந்தேகம் அவனுக்குள் தோன்ற அதை திரும்ப கொடுத்துவிடவும் சிந்தித்தான். அப்போது அவள் ரகசியமாக,” நான் ஊர்மக்களிடம் பொய்கூறினேன். அந்த கண்ணாடியில் வேறொருவராலும் முகம்பார்க்க இயலும்” என்றாள். மிருத்யூர்மனுக்கு நெஞ்சம் உறுத்தியது. அங்கிருந்து கிளம்பும்போது நாளை நிச்சயம் அந்த கண்ணாடியை திரும்ப ஒப்படைத்து மன்னிப்புகூற முடிவுசெய்தவனைக் கண்டு அவள் தீர்க்கமாகப் புன்னகைத்தாள். அதன்பிறகு அந்த கண்ணாடியைப் பற்றி இருவரும் மறந்துபோயினர்.

 02

 மிருத்யூர்மன் தானறிந்தவரை காகிதங்கள் எப்போதும் வினோதமான உயிரினங்களில் ஒன்று. வேண்டுமென்றே தவறாக எழுதி தன்னை கசக்கியெறிந்துகொள்ளும். வெற்றுமுகமென விரிந்து செல்லும் அதைக்கொண்டே எறிந்தவனின் மனநிலையை கண்டறிந்து விடலாம். மேலும் அது இதுவரையில்லாமல் புதிதாய் யார் நம்மை கவனித்துவிடப்போகிறார், பொருட்படுத்தப்போகிறார் என்ற மம்மதையில் விருப்பம்போல் காற்றில் பறந்து விளையாடும். எப்போதும் இவை தம்மை பற்றிய பகுமானங்களை தம்மீது எழுத வைத்தே வேடிக்கைப் பார்க்கின்றன. அதிலும் அப்பெரும் புகழுரைகளெல்லாவற்றையும் பலவித கோடுகளால் பிரித்துக்காட்டி அல்லது அக்கோட்டுக்குள் அடக்கிவைக்கும் அவைகளிடம் பிடிக்காத ஒன்று உண்டெனில் அது எழுதிவைத்த ரகசியங்களை யார் பிரித்துப்படித்தாலும் காண்பித்துவிடும். அளவுக்கதிமாக பெருகிவிட்ட தலைமுறையில், ஒரு சிந்தனையாளின் காலடியைச் சுற்றி சில்லுச்சில்லாய் சிதறியிருக்கவும் பழகிக்கொண்டன. அந்த சகோதரர்களின் கோரிக்கைக்கு உடன்படுவதா வேண்டாமா என குழம்பியபடி நடமாடும் அஷ்ரப்-ன் உள்ளங்கையிலிருந்து தாவிக்குதித்திருக்கும் அவை எளிதில் கிழிந்துவிடக்கூடிய சதையாலான உயிரினங்கள். கசக்கி எறியப்பட்டு மாறிக்கொண்டிருக்கும் அதன் உருண்டை முகம் உணர்ச்சிவசப்படலில் தன் முகச்சுருக்கத்தைக் காண்பிக்கிறது.

இவ்வளவு நடந்தேறிய பின்பும் இப்படியான யாராலும் கண்டுகொள்ளாதபடாதவொரு ஈனப்பிறவியை தனக்கு ஏனளித்தாயென்று அது யாரிடமும் புலம்புவதில்லை. ஆகையாலே அது மனிதனிலிருந்து எப்போதும் வேறுபடுகிறது. கசக்கிய காகிதங்களை விரித்து பார்க்கையில் காகிதங்கள் தம்மீது வரையப்பட்ட கோடுகளையும் எழுத்துக்களையும் விரிக்கிறது. ஆனால் கசங்கிய காகிதத்திலிருக்கும் எழுத்துப்பிழைகளை என்னசெய்வது…? இந்நேரம் அதுவுமல்லவா கசங்கியிருக்கும். விரிவதெனில் அவற்றிலுள்ள வரிகள் பிழையுடனேயே விரிகின்றன. எனில் சிறிய தவறுகள் பெரிய தவறாக அளவு மாறுகிறது. இப்படித்தான் பிழையாக ஒழுங்கின்றி வரையப்பட்ட  சிறு சிறு பாறைகள் வளர்ந்து விரிந்து அவ்வூரில் சீரற்ற மலைகளாக உருப்பெற்றன.

அரசின் கண்காணிப்பிலும் ஊர் மக்களின் முயற்சியிலும் துவங்கப்பட்ட ஆலையின் மேற்பார்வை அப்போதிருந்த வெள்ளையரசின் சில அலுவலர்களாலும்   மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பாதி வரிப்பணத்திலிருந்தும் மீதி ஆலையில் வேலை பார்க்கப் போகிற மக்களின் பணத்தையே பயன்படுத்திக் கொள்வதாக முடிவுசெய்தனர். குளத்தினோரம் இருந்த பரந்தவெளியை ஆலைகட்டுவதற்கான தகுந்த இடமாக தேர்வுசெய்த அரசு பிற்பாடு அங்கு நிலவிய சில சிக்கல்களைக் களைவதில் மிகவும் சிரமம்கொண்டதாகக் கூறப்படுகிறது. சரியாக குளத்தினோரம் கட்டப்படுவதில் ஏகப்பட்ட நடைமுறை இடையூறுகள் துவக்கம் முதலாகவே நிகழ்ந்துகொண்டே இருந்தன. ஆலை துவங்கும்போதே அருகிலிருந்த மரத்தினோரம் ஒரு பெரியவர் தற்கொலை செய்துகொண்டது முதல் மக்களின் நம்பிக்கையில் பெரும் பலவீனம் உண்டானது. ஆனாலும் சில சிரமங்கள் கடந்து வெற்றிகரமாக காகிதபுரத்தில் கட்டிமுடிக்கப்பட்ட ஆலை பலருக்கும் வியப்பாக இருந்திருக்கும்.

இவ்வாறான தடைகளுக்கு அப்பால் அமைந்துள்ள காகிதத் தொழிற்சாலை அந்தக் காலத்திலேயே அதி உயர்தரத்தில் கட்டப்பட்டு அங்கிருந்து மட்டும் ஏறத்தாழ 10% வருமானம் அரசுக்கு கிடைத்திருக்கிறது. அவர்களால் மேற்கொண்டு இதை முன்னேற்றவும் கிடைக்கும் வருமானத்தை மாத மாதமாக அதிகரிக்கவும் ஏற்பாடுகள் செய்ய நிறைய மக்களை அத் தொழிற்சாலைக்கு கட்டாயமாக வர வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஏராளமான குழந்தைகள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இதை ஊர்மக்கள் ஆலை கட்டுவதற்கு முன்பே எதிர்பார்த்திருக்க வேண்டும். ஒப்பந்தத்தின்படி ஆலையின் பொறுப்பாளரான அன்றைய ஊர் தலைவர்கள் தனது சொத்திலிருந்து செலவழிக்கவேண்டிய தொகையை ஊர்மக்களிடமிருந்தே வலுக்கட்டாயமாக வசூலித்துள்ளார். மக்களும் ஏன் எதற்கென்று கேள்வியெழுப்பாமல் அரசாங்க காரியம் என்பதால் உடனே வாரிவழங்கியிருக்கின்றனர். அருகிலுள்ள பொன்னிமலையிலிருந்து ஆலைக்குத் தேவையான மரங்களை வெட்டிச் எடுத்துவரவும் தனி வேலையாட்கள்கொண்ட குழு பணியமர்த்தப்பட்டது. ஒவ்வொரு மரத்திலிருந்து செய்யப்படும் காகிதங்கள் ஒவ்வொரு தரம் என்பதால் அவர்கள் கொண்டுவரும் மரத்திற்கு ஏற்ப கூலியை அதிகமாக்கிக் கொடுத்ததாகவும் கூறுகின்றனர். கிட்டத்தட்ட ஆலை நடந்த நாற்பது ஆண்டுகளுக்குள் காளம்பாடியின் தெற்கிலிருந்த மலையின் ஏராளமான மரங்கள் சுத்தமாக வழித்தெடுக்க காண்பதற்கு மொத்த மலையும் மழிக்கப்பட்ட தலைபோல் ஆனது. அதாவது கோடுகள் எதுவும் இல்லாத காகிதங்கள்போல.

03

தந்தையின் மூலமாக பதினாறு வயதில் அறிமுகமானது ஆலையின் மேற்பணி. மிருத்யூர்மனுக்கு காகிதங்களுக்கென்றே இருக்கும் வரலாற்றை அறிந்தாகொள்வதிலும் ஆர்வம் இருந்தது. அந்த சாய்லூனின் பெயரை மௌனமாய் முணுமுணுக்கும் காகிதங்களின் நோக்கங்கள் எல்லாம் பயன்பாடுகளால் மட்டுமே முழுமையடைந்ததாக அவர் முழுமையாக நம்பியிருந்தார். மிருத்யூர்மனின் அப்பா காலத்தில் வெள்ளை வெளீரென பளிச்சென்று இருக்கும் காகிதங்கள் விலை உயர்ந்தவை. இதே ஆலையில்தான் அவரும் அப்போது மாதக்கூலி. அன்றைய தேதியில் காகிதங்கள் வாங்க கொஞ்சம் செலவானதும் உண்மைதான். சிலேட் அல்லது பழுப்புநிற காகிதங்களும் புழக்கத்தில் இருந்தன. அதற்கு இன்னொரு பெயரும் இருந்தது. சாணிப்பேப்பர் அல்லது மையுறிஞ்சி காகிதம். அவற்றை கணிசமாக பயன்படுத்துவதில் பெருஞ் சிக்கலொன்றும் இருந்தது. அதன்மீது எழுதும் வார்த்தைகளை பட்டும் படாமல் கவனமாக எழுதவேண்டும் இல்லையெனில் மறுபக்கம் அப்படியே தெரிந்துவிடும்.

அதாவது நேற்று தாம் நடத்திய ரகசிய ஒப்பந்தமொன்று மறுநாளே அனைவருக்கும் தெரிந்துவிடுவதைப்போல. அதன்படி பழுப்புநிறக் காகிதத்தில் எழுதிவந்த அப்பாவுக்கும், உயர்தர காகிதத்தில் எழுதிப்பழகிய அம்மாவுக்கும் காதல் பிறந்தது. மிருத்யூர்மன் பிறப்பதற்கு மூன்றாண்டுகள் முன்புதான் இவ்வூருக்கு குடிபெயர்ந்தனர். காகிதங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் அவர்மூலம்தான் அறிமுகமானது. இறுதியாக அவர் தற்கொலை செய்துகொண்டபிறகு ஆலையில் மிருத்யூர்மனின் பணியிடம் உறுதியானது. தவிர ஏகப்பட்ட பட்டாசு தொழிற்சாலைக்கு காகிதங்களை நீள் உருளை வடிவில் உருட்டி செய்வதும் ஊருக்குள் சிறுதொழிலாக இருந்தது. அதில் பலவிதமான நிறத்தில் (சிவப்பு நிறமும் அடங்கும்) சாயமேற்றி வெடிபொருளாக மாற்றும்போது காகிதங்கள் சத்தம்போட்டு பேசவும் கற்றுக்கொண்டன.

மிருத்யூர்மனும் தன் இளமைக்காலத்தில் சில காகிதங்கள் காதல் கடிதங்களாக மறைந்து பதுங்கி சென்றதையும், மற்றொரு பக்கம் புரட்சிகர வாசகங்களை சுமந்து போராட்டத்தை முன்னெடுத்ததையும் கடந்தே வந்தார். கோடுகள் கண்டறியப்பட்ட நிகழ்வே காகிதங்களிலும் பாலினத்தை (ஆண்/பெண் (ruled/unruled)) தோற்றுவித்தது. உண்மையில் காகிதங்கள் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ள பெரியளவில் சிரமப்படவில்லை. இங்கிருந்து தொலைதூரங்களை கற்பனையாக மனனம் செய்துவைத்திருக்கும் இவைகளே யாரையும் கண்மூடித்தனமாக இயங்கவைத்த ஊக்கிகள் மற்றும் பெரும் சச்சரவுகளோ வாதங்களோ எழுகையில் முன்வைக்கும் ஆதாரங்கள். புதிய நாடுகள் கண்டங்கள் மற்றும் பகுதிகள் அவற்றைச் சார்ந்த உயிரினங்களென ஏகப்பட்ட கண்டடைதல் வரைபடங்கள் வழியாகச் சாத்தியமாயிற்று. அந்த குறிப்பிட்ட வரைபடங்களின் மாறுதலுக்காக உலகப்போரும் நடந்தது. சர்ச்சைக்குரிய ஏகப்பட்ட நாட்குறிப்புகளும், வன்மம் தூண்டும் பலவகை கட்டுரைகளும், வன்முறைவாதிகளின் கடிதங்களும் வெளிவந்தபோது அடைந்த சலனம் அடங்க பலகாலம் ஆனது.

பதப்படுத்தப்பட்ட பாலினங்கள் – ஆண்/பெண் (or) Ruled/Unruled – 01, 02, 03

01

தன் கணவனின் நினைவிலிருந்து ஒருபோதும் தன் பிம்பத்தை அழிக்க இயலாதென்று நீண்டகாலமாய் நம்பியிருந்த மாதுரிக்கு அதன்விளைவாக அவளுக்கு கிடைத்திட்ட ஆண்மகவு எந்த கோவிலிலும் துண்டுச்சீட்டால் குறிகேட்காமலேயே பிறந்தது. துவக்கத்தில் கைகால்கள் வழக்கத்திற்கு மாறாக வளைந்திருந்ததைக் கண்டு ஊனமாகப் பிறந்ததாக பலரும் காதுபடக்கூறினர். நாள்போக்கில் அம்மாதிரியான விளைவுகள் ஏதும் இல்லாமல் போயிற்று. சரியாக அவள் அதே கோவில் பூசாரியிடம் வேண்டிக்கொண்டு வந்து கட்டிய சிவப்புகயிற்றினால் அவனது உடல் ஒருவாறாய் சீரமைந்தது.  ஒருவேளை பகுதிகளாப் பிரிக்கப்படாத ஓர்மையான உடலமைப்புதான் காகிதங்களின் சிறப்பியல்போ என்று யோசிப்பதற்கு நிறைய காரணங்களும் இருந்தன. உடல் என்று ஒரு தன்மைக்குள் சிக்காதவொன்றினால் மட்டுமே உருமாறுதல் என்பது சாத்தியமாகும். மருத்துவரின் குறிப்புகளும் மருந்துகளுமே சமயத்தில் மாதுரியின் மகனது உடலுறுப்புகளின் ஒழுங்கின்மைக்கு உத்தரவாதம் அளிக்க மறுத்தது. இறுதியில் அது சீரமைந்தது யாரும் எதிர்பாராதது. கிட்டத்தட்ட தவறாக வடிவமைக்கப்பட்ட பொம்மையாக அறிவு வளர்ச்சியிலும் பலவீனமான இருந்த அஷ்ரப் தானாகவே உருமாற்றம் அடைந்தது ஆச்சரியமே.

அவன் பிறந்து வளரும் சிறுப்பிராயங்களில் காகிதங்களை பொம்மைகளுக்கு மத்தியில் வைக்கப்படவேண்டிய ஒன்றாக ஒருவகை விளையாட்டுச் சாதனமாக நம்பியவர்களுள் அவனும் ஒருவன். காகிதத்தின் சுகந்தமான நறுமணத்தால் அவ்வப்போது அதை அவன் உண்ண முயலும்போதெல்லாம் மாதுரி அவனை கழுதை என்று திட்டியபடி அடிக்க முனைவாள். அவனுக்குத் தெரிந்து மிகப்பெரிய உருவங்கள், மனித முகங்கள் விலங்குகளின் உடல்கள் மற்றும் மனிதர்களுக்கு பொருந்திப்போகவல்ல உடல் பாகங்கள், மந்திர தந்திரங்கள் எல்லாவற்றாகவும் மாற இயலும் ஒரேவகை உயிரினங்களாக காகிதங்கள் பரிணமித்துக்கொண்டே இருந்தன. வீட்டில் தொலைபேசி எண்கள் முதலாக குறிப்புகள் எழுத அவன் சுவர்களைப் பயன்படுத்திவந்ததைக் கண்டபோது மாதுரி தன்வீட்டு சுவர்கள் நாளடைவில் கிழிந்துவிடக்கூடுமென்று அஞ்சினாள். பொழுதுபோக்கிற்காக காகிதங்களை வெட்டி வித்தியாசமான முகமூடிகள் செய்து அணிந்துகொண்டு அனைவரையும் பயமுறுத்திக்கொண்டிருத்தவனின் முகத்தின் நிறமும் மாறிக்கொண்டிருப்பதாய் தோன்றும். முகமூடியாக அவன் செய்வதெல்லாம் தன் முகத்தை மறைத்துக்கொள்வதோடு இன்னொரு முகத்தை அணிந்துகொள்வதென்றும் அவளுக்கு தாமதமாகத்தான் புரிய ஆரம்பித்தது.

பிற்பாடு அஷ்ரப் வளர்ந்தவந்த காலகட்டங்களில் அதுவரைக்கும் விளையாட்டுப் பொருளாய் பாவித்த அதே காகிதங்களை கவனமாகக் கையாளவேண்டிய, சேதமடையாமல் பாதுகாக்கவேண்டிய சூழ்நிலையையும் கேள்விகளோடே எதிர்கொண்டான். புத்தகங்களாக அதன்மீது உருவாக்கப்பட்ட மொழியின் வழியே கனவு காணவும், ஏதுமற்ற தாளின் பரப்பில் எழுதியெழுதி வளையும் கைகளால் வரையவும் காணப்பெற்றான். பரிமாண விதிக்குள் போவதற்கு முன்பாக எந்தவொரு உருவ அமைப்பிற்கும் தகுதியோட்டம் மிக அவசியம். அதனைப் பயிற்சி என்றளவில் வைத்துக்கொண்டாலும் அந்நாளில் காணும் அனைத்தையும் அப்படியே உள்வாங்கிக்கொள்ளும் பருவத்தில்தான் அவன் இருந்தான். இதுவரைக்கும் மனிதர்களால் குறிப்பிட்ட கால இடைவெளியுடன் எத்தனை தகவல்களை, கடந்துவந்த திசைகளை மற்றும் நிகழ்த்தப்பட்ட உண்மைகளை மாற்றி உருவாக்க முடியும். அதையெல்லாம் காகிதங்களால் மிக எளிதாக  மாற்றியமைத்துவிட முடியும். மேலும் பல விதிகளைக்கூட மாற்றி திருத்தியெழுத வைப்பதுடன் அதை தொடர்ந்து சில தலைமுறைகளுக்கு கற்பித்து மனிதகுல நம்பிக்கையினையே மாற்றியமைக்க இயலும்.

பிற்பாடு அஷ்ரப் ஆலையில் எந்நேரமும் இந்த கிழிபடும் உடல்களோடு நெருக்கமான பின்னர் காகிதங்களுக்கு ஏன் முழுமைத்தன்மை அளிக்கப்படுவதில்லை என்ற குழப்பத்தையும் உள்வாங்கிக்கொண்டான். தமக்கென்று வழங்கப்பட்ட செயல்களை செய்யவே அது அனுமதிக்கப்பட்டதுதான் என்றாலும், பிறகுதான் தெரியவந்தது காகிதங்களிலிருந்து உருவாகும் பொருட்களும், அவற்றால் உருவான உலகமும் அசைவற்ற பரிமாணத்தில் நிகழ்பவை. அவற்றை முப்பரிமாணத்திற்குள் தற்காலிகமாக அனுமதிக்கலாம். ஆனால் முழுமையாக மாற்ற இயலாது. இது உண்மையெனில் அந்த சகோதரர்கள் கூறிய கூற்றும் ஏன் உண்மையாக இருக்கக்கூடாது.

மறுப்பதற்கு பயம்கலந்த தயக்கத்தை தவிர வேறு காரணங்கள் ஏதுமில்லை என்பதால் அஷ்ரப் வேறுவழியின்றி அவ்விருவரின் தூண்டுதலுக்கு உடன்படவேண்டியதானது. அவர்கள் கூறியது அபத்தமான பொய்யென அறிந்திருந்தும், தன்னைவிட்டு தொலைவிலிருக்கும் தந்தையை அறியமுயலும் ஆர்வத்தில் அதற்கு உடன்பட சம்மதித்தான். காகிதங்களுக்கு அம்மாதிரியான ஆற்றலும், மாய வாசனையையும் உண்டாக்கும் வழிமுறைகளில் ஒன்றாக இதை புரிந்துகொண்டபடி அவர்களின் விருப்பத்திற்கேற்ப அவற்றை உருவாக்கித் தந்தபோது உளவியலாக அவனடைந்த மாற்றம் சிறிதல்ல. அவர்களின் தந்தையின் குறுதி கலந்த தாள்களை ஒன்றிரண்டை பதுக்கிவைக்க அவனுக்குத் தோன்றினாலும் தன்னால் அது முடியாதென்பதையும் அறிந்திருந்தான். நிறத்தைப் பொறுத்தோ அல்லது எழுதும் பாணியைப் பொறுத்து மொழியின் வடிவமைப்பே மாற்றம்கொள்ளுமென யாரோ எழுதிய வரிகள் அப்போது நினைவுக்கு வந்தன. மிருத்யூர்மனுக்கு தெரியாதபடி இரவுநேரத்தில் அவனாகவே தயாரிக்க முற்பட இரண்டு நாள்களில் வேலையை முடித்திருந்தான். அதை ஒரு கோப்புக்குள் நெறிப்படுத்தி வைத்திருக்க தயக்கம்சூழ்நதபடியே அவர்களிடம் ஒப்படைத்தான்.

அந்த தாள்கள் தங்கள் உடம்பில் ஓடுவது ஒரு மனிதனின் குறுதியென்பதை அறிந்தபோது மனிதர்களுக்கும் தங்களுக்கும் அப்படியென்ன பெரிய வேறுபாடென சிந்திக்க தளைப்பட்டிருக்கலாம். அதன்பிறகு அந்த சகோதரர்கள் நீண்டகாலம் தென்படவில்லை.

02

சிலநாட்களுக்குப் பின் ஒரு பெருநிறுவனத்திலிருந்து அழைப்பின்பேரில் அஷ்ரப் நகரத்திற்குச் சென்றிருந்தான். சாலையின் போக்குவரத்து நெரிசலோடு அவன் மனம் சமநிலையை இழந்துகொண்டிருந்தது. எங்கும் நகரமுடியாமல் நீண்டநேரமாய் அந்நான்குவழிச்சாலையில் காத்திருக்க ‌அஷ்ரப் அந்த மின்விளக்குத் தூணைக் கண்டான். காவலர்கள் யாருமில்லாதபோதிலும் அத்துனை பெருங்கூட்டத்தை தனது கொஞ்சூண்டு ஒளிர்வினால் நிறுத்திவைத்திருந்தது சிவப்புநிற விளக்கு. இமைக்காமல் அதையே வெறித்தபடியிருக்க அச்சமயம் சாலையைக் கடந்துபோகும் ஒருவரை அடையாளம் கண்டுகொண்டான். தம் தந்தையின் உடலை காகித வடிவில் வாங்கிச்சென்ற சகோதரர்களில் ஒருவன்தான் அவன். வண்டியைவிட்டு இறங்கி அவனை நெருங்கிச் செல்ல, அவனுக்கு அஷ்ரப் ஐ அடையாளம் தெரிந்திருந்தது. அவன்‌ முகத்தில் முன்பிருந்ததைப்போலான சோகம் இல்லை. முகமன் கூறியபடி அஷ்ரப் தான் கைகுலுக்குகையில் அவனது உள்ளங்கையின் மென்மையை ஸ்பரிசிக்க முடிந்தது. இன்னும் கொஞ்சம் அழுத்தினால் அவனது சுண்டுவிரல் கிழந்துவிடவும் வாய்ப்புள்ளதாகத் தோன்றியது. பற்களை வெளிக்காட்டியபடி ஆச்சரியமாய் புன்னகைத்தான். மிருத்யூர்மனின் முதல் கேள்வியே என்னவாக இருக்கும் என்பதை முன்பே யூகித்திருந்ததைப்போல அவ்விருவரும் வாங்கிப்போன தாள்களைக் குறித்துப் பேச்செடுத்தான்.                        

“உண்மையில் அந்த உருவாக்கத்தை எங்களாலும் நம்ப இயலவில்லை. இப்படியான தகவல் பரிமாற்றம் சாத்தியம்தானா என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் வாங்கிப்போன காகிதங்களைத் தொகுத்து உண்டாக்கிய கோப்புகளை யாரிடமும் காட்டாமல் பத்திரமாகவே வைத்திருந்தோம். ஏனெனில் எங்கள் அம்மாவிற்கு இச்செயலில்  முற்றிலுமாய் ஆர்‌வமில்லை.‌ எங்கள் தந்தை அடிப்படையில் பெரும் செல்வந்தராக தன் கழிவுகளை பேப்பரைக்கொண்டு சுத்தம்செய்யுமளவிற்கு நாகரிக வாழ்க்கைக்கு ஒப்புக்கொடுத்துவிட்ட நாட்டில் பணிபுரிந்தார். கடைசியாக  வீட்டிற்கு வருகைதந்தபோது அவர் தனது விபரக்குறிப்புகளை எல்லாம் ஒரு குறிப்பேட்டில் எழுதி பத்திரப்படுத்தியது வித்தியாசமாக இருந்தது. மேலும் யாருக்கும் தெரியப்படுத்தாமல் காணாமல் போய்விட்ட அவரது உருவம் யார் கண்ணிலும் படக்கூடாதென நிரந்தரமாக தீர்மானித்துவிட்டதாக தோன்ற ஆரம்பித்தது. தெரிந்தே ஆகவேண்டிய சில ரகசியங்களை அவரின் ஒப்புதலின் வாயிலாக அறிந்துகொள்ளவும் அந்த காகிதங்கள் மிகவும் உதவியாக இருந்தது. அந்த காகிதங்களின்  வழியே எங்கள் தந்தையிடம் பேசினோம்” என்று அவன் கூறிய கதையைக் கேட்டபோது அஷ்ரப் பேச்சற்று உறைந்திருந்தான். மேலும் அவ்விருவராலும் எப்படி தன் தந்தையின் இறப்பை முன்பே அறியும் வல்லமை பெற்றிருந்தனர்..? சரியாக அவர் இறப்பதற்கு முன்பே எவ்வாறு அவரின் குருதியினை சேகரிக்க முடிந்தது போலான கேள்விகள் அவனுக்குள் எழுந்தும் தனக்குள்ளேயே வைத்துக்கொண்டான்.

ஒருவேளை அந்தத் தாள்கள் தீர்ந்தபிறகு என்ன செய்வீர் என்கிற அஷ்ரப்-ன் கேள்விக்கு சற்றும் எதிர்பாராதவகையில் அவன் பதிலளித்தான்.

“நாங்கள் தயாரித்த தாள்களினூடாக நாங்கள் பேசிவந்தது நிச்சயம் எங்கள் தந்தையுடன்தானா என்கிற சந்தேகம் சிறிது இருந்ததால் எங்களுக்கு இந்த யோசனையைக் கூறிய அந்நபரைக் காணச்சென்றோம். என்னதான் தாள்களினூடாக பேச முயன்றாலும் எங்களால் தந்தையின் அறிவையோ, ஞானத்தையோ அவரது ரகசியங்களுக்கு நெருங்கிச்செல்ல இயலவில்லை. சரியாக நாங்கள் வீடுதிரும்பும் அந்நாளின் மாலையில் கோப்பில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த அந்த கடைசி காகிதமொன்று தவறுதலாக வெளியே வீசப்பட்டிருந்தது. ஆனால் அதிலிருந்து வருகிற கவர்ச்சிகரமான வாசனையைத்தேடி அங்குவந்த கழுதையும் இன்னபிற மிருகங்களும் எம் தந்தையின் உடலை சுவைத்து உண்டபோது எங்களால் தடுக்க இயலவில்லை. இதைக்கேட்டுக்கொண்டிருந்த அஷ்ரப்-க்கு நினைவில் அந்த காட்சி வேறொன்றாக ஓடிக்கொண்டிருந்தது. ஒருவேளை அந்த சம்பவம் நடைபெறவில்லையெனில் “ரகசியத்தையோ அல்லது ஞானத்தையோ அறிய(அடைய)வேண்டி உங்கள் தந்தையின் உடலை நீங்களே உண்டிருப்பீர்களா” என்று கேட்கநினைத்தபோது அவனுக்கே அது அசூசையாய் தோன்றியது. ஆனால் அன்றிலிருந்து அஷ்ரப்-ன் நடவடிக்கையே மொத்தமாக மாறிப்போனது.

03

இதுவரைக்கும் தன் கண்களால் காணாத தன் தந்தையோடு பேசுவதற்கு வாய்ப்புள்ளதென அவன்மனம் நச்சரிக்கத் துவங்கியது. ஆலையில் அவன் பணிக்குச் சேர்ந்து சரியாக எட்டு மாதங்கள் நிறைவடைந்திருந்தன. இறுதியாக அவன் மிருத்யூர்மனுக்கே தெரியாதபடி சோதனைக்காக தனது குறுதியினை கலந்து சில காகிதங்களை தயாரித்துப் பார்க்கலாமென தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டான். இந்த ஆலையில் சில காகிதங்கள் தன்னைத்தானே எழுதிக்கொள்வதாக உலவும் புரளிகள் உண்மையா என அறியும் ஆர்வத்தில் அவ்வாறு செய்யத் துணிந்தான். ஆலையின் நேரம் முடிந்து யாரும் இல்லாத சூழலில் மேற்கொள்ளும் பணி என்பதால் அந்த தனிமையில் உண்டான உளரீதியான மாற்றங்கள் ஒரு பெரும் சிக்கலைநோக்கி நகர்த்தியதை சூசகமாய் உணர்த்தின. அந்த நடு இரவில் அவன் மட்டுமே பணிபுரிந்த நீண்ட ஆலையினுள்ளே அவனைத்தவிர வேறுயாரோ அருவமாய் உலாவுவதாகவும் தோன்ற ஆரம்பித்தது. காகிதங்கள் உலர்த்துவதற்கு வைக்கப்பட்ட மேடையில் நிழலாக ஒரு அசைவு தென்படுவதையும் கண்கூட பார்க்க நேரிட, கிரகணங்களின் சூழலென பகல் முழுவதும் நிழலாகவே தெரிய ஆரம்பித்தது. பிற்பாடு ரகசியமாக தயாரித்த தாள்கள் கோப்பாக மாறியது. ஒருமுறை அதை பரிசோதிக்கவும் முயன்றது பல்வேறு மனத்தடைகளை மீறி நிகழ்ந்தது. தனது குறுதியின்மூலம் அந்த தாள்களில் தன்னுடனே பேசமுயலும் அவனின் எத்தனங்கள் ஒரு கண்ணாடியின் முன்பாக மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்த மாதுரியை நினைவூட்டியது.

எவ்வித நோக்கமுமின்றி யாரோ ஒருவர் எழுதும் நாட்குறிப்பினை வேறு ஏதோவொரு காலத்திலிருந்து யாரோ ஒருவர் வாசிப்பது இயல்பாகவே நடந்துவரும் ஒன்று. ஆனால் அஷ்ரப்-ன் உள்நோக்கம் அதை இன்னும் தீவிரமாக அவன் எழுத எழுதவே யாரோ ஒருவரால் தன் ரகசியங்கள் படிக்கப்படுவதைப்போல் உணர ஆரம்பித்தான். பதில் வருமென்று தெரிந்த மனநிலையிலிருந்து தூக்கியெறிந்த குறிப்பேட்டில் மீண்டும் எழுதிவைக்க ஆரம்பித்த நாளில் எழுதிய எல்லாவற்றுக்கும் அடுத்த பக்கத்தில் புரியாதபடி நுண்ணிய வரிகளாக ஏதேனும் எழுதப்பட்டிருப்பதைக்கண்டான்.

ஆலையில் குறிப்பிட்ட அன்றைய காலையில் மிருத்யூர்மனின் மேற்பார்வையில் புதிதாய் தயாரிக்கப்பட்ட எல்லா காகிதங்களிலும் வித்தியாசமாக எதோ எழுதப்பட்டதிலிருந்து இரவுநேரத்தில் ஆலையைக் கடந்துபோகும் சிலரால் பார்த்ததாகக் கூறப்பட்ட அமானுஷ்ய காட்சிகள்வரை ஆலைக்கு எதிராக மாறின. இவ்வளவிற்குமான காரணத்தை யாராலும் அறியமுடியாவிட்டாலும் ஆலையில் நடக்கும் சம்பவங்களின் பின்னணியும் குழப்பமாக இருந்தது. ஒருவேளை அஷ்ரப் தனது குறிப்பேட்டில் எழுதிவைத்திருப்பதாக நம்பியது யாவும் அவனுக்கே தெரியாமல் வீட்டிலிருப்பவர்கள் செய்த வேலையாவும் இருக்கலாம். அதற்காக முயன்றுபார்த்த சில பரிசோதனைகளும் அவனின் யூகத்திற்குச் சாதகமாகவே அமைந்தன. இவ்வாறு அன்று அந்த குறிப்பேட்டின் காகிதத்தில் முதல்நாள் எழுதிச்சென்ற கேள்விக்கு அடுத்தநாளோ அல்லது சிலநாட்கள் கழித்தோ அடுத்த பக்கத்தில் நீண்ட வரிகளைப்போல ஏதோவொரு சிவப்புநிறக் கறையைக் கண்டான். அதை ரகசியங்களின் மொழி என்று நம்பினாலும் மற்றொருபுறம் அது தாளின்மீது உண்டான உருவாக்கத்தில் நிகழ்ந்த கறையாகவும் இருக்கலாம் என்றான். ஆனால் அதைக்கண்ட முதல்கணம் பதற்றத்தில் அந்த கோப்பை வீசியெறிந்ததை ஆலையில் அனைவரும் பார்த்திருக்கிறனர். மேலும் அந்த காகிதத்தில் கலந்தது தனது குருதியைத்தான் என்றிருக்க எழுதிவைப்பது வேறு யாராக இருக்க முடியுமென்ற குழப்பமும் அவனுக்குள் எழாமலில்லை.

அன்றொருநாள் எழுதிய முந்தையநாள் கேள்விக்கான பதிலாக இல்லாமல் அங்கே வேறு ஏதோவொன்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான விளக்கத்தை மறுநாள் ஆலையின் முகப்புக்கூரை தீப்பிடித்து எரிந்தபோதுதான் விளங்கிக்கொள்ள முடிந்தது. தன் ஆகுருதிகொண்டு உருவான ஊடகத்தின் வழியே தனது உள்ளுணர்வு வெளிப்பட்டதை அப்போதுதான் கண்டறிந்தான். அந்த உள்ளுணர்வு காலந்தாண்டி நடக்கப்போவதை சூசகமாய் முன்னரே அறிவிப்பதாகவும் ஒருவகையான சமாதானத்திற்கு வந்திருந்தான். மக்களின் பயத்தால் பகிரங்கமாய் புகார்கள் எழ, யாரோ ஆலையில் மாந்த்ரீக வித்தைகள் முயன்று பார்ப்பதாக சில சாட்சிகளும் உண்டாயின. அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் மிருத்யூர்மன் ஆலையைவிட்டு நீக்கப்பட்டதும் ஊருக்குள் அவ்வளவு பெரும் சாம்ராஜ்யம் நாள்போக்கில் முடக்கம் கண்டதை இப்போது நினைத்தாலும் கனவுபோலத் தென்படும். அஷ்ரப் யாருக்கும் புலனாகாத திரையாக காகித உடலாக தான் உருவாகிய பின்பு காகிதங்களின்வழியே தனக்குத்தானே பேச ஆரம்பித்தபின்பு வேறு பணியெதையும் தேடிக்கொள்ளவில்லை. மாதுரியும் அவ்வப்போது அவனிடம் அவன் விரும்பினால் மட்டும் பேசுவதுண்டு.

04

 காகிதங்கள் இப்போது தம்மை நெகிழியுடலாக மாற்றிக்கொண்டன.‌ இதன்மூலம் காற்றில் மிதக்கும் காலளவு தடைபட்டாலும் வயதாகாமல், மட்காமல், மற்றும் எளிதில் கிழித்துவிடாதபடியான உடலை அடைந்த திருப்தியை குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்காகவே அடைந்திருந்தன. ஆலையின் பணி பறிபோனதிலிருந்து தனிமையாக பழைய நினைவுகளால் சூழப்பட்ட மிருத்யூர்மனின் உடல்நிலை வயதின் தள்ளாமையை குறிவைத்தது. அப்போது மாதுரியின்‌ கண்ணாடி நினைவுக்கு வந்தது. இந்த முகச்சுருக்கமெல்லாம் நீங்கி மீண்டும் பழைய பொலிவான முகத்தைப்பெற ஒருமுறை அதில் கண்விழித்தால் போதும். ஆனால் அதன்வழியே எல்லா முகங்களையும் பார்க்க இயலும் என்ற மாதுரியின் கூற்று நினைவுக்கு வந்தபோது பயனற்றதாய் தோன்றியது. எல்லோருக்கும் தெரிந்தவொன்று எப்படி பிரத்யேகமாக இருக்க முடியும்…? இவ்வாறாக அவர் மாதுரியின் கண்ணாடியை முற்றிலுமாக தன்னிடமிருந்து மறந்துபோயிருந்தார்.மாதுரியும் பிறகு தன் மகனோடு ஊரைவிட்டு நீங்கிச்சென்றதும் நிச்சயம் அவள் அரேபியவுக்குத்தான் சென்றிருப்பாள் என்றே பேசிக்கொண்டனர்.

 மறுநாள் ஒரு அந்தகாரத்தின் மத்தியில் ஆள்துணையின்றி, தாகம் அடங்காமல், நெஞ்சு விடைக்க, நிர்கதியாய் தான் இறந்துபோனதை மிருத்யூர்மன் காண நேர்ந்தது. மேலும் ஏற்கனவே சிதிலமடைந்த தன்னுடலை சில விலங்குகள் போட்டியிட்டு உண்பதையும், மேலும் அவைகளுக்கு அருகே சில மனிதர்களையும் கண்டவரால் அதற்குமேலும் கனவிலிருந்து விழித்தெழாமலிருக்க முடியவில்லை. எந்தவித அறிகுறியுமின்று ஒரு நண்பகல் உறக்கத்தில் வந்த இப்படியான கனவுக்கு என்ன அர்த்தமென்று மிருத்யூர்மன் தன் மனைவியிடம் கேட்டுக்கொண்டிருந்தார். அந்திவானம் ஒரு கொலைக்களம்போல் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. மேசையில் அவர் எழுதமுடியாமல் அப்படியே விட்டுவந்த காகிதங்கள் ஏதுமறியா குழந்தைபோல் உறங்கிக்கொண்டிருந்தன.

பிற படைப்புகள்

Leave a Comment