சீவல மாறன் வீடுபேறு அடைந்த கதை
அசோக் ராம்ராஜ்

by olaichuvadi

 

யாரும் சற்றும் எதிர்பாராத வகையில், ஒரே பகலில், அனைத்தும் நடந்து, முடிந்து விட்டது.

அவன் கண் விழித்துப் பார்க்கையில் பல நாட்கள் கடந்திருந்ததைப் போலிருந்தன. உடலை மெலிதாக அசைக்கையிலேயே இடுப்பின் கீழ் துவங்கி பாதம் வரை கடுமையான வலியும், கால்களை மெதுவாகத் திருப்புகையில் -அவன் நினைத்தாற் போல- முதுகுப்பகுதியில் வாளொன்று ஆழமாகச் சென்று துளைத்துக் கீறினார் போன்ற உணர்வும் ஏற்பட்டது.

சில யுகங்கள் எனத்தோன்றிய அந்த இருட்கணங்கள் கழிந்த பிறகாக மீண்டும் கண் விழிக்கையில் ஆகாயத்தில் பகலின் ஒளி கணிசமாகக் குறைந்து, இருள் வரத் துவங்கியிருந்தது. உடலில் உயிர் இன்னும் ஒட்டிக்கொண்டிருப்பது ஆச்சர்யத்துடன் தோன்ற, அவனது கண் மயிர் அசைவில், பார்வைக் கோணத்தின் நெடுகில், வெள்ளை ஒளிகள் தெரிந்தன. அதன் மெல்லிய முன்னேறிய அலைவுகள், அது அவர்கள் தான் என உறுதி செய்ய, சில நொடிகளில் வெண்ணாடைகளை உடுத்திய அவர்கள் அவனருகில் வந்தார்கள்.

மூவராகப் பிரிந்து வந்தவர்களில் ஒருவர் குனிந்து, அவன் முகம் பார்த்துப் பின் தான் கொண்டு வந்திருந்த குடுவையிலிருந்து தைல வாடை வீசும் அச்சாறை அவனது கால்களில் பூசினார். அப்படிப் பூசியவரது முகத்தில் தெரிந்த அமைதியை அவன் முன்பாகவே பார்த்திருந்தான். சில காலங்களுக்கு முன்பாக கூட்டமாக அவனைத்தேடி வந்திருந்த அவர்கள் அனைவருக்கும் வயிராற உணவிட்டு, உரையாடி, பின் அவர்களை வழியனுப்புகையில், அவனை இறுதியாக ஒரு முறை திரும்பிப் பார்த்த அந்தக் கண்களின் அமைதி.

அவர் மீண்டும் அவனது உடலை தனது குளிர்ந்த கைகளால் தொட்டு, நீர் தெளித்து, அதை மெலிதாகத் திருப்பி, அச்சாறை உடலின் மறுபக்கமாகப் பூசினார்.

சிறிது நேரத்தில் சற்று அடங்கிய வலியினூடாக சீவலன் தான் நான்கைந்து பேர்களால் பக்கவாட்டில் தூக்கப்பட்டு நிலவெளியில் மிதந்து செல்வதை உணர்ந்தான். கண நேரத்தில், எருதுகள் அதிகம் நடுமாடுகிற, செம்மண்ணும், கருங்கற்களும் நிறைந்த, பழைய பனைகளும், வேம்புகளும் சூழ்ந்த அவனும், அவனது மூதாதைகளும் புழங்கிப்பழகிய மேட்டு நிலம் தாண்டியிருந்த அக்களம் அவன் கண்ணை விட்டு மறைந்தது.

மீண்டும் கண் விழித்த போது, சுற்றிலும் கல் மூடாக குகை போன்று தோற்றமளித்த அக்கற்படுக்கையில் படுத்திருந்தான். அவனது பசியும், தாகமும் தீர்ந்து விட்டிருக்க, குளிர்ந்து சில்லிட்டிருந்த அந்தப் பாறைவெளியில் சிறு வெளிச்சத்தில் அவனருகில் நான்கு துறவிகள் சுவர்க்கல்லில் செதுக்கப்பட்டிருந்த சர்ப்பக்குடை போர்த்திய தெய்வத்தைச் சுற்றி கண் மூடி அமர்ந்திருந்தார்கள்.

அவனால் மெலிதாக அசைக்க முடிந்த தலையை மட்டும் அசைத்துப் பார்க்கையில், கற்கள் பெயர்க்கப்பட்டு சமன் செய்து வழவழப்பாக்கப்பட்ட வரிசை வரிசையாக இருந்த ஆழமான அக்கற்படுக்கைகளில் யாரும் இல்லாதிருந்தார்கள். அவன் கண் மூடி, சில நொடிகள் கழிந்து மீண்டும் பார்க்கையில், மூலையின் இடுக்கில், ஓர் துறவி மட்டும் அவனிருந்த திசை நோக்கி தன் கைகளை குவித்திருந்தார்.

மறுநாளிலும் அவன் விழிக்கையில் அத்துறவி அதே இடத்தில் அமர்ந்திருந்தார். இப்போது அவன் உடல் ஒருக்களித்து தாவரச்சாறுகள் தொடர்ந்து குளிர்ந்து நிதானமாக இறங்கிக் கொண்டிருந்தன. இரண்டு நாட்கள் கழிந்து, அவனால் முயன்று தனது உதடுகளை அசைக்க முடிய, அவனது தொடர்ச்சியான விரலசைவில், அவர் மெலிதாக சலனமடைந்தபடியே அவனருகில் வந்தார். அவன் தீனமான குரலெழுப்பி அன்று அவனோடு சண்டை புரிந்த மற்றவர்களைப் பற்றிக் கேட்டான்.

அவர் தயங்கிப் பின் மெதுவாக, தாழ்ந்த குரலில் அவனைத் தவிர மற்றவர்கள் எவரும் பிழைக்கவில்லையென்றார். தீனமான குரலில் அவன் அவர்கள் அனைவரும் அவனைச் சுற்றி கைகளாலும், கால்களாலும், உடல்களாலும் கவர்ந்திருந்ததை நினைவு கூற, அவர் வேறு எதுவும் பேசாது தனது ஐந்து கை விரல்களை மேல் நோக்கி விரித்தபடி அங்கிருந்து மௌனமாக நீங்கிச்சென்றார்.

முதுகில் தெறித்த வலியினூடாக, அன்று கண்களை மூடியபடி சீவலன் தன்னிருட்டில் வெறுமனே படுத்திருந்தான். அக்கற்படுக்கையில் உணர்ந்த குளிரும், தொலைவிலிருந்து வீசிக்கொண்டிருந்த வாடை நிறைந்த காற்றும் வழக்கத்திற்கு மாறாக அவனை உறங்க விடாமல் செய்தது.

அவன் தான் அக்களத்திலேயே இறந்திருந்திருக்க வேண்டுமென இருளில் தன்னை நோக்கி கூறிக்கொண்டான்.

2

தொலைவில் ஊர்கள், கிராமங்கள், நகரங்கள் சிறு புள்ளிகளாகத் தெரிந்து கொண்டிருக்க, அவ்வப்போது அத்துறவிகளில் சிலர் வந்து அவனது கண்களை விரித்துப்பார்ப்பதும், அவனது கைகளை உயர்த்துவதும், கால்களை மெலிதாக அசைத்துப் பார்ப்பதுமாக இருந்தார்கள். மற்ற பொழுதுகளில் அவன் பார்க்க, குகைக்கு உள்ளேயும், வெளியேயும் நெடிதுயர்ந்த குன்றுகளின் ஒடுக்கத்தில் அமர்ந்து வெகுநேரம் கண் மூடி உறைந்திருந்தார்கள்.

ஒவ்வொரு நாளும் எறும்புச்சாரிகளாக மனிதர்கள் தொலைவில் வெம்மை படிந்த நிலத்தில் திசைக்கொரு வீதமாக பெயர்ந்து கொண்டிருக்க, அத்துறவிகளில் சிலர் அவ்விடத்தை விட்டு கீழிறங்கினார்கள். அப்படிச் சென்றவர்களில் சிலரது கைகளில் தைலக்குடுவைகள் இருந்தன. அரிதாக சிலரின் கைகளில் தர்ப்பைப்புற்கள் கட்டுகளாக இருந்தன.

ஓர் அதிகாலையில் மிக வயதான பழுத்த துறவி ஒருவர் அமிழ்ந்த கண்களோடு அவன் அருகில் வந்து, அங்கேயே கை குவித்து அமர்ந்திருந்தார். அன்று மாலை வரை அப்படியே அமர்ந்திருந்தவர், எழும் முன்பாக அவனை இறுதியாக ஒரு முறை தொட்டு, ஏதோ ஒன்றை முணுமுணுத்து அங்கிருந்து நீங்கினார். அதன் பிறகு அவரை அவன் பார்க்கவேயில்லை.

அது நடந்து, பல நாட்கள் கழிந்த ஓர் மதியத்தில் அவனால் அவர்களின் ஓசையைத் தவிர்த்து, மற்ற சில நடமாட்டங்களை உணர முடிந்தது. அக்குகையினுள்ளேயே கண் மூடியிருந்த ஒருவர் தவிர்த்து, மற்றவர்கள் வெளியே இருந்து கொண்டிருக்க, மலையில் ஏறி வந்து கொண்டிருக்கும் மற்றக் காலடி ஓசைகள் தனித்துக் கேட்டன.

சில நிமிடங்களில் அவர்கள் அனைவரும், அவர்களின் முன்பாக வந்து நின்றிருந்தார்கள். வந்தவர்கள் உடல்களின் மேலே சிறியது தவிர, வேறு எதையும் அணிந்திருக்கவில்லை. அவர்களில் சிலர் மண்வெட்டிகள், கோடாரிகள் மற்றும் சின்னஞ்சிறிய நில ஆயுதங்களை தங்களோடு கொண்டு வந்திருந்தார்கள். தடுமாறிய அவர்களது பேச்சின் குரல்கள் ஏராளமான அலைவுகளைக் கொண்டிருந்தன. அவர்களது முடிகள் கலைந்திருந்தன. கைகள் காய்த்துப் போயிருந்தன.

சிறிது நேரத்தில் உரல் சுழலும் சப்தம் கேட்க, அவர்களில் ஒருவர் அவர்களிடமிருந்த பெரிய குடுவையொன்றை வாங்கிச்சென்றார். அவரே இரண்டு நாட்களில் மீண்டும் வந்து அவர்களிடமிருந்து அதைவிடப் பெரியதொரு குடுவையை வாங்கிச்சென்றார். இது நடந்து சில நாட்கள் கடந்த பிறகாக, ஓர் அதிகாலையில் அவர் அங்கு வந்து, அவர்களிடம் பணிந்து, தன்னை அவர்களோடு இணைத்துக் கொள்ளும்படி கூறினார். அவர்கள் அதை எதிர்பார்த்தவர்கள் போல மெல்லிய ஆனால் தீர்க்கமான குரலில் அதை மறுத்து அவரைத் திரும்பிச் செல்லும்படி கூறினார்கள்.

அது போன்ற நிகழ்வுகள் நாள் இடைவெளி விட்டு தொடர்ந்து அங்கு நடந்து கொண்டிருந்தன. அவர்கள் எல்லோரிடமுமே அவர்கள் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் அங்கே தங்கிக் கொள்ளலாமெனக் கூறப்பட்டது. ஆனால் அவனது ஆச்சர்யத்திற்கூடாக அவர்கள் அனைவருமே திரும்பிச் சென்றார்கள். அவன் அவர்கள் குறித்துக் கேட்க அவர்கள் அனைவரும் அழிந்த நகரங்களிலிருந்து, கிராமங்களிலிருந்து வேறு ஊர்களுக்கு, நகரங்களுக்கு துரத்தியடிக்கப்பட்டு, வாழ்விலிருந்து, வாழ்வு அல்லாததிலிருந்து அங்கு வந்து அவர்களோடு சேர்ந்து கொள்ள விரும்பினார்கள் என்பதை ஒரு துறவி சொல்ல அறிந்தான்.

இறுதியாக அவர், பள்ளிகள் அனைத்தும் காலியாகிவிட்டதெனவும் அவர்களது மார்க்கம் கண் முன்னால் அழிந்து வருகிறதென்றும், வெகு சிலர் மட்டுமே ஆங்காங்கே எஞ்சி இருக்கிறார்கள் என்றும் கூற, அவன் அந்த வார்த்தைகளை எவ்வித ஆச்சர்யமுமின்றி மௌனமாக கேட்டபடியிருந்தான்.

அடுத்த இரண்டு நாட்களில் முகமெங்கும் காயங்கள் சில கோடுகளென விழுந்த கண் தெரியாத இளைஞன் ஒருவன், அவர்களைத் தேடி வந்து அவர்களோடு இரவு தங்கினான். சீவலனோடு குகையில் அவன் படுத்திருக்க, குகை விளிம்புகளெங்கும் முந்தைய நாளின் மழையில் சொட்டுச்சொட்டாக நீர் வடிந்தபடி இருந்தது. அத்துறவிகள் அனைவரும் கல்வெளிக்கு வெளியே அடிவானமென வளர்ந்திருந்த நாவல் மரமொன்றின் அடியில் படுத்துறங்கினார்கள்.

நரிகளின் ஊளைச்சத்தங்களினூடாக வெளியில் நிலவிய இலை அசையும் அமைதியில், அவன் சீவலனிடம் தான் சில காலங்களுக்கு முன்பாக நிகழ்ந்த போர்களில் ஈடுபட்டதாகவும், இப்போது எல்லாம் முற்றாக அழிந்து சூறையாடப்பட்டு விட்டதெனவும், எல்லோரும் திசைக்கொன்றாக சிதறி விட்டார்களென்றும் கூறினான்.

இரண்டு நாட்களில் மலைவெளிக்கு அப்பாலுள்ள பாதையில் அவன் அதிகாலையில் விடைபெற, அன்று துவங்கி, சீவலன் பல நாட்கள் உறங்காமல் இருந்தான்.

பரந்த வானின் கீழ், உலகமே மீச்சிறு புள்ளியாகத் தெரிந்த அதற்கடுத்த காலங்களில், அந்த அநாதி மலையின் உயரத்தில் உடலின் வலி குறையத்துவங்கி அவனால் தடுமாறி எழ முடிந்தது. சில நாட்களில், கல்கஞ்சனத்தின் வரிவரியான கோடுகளை இறுகப்பிடித்தபடி ஓரிரு அடிகள் நடக்கத் துவங்கினான்.

தன் நினைவு மறந்தபடி, மலையின் நுனிப்பாறையில் நின்று எப்போதும் தொலைவில் ஒரு குறிப்பிட்ட திசையையே அவன் பார்த்துக்கொண்டிருக்க, அதிகக் காற்றில் சில நிமிடங்களுக்கு மேலாக ஒரே இடத்தில் அப்படியே நிற்றல் கூடாதெனவும், தொடர்ந்து நடக்க முயற்சிக்காமல் இருக்கும்படியும் அவனிடம் கூறப்பட்டது.

ஓர் நாள் கல்லடுக்கில் தடுக்கி அவன் சரிந்து விழப்பார்க்க, கற்சுவரின் ஏழு தலை கொண்ட நாகத்திற்குள் பொதிந்திருந்த நாதரின் அருகில், விரிந்த கண்களோடு இருந்த யட்ச உருவம் அவனைக் கப்பாற்றியது. அவன் மீண்டும் விழுந்து விடாதிருக்க அவர்களில் ஒருவர் அவனோடு எப்போதும் இருந்து கொண்டிருந்தார்.

அதற்கடுத்த நாளின் காலையிலிருந்து அவன் அவரோடு இணைந்து, கூட்டமாக அமர்ந்திருந்த அவர்களோடு வந்து அமர்ந்து கொண்டான்.

3

கிளை விரித்துப் பரந்த பெருமரத்தின் நிழல் அவ்விடமெங்கும் வியாபித்திருக்க, சீவலனுக்கு எல்லாம் அவர்களால் அங்கு கற்றுத்தரப்பட்டது. அவன் அவர்களிடமிருந்து அவர்கள் பயன்படுத்தும் இலையை, வேரை, கிளையை, மலரை எல்லாம் பார்த்துக் கற்றுக்கொண்டான். ஆழ்ந்த அமைதியுடனும், நிதானத்துடனும், பொறுமையுடனும் அவர்கள் அவற்றை உருவாக்குவதை தினமும் பார்த்து, அச்சிறிய மலைவெளியிலேயே அவர்களோடு இருந்து கொண்டிருந்தான்.

அவர்கள் தங்களின் உடைமையென எதையும் கொள்ளவில்லை. ஒருவருக்கொருவர் பெயர் சொல்லி அழைப்பதில்லை. உரக்கப் பேசுவதில்லை. அவ்வப்போது அங்கிருந்தவர்களில் ஒரிருவர் எதையுமே எடுத்துக் கொள்ளாமலும், சில முறை யாரிடமும் எதுவும் கூறிக்கொள்ளாமலும் அங்கிருந்து அகன்று சென்றார். அவர் மீண்டும் அங்கு திரும்பவேயில்லை.

அவர்களில் பலர் சில சமயம் நீர் கூட அருந்துவதைத் தவிர்த்திருந்தார்கள். பெரும்பாலானோரின் உடல்கள் அதிகம் நலம் குன்றாதவைகளாக இருந்தன. அதையும் மீறி, அவ்வப்போது அவர்கள் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டால், குகையின் உள்ளார்ந்த கல்வெளியில் அமர்ந்து மெல்லிய துணியால் வடிகட்டி காய்ச்சிய நீரை ஏற்கனவே தயாரிக்கபட்டிருந்த குடுவையிலிருந்த சாற்றில் கலந்து குடித்தபடி, அங்கிருந்த கற்பக மரத்தைச் சுற்றி அமர்ந்து, கண்கள் பாதி மூடியபடி அதன் ஆற்றுதலை எதிர்பார்த்து அமர்ந்திருந்தார்கள்.

அவர்களது உடல்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களது பாதங்கள் உயிர் கொண்டிருந்தன. தினமும் அவர்கள் காலையில் மலை விட்டிறங்கி ஊருக்குள் சென்று முற்பகலில் திரும்பினார்கள். சுற்றியிருக்கும் கிராமங்கள் மற்றும் ஊர்களின் நிலைகள் பற்றி அவர்கள் அறிந்திருந்தார்கள். அதை இரவுகளில் விளக்கின் வெளிச்சத்தில் தங்கள் சுவடிகளிலும் தொடர்ந்து எழுதியபடி இருந்தார்கள்.

அவன் அங்கு வந்து, பல மாதங்கள் கடந்து, ஓர் இரவில் வௌவால் ஒன்றின் படபடத்த சிறகடிப்பு முதல்முறையாக குகையின் இருளில் தொடர்ந்து கேட்க, அன்று சீவலன் விடியும் முன்பாகவே எழுந்து கொண்டான். பல காலங்களுக்குப் பின்பு உறக்கம் காரணமில்லாது அவனிடமிருந்து நீங்கி விட்டிருந்தது. அந்த நாள் முழுவதும் அவனது சப்தங்கள் அனைத்தும் அடங்கி, உடலில் மௌனம் அதிகம் கூடி இருந்தது. மறுநாள் மாலை ஒரு விதப் பதற்றத்துடன் அவன் அவர்களுடன் உரையாடுகையில், அவனது முதுகின், இடுப்பின் காயங்கள் அனைத்தும் முழுமையாக ஆறிவிட்டதெனக் கூறப்பட்டது. ஆனால் வாழ்நாள் முழுக்க அவனால் வேகமாக நடக்கவோ, ஓடவோ, எடை மிக்க பொருட்களை தூக்கவோ, கைகளை ஓர் உயரத்திற்கு மேல் உயர்த்தவோ முடியாதெனவும், அப்படிச் செய்வது அவனை நிரந்தரமாக படுக்கையில் வீழ்த்தி விடும் சாத்தியங்கள் கொண்டது எனவும் கூறப்பட்டது. இறுதியாக, மிதமான வலியொன்று எப்போதும் உடலில் இருந்து கொண்டிருக்கும் எனவும், அவன் விரும்பினால் மீண்டும் ஊருக்குள் செல்லலாமென்றும் கூறப்பட்டது.

காற்று குறைவாக வீசிய மறுநாளின் அதிகாலையில் சீவலன் எல்லோருக்கும் முன்பாக எழுந்து, அவர்களிருந்த பட்டத்தைக் கடந்து, முள்ளும், முடலும், புதரும், பாதையுமென இருந்த மலையை விட்டு சற்று தடுமாற்றத்துடன் கீழ் இறங்கினான். புகைமூட்டமான பாதையில் தொலைவு வரை எதுவும் தெரியாதிருக்க, அடிவாரத்தின் எதிரில் பெரும் துளியெனத் தெரிந்த தாமரைக்குளத்தருகில் சென்று அமர்ந்தான். எதிரே வயக்காட்டின் பாதை துவங்கியிருந்தது.

அன்று அவன் பார்க்க, அக்குளத்தின் நடுவில் ஓர் ஆமை கல்லொன்றில் அமர்ந்தபடி மீண்டும் மீண்டும் தன்னைக் கூட்டுக்குள், வெளியில் என உடலை மாற்றி மாற்றி இழுத்துக் கொண்டிருந்தது. ஓர் நீர் நாகம் அதைச் சுற்றி வர, ஒரு கட்டத்தில் அந்த ஆமை கல்லிலிருந்து நழுவி குளத்தில் இறங்கியது.

பனி மூட்டம் பல மணிகளுக்கு விலகாதிருக்க, சீவலன் உடனே மலையுச்சிக்குத் திரும்பினான்.

அன்று காலையில் அவன் அவர்களோடு முதன்முறையாக புஞ்சை நிலங்கள் சூழ்ந்த அந்த ஊருக்குள் சென்று உணவு வாங்கி உண்டான். மறுநாள் அவன் நினைத்தபடியே குகையின் முகப்பில் துவங்கியிருந்த வாய்க்காலின் அருகில் இருந்த மிகச்சிறிய உரலைப் பார்த்து, அதை இயக்கும் பொறுப்பை கேட்டுப் பெற்றுக்கொண்டான். உடலெங்கும் தாவரங்களின் நெடியோடு, அன்றைய தேய்பிறை இரவு, தவளைகள் எழுப்பும் ஒலிகளினூடாக கீறல்கள் மிகுந்த பாறைகளையும், மேற்சுவற்றில் இருந்த கல்வட்டத்தையும் பார்த்தபடி, வெகுநேரம் உறங்காமல் இருந்தான்.

உடலின் பகுதியாக அவ்வுரல் மாறிவிட்டிருக்க, பல மாதங்கள் கடந்து, ஓர் நாள் அதிகாலையில் கடந்த காலங்களில் இல்லாத முதல் முறையாக, ஒன்பது துறவிகள் அவன் விழிக்கும் முன்பாகவே திருவுருவத்திற்கு முன்பாக வட்டமாகக் குழுமி அமர்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் எழுந்து வந்து அவனிடம் மெதுவாகவும், நிதானமாகவும் அருகிலிருக்கும் சுனைகள், ஏரிகள் மற்றும் குளங்கள் வறண்டு வருவதாகவும், மேலும் சுற்றியிருக்கும் ஊர்களில் மீண்டும் போர் துவங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டிருக்கிறதெனவும், மலை சில நாட்களில் சுற்றி வளைக்கப்படுமெனவும், மற்றவர்கள் அனைவரும் மற்ற ஊர்களிலிருந்தும், பிற குன்றுத்தொகுதிகளிலிருந்தும் வந்திருப்பதாகக் கூறினார்.

குகையின் விதானத்தில் அவர்கள் புதிதாக வரைந்து கொண்டிருந்த சக்கர ஓவியங்கள் அனைத்தும் கைவிடப்பட்டன. சேகரிக்கப்பட்ட நிகண்டுகளின் சுவடிகள் கவனமாக கரும்பாறைகளின் இடுக்குகளில் வைக்கப்பட, அடர்த்தியான அந்தப் பிற்பகலில் சீவலன் இரண்டாகப் பிரிந்த அவர்களில் ஒரு குழுவோடு தென்திசை நோக்கிச் சென்றான்.

அவர்கள் கைகளில் பீலிக்குஞ்சங்களோடு பாதைகளைத் தூற்றுக் கொண்டு வந்தார்கள். வழியில் அநாதையென விடப்பட்டிருக்கும் இறந்த காட்டு விலங்குகளை, பறவைகளை வணங்கி அடக்கம் செய்தார்கள். பின் காடுகளில் தேர்ந்தெடுத்து இலைகளைப் பறித்துக் கொண்டார்கள். வழியில் கண்ட சிறு மிருகங்களுக்கு உணவளித்த பின் தாங்கள் உண்டார்கள். சில வேளை நீர் மட்டும் அருந்தி, மற்ற முறை ஊருக்குள் சென்று, உணவைக் கையில் வாங்கி, நின்றபடி உண்டு, பாதையோரங்களில் படுத்துறங்கினார்கள்.

மறுநாளின் அதிகாலையில், வனம் விலகிய பாதையில், தாறுமாறான பாறைகளோடு உறைந்து ஒர் குன்று தெரிய, ஒரு துறவி அவர்களிடமிருந்து பிரிந்து கொண்டார்.

மூன்று நாட்களின் முடிவில், அவர்கள் வில்வமரங்கள் சூழ்ந்த, நெடிதுயர்ந்த கூர் கோபுரமிருந்த ஊரை எல்லையில் கடந்து, மீண்டும் வனப்பாதையினுள் சென்றார்கள். இரவு வனத்தில் உறங்கி காலையில் எழுகையில், அவனோடு ஒருவர் மட்டும் -அவனைக் களத்தில் கண்டெடுத்தவர்- இருந்தார்.

இறுதியில் புன்னை மரங்கள் மிகுந்த, முழுக்க நாகச்சிற்பங்களும், புற்றுகளும் நிறைந்த அந்த ஊர் எல்லையை வந்தடைந்தார்கள். அவ்வூரிலிருந்தவர்கள் அந்த ஊரின் பெண் தெய்வமான ஆவுடையை வணங்குகிறார்களென அவர் கூற, இருவரும் அங்கிருந்து மேற்கு திசை நோக்கி நடந்து, அடர்ந்த காட்டினுள் புகுந்து மடிப்பு மடிப்பாக பல சிறிய யானைகள் வரிசையாகப் படுத்திருந்ததைப் போலத் தோற்றமளித்த சிறுமலையடிவாரத்தை வந்தடைந்தார்கள்.

அங்கு அவர் கூட்டிச்சென்ற சிறு குன்றின் கீழ் இருந்த குகையில், வெளியே யட்ச, யட்சினி சிலைகள் அற்று, உள்ளே தளங்கள் பூச்சுக்கள் உதிர்ந்து அவர்கள் ஏற்கனவே இருந்த குகையைப் போலன்றி எதற்காகவோ உருவாக்கப்பட்டு, யாரோ புழங்கிய அடையாளங்களைக் கொண்டிருந்தது. எறும்புகள் அதிகம் வசிக்கும் அளவில், சிறியதாக இருந்த அக்குகையினுள் அவன் நுழைய, மயில் ஒன்று அகவியபடி அவர்களைப் பார்த்து அருகில் வந்தது.

அக்குன்றிற்கு அடுத்த சில தொலைவில் மிகச்சிறிய ஊர் ஒன்று சமீபமாக உருவாகியிருந்தது. அவ்வூரில் இருந்தவர்கள் அனைவரும் அவ்வனத்தினுள் மந்தைகளை மேய்க்கவும், தொலைவில் கிராமங்களுக்கு சென்று வருவதுமாக இருந்தார்கள்.

அவர்கள் இருவரும் அந்த ஊருக்குள் சென்று உணவு வாங்கி உண்டு வந்த சில காலங்கள் கழிந்து, இருவர் அங்கு வந்து அவனுடனிருந்த துறவியிடம் அவர்களது நிலத்தில் முன்பைப் போலவே பஞ்சம் வரப்போகிறது போலிருக்கிறதெனவும், தானியங்களின்றி தங்களது குடும்பத்தையே தாங்கள் இழந்து விடும் நிலையில் இருப்பதாகவும் கூற, அவர்களோடு அவர் ஊருக்கு வர வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்கள்.

அந்தப் பகலில் அவர் வந்தவர்களுடன் செல்ல, அன்று சீவலன் குகையில் தனித்து இருந்தான். அறு கோணங்களில் தெரிந்த வனத்தின் இருளைப் பார்த்தபடி நள்ளிரவில் உறங்கினான். பின்னிரவில் ஐந்து தலை நாகமொன்று வந்து அக்குகையில் அவனோடு இருப்பதாகக் கனவு கண்டான்.

மறுநாளின் பிற்பகலில் அவர் திரும்பி வர, அவ்வூரிலிருந்து அவர் உடன் வந்த ஒருவர் அவர்களோடு இணைந்து கொள்ள விரும்புவதாகக் கூறினார். சரிவான வாயிலில் அவன் அமர்ந்திருக்க, அத்துறவி வந்தவரிடம் அதனை தயக்கத்துடன் மறுத்து, சீவலனைக் காட்டி தாங்கள் எப்போது வேண்டுமானாலும் ஊருக்குள் வந்து அவர்களுக்கு உதவி புரிவதாகவும், ஆனால் தற்போது தாங்கள் யாரையும் உடன் வைத்துக் கொள்வதில்லையெனவும் கூறினார்.

சீவலனுக்கு அக்கூற்று இந்த முறை மிகுந்த ஆச்சர்யமளிக்க, அன்று கற்படுக்கையில் சாய்ந்தபடி, அவரிடம், அவ்வளவு காலங்கள் அவர்களுடனிருந்த தன்னிலை குறித்துக் கேட்டான். வெகு நேரங்கள் மௌனமாக இருந்தவர், பின் அவனிடம் அவனைக் களத்தில் காப்பாற்றி அழைத்து வந்த போது, இரவு வருவதற்கு ஒருக்கணம் முன்பாக, தங்களுக்கு மட்டும் மலையைச்சுற்றி அசாதாரணமாக ஒளி தோன்றியதெனவும், அதனாலேயே அவனால் தங்களது மார்க்கத்திற்கு ஓர் மாற்றம் ஏதோ ஒரு வகையில் நிகழும் எனத் தான் நம்புவதாகவும் கூறினார். அவன் குழப்பமடைந்து, சந்தேகத்துடன் அது குறித்து மேலும் கேட்க அவர் பதிலெதுவும் கூறாது உறங்கினார். அடுத்த சில நாட்களில் வனத்தில் பூக்கள் பறிக்க இருவரும் சென்ற போது அவன் மீண்டும் அது குறித்து கேட்ட போதும், அவரிடம் மௌனம் மட்டுமே நிறைந்திருந்தது.

அடுத்த நாளில் அந்தக் குகையில் நாதரின் உருவங்கள் எதுவும் இல்லாது வெறுமனே சிறிய வழவழப்பான கல்வெளி மட்டும் இருப்பதைக் குறித்துக் கேட்டான். அவர் மௌனமாக அவர் அவனுக்குள் தான் இருப்பதாகக் கூறினார்.

அன்றிலிருந்து மூன்றாவது நாளில் தான் அது நிகழ்ந்தது.

அன்று அவன் காலை எழுகையில், அவர் அவன் கண் முன்னால் கை கூப்பி நின்றிருந்தார். அவன் அவரை நெருங்க, அவர் தன்னுடைய கடைசி தினம் நெருங்குகிறதெனக் கூறினார். அக்கணத்தில் அவனிடம் உருவான எந்தக் கேள்விக்கும் பதில் கூறாது, மௌனமாகவே இருந்தவர், அன்று பிற்பகலில் அவன் பாறைச்சரிவு சென்று திரும்புகையில், தலையில், உடலில் மயிர்கள் முற்றிலுமாக மழிக்கப்பட்டு, அந்தக்குகையின் வாயிலில் குவித்து வைக்கப்பட்டிருந்த புற்கள் மீது கண்மூடி அமர்ந்திருந்தார்.

மறுநாளில் கண் விழிக்காதவரை மலையின் பின்னே அடக்கம் செய்து விட்டு வெகுநேரம் அக்குகை வாயிலில் அவன் தனியே அமர்ந்திருந்தான்.

4

அவனது பெயர் கூட அவனுக்கு மறந்து விட, இப்போது அவன் மட்டுமே அங்கே தனியே நடமாடிக் கொண்டிருந்தான். உடலின் முதுகிலிருந்து துவங்கி இடுப்பு வரை வலி அதிகம் கடுத்துக் கொண்டிருக்க, அவ்வப்போது அழிந்த அவனது நகரம் அவனது நினைவில் வந்தது. அங்கு இருந்த மூதாதைகள் முகம் கனவில் தோன்றி மறைந்தது.

அக்குகையிலிருந்த சுவரில் இதற்கு முன்னால் இருந்தவர்களால் தேய்த்து மெருகேற்றப்பட்ட வழவழப்பான வெற்று கற்சுவர் வெளியை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அதிகக் காலமிருந்த முந்தைய குகையில் இருந்த நாதரின் உருவை நினைவில் கொண்டு வர முயன்றான். கொஞ்ச கொஞ்சமாக அடுத்த சில காலங்கள் அருகிலுள்ள ஊர்களுக்கும், கிராமங்களுக்கும் தனியே சென்று உணவு வாங்கி உண்டான். மற்ற நாட்கள் நீர் மட்டும் அருந்தினான்.

சில காலங்கள் கழிந்து, அந்தக்காட்டைத் தாண்டிய ஊரிலிருந்து சிலர் அவனை வந்தடைந்தார்கள். அவர்கள் சமீபமாக உருவாகி அவர்கள் வாழத்துவங்கியிருந்த அந்தக் கிராமத்தில், பெரும் இடரொன்று தற்போது தங்களுக்கு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்கள்.

அவர்களது ஊரில் மூன்று பெண்கள் பேறு வயப்பட்டிருப்பதாகவும், அது மிகுந்த மகிழ்ச்சியான சங்கல்பமென அவர்கள் நினைத்துக் கொண்டிருக்க, அவர்கள் மூன்று பேருமே பேறு காலம் முடிவடையாத நிலையில் தற்போது ஏதோ தீராத தலை வலியால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சித்தம் தவறியது போல நடக்கிறார்களென்றும், எவ்வளவோ பேர் எவ்வளவோ விதங்களில் முயன்றும் அதைத் தீர்க்க இயலவில்லையென்றும் தெரிவித்தார்கள்.

அவன் அங்கு செல்கையில் அப்பெண்கள் அனைவரும் ஒரு புன்னைமரத்தின் கீழ் சித்தப்பிரம்மை பிடித்தார் போல தலையில் கைகளை வைத்து அவ்வப்போது அலறியபடியும், அவ்வப்போது அமைதியடைந்தபடியும் இருந்தார்கள். அவன் அனிச்சையாக அவர்களது நாடிகளைப் பார்த்தான். பின் கைகளை. தலைகளை. காதுகளை.

அவர்கள் அவனிடம் அப்பெண்கள் அனைவரும் மாலை நடை பயின்றார்களெனவும், அப்போது ஒவ்வொருவராக நோய்வாய்ப்பட்டார்களெனவும் தெரிவித்தனர். இவ்வளவு பேர் பேறுகாலம் அடைந்திருப்பதும், அவர்கள் அனைவருக்குமே இதே போல நடந்திருப்பது இப்போது ஊருக்கே தவறான சகுனமாகப் படுவதாகவும் தெரிவித்தார்கள்.

அவன் தனியாக ஊரைச்சுற்றி அப்பெண்கள் நடந்து சென்ற வயல்கள் சூழ்ந்த பாதையில் நடந்து, வெகுநேரம் கழிந்த பின்னர், ஓரிடத்தில் நின்று அங்கு இருந்த கருமஞ்சளான மலர்களைப் பார்த்தான். விரைவில் அங்கிருந்து நீங்கியவனாக தன்னோடு வனத்திற்கு வரும்படி இருவரை அழைத்து, அவனது குகையின் தெற்கில் மலையடிவாரத்தில் வனத்தின் அடர்த்தியில் இருந்த செடிகளிலிருந்து இரண்டு பெரிய பூக்களை, சில இலைகளைப் பறித்தான்.

அப்பெண்கள் ஊர் எல்லையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டார்கள். அந்தப் பூக்கள் வேறு சில பூக்களோடும், இலைகளோடும் கலக்கப்பட்டு பின் எரியூட்டப்பட, அதிலிருந்து வெளியான புகை அப்பெண்களை நோக்கிச்சென்றது. சில கணங்களில், அப்பெண்கள் அனைவரின் காதுகளிலுமிருந்து அனைவரின் ஆச்சர்யத்தினூடாக அளவில் சிறியதும், அதை விட மிகச்சிறியதுமாக ஏராளமான வண்டுகள் கூட்டமாகப் பறந்து வெளியேறியது.

அந்த மலர் உள்ள செடிகள் காடெங்கிலும் இருப்பதாகவும், அப்பூச்சிகள் மிகச்சிறியதெனவும், அதன் வாழிடங்களைக் குலைத்து அங்கு அவர்கள் தங்க வேண்டாமெனவும் அவன் கூற, அவர்கள் அவனுக்கு நன்றி தெரிவித்தபடி, அடுத்த சில மாதங்களில் அக்குகையின் அடுத்த மேற்குத்திசையில் மலையின் கரும்பாறைக் குடையருகே வந்து பெயர்வதாகத் தெரிவித்தார்கள்.

அவன் அவர்கள் எங்கிருந்து வந்திருக்கிறார்களெனக் கேட்க எல்லோரும், வடதிசையிலிருந்து போர்ச்சூழலால் சிதைந்த ஊர்களிலிருந்தும், நகரங்களிலிருந்தும் வருகிறோமெனக் கூறினார்கள். அவன் அவர்களது சொந்த நகரத்தைக் குறித்துக் கேட்க அவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு ஊரிலிருந்து வந்தவர்களென்றும், எல்லோரும் ஓரிடத்தில் இணைந்ததாகவும் தெரிவித்தார்கள்.

அன்றைய பேச்சில் அவர்கள் அவனுடைய மார்க்கத்தைச் சேர்ந்த துறவிகள் அனைவரும் ஆதரவற்று தங்களது ஊர்களில் அலைந்த அந்த வெயில் நாட்களையும், தெற்கில் முதலில் அமைந்த நகரத்தில் இருந்த அரசனிடம் தங்கள் மார்க்கத்தில் இணையுமாறு அவர்கள் விடுத்த கோரிக்கையையும், அந்த நல்அரசன் ஊழினால் அதை எவ்விதப் பரிசீலனைக்கும் உட்படுத்தாது நிராகரித்து, போருக்குச் செல்ல முடிவு செய்ததாக தாங்கள் அறிந்ததையும் நினைவு கூர்ந்தார்கள்.

விடைபெறுகையில், அந்த அரசனின் நகரம் போரில் ஒரே பகலில் கைப்பற்றப்பட்டதையும், அதற்கு அடுத்தடுத்த ஊர்கள் வரிசையாக கைப்பற்றப்பட்டு சூறையாடப்பட்டதையும், தங்கள் வாழ்வில் அனைத்தையும் இழந்த அந்த இரவுகளையும் பதற்றத்தின் நடுக்கத்தோடு கூறினார்கள்.

அன்று பின்னிரவில் கண் முன்னே, கல்வெளியில், நாதரின் வடிவத்தை மீண்டும் உருவாக்கிப் பார்த்தான். அவ்வுருவம் எவ்வளவு முயன்றும் உருவாகி வரவில்லை.

அடுத்தச் சில காலங்கள், அவன் அவர்கள் கொண்டு வந்து தருவதை மறுத்து, அக்கிராமத்திற்குள் சென்று உணவு வாங்கி உண்டான். அந்த நாட்களில் வனத்தில் அலைந்த போதில் மலை நாகமொன்று தன் வாலையே கடித்து சுருண்டு படுத்திருப்பதையும், எலும்பும் தோலுமாய் இருந்த காட்டுப்பூனைக் குட்டி ஒன்று வாயில் பறவையொன்றை கவ்வியவாறு நடந்து சென்றதையும் பார்த்தான்.

பெரும்பாலும் குகையினுள்ளேயே ஒடுங்கிய அந்த நாட்களில், அவன் நினைவெல்லாம் அத்துறவிகள் அவனை முதன்முதலாக வந்து சந்தித்த அந்த காலைப்பொழுதையே பற்றிக்கொண்டிருந்தது.

5

இன்னும் விடிந்திருக்கவில்லை. கற்படுக்கையின் மௌனத்தில் வழக்கம் போல அமைதியாக படுத்தபடி இருந்தான். கல் எழுத்துக்கள் மங்கிய பாறைவெளியில் கரைந்திருந்த குளிர் விலகிக் கொண்டிருக்க, நினைவுகள் மெதுவாகத் திரும்பிக் கொண்டிருந்தன.

அந்த நாள் முழுவதும் அவனது உடல் அசாதாரணமாக கொதித்துக்கொண்டிருக்க, அந்த அந்தியின் இருள் அதிகமாகிக் கொண்டே வருவதை அவனால் பார்க்க முடிந்தது.

அத்துறவிகள் அனைவரும் கூட்டமாக அவனைத்தேடி வந்த அந்த மங்கிய குளிர் காலையும், வெகு விரைவிலேயே -என இப்போது தோன்றுகிற- பின்தொடர்ந்து வந்த அந்தப் பகலின் நினைவும், சுழலென அவனுக்குள் இன்னும் இடைவிடாது வந்து கொண்டிருக்க, வெளியே சென்று வனத்தைக் கடந்து, ஓடைப்பகுதி தாண்டியிருந்த தர்ப்பைப் புற்களை ஒவ்வொன்றாக சேகரித்துக்கொண்டான்.

அந்த நாள் முழுவதும் எந்தச் சொரூபமும் தென்படாது, அவன் மனதில் அக்கல்லின் வெளியே தெரிந்து கொண்டிருந்தது.

மறுநாளில் இருள் வரும் முன்பே அதிகாலையில் எழுந்து, சிறிது மட்டுமாக நீர் அருந்தி விட்டு, புற்களின் நடுவே வடதிசை நோக்கி சம்மணமிட்டு அமர்ந்தான்.

வெற்றான அக்கல்வெளியை நினைத்தபடி, கண்கள் மூடியிருக்க, அவனைக் காப்பாற்றியவரின் கண்கள் மட்டும் அவ்வப்போது இடைவெட்டாக வந்து கொண்டிருந்தது.

புதிதாக உருவாகியிருந்த அவ்வூரின் வாசிகள் மூன்று நாட்களில் அவனைத் தேடி வந்தார்கள்.

வீரக்கல் வைக்கும் முன்பாக அந்தத் துறவியின் குளிர்ந்த உடல், அவர்கள் சந்திக்கும் போது தோன்றியதை விட அதிக உயரம் அடைந்திருந்ததையும், உடலின் தோற்றம் அசாதாரணமாக பெரிதடைந்திருந்ததையும் வியப்புடனும், ஆச்சர்யத்துடனுமாகத் தங்களுக்குளாக பேசிக் கொண்டார்கள்.

பிற படைப்புகள்

Leave a Comment