உலர்த்துகை
ஐ.கிருத்திகா

by olaichuvadi

அவன்  கருப்பாய்  இருப்பான். ஆனால்  வசீகரமாய் புன்னகைப்பான். ஆனா என்ன ஆனா… கருப்புன்னா கேவலமா… அப்படியெல்லாம்  இல்ல.
இருளைக் கிழிக்கும் ஒளிக்கீற்று போல பல்வரிசை பளீரிடும்போது கருப்பு  தேன். கருப்பு  காந்தம். கருப்பு  மென்மழைச்சாரல். கருப்பு மயிர்கூச்செறிய  வைக்கும்  அந்தரங்க  சுகம். சுகந்தி   தனக்குள்  சிரித்துக்கொண்டு  ஜன்னல்  வழியே  பார்வையை  வீசினாள்.
பேருந்து  உறுமியபடி  நின்றிருந்தது. கிளம்பும்  நேரத்துக்கு  ஐந்து நிமிடங்களுக்கு முன்பே டிரைவர்  பேருந்தின் இஞ்சினை முடுக்கி  விட்டு ஸ்டியரிங்கில்  கைகளை  ஊன்றி  மோன தவத்தில் ஆழ்ந்திருப்பார். கூட்டத்தை  அள்ளும்  சூட்சுமம்  இது.

” யாரும்  வர்றாங்களா…?”
அந்தப்  பெண்மணி  கேட்டபோது  பார்வை  சீட்டில்  கிடந்த  கர்சீப்பில் 
படிந்தது. அவள்  அடுத்த  சீட்டிற்குப்  போனாள். கதிர்  சிரித்தபடி  ஏறினான்.

” உங்க  சீட்ட காபந்து  பண்றது  பெரிய  வேலையா  இருக்கு.”

” இந்தப்  பிரச்சனை  எங்க  பாத்தாலும்  இருக்குங்க.”

சொல்லிவிட்டு  கர்சீப்  எடுத்து  முகத்தை  அழுந்தத்  துடைத்துக்கொண்டான்.
இடது  நெற்றிப்பொட்டில்  மறுபடி  வழிந்த  வியர்வை  அவன்  முகத்தில் 
மெல்லொளியைப்  பாய்ச்சியது. நந்தியாவட்டையின் வெண்மையையொத்த  விழிகளை  விரித்து  அவன்  பேசும்போது அடிக்கடி  தலையாட்டுவான். விள்ளல், விள்ளலாய்  வெளிச்சம்  பாய்ச்சும்  விழிகளை  பேருந்தில் நின்றபடி  பிரயாணிக்கும்  கல்லூரிப்  பெண்கள்  பார்ப்பதும், பார்வையைத் தழைத்துக்  கொள்வதுமாயிருப்பர். 

2

” அபுதாபியில  இருந்தப்ப  ஒல்லியாதான்  இருந்தேன். நானே  பொங்கி 
நானே  தின்ன  லச்சணம். இப்ப  இந்த ஒரு வருஷமாதான்  ஒடம்பு 
ஏறிடுச்சு. அம்மாவோட  கைவண்ணம். “

கட்டம்  போட்ட  பிஸ்தா  நிற  சட்டைக்காலரை  தூக்கி 
விட்டுக்கொண்டான். சுகந்தி  ஜன்னலில்  முழங்கையை  ஊன்றி 
உள்ளங்கையை  கன்னத்தில்  பதித்து  அவனைப்  பார்த்துக் 
கொண்டிருந்தாள்.

” பரவாயில்ல  ஒக்காந்துக்குங்க.”

ஒடுங்கி  அமர்ந்த  வேளையில்  அவன்  இயல்பான  ஆகிருதியுடன்  சீட்டில் 
பொதிந்துப்  புன்னகைத்தது  பிரேம்  போட்டு  மாட்டிய  புகைப்படம்  போல 
மனதில்  பதிந்திருந்தது.

“ஆறு  வயசுதான  வித்தியாசம். அதுக்காக  அக்கா, அண்ணியாருன்னு 
சொல்லணுமா  என்ன…. பேர்  சொல்லுங்க….”

” சுகந்தி…நீங்க….?”

” கதிர்… அபுதாபியில  வேல  பாத்தேன். கொரோனா  தன்  கொடிய 
கரத்தால  என்னையத்  தூக்கி  இங்க  வீசிடுச்சு. இப்ப  டவுன்ல  ஒரு 
கம்பெனியில  சொற்ப  சம்பளத்துக்கு  கழுத  மேய்க்கிறேன். எவ்ளோ
நாள்தான்  சும்மா  ஒக்காந்துருக்கறது  சொல்லுங்க.”
முதல்  பேச்சிலேயே  பொருந்திய  இலகுத்தன்மையை  உணர 
முடிந்ததில்  காற்றில்  புழுக்கம்  குறைந்திருந்தது. ஒருமணி  நேர 
பிரயாணத்தில்  முடிவிடம்  நெருங்கும்போது  சலிப்பாயிருந்தது. 

” கவர்ன்மெண்ட் உத்தியோகம்  பாக்குறீங்க. இன்னும்   கொஞ்சம்
உற்சாகமா  இருக்கலாமே. “

அவன்  முகத்துக்கருகே   வந்து  கேட்டபோது  சுகந்திக்கு  வயிறு 
குழைந்தது. 

” இருக்கலாமே…” என்றாள்  அவசரமாக. பார்வை  வெளியில்  விழுந்தது. 

3

” கப்பல்ல  எக்கசக்கமா  சம்பளம்  தருவாங்களே. பேசாம  நீங்க  வேலைய 
வுட்டுட  வேண்டியதுதானே. “

நாலாவது  நாளே  கேட்டான்.

“விட்டுட்டு  என்ன செய்யறது. அவர்கூட  போய்  இருக்க  முடியாது.
இங்கதான்  தனியா குந்திக்  கெடக்கணும். அதுக்கு  வேலைக்குப்  போறதே 
நல்லதில்லையா… அதுவும்  கவர்ன்மெண்ட்  வேலை. “

” சரிதான். எவ்ளோ  வாங்கினாலும்  பத்தமாட்டேங்குதே. “

அவன்  பக்கத்தில்  நின்றிருந்த  மாணவியிடம்  புத்தகங்களை  வாங்கி 
வைத்துக்கொண்டான். அது  அடிக்கடி  இவனைப்   பார்ப்பதும், சட்டென 
தலையைத்  திருப்பிக்  கொள்வதுமாயிருந்தது. சுகந்தி  வாய்  பொத்தி 
சிரித்தாள். 

” திடீர்ன்னு  ஏன்  சிரிக்கிறீங்க…. அந்தப்பொண்ணு  என்னைய  சைட்  அடிக்குதுல்ல…?”
சரேலென  காதருகில்  வந்து  கேட்டான். அவன்  மூச்சுக்காற்று  பட்டு
காதுமடலிலிருந்த முடிகள்  சிலிர்த்தன. சுகந்தி  விரல்களைக் கோர்த்துக்கொண்டாள். அடியாழத்தில்  புதைந்து  கிடந்த  சுவையை மீண்டும்  ருசி  பார்க்கத்  துடிக்கும்  இயல்பு  மெல்ல  எழுவதும் நீர்க்குமிழியாய்  உடைவதும், உடைவின்  விளைவில்  நீர்த்துப் போய்விடத்  துடிக்கும்  உடலின்  அழுத்தம்  பாரமாய்  தோன்றுவதும் 
பெரும்  வாதையாயிருந்தது. இரண்டு  வருடங்களின்  நான்கு மாதங்களுடைய  நூற்றியிருபது  இரவுகள். அதில்  கிட்டத்தட்ட  எண்பது இரவுகளைக்  கொண்டாடித்  தீர்த்திருந்தாலும்  ஏனோ  போதவில்லை. முரளி  அங்கிருந்து  புலம்பினான்.

“புலிவால்  புடிச்ச  கதையாயிடுச்சு. விடவும்  முடியல,
புடிச்சிக்கிட்டிருக்கவும்  முடியல. பெரிய  அவஸ்தை.”

சுகந்தியால்  சொல்ல  முடியவில்லை.

4

” என்னாச்சு…..ரொம்ப  சோர்வா  தெரியறீங்க?  ஒடம்பு  சரியில்லையா…?”

அவனுக்கு  ஆயிரம்  கண்கள். எப்படித்தான்  தெரியுமோ  தெரியாது.
உள்துழாவும்  கண்களில்  சட்டென  திறந்து  கொள்ளும்  மனது. பொத்தி 
வைக்கமுடியாது. கொட்டிக்  கவிழ்த்தாயிற்று. பேருந்தின்  இரைச்சல், 
கூட்டத்தின்  சலசலப்பை  மீறி  சத்தமாய்  சொல்ல  கூச்சமாயிருந்தது.
உள்ளங்கைகளில்  கண்கள்  ஊர்ந்தன. பேசவே  படபடக்கும்  இதயம் 
அணுக்கமாய்  அந்தரங்கத்தை  அவனிடம்  கொட்டிவிட்டிருந்தது.
என்னாச்சு  என்று  அவன்  தலையை  ஆட்டிக்  கேட்டபோது  அந்தக் 
கேள்வியை  அவன்  கேட்க  வேண்டுமென்று  எதிர்பார்த்திருந்ததா மனம் 
என்று  தெரியவில்லை. கிளையை  உலுக்கிவிட்டதும்  கொட்டும் 
பவளமல்லியைப்  போல  உதிர்த்துப்  போட்டுவிட்டாள். கடைசியாக 
வெக்கமாயிருக்கு  என்றுதான்  முடித்தாள். இரு  நீர்மணிகள்  அரும்பி 
பொட்டென்று  உதிர்ந்தன.

” சொல்றதுக்கா, அந்த  உணர்வுக்கா…..எதுக்கு…….?”

அவன்  லேசாக  தோளை  இடித்துக்   அவளைக்  கூர்ந்தான். சுகந்தி  சேலை 
முந்தானைப்பூக்களை  ஆராய்ந்தாள். அவன்   மறுபடி அருகில்  வந்து 
முகத்துக்கெதிரே  குனிந்து  கேட்டான்.

” ரெண்டுக்குந்தான்.”

அவனைப்  பார்க்காமலே  சொன்னாள். இப்போது  இதயம்  அதிர்ந்தது.

” புருஷன்கிட்டகூட  சொல்ல  வெக்கந்தான். அவரா  வந்தா  சரி.
இல்லாட்டி  போர்வையை  இழுத்துப்  போத்திக்கிட்டு  படுத்துக்கறது. “

சுகந்தி  ஜன்னல்  வழியே  விரையும்  மரங்களைக்  பார்த்தாள். கதிர்
தலையாட்டிக்கொண்டான். அணிந்திருந்த  மோதிரத்தை  நகர்த்தி, நகர்த்தி 
இறக்கினான். 

” உங்க  அறியாமைய  நெனச்சா  சிரிப்பா  வருது. என்ன  சொல்றதுன்னு தெரியல. படிச்சிருந்தும்  பிரயோஜனமில்ல. அவ்ளோதான். வேறென்ன சொல்ல….”

அத்துடன்  முடித்துக்கொண்டான். அதன்பிறகு  எதுவும்  பேசவில்லை. அவனுடைய  அமைதி  ஐந்து  நிமிடங்களைச்  சாப்பிட்டுவிட்டிருந்ததில் சுகந்திக்குப்  பதட்டமாயிருந்தது. ஒரு  மணிநேர  பிரயாணத்தில்  அறுபது நிமிடங்கள்  முழுக்க, முழுக்க  அவனுடன்  இணக்கமாய்  இருந்துவிட்டு 
இறங்கும்போது  கைதவறவிட்ட  பொருளையெண்ணி  தவிப்பது  போல 
மனசு  தவிக்கும். அதிலும்  ஓரிரு  நிமிடங்கள்  மௌனம்  என்பது 
சகிக்கமுடியாத  ஒன்று.

5

 
”  சம்பாரிச்சது  போதும், வந்து  சேருடான்னு  ஒரு  அதட்டல்  போடுங்க.
ஆளு  அலறியடிச்சிக்கிட்டு  ஓடிவருவாரு.  வந்தோன்ன  வாசல்லயே 
நிக்க  வச்சி  ஒங்க  மனச  சொல்லிருங்க…”

” என்ன  சொல்லணும்?”

” அதாங்க… எனக்கு  எப்பத்  தேவையோ  சொல்லுவேன். நீ  கேலி 
பண்ணாம ஒத்துழைக்கணும். அவ்ளோதான்…”

கதிர்  சட்டென்று  சொன்னான். அவனின்  சிரிப்பு  அவள்  உதடுகளில் 
பொருந்திக்கொண்டது. அவன்  அப்படித்தான்  கொடுப்பான். பொருள் 
பரிமாற்றம்  போல  உணர்வுப்  பரிமாற்றம். அகத்தில்  உறைந்து  கிடப்பது 
 முகத்தில் வந்து  ஒட்டிக்கொள்ளும்போது  அது  அவனுக்கானதாய் 
இல்லாமல்  பொத்தாம்பொதுவாய்  ஆகிவிடும்.

” எனக்கு  வரப்போறவள  நான்  தவிக்க  வுடவே  மாட்டேன். அவளுக்குத் 
தேவைன்னா  அத  வாய்விட்டு   சொல்ற தைரியத்த உண்டாக்குற மாதிரி
ஆரம்பத்துலயே நடந்துக்குவேன் “

அழுத்தமாய்  சொன்னான். சுகந்தி சிரித்தாள்.

” இந்த  மச்சம்  ஒங்கள  கூடுதல்  அழகா  காட்டுதுங்க.”

சட்டென்று  சொல்லிவிட்டு  மேலுதட்டின்  விளிம்பிலிருந்த  மச்சத்தைக் காட்டினான். சுகந்தியின்  ஆழம்  திறந்து  நரம்பு  முடிச்சு  கிண்ணென்று அதிர்ந்தது. அதிர்வுகள்  கிளை, கிளையாய்  விரிந்து  உடலெங்கும்  ஓடின. ஏனோ  கைகளிரண்டையும்  சேர்த்துக்  குவித்து  தொடையிடுக்கில் வைத்துக்கொள்ள  வேணும்  போலிருந்தது. ஹேண்ட்பேக்கை  நகர்த்தி கைகளை  மறைத்துக்கொண்டாள். படித்தது  பெண்கள்  பள்ளிக்கூடத்தில், கல்லூரியும்  அதேபோல்  பெண்கள்  கல்லூரி. ஆண்கள்  வாசம்  அதிகம் அறியாத  சுகந்திக்கு  முரளி  முதல்  வாசம்  காட்டினான். இவன் இரண்டாவது. இரண்டாம்நாள்   சகஜமாகி  ஒருவாரத்தில்  உள்ளுணர்வு தொட்டுவிட்டவனுக்கு  அது  மிகையற்ற  இயல்புகுணம்  என்று 
புரிந்தபோது  இளகுதல்  அவளுள்  இயல்பாய்  நிகழ்ந்து  விட்டிருந்தது.

6

அவன்  ஒதுங்கி  உட்கார  முனையவில்லை. பேருந்து  வளைவுகளில் 
திரும்பியபோது  சுகந்தி  அவன்மேல்  சரிந்தாள். அவனின்  புஜத்தின் 
கெட்டிச்சதை  மேல்  உரசியபோது  சுகந்தியின்  கால்  விரல்கள்  மடங்கி 
நிமிர்ந்தன. 

” வீட்டுவேல  பாதியில  நிக்குது. துட்டு  இருந்தா  கட்டி  முடிச்சிடலாம்.
அது  இருக்குற  எடந்தான்  தெரியல. “

அவன்  முன்நெற்றி  முடியைக்  கோதிவிட்டுக்கொண்டான். 

” அபுதாபியில  சம்பாதிச்ச  காசு  பத்தலையா….?”

” அட  நீங்க  வேற…அதவச்சு  தான்  பாதி  வீடு  கட்டுனேன். மிச்ச  வேல 
முடியறதுக்குள்ள  கொரோனா  வந்துருச்சு. வேல  போயிருச்சு. சும்மாவே 
அங்க  கெடந்துட்டு  ஊரு  வந்து  சேந்தாச்சு. “

பேருந்தில்  ஸ்பீக்கர்  அலறியது.

‘ எருக்கஞ்செடியோரம்  இறுக்கிப்  புடிச்ச  என்  ராசா…..”
திரும்ப, திரும்ப  கேட்ட  பாட்டு. தினமும்  கந்தசஷ்டி  கவசம்  போல 
டிரைவர்  அதே பாட்டுக்களை  ஒலிக்கவிடுவார். 

” தூதுவளை  எலை  அரைச்சு, தொண்டையில  தான்  நனச்சு….”
அடுத்த  பாட்டு  காற்றில்  மிதந்தது. 

” பாட்டு  கேட்டா  மனசு  லேசாவும்பாங்க. சில  பாட்டு  நம்மள  அப்படியே 
முறுக்கி  வுட்ரும். பாத்துருக்கீங்களா…”

திடீரென  கேட்டான்.  சுகந்தி யோசித்துப்  பார்த்தாள். 

” ஒண்ணும்  ஞாபகத்துக்கு  வரல. ” உதட்டைப்  பிதுக்கினாள்.

” காதல்தேவன்  உந்தன்  கைகள்  தீட்டும்  நகவரி, இன்பச்  சுகவரி, அன்பின் 
முகவரி.” 

                                     7

ராகமாய்  பாடினான். கண்கள்  மூடிக்கொண்டன. மேலிமைகள்  சுருங்கிப் 
படபடத்தன. சன்னமான  ஒலியில்  பாதி  பாட்டு  காதில்  விழவில்லை.
ஸ்பீக்கரில்  அலறிய  பாட்டுக்கிடையே  அவன்  குரல்  சிறு  துணுக்காய் 
ஒலித்தது.

இளஞ்சிவப்பு  நிற  விரல்கள்  முரளிக்கு. அவ்விரல்களால்  அவன் 
சுகந்தியைத்  தீண்டும்போது  ஒரு  புள்ளியில் குவிந்து கிடக்கும் உணர்வின்
திரள் பாதரசக்குமிழி போல திரண்டு  துடிக்கும். கதிரின்  உரசலிலும் அது
துடிக்கத்தான்  செய்தது. ஒருமுறை  அவன்  முழங்கை  அவளின் 
வழுவழுத்த  இடைப்பகுதியில்  உரசிற்று. அவன்  பேண்ட் 
பாக்கெட்டுக்குள்  கையை  விட்டு  துழாவிக்  கொண்டிருந்தான்.
சுகந்தி  விலகிக்கொள்ள  முனையவில்லை. அந்த  உரசல்  வேண்டும் 
போலிருந்தது. முழங்கை  இப்படியும், அப்படியுமாக  நகர்ந்தது. பின்
மார்பின்  பக்கவாட்டில்  அழுத்தமாக  பதிந்து  நழுவியது. சுகந்தி 
ஜன்னலில்  சரிந்து  கண்களை  மூடிக்கொண்டாள். 

” திருட்டுச்செறுக்கி…..அரிப்பெடுத்து  அலையிற  மூதேவி….”

வீட்டு  முற்றத்தில்  முருங்கைக்கீரை  ஆய்ந்தபடியே  அம்மா  எதிர்வீட்டு 
வனஜாவை  ஏசிக்கொண்டிருந்தது  ஒளிப்படக்  காட்சியாய்  கண்களுக்குள் 
விரிந்தது.

” கீழ  வுழுந்துட்டாளாம். இவரு  கைப்புடிச்சி  தூக்கி  வுட்டாராம். ஆம்பள 
கைப்படணும்னே  அலைவாளுங்க  போலிருக்கு.”

தீராத  ஆத்திரம்  சொற்களில்  வெடித்தது. சுகந்தி  போய்  நின்றதும்  அத்தை 
அதட்டினாள்.

” வயசுக்கு  வந்த  புள்ளைய  வச்சிக்கிட்டு  என்ன  பேச்சு  பேசுறீங்க…?”
அம்மா  கோபமாய்  கீரையை  கசக்கி  எறிந்தாள்.

சுகந்தி  முகத்தை  அழுந்த  துடைத்துக்கொண்டாள். கதிர்  மறுபக்க 
பாக்கெட்டில்  கையைவிட்டு  குடைந்து  கொண்டிருந்தான்.  

” என்ன  தேடறீங்க….?”

8

” பக்கத்துவீட்டு   அக்கா மருந்து  வாங்கிட்டு  வர  சொல்லி  ஐந்நூறு  ரூபா 
குடுத்து  வுட்டிருந்துச்சு. பணத்தைப்  பாக்கெட்டுல   வச்ச ஞாபகம். தேடித் 
பாக்குறேன். காணோம்….”

மெலிதாய்  முனகினான். கண்கள்  குழந்தைமையை  அப்பிக் கொண்டிருந்தன. விகாசம் குறைந்திருந்த  முகத்தை அப்படியே கைகளில் ஏந்தி  முத்தமிட வேண்டும் போலிருந்தது. அப்படியொரு ஆறுதல்  தரும்  பட்சத்தில்  அவன்  சமாதானமாகிவிடுவான் என்றெண்ணியபோது  உடல்  சிலிர்த்துக்கொண்டது.
சுகந்தி  சட்டென தாக்கிய   குற்றவுணர்ச்சியில்  குறுகிக்கொண்டாள். நினைக்கக்கூடாது  என்றெண்ணும்போதே  நினைத்து  முடித்திருக்கும் மனதை  வசப்படுத்திக்கொள்ள  சாமர்த்தியம்  போறவில்லை. தூக்கம் வராது  உழன்று  கிடக்கும்  இரவுகளில்  முரளியை  நினைக்கக்கூடாது என்றெண்ணுவாள். ஹனிமூனுக்கு  மூணாறு  போனது வலுக்கட்டாயமாக  மனதில்  வந்தமரும். முரளி  அடித்த  கூத்து ஞாபகத்துக்கு  வரும். தலையணையை  இறுக்கி  அணைத்துக்கொள்வாள். 

“ஆக்க  வேணாம், எறக்க  வேணாம். அப்படியே  கெடந்தழியணும். “

அவளுடன் இருக்கும்போது முரளி புலம்பிக் கொண்டேயிருந்தான். வாட்சப்பில் குரல் வழி  வழியும் காதல், உப்புக்காற்றில்  உதடுகள்  கரிக்க வெளிப்படுத்திய  வார்த்தைகளின்  கோர்ப்பாக  இருக்காது. தேன்சரடு போல  ஒழுகும். சுகந்தி  அலைபேசியை  மார்போடு  அழுத்திக்கொள்வாள்.
வியர்வையின்  நறுமணம், அதை அப்படியாக கொள்வதற்கு மனம் இணங்கியிருந்த வேளையில்  கதிரின்  வியர்வை யுத்த  நினைவுகளை மீட்டிச்  சென்றது. சத்தமின்றி  நடக்கும்  யுத்தத்தின்  முடிவில் சங்கமிக்கும்  உடல்களின்  வெள்ளம்  வாசனா திரவியங்களுக்கு ஈடானதாய்  அவள்  மூளை  பதிந்து  வைத்திருந்தது. கதிர்  எப்போதும் வியர்த்தபடியே  இருந்தான். 

” சதா  வேர்த்துக்கிட்டேயிருக்குங்க. சள்ளை  புடிச்ச  எழவு….”

ஒருமுறை  கோபமாக  சொன்னான். அப்போதும்  முழங்கையின்  உரசல் 
இடுப்பில்  வியர்வைத்தடத்தை  பதித்தது. 

9

கதிர்  அலைபேசியை  பாக்கெட்டுக்குள்  போட்டுக்கொண்டான்.

“பணத்த  டேபிள்  மேல  வச்சிட்டு  வந்துட்டேனாம். சந்தேகப்பட்டுதான் 
கேட்டேன். அம்மா  சொல்லுச்சு…”

வெள்ளை  விழிகள் மிதந்த  முகத்தில்  திரும்பவும்  விகாசம்.

” நான்  வேலைக்கு  சேர்ந்து  ஆறு  மாசமாச்சுங்க.  நாள்  ஓடிடுச்சு…..” திடீரென்று  ஒருமுறை  சொன்னான். 

” வேலைக்கு  சேந்து  பத்தாவது  நாள்லேருந்து  உங்ககூட  வர்றேன்.
அப்படிப்  பாத்தா  ஒங்களுக்கும், எனக்கும்  அறிமுகமாகி  அஞ்சரை 
மாசமாவுது.”

” ஆமா… ஜூலை  மாசம்  எட்டாந்தேதி  மொதல்ல  பாத்தது.”

” அடியாத்தி… அவ்ளோ  துல்லியமா  சொல்றீங்க. எப்படிங்க…?”

” புடிச்சது  மனசுல  தங்கிடும்ல. ” சுகந்தி  கோட்டளவு  சிரித்தாள்.

” மறைமுகமா  என்னைப்  புடிச்சிருக்குன்னு  சொல்றீங்க. ” வார்த்தை  வரவில்லை. தலை  மட்டும்  அசைந்தது. 

” எனக்கும்  ஒங்கள  ரொம்பப்  புடிக்கும். பொதுவாப்  பொம்பளைங்கள எனக்கு  ரொம்பப்  புடிக்கும். அதுலயும்  ஒங்கள  ரொம்ப, ரொம்ப…” நிறுத்திவிட்டான்.

சுகந்திக்கு  உள்ளுருகி  வழிந்தது. வியர்வை  வாசத்தின் விகாசம்,  பொருந்திய  ஒளியோடு  கூர்ந்தது. 

” பேரு  என்ன  சொன்னீங்க….ஆங், முரளி…..முரளி  சார்  நம்பர்  குடுங்க.
நான்  பேசுறேன். இந்தப்  புள்ளைய  இப்புடி  தவிக்க  வுடுறியேப்பா. பாவம்,
கண்ணு  தண்ணியில  கரைஞ்சிடுமோன்னு  இருக்கு. எனக்கே  பொறுக்கல.
மரியாதையா  வந்து  சேருன்னு  டோஸ்  குடுக்குறேன். மனுசன்  பறந்து 
வருவான்ல.”

” ச்சீ  போடா….”

10

சட்டென  வார்த்தை  வந்துவிட்டது. உடனே  மன்னிப்பு 
கேட்டுக்கொண்டாள். 

” எதுக்குங்க….வாடா, போடான்னே  சொல்லுங்க. கேக்க நல்லாயிருக்கு… எனக்கு  வர்றவளையும்  அப்படியே  சொல்ல சொல்லுவேன். அம்மாவ  தவிர்த்து  என்னைய  யாரும்  அப்படி கூப்புட்டதேயில்ல. ராசா, கண்ணுன்னு செல்லம்  கொஞ்சுவாளுங்க. எனக்குப்  புடிக்கல.  யாராவது  வாடா, போடான்னா  கெறங்கிப் போயிடுவேன். டா  போடுறவ  மடியில  பொதஞ்சிக்கலாம்னு  தோணும். “

சுகந்தி  பாட்டில்  திறந்து  கடகடவென்று தண்ணீரை  முழுங்கினாள்.
கைகளிலும், புடவை கொசுவங்களுக்குள் மறைந்திருந்த கால்களிலும் 
மயிர்க்கால்கள் சிலிர்த்தன. நின்றிருந்த  பெண்மணி  அவனிடமிருந்த 
பையை  வாங்கிக்கொண்டு  சிரித்தாள். நாற்பது  வயதிருக்கும். என்ன 
நினைத்தானோ, கதிரும்  பதிலுக்கு  சிரித்து  வைத்தான்.

” எங்கியோ  பாத்தாப்ல  இருந்துச்சு. ” மெலிதாக  முனகினாள்.

” எனக்குந்தான் ” என்றான்  இவன். பின், ” என்னைமாதிரியே  பொம்பளைங்களுக்கும்  ஆம்பளைங்கள  புடிக்கும் போல…” என்று  கூறி  கண்ணடித்தான்.

ஆறு  மாதங்களாக   பேருந்துக்கு  இறக்கைகள்  முளைத்திருந்தன. தங்கரதத்தின்  சாயலில்  அது  இருந்தது. எங்கும்  பூங்கொத்துகள் மலர்ந்திருந்தன. மேடுபள்ளமான சாலைகளிலும்  அது  மிதவைபோல 
மிதந்து  சென்றது. ஒருநாள்  கூட  தவிக்க  விட்டுவிடாத  கதிரின் அனுசரணையில்  ஜன்னல்  கம்பிகள்கூட  தங்க  முலாம் பூசிக்கொண்டிருந்தன. 

” ஒரு  எட்டு  வருஷம்  நல்லா  சம்பாதிக்கணும். அப்புறம்  ஊருக்கு  வந்து 
சொந்தமா  தொழில்  தொடங்கிட்டு  இங்கியே  இருந்துடணும்.
அப்படித்தான்  நெனச்சிக்கிட்டு  போனேன். ஆனா  நெனச்சது  ஒண்ணு,
நடந்தது  ஒண்ணாப்போச்சு.”

11

ஒருநாள்  அவனாகவே  சொன்னான். இப்படித்தான்  திடீர், திடீரென்று எதையாவது  சொல்வான். அப்போது  முகம்  தீவிரமடையும். சிலநேரம் கோபமாக   பேசும்போது  தாடை  இறுகும். அவளைப்  பற்றியும் விசாரிப்பான். அவள்  சொல்ல,  நெற்றி  சுருங்க  கேட்பான். 

” நீங்களும்  ஒரே  பொண்ணுதானா… நானும் ஒரே புள்ளதான். எங்கம்மாவுக்கு  பத்து  வருஷங்கழிச்சு  பொறந்தபய. ஏழு  வயசு வரைக்கும்  தாய்ப்பால்   குடிச்சி  வளந்தேன். பள்ளிக்கூடம்  வுட்டதும் ஓடிவந்து  அம்மா  மடியில வுழுவேன். அக்கம்பக்கத்துல  இருக்கவங்க கிண்டல்  பண்ணுவாங்க.  எதையும் சட்ட  செஞ்சதில்ல. இப்பவும் அப்படித்தான். எனக்கு  எதுசரின்னு  படுதோ  அதை  செய்வேன்.”
தோள்களைக்  குலுக்கி  சொன்னான்.

” நல்லா  சம்பாதிக்கணும். வந்து  இங்க  செட்டிலாயிடணும். கல்யாணம் கட்டி  அந்தப்புள்ளைய  இங்க  தவிக்க  வுட்டுட்டு  நான்  அங்க  குந்திக் கெடக்கறதெல்லாம்  ஆவாத  வேல…..என்ன  நாஞ்சொல்றது….?” சுகந்தி  சரி  என்பதுபோல்  தலையசைத்தாள்.

பொங்கி  வந்த  மனதை  எப்படிக்  கட்டுப்படுத்துவது  என்று  புரியவில்லை. பெரும்  திறப்பாய்  திறந்து  கொள்ள  தயாராயிருந்த  கண்களை  இறுக மூடியபோது  இடுக்கில்  கசிந்ததில்  கீழிமைகள்  ஈரமாயின.

” உங்ககிட்ட  எப்படி  சொல்றதுன்னு  இருந்தேன். எனக்கே  ரொம்ப சங்கடமாயிருக்கு. பாதி  வீடு  அப்படியே  நிக்கிது. பாக்க  பகீர்ன்னு இருக்குங்க. ஒண்ணரை  வருஷத்துல  ஒரு  வருஷம்  சும்மாவே 
கெடந்தாச்சு. இப்ப  ஆறு  மாசமாதான் கையில  நாலு  காசு  பொழங்குது. ஆனா  வாய்க்கும், கைக்குமே  பத்தல. “

அவன்  திரும்பிப்  பார்த்தான். சுகந்தி  ஜன்னல்  திட்டில்  இடது முழங்கையை  ஊன்றி  கண்களைக்   கையால்  மறைத்தபடி அமர்ந்திருந்தாள்.  உடல் லேசாக அதிர்ந்து  கொண்டிருந்தது. வலது கையின் சிவந்த விரல்கள் மடிமீது துவண்டிருந்தன.

12

கதிர்  அந்த விரல்களைத்  தன்  விரல்களோடு  கோர்த்து  இறுக்கிக்கொண்டான். காத்திருந்தவள்  போல  சுகந்தி  அவன்  புஜத்தில்  சரிந்தாள். 

” இப்படி  அழுவாதீங்க. எனக்கு  சொரேர்ங்குது…..சம்பளமும்  பத்து பர்சென்ட்  அதிகம்  தர்றேங்குறாங்க. முன்னாடி  மாதிரி கெடுபிடியெல்லாம்  இல்ல. போக்குவரத்தும்  சீராயிடுச்சு. ” அவளுக்குக் கேட்க வேண்டுமென்றுதான்  சொன்னான். குரலே எழும்பவில்லை.

சுகந்தி  நிமிரவேயில்லை. வியர்வை  ஊறிய சட்டையில்  ஈரத்தடங்களை  உருவாக்கிக் கொண்டிருந்தாள். அவன் கோர்த்த  விரல்களை  நெஞ்சோடு  அழுத்திக்  கொண்டான். யாரும் கவனிக்காதபோது  மெதுவாக  அவள்  புறங்கையை  நகர்த்தி முத்தமிட்டான். சுகந்தியின்  வயிறு  குலுங்கியது.

” நீங்க  அழுவீங்கன்னு  தெரியும். எனக்குக்கூட  மனசு  படபடங்குது. எங்கம்மா  அழுதுச்சு. ஒண்ணும்  தெரியல. நீங்க  அழுவுறீங்க,  சகிச்சிக்க முடியல. நான்  என்னங்க  பண்றது…”

கதிர்  அவள்  விரல்களை  வலக்கைக்கு  மாற்றி  இடக்கையை  பின்பக்கம் கொடுத்து  அவள்  தோளை  அணைத்துக்  கொண்டான். மேற்கொண்டு என்ன  பேசுவதென்று புரியாமல் சற்றுநேரம் அவளையே  பார்த்தபடியிருந்தான். விரல்களை விடுவித்துக் கொள்ள சுகந்திக்கு மனமில்லை. நன்றாக  நகர்ந்து  அவனருகில்  அமர்ந்து  கொண்டாள். தலை அவன்  புஜத்தில்  மெல்ல  சரிந்தது. 

பிற படைப்புகள்

Leave a Comment