குளிர்
பா.திருச்செந்தாழை

by olaichuvadi

 

இன்னமும் அவள் என்ன செய்கிறாள். பனி இறங்கும் கண்ணாடி அறையுள் குள்ளமான மேனேஜரைப் போன்ற பணம் வழங்கும் இயந்திரத்தின் முன் மன்றாடிக் கொண்டிருந்தாள், வர்ணம் வழியும் சேலை, உடல் விளிம்புகளில் சிறிய பூக்களைப்போல அலங்கரிக்கும் அணிகலன்கள் எல்லாமுமாய் அவளது பதட்டத்தில் மழைத்தண்ணீரில்  அலைபாயும் செடியைப்போல அவளை மாற்றியிருந்தன. நான் மீண்டும் எனது பண அட்டையால் கண்ணாடிக்கதவின் மீது தட்டினேன். உதவு பதட்டப்படுத்தாதே சிறிய கண்கள் எனைக் கெஞ்சின. இந்தக் கோடைகால தார்ச்சாலையில் துயர உடல்களின் படிமமாய் கரும்புத்தட்டைகள் வெயிலில் நெளிந்து கிடந்தன. அவள் உதடுகள் என்னைப் பார்த்து பரிதாபமாய் மீண்டும் மலர்ந்தன. நான் தயக்கமாய் உள் நுழைந்தேன். குளிர் உறைந்து விட்ட அறைகளில் ஒரு முனையிலிருந்து மறு முனையென்பது நீண்ட காலமாகிறது, கயிற்று பாலத்தில் நடப்பவனைப்போல அவளை நெருங்கினேன். பரிவர்த்தனையில் அவள் எதிர்கொண்ட குழப்பத்தை கூறினாள்.

அவளது கணவர் ஐந்து முறை அழைத்தும் தொலைபேசியை எடுக்கவில்லை அவளது குழந்தைகள் இசை பயிலும் வகுப்பிற்கு சென்றுள்ளனர். பண அட்டையையும் ரகசிய எண்ணையும் தயக்கமின்றி கூறிவிட்டு இள மஞ்சள் கிழங்கின் வாசமெழ என்னருகில் நின்றிருக்க ரகசிய எண் எழுதப்பட்ட அவளது மஞ்சள் பூசிய உள்ளங்கைகளை நான் பார்த்தேன். கண்ணாடியின் மீதான விரிசலைப்போல ரேகைகள் விரிந்த உள்ளங்கை அவளது கால் விரலை மெட்டி துக்கு கயிறைப் போல நெரித்திருந்தது. அவ்விரலின் நகக்கண் மட்டும் மௌனித்திருந்தது. இரண்டாவது முயற்சியில் அந்த பரிவர்த்தனையை நான் முழுமைபடுத்தினேன்.

கோடை காலத்தில் சிறிய அறையில் குளிரின் நடுவே தெரியாத பெண்ணிற்கு செய்யும் உதவிகள் குறுகிய காலத்தில் முடிவடைகின்றன. அவள் இரண்டு முறை நன்றி சொன்னாள். ஏனோ நான் சோர்வடைந்து விட்டேன். ரகசிய எண்ணை அவள் கூறிய பொழுது அந்தரங்கமாய் எங்கோ நெருக்கமாகியதைப்போல மகிழ்ந்திருக்க நன்றிகள் சில எல்லைகளை துலக்கப்படுத்தின. அவள் உடனே மிக உடனே அந்த அறையிலிருந்து வெளியேறத் துடித்தாள். செயற்கை குளிரில் ஒரு புதியவனின் அன்பு எங்கெல்லாம் அழைத்துச் செல்லுமென அவளை ஊடகங்கள் எச்சரித்திருந்தன. அவள் சம்பந்தமேயில்லாமல் தனது உடைகளை இறுக்கிக்கொண்டாள். தனது வாசனையின் வீர்யத்தை வர்ணங்களின் மிளிருதலை கொஞ்சமே கொஞ்சமாய்  பிரகாசிக்கத் துவங்கிய அந்தரங்கத்தை அனைத்தையும் ஒரு பாடலின் ஒலியைச் குறைப்பதுபோல குறைத்துக்கொண்டாள்.

ஊனமுற்றவனைப் போல நான் மௌனித்திருக்க அவள் கண்ணாடிக்கதவைத் திறந்து வெளியேறினாள். அவளது வெளிறிய ஸ்கூட்டியில் தனது பழைய தினத்திற்குள் புகுந்து விட முயன்று கொண்டிருந்தபொழுது ஞாபகம் வந்தவனாக நான் விரைந்து அறைக்கதவைத் திறந்து கொஞ்சம் சத்தமாகவே (ஆம் ஏன் அவ்வாறு செய்தேன்) ரகசிய எண்ணை உடனே மாற்றி வடுமாறு கூறினேன். உன் சிறிய ஞாபகங்களை நீயே  கொண்டு செல் என்பது போல மெல்லிய புன்னகையுடன் தனது குளிர் கண்ணாடியை அணிந்த படி தேவையில்லை எனும் விதமாய் தலையசைத்தபடி தனது அலைபேசியை எடுத்து என்னிடம் ஏதோ வினவத் துவங்குகையில் சற்று தள்ளியிருந்த சாலையோரக்கடையின் இரும்பு உருளைகளுக்கிடையே இணைந்து செருகப்பட்ட காய்ந்த கரும்பு தட்டைகளின் உடல்களிலிருந்து தித்திப்பான இளம்பச்சைசாறு வழிந்து பெருகத் துவங்கியது.

பிற படைப்புகள்

Leave a Comment