நாலு மூலைப்பெட்டி
க.சீ.சிவக்குமார்

by olaichuvadi

ஓவியம்: விஷ்ணுராம்


ள் சேர்ப்பதோ அந்த இடத்துக்கு வருவதோ அத்தனை கஷ்டமான காரியம் அல்ல. கால்கள் நேராக அங்கே கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். மாரியம்மன் கோயிலுக்கு முன்னால் இருந்த அந்த மண்டபத்தின் பெயர் குறிஞ்சி என்பதாகும். இந்தக் குறிஞ்சியை என்னோடு இணைந்து விளையாட்டுக்குப் பயன்படுத்திக்கொண்டவர்களை சித்திரிக்க வேண்டுமென்றால் நரை தலையர்கள், சொட்டைத் தலையர்கள், தொந்தி வயிறர்கள் என்றெல்லாம் வர்ணிக்க வேண்டும். அழகர்களும் உண்டு. நரை கூடியும் கூடாமலும் கிழப்பருவத்தை எய்திக்கொண்டிருக்கிறவர்கள்.

“வயசுங்கறது மனசுல இருக்குடா” என்று டீ சர்ட் போட்டுக்கொண்டு வசனம் பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். நானெல்லாம் அந்த வகைதான். ஆனால் பார்க்கிற படுபாவிகளுக்கு மனசா தெரிகிறது? கன்னம் குழிந்ததும் காதோரம் நரைத்ததும்தானே முதலில் விழுந்து கேள்விக்குள்ளாகிறது. உண்மையில் உணர்வு நிலைகளுக்குத்தான் வயசு இல்லை. பல நேரங்களில் விவஸ்தையும் இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்.

செருப்பும் பொறுப்பும் அணியாத பாதங்களின் காலத்திலிருந்துதான் குறிஞ்சியை வர்ணிக்கவேண்டும். கற்கள் பாவிய அதன் தரையே எங்கள் தலைமட்டத்துக்கு இருக்கும். குட்டைப் பயல்களுக்கு அதனினும் உயரமாக இருக்கும். குட்டைப் பயல் சொட்டைத் தலையன் இம்மாதிரியான வார்த்தைகளுக்குக் கோபித்துக்கொள்ளாதீர்கள். நண்பர்களுக்கு இடையே கேலிக்கு என்ன வேலி. இதெல்லாம் அன்பில் விளைவது. புண் படுத்தாத படிக்குச் சொல்லிவிட்டால் மட்டும் அவர்களுக்கு ஒரு அங்குல உயரமோ கூடுதலாக ஒரு முடியோ கிடைக்கப்போவதில்லை.

சச்சதுரமாகப் பரவிய குறிஞ்சியினது தளத்தின் நான்கு மூலையிலும் நான்கு தூண்கள். ஆளினும் உயரமான தூண்கள். அந்தத் தூண்களின் மீதுதான் பனை மற்றும் மரச் சட்டங்களைப் போட்டு கூரை வேய்ந்திருப்பார்கள். பனை ஓலைக் கூரை. நான்கு முக்கோணங்களின் முனைகள் வெட்டிக்கொண்டும் ஒட்டிக்கொண்டும் உச்சி முகட்டில் சங்கமித்திருக்கும்.

குறிஞ்சியில் மேற்குப்பார்த்து நடுவில் உட்கார்ந்தால் எதிரே உள்ள கோயிலிலுள்ள மாரியாத்தாளின் கண்களைப் பார்க்கலாம். அவ்வளவுக்கு கண் திறன் போதாதென்றால் தீபாராதனையாவது தெரியும். கோயிலுக்கு அடித்த கிரில் கேட், வேல்கள், உள் மண்டபத்தின் தூண்கள், உண்டியல் எதுவும் மறைக்காது குறிஞ்சியிலிருந்தே அம்மனைப் பார்க்கும் சில கோணங்கள் இருந்தன என்பது விசேஷம்தான். குறிஞ்சியில் புலப்படும் குளிர்ச்சி கல்லுக்குள் ஈரம் என்கிற தன்மையினாலா அல்லது ஓலைக் கூரையாலா என்பது புதிர்தான்.

குறிஞ்சிக்கு தென்புறத்தில் படிகள் அமைத்திருந்தார்கள். நான்கு படிகள் ஏறி குறிஞ்சியின் தளத்தை அடையலாம். முதல் படி ஏறும்போதே மூச்சிரைக்கவைக்கும் அமைப்பை உடையது அந்தப் படிக்கட்டு. நோம்பு சாட்டுவதற்கான கூட்டம் கூட்டுகிற நாட்களில் மட்டுமே அவற்றை முதியோர் சிலர் பயன்படுத்துவார்கள். அதன் அலாதியான அமைப்பின் காரணமாக அது கண்ணுக்குத் தெரியாத முள்வேலியை தனக்குத்தானே சூடியிருந்தது. குறிஞ்சியின் உயரமாகப்பட்டது அதை அதிகம் உபயோகிக்கும் ஆட்களுக்கு எங்ஙனம் இருந்ததென்றால், இரண்டு உள்ளங்கைகளையும் முதுகுக்குப் பின்னால் கொடுத்து குறிஞ்சியின் தளத்தில் ஊன்றி ‘ஹக்’ என்று லேசாக எம்பினால் அவர்களது ஆசனத்தை உள்வாங்கிக்கொண்டு ஆசுவாசமளிக்கும் விதமாயிருந்தது. உட்காருகிற விதம் விரல் ரேகைகளைப்போல ஒவ்வொருவருக்கும் வித்தியாசங்கள் உடையது.
சிறுவர்களான நாங்கள் அதில் ஏறுவது பல்லி,தவளை,பாம்பு,எலி ஆகிய நான்கினையும் நினைவுகூரும் விதத்தில் இருக்கும். மாரியம்மனுக்கு முதுகுகாட்டிக்கொண்டு ஏறிப் பிறகு விளையாட ஆரம்பிப்போம். மேற்குப் பக்கம்தான் குறிஞ்சியின் முகப்பு என்பதான தோற்றம் உண்டானதற்கு பக்கத்திலிருந்த வேப்பமரம் காரணமாயிருக்கலாம். கோயிலுக்கும் குறிஞ்சிக்கும் இடையில் கறுத்த நிழலும் கசந்த பழமும் தரும் அந்த மரம். இது தவிர, மேற்குப் பக்கத்தின் நிலப்பகுதி மற்ற திசைகளை விட கொஞ்சம் மேடிட்டிருப்பதால் அந்தப் பக்கத்தில் குறைவான உயரத்தில் குறிஞ்சியை எட்டலாம். வடக்கு முகத்தில் உயரம் கூடுதல். கிழக்கு முகம் உயரம் என்ற வகையில் வராது ஆழம் என்ற வகையில் வரும். விளையாட்டின் போது கிழக்கு ஓரத்தில் ஓடும்போது மட்டும் கிணற்றின் ஓரத்தில் ஓடுவதான பிரமையும் திக்பிரமையும் ஏற்பட்டதுண்டு எனக்கு.
படிக்கிறவர்களுக்கு குழப்பம் வரக்கூடாது என்றுதான் குறிஞ்சி மண்டபம் என்று எழுதுவது. மற்றபடி ஊரார் அழைப்பதெல்லாம் குறிஞ்சி என்றுதான். மண்டபம் என்றழைக்க அந்தப் பதினாறடி நீட்டத்தில் நாங்கள் என்ன கல்யாணமா நடத்தினோம் இல்லை காதுகுத்து வைத்தோமா? பதினாறடி நீளம் என்று சும்மா குத்துமதிப்பாகத்தான் சொல்கிறேன். அது இடிந்து போகும் எனத் தெரிந்திருந்தால் குறைந்த பட்சம் அளந்தாவது வைத்திருப்பேன்.

குறிஞ்சி என்றதும் பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பூ எனவோ அல்லது மலையும் மலை சார்ந்த இடமும் என்றோ வினை அல்லது திணை சார்ந்து யோசித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை.

குறிஞ்சியின் மேற்புறமும் பக்கவாடும் கற்கள் கொண்டு பாவப்பட்டிருப்பதால் (கோயில் சொத்து பாருங்கள்! ஆகவே, புண்ணியப்பட்டிருப்பதால் என்று படியுங்கள்) நாம் குறிஞ்சி என்றழைக்க நியாயம் உண்டு. அப்புறம் குறிஞ்சியில் தாயக்கட்டம் ஆடிக்கொண்டிருக்கிறவர்கள் காய்கள் பாதுகாப்பு எல்லையைச் சேரும்போது ”மலை சேர்ந்திருச்சு” ”மலை சேர்ந்திருச்சு” என மகிழ்ச்சியடைவார்கள். புராணமறிந்த சிலபேர் இதே போல ஆறும் பனிரெண்டும் போட்டால் ஒரு மலையிலிருந்து காய்கள் மறுமலை சேருகிற இதே ஆட்டத்தைத்தான் பாண்டவ கவுரவர்கள் ஆடினதாக நம்பி, கண்டன அறிக்கை வெளியிடுவார்கள். இந்த கண்டன அறிக்கையின் பலன் இலங்கையை எதிர்த்து தமிழகம் போடும் தீர்மானங்களுக்கு ஒப்பானது.

தர்ம மகராசாவுக்கு ஆட்டக்கடைசியில் இழப்பதற்கு மணிமுடி இருந்தது. இங்கே ஆடினவர்களுக்கு மண்டை முடி மட்டுமே இருந்தது. ஆனாலும் சமயங்களில் சக்திக்கு மீறி பத்தும் ஐம்பதும் ஆட்டத்துக்குப் பந்தயம் கட்டியும் ஆடுவார்கள். சூதாட்டத்தில் வெல்லும் காசுகள் அடுப்பெரிக்க ஆவதில்லை. நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்திலென்றால் பகடைக்காய்களாக கல், ஓடு, புளிய முத்துக்கள் இருந்தன.

இப்போதும் கற்களுக்குக் குறைச்சல் வரவில்லை. ஓடுதான் கிடைக்கமாட்டேனென்கிறது. ஆகவே ஒரு தரப்பு ஓட்டுக்குப் பதிலாக தீக்குச்சியை ஒடித்து காய்களாக்கினார்கள். அப்புறம் மெழுகுக் குச்சிகள் புழக்கத்துக்கு வரவும் முழுக் குச்சியை காயாகப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். மெழுகுக்குச்சியை மட்டும் நட்டக் குத்தலாக நிற்க வைக்க முடியுமானால் அது நிஜமாகவே ஒரு சிப்பாய்தான். குறிஞ்சி இடிபடுவதற்காக சொல்லப்பட்ட காரணங்களில் ஒன்றாக இந்தத் தாய விளையாட்டும் இருந்தது. சிலபேர் கேரம், செஸ் ஆகியன விளையாடினார்கள். அதன் மீது விமர்சனங்கள் வந்ததில்லை. ஆக பிரச்சனைகள் ஆட்டத்தில் இல்லை தரையில் கோடு கீறுவதில் இருக்கிறது. லட்சுமண ரேகை முதல் கச்சத்தீவு வரை.

குறிஞ்சியில் மேற்கு முகமாக அமர்ந்து கோவில் நுழைவின் உச்சியில் காவடி வடிவத்துள் மென்சிரித்திருக்கும் சுதைச் சிற்பங்களின் கீழாக ஓலைச்சுவடியின் ஒரு கீற்றினை நினைவூட்டும் செவ்வகத்துக்குள்ளாக எழுதியிருப்பதைப் பாருங்கள். ’வல்லமை தந்திடுவாள் பராசக்தி! வாழியென்றே துதிப்போம்!’ அதற்குக் கீழே நின்றுதான் ஐந்து சிறார்கள் சேரும்போது சாட் பூட் திரீ போடுவோம். ஆடுவதற்கு அவசியம் ஐந்து பேர் கூடுவது மட்டுமல்ல அந்நேரம் குறிஞ்சியில் யாரும் இல்லாமலிருத்தலும்தான் அவசியம்.

அஞ்சா நெஞ்சன் கஞ்சா முருகனோ, நாச்சி முத்து மாமாவோ, வேலுச்சாமி சித்தப்பாவோ இல்லாத வேளையாக அது இருக்கவேண்டும். சாட் பூட் திரி என்றால் என்னவென்று தெரியாதவர்கள் ’இங்க்கி பிங்க்கி பாங்க்கி’ என்று புரிந்துகொள்ளலாம் அந்தப் பாடலில் கழுதை செத்துப்போனதால் ஃபாதர் அழுவார். கழுதை வளர்த்தவர்கள் அழவேண்டும் என்பதை என்னிலிருந்துதான் சொல்கிறேன். எப்போதும் கடைசி மனிதன் கழுதையாக ஆகவேண்டும் என்பது வரலாற்று மரபின் கணி(த்)த விதி. காற்றில் காலுதைத்து காலமெல்லாம் சுமக்கவேண்டும்.

ஆனாலும் விசாரித்துவிடலாம் நீங்கள் தந்தைமாரிடம். சாட் பூட் திரீ என்றால் என்ன?

சாட் பூட் திரீ போட்ட ஐந்து பேரில் தோத்தாங்குளி நடுவில் நிற்கவேண்டும். இங்கே ஒரு தகவல். நாங்கள் பாரம்பரியமாகவே மரியாதைப் பட்டவர்கள் ஆகையால் தோத்தாங்குளியை ’தோத்த காளி’ என்றே அழைப்போம். ஆட்டக் காரர்கள் நால்வரும் நான்கு தூண்களிலும் சாய்ந்து தூணுக்கு ஒருவராக நின்றுகொள்ள வேண்டியது. தோத்த காளி நடுவில் சுமாரான வேகத்தில் கடிகாரச் சின்ன முள் போலச் சுற்றிக் கொண்டே வர அவன் அசரும் நேரம் ஆட்டக் காரர்கள் புயல் வேகமாகப் பாய்ந்து தூண்கள் மாறிமாறி ஓடி நின்று கொள்ள வேண்டியதுதான். அடுத்த தூணைப் பற்றியதும் வரும் பாருங்கள் கெலிப்பின் கெக்கலிப்பு. அடடா… ரிலே ரேசைப் போல அடுத்தடுத்த தூண்கள் நோக்கியும் ஓடலாம். எதிரெதிர்த் தூண்களில் உள்ளவர்களும் பரஸ்பரம் மாறிக்கொள்ளலாம். இந்த ஓட்ட இடைவெளிகளில் காலியான தூணை தோத்த காளி பிடித்துவிட்டால் அந்தரத்தில் நிற்கிறவன் தோற்றவனாகிவிடுவான். தாவி ஓடுவோரில் தகவல் தொடர்புப் பிழை இருந்தால் பெட்டியை எளிதில் தோத்தான் கைப்பற்றிவிடுவான். ஒருவகையில் இது கிரிகெட்டின் ரன் அவுட்டை நினைவூட்டக் கூடியது.

ஆட்டத்தில் தூணுக்கான இடம்தான் பெட்டி என அழைக்கப்பட்டது. நாலு மூலைப் பெட்டி. நாங்கள் மரியாதைப்பட்டவர்கள் மட்டுமல்ல தர்க்க ரீதியிலானவர்களும் கூட. இந்த ஆட்டத்தில் ஓட்டம் பிரதானமென்பதாலும் ஓட்டத்துக்கு கால் அவசியம் என்பதாலும் வட்டார மொழியில் நாங்கள் இதைச் சொன்னது ’நாலு மூலைப் பொட்டி’.
ஒரு பொட்டியை ஆட்டக்காரனும் தோத்தகாளியும் ஒரே நேரம் கால்பற்றுகிற போது பிரச்சினை வெடிக்கும். மூன்றாம் உரையாடலுக்கு மாரியம்மனைக் கைகாட்டி ”ஆத்தா மேல சத்தியமா நீதான் வந்தேன்னு சொல்லுடா” என்கிற இறைஞ்சுதல் ஆரம்பமாகும். அப்புறமும் குறிஞ்சிக்கு ஆட்கள் வரும்வரை ஆட்டம் நடக்கும். ஆனால் எங்க ஊர் மாரியம்மன் ஒரு நாளும் இந்த சத்திய அசத்தியங்கள் மேல் நடவடிக்கை எடுத்ததில்லை. மண்ணுக்கேத்த பெண் தெய்வம் அவள். ஆட்களின் கனவுகளில் கூட வருவதில்லை.

நான்கு தூண்களிலும் சிற்ப வேலைப்பாடுகள் இருந்தன. எவ்வளவோ நாட்கள் ஆட்டங்கள் கழிந்தபின் திடீரென யாரோ சொல்லிக் காட்டி தென்மேற்குத் தூணின் வடக்குப் பக்கத்தில் அந்தச் சிற்பத்தைப் பார்த்தேன். இப்படி கூரையைத் தாங்கிக் கொண்டு நால்வெளித் தூணாய் நிற்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால் ஒவ்வொரு தூணுக்கும் இரண்டிரண்டு திசைகள் சொந்தமாகிவிடும். அரங்க நாயகர்கள் அதன் மீதுதான் முதுகு சாய்த்து அமர்வார்கள். அந்தத் தூணின் மற்றொரு சிக்கல் அந்தச் சிற்பம். அந்தச் சிற்பத்தைப் பலபேர் தொட்டுத் தொட்டுப் பார்த்து உலோகப் பளபளப்பைக் கடந்து அது பாதரசப் பளபளப்பை நெருங்கிக்கொண்டிருந்தது.

சிற்பத்தின் செய்தி சுருக்கமானது. ஒரு நாயும் ஒரு பெண்ணும் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள். பெண் ஒரு காலைத் தூக்கிக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறாள். நாய்கள் உடை அணிவதில்லை. ஆகவே அதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் பெண்? சிற்பத்தில் ஆச்சரியம் இருந்தது. நாயாகப்பட்டது காவிரி ஆறு கஞ்சியாய் ஓடினாலும் அது என்ன செய்யுமோ அதையே செய்துகொண்டிருந்தது. இக்கதையில் இது முக்கியமேயில்லை என்றாலும் ஊருக்கு வரும் என் நண்பர்களுக்கெல்லாம் அதை ஏன் மறக்காமல் காட்டினேன் என்பதுதான் புரியவில்லை.

குறிஞ்சியின் பயன்பாடு என்று பார்த்தால் விசேஷ நாட்கள் விழா நாட்களில் ஒரு சாரார் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் களிக்க நல்ல இடம். அப்புறம் நோம்பு சாட்டுவது பற்றி முடிவெடுக்க கிராம அடங்கல் பதினெட்டு ஊர்களைக் கூட்டிப்பேசவும் அதுதான் இடமாக இருந்தது. இப்போது அப்படியான கூட்டங்களை கோயிலுக்குள்ளேயே வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு கட்டித்தான் குறிஞ்சியைத் தரைமட்டமாக்கியது. வெள்ளிக்கிழமை ஊர்ச் சந்தைக்கு வரும் வியாபாரிகள் விவசாயிகள் சிலர் படுக்கவும் நாடோடிக் கும்பல் யாரேனும் வந்தால் தங்குவதற்குத் தோதாகவும் இருந்தது இப்போது இல்லாமற் போய்விட்டது.

எனக்கு ஒரு கையெழுத்திடப்படாத கடிதம் ”உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன் குறிஞ்சியில் உட்கார்ந்து கெட்டுப்போகிறீர்கள்?” என்று இருபத்தி ஐந்தாவது வயதில் வந்திருக்கிறது. பெண் எழுதியதற்கான தோரணை கடிதத்தில் இருந்தது. நண்பர்கள் யாரும் எழுதியிருப்பார்கள் என நம்புவதற்கில்லை. நகைச்சுவை உணர்ச்சி உண்டென்றாலும் அதற்காக இன்லேன்ட் லெட்டருக்கு காசு செலவழிக்கும் அளவு முட்டாள்கள் இல்லை.

அந்தக் கடிதத்தாள் கேட்டுக்கொண்டபடி குறிஞ்சியே இல்லாமற் போனபின் வாழ்வில் ஒளி வருமா எனப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும். ஆனால் ஆரம்ப சூசனை அவ்வளவு நன்றாக இல்லை.

”அவடத்திக்கு கெடந்துக்கிட்டு சாமி முன்னால கால நீட்டிப் படுத்திருக்கறானுக இது ஒன்னும் சரி வராது” என்றும் சில குரல்கள் ஒலித்து மொத்தத்தில் குறிஞ்சியை  இடித்தாயிற்று. இடித்து விட்டு அதே இடத்தில் அதே நான்கு கால்களைக் கொண்டு முழங்கால் அளவு உயர மேடையிட்டு பொடக்காளி சைசுக்கு மாற்றுக் குறிஞ்சியையும் கட்டியாயிற்று. எல்லாம் சமீபத்தில் நடந்த கும்பாபிஷேகத்தை ஒட்டித்தான். கும்பாபிஷேகம் என்றால் மராமத்துதான். அதை இடிக்கும் முன் யாராவது சாட் பூட் திரீ மூலம் முடிவு செய்திருக்கலாம். வயசானால் விளையாடியதெல்லாம் மறந்துபோய்விடுகிறது பெரியவர்களுக்கு. பிறக்கும் போதே நரைத்த தலையுடன் பிறந்த மாதிரி தான் முடிவெடுக்கிறார்கள்.

ஒரு வரலாற்றுப் பாரம்பரியச் சின்னம் தொலைந்ததுபோல நான் வருந்தத் தேவையில்லை. அந்தக் குறிஞ்சியின் வயது நாற்பதே ஆண்டுகள். வளரத்தாழ என் வயதுதான். ஒரு தலைக்கட்டுக் காலத்தில் தனது ஞாபகங்கள் மற்றும் இருப்பை முடித்துக்கொண்டுவிட்டது. ஒரு தலைக்கட்டு என்பதில் முன்னியும் தொடரியுமாக மூன்று தலைமுறைகள் சம்பந்தப்பட்டுவிடுவதுதான் அந்த நான்கு தூண்களை மறக்கவியலாததாக ஆக்குகிறது.

நான் முடிவுக்கு வந்தேன். காலத்தால் அழியாத காவியம் ஒன்றில்லை. மனிதன் படைத்ததை மனிதன் அழிப்பது அவனது கைங்கர்யம். காலத்தால் அழியாதது காலம் ஒன்றேதான். அந்த ஒன்றும் நிலைத்து நில்லாதது.

இவ்வளவு வக்கண வேய்க்கானம் பேசிக்கிட்டு போன மாச மதியத்தன்னிக்கு என்ன ஆச்சுன்னு கேளுங்க! அன்னிக்கு வெசாளக்கெழம ராத்திரி… சந்தை கூடறதுக்கான ஏற்பாடெல்லா முசுங்கரமா நடந்துக்கிட்டிருக்குது. எனக்குன்னா கண்ணே கொள்ளாத போத, நடந்ததெல்லா துண்டு துண்டா போட்டா போட்டாவா இருக்குது சமந்தமில்லாம சமந்தமில்லாம. கன்னத்துல காய எப்ப ஆச்சு எப்டி ஆச்சுன்னே தெரீல.

இந்தப் பாழாப் போன இடிஞ்சு போன குறிஞ்சி இருந்துருந்துச்சுனா அதுலயாவது படுத்துத் தொலஞ்சிருப்பன். ம்…என்ன்ன ஆச்சுங்கறீங்க? ஊருக்கு வடக்கால. அதொரு ரண்டு மைலு இருக்கு. நேரா வஞ்சீம்மங் கோயலுக்குப் போயி அங்க கோயிலுக்கு முன்னாலயே வெறுந்தரைல படுத்துட்டன். அன்னைக்குனு அங்க சாமி கும்புடு வேற. எத்தன பேரு பாத்துச் சிரிச்சாங்களோ.. யாரோ சொல்லி எந்தம்பி வந்து என்னய ஊட்டுக்கு இழுத்துக்கிட்டு போனான்.

அவமானத்துல சிறுத்துப்போயிட்டன். அவமான மட்டுந்தானா வேற எதனாச்சீமா. என்ன கருமமோ? எத்தன சென்மத்து வெனையோ? சிறுத்துச் சிறுத்து ரொம்பச் சின்னதாப் போயிட்டன். எனத்தத்தாம் பண்றது? உன்னிமே இதா இப்பக் கட்டீருக்கறாங்க பாருங்க. அந்தக் குறிஞ்சீல போயி நாலுமூலைப்பொட்டி வெளையாடவேண்டீதுதான்.
தவள எலி பல்லி பாம்பு அப்பறம் நானு.

பிற படைப்புகள்

Leave a Comment