’பதேர் பாஞ்சாலி’ போன்ற ஓர் படத்தை இயக்குவது மிகக் கடினமானது – இயக்குநர் மஜித் மஜிதி
நேர்காணல்: ரகுவேந்திர சிங் தமிழாக்கம்: ராம் முரளி

by olaichuvadi

 

சர்வதேச அளவில் புகழப்படும் ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதியின் சமீபத்திய திரைப்படமான ‘Beyond the Clouds’ இந்தியாவைக் களமாக கொண்டிருந்தது. தனது யதார்த்த வகை திரைப்படங்களுக்காக, கொண்டாடப்படும் மஜித் மஜிதி, நடுத்தரக் குடும்பங்களின் வாழ்வியல் நெருக்கடிகளை தொடர்ச்சியாக தனது திரைப்படங்களில் பதிவு செய்து வருபவர். தெருவோர வியாபாரிகளும், அகதிகளும், கடுமையான உடலுழைப்பை கோருகின்ற பணி செய்பவர்களும்தான் இவரது மைய கதாப்பாத்திரங்கள். சமூகத்தின் கீழ்நிலையில் உழல்கின்ற இந்த மனிதர்களின் நம்பிக்கையை, நிராகரிப்பை, கோபத்தை, அன்பை அதன் முழு நம்பகத்தன்மையுடன் உணர்வுப்பூர்வமாக தனது திரைப்படங்களில் வெளிப்படுத்தியவர். குறிப்பாக, சிறுவர்களின் உலகத்தை நுட்பமாக பதிவு செய்திருக்கிறார்.

1997ல் வெளியான ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ திரைப்படத்தின் மூலமாகவே வெளியுலகுக்கு அறியப்பட்டார். இந்த திரைப்படம் உலகளவில் பல விருதுகளை வென்றதோடு, ஆஸ்கார் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் தேர்வு செய்யப்பட்ட முதல் ஈரானிய திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறது. தொடர்ச்சியாக இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களுக்கும் பெருவாரியான ஆதரவு பெருகியது. தற்காலத்தின் மிகச் சிறந்த இயக்குனராக கருதப்படும் மஜித் மஜிதியிடம் பிலிம்ஃபேர் இதழைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரகுவேந்திர சிங் மேற்கொண்ட நேர்காணலின் தமிழ் மொழிப்பெயர்ப்பு இது. இந்த நேர்காணலில் மஜித் மஜிதி தனது திரையுலக பயணம் குறித்தும், அண்மை காலத் திரைப்படமான ‘பியாண்ட் தி கிளவுட்ஸ்’ குறித்தும் உரையாடியிருக்கிறார்.

மறக்க முடியாத உங்களது பிறந்தநாள் நினைவைப் பற்றி பகிர்ந்துக் கொள்ள முடியுமா?

உண்மையில் நான் ஒருபோதும் இவ்வகையில் சிந்தித்ததே இல்லை. ஆனால், ஆண்டுவாரியாக எனது ஒவ்வொரு பிறந்தநாள் தினத்தையும் மனதில் அசைபோடும்போதும், நான் உணர்வது என்னவென்றால், வாழ்க்கை மிக வேகமாக கடந்து கொண்டிருக்கிறது என்பதைதான். நான் எனக்குள்ளாக சொல்லிகொள்கிறேன், “நான் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன” (சிரிக்கிறார்). உண்மையில், நீங்கள் என் பிறந்த தினத்தை நினைவுக்கூர்ந்து இந்த கேள்வியை கேட்கையில், எனது அடுத்த பிறந்த தினம் இன்னும் சற்றே தாமதமாக சில மாதங்கள் கடந்து வந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணமே மனதில் முதலில் மேலிடுகிறது (சிரிக்கிறார்). சிலர் வயது என்பது வெறும் எண் கணக்கு மட்டுமே என்று கூறுவது உங்களுக்கு தெரிந்திருக்கும். எனினும், வயது உங்களது உடலில் தனது ஆதிக்கத்தை செலுத்துவதை உங்களால் எதுவும் செய்ய முடியாது.

ஒருநாள் நான் எனக்குள்ளாக கேள்வியெழுப்பிக் கொள்வேன், “நான் நிறைய வேலை செய்ய ஆசைப்படுகிறேன். ஆனால் என் காலம் ஏன் இவ்வளவு விரைவாக நகர்ந்து கொண்டிருக்கிறது?” (சிரிக்கிறார்). முப்பது வயதுதான் திரைப்படம் இயக்குவதற்கு உகந்த வயது. அப்போது உங்களால் மிகுந்த சுறுசுறுப்புடன் தன்னம்பிக்கையுடன் இயங்க முடியும். முப்பது வயதிலேயே நிலைப்பெற்றுவிட்டால் நன்றாக இருக்கும் என எப்போதும் நான் நினைத்துக்கொள்வதுண்டு. அதனால், நான் முப்பதுக்கும், முப்பத்தைந்துக்கும் இடைப்பட்ட காலத்திலேயே தேங்கிவிட்டதாக நம்புகிறேன். மிச்ச வருடங்களை பற்றிய கவலை எனக்கில்லை (சிரிக்கிறார்). பிறந்தநாள் தினங்களை பற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு, அதனையெல்லாம்  நினைவுகளில் இருந்து அழித்துவிடுவதே சரியான காரியமென்று கருதுகிறேன்.

எந்த வயதில் உங்களுக்கு திரைப்படங்கள் அறிமுகமாயின? திரைப்படங்கள் பற்றிய உங்களது துவக்க கால நினைவுகளை பகிர்ந்துக்கொள்ள முடியுமா?

மேல்நிலை கல்வியின் துவக்கத்தில், நான் மேடை நாடகங்களின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தேன். எனக்கு பதிமூன்று – பதினான்கு வயது ஆகும்போது, நான் பள்ளி மேடை நாடகங்களில் சிறிய அளவில் பங்கேற்றிருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் இந்த ஈடுபாடு தீவிரமடைந்துகொண்டே போனது. நாடகப் பள்ளியில் இணைந்து பயில வேண்டுமென்றும் விரும்பினேன். ஆனால், நாடக உலகில் இயங்கத் துவங்கியதற்கு பிறகுதான், அது மிகவும் சிறிய உலகம் என்பது புரிந்தது. அதுவொரு தாழிடப்பட்ட உலகத்தைப்போல தனித்து இயங்கிக் கொண்டிருந்தது. அப்போதுதான் திரைத்துறை மிக வலுவான ஊடகம் என்பதை உணர்ந்துக்கொண்டேன். நாடக கல்வியை பயிலும்போதே, திரையுலகம் பற்றிய எண்ணங்களால் எனது மனது ஈர்க்கப்பட்டிருந்தது.

எனக்கு இருபது வயது ஆகியிருக்கும்போது, முழுவதுமாக நான் திரைப்படங்களின் திசையில் செல்ல முடிவெடுத்திருந்தேன். அதனால், சிறிய அளவில் குறும்படங்கள் இயக்குவதன் வாயிலாகவும், திரைப்பட நடிப்பு அனுபவத்தை புரிந்துகொள்ள, குறும்படங்களில் நடிப்பதன் மூலமாக, திரையுலக பயணத்தைத் துவங்கினேன். நான் சில பரீட்சார்த்தமான முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். அதோடு, என்னை சுற்றிலும் அப்போது ஒரு சிறு குழுவும் வந்து இணைந்திருந்தது. நாங்கள் கூட்டாக இணைந்து செயல்பட்டோம். நான் அவர்களுக்காக சில குறுப்படங்களில் நடித்துக் கொடுத்தேன். அதன் தொடர்ச்சியாக, அவர்கள் இயக்கிய முழு நீளத் திரைப்படங்களில் சிறிய அளவில் நடித்தேன்.

அந்தத் திரைப்படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருந்தது. அவைகளில் இரண்டு திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அப்போது எனக்கு இருபத்தைந்து வயது ஆகியிருந்தது. இந்த வெற்றிகளின் மூலமாக, பல தயாரிப்பாளர்கள் என்னை தங்களது திரைப்படங்களில் நடிக்க அணுகினார்கள். ஆனால், உண்மையில் எனக்கு நடிப்பு விருப்பமானதாக இருக்கவில்லை. நான் துவக்க காலங்களில் திரைப்படங்களில் நடித்ததுகூட ஒரு அனுபவத்துக்காகத்தானே தவிர, எனக்கு நடிகனாகும் ஆசை ஒருபோதும் இருந்ததில்லை. அதனால், உடனடியாக ஆரம்ப நாட்களிலேயே நடிப்பு தொழிலில் இருந்து வெளியேறிவிட்டேன். நடிப்புத் துறையிலேயே என் வாழ்நாள் முழுக்க முடிந்துவிடக்கூடும் என்கின்ற பெருங்கவலை எனக்கு இருந்தது. ஏனெனில், நான் முழுமையான ஒரு உலகத்தை சுயமாக உருவாக்க விரும்பினேன். அதனால், மற்றவர்கள் உருவாக்கிய உலகத்தில் நடிகனாக இயங்க என்னால் முடியாமல்போனது. எனக்கு பல நடிப்பு வாய்ப்புகள் வந்து கொண்டிருந்த காலத்தில், அதனை முற்றாக மறுத்து ஒதுங்கினேன். அவைகளை ஏற்றிருந்தால், எனக்கு பெரும் பணம் கிடைத்திருக்கும். அதே தருணத்தில், நான் நினைத்திருக்கும் திரைப்படங்களை இயக்குவதற்கான பணமும் என்னிடம் இல்லை. நான் தயாரிப்பாளர்களை தேடிக் கண்டடைய வேண்டிய நிலையில் இருந்தேன்.

உள்ளுக்குள் நடிகனாக ஒரு சில திரைப்படங்களில் நடித்துவிட்டு, அந்த பணத்தை வைத்துக்கொண்டு திரைப்படம் இயக்கலாம் என்கின்ற எண்ணமும் அக்காலத்தில் நெடுநெடுவென வளர்ந்தபடியே இருந்தது. எனினும், நடிப்புத்துறை என்னை அதிலிருந்து மீள விடாமல் அமிழ்த்திக்கொள்ளும் அபாயமிருந்ததால், அந்த எண்ணத்தைக் கைவிட்டேன். அதனால், நான் சிறிது சிறிதாக குறும்படங்களை இயக்குவதன் மூலமாக, 1992 – 93 வாக்கில் திரைப்படம் இயக்கும் நிலைக்கு என்னை வளர்த்தெடுத்தேன்.

முதல் திரைப்படமே என்னை கேன்ஸ் திரைப்பட விழா வரை உயர்த்திச் சென்றது. அதன் மூலமாக பல திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர்களின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. இந்த வெற்றிதான் எனது அடுத்தடுத்த திரைப்படங்களுக்கான நம்பிக்கையையும், ஆதரவையும் அளித்தது. நான் முதல் திரைப்படம் இயக்கும் முயற்சியில் இருந்த அந்த நாட்கள் மிகவும் கடினமானவையாக இருந்தன. கலைத் திரைப்படங்களுக்கு போதிய அங்கீகாரம் மக்களிடத்தில் கிடைக்காமல் இருந்தது. அதனால் வணிக வெற்றியென்பது எங்களது திரைப்படங்களுக்கு கற்பனை செய்யக்கூட முடியாத இடத்தில் இருந்தது. ஆனால், எனது மூன்றாவது திரைப்படமான  ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ திரைப்படம் வெளியானதும் இந்த நிலை முற்றிலுமாக மாறிப்போனது. அந்தத் திரைப்படத்தை நான் பல்வேறு நெருக்கடிகளைக் கடந்துதான் படமாக்கி முடித்தேன்.

துவக்கத்தில் அந்த திரைப்படத்துக்கு நிதியளிக்க ஒருவரும் முன்வரவில்லை. எவரும் சில்ட்ரன் ஆஃப் ஹெவனை புரிந்துகொள்ளவும் இல்லை. ஆனால், அந்தத் திரைப்படம் வெளியானதும் எனது வாழ்க்கைப் போக்கே மாறிவிட்டது. பல சாத்தியங்களை அந்த திரைப்படம் எனக்கு உருவாக்கிக் கொடுத்தது. கிட்டதட்ட அறுபத்து ஐந்து விருதுகள் அந்த திரைப்படத்துக்குக் கிடைத்திருந்தது. அதோடு ஆஸ்கார் விழாவில் பங்கு கொண்ட முதல் ஈரானிய திரைப்படம் என்ற அங்கீகாரமும் கிடைத்தது. அத்திரைப்படத்திலிருந்துதான் எனது வாழ்க்கைப் பாதை இன்று நான் வந்தடைந்திருக்கும் திசையில் பயணிக்கத் துவங்கியது.

திரைப்படம் இயக்குவதற்கு திரைப்படக் கல்வி அவசியமென்று கருதுகிறீர்களா?

திரைப்பட கல்வி நல்லதுதான். ஆனால், அது அவசியமென்று சொல்ல மாட்டேன். திரைப்படக் கல்வி உங்களுக்கு சில அடிப்படை புரிதல்களை வழங்கலாம். ஆனால், இத்தகைய கல்வி மட்டுமே உங்களை ஒரு திரைப்படப் படைப்பாளியாக மாற்றிவிடாது. இந்தியாவிலும் பல இளைஞர்கள் திரைப்படக் கல்வியை பயின்று வருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். ஆனால், அவர்களில் எத்தனை பேர் திரைப்படப் படைப்பாளிகளாக உருவாகியிருக்கிறார்கள்? நெடுங்கால பாதிப்புகளை மக்களிடத்தில் உண்டாக்கக்கூடிய திரைப்படங்களை எப்படி ஒருவர் திரைப்பட கல்வி மூலமாக மட்டுமே உருவாக்கிட முடியும்?

திரைப்பட கல்வியை விடவும் பல முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன என்று சொல்ல வருகிறேன். இதுவொரு வாழ்வியல் அனுபவத்தைப்போலதான். எவ்வளவு அதிகமாக நாம் தொழிற்நுட்ப ரீதியில் திரைப்படங்களை அணுகி பயில்கிறோமோ அந்த அளவுக்கு நாம் வாழ்க்கையிடமிருந்து விலகிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். நமக்கு கோட்பாடு ரீதியிலான பார்வைதான் முக்கியமாகப்படுகிறது. நாம் வாழ்க்கை அனுபவத்தை பெருக்கிக் கொள்வதும் இல்லை, வாழ்க்கையை அதன் அசலான நேரடித்தன்மையுடன் அணுகுவதும் இல்லை. அதோடு, தொழிற்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை மட்டும் பெற்றதும் உடனடியாக ஸ்டுடியோவுக்கு சென்று திரைப்படங்களை இயக்கத் துவங்க வேண்டுமென விரும்புகின்றனர். ஆனால், ஒரு கலைச் செயல்பாட்டில் பங்குபெற மேலும் பல விழுமியங்கள் நிச்சயமாகத் தேவை. உங்களுக்கு தெரியும், ஒரு ரொட்டியை தயாரிக்க வேண்டுமானால், வெறும் அடுப்பு மட்டுமே போதாது. விதையாக நிலத்தில் கோதுமை ஊன்றப்படும் தினத்திலிருந்து அந்த பணி துவங்குகிறது இல்லையா? ஏனெனில், அந்த கோதுமை தேவையான உரத்தை உறிஞ்சி உயிர்பித்து காலமெடுத்து வளர்ந்திருக்காவிட்டால், உங்களால் அதை பயன்படுத்த முடியாதல்லவா?

முதலில் உங்களுக்குத் திறமை இருக்க வேண்டும். திறமைக்கும், ஒன்றை விரும்புவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. நான் திரைத்துறையில் பல மனிதர்களை பார்த்திருக்கிறேன். அவர்களிடம் மிகுந்த குழப்பம் நிலவுகிறது. அவர்கள் விரும்புவதற்கும், அவர்களிடம் உண்மையிலேயே இருக்கின்ற திறமைக்கும் இடையிலான வேறுபாட்டை அவர்களால் உணர முடிவதில்லை. ஒரு ஆசிரியராக விரும்புகிறவர், நிறைய கோட்பாடுகளை உள்வாங்கி பயில்வதன் மூலமாக, சிறந்த ஆசிரியராக உருவாகலாம். ஆனால், ஒரு திரைப்படப் படைப்பாளி ஆக முடியாது. ஏனெனில், திறன் என்பது முற்றிலும் வேறானது. திரைக்கலையை கல்வி பயில்வதைப்போல படித்து சிறந்த திரைப்படப் படைப்பாளி ஆவதெல்லாம் சாத்தியமே இல்லாதது. நாம் நமது விருப்பத்தையும், திறனையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. ஒவ்வொரு நூறு நபர்களில் ஒருவராவது திரைத்துறையில் பங்கேற்க வேண்டுமென்கின்ற ஆசை கொண்டிருக்கிறார்கள். அவர்களில் எழுபத்து எட்டு சதவிகித நபர்கள் வெறும் விருப்பம் மட்டுமே கொண்டிருக்கிறார்களே தவிர, திறமையை அல்ல. அதேபோல, வாழ்க்கை அனுபவத்தை எதைக் கொண்டும் பதிலீடு செய்துவிட முடியாது.

நான் ஒரு திரைப்படப் பல்கலைக்கழகத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். திரைக்கலை கல்வி நான்கு வருடங்கள் என்றால், முதல் இரண்டு வருடங்களில் அவர்களை அனைத்து விதமான கோட்பாடுகளையும் கற்கச் செய்துவிட்டு, அடுத்த இரண்டு வருடங்களில் அவர்களை சமூகத்தை புரிந்துக்கொள்ளவும், சமூக அவலங்களையும், பாடுகளையும் உணர்வதற்காக வீதிகளுக்கு அனுப்பி விடுவேன். நீங்கள் உங்களை அறிந்து வைத்திருக்கும் அளவுக்கு, உங்களது மக்களையும், கலாச்சாரத்தையும், அதோடு உங்களது சமூகத்தையும் அறிந்திருக்க வேண்டும். திரைக்கலை மாணவர்கள் பலருக்கும் அவர்களது வசிப்பிடத்திலிருந்து நீண்டு கல்லூரியை அடையும் பாதை மட்டுமே தெரியும். அவர்களுக்கு அவர்களது சொந்த நகரத்தைப் பற்றியே தெரியாது. உங்களுக்கு உங்களது கலாச்சாரத்தையும், மக்களையும், சமூகத்தையும் பற்றிய புரிதல் இல்லையென்றால், எப்படி உங்களால் திரைப்படங்களை இயக்க முடியும்?

நான் அறிவுத்திரட்டு குறித்து குறிப்பிடுவது, மேம்போக்காக செயற்கைத்தன்மையில் அறிந்துக்கொள்வதை அல்ல. ஆழ்ந்து ஆய்வுகளின் மூலமாக கற்றுத் தேர்வது. கலையின் மிக முக்கியமான ரகசியங்களில் ஒன்று எதனையும் கூர்ந்து அவதானிப்பது. ஏனெனில், திரைப்பட கலையே சிறு சிறு நுணுக்கமான விபரங்களில்தான் வளர்ச்சியுறுகிறது. திரைப்படத்தில் இத்தகைய எளிய விபரங்களும் தருணங்களும் இல்லையென்றால், நிச்சயமாக அதனை நல்ல திரைப்படம் என்று வகைப்படுத்த முடியாது. சில சமயங்களில், மிக நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட திரைப்படங்களை நாம் பார்வையிடுகிறோம். ஆனால், அதில் ஆன்மா இல்லாதிருப்பதை உணர்கிறோம். இந்த அதிருப்தியை மிகச் சிறிய நுணுக்க விபரங்களினால்தான் கலைக்க முடியும்.

நீங்கள் மிகச் சிறந்த உணவை உண்ணுகிறீர்கள் என்றாலும், அதனது சுவையை உங்களால் உணர முடியாமல் இருக்கிறது என்பதற்கு நிகரானது இது. நீங்கள் தொழிற்நுட்பங்களை, திரைப்படங்களை இயக்கும்போது கூட பயில முடியும். ஆனால், திரைப்படங்களின் முக்கியமான கூறு என்னவென்றால், அதனுள் உறைந்திருக்கின்ற ஆன்மாதான். சில தருணங்களில், நாம் பார்ப்பவை அர்த்தமற்றவையாக, மேம்போக்காக கட்டியெழுப்பப்பட்டதாக தெரியும். முழுமையான உருவத்தைக் கொண்டிருந்தாலும், ஆன்மா இல்லாமல் கிட்டதட்ட இயந்திரத்தனமாக அவை செயல்படுவதாகத் தோன்றும். அதேபோல, திரைப்படங்களில் நாம் வெறும் தொழிற்நுட்பங்களை மட்டும் கற்றுக்கொண்டு – குளோஸ் அப் எப்படி வைக்க வேண்டும், லாங் ஷாட் எப்படி வைக்க வேண்டும், எப்படி மிட் ஷாட்டில் இருந்து குளோஸ் அப்புக்கும் தாவ வேண்டும் – திரைப்பட இயக்கத்தில் செயல்பட்டால், நிச்சயமாக அவை ஒருபோதும் பயனளிக்கப் போவதில்லை. எதற்காக இத்தகைய ஷாட்டுகள் அவசியம் என்பதை நிச்சயம் ஒருவர் அறிந்திருக்க வேண்டும். இத்தகைய காட்சி அமைப்புகளின் அர்த்த வெளிப்பாடுகள்தான் அவசியமே தவிர, காட்சி அமைப்புகளின் தேர்வு மட்டுமே முக்கியமானதில்லை. இத்தகைய நுண்ணுணர்வை நாம் அனுபவத்தின் மூலமாகத்தான் கைக்கொள்ள முடியும்.

ஒவ்வொரு பிரத்யேக ஷாட்டுக்கும், தனித்துவமான பார்வையும், தத்துவமும் பொதிந்திருக்க வேண்டுமென்று கூறுகிறேன். எதற்காக நாம் ஒரு குளோஸ் அப் வைக்கப் போகிறோம், எதனால் இரண்டு ஷாட்டுகளுக்கு இடையில் சிறிய அசைவு இருக்கிறது போன்றவையெல்லாம் சேர்ந்துதான் ஒரு திரைப்படத்தின் ஆன்மாவைத் தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு தனித்தனி காட்சிப் பதிவிலும் உயிர் நிறைந்திருந்தால்தான், முழுமையான ஆன்மாவை நம்மால் திரைப்படத்தில் உருவாக்க முடியும். ஒவ்வொரு காட்சிப் பதிவும் பிரத்யேகமான விளைவுகளைப் பார்வையாளர்களிடம் உண்டாக்கும் தன்மை கொண்டது. இத்தகைய கூருணர்வை பெற்றிட வாழ்வியல் அனுபவம் மிகப்பெரிய அளவில் பங்காற்றும். நீங்கள் குறும்படங்கள் இயக்குவதன் நீட்சியாக திரைப்படத்தை அணுகுவது நல்ல பயனை அளிக்குமென்று கருதுகிறேன்.

திரைப்படம் உருவாகும் காலகட்டத்தில், பாக்ஸ் ஆபீஸ் வெற்றிக்கு நீங்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள்?

பாக்ஸ் ஆபீஸ் வெற்றி நிச்சயம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், நீங்கள் எதனை உருவாக்கி பார்வையாளர்களுக்கு வழங்குகிறீர்கள் என்பதுதான் இதில் சிக்கலே. அதனால், பாக்ஸ் ஆபீஸ் வெற்றிக்காக உங்களையே நீங்கள் விற்பதென்பது அர்த்தமற்றது. நீங்கள் அதிக தொகை வைத்து உங்கள் டிக்கெட்டுகளை விற்பனை செய்கிறீர்கள். ஆனால், அதற்கு நீங்கள் செய்யும் நியாயம் என்ன? பாக்ஸ் ஆபீஸ் வெற்றியில் முண்ணனியில் இருக்கும் பல இந்திய இயக்குனர்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு தாங்கள் இயக்கிய திரைப்படங்களில் ஒருபோதும் உடன்பாடு இருந்ததில்லை என பகிர்ந்திருக்கிறார்கள். அப்படியானால் அவர்கள் எதற்காக திரைப்படங்களை இயக்குகிறார்கள்?

இந்தியாவின் மிகப்பெரிய வணிக வெற்றிகளை பெற்ற இயக்குனர் ஒருவர் என்னிடம் தான் ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ திரைப்படத்தைப் பார்த்துதான் திரைத்துறைக்குள் நுழையும் உத்வேகம் பெற்றதாகவும், ஆனால் கால மாற்றத்தில் தான் மெல்ல மெல்ல வணிக சினிமாவிற்குள் நகர்ந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.  நான் அவரிடம் இப்போது நீங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்துவிட்டீர்கள். இந்தப் புள்ளியில் இருந்து மீண்டும் நீங்கள் விரும்பிய திரைப்படங்களின் திசையில் பயணிக்கத் துவங்குங்கள் என்று தெரிவித்தேன். உடனடியாக, எனது யோசனையை மறுத்த அவர், மக்கள் என்னிடம் இப்போது நான் இயக்கிக் கொண்டிருக்கும் வகையிலான திரைப்படங்களைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அதனால் நான் எனது திரைப்பாணியை மாற்றிக்கொள்வது மோசமான விளைவுகளை உண்டாக்கும் சாத்தியமிருக்கிறது என்றார். எனது கருத்தியல் என்பது, மக்களுடன் மிக எளிதாக தொடர்பினை உண்டாக்கக்கூடிய கலாப்பூர்வமான அழகியலை கொண்ட திரைப்படங்களை இயக்குவதுதான். அதிர்ஷ்டவசமாக, இதுவரையிலான எனது அனைத்துத் திரைப்படங்களிலும் அது நிறைவு கொண்டிருக்கிறது.

பியாண்ட் தி கிளவுட்ஸ்திரைப்படம் பற்றிய எண்ணம் எவ்வாறு உருவானது?

இந்தியாவைப் பின்னணியாகக் கொண்ட திரைப்படமொன்றை இயக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். அதனால், இந்தியாவில் படமாக்குவதற்கு ஏற்ற கதையை நீண்ட நாட்களாக சிந்தித்துக் கொண்டிருந்தேன். நான் வேறு நாடுகளில் கூட இந்தக் கதையை படமாக்கி இருக்க முடியும். ஆனால், இந்தக் கதையின் அசல்தன்மை இந்தியாவுக்கு உரியது. இதன்மூலமாக, இந்தக் கதையின் நாடகீயமான சூழல் இந்தியன் ஒருவனுக்கு சொந்தமானது என்பதை உணர்ந்தேன்.

இந்தியாவில் படமாக்கும்போது என்னென்ன சவால்களை எதிர்கொண்டீர்கள்? ஏனெனில், இந்தியாவின் மொழி, கலாச்சாரம் மற்றும் நிலவியல் சார்ந்த புரிதல் உங்களுக்கு இருந்திருக்காது இல்லையா?

இந்தப் படத்தை இயக்கியதில் எனக்கிருந்த மிகப் பெரிய சவால், வெளிப்புற காட்சிப் பதிவுகள்தான். படத்தின் எழுபது சதவிகிதக் காட்சிகள் வெளிப்புறங்களில் நடக்கிறது. இத்தகைய மனித நெருக்கடி மிகுந்த இடங்களில் கேமிராவை எடுத்துச் சென்று படப்பிடிப்பு செய்வது மிகுந்த சிரமமான காரியமாகும். அதோடு, படத்தின் உணர்வு வெளிப்பாட்டை இத்தகைய காட்சிப் பதிவுகளிலும் நாம் தக்க வைத்துகொள்ள வேண்டும். ஆனால், அதிர்ஷ்டவசமாக, இது நிகழ்ந்துவிட்டது. நாங்கள், மும்பை நகரத்தின் மிக அதிகமான மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் படப்பிடிப்பை நடத்தினோம்.

சத்தியஜித் ரேவின் திரைப்படங்கள் உங்களை அதிக தாக்கத்திற்குள்ளாக்கி இருக்கின்றன என பலமுறை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அவரின் எந்த திரைப்படம் உங்களை அதிகம் கவர்ந்தது?

பதேர் பாஞ்சலி. நான் கருதுகிறேன், அந்தத் திரைப்படத்தை உலகில் உள்ள அனைத்து திரைப்பட இயக்குனர்களும் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு முறை அந்த திரைப்படத்தைப் பார்க்கும்போது, புதிது புதிதான பல திறப்புகள் நமக்கு உண்டாகிறது. ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ள அந்தத் திரைப்படத்தில் எப்போதும் ஏதாவதொன்று இருந்து கொண்டிருக்கிறது. அவ்வகையிலான ஒரு திரைப்படத்தை இயக்குவது மிக மிகக் கடினமானது. ஆனால், இந்தியாவில் ஏன் தொடர்ச்சியாக இத்தகைய திரைப்படங்களை இயக்க எவரும் முன்வரவில்லை என புதிராக இருக்கிறது. அத்தகைய படைப்புகளை நீங்கள் இழந்து வருகிறீர்கள். சிக்கல் அரசிடம்தான் இருக்கிறது என்று கருதுகிறேன். அரசு இத்தகைய திரைப்படங்களை இயக்க இளைஞர்களுக்கு உதவ முன் வரவேண்டும்.

பாலிவுட் தனக்கென ஒரு தனித்த பாணியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அங்கு பெரியளவில் பணத்தை குவித்து, பணத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசுதான் வளரும் இளைஞர்களுக்கு கலாச்சார விழுமியங்களை அடிப்படையாக கொண்ட திரைப்படங்களை இயக்க உதவ வேண்டும். மாற்று சினிமாவுக்கான அடிப்படைகளை அரசுதான் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

உதாரணத்துக்கு தாஜ் மஹாலை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் ஒரு சிறிய பாகம் உடைந்துவிட்டால், யார் அதனை மறு சீரமைப்பு செய்வது. மக்களா? மக்களுக்கு அந்த பொறுப்புணர்வு இருக்கிறது என்றாலும், அரசுதான் சீரமைப்புக்கான நிதியை அளிக்க முடியும். கலாச்சாரம் அத்தகையதுதான். அதில் ஏதேனும், சிக்கல் உருவெடுத்திருக்கிறது என்றால், அரசுதான் சுயமாக முன்வந்து அதனை சீரமைக்க வேண்டிய கடமையை நிறைவேற்ற வேண்டும். அவர்கள் பத்து படங்களை உருவாக்கி, அவை எதுவுமே நேர்த்தியானதாக அமையவில்லை என்றாலும் பரவாயில்லை. பதினொன்றாவது திரைப்படம் சரியானதாக அமையக்கூடும். முதலில், பாதை அமைப்பதுதான் முக்கியம். அரசு அந்தப் பாதையை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

பிற படைப்புகள்

Leave a Comment