ஸ்ரீ வள்ளி கவிதைகள்

by olaichuvadi

 

இரவின் இரு முகங்கள்

இந்த இரவு
உன்னை ஒரு கூட்டிலிருந்து
(தாய்ப்பறவையைப் போல)
எடுத்துச்சென்று
ஒரு பழங்காலத்தில் விடுகிறது

அங்கிருந்து நீ
பழகிய புல்வெளியைப் பார்க்கிறாய்
பசும் அலைகளிலிருந்து ஒரு தட்டான்
உன் உடலின் கண்களை
(ஓராயிரமாவது இருக்கும்)
தட்டித் திறக்கிறது

நீ நீயாக
அப்போதில்லாத போது
வேறு யாராக இருந்தாய் என்று
உனக்குத் தெரியாதபோது
(அநேகமாக உனக்குத் தெரிவதில்லை)
இந்த இரவு
உன்னை ஒரு பாழடைந்த வீட்டுக்குள்
எத்தித் தள்ளுகிறது

அதன் எல்லா அறைகளிலும்
தொங்கும் மின் விசிறிகளில்
(பூச்சு உதிர்ந்து விட்ட சுவர்கள் பார்க்க)
தயக்கமில்லாமல்
தூக்கு மாட்டிக்கொள்கிறாய் 

விசாரித்தல்

என் கண்களைப் பார்க்காதவனை
வேறொருத்தி
தன் மேஜை டிராயருக்குள் வைத்திருந்தாள்
நான் பார்க்கும்போது
அவள் டிராயரைத் திறந்தாள்
மெல்ல எட்டிப்பார்த்தவன்
அவள் கையில் தாவி ஏறிக்கொண்டான்
நான் கண்களைத் திருப்பிக் கொண்டேன்
அவள் சிரித்திருக்க வேண்டும்
திரும்பிப் பார்த்தேன்
அவள் கையை லேசாக உதறினாள்
மறுபடி அவன் டிராயருக்குள் சென்றுவிட்டான்
“எப்படியிருக்கிறாய்?” என்று நான்
கேட்டிருக்க வேண்டும்
அதே பழைய அன்போடு
அவனை இடறாத குரலில்
தன் உருவத்தை இன்னும்
அவன் குறுக்கிக் கொள்ளாத வகையில்
அவன் அப்போதும்
என் கண்களைப் பார்த்திருக்க மாட்டான்

கரும்புச் சந்தை

மாலை வருவதற்கு முன்பே
இரவு வந்துவிடுகிறது
இரவு வளர்வதற்கு முன்பே
நள்ளிரவாகிவிடுகிறது
நள்ளிரவு பெரிய கல்யானையாக
அசையாமல் உட்கார்ந்திருக்கிறது
கரும்புத் துண்டமாக என்னை
மென்று கடித்துத் தின்கிறது
மாலை வருவதற்கு முன்பே
இரவு வராவிட்டால்
இரவு வளர்வதற்கு முன்பே
நள்ளிரவாகாவிட்டால்
நள்ளிரவு என் முன்னால்
பெரிய கல்யானையாக உட்காராவிட்டால்
முழுக் கரும்பாக நான்
சந்தைக்குப் போவேன்
ஒரே ஒரு கரும்பு
தன்னைத் தானே விற்கும்
ஒரே ஒருவனுக்கான சந்தையில்
எத்தனை நேரம்
பேரம் பேசுவாய்?

பிற படைப்புகள்

Leave a Comment