செல்வசங்கரன் கவிதைகள்

by olaichuvadi

அதிசய பாலமுருகன்

எனக்கு பாலமுருகன் போல
வேறு ஊர்களில் வேறு ஒருவருக்கு வேறு ஒருவர்
எல்லாரும் இன்றைக்கு என்னுடைய நினைவிற்கு வந்தனர்
அவர்கள் என்னுடைய பக்கத்திலில்லை
அவர்கள் யாரும் எனக்கு பழக்கமுமில்லை
அவர்களை நான் பார்த்ததுமே இல்லை
பாலமுருகன் என்னுடைய பால்ய நண்பன்
கையால் தொடமுடியாமல்
வானத்தில் ஒரு நட்சத்திரத்தைப் போல
ஏற்கனவே மினுமினுங்குவான்
இப்பொழுது
வானத்திற்குப் பின்னால் வானங்களென
ஒன்றையே ஊதி ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருக்கின்றான்

துயரக் கத்தி

என் துயரம் எடுத்துச் சொருகப்படாத ஒரு கத்தி
அதனால் சாக ஆயிரம் முறை காத்துக் கொண்டிருக்கிறேன்
எல்லா முறைகளும் வேறு வேறு ஊரில் வசிக்கிறன
தனித்தனியாக எல்லாம் வேறு வேறு வேலையைப் பார்க்கிறன
ஒன்றுக்குத் தெரியாமல் ஒன்றை வளர்த்து வருகிறேன்
ஒன்று மாதிரி இல்லாத இன்னொன்று
இப்பொழுது ஆயிரம் முறைகளையும் எடுத்து கொத்தாக
என் மீது மேயவிட்டிருக்கிறேன்
எடுத்துச் சொருகப்படாத கத்தியை
மிகவும் பெருமையாக பார்த்துக் கொண்ட தருணம் அது

மூன்று கோபங்கள்

அப்பா என்னை விரோதியென்று சொல்லி நாட்களாயிற்று
எனது இரண்டு சகோதரர்களும் சமீபத்தில்
இதே இந்தச் சொல்லை
பிறந்த ஒரு சிசுவைக் கையிலிருந்து நழுவவிடுவது போலக் கண்டனர்
அண்ணனை விட இரண்டு மாதம் மூப்பு என
அம்மா கைக்கும் வாய்க்குமாக சொல்லிக் கொண்டிருக்கின்ற ஈசிச்சேரில்
தன் மொத்தக் கோபங்களையும் வைத்து ஒருநாள் அப்பா
சரிபார்த்துக் கொண்டிருந்தார்
எல்லா கோபங்களிலும் அவருடைய சிறந்த கோபம் எது
எங்கள் மூவருடைய முகங்கள் அவருக்கு ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டும்
இதனை எதிர்பார்த்திருக்கமாட்டார் அவர்
கோபத்தை எதிர்பார்த்திராத வழக்கமான ஒரு நாளில்
வழக்கம் போல ஒரு கோபத்தை நேருக்கு நேராக சந்தித்தார்

எண்ணற்றவை

திருமணத்திற்கு அழைத்து வராததால் நண்பன்
அலைபேசியில் உரிமையாக கோபித்துக் கொண்டான்
கோபத்தையே ஒரு படகாக்கி
அவன் கூட்டிப்போன தூரம் வரை சென்றேன்
கல்யாண வேலை இன்னுமும் முடியவில்லையென
ஒரு இடத்தில் இறக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்
என்னுடைய பழைய இடத்திற்கும் இந்தப் புதிய இடத்திற்கும் இடையில்
எண்ணற்ற மலைகள் எண்ணற்ற புதர்கள்
தன்னுடைய வாழ்நாளில் மனிதர்களையே பார்த்தறியாத
அந்த மலைகள் புதர்களுக்கு இருக்கும் ஒரே பொழுது போக்கு
அதன் எண்ணற்ற தன்மையே
அவைகளும் ஒரு பலூனைப் பார்த்துவிட்டால்
அதன் பின்னால் பறந்து செல்லும் விசித்திரம் கொண்டவை

ஆச்சர்ய மீன்

ஆச்சர்யங்கள் நீருக்கடியில் நீந்துபவை
கை விரல்களின் மென்மை
கண நேரத்தில் பதவிசான ஒரு முகமாகி தெரிகின்றதைப் போல
எப்பொழுது எங்கிருக்கிறதென்று தெரியாது
வீட்டிற்கு வந்த விருந்தாளிகளை நாய் குரைத்தது
அதனை அதற்றி அவர்களை உள்ளே வரவேற்று
குடிக்க காபி பலகாரம் கொடுத்து வழியனுப்பினார்கள்
எஜமான மிடுக்கில் நாயின் உஷார் தன்மைக்கு
இரண்டு பிஸ்கட்டுகளை வழங்கி
க்ரில் கேட்டை சாத்தி அவர்கள் அன்றாடங்களோடு கலக்க
நீருக்குள்ளிருந்து மேலெழும்பியதை யாருமே பார்க்கவில்லை
அந்த நாய் மட்டும் ஒன்றையே பார்த்து ரொம்ப நேரத்திற்கு
கண்களை உருட்டி உருட்டிக் கொண்டிருந்தது

பிற படைப்புகள்

Leave a Comment