சூ.சிவராமன் கவிதைகள்

by olaichuvadi

பயிற்சி செவிலி

தனது முதலாவது ஊசி செலுத்தும் வைபவத்தை
நடுங்கும் கரங்களோடு எதிர்கொள்கிறாள்
நோஞ்சான் கிழவியின் சதைப்பற்றற்ற இடது தோள் அச்சமூட்டுகிறது
சின்னஞ்சிறு புட்டித்திரவத்தை உறிஞ்சிக்கொள்ள பிரயத்தனப்படுகிறாள்
உலர்ந்து தளர்ந்த கரம் எதிர்வினையாற்றக் கிஞ்சித்தும் முயலவில்லை
பஞ்சில் டிஞ்சர் நனையத் துடைத்து
சிரிஞ்ச் இன் கூர்முனைச் செருகி அழுத்துகிறாள்
கண்கள் பொலபொலத்து நீர் சொரிய
மாத்திரை வில்லைகளை நீட்டியவள்
மயங்கிச் சரிகிறாள்
சுழலும் சிவப்பெரிய
சைரனோடு விரையும் 108
கடக்க வேண்டிய தொலைவோ
நகரின் 36 வேகத்தடைகள்

தீநுண்மி

ஊருக்குள் நுழைந்துவிட்ட தீநுண்மியின்பால்
எத்துணை வியாக்கியானங்கள்
எவ்வளவு பயமுறுத்தல்கள்
மூடப்பட்ட கடைத்தெரு
மருந்துக் கடையிலொரு கபசுரமூலிகை வாங்கித் திரும்பும் வழியில்
அந்த மரண வீட்டுக்கு வாருங்கள்
வெள்ளை வட்டங்கள் சூழ
ஒடுங்கிக் கிடக்கும் தெரு
அஞ்சலி செலுத்தவே அஞ்சும் துர்மரணம்
மூச்சுவிட சிரமப்பட்டுச் சென்றவர்
மூச்சற்றுத் திரும்புகிறார் 108 இல்
மாலைகள்
சடங்குகள்
ஊர்வலமற்று
பொட்டலங்கட்டப்பட்ட உடல்
யாருடையது?

இறகுப்பந்து

‘ஷூ’க்கள் அணிந்த
பாதங்கள்
நீள்சதுர திடலில் களிநடனமிடும்
பறவைகள் மடிந்தன
எஞ்சிய இறகுகள்
தொல்குடிகளின் தலைகளில்
இறகணிந்த தலைகள்
இங்கும் அங்கும் அல்லல்படுகின்றன
வலைப்பின்னல்களால் ஓங்கியடிக்கிறார்கள் ஏமாற்றும் சூட்சமம்
வெற்றிக்கு வித்திடுகின்றன
தலைகளோ பிய்ந்து சிதறுகின்றன.
ஓங்கிய கரங்கள் முன்னேற
அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்
மேலும்
ஆட்டத்தை விட்டே

அஃக்


இவ்வாறாக
எங்கள் ஊரில்
மூன்று மரங்கள் இருந்தன

பூவரசு

வேலிப்போத்துக்களில்
பூவரசம்பூக்கள் செழித்து விரிந்தன
சூளையில் வெந்து தணிய
தன்னை ஈந்த நாளில்
பச்சைக் கல் குவியல்
சிவந்து ஜ்வலித்தன.

வேம்பு

பச்சை விரிசடை
வான்பார்த்து கிளைநீட்ட
உடுக்கள் பூக்களென மாயம் செய்யும்
முற்றிய கசப்பு மறந்து ஆடும்
சாளரத்துக் கதவுகளாக.

பனை

ஓலைக்கும்பல் சரசரக்க
கள் சொட்டும் சுனைகளில்
கலயங்கள் வாய்பிளக்கும்
ஈழவன் நெஞ்சணைத்து
மாரிக்கால இடிக்குத் தலை கொடுத்தது

இவ்வாறாக
எங்கள் ஊரில்
மூன்று விலங்குகள் வாழ்கின்றன.

ஆடு

தசை மயிர் பால் ரத்தம்
அடிமைசாசனம்
எழுதிய நாளில்
காட்டிலிருந்து
வீட்டிற்கு ஓட்டிவந்தேன்

ஓநாய்

மோப்பம் பிடித்த ஓநாய்கள்
வீடறிந்து வந்தன
‘ஓ’நீங்கி
நாய்களாக உருமாறின
வாலாட்டி மண்டியிட்டு
நக்கிக் குழைந்து
மறந்தன வேட்டையை

பூனை

புலால் ருசிக்கும் ‘மியாவ்’கள்
பாலுக்கும் மோருக்கும் பழகின
இரவை உருட்டும் எலிகளைக் கவ்வ
ஏவல் விலங்கென
ஏறின சுவர்களில்

கடவுள் மறுப்பாளர்

எனது நெருக்கமான நண்பர்
எனக்கு கடவுளாகவும் இருந்தார்
எதிர்வரும் நாளுக்கு முன்னர்வரை
எங்களுக்குள் எவ்வித உரசலுமில்லை
சிற்றுண்டியகத்தில் பரிசாரகனிடம்
வெங்காய தோசை என்றேன்
எதிர் அமர்ந்திருந்த கடவுள் (இல்)நண்பர்
இங்கே நெய்ரவா ருசியாக இருக்கும் என்றார்
உணர்வில் குறுக்கிட்டால் பொறுத்துக்கொள்வேன்
உணவில் குறுக்கிட்டார்
மறுத்துவிட்டேன்

பிற படைப்புகள்

Leave a Comment