1
“உண்மையாகவா?”
“ஆமாம்”
“என்னால் நம்ப முடியவில்லை. உண்மையாகவே நீங்கள் நம் தேசத்தைக் கடந்து உலகின் வேறு எந்தப் பகுதிக்கும் சென்றதில்லையா?”
“இந்த குற்றத்துக்காக எனக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று நம்புகிறேன்”
“விளையாடாதீர்கள்” என்று சொல்லிவிட்டு சாயமணிந்த உதடுகளைத் திறந்து பளீரென்றிருக்கும் வெண்ணிற பற்கள் தெரியும்படி விரிந்த கண்கள் சற்றே சுருங்கும்படி எங்கள் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பணியிலிருந்த அப்பெண் சிரித்தாள்.
“உண்மைதான். உங்கள் ஆச்சரியத்தை வெளிக்காட்ட தொடர்ந்து இப்படி விரிந்த கண்களால் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தீர்களானால் நான் செத்துவிடுவேன்”
அவள் முகம் ஒரு நொடிக்கும் குறைவாக சுரத்திழந்து முன்னைவிட பல மடங்கு தன் சுரத்தினை மீட்டுக் கொண்டது.
“உங்களுக்கு பெண்களிடம் பேசத் தெரிந்திருக்கிறது”
“எனக்கு இன்னும் முப்பது வயது கூட ஆகவில்லை”
“இந்த வயதிலேயே இவ்வளவு அனுபவம் என்றால் சிறு வயதிலேயே நீங்கள் பெண்கள் சூழ வளர்ந்திருக்க வேண்டும்.சரிதானே?”
எனக்குள் ஒரு கூர்மையான வலியை உணர்ந்தேன். என் கிராமத்தைப் பற்றி சிந்திக்கும் போதெல்லாம் அதன் இனிய நினைவுகளோடு இந்த வலியும் சேர்ந்தே மனதில் எழுகிறது.
“நான் ஏதும் தவறாக சொல்லிவிட்டேனா?”
அவளுடைய முகத்தில் உண்மையான பதற்றமும் கவலையும் தொற்றிக் கொண்டது. எங்களுடைய அரசின் உயர்மட்ட அலுவலகங்களில் நீங்கள் ஒரு வருடம் பணிபுரிந்தால் உங்களுக்கும் இந்தப் பதற்றம் தொற்றிக் கொள்ள நிறைய வாய்ப்பிருக்கிறது. அரசுக் கட்டமைப்பில் உருவம் மற்றும் அதிகார அடிப்படையில் எலிகள் நரிகள் சிங்கங்கள் யானைகள் அனைத்தும் தனித்தனியான அலுவலகங்களில்தான் இருக்கும். எலிகளை நரிகளும் நரிகளை சிங்கங்களும் கண்காணிக்க நேரிடும். சில சமயம் என் போன்ற யானைகள் பணிபுரியும் இடத்தில் இவளைப் போன்ற எலித்தகுதி கொண்டவர்களும் பணிபுரிய நேர்வது துயரார்ந்ததுதான். யானைகள் கருணையுடன் நடந்து கொள்ளும். எலிகளுக்கு அது ஆறுதல் அளிக்கலாம். ஆனால் இன்னதுதான் நடக்கிறது என்று யானைகள் அறியும் முன்னரே கூட எலிகள் யானைகளால் நசுக்கிக் கொல்லப்படலாம். இவர்களைப் போன்ற கீழ்நிலைப் பணியாளர்களுடன் அன்றாடம் பேசுவது தவிர்க்கவே முடியாது. சில சமயம் இவர்கள் என்னை சீண்டி விடுவதும் உண்டு. அதேநேரம் என்னைப் போன்ற உயர் பதவியில் உள்ள ஒருவருடன் இறுக்கமாக நடந்து கொள்வதும் அவர்களுக்கு இயலாத காரியம்.
“நீங்கள் அப்படி ஏதும் தவறாகக் கேட்டு விடவில்லை. நீங்கள் நான் பெண்கள் சூழ வளர்ந்திருக்க வேண்டும் என்று சொன்னதும் என் கிராமத்தின் நினைவு வந்துவிட்டது. என் சகோதரிகளையும் அம்மாவையும் நினைத்துக் கொண்டேன்”
அவள் முகத்தில் மெல்லிய ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தெரிந்தது.
“நீங்கள் நம்முடைய தேசத்தில் பிறந்தவரில்லைதானே?”
நான் மீண்டும் அவளை ஊடுருவும் பார்வையுடன் கேட்டேன்.
“ஆம்” என்று சொல்லிவிட்டு தான் பிறந்த தேசத்தின் பெயரைச் சொன்னாள்.
எங்கள் தேசமும் அவளுடையதும் ஒரு மெல்லிய நீர்ச்சந்தியால் இணைக்கப்பட்டிருந்தது.
“உங்களுடைய நாட்டிற்கு வரவேண்டும் என்ற விருப்பம் இளவயதில் எனக்கு அதிகமாக இருந்தது. உங்கள் தேசத்தில் எழுதப்படும் பல கதைகள் அப்போது இங்கு பிரபலமாக இருந்தன. நான் நம் தேசத்தின் மேற்கு எல்லையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவன். எங்கள் நிலம் சமவெளி. பெரும்பாலும் கரும்பும் நெல்லும் பயிரிடப்படும். மிகக்குறைவான வளங்கள் கொண்ட பிரதேசம். அதனாலோ என்னவோ எங்கள் தேசத்தின் பிரபல எழுத்தாளர்களின் கதைகளில் எங்கள் ஊரைக் காண முடிந்ததில்லை. எங்கள் நிலங்களில் பெரிதாக படங்களும் எடுக்கப்படுவதில்லை. நான் தலைநகரில் உள்ள College of Equalityல் தான் அரசியல் விஞ்ஞானத்தில் இளங்கலைப் படித்தேன். ஏறக்குறைய யாருக்குமே எங்கள் நிலம் பற்றித் தெரிந்திருக்கவில்லை. ஆனால் என் இளவயதில் என் ஊரை உங்கள் தேசத்தின் எழுத்தாளர்கள் கண்கள் வழியாகத்தான் தரிசித்தேன் என்று சொல்லலாம். உங்கள் தேசத்தின் நில அமைப்புக்கும் எங்கள் ஊரின் நில அமைப்புக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. மேலும்…”
என் பேச்சை நிறுத்திவிட்டு நேரத்தைப் பார்த்தேன்.
“நான் நிறைய பேசுகிறேன் என்று நினைக்கிறேன்.” என்று சொன்னேன்.
அவள் உடனே பதறி “அப்படி எல்லாம் இல்லை. உங்களைப் போன்ற ஒருவர் என் தேசத்தை நினைவில் வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று சொன்னாள்.
அவள் குரல் சற்று இடறியது. நான் பெருமூச்சு விட்டேன்.
பின்னர் அவள் மெல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “எனக்கு உங்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க வேண்டும் போலிருக்கிறது” என்று சொல்லி தலையைக் கவிழ்ந்து கொண்டாள்.
நான் என் இருக்கையை விட்டு எழுந்தபோது அவள் விசும்பவது கேட்டது.
நான் அவளை “மேடம்” என்று அழைத்தேன். அவள் நிமிர்ந்து பார்த்தாள். கண்கள் சிவந்திருந்தன.
“உங்களுக்கு எத்தனை மணிக்கு பணி முடியும்?” என்றேன்.
“ஏழு மணிக்கு” என்று உற்சாகமாக சொல்லியபடியே அவள் எழுந்துவிட்டாள். ஏறக்குறைய குதித்தாள். அவளை முடியை குட்டையாக கத்தரித்திருந்தாள். வெண்ணிற சட்டையும் நீல நிற ஜீன்ஸும் அணிந்திருந்தாள். எழுந்தபோது அமர்ந்திருந்ததை விட அழகாக இருந்தாள்.
“செயலகத்தின் கேன்டீனில் சந்திப்போம்” என்று புன்னகையுடன் கைகொடுத்தேன். அவள் என்னுடன் கை குலுக்கியபோது அதில் மரியாதை நீங்கி சகஜம் கூடியிருந்தது.
2
அவள் வெளியுறவுத்துறையில் உதவியாளராகப் பணிபுரிந்த பெண். நான் வெளியுறவுத்துறைச் செயலரை அண்டை நாடுகளில் இருந்து வரும் அகதிகளை குடியமர்த்துவதிலும் அவர்களின் சொந்த நாட்டில் மீள் குடியேற்றம் செய்வதிலும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் புதிய மாற்றங்களை விவாதிப்பதற்காக பார்க்கச் சென்றிருந்தேன். அவர் அன்று அலுவலகம் வந்திருக்கவில்லை. துணைச் செயலரை சந்திப்பதற்காக காந்திருந்த நேரத்தில்தான் அவளை சந்திக்க நேர்ந்தது. எப்படி அவளுடன் தேநீர் அருந்த ஒத்துக் கொண்டோம் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த கணத்தில் என் மீது ஏற்றப்பட்டிருந்த பொறுப்புகளின் கனத்தை நான் சற்று கழற்றி வைத்துவிட்டேன். அப்படி கழற்றி வைக்க முடிந்தது குறித்து எனக்கு திருப்தி ஏற்பட்டிருந்தது.
எனக்கு அன்று ஆறு மணிக்கெல்லாம் வேலை முடிவது போலிருந்தது. என் உதவியாளரிடம் “என்னை இன்று சீக்கிரம் வீட்டுக்குப் போக அனுமதித்து விடுவீர்கள் போலிருக்கிறதே” என்று சொல்லி சிரித்தேன்.
அவரும் சிரித்தபடி “நாட்டில் அரை மணி நேரம் முன்புவரை பெருங்குற்றமும் நடைபெறவில்லை. ஆகவே இந்த கணத்திற்கு இருபது நிமிடங்கள் முன்பு வரை குற்றத்தடுப்பு மற்றும் குற்றப்புலனாய்வு அமைச்சகத்தின் துணைச் செயலரே நேரடியாக பார்வையிடும் அளவு பெருங்குற்றங்கள் நடைபெற்றிருக்காவிட்டால் நீங்கள் இன்னும் பத்து நிமிடங்களில் கிளம்பலாம்” என்றார்.
பொதுவாக பிற தேசங்களில் குற்றத்தடுப்பு என்பது பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ஒரு பிரிவாக இருக்கும். ஆனால் எங்கள் நாடு கடந்த கால் நூற்றாண்டாக பிறநாடுகள் கற்பனை செய்ய இயலாத அளவுக்கு வளர்ந்து வருகிறது. அந்த வளர்ச்சியின் நுனியைக் கண்டபோதே குற்றத்தடுப்பு தனிப்பிரிவாக மாற்றப்பட்டுவிட்டது. அண்டை தேசங்களுடனான எல்லை பிரச்சினைகள் அண்டை தேசங்களின் எல்லையில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க குற்றத்தடுப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ராணுவத்தின் ஒரு பிரத்யேக பிரிவு உண்டு. குற்றத்தடுப்பு துறை வரை வரக்கூடிய அளவு பெரிய குற்றங்கள் நடந்த சில நிமிடங்களில் தொலைக்காட்சியிலும் அலைபேசியிலும் பார்க்கக் கிடைத்துவிடும் என்றாலும் அந்த குற்றத்தின் தன்மை கணிக்கப்பட்டு அது அமைச்சகம் வரை வர அரைமணி நேரமாகும். பெரும்பாலும் அமைச்சகத்துக்கு எடுத்துச் செல்லப்படத் தேவையில்லை என்று கீழிருக்கும் ஒரு படியிலேயே முடிவு செய்யப்படும் அளவுக்குத்தான் குற்றங்களும் நிகழும்.
நான் சரியாக ஏழு மணிக்கு செயலகத்தின் கேன்டீனுக்கு என்னுடைய பேட்டரி பொறுத்தப்பட்ட சைக்கிளில் சென்று சேர்ந்தேன். முன்னதாக என்னுடைய பழைய நீல நிற கோட்டை கழட்டிவிட்டு பிரவுன் நிறத்துக்கு மாறி இருந்தேன். அவளும் ஒரு வெண்ணிற ஃபிராக் அணிந்து கேண்டீனுக்கு வந்திருந்தாள்.
உண்மையில் கேண்டீன் என்பது பழக்கத்தினால் சொல்லப்படும் பெயர்தான். அதுவொரு பெரிய ஹோட்டல். என் அளவிலான அதிகாரிகளுக்கு தங்குவதற்கு விசாலமான தனி அறைகளும் உணவருந்த தனி அறைகளும் உண்டு. அவ்வறைகளில் ஒன்றுக்குள் நான் அவளுடன் சென்றேன். மென் நீலத்தால் அறை ஒளியூட்டப்பட்டிருந்தது. சந்தன மணம் பரிபூரணமாக அறையை நிரப்பி இருந்தது.
பரிசாரகரிடம் நான் எனக்கு பழரசம் கொண்டுவரச் சொன்னைன்.
“எனக்கு தேநீர்” என்று அவள் என்னை முந்திக் கொண்டு சொல்வதைப் போலச் சொல்லிவிட்டு அந்த செயலின் அபத்தத்தை உணர்ந்தவளாக லேசாக நாக்கை கடித்துக் கொண்டாள்.
அவள் வெள்ளிக் கோப்பையில் வந்த தேநீரையும் நான் பூவேலைப்பாடுகள் கொண்ட ஒரு கண்ணாடிக் குடுவையில் வந்த பழரசத்தையும் அருந்தத் தொடங்கினோம். அந்த மாலை திடீரென எனக்கு நிரம்பப் பிடித்தது. எவ்வளவு பிடித்தது என்றால் அந்த சந்திப்பு இன்னும் சற்று நேரத்தில் முடிந்துவிடுமே என்று ஏங்குமளவு.
“பூ வேலைப்பாடுகள்” என்றாள்.
“என்ன?”
“கண்ணாடிப் பொருட்களில் இதுபோல பூ வேலைப்பாடு செய்வதற்கு என்ன பெயர் என்று உங்களுக்குத் தெரியுமா?”
“எனக்குத் தெரியாதே”
“எனக்கும் தெரியாது. ஆனால் என் அப்பா என் தேசத்தில் இந்தக் கடைதான் நடத்தினார்”
“ம்”
“என்ன ம்?”
இந்த ‘என்ன ம்’ ல் நான் துணைச் செயலர் என்பதை அவள் மறந்துவிட்டது எனக்கு ஆறுதலாக இருந்தது.
“நீங்கள் உங்களைப் பற்றி என்னிடம் ஏதோ சொல்ல விரும்பித்தானே என்னிடம் பேசிக்கொண்டிருக்க விரும்பினீர்கள்?”
“ஐயோ இந்த பன்மைத்தொனியை விடுங்களேன்”
“சரி சொல்”
“என்ன சொல்ல வேண்டும்?” மேசையில் வலக்கையை ஊன்றி கன்னத்தில் பதித்திருந்தாள். குரலில் குறும்பு ஏறியிருந்தது.
“நீ சொல்ல விரும்பியதை”
“நான் சொல்ல விரும்பவில்லை. கேட்க விரும்பினேன். நீங்கள் உங்கள் ஊரைப்பற்றியும் எங்கள் கதைகள் பற்றியும் மேலே சொல்ல வேண்டும் என்றும் அவற்றை கேட்கவேண்டும் என்றும் விரும்பினேன்”
“ஆனால் நீ பூவேலைப்பாடுகள் பற்றி ஏதோ சொல்லத் தொடங்கினாய்”
“அது நாசமாய் போகட்டும்”
“ஏய் என்ன இப்படி சொல்கிறாய்?”
“ஆம் கண்ணாடிகளில் பூக்களை வரைவது எனக்குப் பிடிக்காது. மென்மையான மலர்களை கொடூரமான கண்ணாடிகளில் சிறைபடுத்தும் கலை”
“நீ எந்த வயதில் இங்கு வந்தாய்? யாருடன் வந்தாய்”
“நானும் என் அப்பாவும். பதினான்கு வருடங்களுக்கு முன் நடந்த பெருங்கலவரத்தின் போது. நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்களே”
“ஆம்” நான் வியப்புடன் அவளைப் பார்த்தேன்.
“நீ கேட்க விரும்பிய என் கதையும் அந்த கலவரத்தில் தான் தொடங்கிறது”
3
பதினான்கு வருடங்களுக்கு முன்பு அண்டை நாட்டில் நிகழ்ந்த பெருங்கலவரத்தைத் தொடர்ந்து அங்கிருந்து அகதிகளாக லட்சக்கணக்காவர்கள் அந்த தேசத்தின் கிழக்கு எல்லையில் இருந்து வெளியேறி எங்கள் தேசத்தின் மேற்கெல்லைக்குள் நுழைந்தனர். வந்தவர்களில் பலர் ஆயுதங்களுடனும் உள்நுழைந்ததால் அவர்களை சமாளிக்க காவல்துறையால் முடியவில்லை. அந்த தேசத்தின் கிளர்ச்சிக் குழுக்கள் எங்கள் நாட்டில் கலவரம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அகதிகளில் ஆயிரக்காணவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி அனுப்பி இருக்கிறது.
அவர்களை சமாளிக்கவும் அண்டை தேசத்தின் கலவரங்களை ஒடுக்கவும் எங்கள் தேசத்தில் இருந்து ராணுவப்படைகள் எங்கள் பகுதியின் வழியாக துறைமுகம் நோக்கிச் சென்றன. எங்கள் கிராமத்திலும் ராணுவத்தினர் கூடாரம் அமைத்துத் தங்கினர். அவர்கள் வரத்தொடங்கியது முதலே எங்கள் கிராமத்தில் நரிகள் ஊளையிடுவது பெருகியது. நாய்கள் இரவெல்லாம் குரைத்தன. பெண்களுக்கு அடிக்கடி பேய்பிடித்தது.
அந்நாட்களில் நான் பயந்து போனவனாக இருந்தேன். உண்மையில் நான் பிறந்தது முதலே பயந்தவனாகத்தான் இருந்திருக்கிறேன் என்பதை தார்ச்சாலையில் சத்தம் எழுப்பும் ஷூக்களை போட்டுக்கொண்டு நடக்கும் அந்த ராணுவ வீரர்களைப் பார்த்தபிறகு உணர்ந்துகொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் எங்கள் நாட்டின் ராணுவம் உலகிலேயே நாகரிகமானதும் மனிதப்பண்பு நிறைந்ததும் என்றும் பன்னாட்டு அமைதியகம் சான்றிதழ் அளித்திருந்தது. அது உண்மையும் கூடதான். எங்கள் ஊர் மக்களை ராணுவ வீரர்கள் எவ்விதத்திலும் தொந்தரவுபடுத்தவில்லை. ஆனாலும் எனக்குள் விரும்பத்தகாத ஏதோவொன்று நடக்கவிருப்பதான ஒரு உள்ளுணர்வு இருந்தது.
“அது பெண்களின் உள்ளுணர்வு” என்று என் அப்பா சொல்வார்.
பொதுவாக என் ஊரில் யாரும் பெரிதாக படித்திருக்கமாட்டார்கள். பயிரிட நிலமும் நீரும் இருந்ததால் அந்தப் பயிர்களால் வரும் பணத்தை நிர்வகிக்கும் அளவு படிப்பு ஊர்க்காரர்களுக்கு போதுமானதாக இருந்தது. மேலும் நிலத்தில் இறங்கி ஏதோவொன்றை பயிர்செய்து விட்டவன் அந்த ருசியை விடமாட்டான். அது பெண்ணுடைய ருசியை போன்றது என்று ஊர்க்காரர்கள் சொல்வார்கள்.
ஆகவே பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கும் குடும்பங்கள் அவர்களை வயல்களுக்கு அனுப்பமாட்டார்கள். ஆனால் என் வீட்டில் அப்படியான எண்ணம் ஏதும் இல்லை. எனக்கு முன்பாக மூன்று பெண்கள் என் அம்மாவுக்கு பிறந்தனர். மூவருமே என்னைக் கொஞ்சிக் கொஞ்சி வளர்த்தனர். அப்பாவின் கோபத்தின் கனல்வு நான்கு பெண்களைக் கடந்தே என்னைத் தொட்டது.
நான் வயலுக்கு வரமாட்டேன் என்று சிறு வயது முதலே அடம்பிடித்தேன். எனக்கு படிக்கவே பிடித்திருந்தது. பள்ளியிலும் மாணவர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் பின் பெஞ்சில் அமரமாட்டேன். நெடுநெடுவென இருந்தாலும் நான் முதல் பெஞ்சில் அமர நான் நன்றாகப் படிப்பதால் ஆசிரியர்கள் என்னை அனுமதித்தனர்.
அண்டை தேசத்தின் “பெருங்கலவரம்” என்று இன்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படும் மூன்று மாதங்களில் இரண்டு மாதங்கள் கடந்திருந்தன. எங்கள் கிராமத்தின் வழியாக ராணுவ டிரக்குகளும் அணிவகுப்புகளும் கடந்து சென்றன. குருவிகளின் சத்தத்தை விடியல்களில் கேட்க முடியாமல் ஆயிற்று. ஊரை ஒட்டி ராணுவ வீரர்கள் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தனர். அவ்வப்போது அவர்களிடம் எங்கள் ஊரில் சில வசதியில்லாத குடும்பத்துப் பெண்கள் சென்று வந்தனர்.
ஒருநாள் அப்படி ஒரு பெண் செல்ல வேண்டியிருந்தது. அவளுக்கு மாலைக்கு சற்று முன் உடல்நலமில்லாமல் ஆனது. அவள் யாரிடம் செல்ல வேண்டுமோ அவனிடம் சற்று முன் பணம் பெற்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கியிருக்கிறாள். அன்று செல்ல முடியாததால் பணத்தைக் கொடுத்தவன் கோபம் அடைவானே என்று பக்கத்து வீட்டில் கடன் வாங்கி மகளிடம் கொடுத்து அவனிடம் திருப்பிக் கொடுத்துவிடச் சொல்லி அனுப்பி இருக்கிறாள். அன்று அந்த ராணுவ வீரன் கடும் போதையில் இருந்திருக்கிறான்.
பணம் கொடுக்கச் சென்ற சிறுமி எவ்வளவோ கெஞ்சியும் கேட்காமல் அவளை இழுத்துச் சென்று புணர்ந்துவிட்டான். இவள் கூச்சலும் அழுகையும் மேலும் வெறியைத் தூண்டிவிட ஆவேசமாக அவன் புணர்ந்ததில் அந்த சிறுமி செத்துப்போனாள். ஏற்கனவே ராணுவ வீரர்கள் மீது ஊர்க்காரர்களுக்கு புகைந்து கொண்டிருந்த கோபம் இந்தச் செயலால் எரியத் தொடங்கியது. அன்றிரவே ஊர் கூட்டம் போட்டு ஊரில் உள்ள பத்து வயதிற்கு அதிகமான ஆண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களைக் கேட்பது என்று முடிவாயிற்று. எண்ணிக்கை மட்டுமே அவர்களை மிரட்ட இயலும் என்று ஊர்க்காரர்கள் தனிப்பட்ட முறையில் ராணுவ வீரர்களிடம் அடைந்த நுண்ணிய அவமானங்களில் இருந்து கற்றுக் கொண்டிருந்தனர்.
அப்பா இந்த முடிவை வீட்டில் வந்து சொன்னபோது நான் அழத் தொடங்கிவிட்டேன். அப்பா என்னை அடிக்கத் தொடங்கினார். என் மூன்றாவது அக்கா கத்தரிக்கோலுடன் கொல்லைப்பக்கம் சென்றார். தன் கூந்தலை கழுத்து வரை இருக்கும்படி கத்தரித்துக் கொண்டார். என் சட்டையை எடுத்து அணிந்து கொண்டு அப்போது ஊரில் பிரபலமாகத் தொடங்கி இருந்த நானும் வாங்கி வைத்திருந்த தொப்பியை அணிந்து கொண்டு அப்பாவை அழைத்துக் கொண்டு புறப்பட்டார். அப்பா மேற்கொண்டு என்னை அடிக்காமல் அக்காவுடன் சென்றார்.
ஆனால் சென்ற இடத்தில் பேச்சுவார்த்தை மெல்ல சூடேறி இருக்கிறது. சிறுமியைக் கொன்ற அந்த ராணுவ வீரனை அவன் டென்டிற்குள் புகுந்து சில இளைஞர்கள் அடித்துவிட்டனர். அவன் அவர்களை திரும்பி அடிக்க சூழல் கலவரப்பட்டிருக்கிறது. எங்கள் ஊர்க்காரர்களை நோக்கி சுடத் தொடங்கி இருக்கின்றனர். சற்று நேரத்தில் அந்த தாக்குதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒழுங்கு முறையில் நடக்கத் தொடங்கிவிட்டது. முப்பதுக்கும் அதிகமானவர்கள் கலவரம் தொடங்கிய கொஞ்ச நேரத்தில் செத்துப் போயினர். எஞ்சியவர்கள் சிதறி ஓடினர். அந்த ப்ளட்டூனின் கமாண்டர் ஒரு திட்டத்தை முடிவு செய்துவிட்டான். அண்டை தேசத்தில் இருந்து வந்த கிளர்ச்சிக்காரர்கள் ராணுவத்தினரை தாக்கி அவர்களின் துப்பாக்கியைப் பறித்து ஊர்க்காரர்களைக் கொன்றனர். மீண்டும் அவர்களுடன் எதிர்தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்றோம் என்பதே திட்டம். இந்த தாக்குதலில் ஊர்க்காரர்கள் எத்தனை பேர் சாகிறார்களோ அத்தனை பேரை கிளர்ச்சிக்காரர்கள் கொன்றனர். அவர்களின் திட்டம் ஆண்கள் அனைவரையும் கொன்று ஊருக்குத் தீ வைப்பதுதான்.அமைதியான முறையில் எல்லையைக் கடந்து கொண்டிருந்த எண்பது பேர் கொண்ட ஒரு அகதிக் கூட்டத்தை ராணுவ டிரக்குகள் சுற்றி வளைத்தன. அதன்பிறகு நடந்தது முழுமையான வேட்டையாடல்தான்.
நான் வீட்டைவிட்டு எழுந்திருக்கவே இல்லை. ஒவ்வொரு தோட்டாவின் சீறலுக்கும் என் உடல் அதிர்ந்தது. அப்பா என் மூன்றாவது அக்கா இருவரும் கொல்லப்பட்டிருந்தனர். அண்டை நாட்டின் கிளர்ச்சி குழு என்று சொல்லப்பட்டவர்களில் பெரும்பாலான ஆண்கள் கொல்லப்பட்டனர். ஆண்களைக் கண்டாலே சுடுகிறார்கள் என்று கேள்விப்பட்ட என் அம்மா எனக்கு என் மூன்றாவது அக்காவின் உடைகளை அணிவித்து மற்ற இரண்டு அக்காக்களுடன் வயலைக் கடந்து மையச் சாலையை அடைந்தார். எங்களைப் போலவே எங்கள் ஊர்க்காரர்கள் பல்வேறு திசைகளில் சிதறி ஓடியதால் அன்றிரவு நடந்ததை யாராலும் உறுதியான குரலில் சொல்ல முடியாமல் போனது. தப்பித்தவர்கள் அது சார்ந்து எங்காவது வாய் திறந்தாலே கொல்லப்பட்டனர்.
அம்மா எங்களை அழைத்துக் கொண்டு தலைநகரத்துக்கு வந்தார்.
நெருக்காமனவர்களின் அவல மரணம் ஒன்று நம்மை இளக்குகிறது அல்லது இறுக்குகிறது. என் அம்மாவை மரணங்கள் இறுக்கின. பேய் பிடித்தது போல உழைத்தார். என் சகோதரிகளையும் அந்த பேய் தொற்றியது. என்னை அந்த பேய் படிக்கச் சொல்லித் தூண்டியது. உதவித்தொகை கிடைக்க வாய்ப்பிருக்கும் அத்தனை தேர்வுகளையும் எழுதினேன். படிப்புடன் தொடர்புடைய அத்தனை வேலைகளையும் செய்தேன். என் மூத்த சகோதரி அவர் பணிபுரிந்த பின்னலாடை நிறுவனத்தில் ஒருவரை மணந்து கொண்டார். இளைய சகோதரி விட்டிருந்த படிப்பை தபால் வழியில் தொடர்ந்து ஆசிரியையானார். நான் இருபது வயதில் பப்ளிக் சர்வீஸ் தேர்வெழுதி நாட்டிலேயே இளைய நிர்வாக அதிகாரியாக தேர்வானேன். வந்த வருடங்களில் நான் எதையுமே திரும்பிப் பார்க்கவில்லை. நான் வேலைக்குச் சேர்ந்த இந்த எட்டு வருடங்களில் இரண்டு ஆட்சி மாற்றங்கள். ஆனால் நான் ஒரு அடி கூட சறுக்கவில்லை. வழக்கமாக ஐம்பது வயதில் தான் கிடைக்கும் என்று நினைக்கப்பட்ட துணைச்செயலர் பதவியை இதோ இருபத்தெட்டு வயதில் அடைந்திருக்கிறேன்.
சொல்லி முடித்துப் புன்னகைத்தேன்.
“பணம் அதிகாரம் அனைத்தையும் வசப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்” என்று அவள் சொன்னபோது என் கதையைப் பற்றி பிரம்மிப்பு முகத்தில் இருந்தாலும் ஒரு விலக்கமும் இருந்தது.
அவள் விலக்கம் ஏன் என்று எனக்குப் புரிந்தது.
“பணத்திலும் அதிகாரத்திலும் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை”
“ஓஹோ வேறு எதில் ஆர்வம்?”
அவள் கேள்வி என் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. மேசையில் பதறியபடியே இருந்த அவள் விரல்களை என் கைகளுக்குள் எடுத்துக் கொண்டேன்.
“என் அம்மா இறக்கும் சமயத்தில் நான் மட்டுந்தான் அவருடன் இருந்தேன் தெரியுமா?”
அவள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவள் விரல்கள் என் உள்ளங்கைகளுக்குள் அமைதியடைவதை உணர்ந்தேன்.
“நான் அப்போது மாவட்ட நிர்வாகத்தின் தலைமை பொறுப்பில் இருந்தேன். என் அம்மா என்னிடம் சொன்னார். ‘பெண்களை துன்புறுத்தாதே. அவர்கள் மோசமானவர்களாக இருந்தால் கூட முடிந்தவரை அவர்களிடம் கருணையுடன் நடந்து கொள். நீ ஒரு மோசமான பெண்ணிடம் கருணையற்று நடந்து கொள்ளத் தொடங்கினால் பின்னர் பெண்கள் அனைவரிடமும் கருணையற்று நடந்து கொள்ளத் தொடங்குவாய். பெண்கள் மீது நீ கருணையை இழந்தால் பின்னர் எதற்கும் துணிந்தவனாக மாறுவாய். பெண்களை மதித்து நடந்து கொள். அவர்கள் உன் வாழ்க்கையை அழகாக்குவார்கள். எந்நிலையிலும் உன்னை சாந்தப்படுத்துவார்கள். எப்போதும் உன் வாழ்க்கை கசப்பால் நிரம்பாமல் பார்த்துக் கொள்வார்கள். நீ செல்லப்போகும் உயரங்கள் எனக்குத் தெரிகிறது மகனே. அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் பெண்களை துன்புறுத்துவதை மட்டுமே ஒரே இன்பமாக கருதுகிறார்கள். அவர்கள் முன்னெடுக்கும் எந்தவொரு கருணையற்ற செயல்திட்டமும் பெண்களைத்தான் முதலில் வீழ்த்தும் என்று அவர்களுக்கு உள்ளூரத் தெரியும். நீ அவர்களில் ஒருவனாகிவிடாதே.’ என்று சொன்னார். அவருக்கு நான் கொடுத்த வாக்கினை இன்றும் காப்பாற்றியே வருகிறேன்”
அவள் கண்களில் நீர் துளிர்த்தது.
4
எங்களுக்கு மணமாகி இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில் எனக்கு ஒரு கோட்டோவியமாகத் தெரிந்திருந்த என் மனைவியின் வாழ்க்கையைப் பற்றி அவள் சொல்ல முழுமையாகத் தெரிந்து கொண்டேன். ஆனால் அதை அவள் என்னிடம் சொல்லியபோது சீற்றம் மிகுந்தவளாக இருந்தாள். அந்த சீற்றம் என் சமாதானத்திற்கு அப்பாற்பட்டது என்பது எனக்கு அவள் பேசப் பேச புரியத் தொடங்கியது. உண்மையில் ஒரு நாளில் நான் மிக இயல்பானது அல்லது சாதாரணமானது என்று நினைத்து சொல்லிய ஒரு விஷயம் இவ்வளவு தீவிரமாகும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த கேண்டீன் சந்திப்பிலிருந்து ஒரு மாதம் தள்ளி நாங்கள் மணம்புரிந்து கொண்டோம். அவள் தன் வேலையை விடுவதற்கு முதலில் சற்று அடம்பிடித்தாலும் நான் சற்று அழுத்திச் சொல்லவே விட்டுவிட்டாள்.
எங்களுக்கு மணமாகி ஒன்றரை வருடத்தில் ஒரு மகன் பிறந்தான். அழகிய குழந்தை. அவனுடன் பொழுதைக் கழிப்பது என்னை மேலும் உற்சாகம் கொண்டவனாக மாற்றியது. இப்படி ஒப்பிடலாம் மணமான புதிதில் அவளுடனான கூடலும் அவள் எனக்காக காத்திருப்பவள் என்னை நினைத்திருப்பவள் என்ற எண்ணமுமே ஒரு இனிய நறுமணம் போல நாள் முழுவதும் உடன் வரும். நான் செய்யும் வேலைகளில் நாசூக்கு கூடிவிட்டதாக என் உதவியாளர் சொன்னார்.
“பணிநீக்க உத்தரவுகளைக்கூட அவ்வளவு கருணையோடு எழுதுகிறீர்கள்” என்று ஒருமுறை சொன்னார்.
உண்மையில் அவளை மணம்புரிந்து கொள்வதற்கு முன்புமே கூட என் வீடு நேர்த்தியாகவே இருக்கும். நான் ஒழுக்கத்தையும் சுத்தத்தையும் ஒரு மனநோயாளியின் தீவிரத்துடன் கடைபிடிப்பதாக என் உதவியாளர் சொல்வார். ஆனால் அவள் வந்தபிறகு என் வீட்டின் தூய்மையில் என்னால் கொண்டுவரவே முடியாத ஒன்று சேர்ந்திருந்தது. அது அவள் தேசத்தின் நறுமணம் என்று எண்ணிக் கொள்வேன். அறைகளில் கூடங்களில் எல்லாம் கண்ணாடிக் குடுவைகளில் ஏதோ மூலிகைச் செடிகள் வளர்க்கத் தொடங்கினாள். அவற்றுக்கு அவளே குறிப்பிட்ட இடைவெளியில் நீரினை மாற்றுவாள். அந்தக் குடுவைகளில் இருந்து வரும் நறுமணம் பருவநிலைக்கு ஏற்ப பொருந்திப் போகும்.
மகன் பிறந்த பிறகு அந்த உற்சாகம் இரண்டு மடங்கானது. பொதுவாக என்னைப் போன்ற பதவியில் இருப்பவர்கள் ஒரு இறுக்கமான முகத்தை பணியிடத்தில் பேணுவார்கள். முக இறுக்கம் என்பது நம் மனதை பிறர் படித்தறியக்கூடாது என்பதற்காக அணியும் வேடம். ஆனால் அது கற்பனை அற்றவர்களின் வேடம் என்றும் அந்த வேடம் எவ்வளவு நொய்மையானது என்றும் நான் அடுத்த நிலைக்கு நகர்ந்தபோதே புரிந்தது. நான் எப்போதும் புன்னகைப்பவனாக மாறியிருந்தேன். ஆனால் அந்தப் புன்னகை பணியிடத்தில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது. எனக்கு கீழே பணிபுரிகிறவர்கள் தங்கள் மனதில் உள்ளதை நான் படித்தறியும் ஆற்றல் கொண்டவனாக மாறிவிட்டதாக நம்பினார்கள். என் மனைவியின் வழியாக எனக்குள் உருவாகி இருந்த மாற்றம் என் பணியிடத்திலும் பிரதிபலித்தது. அமைச்சகங்களிலேயே குற்றத்தடுப்பு அமைச்சகம்தான் முழு ஆற்றலுடன் உழைப்பதாக அமைச்சக செயலர்கள் கூட்டத்தில் தேசத்தலைவர் பாராட்டியதாக என் செயலர் என்னிடம் கூறினார். இப்படியான வெளிப்படையான பாராட்டுகள் எல்லாம் மிக மிக அரிதானவை. செயலர் என்னிடம் இத்தகவலை சொன்னபோது அவர் முகம் மலரவில்லை. ஆகவே தலைவர் நேரடியாக என்னைப் பாராட்டி இருப்பதற்கான வாய்ப்பையும் நான் மறுத்துக்கொள்ளவில்லை.
மகன் பிறந்த மூன்றாவது மாதத்தில் செயலரின் சுணக்கத்திற்கான காரணம் உறுதியாயிற்று. குற்றத்தடுப்பு பிரிவின் செயலராக நான் நியமிக்கப்பட்டேன். இந்த நியமனத்தில் இரண்டு அசாதரணங்கள் இருந்தன. ஒன்று பொதுவாக ஒரு அமைச்சகத்தில் துணைச் செயலராக இருப்பவரை அதே அமைச்சகத்தின் செயலராக பதவி உயர்த்தமாட்டார்கள். இரண்டாவதாக நாற்பது வயதுக்கு குறைவானவர்கள் இதுவரை தேசத்தில் செயலராக நியமிக்கப்பட்டதில்லை. செயலர் பதவிக்கு நான் நகர்வதற்கான சடங்குகள் முடிந்து நான் பதவி ஏற்றுக் கொண்ட ஒரு வாரத்தில் என் மகன் இறந்து போனான். மாடியில் இருந்து மகனைத் தூக்கிக்கொண்டு இறங்கும்போது என் மனைவி தலைசுற்றி மகனை நழுவவிட்டிருக்கிறாள். அவன் தரைத்தளத்தில் விழுந்து தலையும் முதுகெலும்பும் சிதறி இறந்தான்.
நான் அவன் என் நினைவுக்கு கொண்டு வரக்கூடாது என்பதற்காக பதினாறு மணிநேரங்கள் உழைத்தேன். என் சகோதரிகள் என் மனைவியுடன் வந்து சில நாட்கள் தங்கினர். அந்த மூன்று பெண்களுடனும் என்னால் பேச முடியவில்லை. தொடர்ந்து பணியாற்றிக்கொண்டே இருந்ததால் ஒரு கட்டத்தில் எனக்கு எஞ்சும் வேலையே இல்லாமல் போனது. ஒவ்வொரு அமைச்சகத்திலும் வரவு செலவு சார்ந்த தீர்க்கப்படாத தணிக்கை கோப்புகள் நூற்றுக்கணக்கில் குவிந்திருக்கும். என் அமைச்சகத்தில் பார்வையிடுவதற்கு செயலருக்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்ட போர் மற்றும் ஆயுதம் சார்ந்த கோப்புகளை பார்க்கத் தொடங்கினேன். இருபது வருடங்களுக்கு முற்பட்ட கோப்புகள். அன்றைய உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய அறுபது சதவீதம் ஆயுத வணிகத்தின் வழியாகவே என் தேசத்திற்கு வந்து கொண்டிருந்தது. அவற்றில் என்னளவில் சரிசெய்ய இயன்ற கோப்புகளை தலைமை கணக்காளரின் உதவியுடன் சரிசெய்தேன்.
ஏதோவொரு கோப்பினை பார்த்துக் கொண்டே வந்தபோது சட்டென மனம் அதிர்ந்தது. அதிர்ச்சிக்கான காரணம் சற்று நிதானித்தபோதே தெரிந்தது. என் ஊரின் பெயர் அந்தக் கோப்பில் தென்பட்டது. நிர்வாக அலகில் மிகக் மிக கீழே உள்ள ஒரு சாதாரண கிராமத்தின் பெயர் எப்படி உயர்மட்ட நிர்வாக விஷயங்கள் மட்டுமே புழங்கும் செயலரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள கோப்பில் வந்தது என்று பார்த்தேன்.அது அண்டை தேசத்தின் பெருங்கலவரம் பற்றிய கோப்பு.
மனைவி ஓரளவு சகஜமாகி இருந்தாள். அவளுக்கு மகனை தானே கொன்றுவிட்டோமோ என்ற குற்றவுணர்விருந்தது. நான் அவனை நினைத்தால் என் நிம்மதி கெடும் என்று நினைத்து அவளிடம் அவனைப்பற்றி பேசாமல் இருந்தேன். அவளோ நான் அவள் மீது சினம் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டாள். அந்ந எண்ணத்தை போக்குவதற்காக நான் அவளுடன் தினம் பேசினேன். ஆனால் சொற்கள் மீது என் கட்டுப்பாடு முழுமையாக செயல்படும் விஷயங்களைப்பற்றி மட்டுமே பேசினேன். அது பெரும்பாலும் அலுவலகம் சார்ந்த விஷயமாக இருந்தது.
அன்றும் அவ்வாறு தான் பெருங்கலவரம் பற்றி நான் அறிந்த தகவல்களைச் சொன்னேன். அன்று சற்று இலகுவான நாளாக நகர இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று மகன் இறந்தபிறகு முதன்முறையாக முதல்நாள் இரவு நாங்கள் உடலுறவு வைத்துக் கொண்டோம். மற்றொன்று அன்று ஞாயிற்றுக்கிழமை. மகன் இறந்தபிறகு நான் வீட்டில் தங்கிய முதல் ஞாயிற்றுக்கிழமை.
“அந்த பெருங்கலவரத்தை தூண்டியது உங்களது அரசாங்கமா?” என்றாள்.
“இதில் அதிர்ச்சி அடைய ஒன்றுமில்லை. வலுவான அரசுகள் தங்கள் அண்டை தேசங்களின் அரசியலில் தலையிட இப்படியான விரிசல்களை உருவாக்குவது சகஜம் தான். உலகம் முழுக்க”
“ம்ஹ்ம் விரிசல்கள்”
விரக்தியான சிரிப்புடன் சொன்னாள்.
அவள் எண்ணம் செல்லும் திசையை ஊகித்து “இந்த நாட்டின் அரசாங்கம் உதவாமல் இருந்திருந்தாலும் அந்த கலவரம் நிகழ்ந்திருக்கும்” என்றேன்.
நான் பேச்சை முடித்த அதே கணத்தில் “சிறிய அளவில்” என்றாள். அப்போது அவள் குரலில் கோபம் ஏறி இருந்தது.
நான் சற்று புன்னகைப்பது போல முகத்தை வைத்துக்கொண்டு “அன்றைய கலவரத்துக்காக இன்று என்னை தண்டிக்கப் போகிறாயா?” என்றேன்.
அவளும் சிரித்து “ம்ம் தண்டிக்கலாம் தவறில்லை” என்றாள். ஆனால் அவள் சிரிப்பில் இருந்தது வஞ்சத்தின் சாயை. என் சிரிப்பில் பயத்தின் சாயை இருந்ததுபோல.
“நான் இதை உன்னிடம் சொல்லி இருக்கக்கூடாது. என்னை மன்னித்துவிடு” என்றேன்.
“நான் யார் உங்களை மன்னிக்க? மேலும் எதற்காக உங்களை மன்னிப்பது? என் மக்கள் ஆயிரக்கணக்கில் இறந்துபோக நீங்கள் காரணமாக இருந்ததற்கா? அல்லது என் தந்தைக்காகவா?” அவள் அதைச் சொல்லி முடிக்கும்போது ஏறக்குறைய அழத் தொடங்கிவிட்டாள். அந்த அழுகையுடன்தான் தன்னைப் பற்றி சொல்லத் தொடங்கினாள். ஆனால் சொல்லச் சொல்ல அவள் குரலில் சீற்றம் ஏறியபடியே வந்தது.
“என் அம்மா நான் சிறுமியாக இருக்கும்போதே இறந்துவிட்டார். அப்பா கண்ணாடிப் பொருட்களில் வண்ண வேலைப்பாடுகள் செய்து தரும் ஒரு தொழிற்கூடம் வைத்திருந்தார். தொழில்முறையாக மட்டுமில்லாமல் சொந்த ரசனையின் அடிப்படையில் கண்ணாடி டம்ளர்கள் குடுவைகளில் எல்லாம் மலர்களை வளர்ந்து வைத்திருப்பார். எங்கள் வீடு முழுக்க கண்ணாடிப் பொருட்களால் நிறைந்திருக்கும். புதிதாக வீட்டுக்கு வருகிறவர்களுக்கு வீட்டுக்குள் மலர்தோட்டம் இருப்பதாகவே தோன்றும். அப்பா கண்ணாடிப் பாண்டங்களில் அவ்வளவு நுணுக்கமாக மலர்வேலைப்பாடுகள் செய்திருப்பார். ஆனால் கொஞ்சம் அஜாக்கிரதையுடன் நடந்து கொண்டாலும் மலர் பாண்டங்கள் உடைந்துவிழும். நான் கவனமில்லாதவளாகவே வளர்ந்தேன். வாரத்திற்கு ஐந்து மலர்பாண்டங்களாவது உடையும். அப்பா அதற்கென என்னை திட்டவோ கோபிக்கவோமாட்டார்.மீண்டும் சந்தைக்குச் சென்று புதிய பாண்டங்களுடன் வருவார். புதியவற்றில் இன்னும் சிரத்தையோடு வண்ணம் தீட்டுவார். வருமானம் தேவைக்கும் அதிகமாகவே வந்து கொண்டிருந்தது.”
எனக்கு பத்து வயது இருக்கும்போதுதான் அரசாங்கத்துக்கு எதிராக எங்களுடைய இனத்து மக்கள் கிளர்ச்சியில் ஈடுபடத் தொடங்கினர். அடுத்த இரண்டு வருடங்கள் பதற்றம் நிறைந்ததாகக் கடந்தன. முதலில் செய்திகளாக மட்டுமே கேட்டிருந்த போர் மெல்ல மெல்ல எங்களை ஆக்ரமிக்கத் தொடங்கியது. எங்கள் கிராமத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊருக்கு விடுமுறையில் வந்திருந்த ராணுவவீரனை அந்த ஊரில் இருந்த எங்கள் இனத்தவர்கள் கொன்றபோது என் அப்பா கவலைப்படத் தொடங்கினார். சில நாட்களில் எங்கள் ஊரில் வெடிகுண்டு சத்தங்கள் கேட்கத் தொடங்கின. மக்கள் ஊரை காலி செய்துவிட்டு உங்கள் தேசத்துக்கோ அல்லது எங்கள் தேசத்தின் வடக்கு பகுதிக்கோ நகர்ந்தனர்.
நாங்கள் மறுநாள் ஊரைவிட்டுப் புறப்படலாம் என்று முடிவு செய்திருந்தோம். அப்பா அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே கண்ணாடிப்பாண்டங்களில் எதையெல்லாம் எடுத்துச் செல்வது எனத் தவிக்கத் தொடங்கிவிட்டார். முதலில் சிலவற்றை எடுத்து வைப்பார். பிறகு அவற்றில் இருந்து சிலவற்றை கைவிட்டு வேறு சிலவற்றை எடுத்து வைப்பார். ஆனால் இறுதியாக அப்பா செம்பருத்திப் பூக்கள் வரையப்பட்ட ஒரு குவளையை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை வீட்டிலேயே வைத்துவிட்டார்.
அந்த சமயத்தில் ஒருநாள் திரும்பி வரலாம் என்ற நம்பிக்கை அப்பாவிடம் இருந்தது. வடக்கு நோக்கிதான் நாங்கள் முதலில் புறப்பட்டோம். அப்பா வீட்டை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டு அவருடைய டிரக்கை மெல்ல ஓட்டிக் கொண்டிருந்தார். ஒரு இருநூறு மீட்டர் தூரம் நகர்ந்தபோது எங்கள் வீட்டில் ஒரு வெடிகுண்டு விழுந்தது. வீடு எங்கள் கண் முன்னே எரிந்தது. அப்பா டிரக்கை விட்டிறங்கி தூரத்தில் நின்றபடி வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் உங்கள் தேசத்தை நோக்கி டிரக்கை ஓட்டத் தொடங்கினார்.
நாங்கள் செல்வது ராணுவம் நிறைந்த பகுதி என்பதால் அப்பா என்னை ஆண்போல அலங்கரித்தார். என் நீளமான கூந்தலை வெட்டினார். அப்போது திரளத் தொடங்கி இருந்த என் மார்பினை மெல்லிய நூலால் இறுகச் சுற்றினார். இரவுகளில் அழுதபடியே சிவந்துபோன என் நெஞ்சுக்கு முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு எண்ணெய் தடவி விடுவார். உங்கள் தேசத்தின் எல்லைக்கு ஒரு கிலோமீட்டர் இருக்கும்போது நாங்கள் கொள்ளையடிக்கப்பட்டோம். எங்கள் கையிலிருந்த பணத்தையும் டிரக்கையும் கொள்ளையர்கள் எடுத்துக் கொண்டனர். என் அப்பா அவர்கள் காலில் விழுந்து கெஞ்சினார். பணத்தை மட்டுமாவது கொடுத்துவிடும்படி அழுதார்.
கொள்ளையர்களில் ஒருவன் இன்னொருவன் காதில் ஏதோ சொன்னான். அவன் என்னை உற்றுப் பார்த்தான். பிறகு அப்பாவிடம் சென்று ஏதோ சொன்னான். அப்பா உரக்க அழத் தொடங்கினார். பிறகு மீண்டும் அவர்கள் காலில் விழுந்தார். என்னை டிரக்கில் அமரச் செய்துவிட்டு அவர்களில் தலைவன் போலத் தெரிந்த ஒருவன் என் அப்பாவை தன்னுடன் ஒரு புதருக்குள் கூட்டிச் சென்றான். பிறர் அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
அதில் ஒருவன் “இவன் என்றாவது ஒருவன் நம் மீதும் காதல் கொண்டுவிடுவானோ என்று பயமாக இருக்கிறதடா” என்றான்.
அரைமணி நேரத்துக்குப் பிறகு என் அப்பா திரும்ப வந்தார். அவர் கையில் நாங்கள் கொண்டு வந்திருந்த பணப்பை இருந்தது. அவர்கள் எங்கள் டிரக்கை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர். என்னைத் தொடாமல் பணப்பையை என்னிடம் கொடுத்துவிட்டு அருகில் இருந்த குளத்தில் அப்பா குளித்தார்.
உங்கள் தேசத்திற்கு வந்தபிறகு அப்பா தலைநகரில் உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். கொஞ்சநாளில் கழிப்பறையுடன் கூடிய ஒரு சிறு வீடு எங்களுக்கென வாடகைக்கு கிடைத்தது. அப்பாவின் வருமானத்துக்கு அந்த வாடகைத்தொகை மிக அதிகம். ஆனால் அப்பா கட்டாயம் கழிப்பறை வேண்டும் என்று விரும்பினார். அந்த கழிப்பறை குளியல் அறையுடன் இணைந்தது. அப்பா வெகுநேரம் குளிப்பார். ஒரு நாளைக்கு ஏறக்குறைய ஒரு மணிநேரம். கழிப்பறையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருக்கும். அப்பாவின் இந்தப் பழக்கத்தால் மின் கட்டணம் அதிகமாக கட்ட வேண்டியிருந்தது. ஒருமுறை என் பள்ளிக் கட்டணத்தை கட்டப் பணமில்லாமல் போனது. அதன்பிறகு அப்பா மேலும் கடுமையாக உழைக்கத் தொடங்கினார். ஆனால் தினம் ஒரு மணிநேரம் குளிப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை. பணியிடத்திலும் அடிக்கடி கழிப்பறைக்குள் சென்று கதவை சாத்திக் கொள்வது அவர் பழக்கமாக இருந்திருக்கிறது. அவருடைய கால்சட்டையின் பின்பக்கம் பெரும்பாலான நேரம் ஈரமாகவே இருந்திருக்கிறது. நான் சில நாட்கள் அப்பா நள்ளிரவில் எழுந்து கழிப்பறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டதை கண்டிருக்கிறேன். நான் என் பள்ளிப்படிப்பை முடித்து தேர்வுகளுக்கு படிக்கத் தொடங்கினேன். பத்தொன்பது வயதில் எனக்கு ஒரு எளிய அரசு வேலை கிடைத்தது.
வேலைக்கான பயிற்சியின்போது நான் வெளியூரில் தங்க நேர்ந்தது. அப்போது அப்பா தினம் இரண்டுவேளை என்னை அழைப்பார்.
“தனியாக சமாளிக்க முடிகிறதா?” என்று திரும்பத் திரும்ப கேட்பார். நானும் உற்சாகமாக ஒரு சுதந்திரமான பெண்ணாக மாறி வருவதை அவரிடம் சொல்வேன். பயிற்சி தொடங்கி ஒன்றரை மாதங்கள் கழித்து நான்கு நாட்களாக அப்பாவிடம் இருந்து அழைப்பு வரவில்லை. நான் அழைத்தபோதும் அவர் எடுக்கவில்லை. ஐந்தாவது நாள் எனக்கு பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து அழைப்பு வந்தது. அப்பா கழிப்பறையில் நான்கு நாட்களுக்கு முன் இறந்து கிடந்திருக்கிறார். நாற்றம் வெளியே கசியவே அண்டை வீட்டார்கள் வீட்டை உடைத்து உள்ளே போய் பார்த்திருக்கிறார்கள். அப்பா நெஞ்சிலும் மலவாயிலும் கண்ணாடியால் குத்திக்கொண்டு இறந்திருக்கிறார். வலி பொறுக்க இயலாமல் கழிப்பறை சுவர்களை கீறியிருக்கிறார். அவர் தன் மலவாயில் குத்திக்கொண்ட கண்ணாடித் துண்டு எது தெரியுமா?”
என் மனைவி எவ்வளவு இரக்கமற்றவள் என்று அக்கணம் எனக்குப் புரிந்தது. ஒரு நொடிகூட அவள் என்னை விட்டு பார்வையை விலக்கவில்லை. அவளுடைய கேள்வி ஒரு நாகம் போல நாக்கை சுழற்றியபடி என் முன்னே நின்றது. நான் பதில் சொல்ல இயலாதவனாக அமர்ந்திருந்தேன்.
பின்னர் மெல்ல என்னை சமப்படுத்திக் கொண்டு “நீ கண்ணாடிப் பொருட்களை அதனால்தான் வெறுக்கிறாயா?” என்றேன். அவள் ஒன்றும் சொல்லாமல் எழுந்து சென்றாள்.
5
அடுத்த வாரத்தில் எனக்கு பிறந்தநாள் வந்தது. நான் அதை நினைவில் வைத்துக்கொள்ளும் மனநிலையில் இல்லை. ஆனால் அலுவலகம் நினைவில் வைத்திருந்தது. ஒவ்வொருவரும் என்னை கொண்டாடினார்கள். எனக்கு பரிசுகளும் இனிப்புகளும் வழங்கப்பட்டன. மாலை களைத்திருந்தாலும் இவ்வளவு பேரின் வாழ்த்தை ஏற்றதால் – அதில் பெரும்பகுதி வெறும் முகஸ்துதி என்று தெரியும் என்றாலும் – உண்டான மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தேன். எப்போதும் போல வீட்டின் மிகப்பெரிய கூடம் என்னை வரவேற்றது.
மகன் இறப்பதற்கு முன்புவரை என் மனைவிக்கு சமையல் துணையாக இருந்த பெண்ணும் மற்ற வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்ளும் அவள் கணவனும் அவர்களுடைய மூன்று வயது மகளுடன் என் வீட்டில்தான் தங்கி இருந்தனர். என் மனைவி அவர்கள் குடும்பத்தை சுதந்திரமாக நடத்தத் தேவையான சமையலறை மற்றும் கழிப்பறையுடன் கூடிய ஒரு பெரிய தனி அறையை தரைத்தளத்தில் ஒதுக்கிக் கொடுத்திருந்தாள். நான் வீட்டுக்குத் திரும்பும் நேரம் பெரும்பாலும் ஒன்றுபோல இருக்காது. ஆனால் பெரும்பாலும் மாலை நேரங்களில் நான் வீட்டுக்கு வரும்போது சமையல் செய்யும் பெண் தன் மூன்று வயது குழந்தையை எதிரே அமர்த்தி என் மகனை தன் மடியில் அமர்த்தி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருப்பார். அந்த பெண் குழந்தையும் என் குழந்தையை சிரிக்க வைக்க தரையில் உருண்டு புரண்டு என்னென்னவோ செய்யும். என் மகன் சிரிப்பான்.
அவன் இறந்ததும் என் மனைவி அவர்களை எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு வாடகை வீட்டுக்கு மாற்றிவிட்டாள். அவர்களுக்கான வாடகையை இவளே கொடுத்தாள். மகன் இறந்தபிறகு அவர்களும் வீட்டைவிட்டுச் சென்றது என் வெறுமையை அதிகப்படுத்தியது. ஆனால் மனைவியிடம் எதையும் கேட்ட முடியும் என்று தோன்றவில்லை.
கூடத்தில் கிடந்த மிகப்பெரிய டீப்பாயின் மீது ஒரு மலர்கொத்து இருந்தது. நெருங்கிப்பார்த்த போதுதான் அது மலர்கொத்தில்லை மலர்கள் வரையப்பட்ட நான்கு கண்ணாடிக்குவளைகள் என்று தெரிந்தது. என் மனம் திடுக்கிட்டது.
“வந்து விட்டீர்களா?”
என் மனைவி மாடியில் இருந்து இறங்கிவந்து என்னை அணைத்துக் கொண்டாள். அழகாக இருந்தாள். அணைத்துக் கொண்டபோது அவ்வளவு நறுமணமாக இருந்தாள். ஆனாலும் என்னால் அவளில் ஈடுபட முடியவில்லை. இன்னமும் அந்த குவளைகள் என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தன. அன்றிரவு அவள் விருப்பத்தின் பேரில் கூடினோம். ஆனால் அவள் தனக்குள் என் விந்து செலுத்தப்படுவதை விரும்பவில்லை. அடுத்தடுத்த நாட்களும் இதுவே தொடர்ந்தது. தினம் வீட்டுக்கு பூ வேலைப்பாடுகள் கொண்ட கண்ணாடிக் குவளைகளும் குடுவைகளும் வந்தவண்ணமே இருந்தன. வீட்டுக்கூடம் அவற்றால் நிரம்பத் தொடங்கியது. அனைத்துமே செந்நிறமானவை. என் மனைவி கூடத்தில் சுவர் நிறத்தையும் செந்நிறமாக மாற்றச் சொன்னாள். இரவில் அவளுடன் கூடி முடித்து வெளியே வந்து பார்க்கும்போது ஒரு செந்நிற குளம் போலக் கூடம் தெரியும். அக்குளத்தில் முளைத்த பூக்கள் போல குவளைகள். சில சமயம் அவை ஒன்றுடன் ஒன்று உராய்ந்து கொண்டு மெல்லிய ஒலி எழுப்பும்போதுதான் அவை பூக்கள் இல்லை என்ற பயங்கரமான உண்மை மனதில் உரைக்கும்.
என் பிறந்தநாள் முடிந்த இரண்டு வாரங்களில் கூடத்தின் சூழல் எனக்கு முழுமையாக பழகிவிட்டது. மனைவியின் கூடலின் போதான கட்டளைகளும் சற்று தளர்ந்திருந்தன. இரண்டு நாட்களாக அவளுக்குள் விந்து செலுத்தப்பட அனுமதிக்கிறாள். ஏதோவொரு பயங்கரத்தில் இருந்து மெல்ல மீண்டு வருகிறோம் என்ற நம்பிக்கை கொண்டிருந்த நேரத்தில்தான் அது நடந்தது.
அன்று நான் வீட்டிற்கு வர ஏறக்குறைய நள்ளிரவானது. ஓட்டுனரை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தபோது கூடத்தின் செம்மையில் முதலில் எனக்கு ஒன்றும் புலப்படவில்லை. சற்று நேரங்கழித்தே கண்ணாடிகள் ஆவேசமாக முட்டிக்கொள்ளும் ஒலி கேட்டது. முதல்முறை அவற்றை வீட்டில் பார்த்தபோது ஏற்பட்ட அதே நடுக்கம் மீண்டும் என் முதுகெலும்பில் கடந்து சென்றது.
என் மனைவி கண்ணாடிக் குவளைகளை ஒவ்வொன்றாக எடுத்து சுவற்றில் தட்டி உடைத்துக் கொண்டிருந்தாள். அந்த சில்லுகள் அவள் கைகளிலும் முகத்திலும் தெறித்து ரத்தப்பொட்டுகள் ஏற்பட்டிருந்தன. நான் ஓடிச்சென்று அவளை பிடித்துக் கொண்டேன்.
“எங்கே பூக்கள்? எங்கே என் பூக்கள்?”
இதையே ஒரு பத்து முறை கேட்டிருப்பாள்.
“இங்குதான் வாங்கி வைத்திருந்தேன். அவ்வளவு பூக்கள். அவ்வளவையும் யாரோ திருடிவிட்டார்கள். உனக்குத் தெரியுமா? என் பூக்களைத் திருடியவர்களை உனக்குத் தெரியுமா?”
எனக்கு அழுகை வந்தது. என்னிடம் பேசியது என் மனைவியே இல்லை. யாரோ ஒருத்தியின் குரல் அது.
மீண்டும் என்னை உலுக்கி “எங்கே என் பூக்கள்? எங்கே என் பூக்கள்?” என்றாள்.
என்னை அவள் அடிக்கத் தொடங்கினாள். நான் அவளை அவள் திமிரத் திமிர என் பிடியைத் தளர்த்தாமல் தூக்கிச் சென்று கட்டிலில் கிடத்தினேன்.அவள் மேலும் கூச்சலிடவே அவளை அறைந்தேன். அந்த அறையில் ஒரு கணம் அவள் கண்களில் அதிர்ச்சி வந்து மீண்டது. ஆனால் அவள் தன்னை திரட்டிக்கொண்டு மீண்டும் கூச்சலிடத் தொடங்கினாள். நான் மீண்டும் அறைந்தேன். அறைந்தபடியே அவள் அணிந்திருந்த சுடிதாரை உருவி எறிந்தேன். அவள் முகத்தில் நிரந்தரமாக அதிர்ச்சி படிந்தது. அந்த கணம் என்னுள் நிகழ்ந்த மாற்றம் என்னவென்று எத்தனை வகையாக சிந்தித்தும் என்னால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. சில சமயம் அவள் முகத்திலும் உடலிலும் இருந்த ரத்தப் பொட்டுகள் அவள் பால் வெள்ளை நிற உடலில் சேர்த்த சோபை காரணமெனத் தோன்றும். சில சமயம் எங்கள் முதல் சந்திப்பில் இருந்தே நான் அவளிடம் கண்டிருக்காத அப்போது அவள் கண்களில் குடியேறிய அச்சம் என்று தோன்றும்.
ஆனால் அந்த சமயம் அவளை முழுதாக எடுத்துக் கொள்ளும் எண்ணமே இருந்தது. எங்கள் இரண்டாண்டுகால திருமண வாழ்வின் முதல் இணக்கமற்ற புணர்ச்சி. ஒரு பக்கம் என்னுள் பிறந்தது முதலே சேகரித்துக் கொண்ட ஏதோவொன்று கரைந்து இல்லாமல் ஆகிக்கொண்டிருந்தது. மறுமுனையில் அவள் மேலும் மேலும் என் ஆளுகைக்குள் வந்து ஏறக்குறைய அங்கு இல்லையென்றே ஆனாள்.
மூன்று மணிநேரம் அவள் உடலை தொடர்ச்சியான இடைவெளியில் வன்முறைக்கு ஆளாக்கிய பிறகு அவள் களைத்துச் சோர்ந்து தூங்கத் தொடங்கினாள். நான் அந்த இரவில் ஒரு கணமும் உறங்கவில்லை. அன்று உறங்கி எழுந்தால் நான் தற்கொலை செய்து கொள்ள நேரிடும் என்று தோன்றியது. நான் விழித்தபடியே அமர்ந்திருந்தேன். அவள் வழக்கம் போல மறுநாள் ஐந்து மணிக்கு எழுந்தாள். கழிவறைக்குச் சென்று ரத்தப் பொட்டுகள் உறைந்தும் கிழிந்தும் இருந்த சுடிதாரினை கழட்டிப்போட்டுவிட்டு வேறு உடைக்கு மாறினாள். ஆனால் அவளால் அப்போது சற்று தாங்கியே நடக்க முடிந்தது. இரவு முழுவதும் விழித்திருந்த எரிச்சல் கூட அவள் அப்படி தாங்கி நடப்பதற்காக நான் துக்கப்படுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. எனக்கு தேநீர் தயாரித்து அளித்துவிட்டு கீழே கூடத்தில் நேற்று மாலை அவளால் உடைக்கப்பட்ட கண்ணாடிச் சில்லுகளை கூட்டி அள்ளத் தொடங்கினாள்.