கைத்துப்பாக்கியும் காக்கையும்
நக்கீரன்

by olaichuvadi

 

கைத்துப்பாக்கிக் காலை உலாவுக்குப் புறப்பட்டது. வழக்கம்போல வழியில் எதிர்படும் எவரிடமும் அது புன்னகைக்கவில்லை. விரல் ‘டிரிக்கர்’ மீது பதிந்திருப்பது போல எந்நேரமும் ஓர் இறுக்கம். மற்றவர்களும், கைத்துப்பாக்கியைக் கண்டால் கவனிக்காதது போலவே நடித்துக் கடப்பது வழக்கம்.

சற்று நேரத்திலேயே அது பூங்காவுக்கு வந்து சேர்ந்தது. சிமிட்டிப் பாதையில் சிலர் நடைப்பயிற்சியில் இருந்தனர். சர்க்கரையை நேசித்த சில உடல்கள் மட்டும் எட்டுப் போட்டுக் கொண்டிருந்தன. கைத்துப்பாக்கிக்கு இனிப்பும் பிடிக்காது, இனிமையும் பிடிக்காது. எனவே, அது நேராகவே நடந்தது.

வெயில் இன்னும் புளிக்கவில்லை. நடந்தவர்களில் சிலர் கைத்துப்பாக்கியைப் பார்த்ததும் தம் பயிற்சி நேரம் முடிந்ததை உணர்ந்து கைத்துண்டால் வியர்வையைத் துடைத்தனர். கைத்துப்பாக்கிக்கு அது மிகவும் உவப்பான காட்சி. அது, தனக்கான மறைமுக மரியாதை என்பதுபோல மேலும் கர்வத்துடன் நடக்கும். அதேநேரம் கைத்துப்பாக்கிக்கு அறவே பிடிக்காத இரு காட்சிகளும் அங்கிருந்தன. அவற்றை நினைத்தால் உள்ளிருக்கும் ரவைகள் சீறத் துடிக்கும். சுட்டுக்கொல்லும் ஆவேசம் எகிறும்.

அவற்றில், முதலாவது காக்கைகள். இரண்டாவது, ஒரு தூரிகை.

கிளைகளில் அமர்ந்து கரையும் காக்கைகளால் நடைபாதை முழுக்க எச்சங்கள் நிறைந்திருக்கும். காக்கைகள், வாழத் தகுதியற்ற பறவைகள் என்பதுதான் கைத்துப்பாக்கியின் திடமான எண்ணம். அவற்றின் நிறமும் குரலும் மட்டுமல்ல எண்ணிக்கையும் ஒரு காரணம். கைத்துப்பாக்கி ஒரு மால்தஸ் காதலர். கீழ்மைகளின் எண்ணிக்கைப் பெருக்கம் தன்னைப் போன்ற மேட்டிமைகளின் தகுதியைக் குறைத்துவிடும் என்பது அதன் அழுத்தமான நம்பிக்கை. அனைத்தையும் சுட்டுப்பொசுக்க வேண்டும். ஒரேயொரு காரணம் மட்டும் கிடைக்கட்டும் என்று மனசுக் கிடந்துப் பொறுமும். ஒருநாள், அந்தக் காரணமும் கிடைத்தது.

அன்று காக்கைகள் எதனாலோ மேலே கூட்டமாகச் சுற்றிக் கரைந்துக் கொண்டிருந்தன. கைத்துப்பாக்கிக்கு எரிச்சல் தாளவில்லை. அதை வாய்ப்பாகக் கருதி மேல்நோக்கிக் குறிவைத்துச் சுட்டதில் ஒரு காகம் கீழே விழுந்தது. மற்றவை பறந்தன. கைத்துப்பாக்கியின் மனம் சற்று அமைதியாகும் நேரத்தில்தான் அந்தக் குரல் கேட்டது.

.“க்ரோ ஷூட்டர்”  

திரும்பிப் பார்த்தது கைத்துப்பாக்கி. அந்தத் தூரிகை நின்றுக்கொண்டிருந்தது. அதை அடிக்கடி பூங்காவில் பார்த்ததுண்டு. எப்போதும் எதையாவது வரைந்து கொண்டிருக்கும். கேட்டால் கலை அது இது என்று என்று பிதற்றும். கலையாம் கலை. கொலை செய்யப்பட வேண்டிய நாட்டின் சுமைகள்.

“என்ன சொன்னாய்?” நினைவுக் கலைந்த கைத்துப்பாக்கிக் கேட்டது.

“அந்தக் காலத்தில் சினிமா படப்பிடிப்பு நடக்கும்போது ஸ்பாட்டிலேயே ஒலிப்பதிவும் நடக்கும். அப்போது பிற சத்தங்கள் அந்தக் கருவியில் பதிவாகக் கூடாது. மனிதர்களை விரட்டிவிடலாம். காக்கைகளை என்ன செய்ய முடியும்? எனவே, ஒருவரை துப்பாக்கியுடன் நிற்க வைத்திருப்பார்கள். அவர்தான் க்ரோ ஷூட்டர்”

“அதை எதற்கு இப்போது சொல்கிறாய்?”

“நீங்கள் செய்தது என்ன?”

“அவற்றின் இரைச்சல் பொறுக்க முடியாதது”

“நம் பேச்சுக்கூட அவற்றுக்குப் பொறுக்க முடியாமல் இருந்திருக்கலாம் இல்லையா?”

க்ரோ ஷூட்டரும் நானும் ஒன்றா? கைத்துப்பாக்கிக்கு ஆத்திரம் பொங்கியது. தூரிகையைச் சுட்டுத்தள்ள வேண்டும் போலத் தோன்றியது. ஆனால் காக்கையைச் சுடுவது போல அது எளிதல்லவே! ஆயிரத்தெட்டு உதவாக்கரைச் சட்டங்கள்.

இன்றும் அந்தத் தூரிகை எதையோ வரைந்து கொண்டிருந்தது. அந்த ஓவியப்பலகையைக் குறிச்சுடும் பலகையாகப் பயன்படுத்தினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்? வண்ணங்கள் அனைத்தும் குருதியாய் தெறிக்கும் அழகைக் கண்டுகளிக்கலாம். அட, இது என்ன? மேலே ஏதோ தெறிக்கிறதே? கைத்துப்பாக்கிப் பதறிப்போய்ப் பார்த்தது. காக்கையின் எச்சம்!

ஆத்திரத்துடன் கைத்துப்பாக்கி மேலே உயர்ந்தது. ஒரு ரவை விடுதலை பெற்று மேலே செல்ல ஒரு காகத்தின் பிணம் கீழே வந்தது. அதுதான் எச்சமிட்ட காகமா என்பது உறுதியில்லை. ஆனால் காக்கைக் கூட்டத்தில் ஒன்று. சாகவேண்டிய ஒன்றுதான்.

பூங்காவில் இருந்த ஒரு நாய்க்குட்டி பதறிப்போய்க் காக்கையின் அருகே சென்று பார்த்தது. ‘வள் வள்’ என்று பரிதாபத்துடன் குரைத்தது. கைத்துப்பாக்கிக்கு நாய்க்குட்டியைக் கண்டதும் மேலும் எரிச்சலானது. இருப்பவை போதாதென்று இதுவேறா? சட்டென்று அதன்மீது எரிந்து விழுந்தது.

“என்ன வள்-வள்? இங்கே பார்! இது பாவமில்லையா?”

கைத்துப்பாக்கித் தன் மீதிருந்த எச்சத்தைச் சுட்டிக்காட்டிக் கேட்டது. அப்போது பின்னாலிருந்து ஒரு குரல் வந்தது.

“அசையாதீர்கள்! சுத்தம் செய்கிறேன்”

குரல் கேட்டுத் திரும்பியபோது தூரிகை நின்றிருந்தது. அது, கைத்துப்பாக்கியின் பதிலுக்குக்கூடக் காத்திராமல் எச்சம்பட்ட இடத்தை வழிக்கத் தொடங்கியது. ‘இது நல்ல தூரிகையா? கெட்டத் தூரிகையா?’ கைத்துப்பாக்கி ஒருகணம் குழம்பியது. அதைப் பொருட்படுத்தாத தூரிகை அந்த நாய்க்குட்டியிடம் கேட்டது.

“நாய்க்குட்டியே! ஒரு மரத்தில் 100 காக்கைகள் இருந்தன. அதில் ஒன்றைச் சுட்டுவிட்டால் மீதி எத்தனை காக்கைகள் இருக்கும்?”

”வள்-வள்”

“99 காக்கைகளா?”

“வள்-வள்”

“ஓ… நீ புத்திசாலி. ஒரேயொரு காக்கை மட்டுமே இருக்கும் என்கிறாய். அதுவும் அந்த இறந்த காக்கை மட்டும், இல்லையா?”

”வள்-வள்”

“உன் விடைத் தவறு. அங்கு இரண்டு காக்கைகள் இருக்கும்”

“வள்-வள்”

“எப்படி என்கிறாயா? சுற்றுமுற்றும் பார்”

நாய்க்குட்டி ஒருமுறை ஒரு வட்டம் அடித்தது. பின்னர் வாலை வேகமாக ஆட்டியவாறு ‘வள்-வள்-வள்’ என்று குரைத்தது.

“ஓ… இரண்டாவதையும் பார்த்து விட்டாயா?”

வழித்து முடித்த தூரிகைக்கு நன்றி சொல்வதா? வேண்டாமா? என்று குழம்பி நின்றது கைத்துப்பாக்கி. ஆனால், நன்றியை எதிர்பாராத தூரிகையோ விலகிச் சென்றுவிட்டது. கைத்துப்பாக்கிக் குழப்பத்துடன் யோசித்தவாறே நடந்தது

“என்ன கணக்கு அது? எப்படி இரண்டு காக்கைகள்?”

பூங்காவின் வாசலுக்கு வந்த கைத்துப்பாக்கியை எதிரே வந்த ’சஃபாரி கோட்’ ஒன்று பார்த்து அதிர்ச்சியடைந்தது. பிறகு, ‘வாட் நான்சென்ஸ் திஸ்?” என்று எச்சம் பதிந்த இடத்தைச் சுட்டிக்காட்டி உரிமையுடன் கடிந்தது.

கைத்துப்பாக்கி அந்த இடத்தைப் பார்த்தது. தூரிகை துடைத்திருந்த அவ்விடத்தில் எச்சத்தின் தீற்றல் ஓர் உருவமாய் மாறியிருந்தது. அது ஒரு காக்கையின் உருவம்.

பிற படைப்புகள்

Leave a Comment