தாமஸ் லெக்லேர்: புனைவு மொழியின் பயன்பாடுகளில் இயல்பாகவே அறத்தை வலியுறுத்தும் பயன்பாடு என்று ஏதாவது இருக்கிறதா?
ஜான் கார்ட்னர்: நான் “அறப் புனைவு குறித்து” என்ற புத்தகம் எழுதியபோது, நெஞ்சறிந்து அறத்தை வலியுறுத்தும் குறிப்பிட்ட வகையானதொரு புனைவை, மனிதர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் கருவிகளில் தலைசிறந்ததைக் கொண்டு அவர்களைச் சார்ந்த முக்கியமான விஷயங்களைப் புரிந்து கொள்ளும் புனைவைப் பற்றித்தான் பேசினேன். சமகாலத்தில் கல்வித்துறையினர்களிடையே கொடிகட்டிப் பறக்கும் பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இவ்விடயங்களில் துளிகூட அக்கறையில்லை. எப்படி வாழ வேண்டும் என்பதைக் காட்டிலும் பக்க அணிமைகளைப் புரிந்து கொள்வதில்தான் அவர்களுக்கு அதிக ஆர்வமிருக்கிறது. அழகான அல்லது ஆர்வமூட்டும் அல்லது அணிநலம் வாய்ந்த அல்லது விசித்திரமான பொருட்களை படைப்பதில்தான் அவர்கள் கவனம் இருக்கிறது. மொழியைப் பொறுத்தமட்டில் – உங்களிடம் பேசுகையில் ஆங்கிலத்தில் பேசுகிறேன், சொல்ல நினைத்ததை அனேகமாக வெளிப்படுத்தக்கூடிய ஆங்கில வார்த்தைகளை, உலகின் அத்தனை வார்த்தைகளிலிருந்தும், தேர்வு செய்கிறேன்.
எழுதுவதாக இருந்தால், வார்த்தைத் தேர்வில் பிழையிருந்தால் எதிர்பார்க்கும் துல்லியத்தை அளிக்கும், அதைக் காட்டிலும் சிறந்த வார்த்தையை பயன்படுத்துகிறேன். ஆங்கிலம் என்பது வாய்கள், பற்கள், தொண்டை, சுவாசப்பைகள் கொண்டு நாம் எழுப்பும் சத்தங்கள் மட்டுமே, புனைவோ மிகவுமே சிக்கலானதொரு மொழி. அர்த்தத்தை கடத்த மேலும் விவேகமான, நுட்பமான வழிகள் அதற்கிருக்கிறது. ஒரு பாத்திரத்தைப் படைக்கையில், உயிர்ப்புள்ள மனிதனைப் போலிருக்கும் கற்பனை மனிதனைப் படைக்க விரும்புகிறேன். ஒருகால் சரியான வானிலை, சூழல் போன்றவற்றைக் கொண்டு அவன் எப்படிப்பட்டவன் என்பதை என்னால் ஜாடையாகக் காட்டிவிட முடியுமாக இருக்கலாம். கரடியுடனோ, காண்டாமிருகத்துடனோ, சிலந்தியுடனோ ஒப்புமை செய்து, அவனைப் பற்றிய இன்னுமொரு துப்பையும் அளிக்க முடியும். என்ன சொல்ல வருகிறேன் என்றால், புனைவெழுதுகையில் நான் செய்யும் அனைத்து தேர்வுகளுமே பறிமாற்றத்தையே நோக்கமாய் கொண்டிருக்கின்றன. புனைவில் அழகென்பது இறுதியில் நளினமான தகவல் பரிமாற்றம்தான் என்று நினைக்கிறேன், புனைவுருவே சொல்ல வந்ததைச் சரியாக சொல்வதற்கான உத்தி என்ற அர்த்தத்தில். ஒழுங்கமைவு கொண்ட ஒரு உலகத்தைப் பற்றி எழுதுகையில் ஒழுங்கமைவு நிரம்பிய நாவலை எழுதுகிறேன். ஒழுங்கிற்கும் ஒழுங்கின்மைக்குமிடையே நிலவும் இறுக்கத்தைப் பற்றி பேசுவதானால் அவ்விறுக்கத்தை வெளிப்படுத்தும் புனைவுருவால் கட்டமைக்கப்பட்டிருக்கும் நாவலை எழுதுகிறேன். ஆனால் எப்போதுமே மொழி என்ற கருவியைக் கொண்டு ஒரு குழியை அகழவே முற்படுகிறேன். மற்றவர்கள் அக்கருவியை சில சமயங்களில் அசை போடுவதற்காக பயன்படுத்தலாம்.
பில் காஸ்: பிரச்சனைகளுக்கான தீர்வுகளில் சமகால எழுத்தாளர்கள் பலருக்கு அக்கறையில்லை என்று ஜான் கூறுவது சற்று தவறானதொரு எண்ணத்தைத் தோற்றுவிப்பதாக இருக்கலாம். முக்கியமான மானுடப் பிரச்சனைகளை புரிந்து கொள்வதற்காகத்தான் நாவல்கள் எழுதுகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பதில்தான் கருத்து வேறுபாடிருக்கிறது; இப்பிரச்சனைகளால் வெகுவாக பாதிக்கப்பட்டு இருப்பதாலேயே அவற்றின் தீர்வை நாவாலாசிரியர்களிடம் ஒப்படைக்க அவர்கள் தயாராக இல்லை என்றும் வாதிடலாம். என்னைப் பொறுத்தமட்டில் எங்கேயும் எப்போதும் நாம் அறச்சிடுக்குகளால் சூழப்பட்டிருக்கிறோம். அவை மிகவுமே முக்கியமானவை என்றும் என்னைப் போன்ற ஒட்டுண்ணிகள் ஓரமாக கால விரயம் செய்வதற்காவது மனிதகுலம் நீடிக்க வேண்டுமென்றும் நினைக்கிறேன். இம்மாதிரியான ஆராய்ச்சிகளுக்கு உகந்தது புனைவா அல்லது உதாரணமாக, தத்துவம் போன்ற பிறிதொரு செயல்பாடா என்பதே எனக்கும் ஜானிற்குமிடையே நிற்கும் கேள்வி. இச்சிடுக்குகளை முடிவுகளை திரிக்காமல் தெளிவாகப் பேசுவதற்காக அதற்கே உரிய துறைகளும் முறைமைகளும் கொண்டதாய் தத்துவம் அமைந்திருக்கிறது. அதன் இயல்பினாலும், தேவைகளினாலும் புனைவென்பது ஒரு திரிக்கும் முறைமையாக இருப்பதால் அதை நான் சந்தேகிக்கிறேன்.
எழுதியதை திருத்தி எழுதும் சிக்கலையும் துல்லியமான வார்த்தைகளை கண்டடையும் முனைப்பில், “இதைத்தான் நான் உண்மையிலேயே நம்புகிறேனா,” என்று நிரந்தரமாகக் கேட்டுக் கொண்டிருப்பதாக ஜான் கூறுகிறார். அதில் எனக்கொரு பிரச்சனையில்லை. தாளில் சரியான வார்த்தைகள் எப்படி வந்து விழுந்தன என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை, அவை சரியான வார்த்தைகளாக இருக்கும் பட்சத்தில். ஆனால் என் நிலைமை இன்னமுமே மோசம். பெரும்பாலான சமயங்களில் எதை நம்புகிறேன் என்பது எனக்கே தெரியாது. நிச்சயமாக, புனைவெழுத்தாளனாக ஒன்றையும் நம்பாதிருப்பதே எனக்கு வசதியாக இருக்கிறது. நம்பிக்கையின்மையும் இல்லாதிருப்பதுகூட. அனைத்துமே இடை நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு இடத்திற்குப் பெயரவே நான் முனைகிறேன். பிரக்ஞைபூர்வமாக புரிந்து கொண்டதைக் காட்டிலும் மேலதிகமான அர்த்தங்களை புத்தகத்தில் பொதிந்து வைத்திருக்கிறோம் என்பதையே எப்போதும் விழைகிறோம். இல்லையெனில், அனேகமாக, புத்தகமும் உங்கள் நொய்மையையே பிரதிபலித்து இலேசாக இருக்கும். உங்களை விட அதிகமாக செயலாற்ற உங்கள் ஊடகத்தை ஏமாறச் செய்ய தன்னிலை உணர்வுடன் தெளிவான சிந்தனை கொண்ட ஒருவர் முடிந்தமட்டில் செய்யக்கூடிய அளவிற்காவது நீங்கள் முயல வேண்டும். ஆகவே நான் எதிர்கொள்ளும் சிக்கல் ஜானின் சிக்கலுக்கு நேர்மாறானது. பரிமாற்றமே ஜானின் அக்கறை; பறிமாற்றுவதற்கு எனக்கிருப்பதோ மிகச் சொல்பமே. கொஞ்ச நஞ்சமிருப்பதையும் புரிந்து கொண்டேனா என்பதுகூட சந்தேகமாக இருக்கிறது. பயனளிக்காத, சுவராசியம் குன்றிய, நொய்மையுற்ற ஒன்றாகவே அது இருக்கும். அப்படியே பரிமாற்றம் செய்ய விரும்பினாலும் தத்துவத்திற்குத் தாவி துல்லியம், தர்க்க ஒழுங்கமைவு, உண்மை போன்றவற்றை தயாரிப்பதற்குத் தேவையான கடுமையான முறைமைகளுக்கு என்னை உட்படுத்திக் கொள்ள வேண்டி வரும். மொழியை உருமாற்றி, அதன் பெரும்பாலும் விடாப்பிடியான பரிமாற்றத் தன்மையை கட்டுடைப்பதே, புனைவில் என்னை ஆர்வமூட்டுகிறது. அப்படி செய்கையில், நீங்கள் அடித்துச் சொல்வதில்லை, குழப்புவதுமில்லை. அவற்றை தவிர்ப்பதையே விரும்புகிறேன்.
தாமஸ் லெக்லேர்: படைப்பின் புனிதத்திற்கு அழகியல் பெருமானத்துடன் அறம் சார்ந்த பெருமானமும் இருக்கிறதா?
பில் காஸ்: கண்டிப்பாக, ஜானிற்கு உலகத்துடன் பகிர்ந்து கொள்ள ஏதோவொரு செய்தி வேண்டியதாக இருக்கிறது. நானோ உலகத்தில் ஏதாவதொரு பொருளை விதைக்க விரும்புகிறேன். எதேச்சையாக அது குறிகளாலானதாகவும் இருக்கிறது. அதனால், குறிகளால் ஆனதாக இருப்பதால், அது ஏதோவொன்றை சுட்டுகிறது என்ற முடிவிற்கு சிலர் வரலாம். ஆனால் உண்மையில் நான் நெடுஞ்சாலையில் பயணித்து அனைத்து வகையான நெடுஞ்சாலைக் குறியீடுகளைச் சேகரித்து, அவை எல்லாவற்றையும் கொண்டு சிகாகோ 35000 மைல்கள் என்று கூறும் சிற்பமொன்றை தயாரித்திருக்கிறேன். நான் எதிர்பார்ப்பதெல்லாம், மக்கள் இங்கு வந்து, சிற்பத்தின் முன் கூடி அதைப் பார்க்க வேண்டுமென்பதைத்தான் – அதை பார்த்துக் கொண்டிருப்பதனாலேயே, சிகாகோவை அவர்கள் மறந்துவிடுவதையும்தான். உலகத்தை அதிகரிக்கும் வகையில் ஏதோவொன்றைக் கூடுதலாக விட்டுச் செல்ல விரும்புகிறேன். அது எம்மாதிரியான பொருளாக இருக்க வேண்டும் என்று கேட்டால், நான் ஒரு பழங்காலத்து கற்பனைவாத ஆசாமி என்பதால், நம் விருப்பத்திற்கு பாத்திரமான பொருட்களையே கூடுதலாக விட்டுச் செல்ல விரும்புகிறேன் என்று பதிலளிப்பேன். நாம் விரும்புவது, குறிப்பாக மற்றவர்களிடம் விரும்புவதென்பது, அவர்கள் நம்முடன் கொள்ளும் கருத்துப் பரிமாற்றம் அல்லது அவர்களின் வெறும் “பொருட்படுத்தல்கள்”, இவை எல்லாவற்றையும் கடந்தது. ஒரு வகையில், அப்பொருட்களை விதைப்பதும்கூட ஒரு விதமான அறச் செயல்பாடு என்று கூறலாம். கண்டிப்பாக, எல்லோரும் வெறுக்கும் பொருட்களைக் கொண்டு உலகை அதிகரிக்க நீங்கள் விரும்புவதில்லை: “பில் காஸ் உருவாக்கிய மற்றுமொரு இலையட்டை”. அவர்கள் அனேகமாக அப்படித்தான் எண்ணுவார்கள், ஆனால் அதை நீங்கள் விழைய மாட்டீர்கள். சரி, ஏன் இப்பொருள் விரும்பப்பட வேண்டும் என்று விழைகிறீர்கள் என்பதே அடுத்த கேள்வியாக இருக்கும். தன்னளவில் அழகாக இருப்பதாலேயே அது விரும்பப்பட வேண்டும் என்பதே என் குறிப்பிட்ட நோக்கம். உணரப்படுவதற்காக மட்டுமே “இருக்கும்” பொருள். ஆகவேதான், அழகின் பிரதானம்.
ஜான் கார்ட்னர்: அழகாக இருப்பதற்காகவே படைக்கப்படும் பொருளும் ஒரு விதமான மெய்யுறுதிதான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. மேலும் மானுடத்திற்கு நன்மை பயப்பதை மெய்யுறுதி செய்யும் எதுவும் அறமானதே. ஆனால் பில்லும் நானும், எங்கள் எழுத்தைப் பொறுத்தமட்டில், வெவ்வேறு மெய்யுறுதிகளில் அக்கறை செலுத்துகிறோம். எழுதுகையில், மெய்யான சிந்தனை மூலம், கணத்துக்கு கணம், அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு மனோரீதியான எதிர்வினை வழியே எதை மெய்யானது, நன்மை பயப்பதென மெய்யுறுதி செய்ய முடியும் என்பதை அறிய முயற்சிக்கிறேன். உதாரணமாக, ஒரு உயர் அதிகாரி வேட்டையாளராக இருப்பதைக் காட்டிலும் ஒரு அமெரிக்க ஜனநாயகப் பிரஜையாக இருப்பதே முக்கியம் என்று சிந்தித்துக் கொள்கிறேன். அப்படிச் சிந்தித்துக் கொள்கிறேன் என்பதையும் சிந்தித்துக் கொள்கிறேன். அதை ஒரு நாவலில் புனையும்போது என் சிந்தனையில் சிறு மாற்றம் ஏற்படலாம். ஆனால் எதை உண்மையாக நம்புகிறேன் என்று, எதை ஆம் என்று ஆமோதிக்க முடியுமென்பதை — “ஆம், அதற்கென்னால் மெய்யுறுதி அளிக்க முடியும், அது மக்களுக்கு அனுகூலமானது, தனி நபர்களாக சமூகத்தில் வாழும் சாத்தியத்தை அதிகரிக்கிறது,” – கண்டறியும் முறைமை வழியே ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறேன்.
நெகிழ வைக்கும் ஒரு கதை கூறுகையில், மெய்யுறுதி அளிக்கக்கூடும் என்று நான் கண்டறிந்ததை வாசகிக்கும் மெய்யுறுதி அளிக்கக் கூடிய வகையில் அவளை வழி நடத்திச் செல்கிறேன். ஒரு தத்துவ மெய்யியலாளரின் செயற்பாட்டிற்கும் நான் செய்வதற்கும் என்ன வித்தியாசம் என்றால், என் செயல் ஒரு உணர்வு நிலைக்கு இட்டுச் செல்கிறது அவரோ ஈவிரக்கமற்ற ஒரு உறைந்த தெளிவு நிலையில் உங்களை இருத்துகிறார். எப்படி வாழ வேண்டும் என்பதை மெய்ப்பிப்பதே என் இலக்கு ஆனால் அது ஒரு கடினமான மெய்ப்பிப்பு. மீண்டும் மீண்டும், என் புத்தகங்களைப் படித்து விட்டு அவற்றின் முடிவுகளைத் தவறாக புரிந்து கொள்கிறார்கள்; க்ரெண்டலின் முடிவில் வருவதை சாபமென்று அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். அது அப்படியொரு சன்னமான மெய்யுறுதியாக அமைந்திருப்பதால் அது ஒரு சாபமாகவே இருந்திருக்கலாம். மெய்யுறுதி அளிக்க எனக்கு அப்படியொன்றும் அதிகமில்லை என்றாலும் உண்மையில் என்னால் நம்பக்கூடிய மெய்யுறுதியை, வாசகர்களின் மனங்களை மாற்றக்கூடிய மெய்யுறுதியை சென்றடையவே முயற்சி செய்கிறேன். பில்லும் அவர் போன்ற பிற எழுத்தாளர்களும் வெறும் இருத்தலுக்கான மெய்யுறுதியை கண்டறிய முயற்சிக்கிறார்கள். தெருவில் நடந்து செல்லும் இந்த ஆசாமி அற்புதமான குறிப்பலகைகளாலான ஒரு சிற்பத்தைக் காண நேரிட்டதால் அவனது அன்றைய தினம் சற்று மேம்படுகிறது. ஆனால் எனக்கோ அக்குறிகளைக் கடந்து சென்று தான் செய்ய வேண்டிய வேலையை அவன் செய்தாக வேண்டும்
பில் காஸ்: என்னை பொறுத்த வரையில் ஜான் முன்வைக்கும் கருத்தில் பல சிக்கல்கள் இருக்கின்றன. குறிப்பாக அம்மாதிரியான ஒரு நிலைப்பாடு மாபெரும் எழுத்தாளர்களைப் பற்றிக் கடுமையான கருத்துக்களை மொழியும் இடத்திற்கு உங்களை இட்டுச் செல்லும். அவ்வெண்ணமே கொடூரமாக இருக்கிறது. ஒரு எழுத்தாளர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவர் தான் உண்மையென நம்புவதை கண்காணிக்கக் கூடியவர் என்பதும் வெளிப்படை, இப்படிப்பட்ட ஒரு ஆசிரியர் தனது நீண்ட பெரும்படைப்பை “போய்க் கொண்டே இருக்க வேண்டும். என்னால் முடியாது, நான் போய்க் கொண்டே இருப்பேன்,” என்று முடிக்கிறார் என்றால்… பெக்கெட்டால் அவ்வளவே மெய்யுறுதி அளிக்க முடியும். அதே போல் வேறு சில எழுத்தாளர்களும் உண்டு, நேர்மையான முறைமையில் மெய்யுறுதியை கண்டடைபவர்கள்; “போய்க் கொண்டிருப்பது” மட்டுமே அவர்களுக்கு எஞ்சியிருக்கிறது, அதைக்கூட அவர்கள் நிச்சயமாக அறிந்திருப்பதில்லை, “போய்க் கொண்டிருக்கிறேனா,” என்பதை நிச்சயப் படுத்திக்கொள்ளவே அடுத்த புத்தகத்தை எழுத வேண்டியிருக்கிறது. ஹுரே என்று கூவி அறிவிப்பதை காடிஸ் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை. கோட்பாட்டை எல்லாம் தாண்டி, பெக்கட் இக்காலத்தின் மாபெரும் எழுத்தாளர்களில் ஒருவர் என்று நான் கருதுவதால் ஜானிடம் இக்கேள்விவை முன் வைக்கிறேன்: “உங்கள் பார்வை அவரை இவ்வாறு மதிப்பிடுமா?”
ஜான் கார்ட்னர்: அதில் ஒன்றும் பெரிய பிரச்சனை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஏனெனில் பெக்கட் நம்மை மூர்க்கமாகவே நெகிழ்விக்கிறார். மேலும் நாம் போய்க் கொண்டேதான் இருக்கிறோம், அதற்கான காரணத்தையும் உணர்கிறோம், அக்காரணம் கறாரான மயிர்பிளக்கும் அர்த்தத்தில் அபத்தமாகவே இருந்தாலும். ஆனால் போய்க் கொண்டிருக்கத் தேவையில்லை என்றும் அனைத்துமே கிறுக்குத்தனமானது என்றும், உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ள வேண்டுமென்றும், வற்புறுத்தக்கூடிய எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். சந்தேகமில்லாமல், அவர்கள் போய்க் கொண்டே இன்னமொரு புத்தகத்தையும் எழுதிவிடுவார்கள், ஆனால் அதற்குள் நீங்கள் உங்களையே மாய்த்துக் கொண்டிருப்பீர்கள். இலக்கிய வரலாற்றை பின் நோக்கிப் பார்த்தோமேயானால், அபிமானமானவர்கள் காலத்தை வென்றவர்கள் என்று நாம் கருதும் பட்டியலில் அவர்கள் இடம் பெறுவதில்லை. மீண்டும் மீண்டும் ஆகிலீஸ் நம் மனதைத் தொடுகிறான், ஷேக்ஸ்பியர், ஷாசர், நாம் திரும்பத் திரும்ப வாசிக்கும் பிற எழுத்தாளர்களே நம்மை நெகிழ்த்துகிறார்கள். நமது நனவும் நனவிலியும் ஒருங்கே “இவ்வாறு ஒருக்காலும் இருக்க முடியாது” என்று புறக்கணிக்கும் தரிசனங்களை அளிக்கும் எழுத்தாளர்களை நாம் வாசிப்பதில்லை.
மற்றவர்கள் அருமையான சிற்பங்களைப் படைக்கக் கூடாது என்று நான் கூற வரவில்லை; பெரும் கூடாரத்தில் இடம் பெறுபவர்களுடன், முக்கியமான வேலையைச் செய்பவர்களுடன், அவர்களைக் குழப்பிக் கொள்ளக்கூடாது என்பதையே கூறுகிறேன். நான் இங்கு முன்மொழியும் கோட்பாடு அடிப்படையில் என்ன கூறுகிறது என்றால், வாசகனின் மனதில் துல்லியமான தெளிவுடைமை மிக்க, இடையறாது தொடரும் கனவை உருவாக்குவதையே அது வலியுறுத்துகிறது. காலை உணவிற்குப் பிறகு புத்தகத்துடன் உட்காரும் வாசகியிடம், உடனடியாக மற்றொருவர் “ஹெர்மியோனி, மதிய உணவிற்கு நேரமாகிவிட்டது, வருகிறாயா,” என்று கேட்பது போல். ஒரு நொடியுடன் இரு நூறு பக்கங்களும் கடந்திருக்கின்றன, ஏனெனில், வாசகி இடையறாத துல்லியமான கனவொன்றில், ஒரு மெய்நிகர் வாழ்க்கையை வாழ்ந்தபடியே, அறத் தீர்மானங்களை, மெய்நிகர் நிலையில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறாள்.
… பில் காஸ் ஒரு திருட்டுத்தனமான அறவோன் என்பதே இவ்விவாதத்திலுள்ள உண்மையான சிக்கல். ஒரு அருமையான மெய்யுறுதியில் அவரது புத்தகம் நிறைவடைகிறது. அவரது கோட்பாட்டிற்கு எதிராக வாதிடுகிறேன், ஆனால் அவர் புத்தகங்களே அக்கோட்பாட்டை பின்பற்றுவதில்லை.
தாமஸ் லெக்லேர்: பில், இந்த துல்லியமான இடையறாத கனவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
பில் காஸ்: அது வெறும் கற்பனைதான் போலிருக்கிறது. இசையை எடுத்துக் கொண்டால் ஆற்றுகையே படைப்பை முன்னே எடுத்துச் செல்கிறது. நாடகக் கலைக்கும் இது பொருந்தும். எனவே தடங்கல் ஏதாவது ஏற்பட்டாலோ, அல்லது திடீரென உங்கள் மூளை வெற்றிடமாக மாறிவிட்டாலோ அல்லது எவரோ ஒருவர் பையைக் கிலுகிலுத்தாலோ, நீங்கள் ஏதோவொன்றை தவற விட்டிருப்பீர்கள். அக்கணத்தை இழந்ததால் மோசம் போய்விட்டீர்கள். ஆனால் புனைவு வாசிக்கையில் பிரதியை முன் நகர்த்தும் அசைவு வாசகனிடமிருந்து வருகிறது. ஆசிரியர் அந்த அசைவு எப்படிப்பட்டதாக, எந்த விகிதத்தில் இருக்க வேண்டும் என்பதைச் சுட்டலாம் அல்லது சுட்ட முயலலாம். ஆனால் இப்போதெல்லாம் வாசகன் உட்கார்ந்த வாக்கில் 200 பக்கங்களை ஒரு கனவு நிலையில் வாசிக்கப் போகிறான் என்று அப்பக்கங்களை எழுதுபவர் எவரும் எதிர்பார்ப்பதில்லை என்றே நினைக்கிறேன். அவன், உண்மையில், வாசிப்பதை நிறுத்தி, மூக்கின் மீதமர்ந்திருக்கும் ஈயை ஓட்டிவிட்டு, மீண்டும் முதல் பக்கத்திற்குச் சென்று, அதை மீள்வாசித்து, அடுத்துவரும் சில பக்கங்களைத் தவிர்த்து, சுவாரசியமான பகுதிகளுக்காக புத்தகத்தைப் புரட்டப் போகிறான். புத்தகம் ஒரு கட்டிடம் போல, அதற்குள் நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கும் வழியில் எவரோ ஒருவரை வழி நடத்த முயல்கிறீர்கள். அவ்வப்போது ஜான் விவரித்த வகையிலும் ஒரு புத்தக அனுபவம் அமையலாம். என் பன்னிரெண்டாவது வயதிலோ என்னவோ ‘தி மோட்டர் பாய்ஸ் ஆன் கொலம்பியா ரிவர்’ என்ற புத்தகத்தை படிக்கும்போது அப்படியொரு அனுபவம் வாய்த்ததாக ஞாபகம்.
ஜான் கார்ட்னர்: கான்சர்ட் அரங்கைப் பற்றி நீங்கள் கூறியது சரியே, ஆனால் ஒரு இசைத்தட்டு வழியே இசையை அனுபவிக்கையில் உங்களால் திரும்பிச் செல்ல முடியும். அவ்வாறு திரும்புகையில் அதற்கு முன் சென்றதை நினைவு கூர்கிறீர்கள், எங்கு இருக்கிறீர்கள், எங்கே போகப் போகிறீர்கள் என்பதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கிறது. ஒரு நாவலைத் திட்டமிடுகையில், குறிப்பிட்ட சூழ்நிலையில் இருக்கும் ஒரு பாத்திரத்தின் சாத்தியக்கூறுகள் நிகழ்த்திக் காட்டக்கூடியதாக இருந்தால், அந்நாவலின் கூற்று – கதையின் முன்நடத்தல், சிக்கல்களை எதிர்த்து அவர்கள் ஆற்றும் எதிர்வினையைக் கொண்டு பாத்திரத்தை வார்த்தெடுத்தல்- உங்களை நாவலில் வழிநடத்திச் செல்கிறது. தத்துவத்திற்கு வாதம் போல புனைவில் கதை பின்னப்படும் விதம் முக்கியமாக இருக்கிறது. ஒரு நாவலில் ப்ளாட் இருக்குமானால், வாசகன் எட்டாவது அத்தியாயத்திற்குச் சென்று அங்கிருந்து ஐந்தாவது அத்தியாயத்திற்கு தாவி அதன்பின் முன்னே செல்வதெல்லாம் ஒரு பொருட்டல்ல. இறுதியில், நாவலின் அறுதியான மாயத்தோற்றம், அதன் அறுதியான கனவென்பது, இடையறாது தொடர்கிறது. ஒரு ஆசிரியராக நாவலை வெறும் வீடாக பாவித்து அதனுள் வாசகனை பல வழிகளில் நடத்திச் செல்வதே உங்கள் பணியென்று நீங்கள் தீர்மானித்தால், வாசகன் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை உடைத்து, பரிவு காட்டுபவர் என்பதற்கு நேர்மாறாக அவனை மோசம் செய்யும் ஒரு சூழ்ச்சிக்காரனாக மாறி விட்டீர்கள். நாவலாசிரியன் தன் கருவை தொடர்ந்து செல்கையில், அதாவது பாத்திரங்களையும் நடவடிக்கைகளையும், உண்மையிலேயே ஏதோவொரு கேள்விக்கான விடையை கண்டறிவதற்காகவே இங்கிருந்து அங்கு செல்கிறானென்றால், வாசகியும் உடன் செல்லுவாள், ஏனெனில் அவளும் அவ்விடைகளை அறிய விரும்புவதால். அதற்கு மாறாக, சிலதை அவள் செய்ய வேண்டும் என்று அவன் திட்டமிட்டால், அது வாசகியை கீழ்ப்படிய வைக்கிறது. எனக்கதில் உடன்பாடில்லை.
எவரோவொருவர் ஒரு முறை என்னிடம் கூறிய கதைக் கருவொன்று இதை விளக்குவதற்கு ஏதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆதர்ச மணவாழ்வால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் ஒரு பெண், கணவனின் மறைவிற்குப் பின், கராஜில் பிசிறற்ற வகையில் முத்திரையிடப்பட்ட பீலிகளைக் கொண்ட பாதாம் மரத்தால் செய்யப்பட்டிருக்கும் பெட்டகமொன்றைக் கண்டெடுக்கிறாள். வாழ்நாள் முழுதும் கணவனுக்கு ரகசிய பொழுதுபோக்கொன்று இருந்த்திருக்கிறது என்பதை அவள் உணர்கிறாள். ஏன் அதைப்பற்றி தன்னிடம் அவன் எப்போதுமே கூறியதில்லை என்ற எண்ணம் அக்கணத்தில் தோன்றி மறைகிறது. அடுத்த முறை, கணவனைப் பற்றி பேச்சு வந்தால் அவள் முற்றிலும் வேறு விதத்தில் கவனம் செலுத்துவாள். அடுத்த முறை, கணவனின் முப்பது வயது காரியதரிசியை காண நேரிடுகையில் அவளை வேறு விதத்தில் பார்க்கத் தொடங்குவாள். இப்போது நாம் மானுட ஐயம், மானுட நம்பிக்கை குறித்த ஒரு உண்மையான சிக்கலில் இருத்தப்படுகிறோம். அதில் ஈடுபட்டிருக்கையில் ஆசிரியர் அங்குமிங்கும் நம்மை அலைக்கழிப்பதை நாம் விரும்புவதில்லை. அந்நிலைமையை ஆராயும் பொருட்டு நம்மை உண்மையாகவும், அனுசரணையுடனும் வழிநடத்தக்கூடிய ஒருவரையே நாம் விழைகிறோம். இது சமயம் சார்ந்த நம்பிக்கைக்கு நிகரானது. அதற்கு மாறாக வாசகி மனநிலையை திட்டமிட்டுத் திரிக்க ஒரு ஆசிரியர் முற்படுகையில் மிகவும் மோசமானதொரு, அகத்தைக் குறுக்கும் போக்கில் அவர் செயல்படுகிறார். வாசகிக்கும் அவருக்குமிடையே இருக்கும் உறவில் அன்பும் கரிசனமும் இல்லை.
பில் காஸ்: வாசிப்பையும் கட்டிடத்தைச் சுற்றிப் பார்ப்பதையும் ஒப்புமை செய்தபோது வாசகியை திட்டமிட்டு திரிப்பது என்ற அர்த்தத்தில் நான் அதைச் செய்யவில்லை. ஜான் கூறும் வகையில் எழுதப்படும் நாவலுக்கான எதிர்வினை இரு நூறு ஆண்டுகளுக்கு முன், அப்படிப்பட்ட நாவல்கள் நிரம்பவே எழுதப்பட்டுக் கொண்டிருந்த காலத்திற்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் அம்மாதிரியான நாவல்கள் அவ்வளவாக எழுதப்படுவதில்லை. ஃபீல்டிங் டாம் ஜோன்ஸ் நாவல் இறுதியை வந்தடையும்போது, நாம் நினைவு கூரும் பட்சத்தில், நம் வாழ்வின் ஆரம்ப கால பகுதிகளை நினைவில் வைத்துக் கொண்டிருக்கும் அளவிற்கு மட்டுமே நாவலின் முதல் அத்தியாயத்தையும் நினைவில் வைத்திருப்போம் என்று எதிர்பார்க்கிறார். ஒவ்வொரு தகவலையும், ஒவ்வொரு பெயர்ச்சொல்லோடு குறிப்பிட்ட வகையில் இணைக்கப் பட்டிருக்கும் பெயரடையையும் நினைவில் வைத்திருப்பதை அவர் எதிர்பார்ப்பதில்லை. இதற்கு நேர்மாறான ஒன்றே ஜாய்சைப் போன்றொருவரிடம் நடக்கிறது. வாசகன் புத்தகத்தினூடே எப்போதுமே அலைந்து திரிவதால் மட்டுமே கிட்டும் அனுபவத்தையே அவர் அளிக்க விரும்புகிறார். இம்மாதிரியான புத்தகம் கட்டமைக்கபட்டிருக்கும் வெளி என்பது ஃபீல்டிங்கின் நாவல் முன்னேறிச் செல்லும் காலம் என்பதிலிருந்து மிகவுமே வேறுபட்டிருக்கிறது. ஃபீல்டிங் அவ்வாறு எழுதியது குறித்து எனக்கொரு பிரச்சனை இல்லை, ஆனால் வாசகன் ஒவ்வொரு பக்கத்திற்கும் அளிக்கும் கவனம் புத்தகத்தை முற்றிலும் உருமாற்றக்கூடிய சாத்தியங்களைப் உருவாக்கும், புது மாதிரியான அல்லது வித்தியாசமான எழுத்தைப் படைப்பவர்களைப் பாராட்ட ஜானுக்கு கடினமாகவே இருக்கிறது.
ஜான் கார்ட்னர்: வாசகி விரும்பிப் படிக்கும் ஒன்றையே நாம் படைக்க முயல்கிறோம் என்பதில் எங்கள் இருவருக்குமே உடன்பாடுதான் என்று நினைக்கிறேன். பில், நீங்கள் பரிந்துரைக்கும் புனைவு ஒருகால் விரும்பப்பட முடியாததாகவும், வாசகிகளை ஈர்க்க இயலாததாகவும் இருக்கலாம் அல்லவா? உடனே நீங்கள் “ஆனால் நுட்பமான வாசகன்…” என்று ஆரம்பிக்கலாம், ஆனால் அது உண்மையாக இருக்கும் என்று எனக்கு படவில்லை. கல்விக்கூடங்களில் ட்ரொலோப்பிற்கு பதிலாக பின்ச்சோனையே பயிற்றுவிக்கிறோம். ஏனெனில் ட்ரொலோப்பை விளக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லாமே தெளிவாக இருக்கிறது. அதற்கு நேர்மாறாக, பின்ச்சோனின் ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் தேவையாக இருக்கிறது, ஏனெனில் ஒன்றுமே தெளிவாக இல்லை. இதனால்தான் அகடமி மாணவர்களுக்கு உதவி தேவைப்படும் புத்தகங்களை மட்டுமே தேர்வு செய்கின்றது. அவற்றில் இரண்டு புத்தகங்கள் இலக்கிய வரலாற்றின் தலைசிறந்தவையாகவும், இருபது மிக மட்டமானவையாகவும் இருப்பதைக் கண்டிப்பாக பேசியாக வேண்டும். எப்படி வாசிக்க வேண்டும் என்பதை நுட்பமான வாசகன் மறந்திருக்கலாம்: பேருடலனிடமிருந்து அப்பொருட்களை ஜாக் பீன்ஸ்டாக் வழியே திருடியது ஏன் நல்ல விஷயம் என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியாமலுமிருக்கலாம்.
பில் காஸ்: ஜான், விரும்பப்படக்கூடிய பொருட்கள் என்பதைக் காட்டிலும் அனைவரையும் கவரக்கூடியவற்றையே நீங்கள் விழைவதாகத் தோன்றுகிறது. வெளியே அனுப்பி வைக்க உங்களுக்கு ஒரு மகள் இருப்பாளானால், அவரை அனைவரும் காதலிக்க வேண்டும் என்று விழைவீர்களா? என் மது வடிக்கும் இடத்தில் அனைவருக்கும் பிடித்தமான தண்டர்பர்ட் வைனை பாட்டில் பாட்டிலாக நான் தயாரிக்கலாம், ஆனால் எனக்கது அதிக மனநிறவு அளிக்காது. புத்தகங்கள் விரும்பப்படுவது அல்ல ஏன் விரும்பப்படுகின்றன என்பதே முக்கியம். வெகுமதி அளிக்கக்கூடிய பண்புகளை அவற்றிற்கு நீங்கள் அளித்திருந்தால் ஒருவர் கூட அதை விரும்பவில்லை என்பது ஒரு பொருட்டே அல்ல. எப்படி இருந்தாலும் அனேகமாக மிகக் குறைந்த எண்ணிக்கைகளில்தான் அவை விரும்பப்படுகின்றன. ஒரு படைப்பு பல வருடங்களாக கண்டுகொள்ளப் படாமலும் இருக்கலாம்.
தாமஸ் லெக்லேர்: நீங்கள் இருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக எழுதுகிறீர்கள் போலிருக்கிறது. பில் காஸ் கோபம் என்ற பதத்தை பயன்படுத்தியிருக்கிறார் என்று தெரியும். உங்கள் நோக்கங்களிலிருக்கும் வேறுபாடுகளே நீங்கள் எழுதும் புனைவிலும் பிரதிபலிக்கப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்வீர்களா?
பில் காஸ்: அதைப் பற்றி எனக்கொரு கருத்துண்டு, நிச்சயமாக ஜான் அதனுடன் உடன்பட மாட்டார் என்று நினைக்கிறேன். பல சமயங்களில் தன் கட்டுப்பாட்டிலில்லாத ஒரு உலகைப் பிரித்துப் போட்டு அதற்குப் பதிலாக சிறிதளவேனும் தன் கட்டுப்பாட்டிலிருக்கும் மொழியை இருத்தவே எழுத்தாளன் முனைகிறான். அழித்து, அதன்பின் மாற்றீடு செய்வது. எப்போதோ எழுதிய ஒரு பத்தியில் கதைசொல்லியை இவ்வாறு கூற வைத்தேன், ” மலம் கழிக்கையில் அது விதிவிலக்கில்லாமல் அனைவர் மீதும் விழுவதற்குத் தேவையான உயரத்திற்கு நான் மேலுயுர விரும்புகிறேன்.” ஆனால், எழுதுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. புத்தகம் எழுதுவதென்பது சிக்கலான, பல காலம் நீடிக்கும், கடினமான ஒரு முறைமை என்பதால் சாத்தியப்படக்கூடிய அனைத்து நோக்கங்களுமே அதில் கூம்பும், அவற்றுள் பெரும்பாலானவை கயமையாவையாகவே இருக்கும். உங்களுக்கே உரித்தான கயமையை அழகான பிறிதொன்றாக உங்களால் உருமாற்ற முடியுமானால், அதுவே உங்கள் ஈனமான சுபாவம் செய்யக் கூடிய அதிகபட்சக் காரியம்.
ஜான் கார்ட்னர்: கிட்டத்தட்ட பில் பேசியது அனைத்துமே எனக்கும் ஏற்புடையதுதான், மனித சுபாவத்தைப் பற்றிய அபத்தத்தைத் தவிர. மனிதகுலம் தேவர்களை விட ஒரு படி கீழ்தான் என்றாலும் அதை மிக மிக முக்கியமான ஒன்றாகவே அர்த்தப்படுத்திக் கொள்கிறேன். உலகத்தைப் பிரித்துப் போட்டு அதை மீண்டும் கட்டமைக்கிறோம் என்பதை ஒத்துக் கொள்கிறேன், ஆனால் அதை வேறு விதமாகக் கூறுவேன். உங்களால் புரிந்து கொள்ள முடியாத, கட்டுப்படுத்த முடியாத உங்கள் உலகின் புறக் கூறுகளை உங்களுக்குள்ளே உங்கள் அகத்தில் கட்டுப்படுத்தி புரிந்து கொள்வதற்காகவே ஒரு புத்தகம் எழுதுகிறீர்கள். மீண்டும் மீண்டும் கனவில் வந்து அலைக்கழிக்கும் சிக்கலுக்கான தீர்வை எழுதிக் கண்டடைய முயல்கிறீர்கள். இப்புரிதல் ஒரு மாயையாகவே இருக்கலாம், ஆனால் வாழ்வதற்கு இது உதவியாக இருக்கிறது. ஒவ்வொரு புத்தகத்தை எழுதி முடித்த பின் நீங்கள் சற்று மேன்மைப் படுத்தப்படுகிறீர்கள் என்று நம்புகிறேன். பல பிரபலமான எழுத்தாளர்கள், உதாரணத்திற்கு மார்ஸல் ப்ரூஸ்த், எழுத்தில் சிறப்புற்றிருந்தாலும், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைகளில் மோசமானவர்களாகவே இருந்தார்கள் என்பதும் உண்மையே. காரணம் என்னவென்றால், புத்தகம் எழுதுகையில், ஒரு மோசமான விரிசலைப் பற்றிச் சிந்திக்கையில் அதைச் சற்று இதப்படுத்தி, மனதைக் குத்திக் கிழித்துவிடாத வகையில் அதை வெளிப்படுத்துகிறோம். பில் அது மிக நளினமாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது என்று உச்சி குளிரலாம். ” மலம் கழிக்கையில் அது விதிவிலக்கில்லாமல் அனைவர் மீதும் விழுவதற்குத் தேவையான உயரத்திற்கு நான் மேலுயுர விரும்புகிறேன்.” என்று கூறுவதிலிருக்கும் நளினம் அதன் நிசிதத்தை சற்று மட்டுப்படுத்துகிறது. நம் புத்தகங்களில் நம் வாழ்க்கைகளையே நாம் திருத்திக் கொள்கிறோம், ஒவ்வொரு திருத்தத்திலும், இனி மீண்டும் செய்யத் தேவையில்லாத தவறைக் கண்டெடுக்கிறோம் என்றே நாம் நம்புகிறேன். புத்தகங்கள் எழுத எழுத எழுத்தாளர் படிப்படியாக சற்று மேன்மையுறுகிறார் என்பதையும். இது தவறாகவே இருக்கலாம், ஆனால் இது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
பில் காஸ்: அலெக்சாண்டர் போப் தனி நபராக மேம்பட்டார் என்று நினைக்கிறீர்களா?
ஜான் கார்ட்னர்: இலக்கியத்தில் எனக்கு உவப்பில்லாத பல விஷயங்கள் பில்லிற்கு போற்றுதற்குரியனவாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அலெக்சாண்டர் போப் நம்மெல்லோரிடம் இருக்கும் ஒரு முறைமையையே வெளிப்படுத்துகிறார் – வன்மம் – அதை மிக நன்றாகவே வெளிப்படுத்தினார் என்பதையும் கூறியாக வேண்டும். ஆனால் இறுதியில் ” இன்றிரவு போப் வாசிக்க எனக்கு விருப்பமில்லை. தொலைக்காட்சியில் கோஜாக் ஒடிக்கொண்டிருப்பதால், வன்மத்திற்கான என் தேவைகளை அதன் மூலமாக பூர்த்தி செய்து கொள்ளப் போகிறேன், அதுவும் துரிதமாக” என்ற முடிவிற்கே வருவோம் என்று தோன்றுகிறது. பெண் கும்பிடுபூச்சி ஆணை உட்கொள்வதை ஆர்வத்துடன் பார்வையிடுவதைப் போலதான் அற்ப வன்மத்தை முன்மொழியும் எழுத்தாளர்களை, அவர்கள் புத்தகங்களின் இறுதிப் பக்கங்கள் வரையிலும் வாசித்து முடிக்கிறோம். இதனால் ஒவ்வொரு நாளும், வீடு திரும்பிய பின் நீங்கள் கும்பிடுபூச்சிகளைப் மணிக்கணக்காக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல.
பில் காஸ்: ஒரு சிலர் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.
தாமஸ் லெக்லேர்: பாத்திரம் என்பதன் கருத்தரிப்பிலும் நீங்கள் வேறுபடுகிறீர்கள். அதைப் பற்றி கொஞ்சம் கூற முடியுமா?
பில் காஸ்: அது சிக்கலானது. அதைச் சுருக்கமாக, எளிமைப்படுத்திக் கூற முயல்கிறேன். என்னை பொருத்தவரையில், பாத்திரம் என்பது அதைத் தவிர்த்து பத்தகத்தில் வரும் பெரும்பாலான இதர பகுதிகள் அதற்கு மாற்றியாக (Modifier) அமைந்திருக்கும் புத்தகத்தின் மொழிசார்ந்த ஒரு களம். ஒரு வாக்கியத்தில் எழுவாய்க்கு பயனிலை மாற்றியாக அமைந்திருப்பது போல, பல சமயங்களில், எதாவதொரு பாத்திரம் உதாரணமாக எம்மா பொவரி, மையப் பாத்திரமாக கருதப்படுகிறது. ஏனெனில் புத்தகத்தில் வரும் பெரும்பான்மையான மொழி, அடிப்படையில் அதன் பக்கமே, அதை “மாற்றும்” நோக்கத்தோடு அறுதியாகத் திரும்புகிறது, அதாவது எம்மா பொவரி சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. இக்கண்ணோட்டத்தில், ஆதர்ச புத்தகம் என்பது ஒரு பாத்திரத்தை மட்டுமே கொண்டிருக்கும், முற்றிலும் லட்சியக் கட்டமைப்பாக. ஆனால் நம்மிடம் இருப்பதோ மொழியாற்றல் பீரிடும் சார்நிலைக் களங்கள் – புத்தகத்தின் வார்த்தையோட்டம் அவற்றை நோக்கியும், அவற்றிலிருந்து வெளிவரவும் விழையும்- பிற பாத்திரங்கள். வெள்ளைத் திமிங்கிலம் ஒரு பாத்திரம், Under the Volcano- வில் வரும் மலைகள் பாத்திரங்கள். கருத்துகளும் பாத்திரங்களாக அமையலாம். இலக்கிய வரலாற்றின் மிகப் பிரபலமான பாத்திரங்கள் தத்துவம் என்ற அந்த பெரும் நாவலில் வரும் பாத்திரங்களே. சுயேச்சையும் நியதியும். சாரமும் நேர்ச்சியும். இவையெல்லாம் தத்துவ வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே நம்முடனிருக்கும் பாத்திரங்கள். என்னை அவை மிகவுமே கவர்கின்றன. நண்பர்கள் பலரைக் காட்டிலும் சாரம் எனக்கு சுவாரஸ்யாமாக இருக்கிறது.
இதைப் பேசுவதற்கு ஏன் இப்படி ஒரு குளறுபடியான மொழியைப் பயன்படுத்துகிறீர்கள், வழக்கம் போல மரபான வழியில் பாத்திரத்தைப் பற்றி பேச இயலாதா என்று நீங்கள் கேட்கலாம். புத்தகத்தில் இல்லாததை வாசகன் தன் உளவியல் சார்ந்த அனுமானங்களைக் கொண்டு நிரப்பும் போக்கை முற்றிலும் தவிர்த்து விடுகிறோம் என்பதே இதிலிருக்கும் அனுகூலம். படைப்பு ஒன்றால் மட்டுமே நிரப்பப் பட்டிருக்கிறது – வார்த்தைகளும் அவை இயங்கும் மற்றும் தொடர்பு கொள்ளும் விதத்தாலும். சொல்லத் தேவையில்லை, அவற்றின் அர்த்தங்கள், ஓசைகள், இத்யாதி போன்றவையும் இதில் சேர்த்தி. சில சமயம், “பாத்திரத்தை எப்படி உருவாக்குகிறீர்கள்,” என்ற கேள்வி நீங்கள் ஏதோ அலைந்து திரிந்து எதிர்கொண்டவர்களை எல்லாம் உற்று கவனித்து, அதன்பின் அவர்களை மொழியில் மீளுருவாக்குவது பற்றி திட்டமிடுகிறீர்கள் என்ற அனுமானத்துடனே கேட்கப்படுகிறது. ஆனால் அப்படிச் செய்வது சுவாரஸ்யமாகவே இருந்தாலும் இலக்கியச் செயல்பாடாக இருக்காது. இலக்கிய செயல்பாடென்பது மொழியாலான மூலத்தை தாளில் கட்டமைப்பது.
ஜான் கார்ட்னர்: இந்த விஷயத்தில் பில்லோடு எனக்கு உடன்பாடில்லை என்பது வெளிப்படை. பாத்திரம் என்பது எழுத்தாளரின் மனதிலிருக்கும் அருவத் தோற்றம், கற்பனை மீளுருவாக்கத்தால் உருவான துல்லியமான தோற்றம், அவருக்குத் தெரிந்த பல ஆளுமைகளின் அவியல். ஆதர்ச புத்தகத்தில் ஒன்றிற்கு மேலான பாத்திரங்கள் இருந்தாக வேண்டும். ஏனெனில் பாத்திரம் என்ன செய்கிறது என்பதைக் கொண்டே நாம் அதை அறிந்து கொள்கிறோம்: அதாவது மற்றவர்களை என்ன செய்கிறது அல்லது அவர்கள் அதனிடம் எதிர்வினையாற்றுவதைக் கொண்டு. வாசகன் புத்தகத்தை ‘நிரப்புவதை பில் தவிர்க்க விரும்புகிறார். ஆனால் நாம் ஜே.டி. சாலிஞ்சரைப் படிக்கையில், ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன், அவர் பாத்திரங்களைப் பற்றிய புத்தகத்தில் இல்லாத, பல கூறுகளை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் சாலிஞ்சரின் கற்பனை- மனிதர்களின் செய்கைகளை நிஜ வாழ்வில் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். அவற்றின் அர்த்தமும் நமக்குத் தெரிந்திருக்கிறது. ஆகவே அளிக்கப்பட்டதை விட எப்போதுமே நாம் அதிகாமாகவே அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். ஒரு நல்ல நாவலில், வாசகனுக்கு ஒரு தோற்றம், ஒரு கனவு அளிக்கப்படுகிறது. அதில் அவன் கதைமாந்தர்கள் ஒருவொருக்கொருவர் செய்து கொள்வதை, காயப்படுத்துவதை, ஆராய்ந்து கொள்வதை, காதலிப்பதை அல்லது இவற்றைப் போன்ற ஏதோவொன்றை காண நேரிடுகிறது. அதன்பின் சின்னஞ்சிறு மொழியாலான சமிக்ஞையொன்று எரியிழையை போல, ஒரு பெரும்வெடிப்பிற்கு காரணமாகி ஒரு திறப்பை அவனுக்கு அளிக்கிறது. அந்த கற்பனை மனிதர்களைப் பற்றிய ஒரு நுட்பமானதொரு புரிதல் அவனுக்குக் கிட்டுகிறது. உண்மைதான், அவர்களை புத்தகங்களில் வரும் வார்த்தைகளாகவும் நாம் ஆராயலாம் ஆனால் நல்ல தத்துவப் புத்தகத்தில் வரும் சுயேச்சையையும் நியதியையும் நினைத்து இதுவரையில் நான் அழுததே இல்லை.
ஒரு பாத்திரத்தால் அச்சுறுத்தப்படுவதோ அல்லது அதன் மரணத்திற்காக அழுவதோ தவறென்று பில் வாதிடுகிறார். நான் தவறில்லை என்கிறேன். புத்தகம் என்பது கனவின் எழுத்துருவிலிருக்கும் ஒரு குறியீடு மட்டுமேயன்றி வேறொன்றும் இல்லை. கொடுங்கனவொன்றில் என்னை திடீரென்று கோடரியால் ஒருவன் தாக்கினால் நான் கூச்சலிடுகிறேன், அப்படிச் செய்வதற்கு எனக்கு உரிமையும் இருக்கிறது, ஏனெனில் அக்கோடரிக்காரனை நான் நிஜமானவன் என்றே நம்புகிறேன். என் தலை நொறுக்கப்படப் போகிறது என்று எண்ணுவதற்கும் எனக்கு உரிமை இருக்கின்றது. மரபான வழிகளில் பாத்திரங்களைப் பற்றிப் பேசுவது பயனளிக்கக் கூடியதாக இருக்கும் என்றே எனக்குப் படுகிறது. சமகால தத்துவவியல் உலகை, அதற்கே உரித்தான வார்த்தைகளில் கட்டமைத்துக் கொள்கிறது. நாம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் நம் அன்றாட வார்த்தைகள் மீது அதற்கு நம்பிக்கையில்லை. காலகாலமாக ஆயிரக்கணக்கான தலைமுறைகளில் மக்கள் வார்த்தைகளைப் பயன்படுத்தியதனாலேயே அர்த்தம் என்ற ஒன்று இலக்கியத்தில் இருக்கிறது. லேசாகத் தட்டி விட்டாலே போதும், அர்த்தம் எனும் கண்டாமணியை நம்மால் அதிரச் செய்துவிட முடியும். தட்டுதல் மீதல்ல, கண்டாமணியின் மீது தான் எனக்கு அக்கறை. தட்டுதல் நுண்முறையின் மீதுதான் பில் கவனம் செலுத்துகிறார் என்று நினைக்கிறேன்.
அனைத்திற்கும் மேலாக ஒரு நாவல் நளினமாகவும், நன்றாகவும் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறார். அது போக மற்ற சில கூறுகளையும் அவர் விரும்பினாலும் அவை எல்லாம் அவருக்கும் இரண்டாம் பட்சமாகவே இருக்கலாம். ஆனால் அவர் முன் இரண்டு நன்றாக செய்யப்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன, ஒன்று அவருக்கு முற்றிலும் உண்மையானதாகத் தோன்றுகிறது, மற்றொன்றிற்கு அவர் ஒரு போதும் மெய்யுறுதி அளிக்கமாட்டார், என்று வைத்துக் கொள்வோம். இவ்விரண்டினுள் பில் தனக்கு உண்மை என்று தோன்றியதையே தேர்வு செய்வார் என்று நினைக்கிறேன்.
பில் காஸ்: ஆமாம், ஆனால் அது அனுபவத்திற்கு திண்மை இருக்க வேண்டும் என்று விரும்புவதைப் போன்றது, அவ்வளவே. உதாரணத்திற்கு, உடல் நலத்திற்காகவும், ஏதோவொரு வாடிக்கையாளரை தாஜா செய்வதற்காகவும், பொந்துக்குள் பந்தை இருத்தும் குறியீட்டுத்தன்மை என்னை கொக்கி போட்டு ஈர்க்கிறது என்பதற்காகவும் கால்ஃப் விளையாடுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள், அது வெறும் நல்ல ஸ்கோர் வாங்குவதற்காக விளையாடுவதை விட மேலானது. ஆனால் இறுதியில், நீங்கள் கால்ஃப் நன்றாக விளையாடுகிறீர்களா இல்லையா என்பதை தீர்மனிப்பது உங்கள் ஆட்டத்திற்கு நீங்கள் அளிக்கும் ஸ்கோரே – அதுவே அழகியல் மதிப்பீடாக இருக்க வேண்டும். ஒரு அழகான புத்தகம் நற்பண்புகளுக்கும் உண்மைக்கும் ஊற்றாக அமைந்திருந்தால்- நல்லது. சந்தோஷம்தான். அதைப் படைத்தவன் கலைஞனாக மட்டுமல்லாது நுட்பமான தத்துவ ஞானியாகவும் அல்லது உன்னதமான புனிதராகவும் இருக்கலாம். ஆனால் நுட்பமான தத்துவ ஞானியாகவோ அல்லது உன்னதமான புனிதராகவோ இருப்பதால் மட்டும் அவன் நல்ல கலைஞனாக ஆகிவிடுவதில்லை.
இலக்கியம் குறித்த பார்வையில் அடிப்படைக் கிளைபிரியும் விரிசலிருக்கிறது. உண்மைக்கும் நன்மைக்கும் அழகை கீழ்ப்பணியச் செய்ய எனக்கு விருப்பமில்லை. அழகைக் காட்டிலும் சில விழுமியங்கள் முக்கியமானவை என்று ஜானும் மற்றவர்களும் நினைக்கிறார்கள். கூட்டிக் கழிக்கையில் அழகு என்பது அனேகம் பேர்களுக்கு அவ்வளவு அத்தியாவசியமான ஒன்றாக இருக்காது. ஆனால், மனதை சுத்தமாக வைத்திருப்பதற்கும், குறிப்பிட்ட ஒன்று ஏன் நல்லதென்று அறிந்து கொள்வதற்கும் அது மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். ஒரு நளினமற்ற உதாரணத்தை பயன்படுத்த வேண்டுமானால், அதிலிருக்கும் கலோரிகளை வைத்தே பலர் உணவை நல்லது என்று வரையறுக்கிறார்கள். எடை கூடாமலிருப்பது உங்களுக்கு முக்கியமென்றால் அவ்வளவை உங்களுக்கு முக்கியமே, ஆனால் அதற்கும் உணவின் தரத்திற்கும் என்ன தொடர்பு? இலக்கியத்தின் மீது வைக்கப்படும் அறத் தீர்மானங்களில் உணவுத் தரத்தைப் பற்றிய குழப்பங்கள் நிலைத்து நீடிக்கின்றன. மேலும் என் பார்வைக்கே அனைத்தையும் அரவணைத்துக் கொள்ளும் தன்மை அதிகமாக இருக்கிறது என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். அந்த மற்றதொரு பார்வையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கைகளில் நல்ல எழுத்தாளர்களை இனம்கண்டு உள்ளே அது அனுமதிக்கிறது. ஜான் அனேகமாக எவரையுமே உள்ளே அனுமதிப்பதில்லை.
ஜான் கார்ட்னர்: பில்லின் எழுத்து எனக்கு மிகவுமே பிடித்தமானது. உண்மையிலேயே, அமெரிக்க ஆசிரியர்களை பொறுத்தமட்டில் பில்லை மட்டும்தான் உள்ளே அனுமதிப்பேன் என்று நினைக்கிறேன். இருபத்து நாலு வருடங்களாக பில்லிடம் அலறிக் கொண்டிருக்கிறேன், சில சமயங்களில் உண்மையிலேயே குரலை உயர்த்தியபடி, “பில் அமெரிக்க இலக்கியத்தில், இதுவரையில் எழுதியிருக்கும் மேதைகளில் தலைசிறந்தவரான நீங்கள் உங்கள் மேதைமையை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள். பெரிதினும் பெரியதைச் செய்வதற்குப் பதிலாக காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறீர்கள்”. அழகான ஆற்றல்மிக்க தோற்றத்தை உருவாக்கவே மொழி இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அவரோ அதை வைத்து சுவர்களுக்கு அழகான சாயம் பூசலாம் என்று நினைக்கிறார். அது நியாயமல்ல. நான் அழகென்று நினைப்பது அவருக்கு இன்னமும் அணிநலம் முற்றிலும் கைகூடி வராத ஒன்றாகவே இருக்கும். வித்தியாசம் என்னவென்றால என் 707 விமானம் கண்டிப்பாக பறக்கும், அவருடையதோ தங்க கெட்டிப்பூச்சின் காரணத்தால் தரையிலிருந்து எழ முடியாத அளவிற்கு கனத்திருக்கும்.
பில் காஸ்: எப்போதுமே அந்த அபாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் உண்மையில் நான் வேண்டுவது, பாறையின் திண்மையுடன் அங்கு உட்கார்ந்திருக்கையில் அனைவரும் அது பறந்து கொண்டிருக்கிறது என்று நினைப்பதை.
ஜான் கார்ட்னர்: பில் காஸ் ஒரு முறை எவருமே பதிப்பிக்க விரும்பாத அளவிற்கு அருமையாக இருக்கும் ஒரு புத்தகம் எழுதுவதே தன் வாழ்க்கை லட்சியம் என்று கூறியிருப்பதாகத் தெரிகிறது. பில் காஸை விட நீண்ட ஆயுள் கிட்டி அவர் புத்தகங்கள் அனைத்தையும் மாற்றுவதே என் வாழ்க்கை லட்சியம்.
The New Republic (March 10, 1979) இதழில் “William Gass and John Gardner: A Debate on Fiction.” என்ற தலைப்பில் முதலில் வெளிவந்தது.