‘செல்வம் அருளானந்தம்’ பாரிசிற்குப் புலம்பெயரும்போது வேதாந்தத்தையும், பாரதியார் கவிதைகள் புத்தகத்தையும் தன்னுடன் எடுத்துச் செல்கிறார். காரணம் செல்லும் இடமெல்லாம் அவருக்கு தன்னுடன் அந்தரங்கமாகப் பேசும் சொற்கள் தேவையாக இருக்கிறன. சொற்களே தனக்குள் உரையாடும் அவரது உலகமாக இருக்கிறது. அந்தரங்கமாக அவற்றுக்குள் சுழன்றபடியே இருக்கிறார்.
வந்து சேர்ந்த நாட்டில் மொழியும், பண்பாடும் பிரதான பிரச்சினையாக இருக்கிறது. பணம் இல்லாமல் நெருக்கடி நாளுக்கு நாள் கூடுகிறது. பிரெஞ்சு மொழி அறிவு கொஞ்சம் கூட இல்லாமல் வேலைக்குச் செல்ல இயலவில்லை. வாழ்க்கை இறுகிப்போய் நிற்கிறது. இதற்குள்ளும் செல்வத்திற்கு இன்னுமொரு பிரச்சினை விரிகிறது. அது அவரது வாசிப்பு, எழுத்து சார்ந்த வேட்கை. பாரிசில் ஒன்று கூடிய ஒத்த வயது நண்பர்களுக்கு விசாவும், வேலையும் தான் பிரதான குறிக்கோளாக இருக்கும்போது, செல்வம் அவர்களுக்கு அதைவிட மேலதிகமாக இலக்கியமும் இருக்கிறது. எழுதினால்கூட அவற்றை பிரசுரிக்க இதழ்கள் இல்லை. எல்லாமே அவதி நிறைந்த வாழ்வாக இருக்கிறது.
இலங்கையில் 83-ஆம் ஆண்டு நிகழ்ந்த தமிழ் இன ஒடுக்குமுறையில் பாரிய வன்செயலுக்கு உள்ளாகிய பின்னர், பெருந்தொகையான இளைஞர்கள் பாரிசுக்கு வரத்தொடங்குகிறார்கள். இதன்பின்னர் சூழல் மாறுகின்றது. வாசிப்பும், இலக்கியம், அரசியல் ஆர்வம் கொண்ட நண்பர்களின் தொடர்பு செல்வம் அவர்களுக்கும் கிட்டுகிறது. ‘தமிழ் முரசு’ என்ற பத்திரிகையில் கவிதைகள் எழுத ஆரம்பிக்கிறார். அவற்றை எழுதும்போது கவிதை தொடர்பான சரியான புரிதலும், பயிற்சியும் இல்லாத காலத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதப்பட்டதாக, செல்வம் குறிப்பிடுகிறார். பின்னர் அக்கவிதைகள் தொகுக்கப்பட்டு ‘கட்டிடக் காட்டுக்குள்’ என்ற தலைப்புடன் வெளியாகியது.
பிரான்ஸ் வாழ்க்கை பிடிக்காமல், கனடாவுக்குச் சென்று பொருளாதார நிலையிலிருந்து மெல்ல மீண்டு எழுந்த பின்னர், தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. கடந்து வந்த வாழ்க்கையைப் திரும்பிப் பார்க்கும்போது ஆறுதலாகப் புன்னகை விரிகிறது. எப்படி இந்தத் துயரை கடந்து வந்தோம் என்ற ஆச்சரியத்தைவிட இன்று ஆரோக்கியமாக இருப்பதும், உயிருடன் இருப்பதும் நிறைவை அளிக்கிறது என்கிறார் செல்வம். இதன் பின்னணியில் பாரிசின் அறைவாழ்கை அனுபவங்கள் சுயபகிடியுடன் ‘எழுதித் தீராப் பக்கங்கள்’ என்ற புத்தமாக வெளியாகியிருந்தது.
எள்ளல், சுய எள்ளல் என்று பகிடி எழுத்துக்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். தன்னை உயர்ந்த இடத்தில வைத்துக்கொண்டு சமூகத்தைக் குனிந்து பார்த்து படிசெய்வது ஒரு வகை. இது பல சமயம் நம்மை எரிச்சல்படுத்தும். எழுத்தாளர் தன்னை மீறி உருவாக்கிவிடும் மேட்டிமைத்தனம் அதற்கான காரணமாக இருக்கும். சுய எள்ளல் அதிலிருந்து விலத்தி எழுத்தாளன் தன்னையும் தாழ்த்தியவாறு சமூகத்தைப் பார்க்கும் தொனியைக் கொண்டிருக்கும். செல்வத்தின் எழுத்து நடை, சுய எள்ளல் வகையைச் சேர்ந்த தன்வரலாறு. தனது துயரை தொடர்ச்சியாகப் பகிடி செய்கிறார். புரையேறி சிரிக்க வைத்தாலும் ஒவ்வோர் அத்தியாயத்திலும் துயர் பொதிந்து ஆழத்தில் இருக்கிறது.
சுஜாதாவின் ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ புனைவு வடிவில் எழுதபட்ட தன்வரலாற்றுக் கதைகள். பெரும்பாலான வெகுஜன வாசகர் மத்தியில் கூர்மையான அவதானங்கள் என்பதைத் தாண்டி அங்கதத்திற்காக இடம் பிடித்தது. ஈழத்தில் பகிடியுடன் எழுதப்பட்ட தன்வரலாற்றுப் புத்தகங்களில் உண்மை கலந்த நாட்குறிப்புகள், மனசுலாவிய வானம், எழுதித் தீராப் பக்கங்கள், கொல்லைப்புறத்துக் காதலிகள், காக்கா கொத்திய காயம், தாமரைக்குள ஞாபகங்கள் போன்ற புத்தகங்களைக் குறிப்பிடலாம்.
‘சொற்களில் சுழலும் உலகம்’ புத்தகம் செல்வம் அருளாந்தம் அவர்களது மூன்றாவது புத்தகம். ஒருவகையில் ‘எழுதித் தீராப் பக்கங்கள்’ புத்தகத்தின் தொடர்ச்சியாக பலரால் எதிர்பார்க்கப்பட்ட தொகுப்பு. அது கொடுத்த அங்கதம் மீண்டும் மீண்டும் அதற்குள் பலரை இழுக்கின்றது.
‘எழுதித் தீராப் பக்கங்கள்’ புத்தங்களில் இருந்த சிறுகதைக்கான கட்டிறுக்கம், நேர்த்தி முடிவு போன்றவை ‘சொற்களில் சுழலும் உலகம்’ புத்தகத்தில் இல்லை. இவற்றிலுள்ள பெரும்பாலான அத்தியாயங்கள் தொடர்கதையாக நீள்கின்றன. ஒரு நாவலுக்குத் தேவையான விரிவை வைத்திருக்கும் கதைகள். கனடா என்ற நாட்டில் உறுதியாக நிலைகொண்ட பின்னர் தான் சந்தித்த மனிதர்களின் கதைகளை எழுதியிருக்கிறார். அவர்களை விமான நிலையத்தில் சந்திக்கிறார், மதுச்சாலைகளில் சந்திக்கிறார்; இவர்களிடம் துயரம் நிரம்பிய கதைகள் இருக்கிறன. அந்த துயரத்திற்குப் பின்னே மகத்துவமான தியாகங்கள் இருக்கின்றன. இவர்கள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் விடப்பட்ட நாயகர்கள். இவர்களின் கதையை செல்வம் ஏன் எழுதவேண்டும்? அவர்களின் பாடுகளை அவர்களால் எழுத முடியாததால் செல்வம் எழுதுகிறார். செல்வம் தேர்ந்த கதை சொல்லியாக இருக்கிறார். அலங்காரங்கள் இன்றி உண்மையின் சுவையோடு எழுதிச் செல்கிறார். துயரத்தைச் சொல்லுதல் என்பது கசக்கிப்பிழிந்து கழிவிரக்கத்தைக் கோருவதில்லை. மெலிதான பகிடியுடன் எதிர்முனையிலுள்ள துயரத்தின் அழுத்தங்களை உணர்வித்துச் செல்கிறார்.
அம்மா மீதான நினைவுகளையும், ஏக்கங்களையும் ஒரு பாடலின் தூண்டுதலோடு எழுதுகிறார். அம்மாவின் சேலையை பற்றிய பாடல். வெங்காயம் ஆயப்போகும் அம்மாவின் சேலையில் எப்போதும் வெங்காயத்தின் வாசனை இருக்கும். அப்போதெல்லாம் அம்மாவிடம் மொத்தமாக நான்கு சேலைகள்தான். கோயிலுக்கு இரண்டு, வீட்டுக்கு இரண்டு என்று உடுத்து வாழ்கிறார். அந்தச் சேலையைப் போர்வையாகப் போர்த்துக் கொண்டு தூங்குவது இனிய துயிலைச் செல்வத்திற்கு வழங்குகிறது. அம்மா இறந்தபின்னர் அனைத்து உடைமைகளையும் எரிப்பது அவர்களின் ஊர் வழக்கமாக இருக்கிறது. செல்வம் இரண்டு சேலைகளை மட்டும் அம்மாவின் நினைவாகப் பத்திரப்படுத்துகிறார். பழைய சேலைகளை அன்று எறியச் சொன்னபோது “பஞ்சம் போகும். பஞ்சத்தால் பட்ட வடு போகாதடா” என்று அம்மா சொல்கிறார். இந்த வடு யுத்தம் முடிந்த பின்னரும் இன்னும் போகாத தமிழ் மக்களின் வடுவாகவும் பொருள்கொள்ள முடியும். இந்தச் சின்ன வாழ்கையில் எத்தனை அலைச்சல்கள். எத்தனைத் தலை சுற்றுதல்கள். எத்தனைக் கனவு எல்லாமே உயிர்வாழ்தலின் பொருட்டுத்தானே என்று நீளும் கேள்வியில் ஆறுதலைக் கொடுக்க இறுதியில் பாரதிதான் வருகிறார் செல்வத்திற்கு. பாரதியின் வரிகள் தலையை வருடி தூங்க வைக்கிறது. எல்லாமே கடந்து செல்ல வேண்டியது என்பதற்கான தைரியத்தை கடந்தகால இடர்களைக் கடந்துவந்த அனுபவங்கள் கொடுக்கின்றன.
“முப்பது” என்று சரியாக உச்சரித்து சொல்ல முடியாமல் “நுட்பது” என்று சொல்லும் பொடியனை நண்பர்கள், உறவினர்கள் ‘நுட்பது’ என்று அழைக்கிறார்கள். அவன் கனடா வந்த பின்னரும் இந்தப் பெயர் காணாமல் போய்விடும் என்று விரும்பினாலும் கனடாவிலும் தமிழ்ச் சமூகங்களுடன் இயங்க நேர்வதால் ‘நுட்பது’ என்ற பட்டப் பெயர் தொடர்கிறது. மெல்ல தமிழ் பண்பாட்டுச் சூழலிலிருந்து வெளியேறும் அவன் பிற்காலத்தில் தொழில் அதிபராகிவிடுகிறான். இப்போது அவன் முப்பதைத் தமிழில் சொல்லும் நிலையில் இல்லை. ஆங்கிலத்தில்தான் சொல்கிறான். இங்கே நுட்பது என்ற சொற்பிறழ்வை வாசகன் தனக்குரிய அர்த்தத்தில் விரித்து செல்லக்கூடிய தொலைவு அதிகம். நுட்பத்துக்கு ஈழ அரசியல் மீது பெரிய ஆர்வம் இல்லை. அதன் மீது எந்தப் பற்றும் இல்லை. கனடா மண்ணின் சுதந்திரம் அவனை விரிக்கிறது. “தந்தை செல்வாவை போட்டது எந்த இயக்கம்?” என்று கேட்கும் பலவீனமான அரசியல் அறிவுதான் எந்த அரசியல் செயற்பாட்டிலும் அவனை ஈடுபடச் செய்யாமல் பொருளாதாரத்தை வளர்க்க இயங்க வைக்கிறது. புலம்பெயர்ந்த முதல் தலைமுறைக்கு போராட்டத்தில் ஈடுபட முடியவில்லையே என்ற குற்றவுணர்வு அரித்துச் செல்ல, அதிலிருந்து மீண்டு செல்ல வெவ்வேறு அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். இமானுவேல் தொலைத்த வாழ்க்கை அப்படியானது.
புலம்பெயர்ந்து சௌகரியமாக வாழ்ந்தாலும், நாட்டிலுள்ளவர்கள் படும் கஷ்டத்தைப் பார்க்க அவர்களுக்குக் குற்றவுணர்வு ஏற்படுகிறது. இதற்குப் பரிகாரமாக ஏதாவது செய்யவேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது. ஒருவகையில் அகம் கொடுக்கும் தொந்தரவு. அதிலிருந்து விடுபட புலம்பெயர் நாடுகளில் இருந்துகொண்டு சர்வதேச ரீதியிலான இயக்க செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.
இமானுவேல் என்ற இரண்டு அத்தியாயம், புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் இமானுவேல் போராட்டத்திற்கு உதவக் கிளம்பி அதில் அடையும் எதிர்பாராத சம்பவங்களால் பாரிய குற்றவுணர்வுக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டு வர செல்லும் தூரம் செல்வத்தை புரட்டிப் போடுகிறது. என்றும் மறுக்க முடியாத மனிதனாக காட்டுகிறது. மண்டகடன் என்ற எட்டு அத்தியாயங்கள் கொண்ட பகுதிகள் நாவலாக எழுதும் அளவுக்குச் சம்பவங்களால் நிறைந்தவை. சிறுவயதில் பிரான்ஸ் தேசத்துக்குத் தத்தெடுத்துச் செல்லப்பட்ட நாயகம் அங்கிருந்து போராடக் கிளம்பி அனைத்தையும் இழந்து உதிர்ந்து இறுதியில் அடையும் இடம் நம்மை திகைக்கவைக்கக் கூடியது. அதுவும் மெய்யாகவே நிகழ்ந்த கதை என்பது இன்னும் தொந்தரவுக்கு உள்ளாக்கும். இமானுவேலின் கதையும், நாயகத்தின் கதையும் ஆரம்பிக்கும் இடம் நாட்டின் மீதான பற்று என்றாலும் அடிப்படையில் தங்கள் சௌகரியமான வாழ்க்கை மீது குற்றவுணர்ச்சி கொடுக்கும் தொந்தரவு. அதனால் இருக்கும் நாட்டிலிருந்து கிளம்பி சாகசங்களில் ஈடுபடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அவை கொண்டு வந்து சேர்ந்த இடம் துயர், தனிப்பட்ட வாழ்கையில் பெரும் இழப்பு. இப்போது மக்களுக்குத் தேவை ஆறுதல். மனச் சிதைவைக் கொடுத்திருக்கக் கூடிய போரின் வடுவிலிருந்து மீண்டுவர அவை உடனடியாகத் தேவையாக இருக்கின்றன என்பது நாயகத்தின் வாயிலாக வருகின்றன.
செல்வத்திற்கு எப்போதுமே சொற்கள் தேவையாக இருக்கின்றன. சொற்கள் கடந்த காலத்தை நியாபகப்படுத்தும். அந்த நினைவுகள் தான் அவரைச் சீராட்டுகின்றன. கதைகளைச் சொல்லும்போது அவர் அதிகம் மெனக்கெடுவது இல்லை. கதாப்பாத்திரங்கள் அருகே தானும் தோன்றி அவர்களைப் பற்றிய குறிப்புகளை தூவிவிடுவார். பங்கிராஸ் அண்ணரின் குண இயல்புகளைச் சொல்ல இந்திய இராணுவம் வழிமறித்து “ஐடி பிளீஸ் ஐடி பிளீஸ்” என்று கேட்க பதிலுக்கு அவர்களிடம் “பாஸ்போர்ட் பிளீஸ் பாஸ்போர்ட் பிளீஸ்” என்று சொல்வது மட்டும் போதுமானதாக இருக்கிறது. ‘சடங்கு’ என்ற அத்தியாயத்தில் கனடாவில் பிறந்து பூப்படைந்த பெண்ணுக்கு வீட்டுக்காரர் செய்யும் தொந்தரவைச் சொல்கிறது. இரண்டு கலாசாரங்கள் மோதிக்கொள்ளும் யுத்த பூமியாகிறது வீடு. புலம்பெயர்ந்த பின்னரும் உறவினர்கள் தங்கள் பழமைவாதத்தை கட்டியெழுப்ப சமரசமின்றி ஈடுபடுகின்றனர். மிகுந்த பகிடியுடன் அடுத்த சங்கதியினர் எழுந்து செல்லும் தன்னம்பிக்கையையும் சுதந்திரத்தையும் நோக்கலாம்.
‘எழுதித் தீராப் பக்கம்’ எழுதிய கதை சொல்லியான செல்வம் ‘சொற்களில் சுழலும் உலகத்தில்’ இல்லை. முன்னையதுடன் ஒப்பிடும்போது இங்கே பகிடி கொஞ்சம் குறைவுதான். தன்னுடைய கதையைச் சொல்லும்போது வரும் பகிடி, அடுத்தவர்களின் கதையைச் சொல்லும்போது செல்வத்தால் சொல்ல முடியவில்லை. அந்த தர்ம சங்கடம் துருத்துகிறது. நாற்பது வருடங்களாக தமிழர்கள் அடைந்த இன்னல்கள் எக்கச்சக்கம். புலம்பெயர் தேசத்தில் நிகழ்ந்த பல்வேறு இன்னல்களை நியாபகம் கொள்ளத்தான் வேண்டும். தலைமுறை தலைமுறையாக அவை சொல்லப்பட வேண்டும். செல்வம் அவற்றை பாடும் பாடகன். செல்வத்தின் அம்மா சொல்வதுபோல “பஞ்சம் போகும். பஞ்சத்தால் பட்ட வடு போகாது”. அந்த வடுக்கள் அடுத்த சங்கதிகளாக புலம்பியர் தேசத்தில் பண்பாட்டு அடையாளம் அற்றுத் தொலைந்து போதலோ என்று ஐமிச்சம் கொள்ள வைக்கிறது.