விக்ரமாதித்யன் நம்பி கவிதைகள்

by olaichuvadi

நுண்ணிய நூல் பல கற்பினும் 

 

தாஸ்தாவஸ்கி படித்தென்ன

தால்ஸ்தாய் படித்தென்ன

செகாவ் படித்தென்ன

கார்க்கி படித்தென்ன

சிவராம காரந்த் வாசித்தென்ன

விபூதிபூஷன் பங்தோபாத்யாய வாசித்தென்ன

தாராசங்கர் பானர்ஜி வாசித்துதானென்ன

பஷீர் வாசித்துதானென்ன

சங்கம் / சிலம்பு பயின்றென்ன

தேவார திருவாசகம் பயின்றென்ன

சிற்றிலக்கியம் கற்றுத்துறை போயென்ன

தனிப்பாடல் திரட்டு ஆழங்கால் கண்டுதானென்ன

வாய்ப்பதே வாய்க்குமய்யா பாண்டியரே

அமைவதே அமையுமய்யா பாரிவள்ளலே

எத்திக்கு சென்றிலும்

தற்திக்குதானய்யா ராஜராஜனே

திக்குத் தெரியாமல்

தெருவட்டாய் இருக்கலாகுமோ செங்குட்டுவா

காலமறியா

கதைகளா

கர்மமறியா

வாழ்வா

===

வெளியுலகம் குறித்து

வீணாய்க் கவ்லைப்படுவானேன்

உள்ளுலகம் ஆராய்ந்து

உருப்படப் பார்க்கலாம்

வீராணத்திலென்ன 

விசேஷம்

விண்வெளி ஆராய்ச்சி நிலைய

அடிக்கல் நாட்டு விழாவாம்

ஜலக்ரீடைக்கு முகூர்த்தம் பார்க்கிறான்

ஜகதாப்ரதாபன்

===

கடலுக்கு அடியிலும் 

கதைகள்தாம் உறைந்திருக்கும்

பூமியெங்கும்

கதைகளே

காற்றில் அலைவதும்

கண்ணுக்குத் தெரியாத கதைகளல்லவோ

நெருப்பினுள்ளும் 

பிரகாசிக்கும் கதைகள்

ஆகாயத்திலும் அப்பாலும்

அருங்கதைகள்

முந்தைய கதையெலாம்

வரலாறு

இன்றைய கதையெலாம்

செய்தி

புனைவில் கட்டப்பட்டது

புராணம்

கோத்துக்கோத்து 

ஆக்கம் பெற்றது இதிகாசம்

தரிசனத்தில் தோன்றியது

தொன்மம்

தீயைக் கடைந்து

உருவாக்கியது ஐதிகம்

‘தென்னாட்டுப் பழங்கதைகள்’

‘திராவிடநாட்டுப் பழங்கதைகள்’

‘மதனகாமராஜன் கதை’

‘ஜகதலப்ரதாபன் கதை’

வடக்கத்திக்கதை வேறே

தெற்கத்திக்கதை வேறே

உலகக்கதைதான்

உவப்பாயிருக்கும் மெத்தப்படித்த மேதாவிகளுக்கு

உள்ளூர்க்க்தைதான் 

உகந்ததாகும் பாமரஜனங்களுக்கு

நாட்டார் கதைகளும்

நம் கதைகள்தாம்

எல்லாக் கதைகளும்

சொல்லும் கதையென்ன சுந்தரி

சொல்லாக் கதைகளும் 

உண்டுதானே சுந்தரா

சொன்ன கதைதான் 

பேச்சு

சொல்லாத கதை

எங்கே போச்சு

மண்ணுக்குள்ளும் இல்லை

காற்றிலும் இல்லை

சொன்னால்தானே 

ஆச்சு

மனசுக்குள்ளேயே இருந்து

மறைந்தே தொலைந்தது வர்ஷினி

===

வயிற்று வலிக்காரனுக்கு

என்ன வேண்டும்

வயிற்று வலி தீர வேண்டும்

வேறென்ன வேண்டும்

பித்தவெடிப்புக்காரனுக்கு  

என்னவாம்

பித்தவெடிப்புதான் 

பிரச்னையாம்

தலைவலிக்காரன்

என்ன சொல்கிறான்

தலைவலி

குணமானால் போதுமென்கிறான்

இயல்புநிலை

என்ற ஒன்று 

வேண்டும் வேண்டும்

நாளும் பொழுதும்

===

இரவு பூராவும் காத்திருக்க வேண்டியதாயிருக்கிறது

விடிவதற்கு

பகல் முழுக்கப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதாயிருக்கிறது

நட்சத்திரப் பொழுதுக்கு

காலவெளி கண்டுதானே

கோட்டி

காலவெளி பார்த்த்துப் பார்த்துதானே

சித்தன்

காலவெளி சடைத்துச்சடைத்துத்தானே

கவிராஜசிங்கம்

காலமும் அறியும் 

வெளியும் உணரும்

கவிதையும் கண்டுகொள்ளும்

உலகுக்கு

தெரிந்தாலென்ன தெரியாமல் போனாலென்ன

===

அபூர்வம் 

அபூர்வமாகவே நிகழ்கிறது

அதுகொண்டே அஃது ஓர்

அபூர்வமாக திகழ்கிறது

====

அன்றாடத்தை 

ஒன்றும் செய்ய முடியவில்லை

அன்றாடம் 

அன்றாடம் வந்துபோகிறது

அன்றாடத்தின் சவால்

அன்றாடம் எதிர்கொள்ள வேண்டியதாயிருக்கிறது

அன்றாடத்திடம்

அன்றாடம் கோபித்துக்கொண்டு இருக்கமுடியுமா

அன்றாடத்திடம்

சமரசம் செய்துகொள்ளவும் வழியில்லை

அன்றாடத்தை

அன்றாடம் சமாளித்துதானாக வேண்டும்

அன்றாடத்துக்கு

போக்குக்காட்டவும் இயலாது

அன்றாடம் உறக்கம் வரும் வரையிலும் 

அன்றாடத்தைக் கண்டுகண்டு அச்சமாயிருக்கிறது

அன்றாடத்தைப்பற்றி

யாருமே ஏன் எழுதாமல் விட்டுவிட்டார்கள்

பிற படைப்புகள்

Leave a Comment