நிலவு வண்ணார் வெளுத்த வேட்டிபோல் பாலொழுக மிதந்தது. ஆந்தை அலறிய அந்த நட்டநடுநிசிப்பொழுதில் கருப்பண்ணசாமி கண்கள் ஒளிர அமர்ந்திருந்தார். இரவுக்காவல் அவர் பொறுப்பு.
ஊர் எல்லையில் வடக்குப்புறமாக அமர்ந்து ஊரைக் காக்க அவர் தலையில் எழுதியிருந்தது. பகலில் பிதுங்கிய நிலையில் காட்சி தரும் அவருடைய கருவிழிகள் இரவில் பச்சை நிறத்தில் ஒளிரும்.
” நா முளிச்சு கெடக்குறப்ப நீரும் முளிச்சுதான் கெடக்கணும் ஓய்” என்று அவர் குதிரைக்கு கட்டளையிட்டிருந்தார். அது ஒருமுறை சத்தமாக கனைத்து அடங்கியது.
” நடுராத்திரியில எதுக்கு ஓய் இப்புடி கனைக்கிறீரு. பச்சப்புள்ளைவோ பயத்துல அலறி காய்ச்ச கண்டு கஸ்டப்படவா…..”
கருப்பு, குதிரையை ஒரு வெருட்டு வெருட்டினார். அது உக்கும் என்றது.
‘ ஊரக் காக்க ஒமக்கு தலவிதி. என்னையும் சேத்து வாட்டுறீரே……’
மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டாலும் அதற்கு கருப்பண்ணசாமி என்றால் அப்படியொரு விசுவாசம். அவர் காற்சலங்கை சப்திக்க அதன்மேல் ஏறி அமர்ந்துவிட்டால் அதற்கு புல்லரிக்கும்.
இரவில் ஊர்வலம் வர அவர் வேட்டியை தார்பாய்ச்சி கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார். வெக்கையும், குளிரும் அவருக்குப் பொருட்டில்லை. கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டது போல் நோட்டமிடுவார். ஓரிரு நாட்கள் ஊர்வலம் போகாமல் உட்கார்ந்தவாக்கில் காவல் காப்பதும் உண்டு.
அவர் இரவுக் காவலுக்குச் செல்லும்போது தன் வருகையை உணர்த்துவதற்காக கால்களை வேகமாக அசைப்பார். குளம்படி சத்தமும், சலங்கை சத்தமும் கேட்டதாக யாராவது சொல்லக் கேட்டால் அவருக்கு ஆனந்தமாகிவிடும்.
” கருப்புகிட்ட ஒரு பொறுப்ப குடுத்தா நிமிசமா செஞ்சிடும். அதனாலதான் எம்பாட்டன் ஊரக் காக்க அவன நியமிச்சாரு.”
இருளாண்டி சத்தமாக சொன்னதைக் கேட்டு கருப்பு தனக்குள் சிரித்துக்கொண்டார்.
” ஒரு முப்பது, நாப்பது வருசத்துக்கு மின்னாடி இருளாண்டியோட தாத்தா வந்து எம்முன்னாடி நின்னு வெசனப்பட்டாரு…..”
கருப்பு ஆரம்பிக்க,
” அவருக்கு என்னாச்சாம்…..?” என்றது குதிரை.
அப்போது அதுவும் அங்குதான் நின்றிருந்தது. அது கருப்புக்குத் தெரியும்.
இருந்தும் குதிரை அப்படி கேட்பது அவருக்குப் பிடிக்கும். அந்தக் கதையை நீட்டி முழக்கி சொல்ல அவர் ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது.
அந்நேரம் அவர் முகம் பெருமையில் பிரகாசிக்கும். கண்கள் ஏகத்துக்கு விரியும். குதிரைக்கு, அவரை அப்படி காணப் பிடிக்கும். அதனாலேயே முதன்முறை கேட்பது போல் கேட்கும்.
” ஊருக்குள்ள திருட்டுப்பய பொளக்கம் அதிகமாயிருச்சி. பகல்ல திருடுனா கண்டுபிடிச்சிருவம்னு ராத்திரியில இருட்டு அப்புன நேரத்துல முக்காட்ட போட்டுக்கிட்டு சம்சாரிக வூட்டு ஆடு, கோளிய திருடிக்கிட்டு போறதுக்காவ ஒரு கூட்டம் கெளம்பியிருக்கு. நல்லா கண்ணசர்ற சாமத்துல கையில கெடச்சத அவனுவோ பத்திக்கிட்டு போயிடுறானுவோ. அவனுங்கள நீதான் கேக்கணும் சாமின்னு தொரசாமி ஒரு கடிதத்த எளுதி எங்கையில கட்டிட்டுப் போனாரு. அன்னியிலேருந்து நான், என் வேலைய ஆரமிச்சிட்டேன்.”
” அதுக்கு மின்னாடி தூங்கிட்டிருந்தீராக்கும்.”
” ஒமக்கு வாய் அதிகம் ஓய். வெறும் செலைக்கு ஏது பவரு…..மனுசன் கும்புட கும்புடத்தான் மெருகேறிப்போவுது. நானும் செலைதான……கையில கட்டுன கடுதாசு காத்துல படபடத்து என்னைய உசுப்பி வுட்ருச்சு. அன்னிக்கி என் வேல இதுதான்னு புரிஞ்சி காவக் காக்க ஆரமிச்சேன். அதுலருந்து ஊர்க்காரங்க நிம்மதிக்கு நாந்தான் ஜவாப்தாரின்னு ஆயிப்போச்சி.”
குதிரை எதுவும் பேசவில்லை. பாதி உதிர்ந்து காய்ந்திருந்த மாலை கழுத்தில் தொங்கி ஆடியது. அதைப் பார்த்துக்கொண்டிருந்தது. கருப்பண்ணசாமியும் அமைதியானார். நிலவை மேகங்கள் மறைத்து விலகின. வயக்காட்டில் நரிகள் ஊளையிட்டது மெலிதாக கேட்டது.
காற்றில் மலவாடை வீசிற்று. கருப்பு முகம் சுருக்கினார். வெட்டவெளியில் உச்சிவெயிலில் சூட்டுக் கொதிப்போடு அமர்ந்திருப்பதையோ, அல்லது மார்கழியில் குத்தூசி கணக்காய் குத்தும் குளிரில் உறைந்து கிடப்பதையோ அவர் பெரிதாக எண்ணுவதில்லை.
அரைக்கிலோமீட்டருக்கு பின்புறமிருந்த மலக்காட்டின் வாடைதான் அவரை இம்சித்தது. கருவேலங்காட்டை ஊர்மக்கள் மொத்தமாய் குத்தகையெடுத்து வயிற்று உபாதையைத் தணித்துக்கொண்டதில் அவருக்கு ரொம்ப வருத்தம்.
” சுட்டக் கத்திரிக்கா கணக்கா மூஞ்ச வச்சிக்கிட்டா யாரு பாக்குறது….”
குதிரை மெலிதாக முனகியது கருப்பு காதில் விழுந்துவிட்டது.
” ஒமக்கு பின்னாடியும் கண்ணிருக்குடே. இல்லாங்காட்டி நான் சொணங்கிக் குந்தியிருக்குறது ஒமக்கெப்புடி தெரியும்….” என்ற கருப்பு கொட்டாவி விட்டார்.
அவருக்கு குதிரைமேல் அபார பிரியமுண்டு. வெள்ளை தேகத்தை அது சிலிர்த்துக்கொண்டு முன்னிரண்டு கால்களை உயர்த்தி மடித்து பெரிதாய் கனைக்கும்போது அவர் நெக்குருகிப் போய்விடுவார். குளம்பொலியும், சலங்கை சத்தமும் அர்த்தசாமத்தில் உலாவிடும் அவர்களை, தூக்கம் வராமல் புரள்பவர்களுக்கு காட்டிக்கொடுத்தாலும் எவரும் எழுந்து வெளியே வந்து பார்த்ததில்லை.
பயத்தில், முட்டிக்கொண்டு வரும் சிறுநீரை அடக்கியபடி படுத்துக்கிடப்பர். இரவில்தான் பயமெல்லாம். பகலில் அது காணாமல் போய்விடும். ஒருமுறை கருப்பு, இருளாண்டியின் மேல் இறங்கி மலக்காட்டை இனி ஒருவரும் உபயோகிக்கக்கூடாது என்று ஆட்டம் போட்டார்.
ஆடி வெள்ளிக்கிழமை சாம்பிராணி வாசத்தில் இருளாண்டி முறுக்கேறி, நாக்கைத் துருத்தி, கண்களை உருட்டி விழித்து புஸ், புஸ்ஸென்று மூச்சுவிட்டு கூச்சலிட்டார்.
” ஒக்கார முடியலடே. நாத்தம் புடுங்கி எடுக்குது. இஞ்ச ஒக்காந்து ஊரக் காவக் காக்கணுமுன்னா இனி ஒரு பய காட்டுல இருக்க கூடாது. சம்மதஞ்சொல்லி ஒவ்வொருத்தரா வந்து சூடத்த அணைச்சி சத்தியம் பண்ணுங்கடே. இல்லாட்டி நான் கெளம்பிருவேன், சொல்லிப்புட்டேன்.”
கூட்டம் அமைதியாயிருந்தது. குதிரைக்கு சிரிப்பு வந்துவிட்டது. உத்திராபதி தைரியமாய் முன்னே வந்தான்.
” எங்களுக்கு அதவுட்டா வேற எடம் கெடையாது. ஐயாமாருங்கமாரி கொல்லக்கடசீல கக்கூசு கட்டி வச்சிக்கிட எங்களுக்கு வசதியில்ல. நாங்க இஞ்சதான் இருப்போம். நீதான் அஜஸ் பண்ணிக்கணும்.”
சத்தமாக சொல்லிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு நகர்ந்து நின்றான். கூட்டம் அதை ஆமோதிப்பதுபோல் மௌனம் காத்தது. இருளாண்டி நெஞ்சை நிமிர்த்தி குதிகால்களை உயர்த்தி அடுத்த ஆட்டத்துக்குத் தயாராக, இருவர் வேகமாக வந்து அவரை இறுக்கிப்பிடித்து முகத்தில் திருநீறை வீசி சாமியை மலையேத்தினர்.
” அன்னிக்கி நீரு போட்ட ஆட்டத்துக்கு ஒரு பய மசியல. அவனவன் கஸ்டம் அவனவனுக்கு ” என்ற குதிரை அவசரமாக கேட்டது.
” இன்னிக்கி ஏன் சமஞ்சி போயி ஒக்காந்துட்டீரு. ஊர்வலம் போவலியா…..மணி ரெண்டாவுதே….”
” ஒரு ரோசன உள்ளார ஓடிக்கிட்டிருக்கு. அத ரோசிச்சிக்கிட்டே அப்புடியே ஒக்காந்துட்டேன்.”
” அதென்னா ரோசன……..காத்தாயி சமாச்சாரமா….?”
” ஒமக்கு எம்மனசுல ஓடுற அம்புட்டும் தெரியும். ஆனா தெரியாதமாரி நாடகமாடுவீரு. “
கருப்பு குஷியாக இருந்தால் வாடே, போடே என்பார். மற்ற நேரங்களில் போறீரு, வாரீரு என்று தாவிவிடுவார். குதிரைக்கென்னவோ அவர் மரியாதையின்றி விளிப்பதுதான் பிடிக்கும்.
காத்தாயி இரண்டு நாட்களுக்கு முன்பு வந்து ஒரு பாட்டம் அழுது தீர்த்துவிட்டு போய்விட்டாள். அவள் புருசன் புதிதாக ஒருத்தியை சேர்த்துக்கொண்டு கும்மாளமடிக்கிறானாம்.
” வூட்ட, புள்ளக்குட்டிங்கள மறந்துட்டு பொளுதுக்கும் அவ குடியிலயே கெடக்கான். அவ தளுக்கி, மினுக்கி அந்தாள மயக்கி வச்சிருக்கா. நீதான் இதுக்கொரு ஞாயம் சொல்லணும். ”
” ஞாயம் காத்தாயி பக்கமிருக்கறச்ச எதுக்கு ரோசிக்கணும்…..அந்தப் பயலுக்கு இந்த வயசுல இன்னூரு பொம்பள கேக்குதா….அவன இளுத்து போட்டு நாளுமிதி மிதிக்கணும் போலருக்கு.”
குதிரை படபடத்தது. கருப்பு முரட்டு மீசையைத் தடவி விட்டுக்கொண்டார். ஆடு, கோழி காணுமென்று முறையிட்டிருக்கிறார்கள். வேலிக்காலை நகர்த்தி நட்டு விட்டார்கள் என்று பிராது கொடுத்திருக்கிறார்கள். மரக்கால் தொலைந்து விட்டதென்று படி கட்டியிருக்கிறார்கள்.
இப்போதுதான் முதன்முறையாக கணவன் மேல் புகார் வந்திருக்கிறது. கருப்பின் இடது கையில் இரண்டு சீட்டுகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன. பிராது வந்தவுடன் அதை தீர்த்து வைத்துவிட கருப்பு தயாராகிவிடுவார்.
” கருப்பு துடியான தெய்வம். அது காதுல விசயத்த போட்டுட்டோம்னா கவலையில்லாம இருக்கலாம் ” என்பார்கள்.
ஆழ்ந்த உறக்கத்தில் அகவெளியில் விரியும் கனவுக்குள் புகுந்து தவறு செய்தவனை கருப்பு விரட்டுவார். நெஞ்சில் ஏறி அமர்ந்துகொண்டு பாறாங்கல்லாய் கனப்பார். சலங்கை கட்டிய கால்களால் தொம், தொம்மென்று மிதிப்பார்.
கனவு கண்டவன் அலறியடித்துக்கொண்டு எழுந்தமர்வான். மறுநாள் விடிந்ததும், விடியாததுமாக கோயிலுக்கு ஓடிவந்து செய்த தவறை ஒப்புக்கொண்டு கதறுவான். பிரச்சனை முடிந்துவிடும்.
” அன்னின்னிய பிரச்சனைய அன்னின்னிக்கி தீத்துடணும்னு சொல்லுவீரே. இப்ப என்னாச்சி….?”
” காத்தாயி விசயத்த மனசுல போட்டு வருத்திக்கிட்டேயிருந்ததுல மத்ததெல்லாம் தங்கிப்போச்சி. ரெண்டு நாளைக்குள்ள எல்லா பிரச்சனையையும் தீத்துவுட்டுடணும்.”
கருப்பு சுய சமாதானம் செய்து கொண்டார். கிழக்கு வெளுக்கத் தொடங்கியது. அன்று படையல் விருந்து நடக்கவிருந்தது. காளிமுத்து ஆசாரி வீட்டில் கலியாணம். கலியாணத்துக்கு முன்பு கருப்புக்கு படையல் போடுவது அவர் வீட்டு வழக்கம்.
தலைவாழை இலை விரித்து நடுவாந்திரமாக மூன்று படி சோறு குவித்து சுற்றிலும் ஆடு, கோழி வகையறாக்களை பக்குவமாக சமைத்து பரப்பி வைப்பார்கள். சூடான கறிக்குழம்பை சோற்றின் மேல் பதமாக, பவ்வியமாக ஊற்றுவார்கள்.
அதிலிருந்து எழும் ஆவி கருப்பின் நாசியை நெருடும். டவுனிலிருந்து வாங்கிவந்த ரோசாப்பூ மாலையை அவருக்கு சாத்தி, அரிவாளுக்கு சந்தனம், குங்குமம் வைத்து சாம்பிராணி போட்டு, தேங்காய் உடைத்து, நீர் விளாவி, சூடம் காட்டுவார்கள். கருப்பு அன்று ஒரு கட்டு கட்டிவிடுவார். அன்றும் படையல் தடபுடலாக நடந்து முடிந்தது.
குழம்பும், சோறும், கூட்டும், கறியும் பிரமாதமாயிருந்தது. கருப்பு மனம் குளிர்ந்து போயிருந்தார். சோறு சமைத்த காளிமுத்து ஆசாரியின் மனைவி பயபக்தியோடு கண்கள் மூடி நின்றிருந்தாள். அவளைப் பார்த்த கருப்புக்கு கையெடுத்து கும்பிட வேண்டும் போலிருந்தது.
ருசியாய் சமைக்க பெண்களுக்கு எங்கிருந்து வாய்த்தது என்று அவர் அடிக்கடி நினைத்துக்கொள்வார். அளவான உப்பு, காரம் போட்டு சமைத்து படையலிடும் ஊராருக்கு, தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாய் அவருக்குத் தோன்றும்.
” கலியாணம் நல்லபடியா நடக்கணும் சாமி. நீ வந்து அருமையா நடத்திக் குடுக்கணும்.”
காளிமுத்து ஆசாரி தலைக்கு மேலே கைகளை உயர்த்தி கும்பிட்டார். கருப்பு பாதத்தில் பத்திரிகை படபடத்தது.
” மொத பத்திரிக்க ஒனக்குதான் வச்சிருக்கோம்ப்பா. ஒரு கொறையுமில்லாம கலியாணம் சிறப்பா நடக்கணும்.”
ஆசாரி மனைவி காலில் விழுந்தாள். தாய் தன் காலில் விழுவது போல கருப்பு பதறிப் போனார். காற்றில் கறிக்குழம்பு, ரோசாப்பூ, சாம்பிராணியின் கலவையான மணம் வீசிற்று. குதிரை உர்ரென்று நின்றிருந்தது. அதன் முன் ஏடு கிழித்துப்போடப்பட்டு கொஞ்சம் சோறும், மேலே ஒரு கரண்டிக் குழம்பும் ஊற்றப்பட்டிருந்தது. பக்கத்தில் ஒரேயொரு கறித்துண்டு கிடந்தது.
” இதெல்லாம் எப்பவும் நடக்குறதுதான……..இதுக்கா மூஞ்சிய தூக்கி வச்சிக்கிட்டு நிக்கிறீரு……”
கருப்பு சமாதானப்படுத்தும் நோக்கில் கூறினார்.
” ஓராள் ஒசர எலை போட்டு ஒமக்கு பரிமாறுனவுங்க எனக்கு கையில கெடச்ச கிளிசல போட்டு பேருக்கு சொத்தையள்ளி வச்சிருக்காங்க. அட, அதவுடும். களுத்துல கெடக்குற மாலையப் பாரும். ஒமக்கு ரோசாப்பூ மாலை, எனக்கு அரளிமாலை. கோவம் வருமா, வராதா………….?”
” ஞாயந்தான். பாரபச்சம் பாக்குறது மனுசரோட கூடப் பொறந்தது. சரி, சரி கோச்சிக்காதடே. ஒருநா யார் மேலயாவது எறங்கி ஒரு ஏறு ஏர்றேன். அப்பதான் பய புள்ளைங்களுக்கு புத்தி வரும்.”
” நீரு என்னா ஏறு ஏறினாலும் அவுங்க திருந்தப்போறதில்ல. பளக்கத்த மாத்திக்கமுடியாதுன்னு சொல்லிட்டு போயிட்டேயிருப்பாங்க. நாந்தான் எம்மனச மாத்திக்கிடணும்.”
குதிரை பெருமூச்சு விட்டது. கருப்புக்கு என்னவோ போலாகிவிட்டது. நல்ல வாளிப்பான குதிரை அது. தன்னுடைய குன்று போன்ற உருவத்தை சுமந்து அது நாலுகால் பாய்ச்சலில் பாயும்போது கருப்புக்கு பறப்பது போலிருக்கும். அதுவும் தனக்கு நிகராக கௌரவிக்கப்படவேண்டுமென்று கருப்பு எண்ணினார்.
அதனுடைய மனக்குறையைப் போக்க ஏதாவது செய்தே ஆகவேண்டுமென்று தோன்றியது.
அமாவாசை இருட்டில் ஊர்வலம் போக அவருக்குப் பிடிக்கும். இருட்டு அப்பிக்கிடக்கும் தெருக்களில் சலங்கை சப்திக்க செல்லும்போது தப்பு செய்தவன் அதிகமாக நடுங்குவான். தூக்கத்திலும் உடல் வெடவெடக்கும். கருப்பு கொடுக்கும் தண்டனையில் காய்ச்சல் கண்டு பிதற்ற ஆரம்பிப்பான். குற்றம் நிரூபிக்கப்பட்டுவிடும்.
கருப்பு காவல் காக்க ஆரம்பித்ததிலிருந்து குற்றங்கள் குறைந்துவிட்டன. அசலூர்க்காரர்கள் ஆடு, கோழி திருட ஊருக்குள் நுழைவது அடியோடு நின்று போயிருந்தாலும் உள்ளூர்க்காரர்களிடையே ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லாமல் போனது.
அன்று இரண்டு பிராதுக்கள் வந்திருந்தன. முதலாவது மயிலாம்பா தன் மகன் மேல் கொடுத்த புகார்.
” ஒடம்புல தெம்பில்லாம கெடக்குறேன். எனக்கு இம்மாஞ்சோறு போட மாட்டேங்குறான் சாமி. அவென் பொஞ்சாதியும் என்னைய சல்லிக்காசுக்கு மதிக்கறதில்ல. இவுங்ககிட்ட சோறு வாங்கித் திங்க ஒடம்பு கூசுது. மனசுக்குதான் மான, ரோசமெல்லாம். வயித்துக்கு அதெல்லாம் கெடையாது. அதனாலதான் இப்புடி கெடந்து அவஸ்தப்படுறேன்.”
மயிலாம்பா கருப்பு காலடியில் அமர்ந்து ஓவென்று அழுதாள். கருப்புக்கு மனசு இளகிவிட்டது. சிலர் மனதிலுள்ளதை எழுத்தில் வடித்து படி கட்டிவிட்டுப் போவார்கள். எழுதத் தெரியாத அப்பிராணிகள் தன் சொந்தக்காரனிடம் முறையிடுவதுபோல் முறையிடுவார்கள்.
மயிலாம்பாவின் கதை கேட்டு குதிரை பொங்கிவிட்டது. இரண்டு நாட்களாக தீர்க்கவேண்டிய வேலை எதுவுமில்லாமல் நின்றிருந்தது அதற்கு சலிப்பாயிருந்தது. கருப்பு கையில் கடிதாசிகள் எதுவுமில்லை. காத்தாயி புருசனை தலைதெறிக்க அவன் குடிக்கே ஓட வைத்தாயிற்று. இதில் கருப்புக்கு ஏக ஆனந்தம்.
” எங்கிட்ட வந்த கேசு தோத்துப்போனதா சரித்திரமேயில்ல….” என்று மீசையை முறுக்கிவிட்டுக்கொண்டார். குதிரைக்கு அவரையெண்ணி பெருமிதமாயிருந்தது. அவருக்கு, தான் அமைந்துவிட்ட பொருத்தத்தை நினைத்து புளங்காகிதப்பட்டுக்கொண்டது.
அப்போதுதான் மயிலாம்பா வந்து தன் பிரச்சனையை கொட்டிவிட்டுப் போனாள். கருப்பண்ணசாமி சலங்கை சப்திக்க குதிரையின் மீதேறினார். சலங்கை மணிகளில் ஒன்றுகூட நசுங்கவில்லை. எல்லாம் ஒத்தாற்போல் ஒலியெழுப்பின. அதைக் கட்டிக்கொள்ள அவருக்கு அவ்வளவு பிடிக்கும். உலக்கை போன்ற வலுவான கால்களுக்கு பூண் போட்டது போல சலங்கை அம்சமாய் பொருந்திப்போயிருக்கும்.
” மயிலாம்பா விசயத்த முடிச்சிப்புட்டு செங்கம்மா பிராத கவனிக்கணும்.”
” அட ஆமடே…..முட்டைய தெனமும் யாரோ களவாண்டுடுறாங்களாம். சந்திரகாசு மேலதான் சந்தேகமா இருக்குன்னு அம்மிணி பிராது குடுத்துருக்கு.”
” திருடன் யாருன்னு ஒமக்குதான் தெரியுமே….”
” முட்டைய திருடுறது மொச்சக்கொட்டை. பாவம் சந்திரகாசு. ஒருதடவ இந்த பொம்பளைகிட்ட வாயக்குடுக்கப் போயி அவனுக்கு இப்புடியொரு அவப்பேரு. இருக்கட்டும், இன்னிக்கி இத தீத்துப்புடுறேன்.”
” முட்டையக் காணும், மொளகாயக் காணும்னு பொம்பளைங்களுக்கு பொளுது விடிஞ்சி பொளுது போனா ஒரே பிரச்சனதான். அதக் கொண்டாந்து ஒம்ம காலடியில கொட்டுவாங்க. நீரும் தீத்துவைக்க கெளம்பிடுவீரு. இந்தமாரி சல்லிசான சோலிக்கெல்லாம் சடைச்சிக்கிட்டு கெளம்புறது எனக்கு சுத்தமா புடிக்கல. நமக்குன்னு ஒரு கவுரத இருக்குல்ல…..”
” ஆமாமா…..பெரிய கவுரத…..மலக்காட்டு காவக்காரன்மாரி குத்தவச்சி ஒக்காந்துருக்கோம். இந்த கவுரத போறாதா…..”
குதிரை சட்டென வாயை மூடிக்கொண்டது. குதிரைக்கு எப்போதும் பேசிக்கொண்டேயிருக்கவேண்டும். கருப்பிடம் அது சலசலத்தபடியே இருக்கும். அவர் செல்லமாய் அதைக் கடிந்து கொள்ளும்போது இருவருக்குமிடையிலான நெருக்கம் கூடிப்போனது போல அதற்கு தோன்றும்.
பேசாத நேரங்களில் அரிவாள் பிடித்து சிவந்து போன அவருடைய விரல்களைப் பற்றியோ, பிராது கொடுக்க வந்தவர்களின் கண்ணீரைக் கண்டு அவர் இளகிப் போவதைப் பற்றியோ அது எண்ணிக்கொண்டிருக்கும்.
காத்தாயி புருசன் திருந்தி ஒழுக்கமான வாழ்வு வாழ்கிறானென்று ஊரே பேசிக்கொண்டது.
” எல்லாம் கருப்போட மகிம……”
காத்தாயி சொல்லி, சொல்லி பரவசப்பட்டுப்போனாள். கருப்புக்கு படையல் போட்டு தன் நன்றிக்கடனை தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று உள்ளே ஒரு தீர்மானம் எழுந்தது. உடனே பச்சமுத்து சோசியரிடம் நல்லநாள் பார்க்க சொல்லிவிட்டாள். அவரும் வெள்ளிக்கிழமையை தோதான நாளாக குறித்துக் கொடுத்தார்.
வெள்ளிக்கிழமை கருப்பு கோயில் அமர்க்களப்பட்டது. புல் மண்டிய தரை செதுக்கி சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் தெளித்து பெரிதாக கோலம் போடப்பட்டது. ஆடு, கோழி, காடை, கௌதாரி வகையறாக்கள் பதார்த்தங்களாகி வட்டாக்களில் வந்திறங்கின.
உறவுக்காரபெண்களுக்கு மத்தியில் காத்தாயி தனியாகத் தெரிந்தாள். அழுத்தமான சிவப்பு நிறத்தில் பச்சைக் கரையிட்ட பாலியஸ்டர் பட்டு கட்டி, பளபளவென்று கற்கள் பதித்த கவரிங் அட்டிகை போட்டிருந்தாள்.
இருளாண்டி பம்பரமாக சுழன்று கொண்டிருந்தார். கோயில் பூசாரி அவர். அவருக்கு நிறைய வேலைகள் இருந்தன அல்லது இருந்ததுபோல் காட்டிக்கொண்டார்.
” மணியாவுது பாருங்க. பொம்பளைங்கள வுட்டா பேசிக்கிட்டேயிருப்பீங்க. எலையப் போட்டு நாலு பொம்பளைங்க வந்து பரிமாறுங்க. சாம்புராணி தயாராச்சா…..?”
அவர் அந்தப்பக்கம் குரல் கொடுக்க, கூட்டத்திலிருந்து உய் என்ற சத்தம் கேட்டது. ஆளாளுக்குபப் பதறி விலக, காத்தாயி புருசன் முறுக்கிக்கொண்டு பாய்ந்தோடி வந்தான். இலக்கு நோக்கிப் பாயும் அம்பு போல அப்படியொரு பாய்ச்சல். காற்றை கிழித்து வந்த அந்த கெச்சலான உருவம் கருப்பு சிலைக்கு முன்பு வந்து பிரேக் அடித்தது போல் நின்றது.
” சாமியோவ்……”
காத்தாயி அவன் காலில் விழுந்தாள்.
” உஸ்……..உஸ்……..”
அவன் நிற்கமுடியாமல் முன்னும், பின்னுமாக குலுங்கினான். சனம் வாய் பொத்தி நின்றிருந்தது.
” என்னா வேணும் ஒனக்கு……எதுக்கு இப்ப வந்து எறங்கியிருக்க….?”
இருளாண்டி சத்தமாக கேட்க, அவன் உருட்டி விழித்தான். தலையை பம்பரம் போல சுற்றினான். கால்கள் எம்பி, எம்பி குதித்தன.
” அந்தாள இருக்கே பீக்காடு. அதுலருந்து வர்ற நாத்தத்த பொறுத்துக்க சொன்னீங்களேடா…..அதுக்கு எனக்கு சம்மதம்டா…..”
” சரி, அதுக்கு என்னா இப்ப……..?”
” என்னாடா இப்புடி கேக்குற…..இந்தூர்ல எனக்குன்னு ஒரு கவுரத இருக்கா, இல்லியா……?”
” சத்தியமா இருக்கு சாமி. நீதான் எங்க ஊரக் காக்குற தெய்வம். ஒன்னைய மதிக்காமலயா படையல் போடுறோம்.”
” அப்புடின்னா மருவாதியா எங்கூட்டாளிக்கும் அதே கவுரதயக் குடுங்கடா. அதுல பாரபச்சம் பாக்கக்கூடாது. பாத்தீங்கன்னா நான் ஊரவுட்டு கெளம்பிருவேன். என்னா, குடுப்பீங்களா…..?”
” சத்தியமா குடுக்குறோம்.”
இருளாண்டி தலையாட்டினார்.
” இனிமே நான் அந்த பீக்காட்டப் பத்தி பேசமாட்டேன். அது விசயமா யார்மேலயும் எறங்க மாட்டேன். அதேமாரி நீங்களும் குடுத்த வாக்க காப்பாத்தணும். சூடத்த அணைச்சி சத்தியம் பண்ணுங்க.”
ஒவ்வொருவராய் வந்து சத்தியம் செய்தனர்.
” வர்ற பவுர்ணமிக்குள்ள மிச்சமிருக்க ஊர்க்காரன் அத்தினிபேரும் வந்து சத்தியம் பண்ணனும். “
இருளாண்டி உரக்க சொல்ல, காத்தாயி புருசன் மயங்கி சரிந்தான். தலைவாழை இலை வெட்ட ஆள் கிளம்பியது. குதிரை பேசாமல் நின்றிருந்தது.