சுற்றி இருந்து தங்கைகளும் கொழுந்திகளும் என் முகத்தில் விதம் விதமாக அலங்கார முயற்சிகளைச் செய்துகொண்டிருந்தனர். விடிந்தால் திருமணம். முட்டை மஞ்சள்கருவை பாலில் அடித்துக் கலக்கி அதில் வாழைப்பழத் தோலைப் போட்டு அரைத்து வந்து என் முகத்தில் பூசிவிட்டாள் பெரிய கொழுந்தி.
“ஏட்டி, ஏற்கெனவே நா தாடி எடுத்த கடுப்புல இருக்கேன்…பாத்துப் பண்ணுங்கோ…பொறவு காலைல எம் மூஞ்சியப் பாத்து பத்மா மயங்கி விழுந்துறப் போறா…”
“சர்ணத்தான், செம்ம சீனா இருக்கும்லா…மைனி பிரக்னண்டானு யாராம் கேக்கப் போறா…” என்று சொல்லிச் சிரித்தாள் சின்னக் கொழுந்தி.
“ஆமாட்டி..இப்ப அது மட்டுந்தா கொற கேட்டியா? இந்தக் கல்யாணம் நடக்க முன்னாடி எனக்கு வெள்ளமுடியே வந்திருக்கும்…மெதுவாப் பேசு..எங்கம்ம காதுல விழுந்துறாம…”
“இன்னா, அத்தய கூட்டிட்டு வாறேன்..” என்று என் கையில் கிள்ளிவிட்டு ஓடினாள்.
ஃபோன் அடிக்க சின்ன தங்கை எடுத்து, “எண்ணே, மைனிதா பேசுகா…” என்று என்னிடம் நீட்டினாள்.
“எட்டி, இந்த ஃபேசியல் காயட்டும், மூஞ்சியக் கழுவிட்டு கூப்பிடுகேன்னு சொல்லு..”
“எண்ணே..பேசுண்ணே, மைனி கொரல் செரியில்ல…”
கண்களைத் துடைத்துவிட்டு ஃபோனை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன்.
“என்னம்மோ கல்யாணப் பொண்ணு…ஒறக்கம் வரல்லயோ?”
மறுமுனையில் விசும்பல் சத்தம்தான் கேட்டது.
“எட்டி, என்னாச்சி? எதுக்கு அழுக?”
சத்தமாக அழுதவாறு, “எனக்குன்னுதான் எல்லாம் நடக்கும்…நீங்க நல்ல சந்தோசமா இருங்கப்பா..எனக்கு கல்யாணமும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்…நா எங்கயாம் போறேன்….” என்று சொன்னாள் பத்மா.
“எட்டி, என்னன்னு சொன்னாதான புரியும்..நீ பாட்டுக்குப் பொலம்புனா நா என்ன பண்ண?”
“ஆமா…நா தா பொலம்புகேன்…எந் தலையெழுத்து அப்பிடி..ஒங்களுக்கென்ன, ஜாலியா மேக் அப் போடுங்க…சுத்தி கொழுந்திமாரு இருக்கால்லா….” அழுகை இன்னும் நின்றபாடில்லை.
“மொதல்ல அழுகைய நிறுத்து நீ..என்ன நடக்கு அங்க? விசயத்தச் சொல்லுட்டி…”
“இந்த ஆளு வந்து ஓரே பிரச்சின…தம்பியும் மாமாவும் அவரப் புடிச்சி அடிச்சிட்டாங்க…அவரு கல்யாணம் எப்பிடி நடக்கு பாப்பம்னு கத்திட்டு போறாரு…குடிச்சிட்டு ஒரு மூலைல மொடங்கிக் கெடக்கவும் மாட்டுக்காரு…”
“மறுபடியும் தொடங்கிட்டாரா? இப்ப என்ன பண்ணாரு? இந்த ஆளுக்கு சும்மா கெடக்க முடியாதாட்டி?”
**
ஒரு மாதம் முன்பு திருமண அழைப்பிதழ் தயாராகி வந்த நாளன்று சாமி படத்தின் முன் வைத்து கும்பிட்டு முதல் பத்திரிக்கையை எடுத்து தன் தாத்தாவிடம் கொடுத்து ஆசி வாங்கினாள் பத்மா. அத்தைமார், சித்திமார் என எல்லோரும் பத்திரிக்கையைப் பார்த்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். வழக்கம்போல முழு போதையிலிருந்த பத்மாவின் அப்பா நடுவீட்டில் இருந்து சலம்பிக் கொண்டிருந்திருக்கிறார்.
பத்மா சென்று பத்திரிக்கையை அவரிடம் நீட்ட, “போயிரு தள்ளி…பிச்சக்காரவுள்ள…பத்திரிக்க மயிரு…எவம்ட்டி நடத்துகான் கல்யாணத்த? பெத்த அப்பம் பேர ஒரு ஓரத்துல போடுங்கோ…நல்ல குடும்பம்…மாமன், பெரிய மாமன்….அவம்லா நடத்துகானாம்…..நடத்துங்கோ…எல்லாம் ஒங்க விருப்பப்படி நடக்கட்டும்…கல்யாணம் மயிரு கல்யாணம்…” என்று சொல்லி பத்திரிக்கையை தூக்கி எறிந்தார்.
சின்ன சித்தி கோவத்தில், “இங்கண கெடந்து வாய்ச்சவடால் அடிச்சிட்டுக் கெடக்கப் படாது…பெத்தப் பிள்ளக்கி கல்யாணம் பண்ணி வைக்க வக்கில்ல…வாயி…நீரெல்லாம் ஒரு மனிசனா? அந்தப் பிள்ள தனி ஆளா நின்னு கடன வாங்கி எல்லாஞ் செய்யா…நீரு குடிச்சிட்டுக் கெடயும்…எங்கயாம் போயி விழக் கூடாதா வோய்?” என்று சொல்லி பத்மாவை உள்ளே அனுப்பினார்.
“ஆமாம்மா..போட்டி, ஒங்கப்பன் மொதல்லல்லா குடிக்கேன்..வந்துட்டா வாயி மயிரக் காட்டதுக்கு…ஒங்க எல்லாரயும் பத்தி நாஞ் சொன்னன்னா நாறிரும் பாத்துக்க…” என்று தள்ளாடிக் கொண்டே எழுந்தார்.
தாத்தா எதையும் காதில் வாங்காத மாதிரி வீட்டை விட்டு வெளியே செல்ல, “எங்க குடும்பத்தப் பத்திப் பேச ஒமக்கு என்ன வோய் அருகத இருக்கு? வேலவெட்டிக்குப் போயி குடும்பத்தக் காப்பாத்த வக்கில்ல…இருந்த சொத்தையெல்லாம் குடிச்சே அழிச்சாச்சி..அந்தப் பிள்ளக்கி ஒரு பொட்டு தங்கம் வாங்கிப் போட்டுருப்பீரா வோய்?..அந்தப் பிள்ளக்கின்னு என்னத்த இருக்கு, தாத்தாக்க வீடு ஒண்ணு தான் மிச்சம், அதயும் வித்து குடிச்சிருவீரு…..வந்துட்டாரு நாந்தா ஆம்பளன்னு…சீ…” என்று சித்தி பொரிந்து தள்ளிவிட்டாள்.
“நீ நிறுத்துட்டி…பல்ல அடிச்சி ஒடச்சிருவம் பாத்துக்க…” என்று சித்தியை அடிக்கக் கையை ஓங்கினார் பத்மாவின் அப்பா.
அந்த நேரத்தில் வீட்டில் நுழைந்த பத்மாவின் தாய்மாமா இடையில் புகுந்து அவரைத் தடுத்ததில் அப்பா தடுமாறிக் கீழே விழுந்தார்.
“லேய், எம்மேலயே கைய வைக்கியால தாயோளி..பிச்சக்காரப் பயல…” என்று மாமாவை அடிக்கப் பாய்ந்தார்.
மாமா அவரைச் சட்டையைப் பிடித்துத் தரதரவென இழுத்து வெளியே தள்ளி, “ஓடிரு நாய…ரொம்ப ஓவராத்தான் போய்ட்ருக்க…இங்க கெடந்து சலம்பிட்டுக் கெடக்கப் படாது. பொறவு வேற மாறி ஆயிரும்…கொன்னுப் போடுவம் பாத்துக்க..” என்று கத்தினார்.
“கொல்லுவ ல கொல்லுவ..நீ பெரிய மத்தவம்லா…எங்கம்மைட்ட வாங்கித் தின்னப் பயக்களுக்கு வந்த பவுசு….எல்லாம் இந்தச் செறுக்கிவுள்ளயோ குடுத்த எடம்…மாப்ளைக்கி சோறு போடக் கழியல்ல, அப்பன் வீட்ல கெடந்து நக்கிட்டுக் கெடக்கா…நாளைக்கி சொத்துக்கு எங் காலப் புடிக்கத்தாம்ட்டி வரணும்…..பாக்கேன், எப்பிடி இந்தக் கல்யாணம் நடக்குன்னு…” என்று சொல்லி மாமாவைத் தள்ளிவிட்டு உள்ளே வந்தவர் பூஜையில் வைத்திருந்த குத்துவிளக்கின் மேலாக விழுந்தார். கையில் கிடைத்த திருமணப் பத்திரிக்கைகளைக் கொத்தாக அள்ளியவர் அவற்றை இரண்டாகக் கிழித்து வீடு முழுவதும் தூக்கி எறிந்தார். அதன் பிறகு நடந்த அடிதடியில் சில நாட்களுக்குத் தாத்தா வீட்டுப்பக்கம் அவர் எட்டிப் பார்க்கவேயில்லை.
**
அம்மா வந்து, “லேய், போயி படு…காலைல நேரத்தயே எந்திக்காண்டாமா? ஒரே ஃபோனு…” என்றார்.
ஐந்து நிமிடம் என அம்மாவிடம் சைகை காட்டி விட்டு மொட்டை மாடிக்கு நடந்தேன்.
பத்மா அழுதுகொண்டே தொடர்ந்தாள்.
“வாய வச்சிட்டு சும்மாக் கெடக்க மாட்டுக்காரு..கல்யாண மண்டபத்துல போயி குடிச்சிட்டு எனக்கு இப்பவே கூட்டாஞ்சோறு வேணும்னு சண்ட போட்டுருக்காரு…சமையல்காரன் கொஞ்சம் இரிங்க அண்ணாச்சி..இப்பதான் அடுப்புல போட்டுருக்கோம்னு சொன்னானாம்…அதுக்கு அவஞ் சட்டையப் புடிச்சித் தள்ளி விட்டு அவனுக்கு மூக்கு மண்டைல ரத்தம்..தம்பி போயி இவர தடுத்ததுக்கு அவன அடிச்சிருக்காரு…”
“செரிதான்…பொறவு, என்னாச்சி?”
“ஆமா..நா சங்கடப்பட்டு அழுதுட்ருக்கேன்…நீங்க கத கேக்கீங்களா?” என்று சிணுங்கினாள்.
“எட்டி, சும்மா அழுதுட்ருக்காத…பொறவு நாளக்கி மூஞ்சி வீங்கி இருக்கும் பாத்துக்கோ..கல்யாண ஆல்பம் காமெடி ஆயிராம..”
“என் சங்கடம் ஒங்களுக்கு வெளையாட்டா இருக்கு, என்னா? ஒராளு சப்போர்ட் இல்லாம எங் கல்யாணத்துக்கு நானே எல்லாஞ் செய்ய வேண்டி இருக்கு…ஒரு நாதஸ்வரம் அரேஞ்ஜ் பண்ணக்கூட யாரும் இல்ல, நானே போன் பண்ணி பேசிருக்கேன்….எல்லாரும் நல்லா சுயநலம் புடிச்ச ஆளுங்கோ…பேருக்குதான் கூட்டுக் குடும்பம்….எல்லாருக்கும் அவவோ ஆளுங்க தான் முக்கியம்…இந்தாளு அவரு வீட்ட விப்பாருன்னு நம்பி அஞ்சு லட்சம் கடனும் வாங்கியாச்சி…எல்லாம் ஒங்களாலத்தான்…பேசாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிருக்கலாம்…இப்ப சண்ட போட்டுட்டு இங்க வந்து, ‘எப்பிடி என்ட்டருந்து பைசா வாங்குகியோ பாக்கம்ட்டின்னு’ சொல்லிட்டுப் போய்ட்டாரு…மறுபடி குடிச்சிட்டு மண்டபத்துக்குப் போயி சமையல் காய்கறி மூட்டைய எடுத்து சாக்கடைல போட்டுருக்காரு…மாமாவும் தம்பியும் புடிச்சி நல்லா அடிச்சிட்டாங்க…மண்டபத்து வாசல்ல கெடந்து இந்தாளு ஒரே ஊளையாம்….”
“செரி விடு…மட்டை ஆய்ருவாரு..காலைல பாத்துக்கலாம்…நீ போய் தூங்குட்டி…எதாஞ் சாப்ட்டியா?”
“இல்ல…நீங்க நாராஜ அண்ணன்ட்ட கொஞ்சம் போயி பாக்கச் சொல்லுங்க…இவர எங்கயாம் கூட்டிட்டுப் போயி அடச்சிப் போடச் சொல்லுங்க…”
“ம்ம்…செரி..நா கூப்பிடுகேன்…நீ எதும் யோசிக்காம கொஞ்சம் ரெஸ்ட் எடு…எனக்கு வேற இன்னும் ரெண்டு ரவுண்ட் ஃபேசியல் இருக்கு…கொழுந்திமார் பாசம் தாங்க முடியல….”
**
ஒரு மணி நேரத்தில் நாகராஜன் அழைத்தான். “மக்ளே, இங்க நல்ல ஒரு சீன் கேட்டியா..நீ மிஸ் பண்ணிட்டல…”
“என்ன மக்கா? என்னாச்சி? அந்தாளப் பாத்தியா?”
“அதத்தாஞ் சொல்லுகேன்..நடு ரோட்டுல அவுத்துப் போட்டுட்டு நின்னு போற வர பஸ்ஸயெல்லாம் செறுக்காரு மக்கா..ஸ்ட்ரைக் பண்ணுகாராம்…செம காமெடி கேட்டியா…இன்னா, இப்பதான் பி.ஸி. வந்து ரெண்டு அற விட்டுட்டுப் போறான்…எந்திச்சி வேட்டியச் சுத்திட்டுப் போறாரு…போத தெளிஞ்சிட்டுப் போல..”
“புடிச்சி உள்ள வச்சாமில்லய…கல்யாணத்துக்கு வந்து நாளக்கி எதாம் பிரச்சின பண்ணாருன்னு வையி..பொறவு என்ட்ட வாங்குவாரு…செரி மக்கா, நீ ஒரு எட்டு மண்டபத்துக்குப் போயி எல்லாம் ஓகேவான்னு பாரு என்ன?”
முட்டை ஃபேசியல் முடித்து அடுத்து மருதாணியுடன் என்னவெல்லாமோ கலந்து அடுத்த சுற்றை ஆரம்பித்தாள் சின்ன தங்கை. கொழுந்திக்கு முகத்தைக் கொடுத்துவிட்டு இவளிடம் கொடுக்காமல் நான் தப்பித்துவிட முடியுமா? அடுத்து மூன்றாம் சுற்றிற்காக வெந்நீர் வைத்துக் கொண்டிருந்தாள் பெரியவள்.
பத்மாவிடம் இருந்து வழக்கம்போல பத்தி பத்தியாக மெசேஜ்கள் வந்துகொண்டிருந்தன. எடுத்துப் பார்க்கவில்லையென்றால் உறங்காமல் காத்துக் கிடப்பாள். தங்கையிடம் எல்லா மெசேஜ்களுக்கும் ‘ம்ம்’ என்று அனுப்பச் சொன்னேன். கடைசியாக, ‘நாளை சந்திப்போம் பொண்டாட்டி’ என்று அனுப்பிவிட்டு, முகத்தைக் கழுவிப் பார்த்தால் குமட்டிக்கொண்டு வந்தது. முகம் கருத்துப்போய் கண்களும் இமைகளும் துருத்திக்கொண்டு இருந்தன. தங்கைகளும் கொழுந்திகளும் ஆங்காங்கே சென்று ஒளிந்துகொள்ள, நல்ல சுத்த சந்தனத்தை எடுத்து முகமெல்லாம் பூசிக்கொண்டு படுத்தேன்.
சிறிது நேரத்தில் நாகராஜன் மீண்டும் அழைத்தான்.
“மக்கா, சின்ன பிள்ளேல நல்லா அரிசி தின்னியோ, இங்க செம மழ பாத்துக்கோ…இந்தப் பயக்க வேற சாயங்காலமே வாழமரத்தக் கெட்டிட்டுப் போயிருக்கானுகோ…இந்தா மழைல பொளந்துட்டு நிக்கி…”
“ரைட்டு….இப்ப ஒண்ணுஞ் செய்யாண்டாம் கேட்டியா…விடு, காலைல பாத்துக்கலாம்…ஆமா, டெக்கரேஷன்காரன் வந்தானா மக்கா?”
“ஆமா மக்ளே…சூப்பரா பண்ணிருக்கான்…”
“டேய்….எம் பொண்டாட்டி பிள்ளையார் டிசைன் வைக்கச் சொன்னால்லா டேய்? வச்சானா?”
“வச்சாச்சி..வச்சாச்சி…அலையானுகோ…பொண்டாட்டி, மண்ணாங்கட்டின்னு…கல்யாணத்துக்கு முன்னாடியே இப்பிடி ஆய்ட்டியே மக்கா?”
“சொல்லுவ ல, சொல்லுவ…எல்லாப் பயக்களும் நல்லா டயலாக் அடிப்பானுகோ…வீட்ல வந்து பாத்தாதான் தெரியும்…முந்தானய கைல சுத்திட்டுத் திரியது..”
“ரைட்டு விடு மக்கா…நீ தூங்கு…கடைசி தூக்கம்லா இன்னிக்கி..ஹிஹி..”
அதிகாலை நான்கு மணிக்கே எழுப்பி விட்டுவிட்டார்கள். ஐந்து மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு. பலமுறை பயிற்சி செய்து ஒருவாறாக வேட்டி கட்டப் பழகியிருந்தேன். அதன் ஒரு முனையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு நான் நடந்ததைப் பின்னாட்களில் திருமண வீடியோவில் பார்க்கச் சகிக்கவில்லை. முந்தைய இரவின் அலங்காரங்களின் விளைவாக, பார்த்தவர்கள் எல்லாம் ‘யாம் மக்கா வாடிப் போயிருக்க?’ என்று விசாரிக்க, ‘அது, ஒறக்கம் இல்லல்லா..’ என்று சமாளித்துக் காரில் ஏறி உட்கார்ந்தால் இருபுறமும் பத்மாவின் அத்தைமார் நெருக்கி உட்கார ஓட்டுநர் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்.
மண்டப வாசலில் கார் நிற்க, இறங்கிய எனக்கு அடுத்த அதிர்ச்சி. ஒரு நான்கு திருமண வாழ்த்து தட்டிகள். எனது முகத்தை வைத்து சிங்கமாகவும், அமெரிக்க அதிபராகவும், ஸ்ரீ விஷ்ணுவாகவும்……படித்துப் படித்துச் சொல்லியும்…..
தலையில் அடித்துக்கொண்டு நான் நிற்க, ஒரு மரக்குத்தியில் ஏறி நிற்கச் சொன்னார்கள். அம்மா என்னை வேட்டியைத் தூக்கிப் பிடித்துக் கொள்ளச் சொல்ல, பத்மாவின் தம்பியும் அத்தையுமாக என் கால்களைக் கழுவினார்கள். எப்போதுமே என்னை முறைத்துக்கொண்டிருக்கும் தம்பி அப்போது இலேசாகச் சிரித்து ஒரு தங்க மோதிரத்தை என் விரலில் போட்டுவிட்டான். மணமகன் அறையில் சென்று இருக்கச் சொன்னார்கள். பத்மாவின் தம்பியை என்னுடனேயே இருந்து கவனித்துக்கொள்ளச் சொல்லிவிட்டுச் சென்றார்கள். இன்னும் இரண்டு மணிநேரம் இவனுடன் என்ன செய்வது? அவனைப் போகச் சொல்லிவிட்டு, வெளியூரிலிருந்து வந்திருந்த நண்பர்கள் ஒவ்வொருவருக்காக அழைத்து விசாரிக்க ஆரம்பித்தேன். பசி வேறு வயிற்றைப் பிரட்டியது. முகூர்த்தம் முடியும் வரை விரதம் இருக்க வேண்டுமாம். ஆக்குப்பிறையில் இருந்து நல்ல உளுந்தவடை வாசம் வேறு..கேண்டிட் போட்டோக்ராபி புதிதாக வந்திருந்த காலம். என் நண்பன் ஒருவன் எனக்காக ஆல்பம் செய்து தருவதாக ஆளனுப்பியிருந்தான். பலவிதங்களில் நின்றும் நடந்தும் புகைப்படங்கள் எடுத்துவிட்டு மணமகள் அறைப்பக்கம் நடந்தேன்.
மூடியிருந்த கதவில் தட்டி, “பொண்ணு ரெடியா?” என்றேன்.
சட்டென கதவு திறக்க, முகம் முழுக்க நான்கைந்து சுற்றுகள் வண்ணப்பூச்சுகளுடன் சிவப்பு நிற உதட்டுச் சாயத்தில் நின்றவளைப் பார்த்ததும் எனக்குச் சிரிப்பு பொறுக்கவில்லை. எனது முகபாவனையைப் பார்க்க ஆர்வத்தோடு வந்தவளின் முகம் சட்டென வாடிவிட்டது.
“அட, நா சும்மாதான் சிரிச்சம்மா…அழுதுறாத…ஆனா, கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு…நீ ஒண்ணு பண்ணு, இந்த லிப்ஸ்டிக்க அழிச்சிட்டு முகத்துல கோட்டிங்க கொஞ்சம் கொரச்சிறு..எங் கொழுந்திமாரு ஏற்கெனவே என்னக் கொமைப்பாளுகோ…இப்பிடி ஒன்னப் பாத்தா அவ்வளோதான்…”
“ம்ம்ம்….எதாஞ் சாப்டீங்களா? பசிக்கும்லா?” என்று கேட்டாள் பத்மா.
“அதாம் வெரதம் இருக்கணுமாம்லா? நைஸா ரெண்டு உளுந்தவடைய தள்ளிறலாமான்னு பாக்கேன்…ஆமா, என்ன ஆனாரு ஒங்கப்பா?”
“தெரில…ராத்திரி போனவருதான்…ஆளக் காணும்…ஃபோனும் ஆஃப் பண்ணி வச்சிருக்காரு…வந்து என்ன பிரச்சின பண்ணப் போறாரோ? மாமா வேற பயங்கர கோவத்துல இருக்காங்க…”
“ம்ம்..”
முகூர்த்தப் பூஜைகள் தொடங்கின. மாப்பிள்ளை அறிமுகம் செய்து மணவறையில் உட்கார வைத்து, சிலபல மந்திரங்களைச் சொல்லச் செய்து, நவதானியங்களைத் தாய்மாமா என் கைகளில் போட நான் அவற்றை ஒன்பது சிறு மண்குவளைகளில் போட்டேன். மணமகளும் இதே மாதிரி செய்வாள். திருமணம் முடிந்த ஏழு நாட்களுக்குப் பிறகு நன்றாக முளைத்த அந்தத் தானியங்களை எடுத்துச் சென்று ஓடும் ஆற்றில் விடுவது மரபு. பின், தாய் மாமாவுக்கும் எனக்கும் காப்புக்கட்டி விட்டார் ஐயர். தாய்மாமாவிற்கு என் மரியாதையாக ஒரு தாம்பாளத்தில் வைத்து புது வேட்டி சட்டை கொடுக்க, அவர் எனக்கு முகூர்த்த வேட்டி சட்டையைக் கொடுத்து ஆசீர்வாதம் செய்தார். மணமகன் அறைக்குச் சென்று தயாராகி வர நான் செல்ல, மணமகள் அறிமுகம் ஆரம்பித்தது.
அவளிடமிருந்து ஒரு மெசேஜ் வந்திருந்தது. “என்ன சார், பழைய கேர்ள் பிரண்ட்ஸ் நெறைய வந்திருக்காங்களோ..எவட்டயாம் வழிஞ்சிப் பாருங்க…பொறவு இருக்கு!!!”
நான் இரண்டு மூன்று ‘ம், ஓகே’ அனுப்பிவிட்டுத் தயாரானேன்.
அனைவரையும் வணங்கி தாய்மாமாவுடன் காப்புக் கட்டிக் கொண்டாள் பத்மா. சுற்றி நின்று என் தங்கைகளும் கொழுந்திகளும் அவளைக் கிண்டல் செய்துகொண்டிருக்க, முகூர்த்த வேட்டி சட்டையில் புதுமாப்பிள்ளையாக நான் வந்து மணமேடையில் ஏறி பெண்ணின் அருகே உட்கார்ந்தேன். பெண்ணிற்கான முகூர்த்தப் பட்டுத் தாம்பாளத்தை நான் அவளிடம் கொடுக்க, என் காலைத் தொட்டு வணங்கி அதைப் பெற்று தயாராகி வரக் கிளம்பினாள்.
நீண்ட வரிசையில் வந்த தாத்தாமார், மாமாமார், சித்தப்பாமார், அண்ணன்மார், அத்தான்மார் எல்லோரும் தங்கள் திருமண வாழ்வின் அனுபவத் தகுதியோடும் உரிமையோடும் வண்ண வண்ண ப்ளவுஸ் துணிகளைச் சுருட்டி என் தலையில் உருமால் கட்டி விட்டுத் திருநீறு பூசி என்னைத் திருமணத்திற்குத் தகுதியானவன்தான் என பெருமைப் படுத்தி விட, நெற்றி முழுவதும் நிரம்பி வழிந்த திருநீற்றைத் துடைத்து விட்டாள் சின்னக் கொழுந்தி.
பன்னிரண்டு வருடக் காதல். பத்மாவுக்கோ அந்த வார்த்தையைக் கூடச் சொல்லக் கூடாது. எதோ கடவுளே ஏற்பாடு செய்த ஒரு பந்தமென்ற நினைப்புதான் அவளுக்கு. ஏகப்பட்ட மாமாமார், சித்திமார், பெரியம்மாமார் என அத்தனை குடும்பங்களையும் அவள் சமாளிக்க, எனது அண்ணன் திருமணம் முடிந்ததும் ஒருவாறாக என் அப்பா, அம்மாவும் சம்மதிக்க….என்ன என்ன போராட்டங்கள்…இடையில் குடும்பச்சுமையேற்று பல வேலைகளிலும் அவள் சமாளிக்க, அவள் அப்பா அம்மாவின் சண்டைகள் முடிவிலாது நீண்டு சென்று தற்காலிகப் பிரிவில் நிற்க….இதையெல்லாம் தாண்டி வந்த இந்தப் பெண்ணை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்கிற ஒரு ஆழ்ந்த பிடிப்பு…இந்த நீண்ட வனவாசம் இன்றோடு முடிந்துவிடப் போகிறது என்று தோன்ற, குங்கும நிற முகூர்த்தப் பட்டில் வந்து கவனமாக மணமேடை ஏறினாள் பத்மா. நல்ல வேளை, உயரமான மணமேடையில் கால்தூக்கி ஏறுவதற்காக ஒரு பலகையைப் போடச் சொல்லியிருந்தேன். இல்லையென்றால் அவளை நான்தான் கைபிடித்துத் தூக்கியிருக்க வேண்டும்.
பெரியவர்கள் ஆசீர்வாதத்திற்காக தாலித்தாம்பாளத்தை அனுப்பினார் ஐயர். எல்லோரது ஆசியுடனும் வந்த தாலிக் கயிற்றைப் பார்த்ததும் ஒரு சிறு படபடப்பு வரத்தான் செய்தது. பத்மா வேறு ஏற்கெனவே மனதிற்குள் மந்திரங்களை முணுமுணுக்க ஆரம்பித்திருந்தாள். ஐயர் தாலியைத் தன் இரு கைகளில் எடுத்து என்னிடம் நீட்டினார். தாலிப்பொட்டில் இருந்த பிள்ளையாரும் பூவும் என்னைப் பார்த்து இருப்பதைப் பார்த்துச் சந்தேகத்தில் ஐயரிடம், “திருப்பில்லா? திருப்பில்லா?” என்று கேட்டேன்.
அவர் அதைக் கவனிக்காமல் ‘கெட்டி மேளம், கெட்டி மேளம்..’ என்று கத்த, தாலியை அப்படியே வாங்கி பத்மாவின் முகத்தின் முன் நீட்டினேன். அவளும், கண்களால் என்னிடம் சைகை காட்டி, ‘திருப்பி, திருப்பி’ என்றாள். குழப்பத்தில் இடது கை அவளது கழுத்தின் பின்புறமாகச் செல்வதற்குப் பதிலாக முன்புறம் செல்ல, வலது கை பின்புறம் செல்ல, எதோ மல்யுத்தத்தில் எதிரியின் கழுத்தை வளைத்து முன்னால் தூக்கி அடிப்பதைப் போல அவளது கழுத்தை வளைத்து ஒருவழியாக இரண்டு முடிச்சுகளைப் போட, என் கைக்கடிகாரத்தின் பட்டியிலிருந்த கொக்கி அவளது கழுத்தில் குத்தியிழுக்க, அவள் ‘ஸ்ஸ்ஸ்..’ என்று சத்தமிட, இறுதி முடிச்சை என் பெரிய தங்கை போட….பத்மாவின் அழுகையைப் பார்த்த என் தோழிகளும் கொழுந்திகளும் அவளைச் சீண்ட கண்ணீரோடு வெட்கிச் சிரித்தாள்.
இன்றைக்கும் அந்த மல்யுத்தப் புகைப்படத்தைப் பார்த்து, “நல்லா வாயி மட்டும் காட்டுங்க..ஒழுங்கா தாலி கட்டத் தெரியல…பெரிய மேனேஜர்…” என்று என்னைக் கிண்டல் செய்வாள் பத்மா.
தாலி கட்டியதும் மணப்பெண்ணையும் மணமகனையும் கைகளைக் கோர்த்து இணைத்து வைக்கும் சடங்கிற்கான நேரம் வந்தபோதுதான் பத்மாவின் அப்பாவின் ஞாபகம் வந்தது. திருமண மண்டபத்தில் எங்கு தேடியும் அவரைக் காணவில்லை. கடைசியில் அந்த பாக்கியம் அவளது தாத்தாவிற்குக் கிடைத்தது. வழக்கமாக ஆணின் கையின் மேல் பெண்ணின் கை இருக்குமாறு செய்யும் சடங்கு, ஆனால், தற்செயலாக பத்மாவின் கையில் என் கையை வைத்து அத்துடன் நூற்றியொரு ரூபாய் வைத்து ஒரு சிவப்புத் துணியால் சுற்றிக் கட்டி “பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க..வாழ்க வளமுடன்..” என்று வாழ்த்தி திருநீறு பூசிவிட்டார் தாத்தா. பத்மாவுக்கு அழுகை பொத்துக்கொண்டு வர, பின்னாலிருந்து என் தங்கை அவளது தோளில் கைவைத்துத் தட்டிக்கொடுத்தாள்.
பின், நெருங்கிய சொந்தங்கள் வந்து அட்சதை போட்டு திருநீறு பூசி விட்டனர்.
அப்படியே எழுந்து சிறுமியர் புடைசூழ மணமேடையை மூன்று முறை சுத்தி வந்து, மணமகன் அறைக்குச் சென்றோம். இருவருக்கும் பாலும் பழமும் பகிர்ந்து கொடுத்து விரதத்தை முடித்து வைத்து சிவப்புத் துணியை அவிழ்த்து விட்டவாறே, “அண்ணே, பைசாவ விட்றாத…மானம் போயிரும்..” என்று ரகசியமாகச் சொன்னாள் என் தங்கை. முடிச்சை அவிழ்க்கும்போது பணம் யார் கையில் இருக்கிறதோ அவர் கையில் தான் குடும்பத்தின் ஆட்சி இருக்குமாம்! துணியை அவிழ்த்துப் பார்த்தபோது நான் பணத்தோடு அவளது கையை இறுக்கிப் பிடித்து வைத்திருந்தேன்.
“கள்ளப்பய…” என்று சொல்லி என்னைக் கிள்ளினாள் என் சித்தி.
மீண்டும் மணமேடை முன்வந்து, அங்கிருந்த அம்மியில் கால்வைத்து அவள் நிற்க நான் குத்தவைத்து அவளது கால்விரலில் வெள்ளி மெட்டிகளைப் போட, சுற்றியிருந்த கொழுந்திகள், “எத்தான், இப்பவே விழுந்துட்டியே….போச்சு போ…” என கிண்டல் செய்தனர். அத்தையொருத்தி எங்களிருவரையும் மேலே பார்த்து அருந்ததி தெரிகிறதா எனக்கேட்க நாங்களும் தலையாட்டி விட்டு எங்களுக்காக போடப்பட்டிருந்த ராஜ சிம்மாசனத்தில் போய் உட்கார்ந்தோம்.
திருமணப் பந்தி ஆரவாரமாகத் தொடங்கியிருந்தது. வாழைக்காய் துவட்டலில் ஆரம்பித்து தயிர் பச்சடி, இஞ்சி கிச்சடி, நார்த்தங்காய் பச்சடி, மாங்காய் கோஸ், அவியல், எரிசேரி என ஏழு கறிவகைகளுடன், நெய்யுடன் சாதம், பருப்பு, பப்படம், பின் சாம்பார், புளிசேரி என சென்று, பின் பருப்புப் பாயாசத்துடன் பப்படத்தையும் வாழைப் பழத்தையும் பிசைந்து வாழையிலை மணத்தோடு உண்டு பால் பாயாசத்தின் மீது போளியைப் போட்டு வழித்துச் சாப்பிட்டு, கடைசியாக பிடி சோறு வாங்கி ரசம், மோருடன் சாப்பிட்டு முன்னிருந்து பின்னாக இலையை மூடி திருப்தியாக ஏப்பம் விட்டு வந்த பெரியவர்கள் மணமேடையில் காத்திருந்த என்னிடமோ, பத்மாவிடமோ பரிசுகளையோ, இரண்டாக மடித்த காகிதக் கவர்களையோ கொடுத்து புகைப்படம் எடுத்துச் சென்றனர்.
திடீரென பயங்கரச் சத்தம். பலர் சேர்ந்து வாக்குவாதம் செய்துகொண்டு பந்தி வைக்கும் இடத்திலிருந்து வெளியே வந்தனர்.
“ஒரு மரியாத வேண்டாமா…ஒண்ணுந் தெரியாத்தப் பயக்கள வச்சிப் பந்தி வெளம்பச் சொன்னா? நாங்க என்ன சாப்பாட்டுக்கு அலந்தா கெடக்கோம்…” என்று கத்தினார் என் பெரியப்பா. நான் சட்டெனக் கீழே இறங்கி அவரருகே சென்று அவரது கையைப் பிடித்தேன்.
“பெரிப்பா…என்னாச்சிப் பெரிப்பா…சமானப் படுங்கோ…நா பாக்கேன்…”
“இல்ல மக்ளே…மரியாத இல்லாத எடத்துல நம்ம இருக்கப்படாது பாத்துக்கோ…சின்னப் பயக்க…மொறச்சுல்லா பாக்கான்…”
பெரியப்பாவின் இலையில் உப்பு வைப்பதற்கு முன் வாழைக்காய் துவட்டலை வைத்துவிட்டான் பத்மாவின் தம்பி ஒருத்தன். அவனது நண்பர்கள் சிலரும் பந்தியில் விளம்பியிருக்கிறார்கள். ஒவ்வொரு கறி வகைகளையும் வைப்பதற்கு ஒரு வரிசைக்கிரமம் உண்டு. அதை மீறி அவியலை இடது புறமும், எரிசேரியை வலது புறமும் வைத்து, நார்த்தங்காய்ப் பச்சடியை வைக்காமலும் விட்டுவிட்டார்கள். பெரியப்பா இலையைத் தூக்கியெறிந்துவிட்டு கத்திவிட்டார்.
இன்னொரு மாமா வேறு இடையில் வந்து, “எனக்கும் ரெண்டாவது அவியல் வச்சாமில்ல…நானும் கூப்பிட்டுப் பாக்கேன்…கேக்காத்த மாதில்லா நிக்கான்..” என்று கோர்த்துவிட்டார்.
ஒருவழியாக அனைவரையும் சமாளித்துப் பத்துப் பந்திகளை முடிப்பதற்குள் எனக்குப் பசியில் மயக்கமே வந்துவிட்டது. நல்லவேளை, கிடைத்த இடைவெளியில் ஒரு கப் பாயாசம் கொண்டுவந்து கொடுத்தான் நாகராஜன்.
மாப்பிள்ளைக்கு தலைவாழை இலை போட்டு மணப்பெண் எல்லா கறிகளையும் விளம்ப, மாப்பிள்ளை சோற்றைப் பருப்புடன் உருட்டி அதற்குள் ஒரு தங்க மோதிரத்தை வைத்து மேலும் உருட்டி தன் முன் மடியேந்தி நிற்கும் மணப்பெண்ணின் மடியிலையில் வைக்க அவள் வந்து அவனருகே அமர்ந்து அதைச் சாப்பிட்டு அந்த மோதிரத்தைத் தன் விரலில் போட்டுக் கொள்வாள்.
உடன்மறுவீட்டிற்குக் கிளம்பிய நேரத்தில் நல்ல போதையில் மணமேடை அருகே வந்து நின்றார் பத்மாவின் அப்பா. பெரியவர்கள் அவரை அழைத்து வந்து அட்சதையை அவர் கையில் கொடுக்க, எங்கள் தலையில் போட்டு திருநீறு பூசி விட்டார். பத்மா அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குமாறு சைகை செய்தாள். நான் அசையாமல் நிற்க அவள் மட்டும் அவரது காலைத் தொட்டு வணங்கினாள். அவர் அப்படியே சென்று ஓரமாக உட்கார்ந்தார்.
நானும் பத்மாவும் தங்கைகளும் காரில் என் வீட்டிற்கு உடன் மறுவீட்டிற்குச் செல்ல, முன் சென்ற அத்தையொருத்தி ஆரத்தி எடுத்து, பத்மாவை நேராக பூஜையறையில் சென்று விளக்கேற்றச் செய்தாள். பின், அடுக்களைக்குச் சென்று புளியையும் உப்பையும் தொட்டுவிட்டு, மீண்டும் பால் பழம் பகிர்ந்துண்டு மண்டபத்திற்குக் கிளம்பினோம்.
சாயங்காலம் வரவேற்பு..மாப்பிள்ளை வீட்டார் செலவு..எல்லா நிகழ்ச்சிகளிலும் நாட்டாமை செய்யும் என் சித்தப்பாதான் என் திருமணத்திலும் பொறுப்பேற்று வரவேற்பு விருந்து ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டார். நண்பர்கள் எல்லோரும் போதையில் மிதந்து ஆட்டம் பாட்டமென ஒரே கலாட்டா..பத்மாவின் அப்பாவும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு குடித்து ஆட்டம் போட்டாராம். சித்தப்பா போய் கொஞ்சம் ஒதுங்கி நின்று ஆடுமாறு கேட்டிருக்கிறார்.
“ஓய்..நீரு தான் அந்த ஸ்ட்ரிக்ட் சித்தப்பாவா ஓய்…ஒத்தக்கி ஒத்த போட்டுப் பாப்பமா ஓய்?” என்று அவரிடம் மல்லுக்கு நின்றிருக்கிறான் ஆத்ம நண்பன் ஒருவன்.
பின், நலுங்கு…முதலில் நானும் பத்மாவும் மாறி மாறி கைகளில் சந்தன, குங்குமம் பூசிவிட்டோம். அடுத்து பூப்பந்து விளையாட்டு…மாறி மாறிப் பூப்பந்தை எறிந்து விளையாடினோம். பின், நலுங்கைக் கொடுத்து உருட்டி விளையாடச் செய்தார்கள். பின், நலுங்கை நான் ஒரு கையால் தரையில் அழுத்திப் பிடிக்க பத்மா இரண்டு கைகளால் அதை இழுத்துப் பறிக்க வேண்டும். நான் விட்டுக் கொடுக்கவில்லை. கூட்டத்தில், “மாப்ள..விடாத..விடாத…அண்ணே, மைனி பாவம்…” என்று குரல்கள்.
அடுத்து கூட்டம் ஆர்ப்பரிக்க, நான்கு பப்படங்களை எடுத்து பத்மா கையில் கொடுத்தார்கள். அவள் எழுந்து அவற்றை என் தலையில் வைத்து மெதுவாக உடைத்து விட்டு வெட்கத்தில் உட்கார்ந்துகொண்டாள். அடுத்து என் முறை, பப்படங்களை தூக்கிப் பிடித்து ஓங்கி அவளது தலையில் அடித்து நொறுக்கினேன். குழந்தைகள், கொழுந்திகள், தங்கைகள், நண்பர்களென எல்லோரும் ஆரவாரம் செய்ய, பத்மா ஓரக்கண்ணால் முறைத்துப் பார்த்தாள்.
அதன் பிறகு நாலாம்நீர் சடங்கு. மணமேடையில் நான் பத்மா தலையிலும் அவள் என் தலையிலும் எண்ணெய் தொட்டு வைக்க, இருவரும் சென்று குளித்து, பத்மா பட்டு மாற்றுப் புடவை கட்டிவர, நான் வேட்டி சட்டையில் வந்து உட்கார மணி இரவு எட்டு. பெண்ணைத் தாரைவார்த்துக் கொடுக்க எல்லோரும் பத்மாவின் தாத்தாவை முன்னிறுத்த, அவர் சென்று அவள் அப்பாவைக் கையைப் பிடித்து இழுத்து வந்தார். பத்மா ஒருமுறை என் முகத்தைப் பார்த்துவிட்டுத் தலை குனிந்தாள்.
மணமேடையில் தடுமாறி ஏறி உட்கார்ந்தார் அப்பா. பனையோலைத் துண்டு ஒன்றை நானும் பத்மாவும் உள்ளங்கைகளில் வைத்திருக்க அதில் நீர் ஊற்றித் தாரை வார்த்துக் கொடுத்தார்.
என் அத்தைமார், “மாப்பிள்ளைக்கி என்ன கொடுப்பீங்க?” என்று கேட்டுச் சிரித்தனர்.
அவர் கம்பீரமாக, “என்ன வேணும்னாலும் குடுத்துருவோம்..” என்றார்.
“அப்பிடிச் சொன்னாப் போறுமா…வெவரமாச் சொல்லுங்க…”
“பால் குடிக்க நூத்தியெட்டுப் பசு தாரேன்…மோர் குடிக்க நாலு எரும தாரேன் …நாளுக்கொரு மூட அரிசி தாரேன்…..போகவரக் காரு தாரேன்..இல்லன்னா, தங்கத்தேரு தாரேன்…” என்று ராகமாகப் பாடினார் அப்பா.
எல்லோரும் சிரிக்க, “எங்க அருமாந்த பையனுக்கு அவ்வளவுதானா? பெரிய சோலில இருக்காம்லா…பாத்துச் சொல்லுங்க..” என்றார் சித்தி.
“அது செரி…அப்ப ஒரு கப்பலும் வாங்கித் தாரேன்..போறுமா….”
மைனி சுருள், அத்தான் சுருள் என நெருங்கிய சொந்தங்கள் சேர்ந்து நின்று சுருள் சிறப்புச்செய்ய, சித்தப்பா எல்லோருடைய பெயர்களையும் சுருள் மதிப்பையும் குறித்துக்கொண்டார். எல்லோருக்கும் முறுக்கும் பழமும் விளம்பிய பிறகு, “வாங்க … தீயல் சாப்பாடு..தீயல் சாப்பாடு..” என்று சத்தம் வந்தது.
கத்தரிக்காய், முருங்கைக்காய், சுண்டைக்காய், வடகம் சேர்த்துச் செய்த தீயலுடன் சாப்பாடு. கூடவே, மதியம் மிஞ்சிய துணைக் கறிகள். மதிய உணவிற்கு வராத சொந்தங்கள் கூட தீயலுக்காக வருவதுண்டு. அப்படியொரு சுவை, மணம். மிஞ்சிய தீயலையும் கறி வகைகளையும் பலர் வாளிகளில் எடுத்துச் சென்றனர். எல்லாம் தீர்ந்துபோன திருப்தியில் சிகரெட் புகையினூடே எதையோ மும்முரமாகப் பேசிக் கொண்டிருந்தனர் என் சித்தப்பாவும் அவளது மாமாவும்.
அந்தத் திருமணச் சார்த்து எழுதியவன் மட்டும் என் கையில் கிடைத்திருக்க வேண்டும். எல்லாவற்றையும் சரியாகக் குறித்துக் கொடுத்தவன் சாந்தி முகூர்த்தத்திற்குக் கொடுத்திருந்த நேரம் நள்ளிரவு 11.45. இத்தனைக் களேபரங்களுக்கு இடையில், என்னை விட்டால் அடுத்த மூன்று நாட்களுக்குத் தூங்கியிருப்பேன்.
என்னதான் பெண் வீட்டார் அனைவரும் ஏற்கெனவே தெரிந்தவர்கள் ஆனாலும், இரண்டு மணிநேரம் அவளது தாய் மாமாவுடன் நான் என்னதான் பேசிக்கொண்டிருக்க முடியும். அவர் வேறு அன்றைக்குப் பார்த்து தன் திருமண நாள் அனுபவங்களைச் சொல்லிக் கடுப்பேற்றிக் கொண்டிருந்தார்.
ஒருவழியாக ‘சென்று வா’ என்று அனுப்பினார்கள். மெத்தையில் சென்று விழுந்ததுதான் ஞாபகம்.
காலை எழுந்ததும் சூடான தேநீருடன் வந்து நின்ற பத்மா, சிரித்துக் கொண்டே, “என்ன சார்? வனவாசம் முடிஞ்சாச்சா?” என்று கேட்டாள்.
“என்ன அப்டிச் சொல்லிட்ட? இன்னிக்கித் தான ஆரம்பமே ஆகப் போகு!…” என்றேன்.
அவள் முறைத்துக் கொண்டு திரும்பினாள்.
“எட்டி, நீ கவனிச்சியா? நல்ல நம்பர்லயாக்கும் நம்ம கல்யாண நாள் அமஞ்சிருக்கு…டிசம்பர் 13, வெள்ளிக்கிழமை…
“ஏன்? அதுக்கு என்னா?”
“இல்ல, Friday the 13th-னு ஒரு பேய்ப்படம் இருக்கு கேட்டியா! பல நாடுகள்ல கேலண்டர்லயே 13 கெடயாதாம்…ஹிஹி….”
வீட்டுத் திண்ணையில் யாரையோ பிடித்து வைத்து, “பாத்தியா? எம்பிள்ளக் கல்யாணத்த ஜாம் ஜாம்னு நடத்திட்டேன் பாத்தியா…முப்பது பவுனு…கைல ஒரு லட்சமாக்கும் குடுத்தது…” என்று அளந்து கொண்டிருந்தார் பத்மாவின் அப்பா.
1 comment
சிறப்பான கதை.திருமண நிகழ்வுகள் சார்ந்த அனுபவங்களின் தொகுப்பு.சிரிப்புக்கும் பஞ்சமில்லை.
நன்றி