1
“பச்சப்பசேலுன்னு வழி முழுக்க நெடு நெடுன்னு மரம், பின்னால மலை. சுத்தமான காத்து. இயற்கைல வாழுறது எவ்வளவு சுகம். கவித மாதிரியான வாழ்க்கை இல்லைங்களா? அதோ தெரியுதே மலையுச்சி, அங்க இருந்து சூரியன் உதிக்கத பாக்கணும்.” இரப்பைகள் இறங்கி, விழிகளை அழுத்திப் பிடித்தன. மலைகளின் பச்சைவார்ப்பில் படிந்திருந்த ஒளி பாஸ்கரனின் கண்களை கூசச் செய்தன.
“சிட்டில இருந்து இந்த மாதிரி ஊருக்கு வந்தாலே, உள்ளுக்குள்ள என்னமோ பண்ணுதுல. செய் என்ன வாழ்க்கைய வாழ்றாங்க. நாங்க அப்படியா! வெக்க, தூசுன்னு. வாழ்க்கைய நிம்மதியா வாழ முடியாம இருக்கதுக்கு, இதுலாம் சாக்குப்போக்கு சார். அதான் இப்படி பேசுறீங்க. கை நெறைய சக்கரம் சம்பாதிக்கணும்ன்னு ஆசப்பட்டு தானே போறீங்க. போயிட்டு யாரோ ஒங்கள தள்ளி விட்ட மாதிரி பேசாதீங்க. எனக்குலாம் காலைல ரசவட இல்லாம தோசையோ, ஆப்பமோ, இட்லியோ தொண்டைல எறங்காது. அதுக்காக்கும் வெளியூரே போறது கெடயாது.” அவர்கள் சென்றுகொண்டிருந்த மண்சாலையில் சரளைக்கற்கள் பரவிக்கிடந்தன. இருச்சக்கர வண்டியின் சக்கரம் அங்குமிங்கும் அலம்ப, கைப்பிடியை கவனமாக இறுக்கியும், விட்டும் ஏற்றத்தில் ஓட்டியபடியே பதில் சொன்னான் ஐயப்பன்.
“யோவ், எதிர்க்காத்துல நீ பேசுறது கேக்க மாட்டேங்குது.” கண்களில் இருந்து வடிந்த நீர் காற்றோடு கரைந்தது.
“கேக்காட்டி நல்லது தான். ஒன்னும் கொறஞ்சு போறது கெடையாது. கொடவண்டி, சென்னைல இருந்து வந்து உயிர எடுக்கான். பேச்சிபாற பக்கத்துல மணலோடைன்னு ஒரு ஊரு இருக்கதே, இன்னைக்குத்தான் எனக்கே தெரியும்.”
“ஏதோ பேசுற. ஒன்னும் கேக்கல.”
மண்சாலை ஓரிடத்தில் முடிய ஐயப்பன் வண்டியை நிறுத்தினான். நெருக்கி வளர்ந்திருந்த ஆளுயர செடிகள் ஆங்காங்கே விலகி, ஒருவர் நடந்து போகும்படியான பாதை சிறிய குன்றை நோக்கிச் சென்றது. இருப்பக்கமும் ரப்பர் மரங்களின் இலைகள் உதிர்ந்து, அவை மொட்டையாய் நின்றன.
“எங்க வீடு இருக்கு? ஆளுங்க இருக்க லேகையே இல்ல. இதுக்கு மேல நடந்துதான் போகணும். வழில பாத்த பாட்டா கிட்ட விசாரிச்சதுல, மேல பன்னிப்பொத்தைன்னு ஒரு உச்சி இருக்கு, அங்க ஒரு வீடு உண்டுன்னு சொன்னாரு.” இருவரும் செடிகளை ஒதுக்கியபடி நடக்க ஆரம்பித்தார்கள்.
“சரியான வழில தான் போறோமா?” பாஸ்கரன் கேட்டார்.
“நீங்க சொன்ன ஊரு இதான். அந்தால தெரியுதே அதான் பன்னிப்பொத்தை. போயி பாப்போம்.”
வானில் கரும்பொதி போல மேகம் குவிய, சிறுதுளி சொட்டியதும், ‘அம்மிணி’ மண்டைக்குள் குரல் ஒலிக்க பாஸ்கரன் அமைதியானார். சந்திக்க இருப்பவர்களைப் பற்றிய எந்த அறிமுகமும் இல்லை, மனம் எதனாலோ பதறியது. பசுமை படர்ந்திருந்த நிலம் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது. “கொஞ்சம் ஏறிப்போய் பாப்போம். வீடு கண்டிப்பா இருக்கும். வெதர் அருமையா இருக்கு. இந்த மலை, காடு, அணக்கட்டு..” பாஸ்கரனுக்கு பேசுவது நல்லது எனப்பட்டது.
“சார். இங்க பாருங்க.. ஆனச்சாணம், இதயும் சேத்துக்கோங்க.”
“ஆன இறங்குமா இங்க?” கொஞ்சம் பதட்டமானார்.
“ஆன மட்டுமில்ல. கடுவா, செந்நாய், கரடி எல்லாம் எறங்கும். உச்சி வெயிலு அடிக்கி. வானம் கருக்க ஆரம்பிக்க முன்னாடி இங்க இருந்து கெளம்பணும் சார். இல்ல, கையோடி வேறொன்ன கூட்டிட்டுத்தான் போவோம். இப்போ எதுக்கு சார் நீங்க இங்க வரீங்க? ஒங்க ஜெண்டர் ஃப்ரீடம் சீரீஸ் தான் புக்குல நல்லா போயிட்டே இருக்கு. கிரைம் எதாச்சும் கவர் பண்ண போறீங்களா?” ஐயப்பன் பேசிக்கொண்டே முன்னே வேகமாக நடந்தான்.
அவன் வேகத்திற்கு ஈடுகொடுக்க பாஸ்கரன் ஓட வேண்டியதாய் இருந்தது. “இல்லப்பா. நாலு மாசமா, ஒரு கனவு டிஸ்டர்ப் பண்ணுது. யோசிச்சு பாரு. தெனமும் ஒரே கனவு. வேறொரு வாழ்க்கை, வேறொரு ஆள். காலைல எழும்பவும் பாஸ்கரன் ஆயிடுறேன். ஆரம்பத்துல வொர்க் ஸ்ட்ரஸ், வயசாயிடுச்சு, பிரஸர் அப்படின்னு நெனச்சேன். சில நேரங்கள்ள சூசைட் தாத்ஸ் வருது. எவ்வளவோ டிரீட்மெண்ட், கவுன்சிலிங்க் எடுத்துட்டேன். எதுவும் ஒத்துவரல. கனவுல நடக்கிற விஷயங்கள் எல்லாமே கண்ணு முன்னாடி நெஜம் மாதிரி வந்துட்டு போகுது. அதுக்கு பயந்தே சரியா தூங்கிறது இல்ல. போகப் போக கனவுல வர ஊரு, பேரு எல்லாம் என்னோட மைண்ட்ல ஏறுது. பன்னிப்பொத்தைன்னு கூகுள்ல தேடிப்பாத்தேன், நெஜமாவே பன்றிப்பொத்தைங்கிற இடம், பேச்சிப்பாறை பக்கம் மணலோடைங்கிற கிராமத்துல இருக்குன்னு தெரிஞ்சது.” நடந்து கொண்டே பேசியதில் மூச்சு வாங்கவே பாஸ்கரன் நிறுத்தினார்.
“சார், ஒங்களுக்கு தெரியாததா. கனவுங்கிறது நாம பாத்த வெஷயங்கள்ள இருந்து உருவாற ஒன்னு தான. கலைச்சு போட்ட ஃபோட்டோல, நாலு ஃபோட்டோவ சேத்து வேறொன்னு மாதிரி ஆக்கிப்போடும். அது மாரிதான் இதுவும். ஊரு பேரு எங்கயோ படிச்சிருப்பீங்க, மறந்து போயிருப்பீங்க. இதுக்காண்டிய என்னய இழுத்துட்டு வந்தீங்க. காலைல எம்பொண்டாட்டி சீலா மீன் வாங்குனா. திரும்பி போவோம் சார். மதியத்துக்கு மீன் கொளம்பும், கெழங்கு கறியும் ரெடியா இருக்கும்.” ஐயப்பன் சொல்லவும்,
“அதான் இல்லையா. குலசேகரத்துல ஒரு ஓல்ட் ஃபிரண்ட் கிட்ட இதப்பத்தி விசாரிக்க சொன்னேன். ஊருலாம் ஓகே தான். ஆனா நான் பாத்த மாதிரியே பன்னிப்பொத்தைல ஒரே ஒரு வீடு இருக்காம். அங்கயும் ஆளுங்க இருக்காங்களாம். எல்லாமே உண்மையா இருக்குல்ல, சேன்ஸ்லஸ். இதுலலாம் பெரிசா நம்பிக்கை இல்ல. ஆனாலும் ஏதோ ஒன்னு இங்க வரச் சொல்லிச்சு. ஏதாவது ஒரு தீர்வு கிடைக்கலாம். எனக்கும் கொஞ்சம் ஃரிபரெஸ்மெண்ட் தேவைதான். சரி அப்படி என்னதான் நடக்கும், பாத்துரலாம்ன்னு வந்திருக்கேன்.” பாஸ்கரன் சொல்லிமுடித்தார். மூட்டுகளில் காயம் பட்ட வயதான ரப்பர் மரங்கள் ஒழுங்கற்று வளர்ந்திருந்த இறக்கம் வரவும், எதிரே ஒற்றைப்பாறை தெரிந்தது.
“சார், அங்க பாறைக்கு அந்தால ஒரு வீடு இருக்கு.” ஐயப்பன் கூறினான். சுற்றியிருந்த பிலாவுமரங்களுக்கிடையே குடிசை வீடு நிழல் படிந்த சருகைப் போலத் தெரிந்தது.
“அது மாதிரிதான் தெரியுது.” பாஸ்கரன் சொல்லவும், அந்தக் குரல் மீண்டும் மண்டைக்குள் ஒலித்தது. ‘அம்மிணி’.
“கனவுல என்ன பாத்தீங்க?”
“இந்த வீடு, பாறை, அப்புறம் அம்மிணின்னு ஒரு பொண்ணு.”
“அம்மிணி, பேரு கொள்ளாம். எத்தற வயசு இருக்கும். கனவுல வயசுலாம் தெரிஞ்சிதா? வேற என்ன பாத்தீங்க, சொல்லுங்க சார். ஜாலியா பேசிட்டே நடக்கலாம்”
“அதிகம் பேசுற. எல்லாம் ஒனக்கு தெரியணுமா! உன்னோட ஹெட் பாலா தானே. ஏதாச்சும் அவன்ட்ட சொல்லணுமா”, சொல்லிக்கொண்டே பாஸ்கரன் ஐயப்பனை முந்தி வீட்டை நோக்கி நடந்தார். ஐயப்பன் எதுவும் பேசாமல் அவரைத் தொடர்ந்தான்.
சுற்றுக்கட்டுக்கு மூங்கிலோடு, களிமண் சாந்தால் எழுப்பிய சுவற்றில், பிளவு ஏற்பட்டு காய்ந்த மூங்கில்கள் வெளியே தெரிந்தன. தென்னையோலையால் உத்திரத்தை மறைந்திருந்த குடிசை, அருகே வர வர ஒருப்பக்கமாய் சரிந்திருப்பது தெரிந்தது. மரத்தால் ஆன கதவு உளுத்துப்போய், சுவற்றில் மரவட்டையைப் போல் ஒட்டியிருந்தது. பாஸ்கரன் பின்னால் நிற்பவனைப் பார்க்கவும், ஓரடி முன்நகர்ந்து ஐயப்பன் கத்தினான், “வீட்டுல ஆளு உண்டாம்மா?”
பாஸ்கரனுக்கு மூச்சு முட்ட, கையால் குடிசையின் பிடிக்கம்பை பிடிக்க, கரையான் கைகளில் அப்பியது.
“சார், ஆளிருக்க மாதிரி இல்லையே. வீட பாத்தீங்களா, இன்னும் ரெண்டு நாளுதான் தாங்கும் போல. இந்த ஊரு மழைக்கும் காத்துக்கும் நிக்குதே.”
“இல்ல, கண்டிப்பா ஆளிருக்கும். நான் கூப்பிட்டு பாக்கேன்.. அம்மா.. யாராச்சும் இருக்கீங்களா? இது அம்மிணி வீடா?”
“அம்மிணின்னு ஆரும் இல்ல, தாழ எறங்கி போடா.” கதவு திறக்க, வரைக்கோடுகள் முகத்தில் அங்குமிங்கும் செல்ல, வெள்ளை முண்டும், சாரமும் அணிந்திருந்த கிழவி வெளியே வந்தாள். மிகவும் வயதானவளாய்த் தெரிந்தாள்.
“கோவப்படாதீங்க, நாங்க மீடியால இருந்து வந்துருக்கோம் கேட்டீளா. ஒங்க கூட கொஞ்சம் பேசணும்.” ஐயப்பன் பேச முயற்சித்தான்.
“எங்க இருந்து வந்தா எனக்கென்ன மயிறு. எறங்குல தாழ. எடி புண்டச்சி, அடுக்களைல இருக்க அருவாமனைய எடுட்டி. பாறத்துண்டத்த நறுக்குற மாதிரி இவனுக புடுக்க அறுத்து விடுகேன்” கிழவி குடிசையின் பின்னே பார்த்து கத்தினாள். முகம் முழுக்க முதிர்ந்த மச்சங்கள்.
“யோவ், புடுக்குன்னா என்ன? வெடுக்குன்னு சொல்லுவோம்லா. அந்த மாதிரி எதாச்சுமா.”
“புடுக்குன்னா, தம்பி சார்”
“யாருக்க தம்பிய்யா”
“அம்மைக்க தம்பி”
“என்ன சொன்ன? புரியல.”
“மொதல வந்த வேலய பாப்போம் சார். நா பேசுறேன்.”
“ரெண்டு தூமயும் என்னல ஒங்களுக்குள்ள சம்சாரிக்கது. தாழ எறங்குகயா இல்லையா. எவ்வளவு நேரம் ஆச்சு. எடி, எங்க போன?” கிழவி குடிசையில் பின்பக்கமாய் சென்று கத்தினாள். அவளின் குரல் கேட்டு குடிசையின் பின்பக்கம் சருகுகள் சலசலக்க, இளம்பெண்ணொருத்தி நடந்து வருவது தெரிந்தது.
“லக்கிலி, சின்ன பொண்ணா இன்னொருத்தங்க இருக்காங்க. இவங்கதான் அம்மிணியா இருக்கணும். ஆமா இந்த ஓல்ட் லேடிக்கு வயசு என்ன இருக்கும்?” பாஸ்கரனுக்கு வியர்க்க ஆரம்பித்தது.
2
கண்ணாடிப்பரப்பாய் அசைவின்றிச் செல்லும் நீரோடையில், பாசிகள் நீரின்போக்கில் நேர்கோடாய் நீள, சிறுமீன்கள் மென்அதிர்வோடு நீந்தி, அவளுடைய பாதங்களின் வெண்மையால் இழுக்கப்பட்டன. உடுத்தியிருந்த சேலை, ஓடையில் ஒருப்பக்கமாய் சரிய, கைகளை நீரில் அலையவிட்டு அமர்ந்திருந்தாள். பக்கத்தில் தத்தித்தத்தி வந்தமர்ந்த செந்தலைக்கிளியொன்று இறக்கைகளை படபடக்கவிட, புற்களின் மேலிருந்த நீர்த்துளிகள் மேலே படவும் இமைகளை மூடித்திறந்தாள். இடது புருவத்தின் மேலிருந்த மருவில் நீர்த்துளி ஒட்டிக்கொண்டு வைரம் போல மின்னியது.
கைகளில் இருந்த பச்சிலைகளை கசக்கி, இடுப்பில் இருந்த பொடியொன்றை சேர்த்தாள். அருகில் இருந்த விளக்கிலிருந்து ஒரு திரியை இலையின் மீது வைத்து, ஓடையிலிருந்து நீரை அள்ளித் தெளித்தாள். பச்சிலை பொன்னிறமாக ஓர் நொடியில் மினுங்கி சாம்பலானது.
“அம்மிணி? இலைய எதுக்கு எரிச்சி எரிச்சி பாக்குற. இத்தோட எத்தற மட்டம். விடிய போகுது. வெளுக்க முன்ன கொட்டாரம் போய் அடையணும். தம்புரான் அறிஞ்சா என்னாகும்.” பாருக்குட்டி மெல்லக் குனிந்து காதில் கிசுகிசுத்தாள்.
“வரேன். சூடும், தணுப்பும் ஒருசேர தேகத்துல என்னன்ன பண்ணும் அறியுமா? சொல்லட்டா?”
“வேண்டா, நீ அப்பப்போ பேசுறது எனக்கு மனசலாகவேயில்ல.”
“ஒருநாள் ஒனக்கும் மனசலாகும். நீயும் பக்கத்தில இரி. தண்ணி எவ்வளவு சில்லுன்னு இருக்கு. உள்பாதத்துல படவும் உள்ளுக்குள்ள என்னவோ பண்ணுது. வா.”
“இதுலாம் தம்புரான் அறிஞ்சா என்ன கொல்லும். எதுவும் அறியாத வரைக்கும் தான்.”
“அறிஞ்சா மட்டும் என்ன. நா ஒன்னும் அவரு கெட்டியவ இல்ல.”
“இருந்தாலும். ஒம்மேல தான் எத்தற சினேகம்.”
“சினேகம், அவருக்கு மட்டும் தான். எதிர்ல இருக்கவங்க நெனப்பயும் தவிப்பயும் புரிஞ்சிக்க மதியில்ல. இதுவாக்கும் சினேகம். பாருக்குட்டிக்கி இருக்கிறது தான் சினேகம்.”
“தம்புரானுக்க பார்வை மேல படாதன்னு அத்தன ஆளுங்களுக்கும் குறுகுறுப்பு உண்டு. ஆனா அம்மிணி.” பாருக்குட்டி சிரித்தாள்.
“பிடிக்காத காரியம் செய்ய மனம் ஒத்துக்கல்ல. நீ அறியும்லா” அம்மிணியும் சிரித்தாள்.
“எல்லாம் அதுக்க போக்குல்ல நடக்கும். இன்னைக்கு தம்புரான் கொட்டாரம் வருவாரா?”
“நேத்து மாந்தீரிகப் பூச. சாத்தான்பொத்தை ஏறி மலையன்மாற பாக்க போயிருக்கும், மலையிறங்க சமயம் ஆகும். ராத்திரி தான அம்மிணிக்க ஓர்ம வரும்.” அம்மிணி வெறுப்போடு சொன்னாள்.
“தம்புரானுக்கு எல்லா மந்திரமும் அறியுமா? மரிச்சிப் போன ஸர்ப்பத்த முத்துமாலயா மாத்துனாராம். ஆனா கொட்டாரம் வந்தா, ‘தேகம் நோகுன்னு அம்மிணி எண்ணெ தேச்சு உடுடி’ ன்னு ஊஞ்சல்ல படுத்துப்பாரு. எதுக்காண்டியாக்கும்! அம்மிணி கைல அப்படியென்ன மந்திரம் இருக்கோ. நா அறியாத்தா வெஷயம் இருக்கே”
“நீ அறியாத்த வெஷயம் எதுவும் அம்மிணிக்கி உண்டா. எனக்கு அறிஞ்சி பாருக்குட்டிக்க கைதான் மந்திரம் அறிஞ்சது.” பாருவின் கைகளைப் பிடித்து அருகில் அமர வைத்தாள்.
“அம்மிணி, உன்ன பாக்கலைன்னா நா நெடுமங்காடுக்கே போயிருப்பேன். ஒவ்வொரு வாட்டியும் போயிரலாம்ன்னு தோணுறப்ப, அம்மிணிக்க முகம் தான் ஓர்ம வருது. அப்புறம் அழுறேன். இது தப்பில்லையா? சொப்பனம் மாதிரியான ஜீவிதம் ஒனக்கு. ஏன் அம்மிணி, நான்னா ஒனக்கு அவ்வளவு பிடிக்குமா? நா வெறும் வேலைக்காரில்லா.”
அம்மிணி, “சொன்னா மனசலாகாத பல வெஷயங்கள் உண்டு.” உதட்டைச் சுழித்தபடியே, பாருவின் மடியில் தலைச்சாய்த்து படுத்து, இடையை வருடினாள்.
3
“மேடம் கொஞ்சம் கோ-ஆப்ரேட் பண்ணுங்க. அமைதியா, சார் சொல்றத ஒரு நிமிஷம் கேளுங்க?” ஐயப்பன் கிழவியைப் பார்த்து மெதுவாகச் சொன்னான்.
“கோ-ஆப்ரேட்ல இருந்த வந்திருக்கீங்கன்னு சொல்ல வேண்டியது தான சார். சர்க்காருதான அது. எடி குடிக்க வெள்ளம் கொடுடி,” கிழவி குடிசையின் வெளிநடையிலேயே அமர்ந்தாள். பாஸ்கரனுக்கு கிழவியைப் பார்த்ததில் இருந்து உடல் உதற ஆரம்பித்திருந்தது. நெற்றியில் வியர்வை வடிய, கைக்குட்டையால் அதை துடைத்தபடியே நின்றார்.
“சார், நாம கோ-ஆப்ரேட்டிவ்ல இருந்த வந்துருக்கோம்ன்னு நினைக்கிறாங்க. அப்படியே பேச்சுக்கொடுக்கேன்.” ஐயப்பனும் எதிரே குத்தவைத்து அமர்ந்தான்.
“மழையில்லாம ரப்பர் பாலு வடிவேயில்ல. மரமும் காஞ்சி கெடக்கு, லட்சணத்த கண்டியா. டெய்லி ஒரி ரெண்டு லிட்டர் பாலு கிடைக்கும். ஷீட்டு போட்டு வித்தா நூறு இருநூறு சக்கரம் கிடைக்கும். அதுக்கும் காடிறங்கி, அஞ்சாறு மைல் நடக்கணும். இப்போ அதுவும் இல்ல. மழையுமில்லாமா, டேம்ல தண்ணி கிடக்க கெட, கரண்டைக்கு கீழத்தான் ஓடுது. நேத்துல இருந்துதான் வானம் கருக்க ஆரம்பிச்சிருக்கு. யாரோ சொன்னாளாம். ரப்பர் நட்டவனுக்கும் சர்க்காரு சக்கரம் கொடுக்குன்னு. சக்கரம் கைல இருக்கா?”
“நாங்க பைசாலாம் கொடுக்க மாட்டோம். சர்க்காருதான் கொடுக்கும்.” கத்தியபடியே ஐயப்பன் எழுந்து நின்றான்.
“கொஞ்சம் நேரம் அமைதியா இருப்பா. அம்மா, சரியாதான் புரிஞ்சி வைச்சிருக்கீங்க. ஆனா பாதிக்கப்பட்டவங்களுக்கிட்ட பாதிப்ப பத்தி முழுசா விசாரிச்சாதான், பயனாளிகள முடிவு பண்ண முடியும். ஒங்க பேரு என்னம்மா?” பாஸ்கரன் குனிந்தபடியே பேசினார்.
“பேரு என்னத்துக்கு. அதான் ரப்பர் நிக்கிறத கண்டா தெரியல்ல.” கிழவி சொல்லிக்கொண்டே பக்கத்தில் காரி உமிழ்ந்தாள். ஐயப்பன் சிரிப்பை அடக்கிக்கொண்டான். கிழவியின் பின்னே இளம்பெண் வந்தமர்ந்தாள். அமர்ந்தவளை கண்டதும், பாஸ்கரனுக்கு ஏற்கனவே பரிச்சயமானது போலத் தெரிந்தது.
“ஒங்க பேரு என்னம்மா?”
“பாருக்குட்டி.” அவள் பதில் சொல்லவும், கிழவி, “எதுக்குடி கண்டவன்ட்ட பேர சொல்லணும்.” கோபப்பட்டாள். பாஸ்கரனுக்குள் ‘பாருக்குட்டி’ எனும் பெயர் ஊஞ்சலில், கட்டிலில் மல்லாந்து படுத்து, ஆடை விலகியபடி சிரிக்கும் பெண்ணின் சித்திரம் ஒன்றை நினைவுறுத்தியது.
“இங்க அம்மிணின்னு யாராச்சும் இருக்காங்களா?” பாஸ்கரன் அதைக் கேட்கும் போதே, உள்ளுக்குள் ‘அம்மிணி’, ‘அம்மிணி’ எனும் பெயர் ஒலித்துக்கொண்டேயிருந்தது.
பாருக்குட்டி பதில் சொல்லாமல் கிழவியைப் பார்க்கவும், இருவரின் பார்வையும் ஒரே நேரத்தில் பாஸ்கரனை நோக்கியது.
“அம்மிணின்னு ஒங்க வயசுல யாராச்சும் இங்க இருக்காங்களா? ரிக்கார்ட்ல அவங்க பேரு தான் இருக்கு. ஒங்களுக்கே தெரியும். பாத்தா படிச்ச பிள்ளையாட்டும் இருக்கீங்க. கவர்மெண்ட் பிராஸஸுக்குன்னு செல வெஷயம் இருக்கும்மா.” பாஸ்கரன் படபடவென்று பேசினார்.
“ஆங்க். சரிதான். அம்மிணின்னு தான சார் சொன்னது. அவ மேல எஸ்டேட்லாயாக்கும் வேலப் பாக்கா. அந்தி சாயவும் வருவா.” கிழவி சட்டென்று சொன்னாள்.
“மொத அம்மிணின்னு யாரும் இல்லன்னு சொன்னீங்க. இப்போ என்ன கவர்மெண்ட் சக்கரம்ன்னு சொன்னதும், அம்மிணின்னு ஒரு பொண்ணு இருக்கான்னு சொல்லுகீங்க. சர்க்காரு எடவாடும்மா.” கூறிக்கொண்டே ஐயப்பன் பாஸ்கரனின் பின்னால் வரவும், பாஸ்கரன் எழுந்து அவனை தள்ளி அழைத்துச் சென்றார்.
“பைத்தியம் பிடிச்சிருக்காய்யா ஒனக்கு. இப்போதான் அந்த அம்மா, அம்மிணின்னு ஒரு பொண்ணு இருக்குன்னே ஒத்துக்குது. ஏம்பா கொளப்புற.” வார்த்தைகளை பற்களை கடித்துக்கொண்டே உச்சரித்தார்.
“ஒங்களுக்கு வந்த வேலை முடியணுமா? வேண்டாமா சார். கெழவி பொய் சொல்லுகா. நீங்க ரூபான்னு சொன்னதும், அம்மிணின்னு ஆளு இருக்குன்னு சொல்றா. ஒங்களுக்கு புரியலையா சார். “
“எதுனாலும் இருக்கட்டும். நீயே ஆயிரம் ரூபா தாரேன்னு சொன்னதும் தான் சிரிச்சிக்கிட்டே வந்த.” பாஸ்கரன் சொல்லவும், ஐயப்பனும் கோபப்பட்டான். “சார், இதுல எனக்கு எந்த பிடித்தமும் இல்ல. ஒருநாள் வேலைய விட்டுதான் ஒங்க கூட வந்திருக்கேன். அதுக்குதான் ஆயிரம் ரூவா. காலைல வெளிநடைல எறங்கும்போதே எளவுல போயிதான் நிப்பேன்னு எம் பொண்டாட்டி சொன்னா. இந்தக் கனவோ, கதயோ நீங்க எங்க பாத்தீங்களோ. மனசார சொல்லுகேன் சார். இந்த இடம், கெழவி, அந்தப்பொண்ணு எதுவும் சரிப்பட்டு வரல. காடு வேற சீக்கிரம் அடைஞ்சிடும். சீக்கிரம் என்ன தெரிஞ்சக்கணுமோ கேட்டுடுங்க சார்.”
“சாரிப்பா. எனக்கு இதப் பத்தி தெரிஞ்சிக்கணும். நாலு மாசமா நான் நானாவே இல்ல. வேறொரு ஆளு மாதிரி என்னோட பழக்கம் எல்லாம் மாறுது. கனவுல வந்த அம்மிணி என்ன கொன்னுட்டு இருக்கா. அந்த பேரு மண்டைக்குள்ள யாரோ ஒருத்தரோட குரல்ல கேட்டுட்டே இருக்கு. என்னோட பிரச்சனை ஒனக்கு சொன்னா புரியாது.”
“புரியுது சார். வெயிட் பண்றேன்”
குடிசையில், “எட்டி பாரு. அந்த வெளுத்த ஆளு..” கிழவியின் சொற்கள் திக்கித் திணறியது.
4
கொட்டாரத்தின் பின்வாசலில் வெளிப்பிரகார குளக்கரையில் இருந்து, மலையை நோக்கிச் செல்லும் பாதையிலுள்ள சிறிய கொட்டாரத்தில் அம்மிணி தங்கியிருந்தாள். தம்புரான் அவளுக்காகவே நேர்த்தியாகக் கட்டியது. எல்லா உபகாரங்களையும் அம்மிணிக்கு செய்து கொடுக்க பாருக்குட்டியை வேலைக்கு அமர்த்தினார். தம்புரானுக்கு ஏற்கனவே இரண்டு ராணிகள், ஐந்து பிள்ளைகள். அம்மிணியை எங்கிருந்து அழைத்து வந்தார் என்று யாரும் அறியவில்லை. அம்மிணிதான் அவள் பெயரா? என்பதிலும் தெளிவில்லை. ஆனால், அவள் யார் பார்வையிலும் படுவதை தம்புரான் விரும்பவில்லை.
சன்னமான மழை. ஓடுகளில் படிந்துள்ள பாசிகளின் வழியே நீர் மெல்லச் சொட்டியது. திறந்திருந்த சன்னலின் வழியே நீட்டியிருந்த உள்ளங்கையில் விழும் நீர்த்துளிகளிலுள்ள பாசியின் மணம் நாசியில் நுழைய, இமைகளை மூடித் திறக்கும் இடைவெளி அதிகமாயிற்று. இருள் கவிந்த வானில் வெட்டி மின்னும் வெண்ணொளியில் மழைத்துளிகள் குளத்தில் அம்புகள் போல பாய்ந்தன. அம்மிணி சன்னலின் வழியே குளத்தில் நீந்தும் கருப்பு அன்னத்தையே வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
“பாருக்குட்டி, கருப்பு நெறத்துல அன்னம் நீந்துது வந்து பாரு.”
“அன்னமா? கருப்பு நெறத்துல நா கண்டதேயே இல்ல.” பாருக்குட்டியும் அருகில் வந்து நின்றாள்.
“வழி மாறி வந்துருக்கும், என்ன மாதிரியே. ஆனா இது பறவைல்லா. எப்படியும் பறந்து அதுக்க எடத்துக்கே போயிடும். நா அப்படியா!”
“நீ எதுக்கு செல்லணும். கொட்டாரத்துல ராணிய மாதிரி வாழ்க்கை, போதாதா?”
“கள்ளராணி. இதுலாம் கொடுத்தா நீ இருப்பியா?”
பாருக்குட்டி இல்லை என்பது போல தலையசைத்தாள். “நீயும் நானும், அந்த அன்னம் மாதிரி எங்கன்னாலும் போகணும். முடியுமா? தம்புரான் சும்மா விட்டிடுவாரா?”
“தம்புரான் வர சமயம் ஆச்சு.” பாருக்குட்டி சொல்லிக்கொண்டே கட்டிலில் சாய்ந்தாள். அம்மிணிக்காகவே தம்புரான் சந்தனமரத்தில் செய்த கட்டில். தம்புரானுக்கு அம்மிணியோடு உரையாடுவதிலும், அவள் ஆடும் மோகினி ஆட்டத்தை ரசிப்பதிலும் தான் நேரம் கழியும். எல்லா நாட்களிலும் வருவதில்லை. மகிழ்ச்சியாகவோ, கவலையாகவோ உணர்வுகள் உச்சமாகும் நாள் கட்டாயம் வருவார். அம்மிணியைக் கண்டாலே எல்லாம் சரியாகிவிடும் என நம்பினார்.
“பாருக்குட்டி, நாம ரெண்டு பேரும் இங்க இருந்து எங்காயாச்சும் போயிடலாம். ஒரு கிளிக்கூண்டு மாதிரி இந்தக் கொட்டாரம். அப்புறம் தம்புரான். அவ்வளவுதான் வாழ்க்கையா? எனக்கு இருக்கிற ஒரே உண்மையான தொணை நீ மட்டும்தான். தம்புரான் வந்தா வரட்டும், இதயும் காணட்டும். இந்த மழை பெய்யும் போது மட்டும் எனக்குள்ள என்னமோ பண்ணுது. சொன்னா மனசலாகத காரியங்கள். தம்புரான் நல்லவருதான். ஆனா, ஒரு பொம்மை போல என்ன வச்சிருக்கது பிடிக்கல்ல.” பாருக்குட்டியின் அருகில் சென்று அவளைக் கட்டியணைத்தாள்.
“இல்ல, தம்புரான் கண்டா கொல்லும்.”
“கொல்லட்டும். படு, பாரு”
“அய்யோ அம்மிணி, விடு. கதவத் தட்டுற சத்தம் கேட்குது.”
5
“என்னய்யா தூங்கிட்டு இருக்க, எந்திரி. வெளிச்சமும் இல்ல. லைட் ஒன்னுமில்லையா. ஆறு மணி மேல ஆயிடுச்சுன்னு நெனைக்கிறேன்,” பாஸ்கரனுக்குள் இதயம் பிளந்து இரண்டானது போலானது. எண்ணும் வார்த்தைகள் வேறொன்றாய் தோன்ற, தலையை வேகமாய் ஆட்டிக்கொண்டே அருகில் படுத்திருந்த ஐயப்பனை தட்டி எழுப்பினார்.
“சார்.. என்னா! ஒறங்குற ஆள எழுப்பலாமா? ”
“என்னப்பா பேசுற. அவங்க ரெண்டு பேரும் எங்க?”
“சார். இங்கயே ஒறங்கிட்டோம். குடிக்க தண்ணி கேட்டோம். கொடுத்தாங்க. அப்புறம் என்னாச்சு. இருட்டிட்டு வேற வருது, வந்த வழியும் மறந்து போச்சு. ரெண்டு பேரும் எங்க? வழி கேட்டுதான் போகமுடியும்.”
‘அம்மிணி’, ‘அம்மிணி’
“கெளம்புறது நல்லதுன்னு படுது.” பாஸ்கரன் பாறை இறக்கத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
“சார், காட்டுல இருக்கோம். செந்நாய் சுத்தக்கம் உண்டு. கூட்டமா சேந்தா ஆனையையே கொன்னுப்போடும். பொறவு பேச்சிப்பாற டேம்ல புலி வேற எறங்குதுன்னு நியூஸ்ல பாத்தேன். எங்கயாச்சும் போயி மாட்டிக்க போறோம். பொறுங்க சார்.”
“அந்த பாட்டி, அவங்களுக்கு வயசு என்ன இருக்கும். எல்லாமே வித்தியாசமா படுது. பாத்தா நூறுக்கு மேல இருக்கிற மாதிரி தெரியுது.” பாஸ்கரன் நின்றார்.
“ஒங்கக்கிட்ட சொல்லாண்டாம்ன்னு இருந்தேன் சார். பாட்டாகிட்ட வழி விசாரிச்சேம்லா, பழைய ஆளாக்கும். பிராயமா இருக்கப்ப ரப்பர் பாலு வெட்டினரு. அவரு சின்னப்புள்ளையாட்டு இருக்கும்போதுல இருந்தே இந்த வீட்டப் பாக்காராம். பொறவு, ராத்திரியும் பகலும் வேற வேற சாடைல பொம்பள நடமாட்டம் இருக்கும்ன்னு சொன்னாரு. ஊருக்காரங்க யாரும் இந்தப் பக்கமே வரது கெடையாதாம். ஒரு சின்னப்பொண்ணுதான் ரப்பர் ஷீட் விக்கவும், ஏதாச்சும் வாங்கணும்ன்னா மணலோடைக்கோ, டேம் கரைக்கோ வருமாம். இவங்களலாம் ஏதோ எசக்கின்னு சொன்னாரு. இந்த மாதிரி ஊருல இது மாதிரி பலக் கதைகள் இருக்கும். ‘சரி போயி பாத்துட்டு எசக்கியா இல்லையான்னு சொல்லுகேன்’ன்னு அவருட்ட கெத்தா சொன்னேன். பாட்டா கக ககன்னு சிரிச்சாரு. சிரிப்புக்க அர்த்தம் இப்போலா வெளங்குகு. வசமா வந்து மாட்டிருக்கோம்.” சொல்லும்போதே கண்கள் பதறின.
“சரியில்லப்பா. ஐ மீன், உள்ளுக்குள்ள நடந்த ஒன்னுக்கு சாட்சியா நிக்கிற மாதிரி தோணுது. கனவுல இப்படித்தான் சாயங்காலம் இதோ நிக்கிறேனே, எக்ஸாட்லி, இங்க இருந்து குடிசைக்கு நான் வரேன்.” பாஸ்கரனுக்கு இதயம் வேக வேகமாக துடித்தது.
“இப்போவாச்சும் சொல்லுங்க சார். என்ன கனவு? என்னயும் இதுல இழுத்து விட்டுட்டீங்க.”
பாஸ்கரன் குடிசையை பார்த்தபடியே அசையாமல் நின்றார். வானம் மங்க, மரங்களின் இடையே, குடிசை பற்றி எரிவது போலவிருந்தது.
“வாயத் தொறந்து சொல்லுங்க சார். இருட்டிட்டு இருக்கு. இனி நடந்து போயி, பைக்க வேற எடுத்துட்டு அஞ்சாறு கிலோமீட்டர் தாண்டினாதான் குலசேகரம் ரோட்டுக்கு போகமுடியும்.”
“இந்த வீடுதான். அம்மிணின்னு லட்சணமான பொண்ணு. அவக்கூட இன்னொரு பொண்ணும் இருந்தா. காலைல பாத்தோமே அவள மாதிரியே.”
“பொறவு.”
“நான் அவளோட மடில சட்டையில்லாம வேஷ்டி கட்டி படுத்திருக்கேன். என் நெஞ்சுல, முதுகுலலாம் அவ கையால ஏதோ ஒரு எண்ணெய் தேச்சு உடுறா. என் உடம்பு கொதிக்கிது. அவ சிரிக்கிறா. நா அழுறேன். மடில இருந்து எழும்புறேன். உடலெல்லாம் எரியுது. அம்மிணி என்ன பாத்து ராட்சசி மாதிரி சிரிக்கிறா. அவள திட்டுறேன், ஏதோ உளருரேன். ஒன்னும் புரியல்ல. அப்புறம் அவள மிதிக்கிறேன். கை காலயெல்லாம் உடைக்கிறேன். ரத்தம் சொட்ட, அவ தலைய சுவத்துல போட்டு இடிக்கிறேன். ஆனாலும் அவ சிரிப்பு நிக்கல. பின்னாடி இன்னொரு பொண்ணு தரையில முட்டிப்போட்டு, தன்னோட நெஞ்சுல மாத்தி மாத்தி கையால அடிச்சிட்டு அழுறா. தெனம் தெனம் ஒரே மாதிரியே இந்த கனவு. ப்பா.. தலை வலிக்குதுப்பா.” பாஸ்கரனின் தலை வின் வின்னென்று துடிக்க ஆரம்பித்தது. ஐயப்பன் அவரை கைத்தாங்கலாக அழைத்து குடிசையின் வெளிநடையில் அமர வைத்தான்.
சட்டைப் பட்டனைத் திறந்து விட்டார். தணுத்த காற்று நெஞ்சில் படவும் கொஞ்சம் ஆசுவாசமானார். வானின் விளிம்பில் மட்டும் சிவந்த ஒளி தெரிய, பறவைகள் கூடடைய ஆரம்பித்திருந்தன. “எனக்கு ஏன் இந்த கனவு வரணும். நான் கல்யாணம் கூட பண்ணிக்கல. இன்ஃபேக்ட் எனக்கு எந்த வுமென் கூடயும் ரிலேஷன்ஷிப்பும் இல்ல. எங்க குடும்பத்தோட பூர்வீகம் குலசேகரம் தான். தாத்தாவோட தலைமுறைல சென்னைல செட்டில் ஆயிட்டோம். எங்க குடும்பத்து ஆம்பளங்க மேல சாபம் இருக்குன்னு எங்க பாட்டி சொல்லுவாங்க. ஆம்பளைக்குன்னு ஒரு பொண்ணு பொண்டாட்டியா வரவும் இந்த சாபம் பிடிச்சிடுமாம். அப்புறம் ஆம்பளைங்க எல்லாம் வெறிப்பிடிச்ச மிருகம் மாதிரி ஆயிடுவாங்களாம். அது தெரிஞ்சும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. லேடிஸ அடிப்பாங்க. அடிமை மாதிரி நடத்துவாங்க. அதுக்கு பயந்து தான், தாத்தா இருந்த சொத்தை எல்லாம் வித்துட்டு சென்னை வந்துட்டாராம். ஆனாலும், தாத்தாவும் அப்பாவும் கூட பாட்டியையோ அம்மாவையோ அடிக்கிறத நான் பாத்துருக்கேன். சின்ன வயசுல எனக்கு பாட்டியும் அம்மாவும் உசுரு. அதுனாலயே வளர வளர எங்க அப்பா, தாத்தாவ எனக்கு பிடிக்காம ஆயிடிச்சு. எங்க வீட்டு லேடிஸ் எல்லாம் இந்த அடி, உதையெல்லாம் வாங்குறதுனாலயே நாப்பது அம்பது வயசுல இறந்தும் போயிடுவாங்க. சொன்னா நம்ப மாட்டீங்க, அதுக்கு அப்புறம் இந்த ஆம்பளைங்க இருக்காங்களே, யார கஷ்டப்படுத்தினாங்களோ அவங்க மேல பைத்தியம் மாதிரி ஆகிடுவாங்க. எங்க அம்மா இறந்தப்பறம், அப்பா அம்மாவோட ஃபோட்டோவையே ரெண்டு நாள் உட்காந்து பாத்துட்டு இருந்தாரு.” பாஸ்கரன் சொல்ல, ஐயப்பன் அமைதியாகவே நின்றான்.
“சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு நெனச்சேன். வளர வளர நேச்சுரலி எனக்குள்ள வேற மாற்றம் நடந்துச்சி. சில நேரம் தோணும். ஆணுக்கு வுமெனோட பாடி மேல செக்ஸுவலா வரக்கூடிய எந்த ஃபீலிங்கும் வரதில்ல. நேர்மாறா நடந்துச்சு. எல்லாத்தையும் வெளிய காட்ட முடியல்ல. இந்த மாற்றம் சொசைட்டில என்ன சேர விடல. அதுனாலயே நல்ல படிச்சேன். எவ்வளோ படிக்க முடியுமோ அதுவரைக்கும் போனேன். பொருளாதார ரீதியா எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. சர்வைவ் பண்ண முடிஞ்சது. சிலநேரம் எனக்குள்ள இன்னொரு பெர்சானிலிட்டி இருக்கிற மாதிரி தோணும். செக்ஸுவல் ஃபீலிங்க்ஸ அடக்க முடியாது. எதுவாச்சும் பண்ணலாம்ன்னு பாத்தா என்னால முடியாது. கடைசியா இதுல தப்பு ஒன்னுமில்லன்னு புரிஞ்சிக்கிட்டேன். அப்புறம், எல்லாமே என்னோட சாய்ஸ். எனக்கு போய் ஏன் இந்த கனவு வரணும்,. நீயே யோசிச்சு பாரு, கனவுல வந்த அம்மிணி ரியாலிட்டில இருக்கிறாளா! இல்லையான்னு இன்னும் தெரியல. எனக்கும் ஆரம்பத்துல எந்த நம்பிக்கையும் இல்ல. ஊரு வர இப்போ வந்துட்டேன். கனவு வர ஆரம்பிச்ச பிறகு, ஏதோ ஒரு விஷயம் பெரிய குற்றவுணர்ச்சில தள்ளுது. லிட்டரலி ஐ அம் டையிங்க். எந்த தப்பும் பண்ணாமலே. இது எல்லாமே எதேச்சையா கூட இருக்கலாம்.” பாஸ்கரன் மூச்சை இழுத்து விட்டார்.
“புரியுது சார். கனவு ஒங்கள ரொம்ப தொந்தரவு பண்ணுது. சாபம்ன்னு வேற சொன்னீங்க. ஒங்க குடும்பத்துல இருக்கிற கன்னியோ, இல்ல யாரோ செய்வினை வச்ச வாதையா கூட இருக்கும். போற வழில கொறத்தியறைல நம்ம அக்கா ஒருத்தி இருக்கா. காளியோட அனுக்கிரகம் கொண்டவளாக்கும். அவளயும் பாக்கலாம், பரிகாரம் எதுவாச்சும் இருக்கும்.” ஐயப்பன் சொல்லும் போதே தூரத்தில் இருவர் அவர்களை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. “ரெண்டு பேரும் வராங்க சார். கைல டார்ச் வச்சிருக்காங்க. பரவாயில்ல தப்பிச்சோம். ஆனா காலைல பாத்த மாதிரி தெரியலையே.” இருவரும் எழுந்தனர்.
நிழல் உருவங்கள் அருகில் வர வர, சாம்பல் அள்ளி தெளித்தது போலிருந்த வானிலிருந்து இறங்கும் மங்கிய ஒளியில் துலங்க ஆரம்பித்தனர். பாஸ்கரனுக்கு மூச்சு வாங்கியது, “இல்லப்பா. வா போயிடலாம். சரிப்பட்டு வரல”
“சார், என்னாச்சு. இப்படி வேர்க்குது.. பதட்டப்படாதீங்க!”
“அய்யோ..அதே மச்சம், லெஃப்ட் ஐ புரோல.”
6
ஆறடி உயரம், கொண்டையிட்ட முடி, கையில் பனையோலைக்குடை, கழுத்தில் துளசி மாலை, கருகருவென உடலெங்கும் அப்பிய சுருள் முடி, மசுக்குட்டி போல உதட்டின் மேலே ஊறும் மீசை, முதுகு வளைய ஆரம்பித்திருந்தது. தம்புரான் அம்மிணியின் கொட்டாரத்தில் அவர் மாத்திரம் அமர்வதற்காகவே கட்டியிருந்த ஊஞ்சலில் வந்தமர்ந்தார்.
“அம்மிணி. தேகத்தில நல்ல வலியுண்டு. நான் கிடக்கேன். எண்ணெ தேச்சு உடு. பாருக்குட்டி போகலாம்.” மேலே உடுத்தியிருந்த வெண் உடையை கழட்டி ஊஞ்சலில் படுத்தார். பாருக்குட்டி எழுந்து செல்லவும், என்றும் போலில்லாமல் அம்மிணி சிரிக்க மறந்தாள். பாருக்குட்டி, வெளியே அவளுக்காகவே கட்டிய அறைக்குள் சென்று தாழ்ப்பாளிட்டாள். தம்புரான் வரும் நாள் மட்டும் பாருக்குட்டி அந்த அறைக்குள் சென்று தாழிட வேண்டும்,
“தம்புரானுக்காண்டியே வலி கொறைய, வேற எண்ணேய் காச்சிருக்கேன். சந்தனப்பூ சேத்தரைச்சது. தேகம் சொர்ணமாயிட்டு மின்னும்.”
“சரி, கொண்டு வா. முண்ட எறக்கி விடு. புருவத்துல மைய கொறச்சு வைடி கொச்சுராணி. அந்த மருதான் ஒனக்க ஐசுவரியம்.” தம்புரான் சிரித்தார்.
“தம்புரானுக்கு பிச்சி தரட்டுமா.”
“பூ செடில இருக்கது தான தெய்வலட்சணம்.”
அம்மிணி ஊஞ்சலின் கீழே கால் மடக்கி அமர்ந்தாள். எண்ணெய் தேய்க்க தேய்க்க தம்புரானின் வெளுத்த தேகம் மென்மஞ்சளாய் மின்னியது. தம்புரான் கவிழ்ந்து படுக்கவும், முதுகில் மெல்ல கைகளால் தேய்த்துக்கொடுத்தாள். மென்மையான தொடுதலில் தம்புரானின் கண்கள் சொக்க ஆரம்பிக்க, அம்மிணி பேச ஆரம்பித்தாள்.
“தம்புரானே. இங்க இருந்து நான் போகட்டா, விடுவீங்களா?”
தம்புரான் அமைதியாக இருக்கவே மீண்டும் கேட்டாள்.
“நான் அதைப் பத்தி சிந்திக்கல்ல. வேண்டாம்.”
“இல்ல தம்புரானே. எல்லாமே போதும்ன்னு தோணுது.”
“தம்புரானுக்க சுவாபம் அறியும்லா நீ.” மெல்ல சிரித்தார்.
“அறியும் தம்புரானே. ஆனாலும். இந்த சிறிய கொட்டாரம், தம்புரான், பாருக்குட்டி. வேறு ஏதாவது எனக்குண்டா. முடியலை தம்புரானே. கேக்கிற காரியம் அறியும். அம்மிணின்னா தம்புரானுக்கு இஷ்டம் தானே.” அம்மிணி கைகளைப் பிசைந்தாள்.
“அதுனாலதான் சொல்றேன். அம்மிணி எனக்கு மட்டும் தான் வேணும். வேற எதுன்னாலும் கேளு. எதுவா இருந்தாலும். கொறயிருக்கா? என்ன இருந்தாலும் நான் தீர்க்குறேன். ஆனா இங்கயிருந்து போகணும்ன்னு மறுபடியும் சிந்திக்கண்டாம். இல்லைன்னா அம்மிணி போகும். கண்டிப்பா இங்க இருந்து சவமாயிட்டு தான் போகும்.” தம்புரான் அம்மிணியின் கைகளைத் தட்டிவிட்டார். அம்மிணி அங்கிருந்து செல்வது தெரியவும், எழுந்து அமர்ந்தார்.
“அம்மிணி, எனக்கு கோபம் வந்துட்டு. நீ தான என்னோட ஜீவிதம். எனக்குத் தெரியும் கொட்டாரத்துல நடக்கிற காரியங்கள். ரெண்டு ராணிக்க மாரும் சரியில்ல. அதாக்கும் மாந்தீரிகம், சக்கரம், பூசயெல்லாம் படிக்கேன். நான் செற்பமாயிருவேன். எங்கன்னாலும் போகலாம். நீயும் நானும் எப்போதும் செற்பமாயிட்டு இருக்கலாம். என்ன கஷ்டப்படுத்தாத அம்மிணி.” தம்புரான் எழுந்து படுக்கையறை கட்டிலில் சென்று படுத்தார். அம்மிணி எதுவும் பேசாமல் தலையை கவிழ்த்தே நின்றாள்.
படுக்கைறையில் கிடையாக தொங்கும் மர விளக்குகளிலிருந்து நெளிந்து எழும்பிய தீ நாவுகளால், தம்புரானின் உடலில் தேய்க்கப்பட்டிருந்த எண்ணெய் சிவந்து மின்னியது. வெளியே மழையும் காற்றும் சுழன்றடித்தது. எதுவும் புரியாமல் , மனதிற்குள் குழப்பங்கள் சூழ, பாருக்குட்டி உறங்க முடியாமல் தவித்தாள்.
மழைத் தூறலாகி நின்றது. வானம் வெட்டவெளிச்சமாகி, நிலவின் வெண்குளிர் மட்டும் எங்குமே. மலைவிளிம்புகள் வெள்ளிக்கோடாய் மின்னின. கொட்டாரத்தில் திறந்திருந்த சன்னல்கள் வழியே குளுமையான காற்று வீச, அசந்து உறங்கிக்கொண்டிருந்த தம்புரானின் கால்மாட்டருகே, அம்மிணி அவரை வெறித்தவாறே அமர்ந்திருந்தாள். மர விளக்குகளின் மென் ஒளியின் வெப்பம் தேகத்தில் பட பட, புகைய ஆரம்பித்தது. அம்மிணியின் கண்களில் நீர் தளும்பியது. அனலின் சூட்டால் தம்புரான் கண் திறந்தார்.
“அம்மிணி என்னது இது? தேகம் கொதிக்கிதே. அய்யோ எரியுது. வெள்ளம் எங்க.” சுருள் மயிர்கள் கரிய ஆரம்பித்தன.
அம்மிணி எழுந்து விலகினாள். ஏற்கனவே அருகில் எடுத்து வைத்திருந்த செம்பிலிருந்த நீரை தம்புரான் மீது வீசினாள். தம்புரானின் உடலில் நீர் படவும் ,நெருப்பின் வேகம் அதிகரித்து, உடல் முழுக்க பற்ற ஆரம்பித்தது. தம்புரான் வலி தாளாமல் கத்த, பாருக்குட்டியும் உள்ளே ஓடி வந்தாள்.
“அம்மிணி.. நீ செஞ்ச காரியமா.. அய்யோ தம்புரானே.” பாருக்குட்டி கத்தவும், எரியும் நெருப்போடு தம்புரான் அம்மிணியின் அருகில் செல்ல, அவள் அசையாமல் நின்றாள். பாருக்குட்டி ஓடிச்சென்று அம்மிணியை இழுத்தாள்.
“அம்மிணி..” தம்புரான் சூட்டின் வலியிலும் அழைத்தார்.
“எனக்கு வேறு வழியில்ல. உங்களோட தேகம் பிடிக்கல்ல. சொல்லவும் வழியில்ல. எனக்கு பாருக்குட்டி வேணும். நாங்க எங்கயாவது போயிடுறோம் .” சொல்லிக்கொண்டே பாருக்குட்டியின் கைகளை இறுக்கப் பிடித்தாள்.
தம்புரானின் உதடுகள் வலியிலும் மந்திரத்தை சொல்லின. கற்றுத் தேர்ந்திருந்த மாந்திரீகம் உதவ, நெருப்பு உடலில் இருந்து விலகி, நாவில் மட்டும் எரிந்தது. “அம்மிணி.. ரெண்டு தேகத்துக்கும் செற்பம் இருக்கிற காலம் வரத்தானே எல்லாம். இனி ரெண்டும் ஒரு சேர செற்பமாயிட்டு இருக்காது. ஒன்னு செற்பமாயிட்டு இருக்கும்போ, இன்னொன்னு மூப்பாகும். ஒவ்வொரு நாளும் வெள்ளி முளைக்கும்போ, முடியும்போ சக்கரம் கறங்கும்.” கத்தினார்.
தோலுருகி, சிவந்த தேகத்தோடு தம்புரான் கீழே விழுந்தார். பதறிப்போன அம்மிணியின் முடி நரைத்தது. தோல் சுருங்கியது, கண்களில் புரையேறியது.
“தம்புரானே சபிக்காதீங்க. எங்கள விட்டிடுங்க.” பாருக்குட்டி மார்பில் அடித்தபடி அழுதாள்.
“சக்கரம் கறங்கும் அம்மிணி..”
கூன் விழுந்த அம்மிணியை, பாருக்குட்டி கொட்டாரத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றாள்.
7
“சார், எந்திரிங்க. நட்டுவான காட்டுல கொண்டாந்து என்னயும் நிக்க வைச்சு. அம்மா ரெண்டு பேரும் கொஞ்சம் சீக்கிரமாத்தான் வாங்களேன். இவர பிடிங்க. விசிறி இருக்கா?” சரிந்து விழுந்த பாஸ்கரனை ஐயப்பன் தாங்கிப் பிடித்துக்கொண்டான்.
“பாத்து, போதம் இல்லைன்னு நெனைக்கிறேன். தெரிஞ்சவங்க யாராச்சும் இருந்தா வரச்சொல்லி கூட்டிட்டு போயிடுங்க.” பேசியவள் காலையில் இருந்தவளை விட கூன் விழுந்து இன்னும் வயதானவளாய்த் தெரிந்தாள்.
“மொபைல் சிக்னலு சுத்தமா இல்லைங்க. ஆமா, நீங்க யாருங்க. காலைல இருந்தவங்க எங்க? இந்தப் பொண்ணு யாரு?” ஐயப்பன் தலையில் அடித்துக்கொண்டான்.
“நான் தான் அம்மிணி, காலைல பாத்தவங்க ராத்திரி எஸ்டேட் வேலைக்கு போயிடுவாங்க. நாங்க ராத்திரி வீட்டுக்கு வந்திடுவோம். உண்மைய சொல்லுங்க, நீங்க சர்க்காருல இருந்து தான் வந்திருக்கீங்களா?” இருளிலும் முகம் பிரகாசமாய்த் தெரிந்தது.
“அத அப்புறம் சொல்றேன்மா. மொத இவருக்கு என்னாச்சின்னு தெரியலையே. வெளியூர் காரரு வேற. ஆயிரம் ரூவா சக்கரத்துக்கு வந்தேம் பாத்தியா, எம் புத்திய சொல்லணும்.” பாஸ்கரனை குடிசையில் பாய் விரித்து அம்மிணி படுக்க வைக்கவும், அருகில் ஐயப்பன் குத்தவைத்து அமர்ந்தான்.
“எனக்கு கைவைத்தியம் தெரியும், நா பாக்குறேன். பயப்படாண்டாம். எதையோ பாத்து அதிர்ச்சி ஆகியிருக்காரு. அஞ்சாறு நிமிஷம் முழிப்பு வரும், மழயடிக்க லேகையுண்டு. போதம் தெளியட்டும் பொறவு கெளம்பலாம். இவரு யாரு எதுக்கு என்னத் தேடி வந்திருக்காரு.” அவளின் கண்கள் வனத்தில் அலையும் மிருகத்தின் கண் போல ஒளிர்ந்தன.
“ஆளு, வெளியூரு. எதோ கனவுன்னு சொன்னாரு. இந்த வீடு, ஒங்களப் பாத்தாரம். எதுக்கு வரணும், கிறுக்கு இவருக்கு.”
“சார், நீங்க உட்காருங்க,” கிழவி ஐயப்பனிடம் சொல்லிக்கொண்டே அம்மிணியை அடுக்களைக்குள் வருமாரு சைகைக் காட்டினாள்.
“அம்மிணி வேண்டாம். விட்டுடு. அன்னைக்கு பண்ணின காரியம். சாவுமில்லாம, பூதம் மாதிரி தெனம் தெனம் சுத்துறோம். வலி மட்டும் நெரந்திரம். சொல்றத கேளு. எத்தற வருஷமா இப்படி ஒரு வாழ்க்க.” சொல்லும் போதே கிழவியின் கண்கள் கலங்கியது.
“பாருக்குட்டி, இது அவரு தான். எனக்குள்ள கேக்குது. ‘அம்மிணி’, ‘அம்மிணி’ன்னு அந்த குரல் கேக்குது. கெடக்கிற தேகம் வெறும் அடைப்பு. உள்ள இருக்கிறது அவருதான். எல்லாத்துக்கும் ஒரு முடிவு உண்டு. ஓவ்வொரு நாளும், நெஞ்சு பொட்டித் தெரிக்கு. சாவதான் எத்தற வழியில பாத்துட்டோம். பாருக்குட்டி நீ எனக்காக படுற வேதனை போதும். சபிச்சுட்டு போயிட்டாரு. சக்கரம் கறங்குற மாதிரி, தெனம் தெனம் ரெண்டு வேஷம். மடுத்தாச்சு.”
“அம்மிணிக்காக இன்னும் வேதனை படணும்ன்னு எழுதியிருந்தாலும் சந்தோஷமா படுவேன். இந்தக் காடும் இல்லைன்னா, என்ன ஆயிருப்போம். மனுஷனுக்கு ஜென்மம் பலவுண்டுன்னா, அத்தறையும் அம்மிணியோடு இந்த ஜென்மத்துலயே வாழ்ந்து முடிச்சுட்டேன். என்னன்ன கண்டாச்சு. இனி, ஒனக்க இஷ்டம் அம்மிணி.” பாருக்குட்டி அம்மிணியின் கைகளை இறுக்கப்பிடித்தாள்.
“அம்மா, இருக்கீங்கலா!” ஐயப்பன் குரல் கொடுத்தான்.
“எண்ணெய தேடுறோம். தேச்சு உட்டா சரியாயிடுவாரு.” பாருக்குட்டி பதில் கொடுத்தாள்.
“சட்டய தெறந்து விடுங்க. நிமித்தி படுக்க வைங்க.” அம்மிணி கையில் இருந்த எண்ணெயை நெஞ்சில் தேய்த்து விடவும், பாஸ்கரனின் தேகத்தில் மென்சூடு ஏற ஆரம்பித்தது. கைகள் நடுங்க மெல்ல தேய்த்தாள்.
“நல்ல மணக்கே. என்ன எண்ணெய் இது?” ஐயப்பன் கேட்டான்.
“சந்தனப் பூ கொண்டு அரைச்சு, காட்டு மூலிக கலந்த எண்ணெ தான். எல்லா நரம்புலயும் ரெத்தம் சூடாயி, புத்தி தெளியும்” அம்மிணி சொன்னாள்.
“நாலு பொம்பளைகள் மட்டும் தனியா இருக்கேங்களே. கூட ஆம்பளங்க யாருமில்ல.”
“யாருமில்ல.”
“வெளிய மழையடிச்சா. கூர ஒழுகாது.”
“ஓழுகாது.” விருப்பமின்றி சொன்னாள்.
“கப்பயும், கஞ்சியும் இருக்கு. சாப்பிடுங்க சார்.” கிழவி கையில் கஞ்சித் தட்டத்தோடு வந்தாள்.
“நானே கேக்கலாம்ன்னு இருந்தேன். காலைல காப்பி குடிச்சது. இன்னைக்கு காட்டுக்குள்ள இருக்கணும்ன்னு எனக்கு எழுதியிருக்கு. சரியான முட்டாளும்மா இவரு. ஆளு கல்யாணம் எதுவும் பண்ணிக்கல்ல. நல்ல சோலி, பேமஸ் ரைட்டர், இவரு எழுதுற ஆர்ட்டிக்கிள்ஸ்லாம் பேமஸ்லா. ஆனா கிறுக்க பாருங்க. ஒரு கனவு வந்துச்சாம். அதுல அம்மிணி நீ வந்தியாம். காலைல ஒரு பொண்ண பாத்தோம்லா அவ ஜாடைல ஒரு பொண்ணு வந்துச்சாம். இந்த வீடு, பன்னிப்பொத்தை, பாறைக்க லேகை எல்லாம் தெரிஞ்சி சரியா கூட்டிட்டு வந்திருக்காரு பாருங்களேன், நம்பவே முடியல்ல. நீ வந்த பாத்தியாம்மா. பாத்தவரு, அப்படியே சரிஞ்சி விழுந்துட்டாரு.”
“பாருக்குட்டி, அவரு தான்.” அம்மிணியின் குரல் நடுங்கியது.
“அம்மிணி…” பாருக்குட்டி அவளைத் தட்டிக்கொடுத்தாள்.
“எதுக்கு அழுகீங்க மா.. என்னாச்சி. கண்ண கறக்குகே. இப்படித்தான் சாப்பாடு நல்லா இருந்துச்சு, திங்க திங்க ஒறங்கிடுவேன்.” ஐயப்பன் அமர்ந்த இடத்திலேயே சரிந்து விழுந்தான்.
வெளியே மழை வெறிக்க கனத்த மழைத்துளிகள் கூரையில் சரசரவென்று விழுந்தன. உயர்ந்த மரங்கள், காற்றின் சுழலில் சாய்ந்தாடி ஊளையிட்டன.
பாறையுச்சியில் தனித்திருக்கும் குடிசையில் எரியும் சிம்மிணி விளக்கு மட்டும், மின்மினி போல ஒளிர்ந்தது. துளிகளின் கனம் குறைய, நிலம் அடையும் முன்னே காற்றில் கலந்தன. அம்மிணி பாஸ்கரனின் அருகே அமர்ந்திருக்க, பாருக்குட்டி தூரமாய் அவர்களையே வெறித்தபடி அமர்ந்திருந்தாள். ஐயப்பன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். பாஸ்கரனின் உடலில் தேய்த்த எண்ணெய், சிம்மிணி விளக்கின் மஞ்சள் ஒளியில் மின்னியது.
“அம்மிணி.” பாஸ்கரனின் உதடுகள் மெல்ல உச்சரிக்க ஆரம்பித்து, “அம்மிணி”,”அம்மிணி” உளர ஆரம்பித்தது. படுத்திருந்தவனின் கை கால்கள் நடுங்க ஆரம்பித்து, முதுகு கூன சுருண்டான். பின் உடலை விரித்து சட்டென்று எழுந்தமர்ந்தார். கண்கள் மூடியிருக்க, “அம்மிணி.. நீ இங்க இருக்க. எனக்கு தெரியும்.” சொன்னார்.
“ம்ம்..” அம்மிணி விக்கியபடியே சொன்னாள்.
நெஞ்சில் தேய்த்திருந்த எண்ணெயால், மார்பில் வளர்ந்திருந்த முடியெல்லாம் ஒட்டிப்பிடிக்க பாஸ்கரன் கண்களைத் திறந்தார். கைகளால் மார்பைத் தொட, விரல்களில் எண்ணெய் பிசுபிசுக்கவும், அம்மிணியை நோக்கி சிரித்தார்.
அம்மிணி கண்களாலே ‘இல்லை’ என்பது போல் அங்குமிங்கும் ஆட்டினாள்.
கண்களை மூடி மூச்சை ஆழ இழுத்தார். கண்களில் வடிந்த நீர் நாடியில் இறங்கியது. விழிகள் இமைக்காமல் அம்மிணியையே பார்க்க, மீண்டும் கண்களை மூடினார்.
“தம்புரானே.” அம்மிணி அழைக்கவும், வேண்டாம் என்பது போல கைகளை நீட்டினார்.
“காலம் மாறிட்டே இருக்கு. ஆனா நாங்க. மழயும், வெயிலும் மாதிரி மறுபடியும் மறுபடியும்.” அம்மிணியின் பார்வை ஈட்டி போல பாய்ந்தது.
பாஸ்கரன் பதில் பேசாமல் அசைவின்றி அமர்ந்திருந்தார். “நான் செஞ்சது தப்புதான். ஆனா காரணம் தம்புரான் தானே. இப்போ இங்க எதுக்கு வந்தீங்க. பரிதாபப்பட்டா? இல்ல இன்னும் சபிக்கவா?”
“நீ போன பிறகு. வெறும் சவமாயிட்டு கெடந்தேன். கெட்டினவ, பிள்ளைங்க யாரும் பக்கம் கூட வரல. ராஜ்ஜியம் போச்சு, தேகம் போச்சு. மாந்திரீகம் மாத்திரம் நாவுல இருந்துச்சு. வலி பொறுக்க முடியல்ல. தொளி வெந்து, சதை செவந்து கெடந்தேன். குரோதம், குருதியெல்லாம் குரோதம். அம்மிணிய காணனும் கொல்லணும். நாடியெல்லாம் சூடு. அவளுகளும் விட்டுட்டுப் போனாளுங்க. வலில கெடந்த போதெல்லாம் மந்திரமாக்கும் என்ன காத்தது. கொஞ்ச நாளுலயே எழுந்தேன். காடு போயி அலைஞ்சேன். அம்மிணி, பாருக்குட்டி, அவளுக ரெண்டு பேரும், எல்லா ஸ்திரீயையும் பழி வாங்கணும். மாந்திரீகம் மூலம் பூஜை செஞ்சேன். தலைமுறைல இருந்த ஒவ்வொரு ஆண்குட்டி ஆத்துமாலயும் நுழைஞ்சேன். அந்த கூடு கலையும்போ வேறொன்னு. அம்மிணி வச்ச சூடு ஆறவேயில்ல, மறக்கவும் முடியல்ல. எல்லா பெண்குட்டியையும் நசிச்சேன். இவன் வரைக்கும் தான் எல்லாம். ஆனா..” பாஸ்கரன் நிறுத்தினார்.
அம்மிணியைப் பார்த்தபடி மீண்டும் தொடர்ந்தார். “ஆண்குட்டியோட தேகம் எனக்க கூடு. நான் சொல்றத மட்டும் செய்யும். இந்த தேகம் அப்படியில்ல. இவன் வேற மாதிரி ஜனிச்சான். வளர வளர, இவன என்னோட வழிக்கு கொண்டு வர முடியல்ல. அவனோட ஆசைகள் வேறயாக்கும். அம்மிணியைப் போல. அம்மிணியை நான் சபிச்சேன். தெய்வம் என்ன சபிச்சது. இவன விட்டு போயிரலாம்ன்னா, இவன் சாவணும். வலிய ஆத்துமாவாக்கும் இவன். விதியில என்னோட கடைசி வித்து. சரியோ தவறோ. அம்மிணி சொன்னது போல காலம் மாறுதுல்ல. கொஞ்சம் கொஞ்சமா இவன் எனக்க சூட தணிச்சான். எல்லாம் முடிஞ்சி இவனோட போயிடலாம்ன்னு இருந்தேன். ஆனா விட்டுப்போன ஒன்னு என்னய வேட்டயாடுது. அம்மிணி வச்ச சூட்ட விட அதிகமான வேதனை. நான் ஆரம்பிச்ச சக்கரம் இன்னும் கறங்குது. இந்த மண்ணும், சமுத்திரமும் மாறியாச்சு. மனுஷனும் மாறியாச்சு. காலமும் சக்கரம் தானே.” அழ ஆரம்பித்தார்.
பாஸ்கரனின் கையில் அம்மிணி தலையை சாய்த்தாள். கண்ணீர் பாஸ்கரனின் கைகளில் விழ, தேகம் குளிர்ந்தது.
வானம் வெளுக்க ஆரம்பித்தது.
பாருக்குட்டியின் நனைந்த கண்கள் இருவரையும் விட்டு அகலவில்லை.
“தம்புரானே. மனசார மன்னிக்கணும்.” அம்மிணி தரையில் சாய்ந்தாள்
“சக்கரம் கறங்கது நிக்கும்.”
“தம்புரானே…” அம்மிணியின் குரல் உடைந்தது.
8
“செய், கழுத்து என்னா வலியெடுக்கு. தலவாணி இல்லாம படுத்தாலே இந்த பாடுதான். பாஸ்கரன் சார். எங்க இருக்கீங்க. அய்யோ, என்னது இது. கரிஞ்சி சாம்பலா கெடக்கு. எங்க போனீங்க சார். அந்தப் பொம்பளைங்கள எங்க? எம்பொண்டாட்டி நடைல எறங்கவும் சொன்னா எளவுல போயிதான் நிப்பேன்னு” ஐயப்பன் எழுந்து வெளியே ஓடி வந்தான்.
பாறையுச்சியின் விளிம்பில் பாஸ்கரன் அமர்ந்திருந்தார். எதிரே நீரோடையில் இரண்டு கருப்பு அன்னங்கள் நீந்திகொண்டிருந்தன.