பொம்மன் பாட்டாவுக்கு அப்போதுதான் உயிர்பிரிந்தது. கடைசிமகளான சுந்தரி அவர் தலையை தன் மார்போடு சேர்த்துப் பிடித்து அவருக்குப் பிடித்த வறக்காப்பியை ஊற்றிக் கொண்டிருந்தாள். அது தொண்டையில் இறங்காமல் அவளின் சேலையில் வழிந்தது.
‘யய்யா..’ என்று அவள் வேகமாக கூப்பிடவும் மற்ற பெண் மக்கள் ஐந்துபேரும் சேர்ந்து ‘யய்யா… யய்யா’ என்று கத்தினார்கள். ஒரே பையனான பொன்னுதுரை வாசலில் இருந்து வேகமாக நடந்து வந்து பின்னால் நின்று பாட்டாவின் முகத்தைப் பார்த்தார்.
அப்போதுதான் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து அவர்கள் அனைவரும் திரும்பியிருந்தார்கள். பாட்டாவை அழைத்துச் சென்ற உள்ளூர் வாடகைக்கார் ஓட்டும் பையன் காப்பிடம்ளரை வைத்துவிட்டு ஓடிவந்தான்.
பாட்டாவின் சந்தன நிறமான முகத்தை சந்தரி வலது கையால் பொத்தி தன் மார்பின் மீதே வைத்திருந்தாள்.
“சுந்தரி..தலகாணியில எறக்கி வையி,”என்று பின்னாலிருந்து பொன்னுதுரை சொன்னார். அவரை மூத்த அக்காள் கட்டிப்பிடித்தபடி இருந்தாள். அவளுக்கு ஏழுபது வயது பக்கமாக இருக்கும். சுந்தரி பாட்டாவை இறுக்கமாக பற்றியிருந்தாள்.
அந்தவீட்டில் அவளுக்குதான் தாமதமாக திருமணம் நடந்தது. அவள் அவருக்கு வயசு தப்பிப் பிறந்த பிள்ளை. திருமணம் என்றாலே முகத்தை சுருக்கிக்கொண்டு ‘அப்பறம் அப்பறம்’ என்று இருபத்து மூன்று வயது வரை ஓட்டிவிட்டாள். எட்டாவது வரை தான் பள்ளிக்கூடம் சென்றாள். பின்பு வயலுக்கும் வீட்டிற்குமாக அம்மா அய்யாவுடன் அலைந்தாள். வலிய வந்து பிடிவாதம் செய்த சொந்தத்து மாப்பிள்ளைக்கு முடிவு செய்து பத்திரிகை கொடுத்துக் கொண்டிருக்கும் போது, “இந்தக் கல்யாணம் வேணாம்,”என்று பிடிவாதமாக நின்றாள்.
“என்ன காரணமுன்னு சொல்லு,” என்று அதட்டியபடி பொன்னுதுரை பாட்டா கண்பார்க்கவே கையை ஓங்கிக்கொண்டு வந்தார்.
“ பிள்ள மேல கை வைக்காத தம்பி…பிச்சாயிக்கு பூசை படைக்கறவன் நானு..பொம்பளப் பிள்ளைய தொட்டு அடிக்கிற உரிமை நமக்கு இல்ல,”என்று கண்கலங்கினார்.
“கைய ஓங்கினதுக்கே இப்படி பேசினா எப்பிடி..கட்டிக்குடுங்க இல்ல உங்களோடவே வச்சுக்கோங்க,” என்று வெற்றிலைபாக்கு, பத்திரிக்கைகளை தூக்கி வீசினார். உள்முற்றம் எங்கும் சிதறிக் கிடக்கும் பாத்திரிக்கைகளை பார்த்தபடி கிழவனும் கிழவியும் சிலையாக அமர்ந்திருந்தார்கள். மண்வீட்டு முற்றத்தை அடுத்திருந்த ஓட்டுவீட்டிற்குள் பொன்னுதுரை தன் வீட்டுக்காரி செல்வியிடம் நெடுநேரம் கத்திக் கொண்டிருந்தார்.
“நானு யாருக்கூடவும் பழகலய்யா..என்னைய நம்புய்யா,” என்று பாட்டாவின் காலில் விழுந்து சுந்தரி அழுத சத்தம் சந்து முழுவதும் கேட்டது. சத்தம் கேட்டு ஆட்கள் கூடிவிட்டார்கள்.
“அம்சம் வந்தா தானா நடக்குது..பிள்ளை நமக்கு உசுரோட இருக்கனுல்ல…நாள் போகட்டும்,”என்று சமாதானப்படுத்தினார்கள். அதற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து கரும்பம்பட்டி மாப்பிள்ளையை கட்டிக்கொள்ள ஒத்துக்கொண்டாள். தூரத்து உறவு. அவள் ஜோட்டுப்பையன். ‘பத்திரிகையெல்லாம் வேண்டாம்’ என்ற பொன்னுதுரை, சுந்தரி ஒத்துக்கொண்ட மூன்றாம் நாளே குலதய்வம் கோவிலில் கல்யாணத்தை முடித்துவிட்டார். ‘ரெண்டும் கூட்டாளி மாறில்ல இருக்குங்க’ என்று செல்வி அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பாள். அடுத்த ஆண்டில் குழந்தை பிறந்த போது செல்வி நெஞ்சில் கைவைத்து பதறியபடி வெளியே வந்து, “புஞ்சக்காடு மாதிரி என்ன வளமான ஸ்தனம்… ஆண்டவனுக்கு கிறுக்கு பிடிச்சுருக்கு… கம்மாயை பாறையக் கொண்டு அடைச்சாப்பல,” என்று முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள். பெண்கள் பறபறவென்று உள்ளே சென்றார்கள். அவளிடமிருந்து வார்த்தையை வாங்குவதற்குள் பொன்னுதுரைக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. ஸ்தனத்தில் காம்புகள் இல்லாத அமைப்பு சுந்தரிக்கு. பொன்னுதுரை யார் பேச்சையும் காதில் வாங்காது உள்ளே ஓடிப்போய் சுந்தரியை கட்டிக்கொண்டு “எம் பிள்ளையாட்டம் கடைசியில பெறந்தவளை கல்யாணம்… கல்யாணம்ன்னு குத்தி எடுத்தேனே,” என்று அழுதார்.
வெளியே நின்ற பாட்டா,”ஏ ..பிச்சாயி எம் பேரப்பிள்ளைய தாய்ப்பாலுக்கு ஏங்க விட்டுட்டியே,” என்று புலம்பினார்.
‘”ய்யா…உம்ம பிள்ளைகளுக்கு அப்படி ஒன்னும் விதியில்ல பாத்துக்க,” என்று சுந்தரியின் ஐந்தாவது அக்கா உள்ளே சென்று சிசுவை தூக்கிக்கொண்டாள். அவளுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தான் கடைசிப்பிள்ளை பிறந்திருந்தான்.
“நான் பெத்த மக்களே,” என்று அப்பாயி அன்றுமுழுவதும் மாறி மாறி புலம்பிக் கொண்டிருந்தாள்.
பொம்மன் பாட்டா அப்படி ஒன்றும் வசதி படைத்தவர் இல்லை. மூன்று ஏக்கர் நஞ்சையுடன் மல்லுக்கு நின்று ஏழுபிள்ளைகளையும் வளர்த்தவர். கொத்தம்பட்டியில் உள்ள பிச்சாயி கோவில் பூசாரிகளுள் ஒருவர். இன்று காலையில் கழிவறைக்கு சென்று வந்தவர் மகனை அழைத்து, “ஒன்னும் சுகப்படல…பிள்ளைகள வரச்சொல்லு,”என்றார். உள்ளூரில் இருந்த மூன்று மகள்களும் வெளியூரிலிருந்த மூன்று மகள்களும் வந்து சேர்ந்தார்கள்.
மகள்களிடம்,“எம்பேர்ல தான் வூடும் காடும் இருக்கு…உங்க பெறந்தவன் பேர்ல மாத்திரலாம்,” என்றார்.
“மாத்தி மாத்தி எதுக்கு எழுதனும். பேரன் பேர்லயே எழுதிருங்க வேல முடிஞ்சுரும்,”என்றாள் பெரியவள். பொன்னுதுரை மகன் பொன்னன் பெயரில் எழுதுவது என்று முடிவானது. சரியென்று அனைவரும் பாட்டாவுடன் உப்பிலியபுரம் கிளம்பிச் சென்று கையெழுத்து போட்டுவிட்டு திரும்பி வந்ததும் தன் கடமை தீர்ந்தது என்று பாட்டா போய்விட்டார்.
வாசலில் பேரப்பிள்ளைகளின் கூட்டம். வீட்டின் முன் கிடந்த மணலை அள்ளிக்குவித்து வாசலை சுத்தம் செய்தார்கள். ஒருவன் வெட்டியானுக்கும்,இன்னொருவன் பிள்ளையார் கோவில் பூசாரிக்கும் அலைபேசியில் அழைத்துப் பேசினார்கள். மருமகன்கள் அங்கங்கே நின்று சொந்தங்களை அலைபேசியில் அழைத்தார்கள். இரண்டு பேரன்கள் குளிப்பாட்டுவதற்காக பாட்டாவைத் தூக்கி பெஞ்சில் வைத்தார்கள்.
செய்தி கேள்விப்பட்டு செவந்தன் பெரியாள் தடிஊன்றிக் கொண்டு வந்த சேர்ந்தார். எப்போதும் பாட்டா அமரும் பிளாஸ்டிக் நாற்காலி வாசலில் கிஞந்தது. அதில் அமர்ந்து கொண்டார். அவர் பொன்னுதுரையை அழைத்து,“பங்காளிகளுக்கு சொல்றதெல்லாம் இருக்கட்டும்..தொட்டிய நாயக்கனுங்க யாராச்சும் இங்க இருக்காங்களா,” என்று கேட்டார்.
“யாப்பா…”
“உங்கப்பன் கோயில் பூசாரியில்ல…உடனே தேங்காய் உடைச்சு எழவு கூட்டக்கூடாதுன்னு தெரியாதா ஒனக்கு..பதட்டம் கண்ணை மறைக்கிது. நாளைக்கு பொழுது முடிய பொறுமையா இருக்கனும்யா”
“ஆமாமா..என்ன பண்றதுப்பா”
“தொட்டிய நாயக்கனுங்க மூணு பேரு வரனும்..உலிபுரம், கெம்பியம்பட்டி, வீரமச்சன்பட்டி இல்லேன்னா நாகமநாயக்கன் பட்டியில உறுதியா இருப்பானுங்க. வண்டியில போய் வெத்தலை பாக்கு வச்சு மூணு பேரையும் கூட்டியாந்துரனும்.. சரியா…”
“பக்கத்துல தானே… கூட்டியாந்துரலாம்..ஏய் இவனுகளே.. ரெண்டு பய வண்டிய எடுங்கடா,” என்று சொல்லியபடி கதவில் மாட்டியிருந்த சட்டையை எடுத்தார்.
“ நீ போகனுன்னு இல்ல..மச்சானுங்க எவனையாவது பயல்களோட அனுப்பு..கொள்ளி வைக்கறவன் அலையப்படாது. செவனேன்னு இப்படி ஒக்காரு,” என்றார். பொன்னுதுரை உரல்பக்கத்தில் கிடந்த மரக் களவடையை இழுத்துப்போட்டு அமர்ந்தார்.
“இப்படி சொத்தெழுதி வச்ச கை ஈரம் காயறதுக்குள்ள கடன்காரனாட்டம் போயிட்டாரேப்பா…”
“இந்தமட்டும் ஒங்கப்பன் உங்களை அலைச்சல்லருந்து காப்பாத்திட்டான்னு வச்சுக்கோ..”
“அம்மா செத்து முழுசா ரெண்டு வருஷமாகல…அது இருந்திருந்தா மனுசன் இன்னும் சொகப்பட்டிருப்பாரு”
“கண்டதையும் பேசப்பிடாது…அங்க பாரு ஒம்பொண்டாட்டி மாமனாருக்கு கட்றதுக்கே வேட்டியோட நிக்கிறா…அவக்காதுல விழுந்தா சமாதானம் போயிரும்”
பொன்னுதுரை குனிந்தபடி தலையாட்டிக் கொண்டார்.
“அது அதுக்குன்னு உள்ள ஆளுதான் தொணைன்னாலும்..இவமட்டும் சோறுபோட்டு நல்லது பொல்லது தந்து பாத்துக்கலியா..அவளை மாதிரி இல்லேன்னு சொல்றதெல்லாம் உங்கப்பனுக்கே பிடிக்காது…”
பொன்னுதுரை நிமிர்ந்து கூட்டத்தின் இடைவெளியில் தெரிந்த அய்யனை பார்த்தார். வாசல் ஓரத்தில் மரபெஞ்சில் அமர வைத்து சட்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். தெருவிளக்கு வெளிச்சம் அவர் முகத்தை பளிச்சென்று காட்டியது. குளிக்க ஊற்றிய தண்ணீர் வாசலில் இருந்து வழிந்து சாக்கடைக்குள் சென்று கொண்டிருந்தது. உட்கார்ந்த நிலையில் பின்னால் நின்ற பொன்னன் மீது சாய்ந்திருந்தார்.
“உம்மவன் உங்கப்பன கொண்டு பிறந்திருக்கனில்ல..வயசுல இவன மாதிரிதான் பாக்கறவுங்க நின்னு பாக்கற அழகன் அவரு..நீ உங்காத்தாளாட்டம்,” என்றபடி பொன்னனையே பார்த்தார். பொன்னன் பெண்டாட்டி மகா அவனருகில் திருநீரு தட்டை வைத்துக்கொண்டு நின்றாள்.
“நீ இப்பிடி பட்டு படக்குன்னு பேசினா உங்கப்பனுக்குப் பிறவு இத்தன சொந்தத்தையும் எப்பிடி கைக்குள்ள வைப்ப…ம்..உங்கப்பன் எப்பிடி நடந்துக்குவாப்பிடின்னு நெனச்சு பாக்கனும்”
வெள்ளைவேட்டி சட்டையும் காதில் சிவப்பு கடுக்கனுமாக இருந்த அய்யாவின் முகத்தை பொன்னுதுரை பார்த்துக் கொண்டிருந்தார். வானம் அடைத்துக்கொண்டு புழுக்கமாக இருந்தது. அனைவருக்கும் வியர்வை கசகசப்பு எரிச்சலை தந்து முகத்தை சுருங்க வைத்திருந்தது.
பொன்னன் பாட்டாவின் முகத்தை ஏத்திப் பிடித்திருந்தான். மூத்த அக்காளின் மகன் வெங்கடேசு உள்ளங்கையில் திருநீற்றை குழைத்து எடுத்து பாட்டாவின் நெற்றியில் முன்று பட்டையாக வரைந்தான்.
“மாமா..நல்லா திருந்த நெத்தி முழுக்க போடுங்க,” என்று பொன்னன் சொல்லிக் கொண்டிருந்தான்.
நமக்கு வசதியில்ல தம்பி…காசு பணம் இழுத்துக்க பறிச்சுக்கன்னுதான் எப்பவுமே இருக்கும். நம்ம பலமெல்லாம் மனுஷங்க தான். விட்டுப்புடிச்சு மவன் மருமவ,அக்கா தங்கச்சி, மாமன் மச்சானுங்களோட இருந்துக்க என்று பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடைசியாக அய்யன் சொன்னது பொன்னுதுரையின் நினைவிற்கு வந்தது.
“ இப்படி என்னை தனிச்சுவுட்டுட்டு போயிட்டீரே,” என்று தோளில் கிடந்த துண்டால் முகத்தை மூடிக்கொண்டார்.
“உங்கப்பனுக்கு தொண்ணூறு வயசுக்கு குறையாது பாத்துக்க..ஒங்கூடவே காலத்துக்கும் இருந்து கெடுத்துப்புட்டாரு மனுஷன்…” என்றபடி செவந்தன் பெரியாள் பொன்னுதுரையின் தோளில் தட்டினார்.
தேனீகளாட்டம் பேரப்பிள்ளைகள் சுற்றிக் கொண்டிருந்தன. சாயுங்கால வெளிச்சம் கலங்கி இரவு படர்ந்தது.
“தா…ராஜேந்திரன் வந்தாச்சு,” என்று ஒரு குரல் கேட்டது.
“வாப்பா…உன்னப்பிடிக்க முடியலயே,” என்றபடி பொன்னன் வந்தான்.
“வடக்கால தெருவுல ஒரு எழவுல்ல.. இப்ப தான் எரிச்சுமுடிச்சுட்டு வாரேன்,” என்றபடி வீட்டை நோட்டம் விட்டார்.
“இந்த மணலை இன்னும் கொஞ்சம் ஏத்தி குமிச்சிருங்க..இங்கன தானே சாங்கியமெல்லாம் செய்யனும்,” என்று கொஞ்சநேரம் பேசிவிட்டு, “எப்ப தேங்கா ஒடைக்கலாம்..பங்காளி மக்க வந்தாச்சா” என்று கேட்டார்.
“அதுக்கு முந்தி சாமி எறக்கனும்…பாட்டா பூசாரியில்ல”
“ஆமாமா..அதுக்கு யாரு வரனும்”
“தொட்டிய நாயக்கருங்க வரனும்..ஆள் போயிருக்கு”
“அப்ப நானு விடிய காலையில வந்தா போதுமா…எந்நேரமானாலும் போனுல கூப்புடுங்க தம்பி,”என்றபடி ராஜேந்திரன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நடந்தார்.
வாழைமரம் வெட்டிக்கொண்டு வந்த பையன்களிடம், “அப்படி வடக்கால ஓரமா போடுங்க தம்பி..கருக்கல்ல தான் கட்டனும்,”என்று சொல்லிக்கொண்டே பந்தல் போட இறக்கியிருந்த கூலிங் சீட்டுகளின் மீது நடந்தவர் திரும்பி, “பந்தலுக்கு வெளிய ஒரு சாமியானா கட்டுனா நல்லது…உங்க கும்பல் பெரிசுல்ல,”என்று சொல்லிவிட்டு முடக்கில் திரும்பினார்.
“சாப்பாட்டுக்கு ஆள் சொல்லியாச்சாப்பா,” என்றபடி வந்த முத்து பாட்டா பதிலை எதிர்பாராமல் உள்ளே சென்றார்.
“சின்னக்கா மவன் சமையல் வேலை செய்யறவன்… ஆள் சொல்லியிருப்பான்”
“எதுக்கும் ஒரு வார்த்தை கேளு,” என்றார் செவந்தன் பெரியாள்.
“ராமசாமி எங்க இருக்கான்”
அவன் பாட்டாவை குளிப்பாட்டிய பெஞ்சை ஓரமாக இழுத்துப் போட்டுக் கொண்டிருந்தான். “என்ன மாமா..சாப்பாட்டுக்கா… பாத்துக்கலாம்,” என்றபடி அலைபேசியை காதில் வைத்தான்.
பையன்கள் வண்டியில் மூன்று தொட்டிய நாயக்கர்களுடன் வந்து இறங்கினார்கள். அதில் ஒருவன் மிக இளையவன். மற்ற இருவரும் நடுவயதுக்காரர்கள். வாசலில் நின்றார்கள். சொம்பு தண்ணீருடன் பாட்டாவின் மருமகள் செல்வி அவர்கள் முன் வந்து நின்றாள். ஆளுக்கு ஒரு வாய் குடித்துவிட்டு கால் நனைத்தப்பின் உள்ளே நுழைந்தார்கள். அதில் ஒருவர் “பந்தல் போடலாம்..தப்பில்ல,” என்றார். பாதி வரை கூலிங் சீட் இறக்கியிருந்த உள்முற்றத்தில் தாத்தா கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தார்.
“ வடக்குபக்கமாக திரியப்போட்டு விளக்கு ஏத்துங்கம்மா,” என்று சொல்லியபடி நாயக்கர்களில் நடுவயதுக்காரர் ஒருவர் கட்டிலின் பக்கம் அமர்ந்தார். அவருக்குப் பின்னால் இருவரும் அமர்ந்தார்கள். பேரன்களும் பேத்திகளும், மகள்களும் மருமகன்களும் முற்றத்தில் நிரம்பினார்கள்.
“பெரியவருக்கு மவன் யாரு… முன்னாடி வரனும்,” என்று கணீர் குரலில் நாயக்கர் சொன்னார். இன்னொருவர் சிறிய முடிப்பை பிரித்து அதிலிருந்த வெற்றிலைப்பாக்கை முன்னால் வைத்தார். பொன்னுதுரை அவர் எதிரில் வந்து அமர்ந்தார்.
“பெரியவர் மேல இருக்கறது யாரு?”
“பிச்சாயி…”
“பெத்தவ…” என்று கும்பிட்டார்.
“ஊரு..”
“கொத்தம்பட்டி… தொறயூர் பட்டணம்”
“சரி..கண்ணை மூடி வேண்டிக்குங்க..பேத்தி யாராச்சும் சொம்புல பாலு கொண்டாந்து வெத்தல முன்னாடி வைக்கனும்”
இளைய பேத்தி ஸ்வாதி கைகளில் செம்புடன் வந்தாள். சுந்தரி அவள் கைக்கு பிடிமானம் கொடுத்து பிடித்துக்கொண்டு கூடவே வந்தாள்.
“பிள்ள..பெரியமனுசுயாயிருச்சா”
“இல்லீங்க…எனக்கு ரெண்டாவது பிள்ள..அய்யனுக்கு கடைசி பேத்தி. இப்பதான் பதிமூணு வருஷம் பெறந்திருக்கு”
“ரொம்ப நல்லது.. அவளுக்கு குழந்தைங்கதான் இஷ்டம்”
நாயக்கர் கணீர் குரலில் , “ஊரைக்காக்கும் பெரியண்ணசாமியே வாரும்ய்யா. ஊரகாக்குற மாரியாத்தாவே வாம்மா..”என்றார். பின்னால் அமர்ந்திருந்தவர்கள், “எதுமலயானே எங்கிருந்தாலும் குதிரை ஏறி வாய்யா..இன்னைக்கு வேட்டை முடியாட்டாலும் பிச்சாயி மவனுக்காக வாய்யா,” என்று சொல்லியபடி வரிசையாக ஊரை சுற்றியிருந்த செல்லியாயியை, பட்டாயியை, கருப்பனை அழைத்தார். கடைசியாக ஊமைப்பிடாரியை, எட்டடியானை அழைத்து நிமிர்ந்தார்.
“அம்பலத்து மூத்தவர் மீதிருக்கும் தாயே…
பிள்ளயை கைவிட்டு இறக்கி வைக்காத தோள் கொண்டவளே..
வற்றாத ஸ்தனம் கொண்டவளே…வாம்மா,”
என்று பின்னால் அமர்ந்திருந்த இளம் பையன் வேகமாக பாடிக்கொண்டிருந்தான்.
திடீரென்று அவன் குரலும் பாடலும் மாறியது. அவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்ததைப் போன்று உடலை தேய்த்துக் கொண்டார்கள்.
“பொட்டல் காட்டில.. முள்ளும் கல்லும் பாறையையும் தாண்டி இடுப்புல பிள்ளையோட அவ நடந்து வாரா. மேல சூரியன் எரிக்க கீழ நிலம் எரிக்க அவளே நெருப்பா எரிஞ்சபடி வாரா. அவளுக்கு பிள்ளையா பிறந்தது நாம செஞ்ச புண்ணியம். அவ மடியில விளையாண்டது நமக்கு கிடச்ச பாக்கியம். அவள குடிச்சு வளர்ந்தது நம்ம செஞ்ச வினையோட பதிலு. அவ காலுக்கு கீழ இருக்குற நம்மளவிட்டு அவ என்னக்கும் விலகிப்போறதில்லை. அவ நிழலு நம்ம தலைக்கு மேல மரமா விரிஞ்சிருக்கு. பிள்ளங்க கூப்பிடுறோம் எறங்கி வா,” என்று இளையவன் வேகமாக உத்தரவிடுவது போல அழைத்தான்.
இரவின் கணத்த அமைதியில் அவன் குரல் மட்டும் நெடுநேரம் கேட்டுக்கொண்டிருந்தது. விடாத அழைப்பு. மெல்ல மழை பெய்யத் தொடங்கியது.
“ய்யா..மழ வருதுய்யா..வயலுக்கு போலான்னு சொல்லு..வாய்யா,” என்று அமைதியை குழைத்தபடி மூத்தமகள் பொம்மக்கா வேகமாக சொன்னாள்.
“அழப்பிடாது தாயீ…,” என்ற நாயக்கர் அவளை அருகில் அழைத்தார்.
அவள் கையில் சொம்பை கொடுத்து பேரன் வரனும் என்றார். பொன்னனை பாட்டாவின் காதில் இருந்த சிவப்புக்கல் கடுக்கனையும், கால்காப்புகளையும் கழற்றி பால் சொம்பில் போடச்சொன்னார். அதை சாமிஅறையில் வைத்ததும் வெற்றிலைபாக்கு தட்சணை வாங்கிக்கொண்டு வெளியே வந்தார்கள். ராஜேந்திரன் நின்று கொண்டிருந்தார்.
“இனிமே நீ உன்னோட வேலையப் பாக்கலாம்,” என்றபடி மூவரும் கிளம்பினார்கள். உள்ளே பட்… பட் …என்று தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டது. மழை வலுவாக வரும் போலிருந்தது.
“சேர்ந்திருந்து வழியனுப்பி என்னய்யா…
தெசைக்கொன்னா பறக்க சொன்னியோ…
கூட்டை கலச்சபின்னே என்னய்யா…
இனி நாங்க சேருமிடமெங்கய்யா…
ஒன்னோட நிழலுகூட இனி எமக்கு நாதியில்ல…”
என்ற பொம்மக்காவின் குரல் கத்தி வீச்சு போல எழுந்தது.
தனித்து விடப்பட்ட பட்டு தத்தி தத்தி நடந்து வெளியே வந்தது. எங்கிருந்தோ ஓடி வந்த பொன்னன், “மகா…பிள்ளைய விட்டுட்டு என்ன பண்ற,”என்றபடி தூக்கினான். பட்டு தலையை அவள் தோளில் பதித்து சிரித்து, காலை ஆட்டி இறங்க முயன்றது. யாருமற்ற வாசல் பந்தலில் குட்டிகளுடன் மழைக்கு ஒதுங்கியிருந்த நாயை வாழைமரம் கட்டிக்கொண்டிருந்த சுப்ரமணி அதட்டிக்கொண்டிருந்தான்.
“விடுடா..நிக்கட்டும். பாட்டா இருந்தா சோறு வைடான்னு சொல்லும்,”என்றான். ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகையுடன் தலையாட்டிக் கொண்டார்கள்.
“தாத்தனுக்கு ஊரே அதிர வெடி போடனுன்டா”
“என்ட்ட எதுக்கு சொல்ற.. மவவூட்டு பேரனுங்க செய்முறைடா அது..கொளுத்துங்க”
“பாரு மாப்ள..எந்தாத்தன் யாருன்னு இந்த ஊரே கேக்குதா இல்லையான்னு,” என்றபடி சுப்ரமணி தாவி பந்தலில் ஏறி வாழைகுலைகள் சரியாமல் இழுத்துக்கட்டினான். அவனை மழை தெப்பலாக நனைத்தது. கிழக்கே கருக்கல் வானம் தன் இருளை கலைத்துக் கொண்டிருந்தது.