கண்களைத் திறக்க முயன்றான்… முடியவில்லை! கொஞ்சமும் அசைக்க முடியாமல் கெடுபிடியாக உடம்பு சுருண்டிருந்தது. ஏதோ பசை அப்பியதைப்போல் கைகால் விரல்கள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருந்தன. ஒருவேளை, தான் பிளாஸ்டிக் டின்னிற்குள் அடைபட்டிருக்கும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருளாகவோ இல்லை உலகின் மிகச்சிறிய மணல் கடிகாரத்தின் மணல் துகளாகவோ இல்லை பெயர் தெரியாத கோளுக்குள் உயிர்வாழும் நுண்ணுயிரியாகவோ இருக்கலாம் என்று தோன்றியது.
வெளியே பேச்சுச் சப்தம் கேட்கவும் கண்களை மிகுந்த பிரயாசையுடன் திறந்து பார்த்தான். ஒளியின் கால்தடம் இன்னும் பதிந்திராத இருட்டு. அகண்ட பால்வெளிக் கருமையின் ஒரு சொட்டு.
தான் அடைபட்டிருக்கும் எதுவென்று தெரியாத ஏதோவொன்றிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற உணர்வு முதல்முறை எழுந்ததும் கைகால்களை வலுக்கட்டாயமாக அசைத்தான். இருட்டினூடாய்த் தடவித்தடவி மோதிநின்று ஏதோவொன்றைத் தட்டினான். கதவு திறக்கவில்லை. முதலில் கதவு என்ற ஒன்று இருக்கிறதா? தன் சின்னஞ்சிறிய பசபசப்பான விரல்களைக் கஷ்டப்பட்டு மடக்கி முஷ்டியால் ஓங்கிக் குத்தத் தொடங்கினான்.
பொத்… பொத்… பொத்
சீரான இடைவெளியில் சப்தம் கேட்டது… ரப்பர் பந்தைச் சுவரில் எறிந்து விளையாடுவது மாதிரி. விரல்விட்டு எண்ணியபடி மீண்டும் குத்தினான்.
ஒன்று… இரண்டு… மூன்று…
பொத்… பொத்… பொத்…
லேசாக விழுந்த கீறலினூடாய் ஒளியின் முதல் துகள் உள்ளே நுழையவும், கொழகொழவென இருக்கும் ஏதோவொரு திரவத்தில் தான் ஊறிப்போயிருப்பதை அவனால் இப்போது ஊகிக்க முடிந்தது.
கீறல்விட்ட இடத்தில் எட்டி மிதித்தான். தலையைக்கொண்டு மோதினான். அவன் அடைப்பட்டிருந்த ஓடு உடைந்து விழவும் சுதந்திர மனிதனாகப் பரந்தவெளிக்குள் தன் பிசுபிசுப்பான கால்களை எடுத்து வைத்தான்.
“முட்டையிலிருந்து பிறந்த முதல் மனுஷன்….”
வெளியே கை தட்டும் ஓசை கேட்டது.
“வாழ்த்துகள்!”
“முட்டை மனுஷன் எவ்வளவு சின்னதா இருக்கான்!!”
“இனி இவன் மீது நம்ம தேவைகளைச் சோதிச்சுப் பார்க்கலாம்…”
வெள்ளையுறை அணிந்த பெரிய கரங்கள் அவனை நோக்கி நீண்டன. ஓடவும் பயந்து மிரண்டுபோய் கண்களை அகலத் திறந்து பார்த்தான்.
சுண்ணாம்புப்பூச்சு பெயர்ந்திருந்த அறையின் மூலையில் எலக்ட்ரிக் அடுப்பில் முட்டை இன்னமும் வெந்து கொண்டிருக்கிறது. நடந்து வந்ததில் உடம்பெல்லாம் பிசுபிசுப்பாய் வியர்வை. தன் வாழ்நாளின் கடைசிகாலத்தில் இருக்கும் மின்விசிறி பேருக்கு ஓடிக்கொண்டிருந்தது. கண்கள் அயர்ச்சியில் தானாக மீண்டும் மூடின. பிளாஸ்டிக் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தான்.
.
அன்றும் அவன் அலுவலகம் முடிந்து நெரிசல்மிக்க கோடம்பாக்கம் மின்தொடர் ரயில் நிலையத்தில் இறங்கி எப்போதும்போல் இருபது நிமிடங்கள் பாலத்தின்கீழே நடந்துதான் வீடு திரும்பியிருந்தான். தன் ஒடுங்கிய அறையின் மூலையில் வியர்த்திருந்த சட்டையைக் கழற்றி வீசிவிட்டு, உருவம் வெளுத்துப்போன தன் அலுவலக அடையாள அட்டையை அலமாரி நடுத்தட்டில் வைத்தபின் பாதரசம் மங்கிய உள்ளங்கையளவு முகக்கண்ணாடியில் தன் இருபத்து நான்கு வயது வற்றிய முகத்தைப் பார்த்தபடியிருந்த போது பசித்தது.
இரண்டு முட்டைகளை வேகவைத்துவிட்டு பிளாஸ்டிக் நாற்காலியில் சரிந்தான். சுடுநீரில் முட்டை கொதிக்கும் சத்தத்தையும் பக்கத்து வீட்டு டிவி இரைச்சலையும் எப்படியோ சமாளித்து, கண்கள் அயர்ச்சியில் மூடின.
கைபேசி ஒலித்தது…
“நான் புரோக்கர் கனகராஜ் பேசுறேன்…”
“ம்ம்…”
“நீ கேட்ட மாதிரியே வீடு ஒண்ணு வாடகைக்கு வந்துருக்கு. அண்ணா நகர்ல… டபுள் பெட்ரூம்… ஃபுல் ஃபர்நிஷ்ட்… என்ன சொல்ற?”
“என் பட்ஜெட்ல பாருங்கண்ணா… ஒத்த ஆளுக்கு எதுக்கு டபுள் பெட்ரூம்? அதுவும் அண்ணா நகர் மாதிரி காஸ்ட்லியான ஏரியால..”
“இது நீ நெனைக்குற மாதிரி இல்ல. வாடகை ஒன்பதாயிரம்தான். அண்ணாநகர் மாதிரியான ஏரியாவுல தனி வீடு ஒன்பதாயிரத்துக்கு யார் தராங்க? அதுவும் ஃபுல் ஃபர்நிஷ்ட் டபுள் பெட்ரூம்… ஒரு பொருளும் நீ வாங்க வேணாம்… போட்டோ அனுப்பறேன் பாரு…”
பாதி மூடியிருந்த கண் இமைகள் அகலத் திறந்தன. கழிப்பறையுடன் கூடிய பொருட்கள் வறண்ட தன் ஒற்றை அறை வீட்டைப் பார்த்தான். இந்த ஒடுங்கிய வீட்டுக்குக் கொடுப்பதைவிட மூவாயிரம் அதிகம்தான். ஆனால் டபுள் பெட் ரூம்… ஃபுல் ஃபர்நிஷ்ட்… தனி வீடு…. ஒன்பதாயிரம்… நம்பமுடியவில்லை…
கனகராஜ் அனுப்பிய புகைப்படங்கள் விட்டில் பூச்சிகளாய் வரிசையாக கைபேசியில் வந்து விழவும், கட்டைவிரலால் வலதுபக்கம் தள்ளியபடி புருவங்கள் உயர ஒவ்வொரு புகைப்படமாகப் பார்த்தான்.
சோபா செட்டோடு வரவேற்பறை… தலையணை மெத்தை விரிப்போடு கூடிய ஏசி மாட்டிய இரண்டு படுக்கையறைகள்… அடுக்கிவைக்கப்பட்ட பாத்திரங்களும் எல்லாவித சமையல் உபகரணங்களுடன் மாடர்ன் கிட்சன்… நடுவறையில் குட்டி பீரோ போலிருக்கும் ஆளுயர பழையகாலத்துக் கண்ணாடி… தரையில் தடித்த மெரூன்நிற கார்ப்பெட்… பெரிய ஹாலின் ஒரு மூலையில் ஆறு சேர்கள் கொண்ட டைனிங் டேபிள். எதிரே பெரிய எல்.ஈ.டி டிவி. இளமஞ்சள்நிறம் அடித்த சுவரில் தொங்கும் மரச்சட்டகமிட்ட எண்ணெய் ஓவியங்கள்… மரத்தால் செய்த கழுத்து வரையான சிரிக்கும் மனித உருவம்!
போட்டோவில் காண்பிக்கப்படும் வாடகை வீடும் நேரே பார்க்கும் வீடும் பெரும்பாலான நேரங்களில் நேரெதிராய் இருக்கும் அல்லது வாடகை வேறொன்றாய் இருக்கும். ஆனால் அவன் பயந்ததைப் போல் எதுவும் நடக்கவில்லை. அவன் அனுமானித்திருந்ததை விட நேரில் வீடு இன்னும் விஸ்தாரமாக இருந்தது.
வாசல் கேட்டிலிருந்து சற்று உள்ளே தள்ளியிருக்கும் வீட்டுக்கு செம்பருத்தி செடியையும் கொய்யா சப்போட்டா மரத்தையும் தாண்டித்தான் போக வேண்டும். நெற்றி மட்டும் வெள்ளையாய் கொழுகொழுவென இருக்கும் சாமபல்நிறப் பூனை கதவு திறக்கும் சத்தத்தில் பயந்து மதில்சுவரிலிருந்து குதித்து ஓடியது.
இரண்டு குடும்பங்கள் கூட தாராளமாகப் புழங்குமளவு வீடு நிறைந்திருந்தது. வெவ்வேறு சமயத்தில் பார்த்துப்பார்த்து வாங்கிச் சேர்த்த நேர்த்தியான பொருட்கள்… அத்தியாவசியப் பொருட்கள் என்று அவற்றைச் சுலபமாய்ச் சொல்லிவிட முடியாது. சிலது கலைநயத்துடன்… சிலது புராதன அழகுடன்… மிச்சம் சில புத்தம்புதிய எலக்ட்ரானிக் சாதனங்கள்… நேர்மறையான எண்ணவோட்டங்கள் கொண்டவரால்தான் இப்படிப் பலவித ரசனையோடு வாங்கியிருக்க முடியும். இவ்வளவு பெரிய தனி வீட்டின் வாடகை குறைந்தது இருபதாயிரமாவது இருக்கும். மீண்டும் ஒருமுறை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டான்.
“வாடகை பேசுனபடிதானே…”
“உன்கிட்ட நான் ஏன் மாத்திப் பேசப்போறேன். ஒரு நயாபைசா கூட அதிகமா தரவேணாம்…”
ஆச்சரியம்தான்.
மூடியிருந்த கார்ட் போர்ட் அலமாரிகளில் துணிகளற்ற ஹாங்கர்கள் அநாதையாகத் தொங்கிக்கொண்டிருந்தன. சாளரத்தின் வழியே தெருவை மேலோட்டமாக நோட்டம்விட்டான். எல்லாமுமே இதேபோன்ற தனித்தனி பிரம்மாண்ட வீடுகள். வீதியின் இருபக்கமும் வரிசையாய் அடர்ந்த மரங்கள், ஏதோ மனிதச்சங்கிலி போராட்டத்தைப் போல். பின்னால் திரும்பி வீட்டுக்குள் பார்த்தான்… அடுத்தடுத்து நீளும் அறைகளின் மறுகரையில் தென்னை ஓலைகளின் நிழல்கள் ஆடும் மொட்டைமாடி…
“மொட்ட மாடிக்குப் போக உள்ள படி இருக்கு. மேலயும் சின்ன ரூம் ஒண்ணு உண்டு. பழைய பொருள் எல்லாத்தையும் ஓனர் அதுக்குள்ள தான் போட்டு பூட்டி வச்சுருக்காரு… அந்த ரூம் தவிர மீதி எல்லாம் நீ புழங்கிக்கலாம்… வராண்டா ஜன்னல திறந்து வச்சுருந்தா மட்டும் போதும், காத்து சும்மா அவுத்துவிட்ட கன்னுக்குட்டி மாதிரி ஓடிவரும். சென்னையில இப்படி அமையுமா? இனி ஆயுசுக்கு நீ வேற வீடு பாக்க வேணாம்…”
“இதுக்கு முன்னாடி இருந்தவங்க ஏன் காலி பண்ணாங்க?”
“அவங்களுக்கு என்ன தோணிச்சோ!! ஆனா நீ லக்கி சார்… வீட்ல சின்ன ரிப்பேர் வேலை போயிட்டு இருந்துச்சு… அது முடிஞ்சு நீ தான் ஃபர்ஸ்ட் வர!”
சம்பிரதாயப்படி மேலும் பேரம் பேசிப்பார்த்தான். அட்வான்சை மூன்று மாதமாக குறைத்துக்கொள்ள ஓனர் ஒப்புக்கொண்டதை புரோக்கர் சொன்னபோது நம்பமுடியவில்லை. மந்திரக்கோலின் சொடுக்கைப்போல் திடீரென்று தன் வாழ்க்கை மாறிவிட்டதாகத் தோன்றியது.
ஒரு வாரயிறுதியில், தன் இருப்பின் சொற்ப அடையாளங்களை மூட்டை கட்டிக்கொண்டு அந்த வீட்டிற்குக் குடியேறிய போது ஆளரவமற்ற வீதி குஞ்சு பொறிக்கும் பறவையின் மௌனத்தில் கனத்திருந்தது.
.
“அந்த வீடு ஒரு மாதிரி……” என்று கிழவி சொன்னதும் குழப்பத்துடன் அவளை உற்றுப் பார்த்தான். கிழவியின் முகம் கொழகொழவென்று இருக்கும் திரவம் நிறைந்த ஜாடியில் பலநாட்களாய் ஊற வைத்ததைப் போலிருந்தது. விரல் வைத்தால் குழைந்து விடலாம். அவளது முகத்தின் சுருக்கங்கள் நூற்றுக்கணக்கான மண்புழுக்கள் போல் நெளிந்தன. ஆனால் அவளது குரல் முகத்துக்குச் சற்றும் பொருந்தாத ஒன்றாய்க் கனமாக ஒலித்தது.
இத்தனை மிடுக்கான குடியிருப்புப் பகுதியில் தெருவிளக்கின் சிறு மஞ்சள் வட்டத்தில் நின்றுகொண்டு யாருக்கு உணவு விற்கிறாள்? அது சாலையோர சாப்பாட்டுக்கடையும் அல்ல. வீட்டில் சமைத்து எடுத்துவந்து இங்கு விற்கிறாள். ஒரு ஹாட் பாக்சையும் இரண்டு எவர்சில்வர் தூக்குகளையும் வேப்பமரத்தடியில் கோணித் துணியை விரித்து அதில் பரத்தி வைத்திருந்தாள். அவனையும் கிழவியையும் தவிர அங்கு வேறு யாருமில்லை.
‘சாப்புட என்ன இருக்கு?’ என்றோ ‘இட்லி வேண்டும்’ என்றோ அவன் கேட்கவே இல்லை. சொல்லப்போனால் அதைப்பற்றி அவன் யோசித்திருக்கவும் இல்லை.
இவனுக்காகவே காத்திருந்த மாதிரி, “நாலு இட்லி சூடா கட்டியிருக்கேன். போதுமா?” என்று தன் கால்பக்கம் வைத்திருந்த பச்சைவெள்ளை வயர் கூடையில் அவனுக்காகவே கட்டி வைத்திருந்த இட்லி பொட்டலத்தை அவள் போட்டுத் தந்ததும் குழம்பிப்போனான்.
“கூடையெலாம் வேணாம்…”
“இட்லி சூடாயிருக்கு வேற எப்படி கொண்டு போவ?”
“பக்கத்துலதான் வீடு அப்படியே எடுத்துட்டு போயிருவேன்..”
“பரவாயில்ல கொண்டு போ… கூடை இன்னொரு ஆளோடது தான்…”
“அவர் வந்து கேட்டா….?”
“அதெல்லாம் வரமாட்டாரு எடுத்துட்டுப்போ…”
“……”
“அவர் இப்போலாம் சாப்பாடு வாங்க வரதில்ல, அதான் சொன்னேன். நாளைக்கும் சாப்பாடு வாங்க வரும்போது இந்த கூடையையே கொண்டு வா… பச்சை பெயிண்ட் அடிச்ச நடு வீட்டுக்குத்தான குடிவந்திருக்க…”
“உனக்கு எப்படித் தெரியும்? நானே இன்னிக்கு மதியம்தான் குடிவந்தேன்”
“இந்தத் தெருவுல வேறெந்த வீட்டுக்கு அடிக்கடி புதுசா ஆள் வரப்போகுது… அந்த வீடு ஒரு மாதிரி… ராசி இல்லாத வீடு.”
சட்டென்று நெற்றி சுருங்கியது. அரைநொடியில் ஏதேதோ யோசித்தான்… ஆனால் தன்னை இயல்பாய்க் காட்டிக்கொள்ள நினைத்து எதுவும் பேசாமல் கூடையை வாங்கிக்கொண்டு கிளம்பினான்.
‘அந்த வீடு ஒரு மாதிரி…’
வீட்டுக்கு வந்ததும் அந்த வார்த்தைகள் ஏதோ செய்தன. என்ன அர்த்தத்தில் சொன்னாள்? ஏன் சொன்னாள்? சாப்பிட உட்கார்ந்தவன் பொட்டலத்தை மடித்து வைத்துவிட்டு தெருவில் இறங்கிப் பார்த்தபோது அழிக்கப்பட்ட கரும்பலகையைப் போல் கிழவி நின்ற இடம் காலியாக இருந்தது.
.
ஏற்கனவே பலமுறை ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகக்காட்சிகள் மாதிரிதான் தொடர்ந்தது… ஒவ்வொரு நாளும் அவனுக்கான சூடான இரவு உணவு பொட்டலமிடப்பட்டிருக்கும். அவன் கொண்டுவரும் கூடையில் எதுவும் பேசாமல் எடுத்துவைப்பாள். அவனும் ஒன்றும் சொல்லாமல் காசை கொடுத்துவிட்டு சாப்பாட்டுக் கூடையை எடுத்துக்கொண்டு போவான். திடீரென்று மௌனத்தை உடைத்தபடி அவளாகவே பேசுவாள்.
“வாடகை எவ்வளவு சொன்னாங்க?”
“ஒன்பதாயிரம்…”
“அதிகம்தான்…”
“அதிகமா??? எவ்வளவு பெரிய வீடு! ஒன்பதாயிரம் அதிகங்கற??”
“எடுப்பான வீடு தான்… ஆனா ஆட்கள் வர யோசிப்பாங்க…”
“ஏன்??”
அதைத் தாண்டி பேச விரும்பாதவளாய் “இன்னிக்கு தோசை…” என்று கூடையை நீட்டினாள். அவனும் தானாகவே எதுவும் தெரிந்துகொள்ள விரும்பாதவனாகத் தன்னை காட்டிக்கொள்ள நினைத்தான்.
தினமும் அவன் சாப்பாடு வாங்கிப் போனதும் தூக்குச் சட்டிகளை எடுத்து வைக்கத் தொடங்கிவிடுவாள், ஏதோ அவன் ஒருவனுக்காக மட்டுமே கடை விரித்திருப்பது மாதிரி.
அவளாகவே ஒருநாள் தழதழத்தக் குரலில் கேட்டாள்…
“வந்து ஒருவாரத்துக்கு மேல இருக்கும்ல?”
“ஆமா…”
“நீயும் கிளம்பிட மாட்டியே?”
புருவம் தானாக உயர்ந்தது “நான் ஏன் போகப்போறேன்?”
“இல்ல… இதுக்கு முன்ன அங்க குடியிருந்தவங்களும் உன்னமாதிரி தனிகட்டைங்கதான். என்ன ஏதுனு தெரியாது… திடீர்னு யாருகிட்டயும் எதுவும் சொல்லாம கொள்ளாம கிளம்பிப் போயிட்டாங்க…”
“இதானா… நான் வேறேதோ நெனைச்சு பயந்துட்டேன்…”
சிலநிமிடம் மௌனமாக இருந்தவன் ஏதோ தோன்றியதும் “வாடகை ஏத்திருவாங்களோ?”
கிழவியின் சிரிப்பு, நெளியும் முகச்சுருக்கங்களின் மத்தியில் ஒரு கீறலாய் எட்டிப்பார்த்தது, “நல்ல விவரமான ஆளுதான்டே நீ! வாடகையெல்லாம் ஏத்த மாட்டாங்க..”
“அப்புறம் ஏன் காலி பண்ணிப் போறாங்க?”
சிலநொடிகள் முன்பு கிழவியின் முகத்திலிருந்த சிரிப்பு ஒரு கற்பனையைப் போல் மறைந்துபோனது. தன் குழைந்த முகத்தை இறுக்கமாக்கிச் சொன்னாள் “காலி பண்ணிப் போகல… காணாம போயிருவாங்க….”
அவன் ஏதோ கேட்க நினைத்தபோது “இன்னிக்கு இடியாப்பம்..” என்று சொல்லி கூடையை நீட்டினாள்.
.
இதற்குமுன் குடியிருந்தவர்களுக்கு இத்தனை பெரிய வீடுமா போதவில்லை இல்லை இதைவிடத் தேவை பெரிதாகி விட்டதா? அவர்கள்தான் வீட்டை காலிசெய்து போகவில்லையே… காணாமல் போய்விட்டார்கள்! யாருக்கும் தெரியாமல்! காணாமல் போனால் அந்த இடத்தில மிஞ்சுவது எது? முதலில் காணாமல் போவதென்றால் என்ன?
அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
இன்னொரு சுற்று விஸ்கி அருந்தினான். தொடர்ச்சியாய் நான்கைந்து சிகரெட்கள் புகைத்தான். எரிந்து முடித்த சிகெரட் துண்டுகளை கார்ப்பெட் மீதே வீசிவிட்டு அடுத்ததை எடுத்து புகைத்தபடியே நடந்து கொண்டிருந்தான். தூக்கம் வரவில்லை. மிச்சமிருக்கும் விஸ்கியையும் காலிசெய்துவிட்டுப் படுத்தான்.
அகண்ட பால்வெளியில் கண்ணுக்குத் தெரியாத புள்ளியில் சுழன்றுகொண்டிருக்கிறான். அவனைப் போல் நகரத்தின் பல முகங்கள் தனித்தனி கோல்களாய் தன் விட்டத்துக்குள் சுழன்று கொண்டிருக்கின்றன. திடீரென்று அவன் வெடித்து மறைந்துபோகிறான். ஆனால் அகண்ட வெளியில் சிறு சலனமும் இல்லை. சுவடில்லாமல் பால்வெளியில் காணாமல் போனவன் சிறு முட்டைக்குள் விழித்துக் கொள்கிறான். மிகுந்த பிரயாசைக்குப்பின் உடலை அசைத்து முட்டை ஓட்டை உடைத்து வெளியேறவும், முட்டையிலிருந்து வெளிவந்த முதல் மனிதன் என்று கைதட்டி வரவேற்கின்றனர்.
“இனி இவன் மீது நம்ம தேவைகளைச் சோதிச்சுப் பார்க்கலாம்…”
பிடிக்காத உணவுகளும் மருந்துகளும் கொடுக்கப்பட்டு அவன் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறான்.
அவனது கூண்டில் வைக்கோல் நிரப்பப்பட்டு அதன் மீது அவனை இருத்தி கதவை அடைக்கின்றனர்.
“இன்னும் கொஞ்ச நாளுல இவன் முட்டை போட்டுருவான்…”
“பெரிய சாதனைதான்…”
வெளியே பேச்சு ஓய்ந்து போனதும் பயத்தில் இரும்புக்கம்பியைப் பிடித்து உலுக்குகிறான். கம்பிகளின் நடுவே தன் சிறிய கைவிரல்களை விட்டுத் துழாவிப் பார்த்தான்… என்ன அதிசயம்! சாவி பூட்டிலேயே தான் இருக்கிறது. இத்தனை நாட்களாய் தன் கூண்டு பூட்டப்படவேயில்லை! தன்னைத்தானே நொந்துகொண்டு மெதுவாகக் கூண்டைத் திறந்து வெளியேறுகிறான். சுற்றிலும் அதேபோன்ற பல கூண்டுகள், பூட்டப்பட்டு சாவி அதிலேயே இருக்கிறது! எல்லா கூண்டுக்குள்ளும் விசித்திரமாய் வெவ்வேறு உருவங்கள்… ஆனால் இவனைத்தவிர யாரும் தப்பித்துப்போக முயலவில்லை. கூண்டுக்கம்பிகளில் அழுத்தமாய் முகம்புதைத்து இவனையே விசித்திரமாக வெறித்துக் கொண்டிருக்கின்றன.
கூண்டைவிட்டு வெளியேறிவன் ஒளிந்துகொள்ள மேசை மீது அங்குமிங்கும் ஓடிய போது, அவன் வெளிவந்த உடைந்த முட்டை ஓடு கண்ணில்பட்டது. அதைச்சுற்றி இன்னும் சில குஞ்சு பொறிக்காத முட்டைகள்… மேசையின் மீதிருக்கும் சோதனைக் குடுவைகளுக்குப் பின்னால் மறைந்து ஒளிந்தோடி பொறிக்காத முட்டைகளைத் தட்டுகிறான். எதுவும் திறக்கவில்லை. நடுக்கத்தோடு தொடர்ந்து தட்டுகிறான்…
ஒன்று… இரண்டு… மூன்று…
பொத்… பொத்… பொத்…
“இங்க இருந்த அந்த முட்டை மனுசன் எங்க? திடீர்னு காணாம போயிட்டான்…”
பேச்சுக்குரல் கேட்டு பயந்துபோய் தான் வெளிவந்த பாதிஉடைந்த முட்டை ஓட்டுக்குள்ளேயே திரும்பவும் நுழைய முயல்கிறான். பாவம்! அவனால் முடியவில்லை. யாரால்தான் முடியும்! தன் உடலை இன்னும் குறுக்கி வளைத்து முயன்றபோது…
“இதோ இங்க இருக்கான்… எப்படி இவனுக்கு மட்டும் தப்பிக்கத் தோணுச்சு?”
வெள்ளை உறையிட்ட பெரிய கரங்கள் அவனை நோக்கி நீளுகின்றன…
“என்ன விடுங்க நான் காணாம போகணும்…”
உரக்கச் சிரிப்பு சத்தம்…
“என்ன விடுங்க நான் காணாம போகணும்…”
தூக்கம் கலைந்து எழுந்து பார்த்தான்…
பெரிய படுக்கையறையின் இரவு விளக்கு வெளிச்சத்தில் முட்டை ஓட்டின் கீறல்களாய்த் தெரியும் பெயின்ட் உரிந்த சுவரை வெறித்தபடியே உட்கார்ந்திருந்தான்.
அடுத்தநாள் அவனாகவே கிழவியிடம் கேட்டுவிட்டான்
“காணாம போனவங்க என்ன ஆனாங்க?”
“அதலாம் ஒரு தகவலும் இல்ல! ஆனா ஒண்ணு என்னதான் ஓடி போனாலும் காசுகொடுத்து வாங்குன எல்லா பொருளையும் அப்படியே போட்டுட்டா போவாங்க!..” என்று கிழவி சொன்னபோதுதான் அவனுக்குப் புரிந்தது. வெவ்வேறு ரசனைகளுடன் அவன் வீட்டில் நிறைந்திருக்கும் பொருட்கள் எல்லாம் இப்படிச் சேர்ந்ததுதான்.
மிகுந்த பிரயாசையுடன் முகத்தை சகஜமாக வைத்துக்கொண்டு சொன்னான், “யாருக்கும் தெரியாம திடீர்னு வீட்ட விட்டு ஓடிப்போகும்போது எல்லா பொருளையும் நிதானமா மூட்டை கட்டியா கொண்டுபோக முடியும்…? அவங்களுக்கு என்ன பிரச்சனையோ?”
கிழவி தன் சுருங்கிய முகத்தை அவனது முகத்துக்கு மிக அருகில் கொண்டுபோய் மெல்லச் சொன்னாள் “அப்படி ஓடிப்போறவங்க வாசல்ல செருப்பையுமா விட்டுப் போவாங்க?”
.
கனகராஜ் ப்ரோக்கருக்கு மறுபடியும் போன் செய்து பார்த்தான். இப்பவும் சுவிட்ச் ஆஃப். எல்லா வீட்டுத் தரகர்களும் ஒரே மாதிரிதான். வேலை முடிந்ததும் இப்படித்தான்.
திடீரென்று, தானும் யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு காணாமல்போக முடிவு செய்தால் என்ன பொருட்களை எடுத்துபோவது? சுற்றுமுற்றும் பார்த்தான். இந்த வீட்டில் அவன் பயன்படுத்தும் எல்லாப் பொருட்களும் யாரோ ஏனோ விட்டுப்போனதுதான். அவை இன்று அவனுடையது. நாளை அவனும் இல்லாமல் போய்விடலாம்… வேறொருவன் வருவான். அப்போது அந்தப் பொருட்கள் அவனுடையதாகிவிடும்.
சிரித்துக் கொண்டான். இதேமாதிரி விசித்திரமாக இதற்குமுன் யோசித்ததில்லை. ஒருவேளை அந்தக் கிழவி கதைகட்டி விட்டிருக்கலாம். அவளும் கூட வீட்டு ப்ரோக்கராக இருக்கலாம். இப்போதெல்லாம் யார்யாரோ வீட்டுத் தரகர்களாக இருக்கிறார்கள். கொஞ்சம் விவரமும் ஆள் பழக்கமும் இருந்தால் போதும்.
தன்னை வீட்டைக் காலிசெய்ய வைத்துவிட்டு வேறு யாருக்காவது இதை வாடகைக்குக் காட்டி காசு பார்க்க நினைத்திருக்கலாம். இல்லையென்றால் நான்கு இட்லிகள் விற்று அவள் எப்படி வாழ்க்கை நடத்த முடியும்?
ஏதோ புரிந்தவனாய் உள்ளூரச் சிரித்துக்கொண்டு getting lost பாடலை மியூசிக் சிஸ்டத்தில் ஓடவிட்டு பாடல் வரிகளை சப்தமாய் முணுமுணுத்தான்.
லேசான உஷ்ணக் காற்று வீசியது. மதிய உணவை தாமதமாகவே எடுத்திருந்தான். கண்கள் சொருகவும் உள்படுக்கையறைக் கட்டிலில் சரிந்தான். தூக்கம் எல்லாவித எண்ண ஓட்டங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து இமைகள் அயர்ந்தபோது திடீரென்று சப்தம் கேட்டு விழித்தான்.
ஏதோ உடைந்த சப்தம்…
தூக்கத்தை உதறி எழுந்தவனுக்கு மாலைநேர இளவெளிச்சமும் கண்கூசியது. அவனை எழுப்பிய சத்தம் இப்போது வேறோரு ஒலி உருவம் எடுத்திருந்தது.
பொத்… பொத்… பொத்…
எதையோ எதிலோ மோதுவதைப் போல… இல்லை தரையில் ஏதோ குதிப்பதைப் போல. ரப்பர் பந்தாகத்தான் இருக்க வேண்டும்.
பொத்… பொத்… பொத்…
ஒன்று… இரண்டு… மூன்று…
இப்போது நடுக்கூடத்தைத் தாண்டி சப்தம் வரும் வரவேற்பறைக்கு வந்தான். சீரான இடைவெளியோடு கேட்ட சப்தம் கொஞ்சம் கொஞ்சமாய் காற்றில் கரைந்து ஒரு புள்ளியில் அணைந்துபோனது. எதிரே சாளரத்தைப் பார்த்தான். கண்ணாடி ஜன்னல் ஓரத்தில் உடைந்திருந்தது. தடித்த கார்ப்பெட்டின் மேல் கண்ணாடித் துகள்கள் முட்டைஓட்டுச் சிதறல்களாய்ச் சிதறியிருந்தன.
ஜன்னல் கதவை வெளிப்பக்கமாய் இடதும்வலதும் திறந்து எட்டிப் பார்த்தான். இரு சிறுவர்கள் வீதியில் எதிரெதிர் திசையில் ஒருவருக்கொருவர் முதுகைக் காட்டிக்கொண்டு தூரத்தில் ஓடிக்கொண்டிருந்தனர். முகம் தெரியவில்லை. ஒருவன் கையில் கிரிகெட் மட்டையோடு ஓடுவது தெரிந்தது. முன்பக்கத் தோட்டத்தைக் கடந்து வாசல் கேட்டை அடைந்தபோது இரு சிறுவர்களையும் காணவில்லை.
‘எங்கப் போனாலும் இந்தப் பசங்க தொல்லை…’ முணுமுணுத்துக் கொண்டான். பயந்து ஓடியவர்கள் பந்தைக் கேட்டு திரும்பி வராமலா போய்விடுவார்கள்?
வரவேற்பறைக்கு வந்து பந்தைத் தேடினான். டிவி ஸ்டாண்டுக்கு அடியில் குனிந்து பார்த்தான். கிட்டத்தட்ட தரையோடு தரையாய்ப் படுத்தபடி சோபாவின் கீழே தேடினான். நான்கு மரக்கால்கள் கொண்ட ஆளுயரக் கண்ணாடியின் அடியிலும் இல்லை. படுக்கையறையிலும் தேடிப் பார்த்தான். சமையலறை வரை பந்து உருண்டு போயிருக்க வாய்ப்பில்லைதான், இருந்தும் அங்கும் தேடிப்பார்த்தான். கிடைக்கவில்லை.
பலநாட்களுக்குப் பின் கீழே குனிந்து படுத்தெழுந்து வீட்டுக்குள் அங்குமிங்கும் நடந்து பந்தைத் தேடியதில் வியர்த்திருந்தது. இவனைத் தவிர யாருமற்ற வீட்டில் அதை யாரும் ஒளித்து வைத்திருக்கவும் வாய்ப்பில்லை.
ஆனால் சிறுவயதில் அப்படி நம்பியிருந்தான். வெடிப்புவிட்ட குட்டையான சுவரில் தனியாக பந்தை எறிந்து விளையாடும் போதெல்லாம் அந்தச் சுவருக்குள் இவனைப் போல், தனியாக விடப்பட்ட ஒரு சிறுவன் ஒளிந்துகொண்டு பந்தை பதிலுக்குப் பிடித்து எறிவதாகவே நினைத்திருந்தான்.
வியர்த்த முகத்தைத் துடைத்துக் கொண்டு மொட்டை மாடியில் போய் நின்று வீதியைப் பார்த்தான். ஆளிருக்கும் வீடுகள் மட்டும் ஏசி சத்தத்தில் மூச்சு விட்டுக் கொண்டிருந்தன. அகண்ட வீதியின் பேச்சுகளற்ற காற்று கனமற்ற இறகைப்போல் வருடியது. கிழவிக்குப் பிறகு இந்தத் தெருவில் அவன் பார்த்தது அந்த முகந்தெரியாச் சிறுவர்களைத்தான்.
இந்த நிமிஷமே வானம் இரண்டாகப் பிளந்து ஏதோ ஒரு அமானுஷ்யம் அந்த வீட்டோடு அவனையும் சுற்றி இருக்கும் மரங்களையும் சுவடில்லாமல் விழுங்கிப் போனாலும் யாருக்கும் எதுவும் தெரியப்போவதில்லை. அப்படியான எண்ணம் எழவும் லேசான பதட்டம் கலந்த புன்முறுவலுடன் படியிறங்கி வீட்டுக்குள் வந்தான். ஹாலின் மூங்கில் நாற்காலியில் சாய்ந்து டிவியை இயக்கியபோது மீண்டும் அந்தச் சப்தம் இடைமறித்தது. டிவியை அணைத்தான். மிகவும் தெளிவாகவும் சப்தமாகவும் கேட்டது.
பொத்… பொத்… பொத்…
ஒருவேளை அந்தச் சிறுவர்கள் அவனுக்கே தெரியாமல் வீட்டுக்குள் புகுந்து பந்தைத் தேடி எடுத்துவிட்டார்களா? அது எப்படி முடியும்?
வெளியே எட்டிப் பார்த்தபோது வீதி வெறிச்சோடிக் கிடந்தது. ஆனால் எங்கோ பந்து குதித்துக் கொண்டே இருக்கும் சப்தம்…
பொத்… பொத்… பொத்…
ஆனால் கடந்தமுறை மாதிரி கொஞ்சகொஞ்சமாய் அந்த ஓசை அணைந்துபோகவில்லை. உள்ளறையை நெருங்கவும் அந்தச் சப்தம் இன்னும் உரக்கக் கேட்டது. முன்பைவிட இன்னும் உக்ரமாய்… ரப்பர் பந்தை இத்தனை ஆத்திரத்தோடு எறிய முடியுமா? அவனது புருவத்துக்கு நேர்மேலே யாரோ அமர்ந்து கொண்டு நெற்றியில் பந்தை எறிந்து விளையாடுவதைப் போல் தலைவலித்தது.
நிச்சயம் நடுவறையிலிருந்துதான் சப்தம் வருகிறது. மேசைக்கு அடியிலோ இல்லை அவன் சிறுவயதில் நம்பியிருந்ததைப் போல் சுவருக்குப் பின்னாலிருந்தோ!
“யாரது? எங்க ஒளிஞ்சு இருக்கீங்க?”
பாழடைந்த வீட்டைப் போல் அவனது குரல் எதிரொலிக்கவில்லை. அதேநேரம் தடித்த தரை விரிப்புகள் அவனது வார்த்தைகளை வெளியேவும் சிந்தவில்லை. பந்து குதிக்கும் சப்தம் மட்டுமே நிறைந்து கேட்டது!
ஆளுயரக் கண்ணாடி முன்பு போய் நின்றான். எந்த உருவமும் அவன் பின்னால் திடீரென்று கையில் ரப்பர் பந்தோடு தோன்றி அச்சுறுத்தவில்லை. ஆனால் அந்தக் கண்ணாடியை நெருங்கநெருங்க பந்து எங்கோ பட்டு வேகமாகத் திரும்பும் சத்தம் கேட்கவும் தலை இன்னும் கனத்தது.
இதயத்துடிப்பும் எறிபந்தும் ஒரே அலைவரிசையில் வேகமாய் ஒலித்தன. கண்ணாடியைச் சுற்றி இருக்கும் மர வேலைப்பாடுகளைத் தடவிப் பார்த்தான்… பின் நடுக்கண்ணாடியைத் தொட்டுப் பார்த்தான்…
கொழகொழவென இருக்கும் ஏதோ ஒன்றுக்குள் கைவிட்டதைப் போல் உணர்ந்த நொடியில் அது நிகழ்ந்து முடிந்தது. அவன் கண்ணாடிக்குள் நுழைந்திருந்தான்!
.
ஒருவித பசபசப்பான திரவம்… கண்களை முழுவதுமாய்த் திறக்க முடியவில்லை. ஏதோவொன்று அவனைக் கடந்து போவதாகத் தோன்றியது. அவனது உடல் குழைந்து போவதாய் உணர்ந்தபோது அந்தத் திரவத்திரையைத் தாண்டி உள்ளே சென்றிருந்தான். கண்ணாடியின் பின்பக்கத்தில் பந்தை எறிந்து பிடித்துக் கொண்டிருந்த பெரியவர், அவன் வரவை உணர்ந்ததும் விளையாடுவதை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்து முறுவலித்தார்.
“உள்ள வர இவ்வளவு நேரமா?”
ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தான். பெரியவரின் தலைமுடியைப் போல் புறங்கை ரோமங்களும் நரைத்திருந்தன. வயதேறிய முகத்தில் சோர்வோ தளர்வோ இல்லை. மடிப்புக் கலைந்து சுருக்கங்கள் படர்ந்த சாதாரண பருத்தி வேட்டியும் இஸ்திரி போடாத கட்டம்போட்ட அரைக்கைச் சட்டையும் அணிந்திருந்தார்.
ஒரு சிறுவனின் குதூகலத்துடன் சொன்னார் “அதான் நீ வந்துட்டியே இனிமே தனியா பந்து எறிஞ்சு விளையாட தேவயில்ல. ஒண்ணு பண்ணுவோம். சின்னதா எங்கயாச்சும் கட்ட மாதிரி கெடைக்குதானு பாக்குறேன். நம்மபாட்டுக்கு அப்புறம் தட்டித்தட்டி விளையாடிட்டு இருக்கலாம்… என்ன சொல்ற….?”
“யார் நீங்க?’’
“சரி நீ யாரு?”
“என்னய்யா ஒளருற? இது என்ன இடம்?”
காலில் ஏதோவொன்று உரசுவதைப் போல் உணர்ந்து அவசரமாய் உதறவும், நெற்றி மட்டும் வெள்ளையாய் இருக்கும் கொழுத்த சாம்பல்நிற பூனை பயந்து ஓடியது.
கண்ணாடியின் பின்பக்கத்தைப் பார்த்து தலை பின்னிக் கொண்டிருந்த பெண்ணின் கணுக்காலில் போய் பூனை உரசத் தொடங்கியது. அவளின் அடர்ந்த சுருள்சுருளான கருங்கூந்தல் பிருஷ்டம் வரை ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. நெருக்கமான இரவு உடையில் தெரியும் அவளது உடல்வாகு சிலநிமிடம் அவனை மௌனமாக்கியது. தன் பின்புறம் விழும் பார்வையை உணர்ந்தவள் திரும்பி அவனைப் பார்த்து “வா உட்காரு….” என்றாள்.
ஒன்றும் விளங்காமல் மீண்டும் பெரியவரிடம் கேட்டான் “யாரு நீங்க?”
“நாங்கலாம் உனக்கு முன்னவே இந்த வீட்டுக்கு குடிவந்தவங்க…. ஆனா இப்போ வாடகை கொடுக்கறதில்ல…”
அவரது சிரிப்பொலி பளிங்குப் போலிருக்கும் கண்ணாடித்தரையில் சிதறி உடைந்தது. சிரிக்கையில் மெலிதான தங்கநிற பிரேம் போட்ட மூக்குக்கண்ணாடி லேசாய் இடம்பெயரவும் ஆள்காட்டி விரலால் தள்ளிவிட்டுக் கொண்டார்.
“ஆரம்பத்துல இப்படித்தான் ஒண்ணும் புரியாது. செட்டில் ஆக கொஞ்சம் டயம் எடுக்கும். நானும் ஒன்ன மாதிரிதான். உள்ள வந்த அன்னிக்கு டோட்டலி கண்புயூஸ்ட்… இப்போ நோ பிராப்ளம்…”
“என்ன உளர்றீங்க? எப்படி வெளிய போறது?”
“கேட்டியா… இந்தப் பையனுக்கு வந்த முதல் நாளே எப்படி வெளிய போகணும்னு தெரியுணுமாம்?”
அப்பெண் கீழே குனிந்து பூனையைத் தூக்கி அணைத்து தடவிக்கொடுத்தபடி இவனைப் பார்த்துச் சிரித்தாள்.
“தம்பி! பர்ஸ்ட் உட்காரு. ஏன் பதட்டப்படற? ஒன்னய யாரும் அடச்சு வைக்கல…”
“இங்கிருந்து எப்படி வெளியே போகணும்?” பசித்த விலங்கின் குரூரத்தோடு பெரியவரை வெறித்தான். பின் ஏதோ முடிவெடுத்தவனாய் விறுவிறுவென வந்த பாதையில் வேகமாக ஓடினான். பிசுபிசுப்பான திரவத்திரையை ஒரு குருடனைப் போல் தடவிதடவி கடந்து போனான். பாதையில்லாத முட்டுச்சந்து போலிருந்தது. கண்ணாடியின் பின்பக்கத்தில் மோதிநின்று ஏதோவொன்றைத் தட்டினான். கதவு திறக்கவில்லை. கதவு என்ற ஒன்று இருக்கிறதா? தன் பசபசப்பான விரல்களை மடக்கி முஷ்டியால் ஓங்கிக் குத்தத் தொடங்கினான்.
பொத்… பொத்… பொத்…
பின்னால் சிரிப்பு சப்தம் கேட்டது.
“தம்பி வாங்க.. உங்க வயசுப் பசங்களுக்கு எல்லாம் ரொம்ப ஈசியா நடக்கணும்… போய் தட்டுனா திறந்துருமா?”
“பின்ன எப்படி வெளிய போறது? நீங்க பாட்டுக்கு சிரிச்சிட்டு இருக்கீங்க…”
“சரி இவ்வளவு அவசரமா வெளிய போய் என்ன செய்யப்போற…?”
அவன் முதலில் பதிலேதும் சொல்லவில்லை.
“இதுக்குள்ளேவா அடைஞ்சு கிடக்க முடியும்?”
“வெளிய மட்டும்?” என்று சிரித்த பெரியவரின் தோள்கள் இரண்டுமுறை குலுங்கி நின்றன.
“உனக்கு ஒரு போன் வந்துகூட நான் பார்த்ததில்ல…”
“இவ்வளவு நாளா என்னய வேவு பார்த்துட்டு இருந்தீங்களா?”
“அந்த அளவுக்கு நீ ரொம்ப சுவாரசியமா இல்ல… சும்மா எப்பயாச்சும் பாப்பேன்… ஆபிஸ் போயிருப்ப… இல்ல ராத்திரி வீட்ல இருக்கும்போது சிகரெட் புடிச்சிட்டு தூக்கம் வராம அலைவ…“
அவன் பதிலேதும் சொல்லாமல் உள்ளே நடந்து போனான். அந்தப் பெண் இப்போது தலைமுடியைப் பின்னல் போட்டிருந்தாள். அவனை விட வயது கூடியவளாகத் தெரிந்தாலும் இரவு உடையின் இறுக்கத்தில் பொங்கி வழியும் அவளின் திரட்சி சுற்றி இருக்கும் கண்ணாடி பிம்பங்களில் இன்னும் செறிவாகத் தெரிந்தது. கூந்தலில் மல்லிகைப்பூ வைத்திருந்தாள். அவனைப் பார்த்துச் சிரித்தபடி கைவிரல் நகங்களில் பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தவள் தலையைத் தூக்கிக் கேட்டாள்.
“சும்மா ஒரு வாக்கிங் போலாமா?”
“எங்க?”
“இங்கதான்… கண்ணாடிக்குள்ள…”
குழம்பித்தான் போயிருந்தான், இருந்தும் சரி என்று தலையசைத்தான்.
.
தட்டையான கண்ணாடி நடைபாதையில் நின்றபடி, கண்ணாடி மரங்களில் அசையாத இலைகளாய்த் தொங்கும் பலவடிவக் கூரிய கண்ணாடிச் சிதறல்களையும் மணம் வீசாத கண்ணாடி மலர்களையும் காட்டினாள். தூரத்தில் கண்ணாடிச் சில்கள் சிதறும் சப்தத்தோடு விழும் அருவியைக் காட்டினாள். இருவரின் கால்களுக்கு இடையே நுழைந்தபடி வாலைத்தூக்கிக் கொண்டு சாம்பல்நிறப் பூனை பின்னால் வந்துகொண்டிருந்தது.
நெருக்கமாக நடந்து போகையில், அவளின் உடல் வாடையோடு மல்லிகைப்பூ வாசமும் அவனுள் ஒருவித கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அவளாகவே சொன்னாள் “இந்தப்பூ நான் உள்ள வந்த அன்னிக்கு தலையில வச்சுருந்தது இன்னும் வாடல…”
அவர்கள் ஒரு கண்ணாடி பேழைக்குள் நடந்து போய்க்கொண்டிருந்தனர். சுற்றிலும் இருவரின் முகமும் வெவ்வேறு பிம்பங்களாகப் பிரதிபலித்து பின் தன் பழைய உருவை மீட்டுக்கொண்டன.
“இப்படியே இந்த வழியா போனா அடுத்தது?”
“இதே மாதிரி இன்னொரு கண்ணாடி அறை வரும்?”
“அதைத் தாண்டி…?”
“அதே மாதிரி இன்னொன்னு… அப்புறம் இன்னொன்னு.. அதுக்கப்புறம் நான் போனதில்ல…”
“ஏன்?”
“எதுக்குப் போகணும்?”
“வெளிய போறதுக்கு வழி இருந்துச்சுனா?”
“வெளிய போய்?”
“யாராவது தேடினா?”
“யாரு தேடுவா?”
உடல் குலுங்கச் சிரித்தாள். காதோரம் வந்துவிழுந்த ஒற்றை முடியைப் பின்னுக்குத் தள்ளியபடி சொன்னாள், “எங்க மூணு பேரையும் இதுவரை யாரும் தேடுனது இல்ல…”
“மூணு பேரா?? நீங்க ரெண்டு பேர் அப்புறம் இந்தப் பூனையத் தான் பார்த்தேன்…”
“இன்னொருத்தர் இருந்தாரு,. நாற்பது வயசு ஆளு… நீ உள்ள வரும்போதுதான் வெளிய போனார். பாக்கலியா…?”
“உள்ள வரும்போதா?”
“ஆமா நீ கண்ணாடிக்குள்ள வரும்போது. பாக்கல? பச்சைச் சட்டை?” கண்கள் ஜொலிக்க அவனைப் பார்த்தாள்
“இல்ல…”
“அப்போ சரிதான்… பாக்க முடியாதுனு பெரியவர் சொன்னார்…”
“அப்போ வந்த வழியாவே வெளிய போகலாமா?”
“எப்போவும் போறதுக்கும் வரதுக்கும் ஒரே வழிதானே…”
“நான்தான் முயற்சி பண்ணேனே… அப்போ ஏன் திறக்கல?”
“யாராவது வெளிய இருந்து உள்ள வரும்போதுதான் திறக்கும். அப்போதான் உள்ளயிருக்கறவங்க வெளிய போக முடியும்… அப்பதான சமன்பாடு சரியாவரும்…
அந்த நடுவயசுக்காரருக்கும் இவ்வளவு நாளா வெளிய போகணும்னு எண்ணம் இல்ல. திடீர்னு ஒரு நாள் நம்ம வாழ்றது முட்டைக்குள்ள அடைஞ்சு கிடக்குற வாழ்க்கை. எனக்கு விடுதலை வேணும். அது இதுன்னு என்னென்னமோ பேசினார். நீங்க சொல்ற மாதிரி விடுதலைனு ஒண்ணு கிடையாதுனு பெரியவர் சொல்லியும் அவரு கேட்கல. வெளிய போயே ஆகணும்னு ஒத்தக் காலுல நின்னாரு. அன்னிக்குதான் அந்தப் பந்து வந்து கண்ணாடில மோதி உள்ள விழுந்துச்சு. அதை எடுத்து வச்சுகிட்டு தான் கண்ணாடி பின்பக்கம் தொடர்ந்து எறிஞ்சுட்டே இருந்தாரு. சத்தம் கேட்டு நீ வருவ.. நீ வந்தா அவர் வெளிய போகலாம்னு திட்டம்!”
“வேணும்னே தான் என்னைய இங்க மாட்டிவிட்டீங்களா?”
“நீயும் எத்தனை நாள் தான் வெளிய தனியா இருப்ப?”
அவன் விரல்களை லேசாகப் பற்றினாள். அவன் அதை எதிர்பார்க்கவில்லை. அவளது வழவழப்பான உதடுகள் அவனது காய்ந்த உதடுகளில் முத்தமிட்டிருந்தன.
அடுத்த நிமிடம் வேறோருவளாய் “சரி வா நேரமாச்சு போகலாமா?” என்றபடி வந்த பாதையில் திரும்ப நடக்கத் தொடங்கினாள். அந்த முத்தத்தின் ஸ்பரிசத்திலிருந்து மீண்டு வர அவனுக்குச் சில விநாடிகள் பிடித்தன. பூனை சிக்கன் எலும்புத் துண்டை முன்னங்கால்களால் தட்டி விளையாடிக் கொண்டிருந்தது.
“நீ அன்னிக்கு போட்ட சிக்கன் துண்டுதான்! எனக்கு பூனை ரொம்ப பிடிக்கும். நீ வீட்ல இல்ல… கண்ணாடில தன்னைப் பார்த்து வேற ஒண்ணுன்னு நினைச்சு ஒரு கால தூக்கி அடிச்சுட்டு இருந்துச்சு. அப்போதான் உள்ள பிடிச்சுப் போட்டேன்…”
“இங்கிருந்து வெளிய போனவர் நமக்கு உதவுவாருல்ல…? ஒருவேளை வெளியாளு யார்கிட்டயாவது இங்க நடக்குறத சொல்லி உதவிக்கு ஆள் கூட்டிவர வாய்ப்பு இருக்குல்ல?”
“ம்ம்ம்… ம்ம்ம்… மாட்டாரு”
“ஏன்?”
“இங்கிருந்து வெளியே போன அடுத்த நிமிஷமே இப்படியொரு உலகம் இருக்குற நெனைப்பே மறந்து போயிரும்… ஆனா ஒரு விஷயம்!”
அவன் புருவங்களை இடுக்கி அவளை உற்றுப் பார்த்தான்.
“வெளியே போயிட்டா அப்புறம் காலத்துக்கும் நீயே நெனைச்சாலும் திரும்பி உள்ள வர முடியாது…”
.
அவனுக்கு அந்த மரச்சட்டகமிடப்பட்ட உலகம் விசித்திரமாகவும் வினோதமாகவும் கூண்டுக்குள் அடைபட்டிருப்பதைப் போலவும் இருந்தாலும் ஒருவிதத்தில் ஆசுவாசமாகயிருந்தது. முக்கியமாக காலம் என்ற ஒன்று அங்கு இருப்பதாகத் தோன்றவில்லை. ஒருவேளை இருக்கலாம். சுவர்க்கடிகாரமோ கைபேசியோ இல்லாததால் தெரியவில்லை. காலை அலாரம் வைத்து எழுந்து வேலைக்கு ஓட வேண்டாம் என்ற எண்ணமே அவனுக்குப் பரமதிருப்தியைத் தந்தது.
நகரத்தின் இரைச்சலற்ற நித்திய அமைதி. பெரியவரோ அந்தப் பெண்ணோ இவனிடம் பலமுறை பேசியிருந்தாலும் யாரும் தன்னை அறிமுகம் செய்துகொள்ளவில்லை. பெயரைக் கூட சொல்லவோ கேட்கவோ இல்லை.
நினைத்தநேரம் உறங்கி எழுந்து சட்டகத்தின் ஓரமிருக்கும் பூ வேலைப்பாடுகளை வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருப்பான். பெரியவரும் ஒரு பூங்காவில் இருப்பதைப்போல் எதிரே இருக்கும் கண்ணாடி பெஞ்சில் உட்கார்ந்திருப்பார். உள்ளங்கையில் பந்தைத் தூக்கி எறிந்து பிடித்தபடி இவனைப் பார்த்து “விளையாடலாமா” என்று கேட்டுச் சிரிப்பார்.
திடீரென்று சப்தமாய்ப் பாடுவார். “ராஜ ராஜ சோழன் நான்…”
பாடிமுடித்ததும் சிரித்தபடியே சொல்வார் “நான் பெரிய மன்னனாக்கும்…”
அவர் அடிக்கடி அதே பாட்டையே பாடிக் கொண்டிருந்தார். பெரியவரின் முகமும் உடலும் வயதுக்கு பொருந்தாதவொன்றாய் எப்போதும் உற்சாகமாக இருந்தது.
“கண்ணாடி முன்பக்கம் நின்னு பாக்குற முகத்துக்குத்தான் வயசாகும். சுருக்கம் விழும். அப்படியே குழைஞ்சு அழிஞ்சு ஒண்ணும் இல்லாம போகும். நம்ம கண்ணாடிக்கு மறுபக்கம் இருக்குறவங்க. நம்ம உடம்பு ஊற வச்ச திரவத்துக்குள்ள இருக்குற மாதிரி அப்படியே இருக்கும். எப்படி உள்ள வந்தோமோ அப்படியே…”
“கடைசி வரைக்கும்னா?”
“இந்தக் கண்ணாடிக் கூடு பாழாகுற வரை…”
திடீரென்று யாரோ வரும் காலடிச்சப்தம் கேட்டு மூவரும் ஒருசேர வெளியே பார்த்தனர்.
“இவனும் சொல்லாம கொள்ளாம எல்லா சாமானையும் அப்படியே போட்டுட்டு எங்கேயோ போயிட்டான். முன்னாடி இருந்தவங்களாச்சும் மாசக்கணக்குல இருந்துட்டு காணாம போனாங்க. இவன் ரெண்டு வாரம் கூட முழுசா இல்ல…”
யாரோடோ போனில் பேசிவிட்டு வீட்டில் அங்கங்கே சிதறிக் கிடக்கும் பொருட்களையும் படுக்கையில் கசங்கிக் கிடக்கும் ஜீன்ஸ் பேண்ட் டீ ஷர்ட்களையும் அலமாரியில் இஸ்திரி போட்டு அடுக்கப்பட்ட துணிமணிகளையும், வாசல் செப்பல் ஷூக்களையும் ஒரு மூட்டையில் அவன் கட்டுவது கண்ணாடி பின்பக்கத்தில் இருந்து தெளிவாகத் தெரிந்தது.
“என் ஐடி கார்டையும் மூட்ட கட்டிட்டான்…”
“நீ இருந்ததுக்கான கடைசி அடையாளமும் போச்சு….” என்று சிரித்தார் பெரியவர்.
தலையணையில் முகம் புதைத்திருப்பதைப் போல் அவர்கள் ஒருவரையொருவர் இடித்துத் தள்ளிக்கொண்டு கண்ணாடியின் பின்பக்கத்தில் முகத்தைக் கோணலாய் அழுத்திவைத்து வெளியே உற்றுப் பாரத்துக் கொண்டிருந்ததில், அவர்களின் மூக்கும் கன்னங்களும் புருவங்களும் ஏடாகூடமாக அமுங்கி விநோதமாகயிருந்தன.
மூட்டை கட்டியவன் மாடிப்படி ஏறும் சப்தமும் பூட்டிக் கிடக்கும் கதவு திறக்கும் கிரீச்சிடும் ஒலியும் கேட்டது. வெறுங்கையோடு கீழே இறங்கி வந்து டீப்பாயின் மேலிருக்கும் பச்சைவெள்ளை வயர் கூடையை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
அடுத்த நாள், வாசல் கேட் திறக்கும் சப்தமும் அதைத்தொடர்ந்து கார்பெட் தரை மீது ஆட்கள் நடந்துவரும் மெலிதான காலடி ஓசையும் கேட்டது.
“சார் நான் சொன்ன மாதிரி ஃபுல் ஃபர்னிஷ்ட்… ஜன்னல மட்டும் திறந்து வச்சுருந்தா போதும், காத்து சும்மா அவுத்துவிட்ட கன்னுக்குட்டி மாதிரி ஓடிவரும். சென்னையில இப்படி அமையுமா? உள்ள ரெண்டு பெட்ரூம் இருக்கு… போய்ப் பாருங்க…”
குழிகுழியான தடித்த முகத்திடம் கனகராஜ் புரோக்கர் சொல்லிக் கொண்டிருந்தார்.
“நம்மகிட்ட ஏற்கனவே பொருட்கள் நெறையா இருக்குலங்க…” என்று அவர் மனைவி அலுத்துக்கொண்ட போது, அம்மாவின் கையை உதறிய குழந்தை பெரிய ஹாலை பார்த்ததும் சந்தோஷமாய் தனக்குத்தானே ஏதோ பேசிக்கொண்டு கை தட்டியபடி ஓடியது.
“வீடு நல்லா பிரம்மாண்டமாதான் இருக்கு. ஆனா வீடு ஒருமாதிரின்னு கேள்வி பட்டேன்… நான் அதையெல்லாம் நம்புற ஆளில்ல… ஆனா இவ பயப்படுறா…”
“ஒரு மாதிரினா….?” என்று கேட்டார் புரோக்கர்.
“ஏதோ ராசி இல்லாத வீடு! வாடகைக்கு வரவங்க சொல்லாம திடீர்னு கிளம்பிப் போயிருவாங்கன்னு…”
“சார்! இதுக்கு முன்னாடி வாடகைக்கு இருந்த ஆட்கள் அப்படி…”
முதல்ல ஒரு வயசானாவர் தனியா இருந்தாரு. தன் பசங்களோட சொத்து விஷயமா சண்டை. முழு சொத்தையும் ஒரு ஆர்ஃபனேஜூக்கு எழுதி வச்சுட்டு எங்கேயோ போயிட்டாரு…
அடுத்து ஒரு டைவர்ஸ் ஆன பொம்பள இருந்துச்சு. அது ஒரு மாதிரின்னு அக்கம்பக்கத்துல பேச்சு. அதெல்லாம் நமக்கு எப்படி சார் முன்னாடியே தெரியும்? சின்ன வயசு பையன் கூட ஓடிப்போனதா கேள்வி. கடைசியா ஒரு நாற்பது வயசு ஆளு இருந்தாரு. கம்பெனில ஏதோ பிரெச்சன. காசு மேட்டர். ஒரே நைட்ல ஆளக்காணம்… இப்படி வந்து அமைஞ்சா நான் என்ன சார் செய்ய முடியும்? இல்ல வீடுதான் என்ன செய்யும்? அப்புறம் கொஞ்ச நாளைக்கு வீட்ட வேற யாருக்கும் வாடகைக்கு விடல. சின்ன ரிப்பேர் வேலை போயிட்டு இருந்துச்சு… வீட்டுவேலை முடிஞ்சதுக்கு அப்புறம் நீங்கதான் ஃபர்ஸ்ட் வரீங்க? நல்ல ஃபேமிலியா அமையுதா பாருன்னு ஓனரும் சொல்லிட்டாரு. இதுக்கு முன்னாடி எல்லாம் தனிக்கட்டைங்க… அதான் பிரச்சனை.”
குழந்தை ஒவ்வொரு அறையாக கையில் குரங்குப் பொம்மையோடு தத்திதத்தி ஓடிக்கொண்டிருந்தது.
“சார் வாங்க அப்படியே மாடிய காட்டிருறேன்… மேலயும் ஒரு சின்ன ரூம் ஒண்ணு உண்டு… பழைய பொருள் எல்லாம் ஓனர் அதுக்குள்ளதான் போட்டுப் பூட்டிவச்சுருக்காரு… அந்த ரூம தவிர மீதி எல்லாம் நீங்க புழங்கிக்கலாம்…”
குழந்தை ஆளுயரக் கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்துச் சிரித்தது.
கண்ணாடிக்குப் பின்னால் இருப்பவளின் கண்கள் அகல விரிந்தன.
“குழந்தை நல்லா புஸ்புஸ்னு அழகா இருக்குடா… அப்படியே என் குழந்தை மாதிரியே… என் குழந்தை தான்டா…”
அவனும் திடீரென்று பரப்பரப்பானான். எலும்பைத்துண்டை வாயில் கவ்விக் கொண்டிருந்த பூனையின் கழுத்தில் தொங்கும் மணியைக் கழற்றிச் சப்தம் எழுப்பினான்.
“தம்பி இது தப்பு… குழந்தைய ஏமாத்துறது நல்லதில்ல…வேணாம்…”
பெரியவரைப் பொருட்படுத்தவில்லை. இன்னும் வேகமாக மணியை அசைத்து சத்தம் எழுப்பினான்.
குழந்தை கண்ணாடியை நோக்கி மெல்ல நடந்து வந்தது.
“அப்படியே என் குழந்தைதான்… டேய்! எனக்கு என் குழந்தை வேணும்டா….”
“உனக்கு என்ன கிறுக்கு பிடிச்சுருச்சா… தம்பி! இது சரி கிடையாது…”
“ஏ பெருசு! சும்மா இருக்க மாட்ட…”
பெரியவரை வேகமாய்த் தள்ளிவிட்டான். பூனை சீறியபடி அவன் மீது பாய்ந்தது. வலியில் கத்திக்கொண்டு காலை உதறினான். ஆனால் விடாமல் பற்றிக்கொண்டு பிராண்டியது.
“சனியனே போ!!” அவள் பூனையை எட்டி உதைத்தாள்.
“டேய்! எனக்கு அந்தக் குழந்தை வேணும்டா…”
குழந்தை கைகளை கண்ணாடியை நோக்கி நீட்டியது. மாடியிலிருந்து ஆட்கள் பேசியபடி இறங்கி வரும் சப்தம் கேட்டது.
பெரியவர் கையில் கூரியக் கண்ணாடித் துண்டை ஓங்கியபடி அவனை நோக்கி வேகமாய் ஓடி வந்தார். பூனை நான்குகால் வேகத்தில் அவன்மீது பாய்ந்தது. குழந்தையும் அவனும் ஒரே நேரத்தில் கையை நீட்டினர். முட்டையின் மெல்லிய விறிசல் விடும் சப்தம்!
“நெக்ஸ்ட் ஸ்டாப் கோடம்பாக்கம்…” என்ற அறிவிப்பைத் தொடர்ந்து தோளில் தொங்கும் மடிக்கணினிப் பையை சரிசெய்தபடியே வெளியே எட்டிப் பார்த்தான். நுங்கம்பாக்கம் ரயில் பாலத்தின் கீழ் தார்ச்சாலையில் சாரைசாரையாய் நகரும் வாகனங்கள் நிமிடப்பொழுதில் பின்னுக்குப்போயின. ஒட்டுமொத்த நகரமும் அலுவலகம் முடிந்து அந்த மின்தொடர் வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருப்பதைப்போல் கூட்டம். நெருக்கி நிற்கும் பல முகங்களின் மூச்சுக்காற்று ஒருசேர அவன் பின்னங்கழுத்தில் உஷ்ணமாய் வீசியது. வியர்த்து நனைந்த சட்டை சுவரொட்டியைப்போல் முதுகோடு ஒட்டிக்கொண்டிருந்தது.
‘ராஜா ராஜ சோழன் நான்…’
வழக்கமான பாட்டு சப்தம் கேட்டு திரும்பிப் பார்த்தபோது, உள்ளொடுங்கிய வயிற்றோடு முகம் சுருங்கி உருவம் வற்றிய கிழவர் உரத்தக் குரலில் கூட்ட நெரிசலினூடாய்ப் பாடிக் கொண்டிருந்தார்.
“ராஜ ராஜ சோழனுக்கே இந்த நிலைமையா ?” என்று சிரித்த பச்சைச்சட்டைக்காரர் கிழவரின் வலது உள்ளங்கைக் குழிக்குள் சில சில்லறைகளைப் போட்டார்.
“நான் மன்னனாக்கும்… அதான் கப்பம் கட்டுறாங்க… பிச்சை இல்ல…”
சுற்றி நின்றிருந்த கூட்டம் கிழவரைப் பார்த்துச் சிரித்தது. அவரும் தன்னைப் பார்த்தே உரக்கச் சிரித்தார். கிழவரின் கருப்புப் பிரேம் போட்ட தடித்த மூக்குக்கண்ணாடி சிரிக்கையில் இடம்பெயர்ந்து விளிம்பில் வந்துநின்றது.
வெளியே எட்டிப்பார்த்தான். கோடம்பாக்கம் ரயில் நிலையத்தின் பெயர்ப்பலகை தெரிந்தது. உள்ளே வருவதும் வெளியே போவதுமாய் பல முகங்கள் ஒன்றையொன்று ஒரே நேரத்தில் முட்டிமோதிக் கடந்தன.
“உள்ள வரதுக்கும் வெளிய போறதுக்கும் ஒரே வழிதான்…” கூட்டத்தில் ஒருகுரல் அலுத்துக் கொண்டது.
மடிக்கணினியையும் பர்சையும் இறங்கியதும் சரிபார்த்துக்கொண்டான். வெள்ளைக் கைக்குட்டையால் முகத்தை அழுத்தித் துடைத்துக் கொள்ளவும் சோர்ந்த முகத்தின் கருப்புப் படிமங்கள் ஒட்டிக்கொண்டன.
ரயில் நிலையத்தின், ஏறி இறங்கும் நீண்ட படிக்கட்டுகளுக்கு இடையேயான நடைபாதையில் தன் வழக்கமான இடத்தில் அமர்ந்திருக்கும் கிழவி வாழைப்பழங்கள் போட்ட பிளாஸ்டிக் கவரை அவனிடம் நீட்டினாள்.
“இன்னிக்கு வாழைப்பழம்… இருபது ரூபாய்க்கு நாலு…”
கிழவி முகத்தின் சுருக்கங்கள் நூற்றுக்கணக்கான மண்புழுக்கள் போல் நெளிந்தன. அவளை உற்றுப் பார்த்துவிட்டு பதிலேதும் சொல்லாமல் வெறுமனே தலையசைத்தபடி பிளாஸ்டிக் பையை வாங்கிகொண்டு ரூபாய் தாளை நீட்டினான்.
ரயில் நிலையத்தை ஒட்டிய நீள்சதுர கண்ணாடி உணவகத்தைக் கடந்து சென்றபோது, உள்ளே சாப்பாடு மேசை மீது ஒருகையில் குரங்கு பொம்மையோடு உட்கார்ந்திருக்கும் குழந்தை, டாட்டா… என்று கண்ணாடியில் முகம் புதைத்து கைகாட்டியது. குழந்தையைத் தூக்கிக்கொண்ட அம்மா சாலையில் நிற்கும் அவனைப் பார்த்து கண்ணாடிவழியே ‘சாரி…’ என்ற சமிக்ஞையோடு முறுவலித்தாள். பிருஷ்டம் வரை அவளின் நீண்ட கருங்கூந்தல் கருப்புத் திரைச்சீலையாய் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது.
“ஒன் அப்பன் வீட்டு ரோடா?” ஆட்டோக்காரன் எட்டிப்பார்த்து திட்டிவிட்டு கழுத்தை உள்ளிழுத்துக் கொண்டான்.
பாலத்தின் அடியே வாகன இரைச்சலுக்கும் வீதியின் ஓயாத பேச்சரவத்திற்கும் மத்தியில் நடந்தான்.
“அண்ணா! பந்து…”
தெருமுனையில் திரும்புகையில் இரண்டு சிறுவர்கள் கைகாட்டினார்கள். கதவு உயரத்திற்கு அவர்களின் முகம் தெரியவில்லை. கைகளை மேலே தூக்கி அசைத்தனர். கிரிக்கெட் மட்டை மட்டும் முழுதாய்த் தெரிந்தது.
பெரிய இரும்பு கேட்டை தாண்டி விழுந்த பந்து சாலையில் குதித்துக் கொண்டிருந்தது.
பொத்… பொத்…… பொத்…
உள்ளங்கையளவு ரப்பர் பந்து. ஒரு காடைக் குஞ்சைச் போல… பந்தை எடுத்து உள்ளே வீசிவிட்டு நடந்தான்.
நெருக்கமான தீப்பெட்டிப் போன்ற வீடுகள் இருக்கும் தன் குடியிருப்புக்குள் நுழைந்தான். சிமெண்ட் திண்டில் வரிசையாய் கால்நீட்டி உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் பெண்களைக் கவனமாகத் தாண்டி மூலையில் இருக்கும் தன் வீட்டை அடைந்தபோது தொட்டுப் பிடித்து விளையாடும் பொடிசுகள் இடித்து மோதியபடி ஓடின.
“எப்பப் பாத்தாலும் ஒரே பசங்க தொல்ல…”
முணுமுணுத்தபடி வீட்டுக்கதவைத் திறந்ததும், உள்ளே படுத்திருந்த, நெற்றி மட்டும் வெள்ளையாய் இருக்கும் சாமபல்நிறப் பூனை மிரண்டுபோனது. திறந்திருக்கும் ஜன்னல் வழியே தன் மெலிந்த உடலை வளைத்து குதித்து ஓடியது.
அறையின் மூலையில் வியர்த்திருந்த சட்டையைக் கழற்றி வீசிவிட்டு, உருவம் வெளுத்துப்போன தன் அலுவலக அடையாள அட்டையை அலமாரி நடுத்தட்டில் வைத்தபின் பாதரசம் மங்கிய உள்ளங்கையளவு முகக்கண்ணாடியில் தன் வற்றிய முகத்தைப் பார்த்தபடியிருந்தபோது பசித்தது.
இரண்டு முட்டைகளை அறையின் ஓரமிருக்கும் எலக்ட்ரிக் அடுப்பில் வேகவைத்துவிட்டு பிளாஸ்டிக் நாற்காலியில் சரிந்து உட்கார்ந்ததும் அயர்ச்சியில் கண்கள் சொருகின.
“சார்! நான்தான் புரோக்கர் கனகராஜ் பேசறேன்.. நீங்க கேட்ட மாதிரியே டபுள் பெட்ரூம் வீடு! அண்ணா நகர்ல…”
சட்டை அணியாத மேலுடம்பைத் தடவியபடி மேல்வீட்டு கனகராஜ் வாசலில் நடந்து சப்தமாய்ப் பேசிக் கொண்டிருந்தார்.
அவரின் கனத்த பேச்சுச் சப்தத்தில் பாதி மூடியிருந்த கண் இமைகள் அகலத் திறந்துகொண்டன.
கழிப்பறையுடன் கூடிய பொருட்கள் வறண்ட தன் ஒற்றை அறை வீட்டைப் பார்த்தான்.
“வசதியான ஏரியா. ஃபுல் ஃபர்நிஷ்ட்… வாடகை இருபதாயிரம்… ஆறு மாசம் அட்வான்ஸ்…. அப்பார்ட்மென்ட் கிடையாது… தனிவீடு… உங்க பெரிய ஃபேமிலிக்கு கரெக்டா இருக்கும்… போட்டோ அனுப்பறேன், பாருங்க….”
எரிச்சலாய் வந்தது. எழுந்துபோய் வாசல் கதவை மடாலென்று சாத்திவிட்டு பிளாஸ்டிக் நாற்காலியில் வியர்த்த உடலோடு சாய்ந்தான். திரும்பிவர முடியாத ஏதோவொன்றுக்குள் நிரந்தரமாய்த் தொலைந்துபோக வேண்டும்போல் தோன்றியது.
அடுப்பில் வேகும் முட்டை ஓட்டில் கீறல் விட்டிருப்பதை வெறித்துக் கொண்டிருந்தான். யாரோ புருவத்தின் மேல் உட்கார்ந்து நெற்றியில் பந்து எறிந்து விளையாடிக் கொண்டிருப்பதைப் போல் தலைவலித்தது.