வாழ்க்கையின் நியதி
ஜாக் லண்டன், தமிழில்: கார்குழலி

by olaichuvadi

 

முதியவர் கோஸ்கூஷ் பேராவலோடு உற்றுக்கேட்டார். பார்வை மங்கி நீண்டகாலம் ஆகிவிட்டாலும் கேட்கும் திறன் நுட்பமாகவே இருந்தது. மிகவும் மெல்லிய ஓசைகூட சுருங்கிய நெற்றியைத் துளைத்து அதன்பின்னே குடியிருந்த அவரின் ஒளிவீசும் கூர்மதியை அடைந்தது. ஆனாலும் இப்போதெல்லாம் சுற்றியிருக்கும் உலகத்தின் நடவடிக்கைகளில் அவர் பெரிய ஈடுபாடு கொள்வதில்லை. ஆஹ்! சிட்-கம்-டோ-ஹா உரத்த குரலில் நாய்களைத் திட்டியும் அடித்தும் வழிக்குக் கொண்டு வந்து சேணத்தில் பூட்டுகிறாள். சிட்-கம்-டோ-ஹா அவருடைய மகளின் மகள். பனிக்கு நடுவே தனியாக நம்பிக்கையிழந்து நிராதரவாக மனமுடைந்துபோய் உட்கார்ந்திருக்கும் தாத்தாவைப்பற்றி நினைப்பதைக் காட்டிலும் வேறு முக்கியமான வேலைகள் அவளுக்கு இருக்கின்றன. இந்த முகாமைக் காலி செய்யவேண்டும். நீண்ட பாதை அவளுக்காகக் காத்திருந்தது, பகலோ நீளாமல் சுருக்கமாக முடிந்தது. வாழ்க்கையும் வாழ்க்கையின் கடமைகளும் அவளுக்கு அழைப்பு விடுத்தன, இறப்பு அல்ல. அவரோ இப்போது இறப்பின் அண்மையில் இருந்தார்.

அந்த எண்ணம் கிழவருக்குப் பதட்டத்தை ஏற்படுத்தியது. அவரருகே இருந்த சின்ன உலர்ந்த விறகுக் குவியலை பாரிசத்தால் நடுங்கும் கையினால் தொட்டுப் பார்த்தார். அது இருப்பதை உறுதிசெய்து ஆறுதலடைந்த பிறகு, கையைத் திரும்பவும் அழுக்கடைந்த மென்மயிர்ப் போர்வையின் கதகதப்பில் வைத்தார். மீண்டும் காதுகொடுத்துக் கேட்கத் துவங்கினார். பாதி உறைந்த தோல் கூடாரங்கள் எழுப்பிய சிடுசிடுவென்ற ஓசை குழுத் தலைவனின் கடமான் தோல்கூடாரம் பிரிக்கப்பட்டுவிட்டதைச் சொல்லியது. எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய திசைகாட்டியினுள் அதை மடித்துத் திணித்துக் கொண்டிருந்தனர். அவருடைய மகன்தான் குழுத் தலைவன், வீரமும் வலிமையும் சிறப்பும் பெற்றவன், துணிவுமிக்க வேட்டைக்காரன், அவர்களின் இனத்தின் தலைவனும்கூட. பயணச்சுமைகளையும் மூட்டைகளையும் தயார் செய்துகொண்டு இருந்த குழுவின் பெண்களை உரத்த குரலில் கடிந்துகொண்டு துரிதப்படுத்தினான்.

முதியவர் கோஸ்கூஷ் காதைத் தீட்டிக்கொண்டார். அந்தக் குரலைக் கேட்பது இதுதான் கடைசித் தடவை. ஜீஹவ்வின் வசிப்பிடம் பிரித்து எடுத்து வைக்கப்பட்டது. அடுத்தது டஸ்கென்னின் வசிப்பிடம். ஏழு, எட்டு, ஒன்பது; ஷமனின்* வசிப்பிடம் மட்டும்தான் இன்னும் பாக்கி. அதோ! இப்போது அதையும் பிரித்து எடுத்து வைக்கிறார்கள். சலிப்பான உறுமலுடன் அதைப் பனிச்சறுக்கு வண்டியில் ஷமன் ஏற்றும் ஓசை கேட்டது. குழந்தையொன்று சிணுங்கும் ஒலியும் மென்மையான தாழ்குரலில் அதன் தாய் சமாதானம் செய்வதும் கேட்டது. குட்டி கூ-டீ அழுமூஞ்சியாக வலுவில்லாமல் இருந்தது என்று நினைத்துக்கொண்டார் கிழவர். அது சீக்கிரம் இறந்துபோகலாம். அப்புறம் உறைந்த பாலைவனம்போன்ற பனிப் பிரதேசத்தில் நெருப்பினால் குழிதோண்டிப் புதைத்து ஓநாய்கள் வெளியே இழுத்துப்போடாமல் இருக்கக் கற்பாறைகளை மேலே அடுக்கி வைப்பார்கள். சரி, அதனால் ஒன்றும் கெட்டுப் போய்விடாது. எல்லாம் கொஞ்ச வருடத்துக்குத்தான், எப்போதும் ஒவ்வொரு நிறைந்த வயிற்றுக்கும் அதே எண்ணிக்கையில் காலியான வயிறும் இருக்கும். இறுதியில், இறப்பு எல்லோருக்காகவும் காத்துக்கொண்டு இருக்கும், அடங்காத பசியுடன், எல்லோரையும்விட அதிகப் பசி கொண்டதும் அதுதான்.

என்ன சத்தம் அது? ஓ, பனிச்சறுக்கு வண்டிகளை ஒன்றாகப் பிணைத்து தோல் வார்களை இழுத்துக் கட்டுகிறார்கள். அதைக் காதுகொடுத்துக் கேட்டார், இனி கேட்க முடியாதல்லவா. சாட்டையின் சொடுக்கு சீறிப்பாய்ந்து நாய்களைத் தீண்டியது. அவை ஊளையிடும் ஓசையைக் கேளேன். உழைப்பதையும் பாதையில் பயணம் செய்வதையும் அவை வெறுத்தன. அவர்கள் கிளம்பிவிட்டார்கள். ஒவ்வொரு பனிச்சறுக்கு வண்டியாக அசைந்தாடிச் செல்லும் ஓசை இப்போது வெகு தூரத்தில் கேட்டது. அவர்கள் போய்விட்டார்கள். அவருடைய வாழ்க்கையில் இருந்து எல்லோரும் வெளியேறிவிட்டார்கள். வாழ்வின் கசப்பான கடைசி மணித்துளிகளைத் தனியாக எதிர்கொள்ளத் தயாரானார். இல்லை. தோல் காலணியின் கீழே பனி நொறுங்கியது; அவர் அருகே யாரோ வந்தார்கள்; அவர் தலையின்மீது மென்மையாகக் கையை வைத்தார்கள். இதைச் செய்ய அவர் மகனுக்குத்தான் எவ்வளவு நல்ல மனது. குழுவின் பயணம் துவங்கிய பிறகு வயதான தந்தையைத் தனியே வந்து சந்திக்காத மகன்களை அவர் அறிவார். ஆனால் அவர் மகன் அதைச் செய்கிறான். கடந்தகாலத்துக்குள் நுழைந்து தொலைந்துபோனவரை இளைஞனின் குரல் நிகழ்காலத்துக்கு அழைத்துவந்தது.

“நலமா இருக்கீங்களா?” என்று கேட்டான்.

“எல்லாம் நல்லா இருக்கு,” என்றார் கிழவர்.

“உங்க பக்கத்துல விறகு இருக்கு. நெருப்பு கொழுந்துவிட்டு எரியுது. இந்த நாள் மங்கலான சாம்பல் நிறத்துல விடிஞ்சிருக்கு. பனிக்காலம் துவங்கியாச்சு. எப்போ வேணும்னாலும் பனிபொழியத் தொடங்கிடும். இப்பக்கூடப் பனி பொழியுது.”

“ஆமாம், இப்பக்கூடப் பனி பொழியுது.”

“நம்மோட மக்கள் கிளம்பிட்டாங்க. மூட்டைங்க கனமா இருக்கு, ஆனால் உணவில்லாம அவங்களோட வயிறு ஒட்டிப்போயிருக்கு. போகவேண்டிய தூரம் அதிகமா இருப்பதால, வேகமாப் போறாங்க. நானும் கிளம்பணும். பரவாயில்லையா?”

“பரவாயில்லை. பருவத்தோட கடைசி இலை கிளையோட இலேசா ஒட்டிக்கிட்டு இருப்பதுபோல இருக்கேன். முதல் காத்து வீசுனதும் விழுந்துவிடுவேன். என்னோட குரல் கிழவியோடது மாதிரி மாறிடுச்சு. என் கண்களால் கால் போகும் பாதையைப் பார்க்கமுடியலை. என் கால்கள் கனத்துக் கிடக்குது. சோர்வா இருக்கு. பரவாயில்லை.”

முசுமுசுவென்று விழுந்த பனியின் ஓசை ஓயும் வரை மனநிறைவோடு தலையைத் தாழ்த்திக் கொண்டார். அவர் மகன் திரும்பி அழைக்க முடியாத தூரத்துக்குச் சென்றுவிட்டான் என்பது தெரியும். பதற்றத்தோடு விறகுக் குவியலை நோக்கிக் கையை நீட்டினார். அவருக்கும் அவரை விழுங்கப்போகும் முடிவின்மைக்கும் இடையே இருப்பது இதுமட்டுமே. கடைசியில் அவருடைய வாழ்க்கை ஒரு கட்டு விறகால் அளக்கப்படுகிறது. ஒவ்வொன்றாக இவை நெருப்புக்கு இரையாகும், அதுபோலவே அடிமேல் அடி வைத்து இறப்பு அவரை நோக்கி ஊர்ந்து வரும். கடைசி குச்சி அதன் வெப்பத்தை ஒப்புவிக்கும்போது உறைபனியின் வலிமை கூடியிருக்கும். முதலில் அவருடைய பாதங்கள் ஒப்புக்கொடுக்கும், அடுத்ததாக, கைகள். கைகாலுக்கு அடுத்து கொஞ்சங் கொஞ்சமாக உடம்பும் மரத்துப்போகும். தலை முட்டியின்மீது கவிழும், அப்புறம் அவர் அமைதியடைந்து விடுவார். எல்லாமே சுலபமானது. எல்லா மனிதனும் இறந்துதான் ஆகவேண்டும்.

அவர் புகார் சொல்லவில்லை. அதுதான் வாழ்வின் வழிமுறை, அது நியாயமானதும்கூட. அவர் இந்த நிலத்தில் பிறந்தார். நிலத்தோடு ஒன்றி வாழ்ந்தார். அதனுடைய வழிமுறைகள் அவருக்குப் புதியதில்லை. எல்லா உயிர்களுக்குமான நெறி அது. இயற்கை உயிர்களிடத்தில் தனிப்பட்ட பரிவுணர்ச்சி கொள்வதில்லை. தனிமனிதன் என்ற பருப்பொருளின்மீது அவளுக்கு எந்தவிதமான அக்கறையும் கிடையாது. அவளுடைய அக்கறை எல்லாம் மரபினத்தின்மீதுதான், மொத்த உயிரினத்தின்மீதும் கூட. முதியவர் கோஸ்கூஷின் புறப்பகட்டில்லாத மனதால் சிந்திக்க முடிந்த ஆழ்ந்த தத்துவம் இதுதான். அதை அவர் நன்றாகவே புரிந்துவைத்திருந்தார். அது எல்லாவுயிர்களிலும் மெய்ப்பிக்கப்பட்டதையும் கண்டார். உயிர்ச்சாறு ஊறுவது, வில்லோ மரத்தின் மொட்டு பச்சையம் ததும்பி வெடிப்பது, மஞ்சள் இலை கீழே விழுவது — இந்தச் செயல்பாடுகளில் மட்டுமே முழு வரலாறும் சொல்லப்பட்டு விடுகிறது. ஆனால் இயற்கை ஒரேயொரு கடமையை மட்டுமே தனிமனிதனுக்குக் கொடுத்திருக்கிறது. அதை நிறைவேற்றவில்லை என்றால் அவன் இறந்துவிடுவான். அதை நிறைவேற்றினாலும் அவன் இறந்துவிடுவான். இயற்கைக்கு எதைப் பற்றியும் அக்கறையில்லை. கீழ்ப்படிந்து நடப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் கீழ்ப்படிதல்தான் முக்கியம், கீழ்ப்படிபவர்கள் அல்ல, அது எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.

கோஸ்கூஷின் இனம் மிகப் பழைமையானது. அவர் சிறுவனாக இருந்தபோது கிழவர்களாக இருந்தவர்கள், அவர்களுக்கு முன்னால் கிழவர்களாக இருந்தவர்களை அறிவார்கள். எனவே, அவர்களின் இனம் நீடித்து வாழ்கிறது என்பது உண்மைதான். யாருடைய நினைவிலும் இல்லாத கடந்தகாலத்தைச் சேர்ந்தவர்களும் தங்களின் நினைவிடம்கூட ஒருவரின் நினைவிலும் இல்லாதவர்களுமான அந்த உறுப்பினர்களின் கீழ்ப்படிதலினால் அவர்களின் இனம் நிலைத்துநிற்கிறது. தனிமனிதர்களின் எண்ணிக்கை ஒரு பொருட்டல்ல, அவர்கள் தொடர்நிகழ்வுகள். கோடை வானில் நகரும் மேகங்களைப்போலக் கடந்து போவார்கள். அவரும் ஒரு தொடர்நிகழ்வுதான். இயற்கைக்கு எதைப் பற்றியும் அக்கறையில்லை. வாழ்க்கைக்கு அவள் இட்டிருப்பது ஒரு பணிதான், கொடுத்திருப்பது ஒரு நியதிதான். தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பதுதான் வாழ்க்கையின் பணி, அதன் நியதி இறப்பு.

திடமான மார்பும் வலிமையும் துடிப்புமிக்க நடையும் ஒளிவீசும் பார்வையும் கொண்ட ஒரு கன்னிப்பெண் பார்ப்பதற்கு அழகானவள். ஆனால் அவளுடைய பணி இன்னும் தொடங்கவில்லை. அவள் கண்ணின் ஒளி இன்னும் பொலிவுபெறும், நடையின் வேகம் கூடும், இளைஞர்களிடம் ஒரு நேரம் துடிப்போடும் ஒரு நேரம் மருட்சியோடும் இருப்பாள், தனக்குள் ஏற்படும் குழப்பத்தை அவர்களுக்குள்ளும் தூண்டினாள். பார்க்கப் பார்க்க அவளின் அழகு கூடிக்கொண்டே இருக்கும்போது தன் காதலைக் கட்டுப்படுத்த முடியாத வேட்டைக்காரன் ஒருவன் அவளைத் தன்னுடைய கூடாரத்துக்கு அழைத்துச் செல்வான். அவனுக்காகச் சமைக்கவும் உழைக்கவும் அவன் குழந்தைகளுக்குத் தாயாகவும் இருக்கச் செய்வான். குழந்தைகள் பிறந்த பிறகு அழகு அவளை விட்டு அகன்றது. அவள் கைகால் சுணக்கப்பட்டுத் தளர்ந்தது, கண்கள் மங்கி நீர்ப்படலம் படர்ந்தது. நெருப்பில் குளிர்காயும் கிழவியின் சுருங்கிய கன்னத்தோடு கன்னம் வைத்து உரசுகையில் சின்னக் குழந்தைகள் மட்டுமே களிப்பைக் கண்டார்கள். அவள் தன் பணியைச் செய்து முடித்துவிட்டாள். இன்னும் சிறிது காலத்தில், பஞ்சத்திலோ நீண்ட பயணத்தின் துவக்கத்திலோ அவளை விட்டுவிட்டுச் செல்வார்கள். தன்னை விட்டுச் சென்றதுபோலவே. பனிக்கு நடுவே, ஒரு சின்ன விறகுக் குவியலுடன். அதுதான் நியதி.

நெருப்புக்குள் ஒரு குச்சியைக் கவனமாக இட்டுவிட்டு தன்னுடைய எண்ணங்களில் ஆழ்ந்தார். எல்லா இடத்திலும் எல்லா விஷயங்களும் ஒரே மாதிரிதான் இருந்தது. முதல் உறைபனி வந்ததும் கொசுக்கள் மறைந்து போயின. சின்ன மர அணில் தவழ்ந்துகொண்டே போய் இறந்தது. வயது அதிகமாக ஆக முயலின் வேகம் குறைந்து தன் உடம்பைத் தூக்கிக்கொண்டு நகரச் சிரமப்பட்டது, எதிரிகளின் வேகத்துக்கு அதனால் ஈடுகொடுக்க முடியவில்லை. பெரிய வழுக்கை முகம்கொண்ட நாயின் துல்லியமான செயல்பாடு குறைந்து, பார்வை இழந்து, சண்டைக்காரனாகியது. இறுதியில் மற்ற நாய்கள் வேதனைக் குரல் எழுப்பியபடி அதை இழுத்துச் செல்லவேண்டி வந்தது. ஒரு பனிக்காலத்தில் தன்னுடைய தந்தையை க்ளோண்டைக்கின் மேல் பகுதியில் தனியே விட்டுவிட்டு வரவேண்டி இருந்ததை நினைவுகூர்ந்தார். பேச்சுப் புத்தகங்களையும் மருந்துப் பெட்டிகளையும் தூக்கிக்கொண்டு அந்தச் சமயப் பரப்பாளர் வந்து சேர்வதற்கு முந்தைய பனிக்காலம் அது. அந்தப் பெட்டியைப் பற்றி நினைத்துக் கொள்ளும்போதெல்லாம் உதட்டைச் சப்புக்கொட்டிக் கொள்வார் கோஸ்கூஷ், இப்போது அவர் வாய் வறண்டு கிடந்தது. உண்மையில் அந்த ‘வலி நிவாரணி’ அருமையாக இருந்தது. ஆனால் சமயப் பரப்பாளர் தொல்லைபிடித்தவராக இருந்தார். கூடாரத்துக்கு மாமிசம் எதையும் கொண்டுவரவில்லை ஆனால் வயிறு முட்டச் சாப்பிட்டார் என்பதால் மற்ற வேட்டைக்காரர்கள் முணுமுணுத்தனர். நுரையீரலில் பனியின் தாக்கத்தால் உயிரிழந்து மேயோவுக்குப் பக்கத்தில் இருந்த பிரிவில் அடக்கம் செய்யப்பட்டார். கொஞ்ச நாளைக்கப்புறம் நாய்கள் மூக்கினால் பாறைகளை முட்டித்தள்ளிவிட்டு அவரின் எலும்புகளுக்காகச் சண்டை போட்டுக்கொண்டன.

இன்னொரு குச்சியைத் தீயில் இட்டுவிட்டு கடந்தகாலத்தின் நினைவின் ஓட்டத்தில் இன்னும் பின்னோக்கிச் சென்றார். வயதானவர்கள் வெறும் வயிற்றுடன் நெருப்புக்கு அருகே தவழ்ந்து சென்ற பெரும்பஞ்சம் ஏற்பட்ட காலம் அது. யூகோன் நதி தொடர்ந்தாற்போல மூன்று பனிக்காலங்களில் அகண்டு விரிந்து ஓடி, பின் மூன்று கோடைக்காலங்களில் உறைந்து போயிருந்த பழங்காலத்தின் மங்கலான கதைளை அவர்கள் உதடுகள் பேசின. அவருடைய தாய் அந்தப் பெரும்பஞ்சத்தின் போதுதான் இறந்துபோனாள். கோடைக்காலத்தில் சால்மோன் மீனின் வரத்து குறைந்தது. அவர்களின் குழு பனிக்காலத்தையும் கரிபூ மான்களின் வரவையும் எதிர்ப்பார்த்துக் காத்திருந்தது. பனிக்காலம் வந்தது, ஆனால் கரிபூ வரவில்லை. இப்படி நடந்ததே இல்லை. வயதானவர்களின் வாழ்க்கையில்கூட. கரிபூ வராத ஏழாவது ஆண்டு அது. முயல்களின் கூட்டமும் அதிகரிக்கவில்லை. நாய்கள் வெறும் தோல் போர்த்திய எலும்புக் கூட்டமாக இருந்தது. நீண்ட இருளான பொழுதுகளில் குழந்தைகள் அழுதபடியே இறந்துபோனார்கள், பெண்களும் கிழவர்களும்கூட. குழுவில் பத்துபேரில் ஒரு ஆள்கூட வசந்தகாலத்தின் சூரியனைப் பார்க்க உயிரோடு இல்லை. அப்படி ஒரு பஞ்சம் அது!

செழிப்பான காலத்தையும் பார்த்திருக்கிறார். கையிருப்பில் இருந்த மாமிசமெல்லாம் கெட்டுப்போனது. நாய்கள் தின்றுதின்று கொழுத்துப்போய் ஒன்றுக்கும் உதவாமல் இருந்தன, வேட்டையாடும் விலங்குகளைக் கொல்லாமல் தப்பிச்செல்ல விட்டன. பெண்கள் நிறைய குழந்தைகளை ஈன்றனர், இருப்பிடங்கள் எல்லாம் ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளுமாக நெரிசல் மிகுந்து காணப்பட்டன. அப்புறம் ஆண்களின் வயிறு பெருத்தது. பழைய பகைகளுக்காகச் சண்டை போட ஆரம்பித்தனர். நீர்ப்படுகைகளைத் தாண்டி தெற்குத் திசையில் போய் பெல்லி இனத்தவர்களைக் கொன்றார்கள். பிறகு மேற்குத் திசையில் போய் டனானா இனத்தவர்களின் அணைந்துபோன நெருப்புகளின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டனர்.

அப்போது அவர் சிறுவனாக இருந்தார். இயற்கை செழிப்பாக இருந்த அந்தப் பருவத்தில் கடமான்** ஒன்றை ஓநாய்கள் ஒன்றுகூடி வேட்டையாடிய நிகழ்வை நினைத்துக்கொண்டார். ஜிங்க்-ஹாவும் அவருடன் பனியில் படுத்துக்கிடந்தபடி பார்த்தான். பின்னாளில் தந்திரமான வேட்டைக்காரன் எனப் பெயர்பெற்ற ஜிங்க்-ஹா, யூகான் நதியின் காற்றுத்துளையினுள் விழுந்துவிட்டான். ஒரு மாதத்துக்குப் பிறகு அவனைக் கண்டுபிடித்தபோது துளைக்குள் இருந்து தவழ்ந்து வெளியே வரும் முயற்சியில் பாதியிலேயே பனிபோல உறைந்து விறைத்துப்போய் இருந்தான்.

ஆனால் அந்தக் கடமான். ஜிங்க்-ஹாவும் அவரும் தங்களின் அப்பாக்களைப்போல வேட்டையாடும் விளையாட்டை விளையாடிக்கொண்டு இருந்தனர். ஓடையின் படுகையில் புதிதாகப் பதிந்திருந்த கடமான் தடத்தைப் பார்த்தார்கள். கூடவே ஓநாய்க் கூட்டத்தின் தடமும் பதிந்திருந்தது. அடையாளங்களை உணர்ந்துகொள்வதில் திறம்பெற்றிருந்த ஜிங்க்-ஹா “வயசானது,” என்றான், “மந்தையோட சேர்ந்து நடக்க முடியாத அளவுக்கு வயசானது. ஓநாய்ங்க கூட்டத்துல இருந்து அதைப் பிரிச்சிடுச்சு. இனி அதைப் பின்தொடர்றதை நிறுத்தாது.” அவன் சொன்னது போலத்தான் நடந்தது. அதுதான் அவற்றின் வழியும்கூட. பகலும் இரவும் ஓய்வின்றி அதன் காலடியில் சீறியபடி முகத்தருகில் பற்களைக் காட்டியபடி அதனுடனேயே கடைசி வரையிலும் இருக்கும் ஓநாய்க் கூட்டம். இரத்தவெறி அதிகமாவதை ஜிங்க்-ஹாவும் அவரும் உணர்ந்தார்கள். முடிவு பார்க்கக் கண்கொள்ளாத காட்சியாக இருக்கும்!

ஆர்வத்துடன் அந்தத் தடங்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள். உன்னிப்பாகக் கவனிப்பதிலோ தடங்களைப் பின்தொடர்வதிலோ அனுபவம் இல்லாதவராக இருந்த கோஸ்கூஷ்கூட அவற்றைப் பின்தொடர்ந்திருக்க முடியும், அத்தனை தெளிவாக இருந்தது. இந்தத் துரத்தலை நெருக்கமாகப் பின்தொடர்ந்தார்கள் இருவரும். ஒவ்வொரு அடியிலும் புதிதாக எழுதப்பட்ட இரக்கமற்ற துன்பியல் காட்சியை விடாமல் படித்தார்கள். இப்போது கடமான் முதலில் நிலைகொண்ட நிறுத்தத்தை அடைந்தார்கள். ஒரு வளர்ந்த ஆணின் உயரத்தைப் போல மூன்று மடங்கு நீளத்துக்கு எல்லாத் திசையிலும் பனி மிதிபட்டு கிளறப்பட்டு இருந்தது. நடுவே வேட்டையாடப்பட்ட விலங்கின் பிளவுபட்ட குளம்பின் சுவடு ஆழமாகப் பதிந்திருந்தது. சுற்றிலும் பரவலாக ஓநாய்களின் இலேசான காற்சுவடு பதிந்து இருந்தது. ஓநாய்களுள் சில வேட்டை விலங்கை வட்டமிட்டுக்கொண்டு இருந்தபோது மற்றவை ஒரு பக்கமாகப் படுத்து ஓய்வெடுத்தன. பனியில் முழுமையாகப் பதிந்திருந்த அவற்றின் உடம்பின் சுவடு ஒரு நொடிக்கு முன்னர்தான் ஏற்பட்டது போலத் துல்லியமாக இருந்தது. துயருக்குள்ளான விலங்கின் வெறிகொண்ட தாக்குதலுக்கு ஆளான ஓநாய் ஒன்று மிதித்துக் கொல்லப்பட்டு இருந்தது. துடைத்து வைத்தது போலத் தின்னப்பட்டிருந்த அதன் எலும்புகள் சாட்சியம் கூறின.

இரண்டாவது நிறுத்தத்தில் தங்கள் பனிக் காலணிகளைத் தூக்கி நடக்காமல் நின்றனர். இந்த இடத்தில் பெரிய விலங்கு உயிர்பிழைப்பதற்காகத் துணிச்சலுடன் போராடி இருந்தது. அது இரண்டு முறை கீழே இழுத்துத் தள்ளப்பட்டது என்பதற்குப் பனியில் இருந்த தடம் சான்றுரைத்தது. இரண்டு முறையும் தாக்க வந்தவர்களை உதறித் தள்ளி உறுதியாக எழுந்து நின்றது. பல காலமாக இந்தச் செயலைச் செய்துவந்தாலும் உயிர் என்பது இப்போதும் அருமையானதாகத்தான் இருந்தது. ஒரு முறை கீழே இழுத்துத் தள்ளப்பட்ட கடமான் தப்பிப் பிழைப்பது வியப்பான விஷயமென ஜிங்க்-ஹா சொன்னான்; ஆனால் இது அதைத்தான் செய்திருந்தது. இதுபற்றி ஷமனிடம் சொன்னபோது இதில் குறியீடுகளும் அதிசயங்களும் தெரிவதாகச் சொன்னார்.

மறுபடியும் கடமான் கரையில் ஏறிக் காட்டுக்குள் நுழைந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர். எதிரிகள் பின்னால் இருந்து தாக்கியபோது முன்னங்கால்களைத் தூக்கி உதைத்ததில் இரண்டு ஓநாய்கள் மிதிபட்டுப் பனிக்குள் ஆழப் புதைந்திருந்தன. கடமான் பிடிபடப் போகிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ஓநாய்கள் உயிர் இழந்த தம் சகோதரர்களைத் தொடாமல் விட்டு வைத்திருந்தன. இன்னும் இரண்டு நிறுத்தங்கள் வேகமாகக் கடக்கப்பட்டு இருந்தன. அவை அடுத்தடுத்து இருந்தன. கால இடைவெளியும் குறைவாக இருந்தது. இப்போது தடம் சிவப்பாக இருந்தது. இதுவரை தெளிவாகவும் அகலமாகவும் இருந்த பெரிய விலங்கின் குளம்புத் தடங்கள் ஒழுங்கற்றும் குறுகியதாகவும் இருந்தது. பிறகு சண்டையின் முதல் ஒலியைக் கேட்டனர். துரத்தும்போது உச்சக்குரலில் ஒலிப்பது போலல்லாமல் குறுகலான வெடிச்சத்தம் போன்ற குரைக்கும் ஓசை வேட்டை விலங்கை அவை நெருங்கிவிட்டதையும் அதன் தசையில் அவற்றின் பல் படுவதையும் சுட்டியது. பனியில் படுத்துக்கொண்டு காற்று வீசும் திசைக்கு எதிர்ப்புறமாக ஊர்ந்தான் ஜிங்க்-ஹா. அவனுடன் சேர்ந்து வருங்காலத்தில் இனத்தின் தலைவனாகப் போகும் கோஸ்கூஷும் தவழ்ந்தான். இளம் ஸ்ப்ரூஸ் மரத்தின் கிளைகளை ஒரு பக்கமாக விலக்கித் தள்ளிவிட்டு முன்னால் எட்டிப் பார்த்தார்கள் இருவரும். அவர்கள் பார்த்தது துரத்தலின் இறுதிக்கட்டத்தை.

இந்தக் காட்சி இளமையில் ஏற்பட்ட மற்ற அனுபவங்களைப் போலவே அவர் மனதில் அழுத்தமாகப் பதிந்து இருந்தது. அந்தக் காலத்தில் நடந்ததைப் போலவே இறுதிக் காட்சியைத் தெளிவாக ஓட்டிப்பார்த்தன அவருடைய மங்கலான கண்கள். இதுகுறித்து கோஸ்கூஷுக்கு வியப்பு ஏற்பட்டது. ஏனென்றால் அதைத் தொடர்ந்த காலத்தில் தன் இன மக்களுக்கும் ஆலோசகர்களின் குழுவுக்கும் தலைவனாக பதவியேற்றபோது இதைக்காட்டிலும் பல மகத்தான செயல்களைச் செய்து இருக்கிறார். இவர் பெயரை ஒரு சாபம் போலத்தான் உச்சரித்தனர் பெல்லி இனத்தவர்கள். திறந்தவெளிச் சண்டையில் அந்த வினோதமான வெள்ளைக்காரனை ஒற்றை ஆளாகத் தனித்து நின்று எதிர்த்துக் கத்திச் சண்டைபோட்டுக் கொன்றது பற்றியெல்லாம் சொல்லவேண்டியது இல்லை.

நெருப்பு அணைந்துபோய் உறைபனியின் குளிர் உடம்பைத் துளைக்கும்வரை இளமைக்காலத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தார். பிறகு, நெருப்புக்குள் இரண்டிரண்டு குச்சிகளாக இட ஆரம்பித்தார். மிச்சமிருக்கும் குச்சிகளைக் கொண்டு வாழ்க்கையோடு தனக்கு இன்னும் மீதமிருக்கும் பற்றைக் கணக்கிட்டார். சிட்-கம்-டோ-ஹா தன் தாத்தாவை நினைவில் வைத்திருந்தால் இன்னும் அதிகமான குச்சிகளைச் சேகரித்திருப்பாள், அவருடைய காலமும் நீண்டிருக்கும். மிகவும் எளிமையான கணக்கு. ஆனால், அவள் எப்போதும் பொறுப்பில்லாத குழந்தையாகவே இருந்தாள். ஜிங்க்-ஹாவின் மகனுடைய மகனான பீவரின் பார்வை அவள்மேல் படர்ந்தபோது அதை ஏற்றுக்கொள்ளாமல் மூதாதையர்களுக்கு மரியாதை செய்யத் தவறிவிட்டாள். சரி, அதனால் என்ன? விரைந்து மறையும் தன்மையுடைய இளம்வயதில் அவரும் அதைத்தானே செய்தார்? சூழ்ந்திருக்கும் அமைதியை உற்றுக் கேட்டபடி சிறிது நேரம் அமர்ந்திருந்தார். ஒருவேளை அவருடைய மகன் மனமிளகி நாய்களோடு திரும்பி வந்து வயதான தந்தையைக் குழு தங்கி இருக்கும் இடத்துக்கு அழைத்துப் போகலாம். அங்கே கொழுத்த மேனியுடைய கரிபூவின் வலுத்த மந்தை இருக்கும்.

காதுகளைக் கூர்தீட்டிக்கொண்டு கேட்டார், ஓய்வே அறியாத மூளை கொஞ்ச நேரம் இயக்கமற்று நின்றது. ஓர் அசைவுகூட இல்லை, ஒன்றுமில்லை. அந்தப் பெருத்த அமைதிக்கு நடுவே அவர் மூச்சுவிடும் ஓசை மட்டும்தான் கேட்டது. மிகவும் தனிமையாக இருந்தது. உற்றுக்கேள்! என்ன அது? அவர் உடம்பு சிலிர்த்தது. நன்கு பழக்கமான, நீண்ட ஊளை வெற்றிடத்தைத் துளைத்தது, நெருக்கத்தில் கேட்டது. கருமைபடர்ந்த அவர் கண்களில் கடமானின் இறுதிக் காட்சி விரிந்தது–அந்த வயதான காளைக் கடமான்–அதன் குதறப்பட்ட விலாமடிப்புகளும் இரத்தம்தோய்ந்த பக்கங்களும் சடைவிழுந்த பிடரியும் பெரிய கிளைத்த கொம்புகளும் கீழே இழுத்துத் தள்ளப்பட்ட போதும் இறுதிவரை நடத்திய போராட்டமும். கூடவே சாம்பல்நிற உருவங்கள், அவற்றின் மின்னும் கண்கள், நீண்டு தொங்கும் நாக்குகள், சாளைவாய் நீரை ஒழுக்கும் பற்கள் என மாறிமாறிக் காட்சிகள் தோன்றி மறைந்தன. இரக்கமற்ற அந்த வட்டம் சிறிதுசிறிதாக இறுகி மிதிக்கப்பட்ட பனியின்மேலே ஒரு கறுத்த புள்ளியாக மாறும்வரை பார்த்தார்.

குளிர்ந்த நாசியொன்று தன் கன்னத்தின்மீது உரசுவதை உணர்ந்தார். அந்தத் தொடுகை அவருடைய ஆன்மாவை ஒரே தாவலில் நிகழ்காலத்துக்கு அழைத்து வந்தது. நெருப்புக்குள் கையைவிட்டு எரிந்து கொண்டிருந்த குச்சியொன்றை வெளியில் இழுத்தார். அந்த நொடியில் காலங்காலமாக மனிதனிடம் விலங்குக்கு இருந்த பயம் அதை ஆட்கொண்டது. சற்றே பின்வாங்கி நீண்ட ஊளையிட்டுத் தன் சகோதரர்களுக்கு அழைப்பு விடுத்தது. அவையும் பேராசையுடன் பதிலளித்தன. சீக்கிரமே சாளைவாய் நீர் ஒழுகும் சாம்பல்நிற வட்டம் ஒன்று அவரைச் சூழ்ந்தது. வட்டம் உட்பக்கமாக இறுகுவதை உணர்ந்தார் கிழவர்.

கொள்ளிக்கட்டையை வேகமாக ஆட்டியபோது முகரும் ஓசை பல்லைக் காட்டி உறுமும் ஒலியாக மாறியது; மூச்சுவாங்கியபடி நின்ற அந்த முரடர்கள் சிதறிப்போக மறுத்தன. முதலில் ஒன்றேயொன்று மார்பைத் தரையில் உரசியபடி முன்னே நகர்ந்து, அடுத்தது பின்னங்கால்களை முன்னால் நகர்த்தியது. இப்போது இரண்டாவது, இப்போது மூன்றாவது; ஆனால் ஒன்றுகூடப் பின்னால் நகரவில்லை. எதற்காக என் உயிரைப் பிடித்துவைத்துக்கொள்ள முயற்சிக்கவேண்டும் என்று தன்னையே கேட்டுக்கொண்டு எரியும் குச்சியைப் பனியில் போட்டார். அது ‘உஸ்ஸ்ஸ்’ என்ற ஒலியுடன் அணைந்துபோனது. வட்டம் சிரமத்தோடு முனகியது, ஆனாலும் பின்வாங்காமல் இருந்தது. திரும்பவும் அந்த வயதான காளைக் கடமானின் கடைசி நிறுத்தத்தை நினைத்துப் பார்த்த கோஸ்கூஷ், அசதியுடன் தலையை முட்டியின்மீது கவிழ்த்தார். இப்போது என்ன ஆகிவிடப் போகிறது? இது வாழ்க்கையின் நியதி அல்லவா?

*ஷமன் (shaman) – இனத்தின் சமய குரு

*கடமான் (moose) – வட அமெரிக்கக் கடமான் வகை

பிற படைப்புகள்

Leave a Comment