போரும் அமைதியும்
ராம் முரளி

by olaichuvadi

 

ஆசியாவில் நிகழ்ந்த போர்களில் மிக நீண்ட காலவெளியை கொண்டதென கருதப்படுவது வியாட்நாம் போர். கிட்டதட்ட பதினெட்டு ஆண்டுகள் அந்தப் போர் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. வியட்நாம் தனது நிலப்பரப்புக்குள் இருவேறு பிரதேசங்களாக பிரிந்து நின்று இந்தப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. கம்யூனிச ஆட்சியை வியாட்நாமில் நிறுவ முனைப்படும் வட வியாட்நாம் பிரதேசமும், ஜானநாயக ரீதியிலான ஆட்சியதிகாரத்தை நிலைபெறச் செய்யும் நோக்கத்துடன் தென் வியாட்நாம் பிரதேசமும் தமக்குள் கொள்கை ரீதியில் விலகி நின்று இந்தப் போரில் தீவிரத்துடன் பங்கு கொண்டிருந்தன.

தென் வியாட்நாம் பிரதேசத்துக்கு அமெரிக்காவின் முழு ஆதரவு இருந்து வந்தது. கம்யூனிச ஆட்சியதிகாரத்தை உலகெங்கிலும் தகர்க்க வேண்டுமென்கின்ற லட்சியத்தை பூண்டிருந்த அமெரிக்க அரசு இப்போரில் தென் வியாட்நாமிய அரசுக்கு தனது பலமான ஆதரவை அளித்ததோடு தனது படையணியினரையும் வியாட்நாமில் இறக்கி விட்டிருந்தது. வியாட்நாமில் களமிறங்கிய அமெரிக்கர்களின் செயல்பாட்டால், எரிச்சலுற்ற வட வியாட்நாமிய கம்யூனிச புரட்சியாளர்கள் வனங்களுக்குள் தங்களை மறைத்துக் கொண்டு கொரில்லா யுத்தத்தை கையிலெடுத்தனர். போரின் தீவிரம் இதனால் மிகுதியானது.

வனங்களுக்குள் பதுங்கிய புரட்சியாளர்கள் தங்களுக்குரிய எதிர்ப்பாயுதங்களை சக கம்யூனிச நாடுகளான சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து கிடைக்கப் பெற்றனர். அமரிக்கப் படையினர் கொரில்லா குழுக்களின் தளங்களைக் கண்டறிந்து வெடிகுண்டுகள் வீசி, அவ்வாறு பிற நாடுகளிலிருந்து வரப்பெறும் ஆயுதங்கள் கொரில்லா குழுவினருக்கு கிடைக்காமல் செய்யும் பணியினை தீவிரத்துடன் முன்னெடுத்தனர்.

இதனால் கொரில்லா குழுக்கள் தமது வழித்தடங்களை அண்டை நாடுகளான கம்போடியா மற்றும் லாவோஸ் பகுதிகளுக்கு மாற்றியமைத்துக் கொண்டது. பல கிலோமீட்டர் தொலைவுக்கு பல்வேறு நாடுகளின் வனங்களுக்கு ஊடுருவிச் செல்லும் கொரில்லாக்களின் இந்தப் பாதையை ஹோ சி மின் நிலவெளி என்று அமெரிக்கர்கள் பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.

கிட்டதட்ட 900 கிலோமீட்டர் நீளம் கொண்ட இப்பாதை பல மனிதர்களின் உயிரைப் பலி கொண்டிருக்கிறது. வான்வெளியிலிருந்து அமெரிக்கர்கள் வீசிய வெடிகுண்டுகளும், தரையிலிருந்து வான் நோக்கி ஏவப்பட்ட வெடிகுண்டுகளும் கிட்டதட்ட 35 லட்சம் மனிதர்களை கொன்றொழித்திருக்கிறது. அவர்களில் 30 லட்சம் வியாட்நாமியர்களும், 50 ஆயிரம் அமெரிக்க இராணுவ வீரர்களும் ஆவர்.

இன்றைக்கும் இப்பாதையில் அப்போரின் ஆறாத ரணம் நிலை கொண்டிருக்கிறது. 1972 ஆம் ஆண்டு கொரில்லா குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட ஓர் விமானப்படை அதிகாரியின் சடலம் வீழ்ந்து கிடந்த இடத்தைப் பார்க்க அவரது மகள் மேற்கொள்ளும் பயணத்தை விவரிக்கிறது ‘blood road’ எனும் ஆவணப்படம்.

அமெரிக்க சைக்கிள் பந்தய வீராங்கனை ரிபெக்கா. அவளுக்கு தனது தந்தை உயிர்விட்ட இடத்தை காண வேண்டுமென்கின்ற எண்ணம் உண்டாகிறது. அவளது தந்தை உயிரிழந்தபோது ரிபெக்காவுக்கு வெறும் மூன்று வயதுதான் ஆகியியிருந்தது. அதனால், தந்தை குறித்த எவ்வித நினைவுகளுமின்றி தாய்அவளிடத்தில் சொல்லிய சம்பவங்களின் வழியாகவும், தந்தை போர் களத்திலிருந்து எழுதிய கடிதங்களின் மூலமாகவும் மட்டுமே அவள் தந்தையை அறிந்து வைத்திருக்கிறாள்.

1972ஆம் உயிரிழந்த அவரது சடலம் கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகுதான் கண்டெடுக்கப்படுகிறது. லாவோஸ் தேசத்தின் அடர்ந்த வனப்பகுதியிலிருந்து கண்டெடுக்கப்படும் பல் ஒன்றினை வைத்து அவரது சடலம் உறுதிப்படுத்தப்படுகிறது. 30 ஆண்டுகளாக அவரது நிலை குறித்த எவ்வித அறிதலுமின்றி தவித்த அவர்களது குடும்பத்தாருக்கு அவரது மரணம் உறுத்திப்படுத்தப்பட்டதும் மன நிம்மதி உண்டாகிறது.

ரிபெக்கா அவ்விடத்தை காண வேண்டுமென்று முடிவு செய்கிறாள். தந்தையின் நினைவு தினத்தின்போது, அந்த இடத்தை அடைந்துவிட வேண்டுமென்பது அவளது திட்டமாக இருக்கிறது. கரடுமுரடான மலைப்பாதைகளும், வனங்களும், காட்டாறும் பாய்ந்தோடும் அவ்வெளியில் சைக்கிளின் மூலம் பயணம் செய்து அவ்விடத்தை அடையலாம் எனக் கருதுகிறாள். கொரில்லா குழுவினரும் அப்பாதையில் தங்களுக்கு வேண்டிய ஆயுதங்களை சைக்கிள்களின் உதவியால்தான் துவக்கத்தில் பெற்று வந்தார்கள்.

ரிபெக்காவுக்கு உதவ வியாட்நாமிய சைக்கிள் வீராங்கனை ஒருவர் முன்வருகிறார். ‘ஹுயன்’ எனும் அப்பெண் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்றவர்.

இருவரும் சேர்ந்து கடினமான ‘ஹோ சி மின்’ நிலவெளியில் சைக்கிளில் தங்களது பயணத்தைத் தொடர்கிறார்கள். ஆவணப்படம் ஒருபுறம் இவர்களது பயணத்தை காட்சிப்படுத்தியபடியும், மறுபக்கம் அப்பாதையில் நிகழ்ந்தேறிய வரலாற்றுச் சம்பவங்களை வரைகலை தொழிற்நுட்பத்தின் உதவியால் பார்வையாளர்களுக்கு விளக்கியபடியும் பயணிக்கிறது.

ரிபெக்கா தனது லட்சியத்தில் பிடிப்புடன் இருக்கிறாள். பாதையில் முன்னால் நிற்கின்ற சவால்கள் எதுவும் அவளது நம்பிக்கையை குலைத்துவிடாதபடி கவனமாக இருக்கிறாள். தந்தையின் நினைவிடத்தை காண வேண்டுமென்கிற வேட்கை அவளை சுறுசுறுப்புடன் இயங்கச் செய்கிறது. ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் மூன்று நாடுகளின் நிலப்பகுதிக்குள் ஊடுருவிச் செல்லும் அவர்களது பயணத்தில் ஒருமுறையும் அவள் சோர்வுக்குள்ளாவதில்லை.

திட்ட வரைபடத்தை உருவாக்கிக் கொடுத்தவர்கூட ஒரு தருணத்தில் விபத்திற்குள்ளாகிறார். உடன் பயணிக்கும் ஹுயனுக்கு முழங்காலில் பலமாக அடிபடுகிறது. ஆனால், எதையும் பொருட்படுத்தாமல் ரிபெக்கா அவர்களையும் பயணத்தில் முன் நகர உற்சாகமூட்டியபடியே இருக்கிறாள். அவ்வபோது கறுப்பு வெள்ளையில் அவளது தந்தை எழுதிய கடித வரிகள் திரையில் காண்பிக்கப்படுகின்றன.

ஸ்டீபன் எனும் அவர், தனது இரண்டு பெண் குழந்தைகளையும் மிகுந்த நேசிப்புடன் வளர்த்திருக்கிறார். அவரால், தனது குழந்தைகளை பிரிந்திருக்க இயலாமலிருக்கிறது. போர் குறித்த தனது எண்ணங்களையும் அக்கடிதங்களில் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

“போர்களின் வெற்றி தோல்வியென்பது, பல மனித உயிர்களின் சமாதியின் மேல் எழுதப்படுகிறது. உயிர்களைக் கொலை செய்து கொண்டாடப்படுகின்ற வெற்றியில் தனக்கு ஏற்பில்லை”என்று எழுதியிருக்கிறார். போரில் பங்காற்ற வேண்டுமென்ற கட்டாயத்தின் பேரில்தான் ஸ்டீபன் வியாட்நாம் யுத்தத்தில் பங்கெடுத்தாரே தவிர, யுத்தங்களின் மீது அவருக்கு பெரிய உடன்பாடில்லை என்பதை நாம் அவரது கடிதங்களின் வழியே அறிந்துகொள்ள முடிகிறது.

தந்தையின் நினைவிடத்தை காண மேற்கொள்ளும் இப்பயணத்தில் ரிபெக்கா போரின் உக்கிரத்தை உணர்ந்துகொள்கிறாள். லாவோஸ்  நாட்டில் இன்னமும் நிலத்தில் புதையுண்டிருக்கும் வெடிகுண்டுகளை அவள் காண்கிறாள். அமெரிக்க விமானப் படையினரால் வீசப்பட்டவை அந்த வெடிகுண்டுகள்.  நிலத்தில் புதையுண்டிருக்கும் அந்த வெடிகுண்டுகளால் மட்டுமே போர் முடிந்த பின்னரும் அறுபதாயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற குறிப்பு திரையில் வருகிறது. இன்னமும் அந்த வெடிகுண்டுகளை அப்புறப்படுத்தும் பணிகள் நிறைவடைந்தபாடில்லை. உலகத்திலேயே அதிகளவில் நிலத்தில் புதையுண்டிருக்கும் வெடிகுண்டுகளை தாங்கிக் கொண்டிருக்கும் நாடு லாவோஸ்தான் எனும் குறிப்பு அதிர்ச்சியடையச் செய்கிறது.

அதே போல், போரில் பிரயோகிக்கப்பட்ட ஆயுதங்களின் உதிரி பாகங்களை இன்னமும் அப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தமது அன்றாட செயல்பாடுகளில் பயன்படுத்தி வருவதை அறிந்து வியப்படைகிறாள். போரின் நினைவை ஏந்தி நிற்கின்றன அந்த உதிரி பாகங்கள். மரத்தில் மோதிக் கிடக்கும் விமானமொன்றினைத் தொடுகையில், ரிபெக்காவின் கண்களில் நீர் கோர்க்கிறது. தனது தந்தையும் இதுபோல தரையில் வீழ்த்தப்பட்டவர்தானே என அவள் நினைத்து அழுகிறாள்.

‘ஹோ சி மின்’ நிலவெளியின் பாதையெங்கும் இருபுறமும் குண்டுகளால் துளைக்கப்பட்ட அடையாளங்கள் நிலத்தில் காணக்கிடைக்கின்றன. அவை சிறிய சிறிய நீர் தேக்கங்களாக இக்காலத்தில் நிலைக்கொண்டுள்ளன. பல ஆண்டுகள் கடந்தும் இன்னமும் நிலம் சமநிலையை அடையாதது கண்டு ரிபெக்கா திகைக்கிறாள்.

போரில் எதிரெதிர் நிலையில் நின்று சண்டையிட்டுக் கொண்ட இரு நாடுகளின் குடிமக்களான ரிபெக்காவுக்கும், ஹுயனுக்கும் இடையில் உணர்வு ரீதியிலான இடைவெளி இருப்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இருவரும் வெவ்வேறு பிண்ணனியில் இருந்து போரின் துயரத்தை தமக்குள் சுமந்து கொண்டிருப்பவர்கள். ரிபெக்காவின் எண்ணம் முழுவதும் தந்தையின் மீதே நிலைக்கொண்டிருக்க, ஹுயனோ தங்களது நிலத்தில் பெருந்துயரை விதைத்த படையொன்றின் விமான ஓட்டியின் மகள் எனும் எண்ணத்தைத் தாங்கியபடியே பயணம் செய்கிறாள். எனினும், ரிபெக்காவின் மனவுறுதியும் தந்தையின் மீதான நேசமும் அவளது மனதை கரைக்கின்றது. தனது முழு ஒத்துழைப்பை ரிபெக்காவுக்கு ஹுயன் வழங்குகிறாள்.

“நாங்கள் பல நிலங்களை போரில் இழந்தோம்” என ஹுயன் ரிபெக்காவிடம் சொல்லும்போது,  “ஹுயன் நிலத்தையும் வசிப்பிடத்தையும் பற்றி இவ்வளவு அக்கறையுடன் இருப்பது வியப்பளிக்கிறது. நான் பலமுறை வீடு குறித்த பிரக்ஞையற்று காரிலும், நண்பர்களின் வீட்டிலும், சாலையோரங்களிலும் தங்கியிருக்கிறேன். ஆனால், வீடென்பது மிகவும் உணர்வுப்பூர்வமாக அணுகப்பட வேண்டியது என்பதை இப்போதுதான் புரிந்துக்கொண்டேன்” என்கிறாள் ரிபெக்கா.

அமெரிக்கர் ஒருவரின் மனநிலையிலிருந்து ஆசியாவின் கலாச்சாரத்தையும், வியாட்நாமிய போர் உண்டாக்கிய பாதிப்புகளையும் அணுகுவதைப்போல இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடினமான போராட்டத்துக்குப் பின்னர் ரிபெக்காவும், ஹுயனும் தாங்கள் தேடி வந்த இடத்தை அடைகிறார்கள். கிராமியத் தலைவர் ஒருவர், தனது தந்தைதான், ரிபெக்காவின் தந்தை ஸ்டீபன் உடலைப் புதைத்தவர் எனச் சொல்கிறார். ரிபெக்கா நன்றிப்பெருக்குடன் கண்களில் நீர் உருள, அவரது கரங்களை நேசத்துடன் பற்றிக் கொள்கிறார்.

ரிபெக்காவின் தந்தை புதைக்கப்பட்ட இடத்தின் மீது மரமொன்று வளர்ந்து தனது கிளைகளைப் பரப்பியபடி இருக்கிறது. ரிபெக்கா அந்த மரத்தினை தொட்டு வருடுகிறாள். நாற்பதாண்டுகளில் அவள் உணர்ந்திராத தந்தையின் அண்மை அவ்விடத்தில் அவளுக்குக் கிடைக்கிறது. கண்களில் கசிந்துருளும் கண்ணீரைக் கடிதமாக எழுதுகிறாள். தந்தையின் மீது அவள் கொண்டிருக்கும் நேசமும், பிரிவின் வலியும் அக்கடிதத்தில் சொற்களாக தீட்டப்படுகிறது. பெருந்துயருடன் அந்தக் கடிதத்தை மடித்து அந்த மரத்தின் பிளவு ஒன்றினுள் சொருகுகிறாள். அவளது லட்சியம் நிறைவேறிவிட்ட மகிழ்வை எல்லோரும் கொண்டாடுகின்றனர். எனினும், உணர்வுரீதியில் ரிபெக்கா இன்னமும் அந்த மரத்திடமிருந்து விலக முடியாமல் தவிக்கிறாள்.

தந்தை அன்பு கிடைக்க பெறாமல் வளர்ந்த அவளது முழு ஏக்கமும் அத்தருணத்தில் மிக இயல்பாக வெளிப்படுகிறது.

2016ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா வியாட்நாமுக்கு வருகை புரிகிறார். பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்குமிடையில் நிலவிவரும் சுமூகமற்ற உறவினை முடிவுக்கு கொண்டுவருவதோடு, தோழமை நாடுகளாக இனி விளங்க வேண்டியதன் அவசியத்தைஅங்கு அவர் முன்மொழிகிறார். வியாட்நாட்மில் போரில் தொலைந்து போன அமெரிக்கப் படையினரைத் தேடும் பணியினை இதன்பிறகு அரசு துவங்கியிருக்கிறது. அதோடு, லாவோஸ், வியாட்நாம், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க படையால் வீசப்பட்ட வெடிகுண்டுகளை அப்புறப்படுத்தும் பணியினையும் மேற்கொள்ள அமெரிக்க அரசு முன்வந்துள்ளது.

‘ஹோ சி மின்’ நிலவெளிக்குள் தனது தந்தையின் நினைவைத் தேடி பயணித்த ரிபெக்காவால் அப்போரின் உக்கிரத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது. அதன் விளைவாக நிலத்தில் புதையுண்டிருக்கும் வெடிகுண்டுகளை அப்புறப்படுத்தும் பணியினை மேற்கொள்வதற்கான நிதி சேகரிக்கும் வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

போர் என்பது எப்போதுமே மனிதகுலத்துக்கு எதிரானது. அது உறவுகளை சிதைக்கக்கூடியது. பலரையும் அகதிகளாவும், அநாதைகளாகவும் மாற்றிவிடக்கூடிய வல்லமை கொண்டது. அரசுகள் தமது அதிகாரத்தை நிலை நிறுத்தும் விருப்பத்திலும், சில அரசியல் சூழ்ச்சிகளுக்காகவும் போர்களை முன்னெடுக்கின்றன. ஆனால், அதிகாரப் போட்டியில் பலியாகும் உயிர்களுக்கு பதிலீடுகளை ஒருபோதும் அரசால் வழங்க முடியாது. உயிர் பலி கோரும் போர்களை விட, அன்பும் நேசமும் பெருகச் செய்வதே மனிதம் தழைத்திருக்க செய்யும் வழிவகையாகும். போர்களின் இரத்த நாவினை துண்டித்தெறிந்து மனிதத்தின் கரம் பற்றும் கோரிக்கையை முன் வைக்கும் ‘ப்ளட் ரோட்’ஆவணப்படம் நெகிழ்வூட்டக்கூடிய ஆழமானதொரு பயண அனுபவமாக உருவாகியிருக்கிறது.

 

பிற படைப்புகள்

Leave a Comment