காலநிலை மாற்றமும் இந்தியப் பெருங்கடலும்
நாராயணி சுப்ரமணியன்

by olaichuvadi

சீனத்து மிங் பேரரசின் நீல நிறப் பூக்கள் கொண்ட பீங்கான் துண்டுகள் இந்தியப் பெருங்கடலில் உள்ள பல கடற்கரைகளில் காணக்கிடைக்கின்றன என்று சொல்லப்படுகிறது. உலகின் மிகப்பழமையான வணிகப் பாதை ஒன்று இந்தியப் பெருங்கடல் வழியாகத்தான் ஓடியது. இந்தியப் பெருங்கடலை “உலகமயமாக்கலின் தொட்டில்” என்று அழைப்பவர்களும் உண்டு. மிளகும் ஜாதிக்காயும் மணக்கும் பல புகழ்பெற்ற கப்பற்பயணங்களை இந்தக் கடற்பகுதி சந்தித்திருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் வசிப்பதாக சொல்லப்படும் கடல்சார் தெய்வங்கள், ஜின்கள், கடற்கன்னிகள், மூதாதையரின் ஆன்மாக்கள் குறித்த நாட்டார் கதைகள் கடற்கரைதோறும் விரவியிருக்கின்றன. மாம்போஸா, சான்ஸிபார் போன்ற கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரைப்பகுதிகளில் இன்றும் வெள்ளை நிறக் கட்டடங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. தூரத்துக் கப்பல்களுக்கும் துறைமுகங்கள் தெளிவாகத் தெரியவேண்டும் என்பதற்காக, கடற்கரையை ஒட்டிய கட்டடங்களை வெள்ளை நிற பவழப்பாறைகளால்  கட்டுமானம் செய்த இந்தியப் பெருங்கடல் மரபின் எச்சம் அது.

உலகின் மூன்றாவது பெரிய பெருங்கடலாகக் கருதப்படும் இந்தியப் பெருங்கடல் கிட்டத்தட்ட ஏழு கோடி சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இந்தியாவைச் சுற்றி இதன் அங்கங்களான அரபிக் கடல், வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல்கள் சூழ்ந்திருக்கின்றன. வரலாற்று ரீதியாகப் பார்த்தால் இந்தியப் பெருங்கடலின் ஆவணங்களைப் படித்தாலே ஐரோப்பிய காலனியாதிக்கத்தை நாம் புரிந்துகொள்ளமுடியும். இத்தனை முக்கியத்துவம் இருந்தாலும் இந்தக் கடலின் அறிவியல் பற்றி நாம் புரிந்துகொண்டது மிக சொற்பமே. உலகில் 20% கடல்நீரைத் தன்னகத்தே கொண்டுள்ள இந்தப் பகுதியின் ஆழ்கடல் பரப்பு பெரிதாக ஆவணப்படுத்தப்படவில்லை.

அறிவியல் போதாமைகளை நாம் உணர்ந்துகொண்டு சரிசெய்வதற்கு முன்பே வேறொரு ஆபத்து இந்தப் பகுதியை அலைக்கழிக்கத் தொடங்கிவிட்டது. காலநிலை மாற்றம் என்ற உலகளாவிய அச்சுறுத்தலின் பின்னணியில் இந்தியப் பெருங்கடலை கவனிக்கும் அறிவியலாளர்கள், இங்கு உள்ள தனித்துவமான பாதிப்புகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர்.

காலநிலை அச்சுறுத்தல்கள்

உலகில் உள்ள 90% கடற்பரப்போடு ஒப்பிடும்போது இந்தியப் பெருங்கடலின் வெப்ப நிலை அதிகரிப்பு விகிதம் மிகவும் அதிகம் என்று ஆகஸ்ட் 2021ல் வெளிவந்த ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1996 முதல் இப்போதுவரை இந்தியப் பெருங்கடலுடைய பரப்பின் வெப்பநிலை 0.3 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.  இந்த நூற்றாண்டின் இறுதியில் இது 3.5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. பசிபிக் கடலோடு ஒப்பிடும்போது இது மூன்று மடங்கு அதிகம். இந்தியப் பெருங்கடலின் சராசரி மட்டம், ஆண்டுக்கு 3.7 மில்லிமீட்டர் உயர்ந்துகொண்டிருக்கிறது.  பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை,  இந்த விகிதம் 12-13 மில்லிமீட்டர் வரை கூடுகிறது என்றும் அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். உலகில் உள்ள கடற்பகுதிகளில், காலநிலை மாற்றத்தால் மிகவும் அதிகம் பாதிக்கப்படக்கூடிய 17 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (Climate Change hotspots). இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியும் அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

கடல் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள்

பொதுவாக ஒரு கடற்பகுதியில் காலநிலை சார்ந்த பிரச்சனைகள் ஐந்து விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்:

  1. கடலின் சராசரி வெப்பநிலை உயர்வதால் ஏற்படும் பாதிப்புகள் – பவழப்பாறைகள் நிறமிழத்தல், மீன்களின் வலசைப்பாதை மாறுவது, மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவது
  2. பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் பாதிப்பு
  3. கடல்மட்டம் உயர்வதால் ஏற்படும் பாதிப்பு – கடலாமைகளின் முட்டையிடும் தளங்கள் பாதிக்கப்படுதல், கடலோர வாழிடங்கள் அழிதல், கடலோரக் குடிமக்களுக்கு ஏற்படும் இழப்புகள்.
  4. கடல் நீரோட்டம் மாறுபடுவதால் ஏற்படும் பாதிப்பு – மீன்களின் இனப்பெருக்கம், முட்டைகள்/லார்வாக்களின் பயணம் பாதிக்கப்படுவது
  5. கடலின் வேதிக்கூறுகள் மாறுபடுவதால் ஏற்படும் பாதிப்பு – கடல்நீர் அமிலமாதலால் ஓடு உள்ள விலங்குகள் வலுவிழப்பது போன்றவை

பனிக்கட்டி உருகுவதால் நேரடியாக இந்தியப் பெருங்கடல் பாதிக்கப்படுவதில்லை என்றாலும், அதனால் ஏற்படும் காலநிலை சுழற்சிகளின் சிக்கல்கள் ஒருகட்டத்தில் இந்தியப் பெருங்கடலையும் மறைமுகமாக பாதிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காலநிலை பாதிப்புகள் எல்லாம் இந்தியப் பெருங்கடலில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே தென்படத் தொடங்கிவிட்டன என்று கவலையுடன் தெரிவிக்கிறார்கள் அறிவியலாளர்கள்.

பருவமழையும் பெருங்கடலும்

இந்தியப் பெருங்கடலின் சராசரி வெப்பநிலை உயர்ந்துகொண்டிருப்பது பல தளங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகப் பருவமழை பொய்த்துப்போவது, எதிர்பாராத நேரங்களில் கடும் மழை பெய்வது போன்ற சிக்கல்களுக்கும் இதற்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் கடந்த ஐம்பது வருடங்களில், வறண்ட நாட்களின் சராசரி எண்ணிக்கை 27% அதிகரித்துள்ளது. இது ஒரு புறம் என்றால், 2001 தொடங்கி 2019ம் ஆண்டு வரையிலான இருபது ஆண்டு காலகட்டத்திற்குள், அரபிக் கடலில் புயற்சீற்றங்கள் 52% அதிகரித்துள்ளன. இதுபோன்ற பருவச் சிக்கல்கள் கடலில் மட்டுமல்லாமல் நிலத்திலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

பவழத்திட்டுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்

அதிகரித்துவரும் சராசரி வெப்பநிலை, கடல்வாழ் உயிரினங்களையும் பாதிக்கிறது.வெப்பம் அதிகரிக்கும்போது நுண்பாசிகளை இழந்து நிறமிழக்கும் பவழ உயிரிகள், அதிலிருந்து மீள முடியாமல் இறந்துவிடுகின்றன. 2040ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பவழத்திட்டுக்கள் அழியலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பவழத்திட்டுக்கள் அழியும்போது, அவற்றை வாழிடமாகக் கொண்டுள்ள மீன்கள் மற்றும் பிற உயிர்களும் அழியக்கூடும்.

கடல்மட்டம் உயர்வதால் ஏற்படும் பாதிப்புகள்

கடல்மட்டம் உயர்வதால் 2100க்குள் மும்பை, மங்களூரு, கொச்சின், விசாகப்பட்டினம், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 இந்திய நகரங்கள் 3 அடி கடல்நீரால் சூழப்படும் என்று காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டுக் குழுமம் தெரிவித்திருக்கிறது. கடல்கோள் என்பது எங்கோ படித்த ஒரு நிழல் நினைவாக இல்லாமல் நிஜமாகவே வரப்போகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. காலநிலை மாற்றம் பற்றிய பல சமீபத்திய ஆய்வுகள், முந்தைய அறிக்கைகளை விட அச்சுறுத்தல் அதிகமாகத்தான் இருக்கப்போகிறது என்று உறுதிப்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில், இந்த நகரங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலோ 2100ம் ஆண்டு என்பதும் குறைந்து அடுத்த 60 ஆண்டுகளில் பாதிப்பு வரலாம் என்று புதிய ஆராய்ச்சிகள் கண்டுபிடித்தாலோகூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

கடலோரப் பெருநகரங்களில் ‘முன்னேற்றம்’ என்ற பெயரில் நடத்தப்படும் சூழலியல் அத்துமீறல்கள், மோசமான நகர மேலாண்மை, சூழல் அநீதி போன்றவை இந்தப் பிரச்சனையை இடியாப்ப சிக்கலாக மாற்றியிருக்கின்றன. பூர்வகுடிகள் அப்புறப்படுத்தப்படுவது, மீனவர்களின் எதிர்ப்பையும் மீறிக் கடலுக்கு அருகில் கட்டிடங்கள் கட்டப்படுவது என பற்றியெரிகிற நெருப்பில் அடிக்கடி எண்ணெயும் ஊற்றப்படுகிறது.

அடுத்த ஐம்பது ஆண்டுகளில் கடல்மட்டம் உயர்வதால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பல லட்சம் பேர் வாழ்விடத்தை இழந்து காலநிலை அகதிகளாக மாறப்போகிறார்கள் என்று அறிக்கைகள் கணித்திருக்கின்றன.  கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும் வாழ்விடம் மற்றும் வாழ்வாதார இழப்பு காரணமாக, மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகளைச் சேர்ந்த மக்கள் ஏற்கனவே புலம்பெயரத் தொடங்கியிருக்கின்றனர்.

இன்னொரு புறம் கடலுக்குள்ளும் கடல்மட்ட உயர்வு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கடலோர வாழிடங்களான அலையாத்திக்காடுகள், பவழப்பாறைகள் ஆகியவை இதை எப்படி எதிர்கொள்ளும் என்பது தெரியவில்லை, அவை பாதிக்கப்படவே வாய்ப்புகள் அதிகம். கடலாமைகளின் இனப்பெருக்கமும் முட்டையிடுதலும் இதனால் பாதிக்கப்படும்.

மீன்களுக்கு ஏற்படும் பாதிப்பு

காலநிலை மாற்றத்தால் மீன்கள் பாதிக்கப்படும் என்பது நாம் அனைவரும் அறிந்த தகவல்தான். ஆனால் இந்தியப் பெருங்கடலில் உள்ள பல மூன்றாம் உலக நாடுகளின் கண்ணோட்டத்தில் பார்த்தால், மீன்களுக்கு ஏற்படும் பாதிப்பு, மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் சிதைப்பதாக இருக்கிறது. பெரும்பான்மை மீனவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களாக இருக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், மீன்களுக்கு ஏற்படும் பாதிப்புகளோடு மீனவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களையும் பேசவேண்டும்.

கடலின் வெப்பநிலை அதிகரிப்பதால், கடலில் உள்ள நுண்பாசிகள் சரியாக வளர்வதில்லை. கடந்த 60 ஆண்டுகளில், இந்தியப் பெருங்கடலில் உள்ள நுண்பாசிகளின் (Phytoplankton) அளவு 20% குறைந்துவிட்டதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இதைத் தவிர, கடலின் வெப்பநிலை மாறுபடுவதால், வெப்பநிலை சார்ந்து அடுக்குகள் உருவாகி (Stratification), சத்துள்ள நீரும் சத்துகள் இல்லாத நீரும் கலக்க முடியாத சூழல் உருவாகிறது. இதுபோன்ற காரணங்களால் கடலில் கிடைக்கும் உணவு பெருமளவில் சரிகிறது. உணவு கிடைக்காததாலும் வாழ்வதற்கு ஏற்ற வெப்பநிலை இல்லாததாலும் மீன்கள் பாதிக்கப்படுகின்றன.

கடந்த ஐம்பது ஆண்டுகளில், இந்தியப் பெருங்கடலின் மொத்த சூரைமீன் பிடி (Total Tuna Catch) பாதி அளவு குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கானாங்கத்தை மீனின் (Indian Mackerel) சராசரி அளவு குறைந்துவிட்டது. இனப்பெருக்கத்திற்காக மீன்கள் வலசை போவது குறைந்துவிட்டது. இந்தியாவின் பல இடங்களில், முகத்துவாரங்களில் மீன்வரத்து கிட்டத்தட்ட நின்றுவிட்டதாக மீனவத் தொல்குடிகள் குறிப்பிடுகின்றனர். மன்னார் வளைகுடாப் பகுதியில் ஒருவகைப் பாரைமீனின் (False Trevally) எண்ணிக்கை கடல்வெப்பமாதலால் குறைந்துவிட்டது என்று ஆய்வுகள் கண்டறிந்திருக்கின்றன.

எண்ணெய் நிரம்பிய மத்திமீன் (Oil Sardine) அதனுடைய பொருளாதார முக்கியத்துவம் காரணமாகக் கேரளாவில் “குடும்பம் புலர்த்தி” என்று அழைக்கப்படுகிறது. சிறு/குறு மீனவர்களின் முக்கியமான வாழ்வாதாரமாக இருந்த இந்த மீனின் வரத்து, கடந்த சில ஆண்டுகளாக எளிதில் கணிக்கமுடியாதபடி ஆட்டம் கண்டிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்தி மற்றும் கானாங்கத்தை மீன்களின் எல்லை விரிந்திருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன,  புதிய பகுதிகளில் இந்த மீன்கள் என்னென்ன சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்துதான் பார்க்கவேண்டும். சில இடங்களில்,கானாங்கத்தை மீன்கள் காணப்படும் சராசரி ஆழம் அதிகரித்துள்ளது. ஆகவே, கானாங்கத்தை மீன்களைப் பிடிக்கவேண்டுமானால் ஆழ்கடல் வலைகளை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலை உள்ளதாகவும், இந்த ஆழ்கடல் வலைகள் கடல் சூழலியலை சீர்குலைக்கும் எனவும் சூழலியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

கடல்வெப்பநிலை அதிகரிப்பதால், மீன்களின் இனப்பெருக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது. பல மீன் இனங்களுக்கு இனப்பெருக்க காலத்தின்போது சீரான வெப்பநிலையும் கடல் வேதிக்கூறுகளும் தேவை. கடல்நீர் வெப்பநிலை அதிகரித்திருப்பதால், சங்கரா மீன் இனங்களின் இனப்பெருக்க காலம் மாறுபட்டிருப்பதாகக் கூறுகின்றன சில முதற்கட்ட ஆய்வுகள். இதுபோன்ற மாற்றங்கள் பிற மீன் இனங்களில் ஏற்பட்டிருக்கின்றனவா என்பதுபற்றி ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வங்காள விரிகுடாவில் பல இடங்களில் மீன்களே இல்லாத “Dead zones” உருவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சந்தைப் பொருளாதாரத்தின் தினசரி நெருக்கடி, பெரிய விசைப்படகுகளுடன் போட்டி போட முடியாத தன்மை ஆகியவற்றால் ஏற்கனவே விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் சிறு  மற்றும் குறு மீனவர்களுக்கே இது பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில், மீன் விற்பதையே மரபுசார் தொழிலாக செய்துவந்த பல பெண்கள், அதிலிருந்து வரும் வருமானம் போதாமல் ஏற்கனவே கூலி வேலைக்கு செல்லத் தொடங்கிவிட்டனர் என்கிறது ஒரு ஆய்வு.

இந்தியப் பெருங்கடலில் உள்ள காலநிலை பாதிப்புகளை நாம் சரியாகப் புரிந்துகொள்வதில் மிகப்பெரிய தடையாக நிற்பவை தரவுகள்தான். சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களால் இந்தப் பகுதியில் தரவுகளுக்கான ஒரு பெரும் போதாமை இருக்கிறது. ஆனாலும் கிடைத்திருக்கும் தகவல்களை மட்டுமே வைத்து இந்தியப் பெருங்கடலின் எதிர்காலத்தை அனுமானித்தால்கூட அது அச்சத்தை வரவழைக்கிறது. ஒரு காலத்தில் உலகின் எல்லா நாட்டிலிருந்தும் பயணிகளை சுமந்த இந்த கடற்பகுதியும் அதன் ஓரங்களில் வசிக்கும் மக்களும் இப்போது ஆபத்திலிருக்கிறார்கள். உலக நாடுகள் விழித்துக்கொள்ளுமா என்பதுதான் நம் முன் நின்றுகொண்டிருக்கும் பிரம்மாண்டமான கேள்வி.

தரவுகள்

  1. Climate Change 2021: The Physical Science Basis, IPCC Report, August 2021
  2. Recent trends in Sea surface temperature and its impact on Oil Sardine, Vivekanandan et al, ICAR, 2009.
  3. Assessment of Climate Change over the Indian Region, Krishnan et al, Ministry of Earth Science Report, 2020
  4. A reduction in Marine primary productivity driven by rapid warming over tropical Indian ocean, Roxy et al, Geophy.Res.Lett, 2015.

பிற படைப்புகள்

Leave a Comment