பறவைகள், விலங்குகள், புழுப்பூச்சிகள், தாவரங்கள், செடி, கொடிகள், நீர்வாழ் உயிரினங்கள் என தமிழக நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த உயிரினங்களுக்கு இம்மண்ணுக்குரிய, புறச்சூழலுக்கு பொருத்தமாகவும், அவற்றின் செயல்பாடுகளையும், நிறங்களையும் அடிப்படையாக கொண்டு பொருத்தமான பெயர்களை நம் முன்னோர்கள் சூட்டியுள்ளனர்.
கால்நடைகளை பின்தொடர்ந்து, அவற்றின் காலடித் தடங்களில் இருந்து வெளிவரும் புழுப்பூச்சிகளை பிடித்துண்ணும் பறவையை கண்டவுடன், ‘மாடு மேய்ச்சான்’, மாடு விரட்டி’, ‘உண்ணி கொக்கு’ என பொருத்தமான பெயர்களை தமிழர்கள் வட்டாரத்திற்கேற்ப சூட்டி மகிழ்ந்தனர். அதுபோலவே, இன்றைய தலைமுறை வியக்கும் விதமாக பெரும்பாலான உயிரினங்களுக்கு பொருத்தமான பெயர்களைச் சூட்டியிருந்தனர். அதில் பல பெயர்கள் சாதிய மேலாதிக்கத்திற்குள்ளாகியுள்ளது.
தமிழில் பெரும்பாலான உயிரினங்களுக்கு பொருத்தமான பெயர்கள் அமைந்திருக்க, தட்டான்கள் (Dragonfly), வண்ணத்துப்பூச்சிகள்/பட்டாம்பூச்சிகள் (Butterfly/Moth), வெட்டுக்கிளிகள் (Grosshopper), தயிர்க்கடைப்பூச்சிகள் (Praying Mantis), பொன் வண்டுகள் (Jewel Beetle) என பூச்சிகளில் பெரும்பாலானவைகள் பொதுப் பெயர்களிலேயே சுட்டப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு இனத்திலும் பல நூறு வகைகள் நம் நிலப்பரப்பில் காணப்படுகிறது. அந்தவகையில், நாம் இழந்த வரலாற்றை மீட்டெடுப்பது எந்தளவிற்கு முக்கியமானதோ, அதுபோலவே, இழந்த பெயர்களை மீட்டெடுப்பதும் காலத்தின் கட்டாயமாகிறது.
தமிழகத்தில் காணப்படும் சுமார் 450-க்கும் மேற்பட்ட பறவைகளில் பெரும்பாலானவைகளுக்கு பொருத்தமான பெயர் காணப்பட, வேட்டையாடிப் பறவைகளான செம்பருந்து, கரும் பருந்தின் அழகிய தமிழ்ப் பெயர்களுக்கு, இடைசெருகலாக நுழைக்கப்பட்ட பெயர்களில் உள்ள சாதிய மேலாதிக்கத்தின் நுண் அரசியலை பொதுவெளிக்கு கொண்டு வரும் முயற்சியே இச்சிறு கட்டுரையாக்கம். இச்சாதியம் தமிழ் மொழியோடு நில்லாமல், காலனிய ஆட்சியின் நீட்சியாக உள்ள ஆங்கில மொழியிலும் ஊடுருவியுள்ளதை வரலாற்றுப் பக்கங்கள் வேதனையோடு சுட்டிக்காட்டுகிறது.
இந்த பின்புலத்தில், பார்ப்பனர்களின் இந்து மத, சாதிய, பார்ப்பனிய ஆதிக்கம் பெரும்பான்மை மக்கள் மீது மட்டுமின்றி, பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் மீது செயல்பட்டுள்ள ‘பறவைகளின் மீதான பார்ப்பனியத்தின் நுண் அரசியல்’ தான் இக்கட்டுரையின் பேசு பொருளாக அமைந்துள்ளது.
பறவைகளின் பெயர்களில் வினையாற்றியுள்ள பார்ப்பனியத்தின் நுண் அரசியலை பேசுவதற்கு முன், சங்க இலக்கியத்தில் உயிரினங்கள் குறித்த பதிவு பற்றிச் சுருக்கமாக காண்பது பொருத்தமாக இருக்கும்.
சங்க இலக்கியத்தில் உயிரினங்கள்
தொல்காப்பியம் தொடங்கி தமிழின் சங்க இலக்கிய நூல்களில் இயற்கை, உயிரினங்கள் குறித்த செய்திகள் அதிகளவு காணப்படுகின்றன. இன்றைய அறிவியல் கூறுவதை, பண்டைய தமிழர்கள், தங்களது நடைமுறை அறிவால் (Practical Knowledge), பல்லாண்டுகளுக்கு முன்பே பதிவு செய்துள்ளனர்.
மலை உச்சிகளில் வாழும், தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடு முதல் புலி, யானை, காட்டு மாடு என சுமார் 35-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் குறித்து சங்க நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் உள்ளிட்ட பல பூச்சியினங்கள் குறித்தும், சுமார் 58 பறவைகள் குறித்தும் சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்கம் மருவிய நூல்களில் சுமார் ஆறு பறவைகள் குறித்தும் பேசப்பட்டுள்ளன.
நெய்தலில் மட்டும் காணக்கூடிய கடற்காக்கைகளை மருதத்திலோ, குறிஞ்சியிலோ, பாலையிலோ கூறப்படவில்லை. நீர்ப்பறவைகள் மருதத் திணையிலோ அல்லது நெய்தல் திணையிலோ கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. குறிஞ்சி நிலத்தில் காணப்படும் பறவைகள் வேறு எந்த நிலத்திலும் கூறப்படாதது குறிப்பிடத்தக்கது.
பறவைகள் வாழும் சூழ்நிலையையும், இருப்பிடங்களையும் நன்கு கண்டுணர்ந்தே சங்கப் புலவர்கள் பாடல்களாக பதிவு செய்துள்ளனர். பூநாரையில் இருந்து உள்ளான் வரை ஏறக்குறைய 22 நீர்ப்பறவைகளை பற்றிய சுவைபட செய்திகளையும் பதிவு செய்துள்ளனர். வலசைப் பறவைகள், வாழிடப் பறவைகள் குறித்தும், பறவைகளின் காப்பிடங்கள் (Birds Sanctuary) குறித்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வலசை செல்வதற்கு முன்பு, ஆயிரக்கணக்கில் பறவைகள் ஒன்றுகூடி, சேர்ந்து செல்வதை, ‘ஓசனித்தல்’ என்ற வார்த்தையில் அழகுபட பாடியுள்ளனர்.
மூன்று வகையான வல்லூறுகள், இரு வகையான காக்கைகள், ஐந்து வகையான புறாக்கள், மூன்று வகையான பிணம் தின்னிக் கழுகுகள், இரு வகையான கழுகுகளை குறித்த செய்திகள் சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
‘அறிவுடையவன்’ என்ற பொருளில் ‘ஆதன்’ என்ற சொல் சங்க கால வழக்கத்தில் இருந்ததால், ஆதன்+அந்தை என்பதில் இருந்து ஆந்தை என்ற பெயர் உருவாகி இருக்கலாம் என தமிழறிஞர்கள் கருதுகின்றனர். ஆந்தையை பேரறிவுள்ள பறவையாக அக்கால தமிழர்கள் கருதியுள்ளனர்.
ஆந்தையை பற்றிய இத்தகைய உயர்வான கருத்தால், ‘சிறைக்குடி ஆந்தையார்’, ‘கொட்டியூர் நல்லாந்தையார்’, ‘பிசிராந்தையார்’, ‘மன்னெயில் ஆந்தை’, ‘ஒதல் ஆந்தையார்’ என அறிவில் சிறந்த புலவர்களின் பெயர்களில் ஆந்தையின் பெயரை இணைத்து, ஆந்தைகளுக்கு அழியாப் புகழை தந்துள்ளனர்.
‘கூகை’, ‘குரால்’, ‘குடிஞை’, ‘ஊமன்’, ‘ஆண்டலை’, ‘பகண்டை’, ‘சிறுகூகை’, ‘சாக்குருவி’ என பல்வேறு பெயர்களில் பதிவு செய்துள்ளதுடன், ஆறு வகையான ஆந்தைகளை பாடியுள்ளனர். பேராந்தையான கொம்பன் ஆந்தையை ‘பெரும் புள்’ என அதன் உருவத்தைக் கொண்டு பதிவு செய்துள்ளனர். ஆந்தையின் பொதுவான நிறமான பிங்கல நிறத்தைக் (பழுப்பு நிறம் – Brown) கொண்டு ‘பிங்கலை’, ‘ஊன்’, ‘இருடி’ (முக்காலம் உணர்ந்த ஞானி), ‘கின்னரம்’ என்று நிகண்டுகள் சுட்டுகின்றன.
ஆந்தைகளின் வாழ்விடமான மரப்பொந்துகளில் முட்டையிடுவதை புறநானூறு (364), நற்றிணை (83) பாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆந்தையின் உருண்டு திரண்ட அழகிய கண்களை ‘தெண்கண்’, ‘கழல்கண்’ என்றும் சங்க இலக்கியங்கள் வர்ணிக்கின்றன.
காலை, மாலை மற்றும் அந்திச் சாயும் நேரங்களில் மரங்களின் அடியில் உதிர்ந்த இலைகளுக்கிடையில் சிறு சிறு பூச்சிகளைத் தேடி உண்ணும் இயல்பு கொண்டதால், வலசை பறவையான, ‘Indian Pitta’ (Pitta brachyuran)-வுக்கு, ‘ஆறு மணிக்குருவி’, தோட்டக்கள்ளன்’ என பொருத்தமான பெயர்களை சூட்டினர். ஆறு மணிக் குருவிக்கு தமிழகத்தின் நிலப்பரப்புக்கும், வட்டாரத் தன்மைக்கேற்ப, காசிக்கட்டிக் குருவி, பொன்னுத் தொட்டான், மொட்டைவால் குருவி (இப்பறவை வாலற்று இருக்கும்), பச்சைக் காடை என சுமார் எட்டு பெயர்கள் வழக்கத்தில் இருக்கின்றன.
இன்றைய தமிழகத்தில், ‘மைனா’ (மைனா – வடமொழிச் சொல்) என பொதுவாக குறிப்பிடப்படும் பறவையை, ‘நாகணவாய்’ப் புள் என சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. ‘புள்’ என்பது பறவைகளை குறிக்கும் சொல்லாக வழக்கத்தில் இருந்துள்ளது. திருவாரூர் கீழத் தஞ்சையில் நார்த்தம் சுளையின் நிறத்தை, நாகணவாய்ப் பறவையின் கண்களின் மேலும் கீழுள்ள மஞ்சள் திட்டோடு தொடர்புப் படுத்தி, ‘நார்த்தாங்குருவி’ என்று இயற்கையின் ஒத்திசைவோடு அழைப்பதின் இனிமையையும், மொழியின் வளமையும் புரிந்துக் கொள்வது இன்றைய அவசியமாகிறது.
தமிழில் உயிரினங்களுக்கான பெரும்பாலான பெயர்கள் நடைமுறை அறிவால் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. முறையான பொதுக்கல்வி என்பது, காலனிய ஆட்சிக்குப் பிறகே இந்திய நிலப்பரப்பில் அறிமுகமாகியதும் நினைவு கூறத்தக்கது. இந்தியளவில் 1900-களுக்குப் முன்பு அரும்பிய பறவையியல், சுற்றுச்சூழல், பறவை நோக்கல் என்ற துறைகள் காலனிய ஆட்சியில் மேலதிகாரிகளின் பொழுதுப்போக்காகவும், பெருமைக்காகவும் இருந்த நிலையில், ஆங்கில வழிக்கல்வியை முதலில் கைக்கொண்ட பார்ப்பனர்கள் மற்றும் மேட்டுக்குடியினர் மட்டுமே ஆர்வம் கொண்ட துறைகளாக மேற்கண்டவைகள் விளங்கின. அந்த பின்புலத்தில் இருந்தும் பறவைகளின் பெயர் மாற்றங்களை அவதானிக்க வேண்டியுள்ளது. ஆண்டாண்டு காலமாக பெரும்பான்மை மக்களை ஒடுக்கி வந்த சாதிய, தீண்டாமையில் கருத்தியலை பறவைகளின் மீது (நல்ல தமிழ்ப் பெயர்களை மாற்றி) ஏற்றியதையும், இடைச்செருகலாக செய்து வந்தததையும் வரலாற்றின் பக்கங்களில் இருந்து அறியமுடிகிறது. சாதியத்தின் பேரால் மக்களை மேல்-கீழ் அடுக்காக பார்ப்பனியம் பிரித்ததோடு நில்லாமல், நகரங்கள், ஊர், நீர்நிலைகளுக்கு மட்டுமின்றி உயிரினங்களுக்கு இருந்த நல்ல தமிழ்ப் பெயர்களை வடமொழி, சமஸ்கிருதப் பெயர்களாக மாற்றியதற்கான காரணங்களை ஆராய்வது இன்றைய தேவையாகிறது.
தமிழகத்தில் சுமார் 450-க்கும் மேற்பட்ட பறவைகள் வாழ்ந்து வருகின்றன. அதில் கொன்றுண்ணிப் பறவைகள் எனச் சுட்டப்படும், ‘வேட்டையாடிப் பறவைகளும்’ அடங்கும். இரையை வேட்டையாடி வீழ்த்துவதில் திறன் படைத்தவைகளாக வேட்டையாடிப் பறவைகள் விளங்குகின்றன. அதற்கேற்ப, அவற்றின் அலகும், உடலமைப்பும், கால்களும் திறன் பெற்றவைகளாக தகவமைந்துள்ளன.
வேட்டையாடிப் பறவைகளான செம்பருந்து, கரும்பருந்து என்ற இரு பறவைகளின் மீது வழக்கத்தில் இருந்து மறைந்த பெயர்களும், சாதிய மேலாதிக்கத்தை வெளிப்படுத்தி இன்றளவும் நீடித்து நிற்கும் ஆங்கிலப் பெயரும், இப்பறவைகளின் நிறங்களையும், அழகையும் கொண்டு கட்டமைக்கப்பட்டதாக அமைந்துள்ளது.
செம்பருந்து
செம்பருந்து (Brahminy Kite – Haliastur Indus)
தலை முதல் கழுத்து வரை பளிச்சிடும் வெள்ளை நிறமும், அலகு வெளிர் நீலமாக முனை மட்டும் வெளுத்து, கீழ் வளைந்து உறுதியாக காணப்படும். விழிப்படலம் பழுப்புக் கலந்த மஞ்சள் நிறத்தில் தென்படும். உடலின் மேற்பகுதி முழுதும், வயிறும், வாலும் செந்நிறமாக தோற்றமளிக்கும். கால்கள் வெள்ளை கலந்த மஞ்சள் நிறத்தில் உறுதியாக காணப்படும். வளராத பறவைகள் பழுப்புக் கலந்த செந்நிறமாக இருக்கும். நீர்நிலைகள், மீன்பிடி கரையோரங்களில் மீனவர்களின் வலைகளிலுள்ள மீனை எடுத்துக் கொண்டு செம்பருந்துகள் பறப்பதை காணலாம். மீன் முக்கிய உணவாக இருந்தாலும், நண்டு, நத்தை, பாம்பு போன்றவற்றையும் உணவாகக் கொள்ளும் இயல்புடையது. கடற்கரையோரங்களில் அமைந்துள்ள பனை மரங்களில் இரவுத் தங்குவதாக சங்க இலக்கியப் பாடல் வரிகள் செம்பருந்தை குறிப்பிடுகின்றன.
கரும் பருந்து அல்லது கள்ளப் பருந்து (Black Kite – Milvus migrans)
கரும்பழுப்பு நிற உடலில் மெல்லிய, வெளிறிய பழுப்பு நிறக்கோடுகள் காணப்படும். கீழ் நோக்கி வளைந்த உறுதியான அலகின் முனைப் பகுதி கருப்பு நிறத்திலும், மேற்பகுதியில் மஞ்சள் திட்டும் தென்படும். விழிப்படலம் பழுப்பு நிறத்திலும், இரையை பிடிப்பதற்கேற்ற வலுவான கால்கள் வெளிறிய மஞ்சள் நிறம், சற்று நீண்ட பிளவான வால் என கரும்பருந்து தோற்றமளிக்கும். நகரங்கள், கிராமங்கள், நகரின் புறநகர்ப்பகுதிகள் என மனிதர் வாழ்விடங்களை சார்ந்து இருக்கும். மனிதர்கள் நடமாட்டம் இருந்தாலும் அச்சப்படாமல் கோழிக்குஞ்சுகளை கவர்ந்து செல்வதால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில், ‘கள்ளப் பருந்து’ என்ற பெயரில் சுட்டப்படுகிறது. குப்பை மேடுகள் நிறைந்த இடங்களில் பறந்து திரிந்து எலிகள், ஓணான் போன்றவற்றை பிடித்துண்ணும் இயல்பு கொண்டது. கிராமப்புறங்களிலுள்ள இறைச்சிக் கடைகளை சுற்றியும் பறந்து திரிவதைக் காணலாம். பரபரப்பான சென்னை மாநகரின் மத்திய பகுதியான சென்ட்ரல் மின் ஊர்தி நிலையத்திற்கு எதிர்ப்புறமுள்ள கூவம் ஆற்றங்கரையை ஒட்டியுள்ள பகுதியில் பல கரும் பருந்துகள் சுற்றித் திரிவதை சற்று நேரம் ஒதுக்கி கவனித்தால் பார்த்து மகிழலாம்.
உயர்வு/தாழ்வு, உயர்பிறப்பு/தாழ்பிறப்பு, இழிபிறவினன், தூய்மை/தீட்டு என தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தீண்டாமையை திணித்த பார்ப்பனியம், பறவைகளின் மீது, ‘அழகு/அழகின்மை’ என்ற பாகுபாட்டை ஏற்றி, தனது மேலாதிக்கத்தை எவ்வடிவிலும் கோலோச்ச துடிக்கிறது. அதன் வெளிப்பாடாகவே, செம்பருந்து என்ற அழகிய தமிழ்ப் பெயர், ‘பார்ப்பனப் பருந்தாகி’யது. கரும்பருந்து என்ற பெயர், ‘பறைப் பருந்தாக’ மாறியது.
அமெரிக்க அரசின் இலட்சினையாக உள்ள ‘Bold Eagle’-இன் அழகையும், அதிகாரத்தையும் பெற்ற சாயலாக, ‘செம்பருந்தை’ கண்ட பார்ப்பன ‘பறவையியல் அறிவாளி’ எவரோ திட்டமிட்டு, ‘பார்ப்பனப் பருந்து’ என்ற பெயரைச் சூட்ட, பல பத்தாண்டுகளுக்கு அதுவே நிலைநிறுத்தப்பட்டது. இதற்கு எதிர்மறையாக, செம்பழுப்பு நிறத்தில், சற்று வெளிறிய மெல்லிய வெள்ளைக் கோடுகளோடு தோற்றமளிக்கும், ‘கரும் பருந்தை’ தீண்டத்தகாத மனிதனுக்கு ஒப்பீடு செய்து, ‘பறைப் பருந்து’ என்ற பெயரை பார்ப்பனிய அறிவாளி எவரோ சூட்ட நீண்ட நாட்களுக்கு அதுவே வழக்கத்திலும், நூல்களிலும் இருந்தது வேதனைக்குரிய செய்தியாக உள்ளது.
தமிழகத்தில் பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு வட்டாரத்திற்கேற்ப பலப் பெயர்கள் வழங்கப் பெறுகின்றன. ‘பறைப் பருந்து’, ‘பார்ப்பனப் பருந்து’ போன்ற பெயர்கள் வட மொழி ஆதிக்கத்தால் விளைந்தவை என்றும், இவை இடைக்காலத்தில் நுழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் தமிழிலக்கியத்தில் பாடப்பெற்றுள்ள உயிரினங்கள் குறித்து பல நூல்களை எழுதியுள்ள தமிழறிஞர் பி.எல்.சாமி கூறுகிறார்.
பறவைகளின் பெயர்களில் சாதிய குறியீட்டிற்கான அடிப்படைக் காரணத்தை ஆதாரப்பூர்வமாக அறியமுடியவில்லை. இருப்பினும், தாம் முதன்முதலாக நுழைந்த ஆங்கில வழிக் கல்வியின் மூலமும் பெருந்திரளான மக்கள் சமூகத்தை அடக்கியாள முடியும் என்ற நம்பிக்கை கொண்ட பார்ப்பனச் சமூகம், இவ்விரண்டு பறவைகளின் ஆங்கிலப் பெயர்களை, ‘Pariah Kite’ (கரும்பருந்து), ‘Brahminy Kite’ (செம்பருந்து) என மாற்றியதில் இருந்து அறியமுடிகிறது. சாதிய படிநிலையில் மனிதன் அல்லது பறவைகள் (உயிரினங்கள்) என்ற வேறுபாடில்லாமல் கருத்தியலை திணிப்பதிலேயே தங்களது வெற்றி அடங்கியுள்ளதாக பார்ப்பனர்கள் கருதி, தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் பெயர் மாற்றம் செய்திருப்பார்கள் என்று கருத்தும் தவிர்க்க இயலாதபடி உள்ளது. அதற்கு உதவும் எந்த வழியையும் நிராகரிக்கவில்லை.
உயிரினங்களின் மீதான சாதிய குறியீடாக விளங்கும் பெயர்கள் குறித்து அயோத்திதாசப் பண்டிதரின் கீழ்கண்ட மேற்கோள் முக்கியத்துவம் பெற்றது. ‘நம்முடைய பிராமண வேசங்களும் நிலைத்து சுகமடையலாம் என்று எண்ணி மிலைச்ச வேசப் பிராமணர்களும், இத்தேச சிற்றரசர்களுக்கும், கருப்பாக இருக்கும் பருந்தைப், ‘பறைப் பருந்தென்றும்’ (கரும்பருந்து – Black Kite) வெண்மெயாயிருக்கும் பருந்தைப், ‘பாப்பாரப் பருந்தென்றும்’ (செம்பருந்து – Brahmini Kite) கருப்பாக இருக்கும் மைனாவைப், ‘பறை மயினாவென்றும்’, கருப்பாக இருக்கும் பாம்பைப், ‘பறைப் பாம்பு’ என்றும், வெண்மையாய் இருக்கும் பாம்பைப், ‘பாப்பாரப் பாம்பு’ என்றும் சொல்லி வரும்படியானக் கற்பனையில் விழுந்து பார்ப்பானென்னும் மொழியையும், பறையன் என்னும் மொழியையும் பரவச் செய்து வந்தார்கள்’ என்று கூறுவதோடு, அவர்கள் கற்பித்துள்ளவாறு கறுப்பாயிருக்கும் நாயைப் பறை நாயென்றும், வெண்மெயாயிருக்கும் நாயைப் பாப்பார நாயென்று வழங்கினால் அம்மொழி தங்களை இழிவுபடுத்தும் என்று கருதி பறை நாயென்னும் மொழியை மட்டிலும் பரவச் செய்து திராவிட பெளத்தர்களை இழிவுபடுத்தி வந்தார்கள்’ என்ற அழகு/அழகின்மையை தங்களுக்கு சாதகமாக பார்ப்பனர்கள் பயன்படுத்தியதை அயோத்திதாசர் குறிப்பிடுகிறார். (அடைப்புக் குறிக்குள் இருப்பது கட்டுரை ஆசிரியரால் இடப்பட்டது)
மேலும், ‘மிலைச்சர்களை அடுத்தோர்கள் யாவரும் அக்காலத்தில் கல்வியற்றோர்களாதலின் பறைப் பருந்து யாது, பாப்பாரப் பருந்து யாது, பறை மயினா யாது, பாப்பார மயினா யாது, பறைப் பாம்பு யாது, பாப்பாரப் பாம்பு யாது என்றும் பெயர் வேதங்களும் பொருள் வேதங்களும் அறியாது அவர்கள் போதனை மேறை சொல்லி வந்தார்கள் என்பதுடன், சீவசெந்துக்களின் மூலமாகவும், புராணங்களின் மூலமாகவும் கீர்த்தனைகளின் மூலமாகவும் பறையன் என்னும் பெயரைப் பரவச் செய்தது மட்டுமன்றி ரெவரெண்டு ஜெ.பி.ராட்ளரென்னுந்துரை அகராதி ஒன்று எழுதிய காலத்தில் அவருக்கு எடுத்துதவியோராயிருந்தவர்கள் 1. வள்ளுவப் பறை, 2. தாதப் பறை, 3. தங்கலான் பறை, 4. நூற்சாலிப் பறை, 5. குழிப்பறை, 6. தீப்பறை, 7. முரசப்பறை, 8. அம்புப் பறை, 9. வடுகப்பறை, 10. ஆவியப் பறை, 11. வழிப்பறை, 12. வெட்டியாரப் பறை, 13. கோலியப் பறை என்று இன்னும் சில நூதனப் பெயர்களை வகுத்து அப்புத்தகத்தில் பதிய வைத்து அதினாலும் பறையன் என்னும் பெயரைப் பரவச் செய்தனர் என அயோத்திதாசர் பறையன் என்ற பெயர் பரவிய தன்மையை விவரிக்கிறர்.
அயோத்திதாசப் பண்டிதர் கூறுகின்ற பின்புலத்தில் இருந்தே, பறவைகளின் பெயர் மாற்றத்தை அவதானிக்க வேண்டியுள்ளது. அழகிய பறவைக்கு சாதிய மேலடுக்கிலுள்ள பார்ப்பனப் பெயரும், சற்று நிறம் மங்கியுள்ள பறவைக்கு தாழ்ந்த, தீண்டத்தகாத சாதியின் பெயரும் சூட்டும், ‘பார்ப்பனியத்தின் நுண் அரசியலை’ புரிந்துக் கொண்டு, இந்தியச் சமூகத்தில் சாதியத்தின் வேர்களான இந்து மதத்தை மட்டுமின்றி அது தாங்கியுள்ள அரசதிகாரத்தையும், சமூக உற்பத்தி முறையையும், பண்பாட்டு மேலாதிக்கத்தையும் முற்றாக வேரறுக்க வேண்டியுள்ளது.
அக்காலக்கட்டத்தில் தமிழில் ‘பசுமை படைப்பிலக்கியம்’ மெல்ல வளர்ந்து வந்தது. சாதிய உயர்வாக்கமாக கருதப்படும் பறவைகளின் பெயர் மாற்றம் குறித்து, தமிழ் பசுமைப் படைப்பிலக்கிய வரலாற்றில் எந்தவொரு எழுத்தாளரும் பேசாதது மட்டுமின்றி சிறிய அளவிலான எதிர்ப்போ, கட்டுரையோ எழுதாதது வியப்பளிக்கும் செய்தியாகவே உள்ளது. திருச்சியில் நம்பிராஜன் என்ற சமூக ஆர்வலர் மட்டுமே தொடர்ச்சியாக பல கூட்டங்களில் பறவைகளின் சாதிய பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார் என்பதை நண்பர்களின் மூலம் வாய்மொழியாக கேட்க முடிந்தது. தமிழின் மூத்த சூழலியல் எழுத்தாளர் ச.முகமது அலி, தனது ‘இயற்கை; செய்திகள் சிந்தனைகள்’ நூலில் செம்பருந்து குறித்த பதிவை செய்துள்ளார்.
‘பறைப் பருந்து’ என்ற இழிபெயர் 1990-களின் இறுதிப்பகுதியில் இருந்து தமிழில் வெளிவந்த பறவையியல் நூல்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, ‘கரும்பருந்து’ அல்லது ‘கள்ளப் பருந்து’ என்ற வழக்கத்திற்கு வந்தது. இப்பெயருக்கான எதிர்ப்பையோ, மாற்றத்திற்கான பின்புலத்தையோ, கண்டறிய போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதே வருத்தத்திற்குரியதாக உள்ளது.
‘Pariah Kite’ என்ற பெயரை முன்னொட்டாக கொண்டுள்ள ஆங்கிலப் பெயரை, சர்வதேச பறவைகள் அமைப்பு (அமைப்பின் பெயரையும் நாளது வரை கண்டறிய முடியவில்லை) 1990-களுக்கு பிற்பாடு பறவைகளின் நடத்தையியல், செயல்பாடு, கூடமைக்கும் முறை பற்றி நுட்பமாக அவதானித்து பொருத்தமான பெயர்களை மாற்றினர். அப்போது, ‘Pariah Kite’ என்ற சாதிய இழிச்சொல் விலகி, ‘Black Kite’ என்ற பொருத்தமான பெயர் வழக்கத்திற்கு வந்தது.
அயோத்திதாசப் பண்டிதர் குறிப்பிட்டபடி, நாய் என்பது ‘இழிவான உயிரினம்’ என்ற மேட்டுக்குடிப் பார்வையில், ‘பார்ப்பன நாய்’ என்ற சொல்லாடலை நுட்பமாக தவிர்த்து, ‘பறை நாய்’ என்பதை மட்டும் தமிழகம் முழுக்க பரவச் செய்ததன் நுண் அரசியலை உணர்ந்துக் கொண்டால் மட்டுமே, துவக்கக் காலத்திலிருந்து மேட்டுக்குடியினருக்கான துறையாக அறியப்படுகிற பறவையியலில், ‘Pariah Kite’ என்ற இழிபெயர் நீக்கினாலும், ‘Brahminy Kite’-ஐ தொடர்ச்சியாக வழக்கத்தில் வைத்திருப்பதன் பின்புலத்திலுள்ள அரசியலை புரிந்துக் கொள்ள முடியும்.
பறவையியல், பறவை நோக்கல், சுற்றுச்சூழல் போன்ற துறைகள் தொடக்கக் காலத்தில் இருந்து படித்த மேட்டுக்குடியினருக்கானதாக (பார்ப்பனர்கள்) இருந்தது. காலப்போக்கில் தொடர்ச்சியான மாற்றங்களால் அடித்தட்டு மக்களும், இளைஞர்களும் இத்துறையில் ஆய்வு செய்ய தொடங்கினார்கள் என்பதே யதார்த்தமாக உள்ளது. அந்தவகையில், மேட்டுக்குடியினருக்கான துறையில், மேட்டுக்குடியினருக்கான சொல்லாடல் இருப்பது மிகவும் அவசியம் என்பதை உணர்ந்த பார்ப்பனர்கள், ‘Brahminy Kite’ என்ற உயர்வான பெயரை இன்றளவும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர் என்பதை புரிந்துக் கொள்ளமுடிகிறது.
இந்திய பறவையியல் அறிஞரான சாலிம் அலி தொட்டு பல பறவையியல் நிபுணர்களும் பறவைகளின் ஆங்கில பெயர்களில் இருந்த இத்தகைய சாதிய உயர்வு/தாழ்வு சொல்லை நீக்குவதற்கான முயற்சியோ, எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. அதுகுறித்த புரிதலையாவது கொண்டிருந்தார்களா என்பதும் ஐயமாக உள்ளது. இன்றளவும் சர்வதேச அளவில், ‘Brahminy Kite’ தான் வழக்கத்தில் இருக்கிறது. அப்பறவையின் உடல் அமைப்பு, நிறத்திற்கேற்ப, ‘Brown Kite’ (செம்பருந்து) பொருத்தமாக இருப்பினும், இன்றளவும் எந்த பறவையியலாளரும் அதற்கான முயற்சி எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அளவில் வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகையான, ‘Down to Earth’-இல் (Wednesday 31 January 2007) 2007-ஆம் ஆண்டு பேராசிரியர் கோவிந்தசாமி அகோரமூர்த்தி, ‘Avoid using caste names for India’s beasts’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். வேறு ஏதும் பதிவுகள் வந்ததாக அறியமுடியவில்லை. சாதிய பெயரை தாங்கி நிற்கும் மேலும் சில பறவைகளின் பெயர்களை அறிந்துக் கொள்ள வேண்டியது இத்தருணத்தில் அவசியமாகிறது.
பார்ப்பன வாத்து (Shelduck Ruddy), நாமத்தலை வாத்து (Wigeon), குடுமிப் பருந்து, (Crested Hawk Eagle) மற்ற பெயர்கள் குடுமி எழால், குடுமியான்), நாமக்கோழி (Common Coot), பிராமணி மைனா (Black Headed Myna or Brahmini Myna மற்ற தமிழ்ப் பெயர்கள் பாப்பாத்தி பக்கி, பாப்பாத்தி நாகணவாய்), பிராமணக் குருவி என பலப் பறவைகளின் பெயர்களில் சாதிய மேலாதிக்கத்தை தாங்கி நிற்கும் பார்ப்பனியம், வெவ்வேறு பெயர்களில் முன்னொட்டாக இருக்கிறது. இதில் பல பறவைகளின் பெயர்கள் மாற்றத்திற்குள்ளானாலும், சில பறவைகளின் பெயர்கள் மாறாமலே உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் வெளிவந்துள்ள ‘வண்ணத்துப்பூச்சிகள்’ பற்றிய அறிமுகக் கையேட்டில், Pansy என்ற வண்ணத்துப்பூச்சிகளின் குடும்பத்திற்கு ‘வசீகரன்’ என்று வடமொழிப் பெயரைத் தாங்கி வந்துள்ளது. ‘நாமத் தாவி’ (Common Banded Awl – Hasora chromus) (நாமக்கோழி (Common Coot – Fulica atra என்று ஒரு பறவையின் பெயர் உள்ளதும் இங்கு நினைவுக்கூரத்தக்கது) என்ற பெயரை எதன் அடிப்படையில் சூட்டியுள்ளனர் என்பது புரியாத புதிராகவே உள்ளது. இவ்வண்ணத்துப்பூச்சியின் கரும் பழுப்புநிற இறகுகளின் நடுவில் வெண் பட்டைக் காணப்படுவதாலேயே, இப்பெயர் வந்திருப்பதாக கருத இடமிருக்கிறது.
மேலும், நாமத்தலை வாத்து, குடுமிப் பருந்து போன்ற பறவைகளின் முன்னொட்டும் சாதிய மேலாதிக்கத்தின் குறியீடாகவே அமைந்துள்ளதை கூர்ந்து நோக்க வேண்டியுள்ளது. இங்கு நமக்கு ஒரு முதன்மையான கேள்வி எழுகிறது. பறவையின் தலையில் வெள்ளைப் பட்டை, வண்ணத்துப்பூச்சியின் இறகுகளில் வெள்ளைப் பட்டை, பறவையின் தலையில் முடிக்கற்றைகள் என்று வந்தாலே, சாதிய உச்சத்திற்கேற்ப, பெயரிட்டு கொண்டாடுவதை எந்தவகையில், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அனுமதிப்பது…?
பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கான தமிழ்ப் பெயர்களை சூட்டும்போது அந்தந்த துறை சார்ந்த வல்லுனர்கள் மற்றும் மொழியியல் அறிஞர்களின் கலந்தாய்வின் அடிப்படையிலும், ஒத்திசைவின் அடிப்படையில் பெயரிடுவதில் என்ன சிரமம் இருக்கப் போகிறது என்பது தெரியவில்லை.
படித்த மேட்டுக்குடி மக்களுக்கானதாக பறவையியல், பறவை நோக்கல், சுற்றுச்சூழல் துறைகள் இருந்ததால், பறவைகளின் பெயர்களில் ஊடாட்டம் செலுத்திய பார்ப்பனியத்தின் நுண் அரசியலை, ‘கவனமாக’ கடந்த சென்ற தமிழக சூழலியல் அறிஞர்களின் அக்கறையின்மையால், இன்று நம் உணவு மேசையில் என்ன உணவு இருக்க வேண்டும் என்பதை ‘பார்ப்பனியம்’ தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்திருக்கிறது. அந்தவிதத்தில், ‘Brahminy’–யை ஒழித்து, ‘Brown’-யை நிறுத்துவதோடு, எதிர்ப்பு பண்பாட்டை குறிப்பாக ‘தமிழர் பண்பாட்டை’ நிறுத்தவேண்டிய தேவையும் உள்ளது. பார்ப்பனியத்தை எவ்வடிவிலும் எதிர்க்க வேண்டிய அவசியத்தை உணரும் தருணமாகவும் இது அமைந்துள்ளது.
அந்தவகையில், ‘பறவைகளின் மீதான சாதிய மேலாதிக்கத்தின் நுண் அரசியலை’ புரிந்துக் கொண்டு, அதற்கெதிரான செயல்பாடுகளை முன்னெடுப்பதும், உயிரினங்களுக்கு தொல் தமிழர்கள் சூட்டியிருந்த, அழகிய, மறக்கப்பட்ட தமிழ்ப் பெயர்களை கண்டறிவதுமே, ‘Brahminy Kite’ வெளிப்படுத்தும் செய்தியாகும்.
நன்றிக்குரிய தரவுகள்
- அலாய்சிஸ், ஞான., (தொகுப்பாசிரியர்) – அயோத்திதாசப் பண்டிதர் சிந்தனைகள் முதல் தொகுதி – நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் – சனவரி 2011
- சண்முகானந்தம், ஏ., – தமிழகத்தின் இரவாடிகள் – தடாகம் வெளியீடு – 2014.
- சாமி, பி.எல்., – சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம் – திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக கழகம், லிமிடெட், 1976
- பானுமதி, ஆர்., – வண்ணத்துப்பூச்சிகள் – க்ரியா பதிப்பகம் – சனவரி 2015
- ரத்னம், க., – தென்னிந்தியப் பறவைகள் – தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.
- ரத்னம், க., – தமிழில் பறவைப் பெயர்கள் – உலகம் வெளியீடு – மே 1998.
- ரத்னம், க., – தமிழ்நாட்டுப் பறவைகள் – மெய்யப்பன் தமிழாய்வகம் – அக்டோபர் 2002
- http://www.downtoearth.org.in/blog/avoid-using-caste-names-for-indias-beasts-5480