தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய கிராமம் சிற்றூர்புரம்.அண்மையில் பெய்த மழையில் ஓரளவுக்கு குளங்கள் எல்லாம் நிரம்பி இருந்தன. அந்த ஊரில் இருந்த நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர் வீட்டில் மிக சீரோடும் சிறப்போடும் பீப்பாய் தண்ணீர் அதாவது ‘மினரல் வாட்டர்’ கோலோச்சியபடி இருந்தது. விலை ஒரு லிட்டருக்கு 1 ரூபாய், நாளொன்றுக்கு ஒரு குடும்பத்துக்கு 10 லிட்டர் என்றாலும் கூட மாதத்துக்கு 300 லிட்டர் ஆண்டுக்கு 3600 ரூபாய்.இதில் விருந்தாளிகள் வந்தால் இன்னும் கூடுதலாகும்.ஒரு சாதாரண குடும்பம் குடிதண்ணீருக்கு மட்டும் ஏறத்தாழ ஆண்டுக்கு 4000 ரூபாய்கள் செலவு செய்கிறது.எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.நண்பர் அந்த ஊரில் உள்ளவர்களிலேயே ஓரளவு கூடுதலாகப் படித்தவர், நாலும் தெரிந்தவர்.அவரைப் பார்த்து இன்னும் நிறையப்பேர் இந்த ‘அடைக்கப்பட்ட’ நீரை வாங்குவார்கள் என்று புரிந்து கொண்டேன்.ஆக பன்னாட்டு நிறுவனங்களின் வெற்றி முழுமையாக சிற்றூர்களிலும் நிலைபெற்றுவிட்டதைக் காண முடிகிறது.
முன்பு ஒரு முறை கோக் நிறுவனம் ஒன்றின் முகவர் கூறிய சொற்கள் நினைவுக்கு வந்து போயிற்று.‘எங்களது போட்டியாளர்கள் இந்திய நாட்டில் உள்ள சிறிய குளிர்பானக் கம்பெனிகள் அல்லர்.இந்நாட்டின் பாதுகாப்பான குடிநீர்தான்’ என்ற அவரது சொற்களில் இருந்த நுட்பம் இன்று உறுதிப்பட்டுப்போனது.இயற்கை ஆதாரங்களை சுரண்டுவதன் மூலம் கிடைக்கும் வருமானம் கணக்கற்றது.அத்துடன் அதில் சிறு எலும்புத் துண்டை உடந்தை போகும் கும்பலுக்கு வீசிவிடலாம்.யாரும் மறுத்துப் பேசமாட்டார்கள்.வளர்ச்சி என்ற குதிரை எவ்விதத் தடையும் இன்றி தவ்வாளம் போட்டு ஓடும்.இதுதான் இன்றைய வளர்ச்சி அல்லது மேம்பாட்டு மேனாமினுக்கிகளின் கோட்பாடு.ஆனால் இதன் மற்றொரு முகம் மிகக் கொடுமையாக மாறி வருகிறது. இயற்கை ஆதாரங்களான காடுகள், நீர்நிலைகள், மனிதர் அண்டாத கானகப் பகுதிகள், ஆழமான கடல்கள் போன்றவை இந்த மேம்பாட்டின் பெயரால் அடைந்த துயரங்களை அவை திருப்பிக் கொடுக்கத் தொடங்கிவிட்டன. இயற்கை என்ற பூதம் சற்றே முகச்சுழித்துப் புரண்டு படுக்கத் தொடங்கிவிட்டது.
சூடாகும் உலகம் பற்றி இரண்டு வகையான கருத்துகள் நிலவி வருகின்றன.“பூவுலகு சூடாவதால் பேரழிவு நிகழும், எனவே உடனடியாக சூடாக்குவதை நிறுத்துங்கள்” என்ற குரல் சற்றே உரக்கக் கேட்கிறது.“அதெல்லாம் ஒன்றுமில்லை, சிலர் ரொம்பவும் மிகைப்படுத்திப் புலம்புகின்றனர்.உலகில் இதெல்லாம் இயல்பானதுதான்.உலக வரலாற்றில் குளிரும் வெப்பமும் மாறி மாறி வருவதுதான்.ஒன்றும் அச்சப்படத் தேவையில்லை” என்று சிலர் எதிருரை வழங்குகின்றனர்.இரண்டு கூற்றிலும் உண்மைகள் உள்ளன.
பூவுலகின் வரலாற்றில் மிகுந்த வெப்ப ஊழிகள், மிகுந்த பனி ஊழிகள் மாறி மாறி வந்துள்ளன.ஆக இது வரலாற்றில் நிகழ்போக்கில் நடந்ததுதான் நடப்பதுதான்.ஆனால் மாந்த இனம் தோன்றி வளர்ந்த பின்னர் நடக்கும் வெப்ப உயர்வுக்கும், அதற்கு முன்னர் நடந்த வெப்ப உயர்வுக்கும் நிறைய வேற்றுமைகள் உள்ளன.அதிலும் கூட மாந்த இனத்தின் வளர்ச்சிக் காலத்தில் கி.பி.18ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் நடந்துவரும் வெப்ப உயர்வுக்கும் அதற்கு முன்னர் ஏற்பட்ட வெப்ப உயர்வுக்கும் வேறுபாடு உள்ளது.குறிப்பாக 1970கள் வரை வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.ஆனால் 1970க்குப் பின்னர் 0.17 செல்சியசு பாகை (டிகிரி) (சி) வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதைப் புள்ளிவிளக்கங்கள் தெரிவிக்கின்றன.
நடப்பு நூற்றாண்டு 1.7 செல்சியசு பாகை (சி) வெப்பநிலையைத் தொட்டு விடுவோம் என்றும் எச்சரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. இதேபோல கரிவளியின் அளவும் வளிமண்டலத்தில் அளவுக்கு அதிகமாக உயர்ந்து கொண்டே செல்கிறது 1955ஆம் ஆண்டளவில் 320 பேராயிரத்தில் ஒரு பகுதி (PPM- Parts Per Million) என்ற அளவுக்கும் குறைவாக வளி மண்டலத்தில் இருந்த கரிவளியின் அளவு இப்போது 385 பே/ப என்ற அளவாக உள்ளது. இது 450க்கு விரைவில் எட்டிவிடும் என்று அறிவியலர் கணிக்கின்றனர்.ஆனால் இது மாந்தரின் செயல்பாடுகளால் மட்டும் அதிகரிக்கவில்லை, இயற்கை நிகழ்வுகளாலும் நடக்கின்றன.
எடுத்துக்காட்டாக எரிமலைகள் வெளித்தள்ளும் கரியின் அளவு 230 பேராயிரம் டன் (மெகா டன்) என்று கணக்கிடுகின்றனர். அதாவது இதோடு ஒப்பிட்டால் மாந்தர் வெளியிடுவது 1 விழுக்காட்டுக்கும் குறைவுதான்.ஆனால் இயற்கையில் வெளிவரும் கரியை இயற்கை ஆதாரங்களே எடுத்துக்கொள்கின்றன. தொழில்மயம் என்பது அதைத் தடுக்கிறது. குறிப்பாக கரியை ஈர்க்கும் ஆதாரங்களைக் சிதைக்கின்றது. இதன் விளைவாக குரவளைப்பிடி (Tipping Point) என்று கூறக்கூடிய உச்சமட்ட வெப்பநிலை இலக்கான 2 பாகை செல்சியசு அளவை மிக விரைவாக எட்டக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு நிகழ்ந்துவிட்டால் அது திரும்பவரமுடியாத ஒரு முட்டுச் சந்துக்குள் சிக்கியது போன்றதாகும்.
இந்த வல்லடியுரைகள் ஒருபுறம் இருக்க பூவுலகுக்கு ஏற்பட்டுள்ள இந்த வெப்ப உயர்வால் அல்லது பூவுலகுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சலால் ஏற்பட்டு வரும் விளைவுகள், அல்லது ஏற்படவுள்ள விளைவுகள் பற்றி நாம் அக்கறைப்பட்டாக வேண்டும்.
ஓர் உடலில் காய்ச்சல் என்பது ஒரு குறிகாட்டி (Indicator) என்று கொள்ள வேண்டும். அது உடலில் ஏதோ நோய் இருக்கிறது என்று அடையாளங்காட்டுகிறது. அதன் அடிப்படையில் உடலில் சளி அதிகம் இருக்கலாம், புற்றுக்கட்டி கூட இருக்கலாம். எப்படியாயினும் அந்தக் காய்ச்சல் ஏதோ கோளாறு உள்ளதை நமக்கு அடையாளம் காட்டுகிறது. இதேபோல உலகின் காய்ச்சலுக்கான காரணங்களை நாம் கண்டறிய இயலும். குறிப்பாக படிக எரியல்களான (Fossil Fuel) நிலக்கரி, கன்னெய் (பெட்ரோலியம்) போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட தொழில்மயத்தின் பின்னர் காற்றில் கரிவளி அதிகரிப்பும் அதனால் வெப்பத்தின் அளவும் உயர்ந்து வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த தொழில்நுட்பங்களை வைத்துள்ள நாடுகள் நுகர்ந்து தள்ளும் அளவும் வரைமுறையற்று உள்ளது.
தொழில்நுட்பத்தின் உதவியோடு வளமான காடுகள் வெட்டி எடுக்கப்பட்டு கப்பல் கட்டுவதில் இருந்து கட்டிடம் கட்டுவது வரைக்கும் பொட்டலாக்கப்படுகின்றன. இதனால் உலகின் நுரையீரல்கள் என்று கூறப்படும் அமேசான் போன்ற நுட்பமான காடுகள் – கரிவளியை ஈர்க்கும் திறனை இழந்து கரிவளியை வெளியேற்றும் மாசுபாட்டுக் காரணியாக மாறியுள்ளன. அதாவது இந்தக் காடுகளில் உள்ள பசும் இலைத் தொகுப்புகள் கரிவளியை எடுத்து ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுவதால் காற்றில் கரியின் அளவு குறைந்து வரும். இக்காடுகள் மக்களினம் புகாத கன்னிக்காடுகளாகும். ஆனால் இப்போது இவற்றில் புகுந்த சுரங்கந் தோண்டிகளும் கட்டை வணிகர்களும் மொட்டையடித்ததால் காட்டின் நீர் சேமிப்புத் திறன் குறைந்துவிட்டது. இதனால் பல எக்டேர் கணக்கில் மரங்கள் மடிந்து வருகின்றன.மடியும் மரங்களில் இருந்து வெளியேறும் கரிவளி காற்றில் நிரம்புகிறது. இப்படியாக நற்காரணியாக இருந்த ஒன்று கெடுகாரணியாக மாறிவிட்டது. ஆர்டிக் முனையில் உள்ள பனிமுகடுகள் கதிரவனில் இருந்து வரும் ஒளியை அதாவது வெப்பத்தைத் திருப்பி எதிரொளித்து வந்தன. அவை இப்போது குறைந்து வருவதால் வெப்பத்தை இருண்ட கடல் உள்வாங்குகிறது. இதனால் பூவுலகின் வெப்பம் உயர்கிறது.
தூந்திப்பகுதியில் உள்ள உறைநிலங்கள் குச்சிலங்கள் (Bacteria) எனப்படும் நுண்ணுயிர்களால் பாதிக்கப்படாமல் இருந்தன. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள வெப்பநிலை உயர்வால் தூங்கிக்கிடந்த குச்சிலங்கள் எழுந்து மட்கு நிறைந்த மண்ணை சிதைத்து மீத்தேன் வளியை வெளியேற்றுகின்றன. இதனால் வெப்பம் மேலும் உயர்கிறது. இதுபோலவே கடலின் ஆழத்திலும் மீத்தேன் வளி உறை நிலையில் கிடக்கின்றது. இவை குறிப்பிட்ட வெப்பநிலையில் ஆவியாகி வளியாக வெளியேறும். இப்போது இந்த உறை நிலை மீத்தேன் படிவங்களும் கண்விழிக்கத் தொடங்கிவிட்டன. மேற்கு அண்டார்டிக் கடல் பகுதியில் உள்ளே இருக்கும் பனித்தகடுகள் பெருமளவில் கடல் மட்ட உயர்வைத் தடுத்து வருகின்றன. இவையும் இப்போது உருகத் தொடங்கியுள்ளன. இந்தக் காரணிகளெல்லாம் முன்னர் கண்டறியப்படாத காரணிகள்.
இப்படியாக பூவுலகின் உடலில் உள்ள கோளாறுகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகின்றன. மக்கள்தொகையின் பெருக்கமும், மேலைநாட்டு நுகர்வு முறையைப் பின்பற்றும் பெருத்த மக்கள் தொகை கொண்ட நாடுகளான சீனா மற்றும் இந்தியாவின் போக்கும் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளன. இறப்பு விகிதத்தைத் தடுத்த நமது முயற்சியும் முதலீடும் பிறப்பு விகிதத்தை குறைக்கச் செய்யப்படவில்லை. இதன் பின்னணியில் அடுத்த கேள்வி வருகிறது. ஆசிய மக்கள் வசதியுடன் வாழக் கூடாதா? வறுமையில் இருந்து மீளக் கூடாதா? என்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இந்த வளர்ச்சி வறுமையின் தன்மையைக் குறைக்கவில்லை. ஏழைகளின் எண்ணிக்கையை வேண்டுமென்றால் குறைத்துள்ளது என்று கூறலாம். அதாவது 40 கோடி மக்கள் ஏழைகள் என்ற பட்டத்தை இழந்திருக்கிறார்கள். அதாவது ஆண்டுக்கு 4000 ரூபாய்கள் தலைவருமானம் பெறக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் கட்டுரையின் முதலில் கூறியபடி ஒரு குடும்பம் தனது வருவாயில் ஐந்தில் ஒரு பங்கை குடிநீருக்கு செலவிடுகிறது. ஆக பண மதிப்பில் வறுமைக் கோட்டைத் தாண்டினாலும் பயன் மதிப்பில் அவர்கள் முன்னை விட ஏழைகள்தாம். ஏனென்றால் முன்பு கிடைத்த தண்ணீர் வீட்டுக்கு அருகிலேயே தனது உழைப்பினாலேயே கிடைத்தது. இன்றோ யாரோ ஒருவர் மாணியமாக (மாண்பாகப் பெறுவது) பெற்ற மின்சாரத்தைப் பயன்படுத்தி நீரை தூய்மை செய்து மாணியமாகப் பெற்ற கன்னெய் போட்ட வண்டியில் கொண்டு வந்து கொடுத்துச் செல்கிறார். அவர் ஒரு நாள் வரவில்லை என்றால் எல்லாருடைய பாடும் திண்டாட்டம்தான். இதுவே எல்லும் நுகர்வு நிலைகளுக்கும் பொருந்தும். இதைத்தான் இன்றைய அரசுகள் ஊக்குவிக்கின்றன. அதற்காக மாணியங்களை வாரி வழங்குகின்றன. இயற்கை ஆதாரங்களை எந்த கவலையும் இன்றி கபளீகரம் செய்கின்றன.
பூவுலகைச் சூடாக்கும் மிக மோசமான மாசுபடுத்தும் தொழிற்சாலைகளில் முதலிடம் பெறுபவை சிமெண்ட், கம்பி உருவாக்கும் தொழிற்சாலைகள். இவற்றின் வளர்ச்சியை ஊக்குவிப்பவை பெரும் கட்டிடங்கள், பாலங்கள். இவற்றுக்குத் தேவைப்படும் அளவற்ற மணல் குடிநீர் ஆதாரங்களை அழித்து அள்ளப்படுகின்றன. சாயப் பட்டறைகள் முதற்கொண்டு தோல் தொழிற்சாலைகள் போன்ற இன்று மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் யாவும் ஆறுகளையும் பிற நீர் ஆதாரங்களையும் அழிக்கின்றன. அப்படி என்றால் வளர்ச்சி என்பதே தவறா? கட்டிடங்கள் கட்டக் கூடாதா? என்ற வினாக்கள் எழுகின்றன. கம்பியும் சிமெண்ட்டும் இல்லாமல் எழிலான கட்டிடங்கள் கட்ட முடியாதல்லவா? தொடர்ச்சியான அடுத்த வினா. ஆனால் நமக்கு மிக எளிமையான எடுத்துக் காட்டுகள் உள்ளன. ஆயிரம் ஆண்டுகள் ஆன பின்னும் எழில் எவ்விதக் குறைபாடும் இன்றி பெருமிதத்துடன் நிற்கும் தஞ்சை பெரிய கோயிலில் கம்பியும் சிமிண்டும் பயன்படுத்தப்படவில்லையே எப்படி? உலக அதிசயம் என்று வியந்து போற்றப்படும் தாசுமகாலைக் கட்டுவதற்கு சிமெண்டும் கம்பியும் பயன்படுத்தவில்லையே எப்படி? அவை சாத்தியமாயின் இன்றைய மாசுபடுத்தும் வளர்ச்சி அல்லது மேம்பாடு உண்மையிலேயே நவீனமானதா? இந்த வினாக்கள் நம் முன் எழுகின்றன.
இந்தியா அரசியல் விடுதலை பெற்ற நேரத்தில் தனது நண்பர்களைப் பார்த்து பொருளியல் அறிஞர் ஜே.சி.குமரப்பா கேட்ட முதல் கேள்வி, “வெள்ளையர்களை விரட்டி விட்டு அவர்கள் வாழ்ந்த மாளிகையில் நீங்கள் வாழ்வது என்ன நியாயம்?” மேலும் அவர் ‘‘இவ்வளவு பெரிய ஏழை நாட்டின் தலைவர் இவ்வளவு பெரிய மாளிகையில் குடியிருக்கலாமா?” என்றார். ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்று சங்க இலக்கியம் தெளிவாகக் கூறுகிறது. நமது அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் எந்த மாதிரி வாழ்கிறார்களோ அப்படித்தான் மக்களும் வாழ நினைக்கிறார்கள். அரசு மருத்துவமனையில்தான் பெரியாரும் குமரப்பாவும் மருத்துவம் எடுத்தார்கள். எனவே மருத்துவமனை உண்மையாக இயங்க வாய்ப்பு இருந்தது. இன்றைய அரசியல்வாணர்கள் யாரும் அரசு மருத்துவமனையை எட்டிப் பார்ப்பதில்லை. எனவே அவை அப்படித்தான் இருக்கும்.
பூவுலகு சூடாவது என்பது ஓர் அறிவியல் துறை மட்டுமன்று, அஃது அரசியல் ஆகவும் உள்ளது. பூவுலகின் சூடாக்கம் அதன் விளைவாக வரும் பருவநிலை மாற்றம் இவற்றால் பாதிப்படையும் மக்கள் யாவரும் அடித்தட்டு மக்களே. கடும் வறட்சியும், பெரும் வெள்ளமும் அவர்களைத்தான் கொள்ளையிடுகிறது. பரந்துபட்ட மக்களின் வளர்ச்சிக்கு தொழில்மயம் வேண்டும் என்று அவர்களின் பெயரால் மேலைநாடுகளில் வாழும் பணக்காரர்களும், ஏழை நாடுகளில் வாழும் பணக்காரர்களும் நுகர்ந்து களிக்கின்றனர். இதில் துன்பத்துக்கு இலக்காகும் மக்கள் ஏழைநாட்டு அடித்தட்டு மக்கள் மட்டுமல்லாது மேலை நாட்டு ஏழைகளும்தாம்.
இயற்கை ஏழை பணக்காரன் என்று பிரித்துப் பார்ப்பதில்லை. அது எல்லாருக்கும் எல்லாவற்றையும் பொதுவாகவே வழங்குகிறது. விளைச்சலை மட்டுமல்ல, வறட்சியையும்தான். அதன் மீது தொடுக்கப்படும் தாக்குதலை அதன் அளப்பரிய ஆற்றலால் சரிசெய்து கொள்ளும். எனவே உலகம் ஒன்றும் அழிந்துவிடாது. மக்கள் கூட்டம்தான் இந்த உலகை விட்டு அகற்றப்படும். எப்படி டயனோசர்கள் என்ற பூதப்பல்லியினங்கள் அகற்றப்பட்டனவோ அதுபோல மாந்தரினமும் இந்தப் பாதையில் தொடர்ந்தால் அகற்றப்படும். நிலம் என்னும் நற்றாயின் காய்ச்சலுக்கு இதுவே கூட மருந்தாகலாம்.