பா.ராஜா கவிதைகள்

by olaichuvadi

 

நோதல்

நீண்ட நாட்களுக்குப்பிறகு
நலம் விசாரித்து வரும்
போனிற்கு
நன்றாயிருக்கிறேன் என
எதிர் முனை நம்பும்படியாக
திறம்பட
கூறியது போலவே
நன்றாயிருந்திடவும்
நேர்ந்தால்
எவ்வளவு
நன்றாயிருக்கும்.

சினம் காக்க

வெடுக்
வெடுக்கென
சுவிட்சுகளைப்
போடும் விரல்கள்
திடீர்
திடீரென
முளைத்து விடுகிறது.
அறைந்துப் போட்டதில்
தள்ளாடிச் சுழல்கிறது ஃபேன்.
கண்ணைக் குத்துவதுபோல
போட்டதில்
அணைந்தணைந்து எரிகிறது
டியூப் லைட்.
மிருதுவாய் இனி
கையாள வேண்டும்
அச்சமயத்தின் மெல்லிசை
அந்த பால்கோவா
வில்லைகளுக்கும்
கேட்கும் வகையில்.

காந்தி மைனாதம்

காவிரி ஆற்றங்கரையோரம்
வள்ளி மணாளன்
திருமண மண்டபம் என்று
ஒன்றிருந்தது.
அதன் பெயர்
வாயிலேயே நுழையாத
பருவத்தில்
பிழையாய்க் கூறுவதையே
திரும்பத்திரும்ப
கூறச்சொல்லி
மகிழ்வார்கள் சிலர்.
இந்த ஆடியில்
காந்தி மைதானத்திற்கு
காவிரியின் ஈரப்பிசுக்கோடு
வள்ளி மணாளனை
வரவழைக்கிறாள்
ஒரு சிறுமி.

 

பதின்பருவம்

பொத்தானைப் போடச்சொல்லி
காது திருகிய
மில் சூப்பர்வைஸரை
சட்டைப்போடும் போதெல்லாம்
நினைத்துக்கொள்கிறான்.
பொத்தான் இல்லை என்று
சொல்லத்தோன்றியதை
காது வலி தடுத்தது.
சட்டைக்கவிதை ஒன்றை எழுதி
அவருக்கு சமர்ப்பிக்க
முற்பட்டபோது
சரியான அளவற்று
அது தொள தொளத்ததில்
ஒரு பொத்தானைப் பொடியாக்கி
அதிகாலை நான்கு மணிக்கு
உள்ளங்கைத் தேனில் குழைத்து
நாவில் தடவினான்.
கச்சிதமான அளவு வாய்த்தப்பின்
முற்றுப்புள்ளியாய் மற்றுமொரு
பொத்தானையே வைத்தவன்
எழுதியவரின் பெயரையும்
பொத்தான்
என்றே போட்டு வைத்தான்.

பிற படைப்புகள்

Leave a Comment