சக்திக்கெடா
இரா.சிவசித்து

by olaichuvadi

1

திங்கு திங்கென்று பாதித் தெரு தாண்டி நடந்துபோன பாண்டியம்மா, திரும்பவும் ஓடியாந்து வெறும் வீட்டவும் மொகட்டவும் பார்த்தபோது நெனவெல்லாம் அக்கக்காக கழண்டு தெசைக்கு ஒன்றாகப் போவது போல இருந்தது. ஒரு நிமுசம் சுதாரிக்காமல் விட்டிருந்தாளென்றால் கூட தன்னுசார் தப்பிப்போய் அங்கனக்குள்ளயே அவளும் சரிந்திருப்பாள். ஏதோ பிறவி நெஞ்சித்திடம். ஆளைத் தாக்காட்டி நிறுத்தியிருந்தது. தடதடவென தடவிப் பெறக்கி தண்ணிப்பானையில் இருந்து ஒரு போணியள்ளி மண்டினாள். வாய் அடத்துக்கு மீறிப் போன தண்ணி எதுக்களிச்சது போல வெளியே வந்து நெஞ்சு வரை நனைத்தது. மெல்லச்  சுவரோடு சாய்ந்து அமர்ந்தாள்.

வெள்ளதுரைக்கு நாப்பது வயது இருக்கும் போது பாண்டியம்மாளுக்கு முப்பத்தைஞ்சு. ‘கண் எதுக்க முக்காப் பங்கு காலம் தொலஞ்சே போச்சே’ என்ற தவதாயத்தில் கெடந்து மருகும் போதுதான் ரெண்டு பேத்துக்கும் குடுத்து வைத்திருந்தது. சும்மா யாரும் சொல்லுவாங்களா? “தான் பெறனும் புள்ள, தங்கூட பெறக்கனும் பொறப்பு” என்று. கடைசி காலத்தில் தாங்கவும் ஏந்தவும் பொம்பளப் புள்ள ஒண்ணு பிறக்கவும் ரெண்டு பேருக்கும் ‘கடாரம் சிக்கிக்கிடுச்சு’ என்பது போல சந்தோசம்.
வெள்ளதுரைக்கு ‘பொடுசு’ மேல அளவு தொலைவு இல்லாத பிரியக்கால். மனுசன் ஆஞ்சு ஓஞ்சு போய் வீட்டுக்கு  வந்தாலும் சுதா புள்ள ஓடியாந்து காலைக் கட்டிக் கொண்டு “முக்கு ரோட்டுக்கு போவம்” என்று சொன்னால் மறுபேச்சு கிடையாது. அதுவும் புடிசாதன பண்ணும் கழுததான். என்னத்துக்குனாலும் “இப்பமே வேணும், இப்பமே பாக்கணும், இப்பமே செய்யணும்”. எம்புட்டு சௌடால் பேசுன மனுஷன். இம்புட்டுப் புள்ள என்ன இழுப்பு இழுக்கட்டுமே! பூம்பூம் மாடு கணக்க  தலையாட்டிக்கொண்டு ஒரே பதில்தான் “ஆட்டுமுடா, ஆட்டுமுடா”.

“அவ மொவங் கூடயா யாவத்துல வராமப் போச்சு” அதை  யோசிக்க யோசிக்க பாண்டியம்மாளுக்கு அப்புறக்குப்புற வந்தது. வெளியே கொட்டடிச் சத்தமும், ரேடியா படிக்க சத்தமும் திக்கத்துக்கு திக்கம் அலறிக் கொண்டிருப்பது வேறு கூடுதல் பதட்டத்தை தந்தது. சேலை முந்தானையால் முகத்தையும் கழுத்தையும் துடைத்துவிட்டு மெல்ல எழுந்து போய் வெளியே எட்டிப் பார்த்தாள். மருதாணி அச்சுவைக்கவும், கொடக்கம்பிக்காரங்கிட்ட பலூன் ஊதி வாங்கவும், டாக்டரியில் ஏறி ஆட்டம் போடவும், தொட்டுப் புடிச்சு விளையாடவுமாக கும்மரிச்சம் போட்டுக் கொண்டிருந்த புள்ளக்காடுகள் மத்தியில் “சுதா” புள்ளயும் அது சத்துக்கு தக்கன  குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

“ஏத்தா, ஏய்!  சுதா! இங்கிட்டு வந்ததும் போ” பாண்டியம்மா கழுதையாகக் கூப்பாடு போடப்போய்தான் சுதா திரும்பியே  பார்த்தாள். அப்புடியே பாதியில் ஆட்டத்தை விட்டுவிட்டு ஓடிவந்து யார் “தோத்தாங்கோளி” பட்டம் வாங்க?. “போ” என அம்மாவுக்கு கைகாட்டிவிட்டு மறுதரம் விட்ட இடத்தில் இருந்தே குதியாட்டத்தைப் பிடித்தாள்.

“நாம்னா அம்புட்டு லேசா போச்சு! போடி பிசுக்கினு ஆட்டம்” பாண்டியம்மா இறங்கிப் போய் அங்கனக் குள்ளயே நாலு சாத்து சாத்தி  “வா நாயி” என சுதாவை  வீட்டுக்குள் தரதரவென்று இழுத்து வந்து மேலும் ரெண்டு குடுப்பு குடுத்துக் கேட்டாள்.

“இந்தப் பாரு, ஒங்கையாட்ட கொழந்சது கணக்காவே சேட்ட பண்ணிட்டு திரிஞ்சனு வையு ! நவட்டிருவேங் பாத்துக்கோ, அப்பாவ பாத்தியா?”

“……………..”

“சொல்லுடின்னா” காத்த ஒரு திருக்கு திருக்கவுந்தான் சுதாவுக்கு பேச்சே வந்தது.

“இல்ல”

விருட்டென்று ரப்பர் பேண்டு போட்ட தன் நோக்கியா சேட்டை எடுத்து சுதாவிடம் கொடுத்து “அப்பாவுக்கு போடு” என்றாள். அம்மாளை முறைத்த சுதா,  போனை வெடுக்கென்று புடுங்கி சிவந்து வெடைத்த மூக்கில் பூசுபூசென்று மூச்சு விட்டுக் கொண்டு “பாரு நாங் அப்பாட்ட இப்பமே ஒன்னய சொல்லிக் குடுக்கேன்” யென்றுபடியே  ‘போன்’ பட்டனை அமுக்கினாள்.
சில நொடிகளில் வெள்ளதுரையோட ‘போன்’ நடுரூமில் உள்ள மாடாக்குழியில் அலறியது.

2

இன்றைக்கு சாமம் பன்னென்டு மணியைப் போல காளியம்மன் கோவிலில் “கெடா வெட்டு”. பெரிய சாமி கொண்டாடியோ, பத்திமானோ கிடையாது. இருந்தும் நாலு வருசமாக சத்திக் கெடா வெட்டுவது வெள்ளதுரைதான். ஒரு நாள் அவர்  வீட்டுக்கு வந்த பசுபதி பேச்சுப் போல ஒரு வரியை விட்டான்.

“எலவட்டங்க கிட்ட எல்லாங்  பெரிய சுதாரிப்பொன்னுங் காங்கலயே, போன திருப்பு மாரியப்பன் மவங் ஒருத்தங், ஆளு நல்லா கெளிறுபோல திரியுவாங். ஆட்ட வெட்டுதம்னு தொங்கு வெட்டா வெட்டி கூரக் கெடுத்துட்டாங்”

“உங்  “கௌ” க்காரப்பய எல்லாவனும் அப்புடிதாங் இருப்பானோல, ஊர் ஒரு பக்கமா கழுதய பாத்துக்கிட்டு போன, இவனுக  ஒரு பக்கமா கழுதமணிய பாத்துக்கிட்டு போவானுக” பசுபதி வழிக்காரங்களை கிண்டுவதில் வெள்ளதுரைக்கு எப்போதும் ஒரு ஆத்திரம் கலந்த சந்தோசம் கொப்புளிப்பதுண்டு.

“அத்தானு நீங்க சொல்லிட்டீகன்னா! அவங் எங்க கௌ கெடயாது”

“நீங்களே கௌ இல்லாத பயக தான, நாங் எங் கூட்டாளிட்ட கேக்க மாரி ஓங்கிட்ட கேட்டுக்கிட்டலையுதேங். சரி அத்த பேச்ச தூர விடுவோம். பின்ன என்ன செஞ்சீக? தொங்கு வெட்டு  ஊருக்கு நல்லதில்லங்கது ஒரு பக்கம்,  கறியும் வாய்ல வைக்க வெளங்காது. உங்களுக்குதாங் கறினா போதுமே!  கொத்தலும் கொதம்பலுமானாலும்  வெட்டி தின்னுருப்பீக”

“பெற என்னீய, சாமிக்கு வெட்டுத கெடாவ போய் இப்புடி கஞ்சிக்கு செத்தபய மானிக்கு வெட்டுதயேனு கேக்க முடியுமா?”

“கேக்க வேண்டியதான” பாண்டியம்மாள பார்த்து வெள்ளதுரை ஒரு சிரிப்பு சிரித்தார். “வரும்பாரு இப்பம் ஓந்தம்பியாபுள்ளயோட வீரப்பிரதாவங்” என்று அதற்கு அர்த்தம்.

“கிரிசு கெட்டபய கிட்ட போய் பேசிக்கிட்டு, சீரில்லாம எதாவுது பேசிட்டா பின்ன நம்மளும் பதிலுக்கு   ஒண்ணு  செய்யணும்”

“ப்பு…. புல்லு மடங்க பேண்டுகிட மாட்டாதவனும், மொற பொறிய மொண்டுகிற மாட்டாதவனுமா நாலு பெற கூட்டிக்கிட்டுதாங் திருவிழா எடுப்பிக. அதுல ஒருத்தன கேக்கவே யோசன மயிரா இருக்காங்கும். மச்சினமாரெல்லாங்  பெருங்கொண்ட சூரங்கதாங்ப்பா”

“அத்தானு அப்படி ஒரே வாக்குல சொல்லாதிய பிறவிக்கூறுன்னு ஒன்னு இல்லாமப் போவுமா? எங்க சங்கர பாண்டியண்ணாச்சியெல்லாம் பிராயத்துல யாரும் எதுக்க முடியுமா? நாங் பத்து-பானைஞ்சு வயசு பயலா இருக்கப்ப ஒரு திருப்பு,  நுனி வேட்டிய வாய்ல  கடிச்ச மானிக்கு ஓடியாந்தாறு. பெறத்தாடியே ஓடியாராங் நெத்தி மட்ட கம்போட நாலு பேரு”. சட்டென இந்த இடத்தில் நிறுத்தி வக்கனம் காட்டுவது போல வாயை கோணிக் கொண்டு “உங்க வழிக்காரங்க தாங்” என்று வெள்ளதுரையிடம் சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தான் பசுபதி.

“அப்ப ‘நெக்கடாங்செவல்’ ல மாமா வீட்டு வாசல்ல உக்காந்துகிட்டு எதையோ பாத்துக்கிட்டு இருந்தேங். கூட்டத்த பாத்ததும் விருட்டுனு ஏங் ஒடப்பெறந்தா என்னய  இழுத்து உள்ள போட்டு கதவ சாத்தீட்டா”

“வேங்கப்புலிய விட்டுருக்காம போனியே!” வெள்ளத்துரை உச்சு கொட்டிக்கிட்டே “இது நியாயமா?” என்பது போல பாண்டியம்மாளைப் பார்த்தார்.

“என்னத்துக்கு ஊர்ப்பய தும்பத்த இழுக்கவா” என்ற பாண்டியம்மா பக்கத்தில் வந்து உக்காந்தாள்.

“நீங்க கதைய கேளுங்க! என்னைய உள்ள இழுத்துப் போடவும் சடசடனு சத்தம். ஜன்னல் கிட்ட ஓடிப்போய் பாக்கேங். கெணத்தடிக்கிட்டத்துல ஓடுன ஆளுக்கு ஏதோ ஆயுதங் கெடச்சு போச்சு! அது போதாது? ஓடு! சிருக்கிபுள்ள வந்தவனெல்லாங் இப்பம் தெசப்புடுங்க ஓடுதாங்க . அது விசியமில்ல. வந்தவம்ல ஒருத்தன மறிச்சு மாட்டுவண்டில சாத்தி, அவங் வலது கைய தூக்கி வண்டி மோக்கால்ல வச்சு மதிச்சுக்கிட்டு ஒரு போடு! அவரே ஒரு காலத்துல அடங்கி போனாரே! பிராயத்துல எல்லாரும் மதயானைய மறிச்ச ஆளுகதாங். இன்னா, ஒரு மாயத்துள உங்களுக்கும் ஓடியாந்துரும் 50  வயசு. ஆள  வெட்டுன ஆளுதாம்னாலும் ஒரு வயசுக்கு மேல ஆட்ட வெட்டவே  நடுக்கங் குடுத்துரும். வேணும்னா வெட்டி பாருங்க ஒரு நா  மூக்கரு படைல சே….. மனம்மா இருந்துருக்கலாம்னு தோணுதா இல்லையானு”

“ஏலேய்” பாண்டியம்மா “அடக்கட்டை” போட்டு அவன் பேச்சை அந்த இடத்தில் நிறுத்தினாள். இந்த பேச்சு  எங்க போய் எப்புடி விளையும் என்பது அவளுக்கு தெரியும்.

“ஏத்தா! நீயென்ன, நாங் அத்தானுகிட்ட பேசுதேங். என்னதுக்கு நீ ஊடால வார”

“அதான” அவன் கூட சேந்து கொண்டது போல வெள்ளதுரையும் சிரித்தார்.

“இப்பயென்ன பிராயந்தப்புனா வெட்டுத பெலமும் தப்பிப் போவும்க அதான? இனியென் ஆசுக்கும் திருவிழாக்கு நாங்தாங் சத்திக்கெடா வெட்ட போறேங். எப்போ தடுமாருதுனு பாப்பம்”. அதில் இருந்து தொடுத்துக்கொண்டதுதான் இது.

ராத்திரிக்கு மாலையோடு கெடா வரும் போது அதன் கழுத்தாம் பட்டையில் பிடித்த கவுறு கணபதி கையில், கெடாயின் பின்னட்டங்கால் ரெண்டும் முருகன் கையில்.வெள்ளதுரை ஓங்கும் முதல் ஓங்கு குறிப்பாக்க, ரெண்டாவது ஓங்கு ஊர் பாக்க, மூனாவது ஓங்குக்கு வெட்டு இறங்கிவிடும். “சத்” என்ற சத்தம்தான் கணக்கு. திரும்பும் சோலியே கெடயாது. வெட்டுக் கெடா தலை கழண்டு ஓடி உடம்பு அடங்குவதுக்கு முன்னக்கட்டி வெள்ளதுரை வீட்டுக்கு போய் விட்டத்தை பார்க்க உக்காந்து விடுவார். உருண்ட தலையை பிறக்கி வாயத் துறந்து மஞ்சத் தண்ணி ஊத்துவதெல்லாம் மத்தவன் பாடு.
வெட்டுப்பட்ட உடம்பு துடிச்சு காலுதைந்து, காலுதைந்து விழுந்த இடத்தில் இருந்து மூணு மட்டம் படுத்தமானிக்கே சுத்தி “இந்தா ஓம் பலி” யென்று காளியம்மா சந்நதியை பார்க்க வந்து நிற்கும். இப்பமெல்லாம் பாண்டியம்மா கூட அதை பார்ப்பது கிடையாது. அந்த ஒரு நாள் பொழுது வெள்ளதுரை அதிகம் பேசுவதும் கிடையாது. பாண்டியம்மாவாக எதாவது பேசுனால்தான் உண்டு. போன வருஷம் மனசு கேக்காமல் சுத்தி வளைத்து அவளே சொன்னாள்.

“நேத்து மைனி ஒர மோர் வாங்க வந்துச்சு.மருமவன் பாலிடெக்னிக் முடிக்க போறாபுலயாங்”

“ம்ம்…..”

“பாவம் அவுகளும் கருமாயப்பட்டு போனாக, மகன் தலயெடுத்துட்டா அவுகளுக்கும்  ஒரு பாடு தீந்து போவும்”

“ம்ம்…..”

“இன்னய தேதிக்கெல்லாங் நம்ம எவளவோ எடுத்தேரியாந்துட்டோம். ஏதோ செஞ்சதுக்கு மேல வெளயுங்  கொடுத்துட்டோம்.  மறந்து வார நேரத்துல இது கூட என்னத்துக்கு மாமா நமக்கு? நீங்க வெட்டும்போது கண்ட கழுதையும் கண்ணுல வந்து விழுது. பாத்துட்டம்னா சோறு கூட எறங்கமாட்டிங்கு, எதயோ தொடுத்துக்கிட்டு ஒரு சீரழிவு வருதமாதிரியே இருக்கு!”

“ஏத்தா, எல்லாங் எந்தக்காலமோ  நடந்து போச்சு. நீ என்னத்த சொல்லுதனு தெரிஞ்சுதாங் சொல்லுதேங்.  என்னாலவுங் கண்கொண்டு பாக்க முடியலதாங். மொத நாள்  ஓங்கைல ஒரு நெனப்பு! வெட்டிருவனான்னு, காலு ஒதயுததப் பாக்கவும்”. இழுத்து ஒரு முறை பெரு மூச்சு விட்டு மேலும் தொடர்ந்தார். “சே… என்ன பொழச்சம். கறிசோத்தவே தொடர்ந்து  ஒரு மாசம் தின்னா மூஞ்சிலடிச்சு போவும். அது போலயே நாளும் பொழுதும் அறுத்தெடுக்க நெனவும்  மறுபடி மறுபடி  வந்து ஒரு நாள் சலிச்சழிஞ்சு போவாதானு இருக்கு. ஊடால இப்புடியுங் ஒரு நெனப்புவரும்  சரி, சாமிகாரியம். ஓம் பலிய வாங்கிட்டு எம் பழிய கழிச்சு  விடுனு தாயே நெனச்சுக்கிடுவேன்”

3

“மாரிதுரை” யைத்தான் வெள்ளதுரை தன் தங்கச்சி “பழனி” க்கு கல்யாணம் முடித்து வைத்தார். ஒரு வகையில் அவன் பசுபதியோட வழிகாரப் பயல். கொத்து வேலைக்கு போய்க் கொண்டிருந்தவனை ‘நல்ல வேலைக்காரப்பய’ என பட்டயம் கொடுத்தது பசுபதியின்  பெரியப்பாதான் . வெள்ளதுரை தன் காட்டில் கொஞ்சதை  ஒதுக்கி மாரிதுரைக்கு  கொடுத்து இந்த ஊரிலே பழநியையும் அவனையும்  இருக்க வைத்தார். இருந்தாப்பில் மண்டக்கிறுக்கு பிடிப்பதொன்றும் பிறவிக் கோளாறு கிடையாது. அந்த கோளாறு உள்ளவன் எவனும் நெற்றியில் எழுதிக் கொண்டு திரிவதும் கிடையாது. விருந்துக்கு வந்து போவது வரையில் கூட “எங்க மச்சாங் தங்க மச்சாங்” என்றுதான் ரெண்டு பக்கமும் நினைப்பு இருந்தது . காட்டில் வம்பாடு பாத்துத் திரும்பும் போது ரெண்டாவது தடவையும் வேண்டுமென்றே தண்ணியோடும் வாய்க்காலை மாரிதுரை திருப்பி விடவும் தான் வெள்ளதுரைக்கு சுள்ளென்று பிடித்தது.

“நீங்க போய் தல குடுத்தா இது ஒரு வெவாரம்னு வரும். நாம் பேசிக்கிடுதேங்” என்ற பாண்டியம்மா.

“ஒரசலில்லாமெல்லாங் எந்த ஒரவுங் கெடயாது மைனி. ஆனா ஒன்னத் தொட்டு ஒண்ணு  வெளஞ்சுக்கிட்டே போயிறக் கூடாதுனுதாங் பயமா இருக்கு” என ஆள் இல்லாத நேரம் பாத்து பழனியிடம் பக்குவமாக  சொல்லி வைத்தாள். வயலில் வாரத்துக்கு மூன்று நாள் வெள்ளத்துரை முறைக்கென்று மோட்டார் ஓடும். மீதி நாட்களில் பழனி காட்டுக்கு ஓடும். இருக்கும் ஒரு கிணற்றை ஆளும் பேருமாக நிறைந்து கொண்டு பாடு பார்ப்பதாகத்தான் முதலில் பேச்சு. வெள்ளதுரை முறைக்கு திரும்பும்  போது மாரிதுரை தண்ணியோடும் வாய்க்காலை அடைப்பதையே சோலியாக இருந்தால் யாருக்குத்தான் வெளம் வராது. ஒரு நாள் வீட்டுக்கு வந்த பழனியிடம் பொலம்பித் தீர்த்துவிட்டார்.

“எம்மா, இதென்ன நல்லவங்  பெரியவங்  பாக்க சோலியா? நானுங் செரிசெரினு போனா என்னத்துக்கு போறம்னு தெரிய வேண்டாமா? . விருதாவுல போற கழுதையா இருந்தா சட்டயப்புடிச்சு இழுத்து காத்தக் கட்டி இருக்கலாங். என்னத்தையோ ஒடப்பெறத்தாளக் கெட்டிருக்கானேனு பாத்தா ஒரே வாக்கில போறாங். எதுக்குய்யா வாய்க்கால அடச்சனு நேத்து கேட்கேங். ‘எங்ட ஒரு வார்த்த சொல்ட்டு தண்ணிய மாத்தி விடுததுக்கு  என்ன’ ங்காங்.  அவன்கிட்ட சொல்லிட்டு தண்ணிய  திருப்பனுமாங். என்னத்த அவங்கிட்ட ‘லோல்லிட்டு நோட்டுதது’.நாயி, அந்தக்காடே நாங் பாத்து குடுத்தது நாயி”

“சரி சொல்லிட்டீகன்னா அந்தப் பேச்ச அத்தோட விடுங்க” பாண்டியம்மா உள்ள இருந்து சத்தம் குடுத்தாள். துரை அவள் பக்கம் திரும்பிப் பாக்கவும் தலையில் அடித்து “வாயை சுருக்குங்க” என சைகை செய்தாள்.
பழனி குனிஞ்ச தலை நிமுறவே கிடையாது.

“எலேய்…. உம்மேல ஒரு சடவுங் கெடயாதுடா . அந்த ஆளு பழக்கம் சரியில்லங்கவுங் எரிச்ச வருது. நீ யென்னமுங் நெனச்சுக்குறாத” சுதாரித்து போல வெள்ளதுரை பழனியிடம் சொன்னார்.

“அதெல்லாங் இல்ல” என்றாள் பழனி.

‘கூறு கணக்கே இருக்கமாட்டிங்கே’ என்பது போல பாண்டியம்மா,  வெள்ளதுரை மட்டும் பாக்கும்படிய  சொல்லிக்கொண்டே இருந்தாள். “நாங் அவர்ட போய் பேசுதது சரியா வரும்னு தோணல. எய்யா இங்க வா!  நாளப்பின்ன ஒருத்தர்  மொகரைல ஒருத்தர்  முழிக்கனும்னு நீ சொல்லு”.

சொன்ன வேகத்தில் வெள்ளதுரை காட்டப்பாக்க வந்துவிட்டார். அன்று காலைக் கரண்டு. வேலை முடியவும் மோட்டார் ரூமைப்பூட்டி திரும்பும் போது ரோமத்தில்  உரசுவது போல ஒரு கூச்சம். உள்ளுணர்வில் தான் நகன்டார். “பொட்டச்சிட்ட வந்து முருக்குனாங்கும்” வந்தவன் வீசுன அருவா வெள்ளதுரையின்  பொசத்தை ஒட்டினார் போல இறங்கியது. முடிவோடு  வந்தது போல மறுவீச்சுக்கு மாரிதுரை  தயாரானான்.வெள்ளதுரை  நேக்குப்பார்த்து விலகி  அவன் இடுப்பை சேர்த்துப் பிடித்து  கீழே தள்ளி விட்டார்.

“வீனாவுல மறுபடியுங் வராத, தங்கச்சிக்காரிய தாலியக்க வச்ச பாவம் எனக்கு வேண்டாங்” சொல்லிவிட்டு  விறுவிறுவென்று திரும்பி நடக்கும் போது வெள்ளதுரை நினைவில் வந்ததெல்லாம் ஒன்றுதான். ஒரே தெரு எட்டை வேமா வைத்தால் செத்த நேரத்தில் வீடு வந்து விடும். மாரிதுரை கொண்டுவந்து வீசுன அருவாளுக்கு மிச்சமாக வெள்ளதுரை கிட்ட ஒரு அருவா உண்டு.  உள்ளங்கை அகலத்துக்கு மொகம் பாக்கும் பளபளப்பில், ஒத்த முடியை மட்டும் துணுக்காக வெட்டும் பதத்தில் . செல்லமுத்தாசாரி பட்டறையில் அடிச்சு வந்த கெட்டசாதி உருப்படி.  அதை கையில் எடுத்து மாரிய கீழ தள்ளி  கொத்த வேண்டாம். ஓங்குனாக் கூட போதும். கால் வழி கழிஞ்சு போவாங் நாயி!  அந்தப் பயத்துக்கே செம்மத்துக்கும் நம்ம கிட்ட வராமாட்டான்.

“நில்லுல கூதிமவனே” விழுந்து கிடந்த  மாரிதுரை உண்ணிக்கிட்டு அவயம் போட்டான். இனி நடந்தா லாயக்குப் படாது. ஓட்டம்தான்.  நிக்காமல் ரெண்டு நிமிடம் ஓடினால் வீடு. பின்ன பேச்சுக்கு இடம் கிடையாது. வயக்குண்டு தாண்டி ரோட்டுக்கு ஏரும்போது,  எவனோ  “ஏ… ஒக்காவுண்ட  வெள்ளதுரைய வெரட்டிடாங்” என்று சொன்னது வெள்ளதுரைக்கு மொனை உரசி விட்டது போல் இருந்தது. புத்தி தேஞ்சு போக அது ஒன்று போதாதா?  அருவாளை எடுத்த வேகத்தில் ஒரு சுத்து  “சத்” என்ற சத்தத்தோடு கையதிரவும்தான் வெட்டு மாரிதுரை கழுத்தில் இறங்கியதே வெள்ளதுரைக்கு தெரிந்தது. மூடி முழிக்கும்போது வெள்ளதுரை கண்ணெதிர்க்க,  முண்டம் ஒன்னு காலுதைந்து கொண்டிருந்தது.
இழுத்துப் பறிச்சு கேஸ் முடிந்து வெளியில் வருவதற்கு பத்து வருஷமானது கேஸ்க்கு செலவழிச்சதும் சரி, தங்கச்சிக்காரிகிட்ட வெவகாரம் தீத்து நிலம் ஒதுக்கி விட்டதும் சரி. கெழவி இறந்த பொது எடுத்துச்  செய்ததும்  சரி. எல்லாம் வெள்ளதுரை பெரியாத்தா மகன் “மூக்கையா பாண்டியன்” தான். காலத்திலேயே கருத்தா காலூன்றி பொழச்ச ஆள்.

“சின்னையா, சின்னையா” என்று மூக்கையா பாண்டியனின் மகன் தன்னிடம்  பேசும் போது தனக்கு மகனில்லாத கொறை தீந்தது போல வெள்ளதுரை  நினைத்துக் கொள்வார். அவனும் வெளிநாட்டில் இருந்து எப்போதாவது போன் போடுவதுண்டு போனை எடுத்ததும் “பெத்தியா” என சந்தோசத்தில் அவயம் போட்டு பேசுவார். “அவுக சொக்காரங்கிட்டனா மட்டும் கொழஞ்சுக்கிட்டு பேசத் தெரியும்” என்று  அந்த நேரம் பாண்டியம்மா காட்டும் வக்கனமெல்லாம் அவர் காதிலேயே விழுகாது . ரெண்டு பேர்  பேச்சும்  எங்க சுத்தி எங்க வந்தாலும் வெள்ளதுரை முடிக்கும்  இடம் இதுதான்.

“தங்கச்சிக்கு ஒரு நல்லதப்ப சபைல வந்து நின்னுறனுங் பெத்தியா! அவளோதாங் சின்னையாவுக்கு வேணும்”.

வெள்ளதுரை, ஜெயிலில் இருந்து திரும்பியபோது பிறந்து வளர்ந்த ஊரே தெசை தெரியாத இடம் போலதான்  இருந்தது. குறைக் காலத்தை கழிக்க பிடிகொப்பு ஒன்று வேண்டுமே!

“உம்பாட்டுல ஏங் கூடே இருடா, உனக்கு வேணுங்கத நாங் செஞ்சு தாரங்” என மூக்கையா பாண்டியந்தான் அரவணைத்தார்.

துரைக்கு வீடு போக மீதி நேரமெல்லாம் அண்ணாச்சி ரைஸ் மில்லில்தான் கதி .சில நேரம் நைட்டு  காவலுக்கு வந்து படுத்துக் கொள்வதும் உண்டு.துரை ஊருக்கு வந்ததும் முறைவச்சது போல ஒரு ஆள் தினமும் வந்து அவரை  பாத்துக்கொண்டு இருந்தார்கள். மில்லுக்கு அன்று கருப்பையா பாண்டியன் வந்தார்.தகவல் தெரிந்துதான் வந்தார். துரையையும் கண்டுகொள்ள, வெட்டு படுற கிடாவும் – கிடா வெட்டும் ஆளும் என்னைக்கும் வேட்டிக பொருள்தானே!

“தொர! வாய்யா வாய்யா….” சத்தங் கொடுத்தவர் ரெண்டு கையவும் விரிச்சமனிக்கே உள்ளே வந்தார்.
“நீங்கதான அண்ணாச்சி வாரீக நாங் இங்கனதான இருக்கேங்”வெள்ளதுரை சிரித்தபடியே ஓரமாகக் கிடந்த துண்டையெடுத்து மேசையில் தட்டி பாண்டியன் உக்கார தோது செய்து தந்தார் .

“என்ன இப்புடி சொல்லிட்ட நாளான நாலு வனவாசம் போயிட்டு நீதாங் இப்பம் வந்துருக்க! சௌரியந்தான?

“நம்ம சௌரியத்துக்கு என்னைக்கு அண்ணாச்சி கொற வந்துருக்கு”

“ஒக்காவுண்ட இந்த நெனப்புதாங்யா  நம்ம கூட்டாளிய தூக்கி நிறுத்துது”

“அதுஞ்சரிதாங். அண்ணாச்சிய பாக்க வந்தியளோ? இப்பம்தாங் மேக்க போனாப்புல”

“சரி இப்பென்ன உன்னய பாத்ததே சந்தோசங்தாங். பைசா வாங்க வேண்டியது இருந்தது. ஒரு தேவைக்கு கேட்டிருந்தேன்.ஆமா, உனக்கு தெரியாதுல  இப்பம் அண்ணன் வட்டிக் கொட வாங்கல்ல எறங்கிட்டங்பா. பைனான்ஸ்! அப்புடிண்டுறது யாருங் கேட்டா. இங்க அதுக்கு வரல அண்ணாச்சிக்கு  பைனான்ஸி பண்ணுனதுக்கு நம்ம ஆளா ! அவங்க கிட்ட வாங்கி வெளிய குடுப்பேங் அவளோதாங். காடே மேடேனு திரிஞ்சுட்டு  இப்பம் அதுலதாங் வண்டியோடுது”.

“கழுதய என்னத்தையோ ஒரு தொழில்னு ஒன்னு! நம்ம  பாடு கழிக்க வேணும்ல. காடுங்கவும் நாவவம் வருது. இப்பமேல்லாங் மலங்காட்டுக்கு போறதுண்டா? துடியா இருப்பீகளே! யாவவம் இருக்கா ஒரு திருப்பு  நீங்க, நானு எல்லாரும்  தளவாரம் சம்முவய பாண்டியன் கூட்டாளிகளோட ‘கருவாட்டாம் பாறை’ க்கு மேக்கிட்டு ஒரு மெளாவ அடிச்சு தூக்குனமே! எப்பமாது அதெல்லாங் நெனக்கதுண்டு”.

“அதுக்குபெறவு ரெண்டாட்ட போனதோட சரி” பாண்டியன் சீரெட்டை எடுத்து பற்றவைத்தார்.

“நம்ம எனவங் எல்லாத்துக்குமே காட்டுல எறங்கி  அடிக்கதுல பிரியம் உண்டுதாங். முதுமலைல ஒரு திருப்பு ‘செவாசி’  புலிய சுட்டது கணக்கா, ஒத்தாக்கூதி ஒரு நாள்  நம்மளும் புலியடிக்கனும்னு ஒரு நெனப்பு இருந்தது . ஒரு துக்கமான சம்பவம் நடக்கவும் சீ… போனு   அதத்தூர விட்டுட்டேங். பெற போவேயில்ல”

“என்னாச்சு” குரலை தாழ்த்தி கேட்டார் துரை.

“ஒரு திருப்பு, ‘யான கெடங்கு’ தாண்டி உள்ள  ஒரு பரம்புல மெளா ஒன்னு ஏறி வாட்டமா நிக்கி, நல்ல தண்டி! வசம் வரட்டும் அவளக் கெடாவுவோம்னு தளவாரம் பாண்டியன் கைல துப்பாக்கியோட நிக்காரு! அடியும்கேங் நானு. சடேர்னு ஒரு அடி”. பாண்டியன் வாயில் இருந்த சீரெட்டை எடுத்து தலையை ஒரு உலுக்கு உலுக்கிக் கொண்டு சொன்னார்.  “என்ன ஆக்ரோசம்க! அடிய வாங்கிட்டு  பாண்டியன எதுத்து ஓடியாருது. அதக் கண்டதும் பாண்டியன் இதன்னனு பதட்டத்துல தெகச்சுட்டாரு. அது ஒத்தாக்கூதி வந்த விருட்டுல முட்டுனிச்சுன்னா ஈரக்கொலயள்ளி வெளிய எறிஞ்சுரும் போலுக்க .நாங் பாறைக்கிட்ட நின்னவங்  என்னிஞ்சங், அந்தானைக்குல வெலவிக்கிட்டு அருவாலக் கொண்டு ஒரு வீசு! நம்ம அருவா எப்புடி இருக்கும்னு பத்துருக்கைல எதுல வீசுனாலும்  ‘சுப்புப்புள்ள கடை’ல அல்வா துண்ட  வெட்டுத மாறி பூவா வெட்டும். வீசுன வெட்டு மெளா அடி வவுத்துல இறங்கவும் உள்ளுக்க இருந்து  ஒரு சூழ்குட்டி  பொதுக்கட்டினு வெளிய வந்து விழுந்துருச்சு!, சே…. என்ன செம்மம்னு பொறந்தம்னாய்ப்போச்சு. இந்த பாவத்த எங்கொண்டுபோய் தொலைக்க?  தொர, நீ  நம்புதையோ என்னமோப்பா அதுக்கு பெற கறி  திங்கக் கூட  எனக்கு  ஒவ்வள”.

கேட்டதும் வெள்ளதுரைக்கு ஒரு வடியாக வந்தது. தன் கதையும் மனதில் நிழலாடியது. தன்னைத் தேத்த மனசுக்கு துரை எப்போதும் சொல்லும் சமாதானம் ஒன்று உண்டு. அதையே நயமாக அப்போது பாண்டியனுக்கும் சொன்னார்.

“செரி செய்யனும்னு செய்ததுல்லையே நம்ம முந்தலன்னா அது முந்திருக்கும்”

“அதென்னமோ  நெசந்தாங் கண்ணுக்கெதுக்க மனுசன வெட்டுனவனே பலி பாவத்துக்கு அஞ்சாம வாழுதாங் நம்ம என்னனு தேத்திக்கிடுவேங்”. அடடா!  யென்று நாக்கைக் கடித்த பாண்டியனுக்கு வார்த்தை விட்ட பின்புதான் ஓர்மை தட்டுப்பட்டது. சரி பண்ண வேகமாக தொடர்ந்தார்.

“எப்பா, நாங் பரமாதங் சொன்னே, வேற எந்த நெனவுலவும் சொல்லல” . வெள்ளதுரை பதிலுக்கு தலையை மட்டும் ஆட்டினார். அதுவும் கடந்து  இப்போது எட்டு வருசமாச்சு. மூக்கையா பாண்டியன் மில்லைக்கூட இப்போது லீசுக்கு விட்டுவிட்டார். ஆனாலும் சில நாள் துரை ராத்திரி போல வந்து காவலுக்கு கிடைப்பதுண்டு.

ரெண்டு நாள் முன்பு மில்லை லீசுக்கேடுத்த சங்கர் காலையில் உள்ள வந்ததும் தட்டிக்கு அடுத்து  அடுக்கி  இருந்த மூடைகளில் மேடாப்பில் ஒன்று விலகியிருந்ததை பார்த்துக் கொண்டிருக்கும் போது பின்னால் வந்த மூக்கையா பாண்டியன், சங்கர் தோளைத் தொட்டு கேட்டார்.

“என்ன அண்ணாச்சி ராத்திரில எவனும் மூடைய லாத்திட்டானோனு பாக்கியளா”

“இல்ல பாண்டியன் சும்மாதாங் பாத்தோம்”.

“அப்புடியோன்னு நடந்துச்சுன்னு வச்சுக்கிடுங்க அண்ணாச்சி, இங்ஙனக்குல்லையே மூணு  சடலங் கெடக்கும். வெளாட்டுக்கு சொல்லுதம்னு நெனயாதிய”

“சே…. நாங் தெரிஞ்சுட்டெங். நமக்கும் ஆள் குறிப்பு தெரியும்ல”

“ஆங்! அத சொல்லுங்க, அப்படி   நெனப்போட எவனும் வந்தாம்னா ஒருத்தன் கேட்டுக்கிட்டத்துல சங்கருபட்டு கெடப்பாங். இன்னொருத்தங் இங்கன ஆபிஸ் ரூம்கிட்டதுல செத்து  கெடப்பாங். மூனாவதா  எங் தம்பி மூட்டக்கிட்ட சரிஞ்சு கெடப்பாங். அதத்தாண்டுத சூரந்தாங் மூட்டய தூக்க முடியும். தள்ளி உக்காந்திருந்த வெள்ளதுரைக்கு இந்தப் பேச்சு காத்துவாக்கில் வந்து விழுந்தது. எப்போதோ நடந்த அத்துனையும் இந்த ஒரு புள்ளி சமமாகக்கியது போல ஒரு நினைப்பு. காசா பெரிசு? இந்தச் சொல்லுக்கு பெறுமா! துரை மனசோடு சிரித்துக் கொண்டார்.

4

“சரி நாங் போறேங்”. பாதச்சக்கரம் கட்டியதுபோல எந்நேரமும் சுத்தலில் திரியும் புள்ளையை  எவ்வளவு நேரம் நிறுத்தி வைப்பது.

“பசுவதி மாமாவ இங்க வரச் சொல்லி சத்தங் குடுத்துட்டு நீ ஆடுத திக்கம் போய் ஆடு போ” இதச் சொன்னதும்  சுதாவை கையில் புடிக்க புடியுமா?  ஒரே ஓட்டம்தான். மகள் எங்கே போகிறாள் என்று பாண்டியம்மா எட்டிப் பார்த்தாள்,

“மரிப் போர மல்லு கட்ட துணிஞ்சாரு
மகராசி கண்ணக் கண்டு பணிஞ்சாரு”
என்ற  பாடல் வரி வெளியே  ஓடிக் கொண்டிருந்தது.

“வேலென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்ன நெனச்சத முடிப்பான் பாரு தடுக்குற மனுஷன் யாரு”. பாட்டுக்கு மிச்சமாக சுதாவும் கத்திக்கொண்டு பசுபதி வீட்டுக்கு ஓடினாள். கழுதைக்கு உறவுந்தெரியாது. பகையும் தெரியாது. நாளைக்கே பெரிய புள்ளையா வந்து நிப்பாளே! அவ போற திக்கம் போவதண்டியாது இருக்கத வச்சுக்கிட்டு தன்னைப் பேணிக்கிற வேண்டாமா” பாண்டியம்மாளுக்கு மறுபடியும் படபடவென்று வந்தது.

ஒரு நாள் ஒரு பொழுது வெள்ளத்துரை வீட்டில் இருக்கும் பொது பாண்டியம்மா சுதாவை ஏதாவது சொல்லிவிட்டால் போதும். இதான் சாக்கு என்பது pola புடிச்சுகிட்டு கதையான கதை சொல்லுவார். நேற்றைக்கு கூட ஒரு பேச்சு வந்தது.

“தெனம் இப்புடி செலவிழுத்தி வக்கியே வீட்டுல உண்டானது என்ன பாத்து தின்னுட்டு கெடக்கதுக்கு என்னைது”

“ஏ… வளருத புள்ளைய போய்கிட்டு சாப்புடட்டும். இப்பம் என்ன? விட்ட நீ நிறுத்து பாத்து திங்கச் சொல்லுவா போல”

“மாமா,  யாரு இப்பம் சாப்புடக் கூடாதுனு அவ கையப்புடிச்சு இழுக்கது? அதான இருந்தாப்புல கூறு காணமாட்டிங்குங்கது. இருக்கத சாப்புட என்ன செய்து. எல்லா நேரமும் சவரட்டனையா திங்க முடியுமா?”
வெள்ளத்துரையோட ரெண்டு கையும் எமரித்தால் சொரசொரப்பில் இருக்கும். சுவரில் அதை வைத்து லேசாக ஒரு தேய்ப்பு தேய்த்தார். எப்போதோ மேப்படி இடத்தில் பழகியது. நெருக்கடியான நேரங்களில் பீடியோடு குச்சி மட்டும்தான் கிடைக்கும். “தீப்டி கொண்டாரும் பீடியடிக்க” என்று ஜெயில் வாடன்கிட்ட கேட்க முடியுமா? தேய்த்த இடத்தில் லேசான சூடு பரவவும், குச்சியை வசம்பாத்து வைத்து  ஒரு உரசு. மருந்து பத்திக் கொள்ளும். வீட்டிலும் அப்படித்தான் பத்தவைப்பார். உள்ள புகை போனால் கதையொன்னு வருமே!

“ஏத்தா, நானேல்லாங் அவ அம்புட்டு புள்ளைய இருக்கப்ப வெறவுவெட்ட மேக்க மலங்காட்டுக்குப் போய் திரும்புவேங் . அம்மாளுங் கெடயாது. வீட்டுல கெழவி ஒருத்தி கெடந்தா. பழனியெல்லாங் இன்னும் பொடிக்கலுத. வெறவ தலச்சொமையா கொண்டுட்டு எறங்கி வரும்போது தவைக்கு தண்ணிய கண்ணுல காண்க மாட்டமான்னு வரும்.சன்னத்து போய் ஐயா முடியலயேபேங்.  வலது கைட்டு தலச்சொமய அணச்சுக்கிட்டு எடது கைட்டு ஏங் நாடிய தடவிக்கிட்டே சொல்லுவாக எங்கைய்யா,  “சே…. கஞ்சி குடிக்கணும்லயா! அப்பாட்ட வேணும்னா கூட ரெண்டு வெறவ குடு, கொஞ்சத்தூரம் பெத்தியா, கொண்டுட்டு போய்ட்டா தவிப்பாரிக்கிடலாங்.இன்னா வந்துரும்யா வாரும் தொர.எப்புடியாது நடந்துருங்க பெத்தியா ”. கடைசி வரியைச் சொல்லும் போது வெள்ளதுரைக்கு தொண்டையை கவ்வியது போல வந்தது. ஒரு செருமு செருமி சரி செய்து கொண்டு.

“அவ வேண்டியத சாப்புடட்டும். தாயோளிள தின்னு அழியுத மொதலு  அழியட்டும் போ” என்றார்.
இனி வேண்டாத ஒன்று வந்தால் அந்தப் பிள்ளை எங்க போகும். மறுபடியும் ஒரு சீரழிவாவத்தாங்க யாருக்கு தெம்பு இருக்கிறது. பாண்டியம்மா நினைவு அதுக்குள்ளயே சுழண்டது.

“வீடான வீட்டுல ஒரு நல்ல நாளதுவுமா என்னத்துக்கு கவுந்தடிச்சு உக்காந்துருக்க?” வாசலை அடித்தபடி நின்று கொண்டு பசுபதி கேட்டான்.

“உள்ள வந்து என்னனு கேளு நாயி, யானைக்காரங் கிட்ட சுண்ணாம்பு கேட்டது கணக்கா தாங் உங்கிட்ட ஒண்ணு  கேக்குது. நீ ஒன்னும் கிளிச்சு கேப்பைய நடவேண்டாங் போ” பாண்டியம்மாளுக்கு மூச்சு வாங்கியது பசுபதி தலையை சொரிந்து கொண்டே வாசலில் செருப்பை கழட்டி விட்டுவிட்டு உள்ளே வந்தான்.

“என்னக்கா ஆச்சு”

“அவுகள காங்கல, போனவும் போட்டுட்டு போயாச்சு. எனக்கு பயமா இருக்கு! ஒரு எட்டு போய் பாத்துட்டு வாயேன்”.

“ஏ ! இதுக்கு போய்கிட்டு மண்ட கெராக்கு புடிச்ச கழுத மானிக்கு இருக்க. மணிதாங் என்ன?” திரும்பி சுவரில் தொங்கிய கடிகாரத்தை பார்த்தான். “எட்டுதான ஆவுது. பன்னண்டு மணிக்கு உள்ள கெடா வெட்டுக்கு வீட்டுக்குள்ள கெடப்பாகளாங்கும்.”

“எல்லா நேரமும் பொட்டச்சிய அமுக்கியரஞ்சு பேசுததுலே இருக்காதியடா அம்புட்டு தெரியாத அளவுக்கு நாங் என்ன கெனக் கிறுக்கியா? செத்த முன்னாடி மூக்கையாத்தாங் வந்தாக. ‘அத்தாங் வாங்க’னு நாங் சத்தங் குடுத்தேங். பதிலே இல்ல . இவுக அண்ணாச்சினாக! அதுக்கும் பதிலில்ல. என்னைய இருன்னு அமத்தீட்டு இவக எந்துச்சு போனாக. “எங் கூட வந்ததும் போ” னு மூக்கையாத்தாங் இவுகட்ட சொல்லுச்சு. உடனே  இவுக வேமா சட்டைய எடுத்து போட்டாக. மானங்கெட்டு போய் மறுபடியுங் ‘அந்தாங் வாங்க’ ங்கேன். மண்டைய மட்டுங் ஆட்டுனாரு . இவுக ஏங்கிட்ட வந்து அண்ணாச்சிக்கு டீ வாங்கிட்டு வானாக, என்னைய வெளிய  பத்திவிடனும்ல வேற எதுக்கு! முடியாதுனு சொல்ல முடியுமா? ஏனத்த எடுத்துட்டு போறேங். ‘அவன் என்னைய தள்ளிட்டான், இன்னைக்கு அதுக்கு ஒரு முடிவு கண்டுரனும்’  னு ‘மூக்கையாதாங்’ உங்க அத்தானு  சொல்லுது. பாதித்தூரம் போனவதாங் ஆத்தே ! வென வச்சுருச்சேனு   பதறியடிச்சு ஓடியாந்தெங். வீட்டுல அவுகளையுங் காங்கல, வயனங் காத்துக்கிட்டே மொகட்டுல தொங்குன அருவாளையுங் காங்கல. எனக்கு தெரிஞ்சு போச்சு” சொல்லி முடிந்ததும் தலையில் மடார் மடார் என்று அடித்துக் கொண்டு பாண்டியம்மா அழத் துடங்கினாள்.

“நீ இரு, நாங் போய் பாக்கேங்” அவசரமாக பசுபதி எழுந்தான். “எங்க போய் யாரப் பாத்து என்ன ஆவப்போது”. ரெண்டு கையெடுத்து  கும்புடு போட்டு “போதுஞ்சாமி இந்த செம்மத்துக்கு இது போதும்.! சண்டாளப்பாவிகளா,  தாக்கத்துள்ள  பொம்பளையா மட்டும் பெறக்கயே கூடாது. சொமந்தா ஏழு ஊரு பழி, சகிச்சா ஆயிசுக்கும் சங்கடம். பொறுத்தா பொழுதெல்லாங் கருமாயம். கெடாவ வளத்துதாங் வெட்டனுங்கமாதிரி  அவுகள கூட்டு போயிட்டாரு அந்த பெரிய மனுஷன். அதுவும் தான்தான் கெடாங்க அறிவு இல்லாம புலிங்க நெனப்புல போகுது. எய்யா ஒங் கால்லனாலும் விழுதேங் நாங் செத்துட்டம்னா எம்புள்ளைய மட்டும் கரசேத்துரு”.

“எக்கா அதெல்லாங் ஒன்னுங் வராது நாங் கையோட மாமாவ கூட்டு வாரங்” சொன்ன வேகத்தில் பசுபதி எழுந்து வெளியே வந்தான். முக்கு ரோட்டுக்கு போயிருக்க வாய்ப்பு கிடையாது. கொஞ்சம் முன்புதான் பசுபதி அங்க இருந்து வீடு திரும்பியிருந்தான். தெரு முனையை தாண்டி மேற்கு பார்க்க நடந்தான். மின்னல்  வேகத்தில் போலீஸ் வண்டியொன்று பசுபதியை கடந்து போனது. ஓட்டமும் நடையுமாக பின்னாடி வந்த ஒருவன் தனதாட்களுடன் பேசியது எல்லாருக்கும் போல பசுபதிக்கும் கேட்டது “ஒரே வெட்டு தல துண்டா கழண்டு ஓடிட்டு”.  வெலவெலத்துப்போன பசுபதிக்கு இப்போது கால்ரெண்டும் பின்னத் துடங்கியது. பதட்டத்தோடு  வெள்ளதுரையின் வீட்டை திரும்பி ஒரு முறை பார்த்தான். கெதியாகக் கேட்டுக்கொண்டிருந்த ரேடியோ சத்தம் இப்போது அடங்கி போய் இருந்தது. துரை வீட்டிற்கு மேல்புறம் இருந்த மேட்டில் கட்டிக் கெடந்த கெடா எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு கெம்பீரமாக நின்று கொண்டிருந்தது.

பிற படைப்புகள்

Leave a Comment