வரலாற்றுடனான எங்களது உறவு சிக்கல் வாய்ந்த ஒன்றாகவே இருக்கிறது!
க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ மற்றும் ஹூலியானோ டோர்னெல்லஸ் நேர்காணல்!

by olaichuvadi

 

2019ல் வெளியான பிரேசில் நாட்டுத் திரைப்படமான Bacurau, மைய நீக்கம் செய்யப்பட்ட ஒரு ஒதுக்குப்புறமான சிறிய நிலப்பகுதியில் வாழும் மனிதர்களுக்கும், உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்துக்கொண்டு, அவர்களுக்கு எதிராக ஏவிவிடப்படும் பன்னாட்டு கொலை கும்பலுக்கும் இடையிலான மூர்க்கமான யுத்தத்தை சுவாரஸ்யமான திரைமொழியில் பேசியிருக்கிறது. Bacurau என்பதேக்கூட பிரேசலின் பல சேரிப்புற பகுதிகளை நினைவில் கிளர்த்திவிடும்படியாக உருவாக்கப்படுள்ள புனைவு நிலப்பகுதிதான். கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் அந்த பகுதியில், அதன் இயல்புக்கு உரிய போதைமையும், பாலியல் களியாட்டங்களும், வசவு சொற்களும் படத்தின் முதல் பகுதியில் நிறைத்திருக்கின்றன. கதை வளர வளரத்தான், அவர்களுக்கு எதிராக மிகப்பெரும் சதிப் பிண்ணல் உண்டாக்கப்படுகிறது என்பதை அவர்களைப்போலவே நாமும் அறிந்துகொள்கிறோம். குறிப்பிட்ட ஒரு காட்சியில், அந்த நிலமே, உலக வரைபடத்தில் இருந்து காணாமலாக்கப்படுகிறது. அப்படி அழிவின் விளிம்பில் மெல்ல மெல்ல இறந்துக்கொண்டிருக்கும் அப்பகுதியை, அதன் குடிமக்களே தமக்கு எதிரான அரசியல் சதிகளை உணர்ந்து, கைவசம் இருக்கின்ற ஆயுதங்களைக் கொண்டு, புறதேசத்து நவீன ஆயுதங்களை எதிர்கொள்ளத் துணிவுடன் களத்தில் இறங்குகிறார்கள். படத்தின் பிற்பகுதி முழுக்க இரத்த வெறியாட்ட களமாக அப்பகுதி மாறிவிடுகிறது. பன்னெடுங்காலமாக, பிரேசிலின் ஒதுக்கப்பட்ட நிலப்பகுதிகளில் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் அவலச் சூழ்நிலைகளை, ஒரு புனைவு நிலமாக, ஒரு புனைவு பிரதியாக, அதுவும் எதிர்கால கால பரப்பில் நிகழும் வண்ணம் கதை அமைக்கப்பட்டு, இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது. கான்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதை இப்படம் பெற்றிருக்கிறது. அதனது இரட்டை இயக்குனர்களான க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ மற்றும் ஹூலியானோ டோர்னெல்லஸ்-யிடம் ஜெரிமி எல்ஃபிக் மேற்கொண்ட நேர்காணலை ஓலைச்சுவடிக்கென தமிழாக்கம் செய்து வழங்கியிருக்கிறார் ராம் முரளி.

Bacurau திரைப்படத்திற்கான உந்துதல் எங்கிருந்து வந்தது?

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : திரைக்கதை எழுதும்போது நம் முன்னால் இருக்கும் மிகப் பெரிய சவால் என்பது, வழக்கமான ஆக்கங்களை உடையதாக நமது படைப்பு இருந்துவிடக்கூடாது என்பதே. உதாரணத்திற்கு, நான் விமானத்தில் பயணம் செய்யும்போது அருகில் இருந்த இவரது மடிக்கணினியை பார்த்தேன். அதில் கேப்டன் மார்வெல் ஓடிக்கொண்டிருந்தது.

ஹூலியானோ டோர்னெல்லஸ் : ஆமாம். சமீபத்தில் வந்த மார்வெல் வரிசைத் திரைப்படம் அது.

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : அதை நான் பார்த்துக்கொண்டிருந்தபோதே, அதில் ஒரு கார் துரத்தல் காட்சி வந்தது. அப்போது, “ஏன் இப்படிப்பட்ட கார் துரத்தல் காட்சியை எழுதி படமாக்குகிறார்கள். இதுப்போல ஆயிரமாயிரம் கார் துரத்தல் காட்சிகளை முன்னதாகப் பார்த்ததாகிவிட்டதே” என்றேன். கிட்டதட்ட கடந்த 50 வருடங்களில் வெளிவந்திருக்கும் திரைப்படங்கள் அனைத்திலும் கார் துரத்தல் காட்சி இருக்கிறது. அதனால், திரைக்கதை எழுத அமரும்போது, முதலில் நமக்குள் உதிக்கும் சிந்தனை தொகுப்புகள் சுவாரஸ்யமானதாக இருக்கிறதா? காட்சி விரிப்பு நமக்கு சவால் அளிக்கக்கூடியதாக இருக்கிறதா என்றெல்லாம் யோசிக்க வேண்டும். ஒரு சிறந்த காட்சியாக நமக்கு சுவாரஸ்யமூட்டும் அதே தருணத்தில், எண்ணற்ற முறை திரையில் நிகழ்ந்து முடிந்த பழைய சலிப்பு படரச் செய்யும் தருண நகர்வாக அது இல்லாமல் இருப்பதோடு, முழு திரைப்படத்தின் அங்கமாகவும் அது விளங்க வேண்டும்.

எழுதத் துவங்கும்போது, “இப்படி நிகழ்ந்தால் என்ன” என்ற கேள்வியை எழுப்பி, அதிலிருந்து ஒரு எண்ணத்தை வளர்த்து எடுப்போம். ஆனால், இது உண்மையில் குறிப்பிட்ட வகையிலான திரைப்படம் எடுக்க வேண்டுமென்கிற தணியாத வேட்கையில் இருந்தே உருவெடுக்கும். அதோடு, பிரேசில் தேசத்தின் செர்டாகோ பகுதியின் யதார்த்த உலகத்தோடும் இது தொடர்புடையதாக இருக்கிறது. அதன்பிறகு இவற்றையெல்லாம் சேர்த்து, “இப்போதிலிருந்து சில வருடங்களுக்கு பிறகு” என்று கால பரப்பை தீர்மானித்துவிட்டு, அதற்குள் எதிர்கால அசைவியக்கம், பேரழிவு, வன்முறை, திரைப்படங்களில் வன்முறை உள்ளிட்ட உபக் கருத்து குவிப்புகளை சேர்த்து எழுத்துப் பணியைத் தொடரலானோம்.

அதோடு, நாங்கள் வெகு தீவிரமாக விவாதித்த மற்றொரு விஷயம் என்னவென்றால், அது இக்காலத்தில் செயலாக்கம் பெறுவதில்லை. ஏனெனில், இன்றைய ஹாலிவுட்டில் தயாரிக்கப்படும் பெரிய வணீகத் திரைப்படங்கள், நாம் தோற்றுவிட்டதான பயமுறுத்தலை எங்களுக்குள் உண்டாக்குகின்றன. இது தொடர்ந்தால், எனக்கு தெரியவில்லை, நாம் வெளியேறிவிடுவதைத் தவிர வேறு வழியில்லை. இன்றைய திரைப்படங்களில், பெரிய காட்சிகள் மிக விரைவாக கடந்து நகர்ந்துவிடுகின்றன. இவை உண்மையில் கதாப்பாத்திரங்களை அழுத்தமாக படைப்பதே இல்லை. ஆனால், முன் காலத்திய வணீகத் திரைப்படங்களை பார்த்தீர்களென்றால், உதாரணத்திற்கு ஜேம்ஸ் கேமரூன் 1986ல் இயக்கிய ஏலியன்ஸ் திரைப்படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் முதல் ஏலியனை நீங்கள் பார்ப்பதற்கு 40 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனால், இந்த கால அளவிற்குள் அத்திரைப்படம் மையக் கதாப்பாத்திரம் குறித்த சித்திரத்தை உருவாக்குவதில், தருணங்களை உருவாக்குவதில், கிரகத்தை அணுகியிருப்பதில், விண்வெளி பயணத்தை காட்சிப்படுத்தி இருப்பதில் போதிய கவனத்தை செலுத்தியிருக்கும். நாங்கள் அதுப்போலவே ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். இதன்மூலம ஒரு சூழல் மெல்ல மெல்ல உருதிரட்டப்படுகிறது. ஒரு பிரஷர் குக்கரைப்போல, ஆனால் இறுதியில் மிக வலிமையாக நிறைவை எட்டப்போகிறது. முன் பகுதியில் பொதித்து வைத்த கன்னியே இரண்டாம் பகுதியில் வெடித்து சிதறலை உண்டுப் பண்ணுகிறது.

Bacurau-வின் நிலவெளியாக நீங்கள் படமாக்கியிருக்கும் பகுதி கலாச்சார ரீதியிலாக, மற்றும் சமூக அரசியல் ரீதியிலாக பிரேசிலுடன் எவ்வகையில் தொடர்பு கொண்டிருக்கிறது என்று விளக்க முடியுமா?

ஹூலியானோ டோர்னெல்லஸ் : பிரேசிலின் வடக்கிழக்கு பகுதி ஒன்றில்தான் படப்பிடிப்பை நிகழ்த்தினோம். அவ்விடத்தை செர்டாயோ என்று அழைப்பார்கள். அதனை எப்படி மொழிபெயர்ப்பது என்று எனக்கு தெரியவில்லை. செர்டாயோவுக்கு மொழிபெயர்ப்பே இல்லை என்று கருதுகிறேன்.

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : அது ஒதுக்குப்புறமான பகுதி.

ஹூலியானோ டோர்னெல்லஸ் : ஆமாம். ஒதுக்குப்புறமான பகுதியை போன்றதுதான். ஆமாம். அதோடு, ஆமாம். நிறைய செர்டாயோ வகை பகுதிகள் இருக்கின்றன. குறிப்பிட்ட இப்பகுதி கெராடோ என்று அழைக்கப்படுகிறது. பராய்பா மற்றும் ரியோ கிராண்டே டோ நோர்டே மாநிலங்களுக்கு இடையில் அப்பகுதி இருக்கிறது. வடக்கிழக்கில் இருக்கின்ற ஏனைய பிற மாநிலங்களைப் போலவே இவையும் வறுமை சூழ்ந்திருக்கும் மாநிலங்கள்தான். பிரேசிலின் ஏழ்மையான பகுதி இதுதான். அங்குள்ள மக்கள் இத்தகைய சூழலை எதிர்கொள்வதற்கு தங்களை பழக்கிக்கொண்டுள்ளார்கள்…

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : துன்பங்கள்.

ஹூலியானோ டோர்னெல்லஸ் : ஆமாம். துன்பங்கள். பசி மற்றும் வறுமை. ஆமாம், பசி மற்றும் வறுமை…

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : மரியாதையின்மை.

ஹூலியானோ டோர்னெல்லஸ் : ஆமாம். மரியாதையின்மை. அதோடு, கடந்த சில வருடங்களில் இந்த இடதுசாரி அரசுகளால் இந்த யதார்த்த நிலை ஓரளவுக்கு மாறுதலை கண்டிருக்கிறது. இல்லை. நிறையவே மாறியிருக்கிறது.

முன்னேற்ற அர்த்தத்தில் சொல்கிறீர்களா?

ஹூலியானோ டோர்னெல்லஸ் : ஆமாம். முன்னேற்ற அர்த்தத்தில்தான் குறிப்பிடுகின்றேன்.

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : அவர்களுக்கு கூடுதல் கவனம் கிடைத்திருக்கிறது.

ஹூலியானோ டோர்னெல்லஸ் : அவர்களுக்கு கூடுதல் கவனம் கிடைத்திருக்கிறது.

இது லூலாவின் அரசாட்சி இல்லையா?

ஹூலியானோ டோர்னெல்லஸ் : ஆமாம்.

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : அவரும் எங்களைப்போலவே, அந்த பிராந்தியத்தில் இருந்து வந்தவர்தான்.

ஹூலியானோ டோர்னெல்லஸ் : ஆமாம். அந்த பகுதியில் வாழும் மக்கள் மிகவும் கன்னியமானவர்கள் என்பது எங்களுக்கு எப்போதும் தெரியும். ஏனெனில், வாழ்க்கையுடனான அவர்களது உறவு முற்றிலும் வித்தியாசமானது. அவர்களுக்கு எதுவும் எளிதில் கிடைப்பதில்லை. வளர்ந்த நகரத்து மனிதனால் கண்டுணர முடியாத வாழ்வின் சில கூறுகளை அவர்களால் மதிப்புமிகுந்ததாக அணுகவும், உணரவும் முடியும். இந்த பிராந்தியத்தில் உள்ள மக்களிடத்தில் அறவே இல்லாத நம்பகத்தன்மை வாய்ந்த பிரதிநிதித்துவத்தை உருவாக்க உருவாக்க ஒருபோதும் நாங்கள் எங்களையே பணயம் வைக்க முடியாது என்று கருதுகிறேன். அதனால், துவக்கத்தில் இருந்தே இவ்வகையில்தான் எங்களது அணுகுமுறை இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகத் தெளிவுடன் இருந்தோம்.

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : இப்படித்தான் துவக்கத்தில் இருந்து எங்களது செயல்பாடு இருக்க வேண்டும் என வகுத்துக்கொண்டிருந்தோம். ஆனால், அதன்பிறகு சில அற்புதங்கள் நிகழத் துவங்கின. அந்த நிலவெளிக்கு சென்றிருந்த நாங்கள், அங்கிருந்த பல மிகச் சிறந்த மனிதர்களுடன் சேர்ந்து பணியாற்றும் சந்தர்ப்பத்தை பெற்றோம். அதுதான், எங்களது திரைப்படம் இன்றைக்கு வந்தடைத்திருக்கும் நிறைவை எட்டுவதற்கான காரணம்.

ஹூலியானோ டோர்னெல்லஸ் : ஆமாம். அதோடு, மற்றொரு சுவாரஸ்யமான கோணமும் இதில் இருக்கிறது. பிரேசில் சினிமாக்களில் காண்பிக்கப்படும் செர்டாயோ பிராந்தியம் என்பது எப்போதும், சாம்பல் பூத்ததாகவும், வறண்ட நிலப்பரப்பாகவும் அதனது மக்கள் நோய்வாய்ப்பட்டவர்களாக மெலிந்த தேகத்துடன் பிணங்களைப்போல நடமாடுவதையுமே பதிவாக்கியிருக்கிறது. நீங்களே அதனை உணர்ந்திருப்பீர்கள். ஆனால், நாங்கள் அந்த பிராந்தியத்தில் கால் வைத்தபோது, அங்கு மழை வலுத்து பெய்ந்துக்கொண்டிருந்தது. ஆமாம். அதிகளவிலான மழை. அதனால், அந்த நிலவெளி உடனடியாக மாறிவிட்டிருந்தது. முழு நிலவும் பச்சை பெரும் பரப்பாக காட்சியளித்தது. பூக்கள் மலருவதும், தும்பிகள் அலைவுறுவதும், சிறிய எலிகள் ஓடித் திரிவதும் என இயற்கை அவ்விடத்தில் பேரழகை வர்ணமிட்டிருந்தது. அனைத்து மிருகங்களும் அதிகளவில் உடலுறவு கொள்கின்றன. அதிகளவில் உணவுகளை உட்கொள்கின்றன. இவை அப்பகுதி மக்களின் வாழ்வினை உருவகத்தனமையில் எனக்கு திறந்துவிட்டது. நீங்கள் அவர்களுக்கு குறைவாக கொடுத்தாலே போதுமானது. அதைக்கொண்டு அவர்கள் ஏராளமான அற்புதங்களை சிருஷ்டித்துவிடுவார்கள்.

பிரேசில் தேசத்தின் நிலமென அயல் நாட்டவர்களால் எளிதில் அடையாளம் காண முடியாத ஒரு பகுதியை பதிவு செய்திருப்பது, முக்கியத்துவம் வாய்ந்த பணி என்றே கருதுகிறேன். ஏனெனில், பொதுவாக திரைப்படங்களில் பிரேசில் என்றாலே அதன் நகர்புற பகுதிகள்தான் இடம்பெறுகின்றன.

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : அயல்நாட்டவர்கள்… கண்டிப்பாக! ஆனால், நாங்கள் பிற பிரேசில் பார்வையாளர்கள் செர்டாயோ பகுதியையும், அதன் மக்களையும் நாங்கள் காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை அறிவதிலேயே ஆர்வமாக இருக்கிறோம். ஏனெனில், அப்பகுதி மக்களை நாங்கள் காண்பித்திருக்கும் விதம் வழக்கத்தில் இல்லாதது.

அப்படியானால் இரு விதமான பார்வையாளர்கள் இந்த திரைப்படத்துக்கு, இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளலாம். இத்தகைய வினைகளைத் திரைப்பட உருவாக்க காலத்திலேயே கருத்தில் கொண்டிருந்தீர்களா? அல்லது திரைப்பட விழாக்களில் கிடைக்கப் பெற்றிருக்கும் கவனத்தின் பின் நிகழ்வாக இவ்வெண்ணம் உங்களுக்குள் உருவாகி இருக்கிறதா?

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : அப்படி நாங்கள் முன் திட்டமிடல்களை செய்தோம் என்று கருதவில்லை. நான் எப்போதும் ஆச்சர்யங்களால்தான் வழிநடத்தப்படுகின்றேன். குறிப்பிட்ட காட்சியை இவ்வகையில்தான் படமாக்க வேண்டும் என்றுக்கூட நான் திட்டமிடுவதில்லை. ஏனெனில், Neighbouring Sounds படத்தை உருவாக்கியபோது, அதனை நான் வாழ்ந்துக்கொண்டிருந்த தெருக்களில்தான் படம்பிடித்தேன். குறிப்பிட்ட ஒரு காட்சி நிகழும் தளமாக எனது இருப்பிடமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த படத்தை குறுகிய வட்டத்தை பிரதிபலிப்பதாகவும், சிறிய நிலவெளிக்கு உரியதாகவுமே கருதியிருந்தேன். ஆனால், அந்த படத்தை, பல தேசத்து மக்களாலும் புரிந்துகொள்ளப்பட்டது. அதற்கு உலகளாவிய வரவேற்பும் கிடைத்திருந்தது. Aquaris-க்கும் அதுவேதான் நடந்தது. இந்த திரைப்படத்தைப் பொருத்தவரையில், எனக்கு தெரியவில்லை, உங்களது திரைப்படத்தில் வலிமையான நாடகீய தருணங்கள் இருந்து, அதனை திரைப்பட வடிவத்தில் நேர்த்தியாக படமாக்கி இருக்கிறீர்கள் என்றால், நிச்சயமாக அந்த படம் சிறிய அளவிலான பாராட்டுதல்களையாவது பெறுவதாகவே இருக்கும். ஆமாம். ஒரு ஆஸ்திரேலிய திரைப்படத்தை, ஆஸ்திரேலிய பார்வையாளர்களால் துலக்கமாக புரிந்துகொள்ள முடியும். அந்த திரைப்படத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்ற நுணுக்க விபரங்கள்.. அனைத்தையும்விட அது ஒரு ஆஸ்திரேலிய திரைப்படம். ஆனால், அதுவெரு சிறந்த திரைப்படமாக இருந்தால், நிச்சயமாக ஓக்லஹாமாவில் உள்ளவர்களாலும், ஐஸ்லாந்தில் உள்ளவர்களாலும் அந்த திரைப்படம் விரும்பப்படும். அனைத்து சிறந்த திரைப்படங்களுக்கும் இதுதான் நடக்கிறது.

ஹூலியானோ டோர்னெல்லஸ் : பிரேசிலில் பெரு வெற்றிப்பெற்ற ஆஸ்திரேலிய திரைப்படம் என்பதற்கான மிகச் சிறந்த உதாரணம், Crocodile Dundee. பிரேசிலில் இப்படம் கொண்டாடப்பட்டது. வெற்றி. மிகப்பெரிய வெற்றி. அத்திரைப்படத்தில் ஒரு காட்சி இருக்கிறது. அதில் வருகின்ற பழங்குடி இன நடிகரின் (டேவிட் கல்பிலி) முகத்துக்கு முன்னால் ஒரு பெண் கேமிராவை நீட்ட, அவர் உடனடியாக, “நிறுத்துங்கள்” என்று சொல்வார். பதிலுக்கு அந்த பெண், “ஏன் நான் உங்களது ஆன்மாவை திருடிவிடுவேன் என்று பயமாக இருக்கிறதா?” என்று கேட்பாள். அதற்கு அந்த நடிகர், “இல்லை. கேமிராவின் லென்ஸ் மூடி இன்னும் கழப்படாமல் இருக்கிறது. தயவுசெய்து அதனை கழற்றுங்கள்” என்பார்.

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : அதுவொரு சிறப்பான நகைச்சுவை.

ஹூலியானோ டோர்னெல்லஸ் : ஆமாம். அதேதான் அங்கு நடந்துக்கொண்டிருக்கிறது. அந்த மக்களுக்கு இழைப்படும் அநீதியாக இது இருக்கிறது. இதனை அனைத்து சமயங்களிலும் நாம் எதிர்கொண்டபடியேதான் இருக்கிறோம். பல வருடங்களுக்கு முன்னால் ஒரு ஆவணப்படத்தின் உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்தபோது எனக்கு இவ்வனுபவம் ஏற்பட்டிருக்கிறது. ஒலிண்டாவில் உள்ள கலாச்சார கூடுகை இடத்திற்கு நான் சென்றிருந்தேன். பெம்மம்பு கோவில் உள்ள ஒரு வரலாற்று நகரம் அது. அந்த கலாச்சார கூடுகை இடத்தின் முதன்மை நிர்வாகி கேளிக்கையான வேடிக்கை மிகுந்த ஒரு உடையில் அவ்விடத்தில் இருக்கிறார். அதோடு அவர் சட்டையும் அணிந்திருக்கவில்லை. அவர் ஒரு கறுப்பின மனிதர். வலுவான பூத உடல்கொண்ட கறுப்பின மனிதர். அவ்விடத்தில் அவர் அமர்ந்திருந்த பாங்கு மிக அழகானதாக இருந்தது. அதனால் எனது கேமிராவை அவரது திசையின் பக்கமாக திருப்பினேன். அதனைப் பார்த்துவிட்ட அவர், உடனடியாக அசெளகர்யப்பட்டு, “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்டார். ”இதுவொரு அழகான காட்சித் தோற்றமாக இருக்கிறது” என்றேன். ”அப்படியானால் நான் சட்டை அணிந்துக்கொள்கிறேன்” என்றார் அவர். அந்த நிகழ்வு என்னை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியது. என்னுடைய கேமிராவுடன் அவருடைய உலகத்திற்குள் நுழையும் நான் பெரும் மனக் காயத்துடன் சங்கடத்துடன் திரும்ப வேண்டியதாயிற்று. அவ்வுணர்வு இன்னமும் என்னிடத்தில் தங்கியிருக்கிறது. அதனால், இதுக் குறித்து Bacarau-வில் சிறிய அளவில் பேச வேண்டுமென்று விரும்பினேன்.

புரிந்துகொள்ள முடிகிறது. கேமிராவிற்கு பின்னால் இருந்து ஒரு பிம்பத்தை பதிவு செய்வது எப்போதுமே சுவாரஸ்யமானது. ஒருவித உள்ளார்ந்த கிளர்ச்சி நிலையில் காட்சிகளை படமாக்குதலில் ஈடுபட்டிருக்கும்போது, அதனை தகர்த்து, “என்னச் செய்துக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று வினவுவது திடுக்கிடலை உருவாக்கிடும். அனைத்திற்கு பின்னாலும் உள்ள முரண்களை குறித்தும் கருத்தில்கொள்ள வேண்டும்.

ஹூலியானோ டோர்னெல்லஸ் : திரைப்படத்தில் அந்த சிறிய பிராந்தியத்தை சேர்ந்த பெண்களில் ஒருத்தியை ஒரு இணை நெருங்கி வந்து, ”ஏன் இதனை செய்துக்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்கிறார்கள். அதற்கு அவள், “எனக்கு தெரியவில்லை” என்று பதிலுரைக்கிறாள்.

ஆமாம். அது மிகச் சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது. அவ்வகையில்தான் இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதுதான் படத்தின் முழுமையான துணை இழை என கருதுகிறேன். அல்லது அந்த அயலக குழுவினரின் மைய இழையாகக்கூட இருக்கலாம். அவர்களில் சிலர் அமெரிக்கர்கள் என்று நினைக்கிறேன்.

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : அதில் ஒரு பிரட்டீஷ் நபரும் இருக்கிறார். ஜெர்மானிய – அமெரிக்கரும் இருக்கிறார்.

ஹூலியானோ டோர்னெல்லஸ் : அவர்களை ஒருவித வேட்டையாடி குழுவினரைப்போல படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறோம்.

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : அவர்கள் ஒரு வேட்டையாடி குழுவினர்தான்.

ஹூலியானோ டோர்னெல்லஸ் : சுற்றுலாவாசிகளைப்போல தோற்றத்தில் இருப்பவர்கள்.

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : நாம் படத்தில் அறிமுகம் செய்யாத சிலரால் ஒருங்கிணைக்கப்பட்ட மனிதர்கள் அவர்கள். ஆனால், அவர்களது காதுகளில் அணிந்திருக்கும் தொடர்பு சாதனத்தில் எதுவோ நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது என்பதை நம்மால் உணர முடியும்.

ஹூலியானோ டோர்னெல்லஸ் : இதுவொரு ரியாலிட்டி ஷோவாகக் கூட இருக்கலாம்.

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : ஆனால் டெக்ஸாஸில் இயங்கும் ஸ்டூடியோவை ஒரு இடைவெட்டில் காண்பிக்கக்கூடாது என்று கறாராக முடிவு செய்திருந்தோம்.

ஹூலியானோ டோர்னெல்லஸ் : அதாவது ஸ்டூடியோவில் இருந்தபடி எட் ஹாரிஸ் ஏதாவது பேசிக்கொண்டிருப்பதை காண்பிக்க நாங்கள் விரும்பவில்லை.

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : ஆமாம். எங்களால் அதனை ஒருபோதும் செய்ய முடியாது. அவர்களது செய்கைகளை மட்டும் பார்ப்பது போதுமானது. புள்ளிகளை சேகரித்தல், பெருக்குதல், விண்டேஜ் ஆயுதங்கள் பெறுவது குறித்த அவர்களது ஆர்வம் முதலியவற்றை உணர்வது மட்டுமே போதுமானது.

அவர்களுக்கிடையில் குறிப்பிட்ட ஒரு விவாதம் தொடர்ந்து நிகழ்கிறது. வேறுபட்ட மனிதர்கள் எவ்வாறு தோற்றமளிக்கிறார்கள் என்பது பற்றிய தகவல் பகிர்வுகள் நடைபெறுகின்றன. இந்த உரையாடல்கள் Aquaris திரைப்படத்தில் வருகின்ற சில காட்சிகளை எனக்கு நினைவூட்டியது. அத்திரைப்படத்தில் பிரேசில் தேசத்திற்குள் நிலவும் இனப் பாகுபாடு மற்றும், மனிதர்களின் வெளிப்புற தோற்றமென்பது மையப் பேசுபொருளாக இருந்தது.

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : அதில் சில ஊடு இழைகள் இருந்ததாக கருதுகிறேன். எனது திரைப்படம் குறித்தே நான் பகுப்பாய்வு செய்கிறேன் என்றாலும், அதில், நீங்கள் யார்? நீங்கள் யாரென்று நினைத்துக்கொள்கிறீர்கள்? உலகத்தின் பார்வையில் நீங்கள் யார்? உங்களது பார்வையில் உலகம் எப்படிப்பட்டது? போன்ற விவாதங்கள் எல்லாம் முக்கியத்துவத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதோடு அதில் அரசியல் மற்றும் அதனது அதிகாரம் குறித்த வலுவான காட்சிபுலங்களும் இருக்கின்றன. இவை அனைத்தையும் தொகுத்து, மனிதர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்கிற கேள்வியும் அதில் அடங்கியிருக்கிறது. அந்த குழுவினரைப் பற்றி அமெரிக்கர்கள் நினைத்துப் பார்ப்பார்கள் என்று துளியும் நான் கருதவில்லை. அதனால், உலகத்தில் இருந்து அவர்களது இன்மையை துடைத்தழிப்பது சாத்தியமானதுதான் என்றே நினைக்கிறேன்.

ஹூலியானோ டோர்னெல்லஸ் : அவர்களைப் பற்றி எவரும் அக்கறைப்பட மாட்டார்கள்.

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : யாரும் அவர்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் மல துவாரத்தைப்போன்ற சமூகக் குழுவினர். ஆனால், உண்மையில் அவர்கள் மல துவார சமூகக் குழுவினர்கள் அல்ல. அதோடு மற்ற இரண்டும் –

அந்த சொல்லாடல், திரைப்படத்தில் அதனை நான் கேட்க நேர்ந்த நொடியில், வலிந்து அந்த சொற்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதாக எனக்கு தோன்றுகிறது. மல துவார சமூகம்..

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : மல துவாரம். டிரம்புக்கு எதிராகவும் இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதோடு, திரைப்படத்தில் ஜெர்மனை நாஸி என்று அழைக்கிறார்கள். இதுவொரு வகையில் கலாச்சார கிளேச்சவைப் (Cliche) போன்றது. அதோடு, அந்த இரண்டு பிரேசில்வாசிகள் தங்களை வெள்ளை இனத்தவர்களாக கருதுகிறார்கள். ஆனால், அமெரிக்கர்கள் அவர்களை வெள்ளை இனத்தவர்களாக கருதுவதில்லை. ஏனெனில், தங்களது மேலதிகார மைய நிலையை அவர்களுடன் பங்கிட்டுக்கொள்வதில் அவர்களுக்கு துளியும் ஏற்பில்லை. அவர்களைப் பொருத்தவரையில் அந்த இரு பிரேசில்வாசிகளும் bacarau பகுதி மக்களுக்கு இணையானவர்கள்தான். இதில் பிராந்திய பதற்ற உணர்வும் உள்ளடங்கியிருக்கிறது. தெற்கு பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் வடக்கிழக்கில் வாழும் எங்களைப் போன்றோருடன் பல வருட உறவை பேணி வருகிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு அந்த பகுதிக்கு ஒரு சுற்றுலாவாசியாக நான் சென்றிருந்தேன். அப்போது திரைப்பட விமர்சகராகவும் இருந்தேன். பத்திரிகை துறையை சேர்ந்த ஒருவர், “உங்களுக்கு ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பாளர் தேவைப்படுகிறார் இல்லையா?” என்றார். “இல்லை. என்னால் ஆங்கிலத்தில் உரையாட முடியும்” என்று அவருக்கு பதில் கூறினேன். ”ஓஹ். அப்படியானால் சரி. பெர்னாம்புகோ நகரத்தில் உள்ள மனிதர்களுக்கு ஆங்கிலமும் தெரிந்திருக்கிறது. அது..”

சரிதான். அவர் உங்களது தேசத்திற்குள்ளாக வாழும் ஒருவர்தான் இல்லையா?

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : ஆமாம். ஆனால், இது பல நாடுகளில் நடக்கிறது. நியூ யார்க்கில் வசிப்பவர்கள் மத்திய மேற்கு பகுதியில் வசிக்கும் அமெரிக்கர்களை மேம்பால மாநிலத்தவர்கள் என்று குறிப்பிடுவது உண்டு. ஏனெனில், எது முக்கியமானதாக இருக்கிறது என்றால் மேற்கு கடற்கரை நிலப்பகுதி மக்கள் அல்லது கிழக்கு கடற்கரை நிலப்பகுதி மக்கள் என்கிற வகைப்பாடுதான். மத்தியில் வாழ்பவர்களைப் பற்றி எவருக்கும் அக்கறை இருப்பதில்லை.

இங்கும், அதாவது ஆஸ்திரேலியாவின் புதிய தெற்கு வேல்ஸ் உள்ளாகவே, ஆறு மணி நேரம் மேற்கு திசையின் வழியே நீங்கள் பயணம் செய்தால், மிகுதியளவிலான மாற்றத்தை உங்களால் உணர முடியும். அதோடு, நகரத்தில் வாழ்கின்ற 80ல் இருந்து 90 சதவீத மக்களுக்கு, மனிதர்களின் வாழ் நிலைகளில் உள்ள மாறுபாடுகள் தெரிந்திருக்கவில்லை என்பதை அதிக உறுதியுடன் சொல்கிறேன். படத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பாக ஆர்வமூட்டும் பகுதியை வைத்திருக்கிறீர்கள். அதனை எங்களது நிலவெளியுடன் என்னால் பொருத்திப் பார்க்க முடிகிறது. ஏனெனில், புதிய தெற்கு வேல்ஸ் பகுதியில் கடுமையான வறட்சி நிலவியதோடு, குடிநீர் வாரியமும் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பழங்குடி மற்றும் கிராமப்புற மக்கள் குடிப்பதற்கு சுத்தமாக நீர் இல்லாமல் அவ்விடத்தில் இருந்து வெளியேறிவிட்டார்கள். அதனால் அவ்விடத்திற்கு வழங்கப்பட்ட நீரை திரும்பப் பெறுவதும், விவாசயம் உள்ளிட்ட பணிகளுக்கு சேமித்து வைப்பதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : இது படத்தில் கையாளப்பட்டிருக்கும் நீர் சிக்கலுக்கு நெருக்கமான ஒன்றுதான்.

ஹூலியானோ டோர்னெல்லஸ் : இதுப்போல பல பகுதிகளில் நடைபெற சாத்தியமிருக்கிறது. ஏனெனில், லூலாவின் அரசாட்சியில் இந்த சிறுவர்கள் பள்ளிகளுக்கு செல்லத் துவங்கிவிட்டார்கள். அவர்களுக்கு கல்வியறிவும் ஓரளவுக்கு கிடைத்தது. தென்கிழக்கு பிராந்தியத்தை வென்று தேசிய அளவில் பல விருதுகளையும் வாங்கத் துவங்கிவிட்டார்கள். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், அவர்களுக்கு தேவையாய் இருந்ததெல்லாம் வாய்ப்பு மட்டும்தான்.

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : ஆமாம். அவர்களுக்கு வாய்ப்புதான் தேவையாய் இருந்தது.

ஹூலியானோ டோர்னெல்லஸ் : Bacarau என்று, திரைப்படத்தில் நீங்கள் பார்க்கும் கிராமத்தின் உண்மையான பெயர் Bacarau அல்ல. அந்த பகுதி சீரமைக்கப்பட்ட சாலை வசதியுடையதாக இருக்கக்கூடாது என்பதில் கவனத்துடன் இருந்தோம். ஒரு அசிங்கமான, போக்குவரத்துக்கு சாத்தியமற்ற பாதையின் வழியிலாகவே அவர்களது உலகத்துடனான உறவு என்பது தொடர்கிறது. அதோடு, மலைகள் சூழந்ததாக அவ்விடம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். அப்படித்தான், படப்பிடிப்புக்கு உரிய இடங்களைத் தேடி அலைந்துக்கொண்டிருந்த மனிதருடன் அந்த பகுதிக்கு சென்றிருந்தபோது, அங்கு ஒரு முதிய பெண்ணை நாங்கள் சந்தித்தோம். அந்த சிறிய நகரத்தின் அருங்காட்சியமாக இருந்த தனது வசிப்பிடத்திற்குள் வரும்படி அவள் எங்களை உள் அழைத்தாள்.

ஹூலியானோ டோர்னெல்லஸ் : அவளது வீட்டிற்குள் நாங்கள் நுழைந்தபோது, அருங்காட்சியகம் முதன்மை அறையில் இருந்ததைப் பார்த்தோம். அதுதான் எங்களது அருங்காட்சிகம். பல பல புகைப்படங்கள், பொருட்கள், கத்தரிக்கப்பட்ட செய்தித்தாள் துண்டுகள் என திரைப்படத்தில் நீங்கள் பார்க்கும் அருங்காட்சியகத்தைப்போலவே அது இருந்தது. ஆனால், அது இன்னும் சிறியதாக இருந்தது. ஆனால், அழகானதாக, கூடுதல் பெருமிதத்தோடும் அந்த அருங்காட்சியகம் இருந்தது.

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : அது அபத்தமானதாக இருக்கவில்லை.

ஹூலியானோ டோர்னெல்லஸ் : இல்லை. எனக்கு உடல் நடுக்கமே வந்துவிட்டது. இது மிக மிக முக்கியமானது. அந்த பெண்ணின் முகத்தில் அப்படியொரு பரவசமும், கம்பீரத்தின் சாயைகளும் படந்திருந்தது. அந்த அருங்காட்சிகம் உயிர்ப்புடன் நீடித்திருக்க இயலாமல், காலத்துடன் போராடிக் கொண்டிருந்தது.

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : வரலாற்றினூடாக அவை வாழ்ந்துக்கொண்டிருக்கின்றன. இது எனக்கு மிக மிக ஆர்வமூட்டும் கருவாகத் தோன்றியது. வரலாற்றுடன் சிக்கல் வாய்ந்த உறவே எங்களுக்கு இருக்கிறது. எங்களது மிக முக்கியமான அருங்காட்சியகம் கடந்த வருடத்தில் எரிந்துவிழுந்துவிட்டது. தேசிய அருங்காட்சியகம். குறைந்த மின்னழுத்தத்தின் காரணமாக, தீ எழுந்து முழு அருங்காட்சியகத்தையும் பொசுக்கிவிட்டது. பராமரிப்புக்கான போதிய நிதி ஒதுக்காதது, கவனத்துடன் பாதுகாக்கமல் விட்டது என அந்த நிகழ்வுக்கு பல காரணங்களும் இருக்கின்றன. நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம். பல நூறு வருடங்களின் நினைவு படிமங்கள், நினைவு சிற்பங்கள் என்றென்றைக்குமாக காலத்தில் இருந்து தொலைந்துவிட்டன.

ஹூலியானோ டோர்னெல்லஸ் : அதோடு, பிரேசிலை பொருத்தவரையில் பாரிசில் இருந்து முற்றிலுமாக மாறுபாடுகளை உடையது. அவர்களால் நோட்ரீ டாமை கட்டியெழுப்ப ஒரே நாளில் ஒரு பில்லியன் தொகையை திரட்ட முடிந்திருக்கிறது.

திரைப்படத்தில் பேரழிவுக்கான சில கூறுகளும் இருக்கின்றன. அதோடு, இத்திரைப்படம் தொடர்பான விவாதங்கள், நேர்காணல்களிலும் பகுதியளவில் இதுவொரு பேரழிவு வகைப்பட்ட திரைப்படம் என்று முன்மொழியப்படுகிறது. ஆனாலும், கடந்த வருடத்தில் பிரேசிலின் நிகழ்வுகளைப் போலவோ அல்லாது இன்றைய உலகாய யதார்த்த மையத்திலேயோ-தான் இத்திரைப்படம் நிலைகொண்டிருக்கிறது.

ஹூலியானோ டோர்னெல்லஸ் : நாமெல்லாம் பேரழிவு காலத்தில்தான் வாழ்ந்து வருகிறோம்.

மேற்கு உலகிலும், ஆஸ்திரேவியாவிலும், லண்டன் மற்றும் அமெரிக்காவிலும், கடந்த மூன்று வருட காலத்தில் பிரேசிலில் என்ன நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது என்பதுப் பற்றிய புரிதல அறவே இல்லை என்றே நினைக்கிறேன். போல்சொனோரோ எப்போதும் சர்வதேச ஊடகங்களால் பிரேசிலின் டிரம்ப் என்று வகைப்படுத்தப்படுகிறார். அவ்வகையில் வகைப்படுத்தப்படுவது எவ்வளவு அபாயகரமானது மற்றும் எளிமையானது என்பது குறித்த சிறிய குறுக்கீடுகளின் மூலமாக இது நிகழ்த்தப்படுகிறது. இவ்விஷயங்கள் உலகெங்கிலும் உள்ள சர்வதேச பார்வையாளர்களின் முன்னால் திரையிடல் காணும் உங்களது திரைப்படத்தில் எவ்வாறு பிரயோகிக்கப்பட்டுள்ளது என்பது உணர்வது சுவாரஸ்யமூட்டுவதாகவே இருக்கிறது.

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : ஆமாம். ஆனால், நாங்கள் தொடர்ந்து இத்திரைப்படம் குறித்து முன்மொழியும் ஒரு குறிப்பிட்ட தகவலென்பது இத்திரைப்படம் போல்சொனோரோவை பற்றியது அல்ல என்பதே. ஏனெனில், கடந்த வருட மே மாதத்தில் இத்திரைப்படத்தை நாங்கள் நிறைவு செய்தபோது, போல்சொனோரோ –

தேர்வு செய்திருக்கப்படவில்லை?

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : ஒரு சாத்தியப்பாட்டைதான் ஆராய்ந்திருந்தோம். ஒரு நகைச்சுவை. ஆனால், என்ன நிகழ்ந்திருக்கிறதோ, அது நிகழ்ந்திருக்கிறது என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. மற்றொரு விஷயம் என்னவென்றால், எங்களது திரைப்படத்தை பேரழிவு திரைப்படம், எதிர்கால அசைவியக்கம் குறித்த சாத்தியப்பாட்டை அலசும் திரைப்படம் என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள். ஆனால், திரைப்படத்தில் நாம் பார்க்கும் அனைத்து பிரச்சனைகளும் மிகப் பழமையானவை. அவை தொடர்ந்து தொடர்ந்து நிகழ்ந்துக்கொண்டிருக்கின்றன. அந்த சமூகம் ஒருபோதும் படிப்பினைகளைப் பெறுவதில்லை. உங்களுக்கு தெரியும், நீர் பிரச்சனை என்பது நூறு வருடங்களாக பேசுபொருளாகவே இருக்கிறது. ஊழல், அயலுலகத்தவர்களுக்கு தேசத்தை விற்பது, வன்முறை. ஆமாம், அனைத்துமே பல யுகாந்திரங்களாக மீண்டும் மீண்டும் நடந்துக்கொண்டிருப்பவைதான்.

தேர்தலுக்கு பிறகு, இத்திரைப்படத்தை திரையிடல் காண்பது மேலும் பிரச்சைக்குரியதாக இருக்கும் என்று கருதுகிறீர்களா? அல்லது, பிரேசிலில் வேலை செய்வதே சிக்கலான ஒன்றாக மாறிவிடும் என்று கருதுகிறீர்களா?

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : திரைப்படம் ஆகஸ்டில் வெளிவந்துவிடும். ஆனால், இப்போது முழு திரைத்துறைக்குமே தணிக்கைத் துறை கட்டுபாடுகளை விதித்திருக்கிறது. அதற்கு கூட்டாட்சியின் நிதியுதவி அளிக்கப்படுவதில்லை. இதுவே புதிய முறைமைதான். போல்சொனோரோ அரசு ஏற்படுத்தியிருக்கும் புதிய நடைமுறை இது. அதோடு, அவர் கலாச்சார துறை அமைச்சகத்தையும் முதல் நாளிலேயே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார். அதனால் இது புதிய சவால்தான். இத்தகைய புதிய நடைமுறைகளால் எல்லோருமே பயத்தில்தான் இருக்கிறார்கள். ஏனெனில், படத்தின் முடிவு தங்களுக்கு திருப்திகரமானதாக இல்லையென்றால் இத்தகைய அச்சத்தை எங்களில் கிளர்த்திவிடுவதை அவர்கள் செய்துவருகிறார்கள். மக்கள் வேலை செய்யும் துறையாகக்கூட அவர்கள் திரைத்துறையை கருத்தில் எடுத்துக்கொள்வதில்லை. அதனால் இது முற்றிலும் புதிரான இயக்கமாகத்தான் இருக்கிறது. உண்மையில் இதுதான் பேரழிவு எனப்படுவது. ஏனெனில், ஒருவர் தனக்கு மருந்து பிடிக்கவில்லை என்று முழு மருத்துவத் துறையையே மூடிவிட்டால் எப்படியிருக்கும்? அது ஒரு தவறான வழிமுறையாகும். அவர்கள் அவ்வாறு செய்யக்கூடாது.

திரைப்படத்தில் இருப்பதை நீங்கள் வன்முறை என்பீர்களா? மிகு வன்முறை என்பீர்களா?

எனக்கு தெரியவில்லை. எனக்கு சரியான புரிந்துணர்வு ஏற்படாமல்கூட இருந்திருக்கலாம். ஆனால், நான் இதனை மிகு வன்முறை என்று வரையறை செய்ய மாட்டேன். அதனை வன்முறை என்றே நினைத்தேன். பிரேசிலில் இப்போது நடந்துக்கொண்டிருக்கும் நிகழ்வுகளை பார்க்கும்போது, இவ்வருடத்தில் ரியோவில் காவலர்களால் படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமானது என்று நினைக்கிறேன், திரையில் பார்த்த வன்முறை என்பது அதீதமானது அல்ல.

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : சிலர் இதனை அதீத வன்முறை என்று வரையறை செய்தபோது, எங்களுக்கு ஆச்சர்யமே உருவானது. நாங்களும் இதனை வன்முறை என்றே கருதினோம். அதீத வன்முறையாக அல்ல.

மிகு வன்முறை என்பது யதார்த்தத்தை மீறிய வன்முறை என்கிற அர்த்தத்தை கொடுப்பதாக நினைக்கிறேன். அதனை படத்தில் என்னால் பார்க்க முடியவில்லை. வன்முறை என்பது எப்படி செயல் வடிவம் பெறுகிறது, எவ்வளவு கொடூரமானது என்கிற புரிதல் அற்றவர்களால் பிரயோகிக்கப்படும் பதமாகவே இந்த மிகு வன்முறை என்பதை உணர்கிறேன். இவ்வுணர்வுடன் பார்க்கையில், அமெரிக்கர்களின் அல்லது வட அமெரிக்கர்களின் தென் அமெரிக்காவின் மீதான ஆர்வமிகுதி மற்றும் bacarauவில் காட்சிப்படுத்தப்படுள்ளதைப்போல, இவர்களுக்கிடையிலான சச்சரவுகள் எவ்வாறு கொரில்லா யுத்த வடிவத்தின் தோற்றத்திற்கு வித்திட்டது என்பதற்கு இடையிலான உரையாடல் குறித்து அறிவதில் ஆர்வத்துடன் இருக்கிறேன்.

ஹூலியானோ டோர்னெல்லஸ் : காலம்காலமாக ஒடுக்குகின்றவர்களுக்கும், ஒடுக்கப்படுவர்களுக்கும் இடையில் நிகழும் அதே கதைதான் இதுவும். ஆனால், நாங்கள் வியத்நாம் யுத்தம் குறித்துதான் அதிகம் விவாதித்தபடி இருந்தோம். ஏனெனில், அமெரிக்க படையினர் அப்பகுதிக்கு ஏராளமான பணத்துடனும், தங்களுக்கு சாதகமான சில கணக்குகளுடனும்தான் சென்றார்கள். அந்த நிலவெளியின் கலாச்சாரம் குறித்து அவர்கள் அக்கறைக் கொள்ளவில்லை. அங்கு வாழ்ந்த மனிதர்கள் குறித்து துளி அக்கறையும் அவர்களிடம் இருக்கவில்லை.

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : புவியியல்.

ஹூலியானோ டோர்னெல்லஸ் : புவியியல்.. அங்கு அனைத்தும் அவர்களது திட்டத்திற்கு எதிர்மறையாக நிகழ்ந்து முடிந்தது.

க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ : அவர்கள் தோல்வியுடன் திரும்பி வந்தார்கள். வியத்நாமிய போரை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட அற்புதமான திரைப்படங்களில் சில மேலெழுப்பட்ட விழுமியங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வார்த்தையாக அவை மேலெழுப்பட்டன. உதாரணத்திற்கு, சாலையோரத்தில் இரத்தத்தால் தோய்த்தெடுக்கப்பட்ட உடைகளை பார்க்க நேர்கையில் உடனடியாக அவர்கள் அதிருப்தியுடன், “காட்டுமிராண்டிகள்” என்று குரலெழுப்புவார்கள். இது Apocalypse Now திரைப்படத்தில் வருகிறது. அவர்கள் ஒரு அமைதி நிலவும் கடற்கரையின் மீது தாக்குதலை நடத்துகிறார்கள். ஏனெனில், அவ்விடம் நீர் சறுக்கு விளையாடுவதற்கு உகந்ததாக இருக்கிறது. அவர்களது படைத் தளபதிக்கு நீர் சறுக்கு விளையாட்டின் மீது பெரும் விருப்பம் இருக்கிறது. அந்த தாக்குதல் நிகழும்போது, கிட்டதட்ட அந்த கிராமத்தையே மயானத்தைப்போல பேரமைதியில் ஆழ்த்தும் வெறியில் இறங்கி வேலை செய்யும் முனைப்பில் ஈடுப்பட்டிருக்கும்போது, அதற்கான எதிர்வினையாக அந்த கிராமத்தில் இருக்கும் சிறிய பீரங்கி ஒன்று அவர்களது ஹெலிகாப்டரில் ஒன்றை சுட்டு வீழ்த்துகிறது. உடனடியாக, அந்த படைத் தளபதி, ராபர்ட் டூவெல் கதாப்பாத்திரம் அந்த கிராமவாசிகளைப் பார்த்துச் சொல்கிறது, “காட்டுமிராண்டிகள்” என்று.

பிற படைப்புகள்

Leave a Comment