க.மோகனரங்கன் கவிதைகள்

by olaichuvadi
வேறொன்றுமில்லை
நீங்கள்
இவ்வளவு வெறுப்பதற்கு முன்னால்
அவ்வளவு நேசித்திருக்க வேண்டும்.
நீங்கள்
இப்படி அழுவதற்கு முன்னால்
அப்படி சிரித்திருக்க வேண்டும்.
ஒட்டுறவு
பூத்ததும்
பூரித்து நின்றது.
காய்த்த போது
புளிப்பை குறித்து
குறை பட்டுக்கொண்டது.
கனிந்த பிறகோ
இனிப்பைப் பற்றிய நினைப்பும்
இல்லாதொழிந்தது.
முற்றி உலர்ந்த
புளியம்பழத்திற்கு
ஓட்டுடன்
ஒட்டு எவ்வளவு இல்லையோ
உறவு அவ்வளவு உண்டு.
 மலைப்பு
நான் பிறந்ததிலிருந்து
அந்த மலையை பார்த்து வந்திருக்கிறேன்
அசங்காமல்
அப்படியே இருக்கிறது.
அசையாமலிருக்கும்
அம்மலையைப்
பார்த்தவாறு இருந்த பலரும்
ஒருவர் பின் ஒருவராய்
ஓசையின்றி இறந்துபோக
அதையும் சேர்த்துதான்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
எல்லோரையும் போல
இல்லாமல் நானும் போவேன்
அப்போதும் கூட இம்மலை
அலட்சியமாகவே நிலைத்திருக்கும்
அதிலொன்றும் அய்யமில்லை.
அதை எண்ணும் போதுதான்
அடிவாரத்திலொரு
வெடியை பொருத்தி வைத்து
அடியோடு இடிந்து
அது சரிவதைக் காணவேண்டும்
என்கிற விபரீத ஆசை எழுகிறது.
அபோத கணமதில்
அசங்காத மலையை
அற்பனென் அகங்காரம்
அசைத்துப் பார்க்கிறது.

பிற படைப்புகள்

Leave a Comment