தமிழ்க்கவிதை இன்று உள்ளது போல இத்தனை மையமற்ற தன்மையும், எல்லையற்ற சுதந்திரமும் முன்னெப்போதும் கொண்டிருந்திருக்குமா என்பது சந்தேகமே. எந்த சாராம்சத்திலும் கோடிட்டுவிட முடியாத, ஒற்றை முகமற்ற ஒரு பல்லுடலியாக இன்றைய கவிதை களிப்படைந்துள்ளது. நவீன கவிதை என்ற குறிப்பீடுகூட கொஞ்சம் பழமையடைந்துவிட்ட நிலையில், இன்றைய கவிதை எழுத்து, சிற்றிதழில் உருவாகிவந்த ஒரு நவீன எழுத்து நினைவின் அழுத்தத்திலிருந்து அல்லது நேற்றைய வரலாற்றிலிருந்து துண்டிப்படைந்துவிட்ட ஒரு விளையாட்டு வெளிக்கு வந்துவிட்டது. அதன் நல்லூழையும் தீயூழையும் அது புகுந்துசெல்ல வேண்டும். ஆனால் இலக்கிய அதிகாரங்கள் சார்ந்த, செல்நெறிகள் சார்ந்த எந்த பெருங்கரத்தின் நிழலும் இன்றைய கவிதைமேல் படிந்திருக்கவில்லை. எல்லையற்ற ஒரு ஜனநாயகத்தன்மையை வசப்படுத்தியதே இன்றைய கவிதையின் அடிப்படையாக இருக்கிறது. எழுத்து என்ற, மொழி என்ற அதிகார மையம்தகர்ந்து, ஆயிரம் நாவுகள் ஆயிரம் வரலாறுகளை பேசத்தொடங்கிவிட்ட இந்தப் புதிய காலத்தின் வருகைதான் ‘அம்பட்டன் கலயம்’.
பச்சோந்தியின் கவிதைகள் கிராமம்-நகரம் என்ற எதிர்வின் வழியாகத் தன் பால்ய நிலத்தை- குடும்பம் – நிலம் – உழைப்பு- அதன் இயற்கைப் பருவங்கள்- ஞாபகங்கள் இவற்றினூடாக தன் பிறப்பிடத்திற்கும் பிழைப்பிடத்திற்கும் இடையில் அலைக்கழியும் குரலாகத்தான் முதல் தொகுப்பில் அறிமுகம். ஆனால் தொடர்ந்து, விடாது கடைசிப் பேருந்துகளிலும், முன்பதிவற்ற ரயில்பெட்டிகளிலும் ஏறி இறங்கும் அவரது அலைச்சல்களும், தீவிர வாசிப்புமான வழியில் தன் பால்ய நிலம், கிராமம் என்ற பிராந்தியம் கடந்த அதன் உலகத் தன்மையிலான நுட்பமான வரலாறுகளோடு, அரசியல், பண்பாடு சார்ந்த நுண்மையான கவித்துவ அறிதல்களுடன் தன் மொழியை அவர் சுதந்திரமாக விஸ்தரிக்க முடிந்துள்ளது. மூலதனக் குவிப்புகளின் வாழ்வாதாரப் புதைமண்டலங்களின் மேல் அதி நவீனமடைந்து வரும் ஒரு உலகில், தன் உயிர்வேட்கை மிக்க வாழ்வை, நிலத்தோடும் – பருவங்களோடும்- கால் நடைகளோடும், சிற்றுயிர்களோடும் பிளவுபடாத தன் மூதாதையர் – தாய் – தந்தை என, வளவளப்பான இளம் மாட்டிறைச்சித் துண்டுங்களால் ஆன மிகப் பூர்வீகமான தன் உடலை, அதன் வேறு மரபை அவர் தீவிரமாக இக்கவிதைகளில் முன்வைத்துள்ளார்.
இந்தக் கவிதைகளில் செயல்படும் ஒரு வித அசாதாரணமான இயல்புத்தன்மை மற்றும் வெகுளிக்குணம் என்பது நவீன எழுத்து வெளியில் ஒரு புறனடைதான். நவீன கவிதையானது தத்துவம், வரலாறு, அறிவியல் இன்னபிற அறிவுத்துறைகளுடன் ஊடாடி அடைந்த சமத்காரங்களுக்கும், அதன் அறிபுலங்களுக்கும் வெளியேதான் இக்கவிதைகள் இயங்குகின்றன. வாழ்தலே அறம், வாழ்தலே சித்தாந்தம், பசித்தலும், உழைத்தலும், படைத்தலும், துய்த்தலும் எனத் தன் உயிர்ச்சூழமைவிலிருந்து பிளவுபடாத மனித உயிரின் இயல்பூக்கங்களையே தன் எளிய கனவுகளாவும் கொண்டாட்டமாகவும் உருமாற்றுகிறார் பச்சோந்தி. இக்கவிதைகளை இயக்கும் ஞானம் என்பது நவீனத்துவ அறிமுறைகள் கடந்த அவரது வழக்காறுகளும் பண்பாட்டு உடலும் நிலமுமான நுண்மைகளிலிருந்து எழுவன. சமகால கவிமொழியில் இத்தனை நேர்த்தன்மையோடும் பாவனையற்றும் திறந்துவைக்கப்பட்ட இக்கவிதைகள் அதன் இயல்புத்தன்மையிலேயே தனித்துவமடைந்துவிடுகின்றன.
இவற்றில் நிலமே ஒரு ஆதார படிமமாகிறது. அது மனிதர்கள், தாவரங்கள், பூச்சிகள், சிற்றுயிர்கள், காலநிலைகள், பராமரிப்பு விலங்குகள் என ஒரு வாழ்வியக்கப் பிணைப்பின் உயிர்வெளி. இந்த நிலம் தான் பச்சோந்தியின் மனமாகவும் உடலாகவும் வரலாறாகவும் அவர் தன் நினைவில் தூக்கி அலையும் வீடாகவும் இருக்கிறது. கரந்த மலை, கரியான் குளம், கரந்தை பூக்கள் சூழந்த அம்பட்டன் குளம் இவற்றிலிருந்தும் அதன் உயிர்த் தொகுதியிலிருந்தும், ஒரு விளிம்பு நிலை வேளாண் சிறுகுடிக்கும் வேட்டைக்குடி மனோநிலைக்கும் இடையில் பிளவுறும் ஒரு சரித்திரப் பாதையில் தொல்குடிச் சடங்கார்த்தமும் கொண்டாட்டமாக அந்த உணவுத் தேடலும் தன்னிருப்பும் நிலைகொள்கிறது.
அண்மைத் தமிழில் ருசியை, நா என்னும் தொல்புலனின் வேட்கையை இத்தனை தீவிரத்துடன் பேசியது பச்சோந்தியினுடையதாகத்தான் இருக்கும். இக்கவிதைகளின் அடிவயிற்றில் பசிதான் சுடராக எரிகிறது. மஞ்சளும், சோம்பும், மிளகும் மணக்கும் கலத்தில் பதமுறும் மாடுக்கறியை வெய்யிலும் பனியும் இன்னபிற இயற்கைக் கூறுகளும் கவிஞனின் நாவிற்கும், உயிர்விசை உடற்றும் குடலுக்கும் பதமாக வாட்டுகின்றன. தந்தையின் அவயங்களே உழுகருவிகளாக, அங்கே தன் வயிற்றின் கணபரிமாணங்களை விட சிறியதான ஒரு நிலத்தில் மொச்சையும், காராமணியும், துவரையும் வளர்கின்றன. அங்கே மயில்கள் வந்து இறங்கும் கவித்துவப் படிமம் உண்டு. பசி என்னும் ஆதார உயிர் விசைதான் நிறமேறிய சொற்களாக, ஈர்ப்பு விசைக்கு மேலெழுப்பும் சிறகுகளாக இக்கவிதைகளில் வடிவம்கொள்கின்றன. எதிர் வீட்டுக் கூரை மேல் தோன்றும் மஞ்சள் நிலவும் பொரிந்த அப்பளமாகவே இருக்கிறது. அறுத்த ஆட்டுக் கால்களை மயிர் பொசுக்கி, வெந்நீரில் சாறெடுத்து , அலுமினியக் கலத்தில் உறிஞ்சும் ஓசை ஆடு நீராகரம் உண்ணும் ஓசையாகவும் உள்ளது. பச்சோந்தி உயிர்களை நேசிப்பவன், அவைதான் அவனது பசியை ஆரோக்கியமாக்குகின்றன.
பச்சோந்தியின் கவிதைகள் எல்லாமே நிலப்பரப்பு என்ற ஞாபகப்புலத்தில்தான் இயங்குகின்றன. ஆனால் அது மனிதமைய நிலம் அல்ல. பலவிதமான சிற்றுயிர்களும், சிறிய செடிகளும், பூக்களும் பச்சோந்தியின் கவிதைகளில் ஒரு உயிர்ச்சூழமைவின் பெருவெளியை அமைக்கின்றன. ஒரு பெரிய கித்தானில் மனிதர்களும் சில புள்ளிகளாக தெரிகிறார்கள். குறிப்பாக அவரது நிலப்பரப்பில் வரும் அறிமுகமற்ற தாவர இனங்கள், சிறு பூக்கள் யாவும் பொது நினைவிலோ மனிதவய பயன்பாட்டு நிலையிலோ இல்லாதவை. அந்தக் கவிதைகளை ஒரு நவீன பிரக்ஞை சார்ந்து சூழலியல் கவிதைகள் என்று கடந்து விட முடியாது. அது நவீன அறவியல் பிரக்ஞைக்கு எதிரான திசையில் வேறொரு அழகியலுடன் அமனிதமான ஒரு பிரக்ஞையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
காற்றும் பருவங்களும் அலைக்கழிக்கும் நிலத்தில் விட்டேத்தியாக உதிர்ந்து கிடக்கும் அந்த மூங்கில் அரிசிதான் பச்சோந்தி. அந்த மூங்கில் அரிசியின் உதிரித் தன்மையும் அனாதைத்தன்மையும் உறுதியான தன்னிருப்பும்தான் அவன். அவனது கவிதையில் காய்ந்த மூங்கில்கள் அசைகின்றன. அது காய்ப்பேறிய தன் தந்தையின் உடலாகவும் இருக்கிறது. காய்ந்த விறகுகளும் தன் தந்தையின் கரங்களும் வெவ்வேறானவை அல்ல. அம்மாவின் காதணிகள்தான் கற்றாழைப் பூக்களாகி ஆடுகின்றன. உயர்ந்து ஊடுருவிய பனைதான் தன் மூதாதைகளுக்கான பச்சோந்தியின் மனத் தொன்மம். கரந்த மலையின் சிறுகுடிதான் அவனது தாய். ‘தான்’ என்ற சுயமே பச்சோந்திக்குத் தன் குடும்பப் பிணைப்பும் நிலமாக விரிந்து சூழம் திணைக் கூறுகளும்தான் இருக்கின்றன. இந்த கவிதைகளின் வெளிப்பாட்டு முறையிலேயே காட்சிவயமாக, புறநிலையான புனைவுமுறை இயல்பு உள்ளது. பல கவிதைகள் ஒரு விவரணத்தளத்திலேயே கவிதையின் அறிநெறிகளை எய்திடும் அசாத்தியம் கொண்டுவிடுகின்றன. இக்கவிதைகளின் தன்னிலை, சுயம் என்பதே புறவெளியோடும் எல்லா மற்றமைகளோடும் சிதறடித்துக் கொண்டும் அவற்றையே தன் சுயமாக மறு ஆக்கம் செய்துகொண்டும் இருப்பதாகத்தான் நிகழ்கிறது.
பச்சோந்தியின் பெருநகரம் என்பது அதன் விளிம்புகளில் இருந்தே தொடங்குகிறது. அகாலத்தில் உறைந்து கிடக்கும் புறநகரப் பேருந்து நிலையங்களின் அனாதைத் தன்மையும், அங்குற்ற உதிரி வாழ்நிலைகளும், சிறுநீர்நெடி ஏறிய முன்பதிவற்ற ரயில் பெட்டிகளும் தான் அவரது பெருநகரச்சித்திரமாக இருக்கிறது. ஊர்த்திரும்பலும், ஊர் நீங்கி வருதலுமான அலைக்கழிதலில் பெருநகரம் அவரது காலடியில் எப்போதும் நகர்ந்துகொண்டே இருக்கிறது. வீடுகளுக்கிடையே கூவத்தின் கரைகளில் வளரும் முருங்கையும் மல்லிக் கொடிகளும், வெங்காயத் தாமரைகளுக்கும் தெர்மகோல் குப்பைகளுக்கு மேல் திரியும் மைனாக்களும் தான் அவர் தேடி அடையும் பெருநகர நிலம். மேம்பால இடுக்கில் தன் உயிர்ப்பெருக்கம் நாடும் காக்கை கூடு அவரது பெருநகர வானம். வாகனங்களை, மனிதர்களை ஸ்தம்பிக்க வைத்து பின் விடுவித்தும் விடும் சிக்னல் முனையங்களை அவர் கவிதைக்குள் கொண்டு வரும் போது நகரத்தின் அடையாளமற்ற சின்ன விடுதலை வெளியும் அதில் சொல்லப்படுகிறது.
கிராமம் – நகரம் என்ற பௌதிகத்தன்மை கடந்த ஒரு நினைவார்த்தமான அகநிலம் பச்சோந்தியிடம் எப்போதும் இருக்கிறது. அணு உலைகளும், ஆலைகளும், பெருந்திட்டங்களுமாக வாழ்வாதாரப் புதைகுழிகளாக மாறிக்கொண்டிருக்கும் உலகில், தன் மூதாதைகளின் வலுவான உழைப்பும் வழக்காறுகளும், நிலப்பரப்பும், உயிர்களும், சுழலும் பருவங்களாலும் ஆன தன் வீட்டை எங்கும் இறக்கி வைக்க முடியாமல் அதன் காட்டுக் குருவிகளோடு காட்டுப் பூச்சிகளோடு காட்டுக் காற்றோடு தன் கவிதைகளிலேயே ஏந்தித் திரிகிறார். அருகில் உள்ள நிவாரண முகாமுக்காவது சென்று ஏதாவது கிடைக்கிறதா என பார்த்து வரலாமே என கவிஞனால் கேட்கப்படும், கடற்கரை மணலின் ஈரத்தில் சுருண்டிருக்கும் பசித்த நாயும், கடலும் ஏகாமல் கரையும் சேராமல் களிமண்துண்டுகளாக உடைந்து கிடக்கும் கடவுளும், அவர் கவிதையில் வெவ்வேறானவர்கள் இல்லை.
அழிந்துகொண்டிருக்கும் நிலங்களையும், கைவிடப்பட்ட மனிதர்களையும் கவிதையின் ஆவி மீண்டும் மீண்டும் சுற்றி வருகிறது. விதைகளற்ற கூடையின் வெறுமையை அதுதான் ஒரு பைத்தியத்தன்மையில் நிலத்தில் அள்ளி வீசுகிறது. நிலம் ஒரு பாவனையாக மீண்டும் மீண்டும் நிகழ்த்திப் பார்க்கப்படுகிறது. எவெரென்றில்லாத அனாதை ரத்தத்தையும் இறந்து ஊர்வலம் வரும் வீதிகளையும் இக்கவிதைகள் பேசுகின்றன. அலையாத்திக் காடுகளின் மரண வாசத்தை அறிவிக்கும், விண்ணோக்கியும் மண்ணோக்கியும் நிலைகுத்தியிருக்கும் செத்த மானின் கொம்புகள், பேரழிவு தொடங்கிவிட்ட உலகிற்கான மையப் படிமமாக மாறிக்கொண்டிருக்கிறது.
துப்பாக்கியில் நிரப்பப்படும் தோட்டாக்களுக்கு முன் முதிய தாயின் அடர்ந்த கண்ணீரை வைக்கிறார். அவரது தொன்மையான உழுகருவிகளான உலக்கைகள், அரிவாள்கள், தொரட்டிகள், மண்வெட்டிகள், கடப்பாரைகளுடன் வெவ்வேறாகாத மூதாதையின் கை கால்களும் எப்போதும் ஆயுதங்களாக உருமாறிவிடும் விளிம்பில் தான் நிறுத்தப்பட்டுள்ளன.
மனிதர்கள் மீதும், நிலங்கள் மீதும், வாழ்வாதாரங்கள் மீதும் தொடர்ந்து நிகழும் ஒவ்வொரு தாக்குதல்களிலும், சமகாலத்தின் ஒரு தீவிர உடலாகி பச்சோந்தியின் கவிதைகள் ஓலமிடுகின்றன. ஆணவக் கொலைகளின் ரயில் சக்கரங்களின் தடதடக்கும் தீ நிழல்களில் அவை பாய்ந்து சரிகின்றன. இந்நூற்றாண்டில் நிகழும் எந்த ஒரு மரணமும் இயற்கையனது அல்ல என்பதை கஜா போன்ற பேரிடர்கள், தூத்துக்குடிப் போன்ற அரச பயங்கரவாதங்கள் யாவற்றின் புதைகுழிகளுக்குள்ளும் இருந்து பிரேதங்களையும் உண்மைகளையும் அவை புரட்டிப் புரட்டிப் பார்க்கின்றன. செத்த நிலம் என்பது ஒரு பிரம்மாண்டமான பேருயிரின் சிதைந்து அழுகும் சவக்கூடாகவே உள்ளது.
தான் விரும்பி உண்ணும் சாரம் மிக்க, சதைப்பத்தான மாட்டுக்கறித் துண்டங்களை போன்றே எடையுள்ள சொற்களை இத்தொகுப்பின் மூலம் காலத்திடம் விட்டிருக்கிறார் பச்சோந்தி. ஒரே புயல் ஓராயிரம் முறை சுழன்றடிப்பதையும், ஒரே மீன் ஒராயிரம் முறை செத்து மிதப்பதையும், ஒரே மான் ஒராயிரம் முறை ரத்தம் கக்குவதையும், ஒரே மின்கம்பம் ஒராயிரம் முறை உடைந்து சரிவதையும், ஒரே மனிதன் மீண்டும் மீண்டும் தற்கொலை புரிவதையும் , ஒரே துயரம் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுதலின் ஆற்றாமையை எல்லோருக்குமான ஒப்பாரியாக ஓலமாக மாற்றி இந்தப் பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான சுய மரணத்தை தன் சொற்களில் சாட்சி செய்கிறார் பச்சோந்தி.
1 comment
ஒரு சிறு தொகுப்பை வைத்து இந்தளவுக்கு ஆழமாக விவரிக்கமுடியுமா என வியப்பாக உள்ளது.