தமிழ்ச் சிறுகதைகளில் புலம்பெயர்ந்தோர் நிலை – 3
சு. வேணுகோபால்

by olaichuvadi

(7)

அகதிகளாக, வேலைநிமித்தமாக குடியேறியவர்கள் வாழ்க்கை முறையில் புதிய சிக்கல்களைச் சந்திக்கின்றனர். அறமதிப்பீடுகளும் பண்பாட்டு மதிப்புகளும் காலாவதியாகப் போகின்றன. ஒரு வகையான திகைப்பு கூட ஏற்படுகிறது. வெளிநாட்டில் எதுபற்றியும் கவலைப்படாமல் ஓட வேண்டியதிருக்கிறது. ஆனால் அப்படி கவலைப்படாமல் தமிழர்களால் இருக்க முடிவதில்லை.
மூன்று வயது ஐந்து வயது குழந்தைகளையும் மனைவியையும் விட்டுப் பிரிந்து மூன்று மாத காலம் வள்ளத்திலும், ரயிலிலும், கண்டயினர் லாரிகளிலும், விமானங்களிலும் மாறி மாறி பல சோதனைகளைக் கடந்து கனடாவிற்குத் தஞ்சமாக வருகிறான் சண்முகம் கணேசரத்னம். அவனுடைய சகலையும் கொழுந்தியும் அவனுக்கு பாதுகாப்புத் தருகின்றனர். அகதிக்கு விண்ணப்பிக்கச் செய்கின்றனர். அவர்கள் தங்கள் வீட்டிலேயே ஒரு அறையை வாடகைக்குத் தருகின்றனர். அங்கிருந்து உணவு விடுதிக்கு, தட்டு கழுவும் வேலைக்குப் போகிறான். சம்பளத்தில் மாதா மாதம் சீட்டுப் போடும்படி செய்கின்றனர். சகலையும் கொழுந்தியும் அவர்களும் வேலைக்குச் செல்கின்றனர். அவர்களின் மகள் சிறியவள் என்றாலும் எல்லா அந்தரங்களையும் ஒளிந்திருந்து கண்டுபிடிப்பது மட்டுமல்லாமல் போட்டுத் தந்துவிடும் குணம் கொண்டவள். அப்பா எங்கே போகிறார், அம்மா பொய் சொல்லிவிட்டு எங்கே போகிறாள் என்பதை ரிசீவ்டு காலுக்குள் நுழைந்து கண்டுபிடித்து விடுபவள்.
அவள் எப்போதும் இந்த சண்முகம் பெரியப்பாவை குழந்தைகள் விளையாடும் விளையாட்டுக்கு அழைத்து தொந்தரவு படுத்துகிறவள். இவரும் வேறு வழியில்லாமல் விளையாடுவார். ஒருநாள் அம்மா பக்கத்து வீட்டு பெண்ணிடம் பேசப்போகிறாள். இவள் ‘கொழுத்தாடு பிடிப்பவன்’ விளையாட்டை விளையாட அழைக்கிறாள். இவர் கொழுத்தாடு பிடிப்பேன் என்று சொல்லி விரட்ட அவள் கொள்ளியாலே சுடுவேன் என்று கட்டிலைச் சுற்றி ஓடுகிறாள். விளையாட்டு மும்முரத்தில் அவளின் கால் உடுப்பு நழுவி மெத்தையில் விழுகிறது. கால் உடுப்பு இல்லாமல் ஜட்டியில் அங்கும் இங்கும் ஓடும்போது சகலையன் திடுக்கென்று உள்ளே நுழைந்து விபரீதம் நடப்பதாகக் கூறி சண்முகத்தை அடிக்கிறான். ரத்தம் கொட்டக் கொட்ட 911க்கு அழைத்து காவலரிடம் பிடித்துத் தருகிறான். குடும்பத்திற்காகத் தப்பி இங்கு வந்தவன் சிறையில் சிக்கி மீள முடியாது தவிக்கிறான். அகதி அனுமதி கிடைக்கும் சமயத்தில் இது நடக்கிறது. திட்டமிட்டு வீழ்த்துகின்றனர். கொழுந்தி இடையில் உடல்ரீதியான இன்பத்தையும் கொடுத்தவள். அவன் சீட்டு கட்டிய பணம் ஆறாயிரம் டாலரை அமுக்கிக்கொண்டு சிறையில் தள்ளுகின்றனர். தஞ்சம் பிழைக்க வந்தவர்களை இம்மாதிரி வலைகளில் வீழ்த்தி சிக்கவைத்து சுகபோகத்தில் வாழும் வழிமுறைகளையும் கைக்கொள்கின்றனர்.

போப்புவின் சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட கதை ஒன்று. வேலை நிமித்தமாக கணவன் – மனைவி இரு நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். அவர்கள் வாரத்தில் ஒருமுறை சந்தித்துக் கொள்கின்றனர். குழந்தைகளைக் காப்பகத்தில் விட்டு விடுகின்றனர். மெயிலில் சின்ன சின்ன சண்டைபோட்டுக் கொள்கின்றனர். ப்ரிட்ஜில் உள்ள பொருட்கள், வாங்க வேண்டிய பொருட்கள், சென்ற வாரம் சமைத்த உணவுகளில் பிடித்தவை, பிடிக்காதவை, கம்பெனி தரும் மனஅழுத்தங்கள், சம்பளப் பிரச்சனை, வேலைபளு, வேறு கம்பெனிக்கு கீழ்நிலை ஊழியனாக போய்விடலாம் என்ற நெருக்கடி என பரிமாறிக் கொள்கின்றனர். சந்திக்கும் ஒரு நாளிலும் பீர் குடிப்பதற்கான சந்திப்புகள், இலக்கிய அரட்டை என போய்விடும் கணவனுக்கு குழந்தை மீது மனைவி மீது அக்கறையற்று இருப்பது குறித்து மெயிலில் விமர்சனம் செய்கிறாள். ஆணாதிக்கப் போக்கைச் சுட்டிக்காட்டுகிறாள். சிலசமயம் சமாதானம் கொள்கின்றனர் கடிதங்களில். எப்படியாயினும் குடும்பத்தில் ஆணாதிக்கம் இருப்பதை இக்கதை சுட்டுகிறது. குடும்பம் மெயிலில் வாழும்படியாக மாறி விட்டதையும் சொல்கிறது.
கனடாவில் தமிழர் பண்பாட்டைப் பேண தலைவாழை இலை போட்டு சாப்பாடு பரிமாறுகிறார்கள். வீட்டில் செய்தல்ல. உணவு விடுதியிலிருந்து பெற்று. தமிழர் முறைப்படி திருமணமும் நடக்கிறது. முகவர் மூலம் மணப்பெண்ணை தேடிப் பிடிக்கின்றனர். பிளாஸ்டிக் வாழைமரம், பிளாஸ்டிக் மாவிலைத் தோரணம், பிளாஸ்டிக் மூங்கில் குருத்து கட்டுகிறார்கள். இந்தப் பொருள்களோடு அசல் நாயனக்காரர்கள் பால், ரொட்டி, பயத்தப் பணியாரம் சேர்ந்து கொள்கிறது.

ஆங்கிலம் தெரியாது தமிழ் மட்டுமே தெரிந்த சில தமிழ்ப் பெண்கள் திருமணமாகி, மேற்கத்திய உலகில் கால் வைத்ததும் இந்த உலகின் கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு விடுகின்றனர். இங்கு வந்த பெண்ணின் குதிகால் வெடிப்பில் புகுந்திருந்த செம்பாட்டு மண் முற்றிலும் மறைவதற்கு ஆறுவாரம் கூட எடுக்கலாம். பெண் அடியோடு மாறுவதற்கு ஆறுவாரம் எடுப்பதில்லை என்பது போல மாறி விடுகின்றனர். சீலையை நிராகரித்து லீவாய்; ஜீன்சும், வாசகம் எழுதிய டீசர்ட்டும் காதை தொடும் குட்டை மயிருமாக மாறிப் போகின்றனர். ஒரு கொலம்பிய பெண்ணாகவோ, கொஸ்டாரிக்கன் பெண்ணாகவோ காட்டிக்கொள்ள விரும்புகின்றனர்.

அ.முத்துலிங்கத்தின் ‘ஐந்தாவது கதிரை’ கதையில் சிறு சோபாசெட் வாங்குவதில் கணவனுக்கும் மனைவிக்கும் பிணக்கு ஏற்படுகிறது. இருவருக்கும் இடையிலான மோக உறவு விலகிப் போகிறது. அதற்காக ஏங்கவும் செய்கிறார்கள். சைனாக்காரன் நடைபாதையில் பலருக்கு விதவிதமான வடிவில் உடலின் மேல் டிசைன் வரைகிறான். பெண்கள் நின்று பார்த்து விட்டுச் செல்கின்றனர். இவனது மனைவி வேலைக்குச் செல்ல ஆரம்பித்தப்பின் இவனைப் பெரிதுபடுத்துவதில்லை. ‘பாலே’ நடனத்திற்கும் போகிறாள். இவனது பதினாறு வயது மகளைப் பார்த்து உன் தங்கையா என்று ஒருவன் கேட்டதிலிருந்து பூரித்துப் போகிறாள். கணவன் உறவிற்காக நெருங்குகிறான். அவளது மார்பகங்களைத் தொட நினைக்கிறான். முதலில் மறுக்கிறாள். அதையும் மீறி பார்க்க முயல்கிறான். இரு மார்பகங்களிலும் சைனாக்காரன் வரைந்த டிராகன்; வாயை ஆவென்று விரித்துக்கொண்டு உறுமுகின்றன. பிறன்மனை நோக்கா பேராண்மை என்ற தமிழ்ப் பண்பாடெல்லாம் தவுடு பொடியாகிறது. புலம் பெயர்ந்த நாடுகளில் இதுபோன்ற நாகரிக மாற்றம் தடுக்க முடியாத காலத்தின் நகர்வாக இணைந்து கொள்கிறது. கீழை நாடுகளில் பெண்ணை ஆண்கள் அமரும் இருக்கையாகப் பயன்படுத்திய காலம் போய் பெண்கள் ஆண்களை இருக்கைகளாக அமரும் இடமாகச் செய்யும் காலம் வந்து விட்டதையும் சொல்கிறது.

‘பூமாதேவி’ என்றொரு கதை. இதுவும் முத்துலிங்கம் எழுதியதுதான். யாழ்ப்பாணத்திலிருந்து கனடா வந்தவர் ஒரு கம்பெனியில் வேலைவாய்ப்பைப் பெறுகிறார். அந்தக் கம்பெனிக்கு அருகில் குடியேறுகிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் துணிகளை சலவைகளுக்கு எடுத்துச் செல்லும் போது மகளையும் அழைத்துச் செல்கிறார். பெரும்பாலும் இவர்கள் செல்லும் நாளில் ஒரு குறிப்பிட்ட மெஷின் ஓய்வாக இருக்கும். அதற்கு வாடகை சற்று குறைவு. அத்தோடு மாசு அதிகம் உண்டாக்காதது. அங்கே துணிகளைப் போட்டுவிட்டு சற்றுதூரத்தில் எக்ஸிம் 241வது கடையில் டோநட்டும் காப்பியும் சாப்பிடுவார்கள். அது ருசியாக இருக்கும். மகளுக்கு இந்த இடம் ரொம்ப பிடிக்கும். அந்த சலவை இயந்திரம் பூமியை அதிகம் மாசு படுத்தாத ஒன்று என்பதால் அதற்கு இருவரும் ‘பூமாதேவி’ என்று பெயரிட்டு அழைக்கின்றனர். மகளுக்கும் அவருக்கும் அப்படியொரு அன்யோன்யம் அந்த சலவைக்கடை பகுதிமீது. அங்கிருக்கும் மிஷினில் காசைப் போட்டு இனிப்பை எடுத்து தின்பதற்காகவே வருவாள். அப்படியொரு பிரியம் தந்த இடம் அது. பணி நிமித்தமாக பல்வேறு இடங்களுக்கு மாறிப் போகின்றனர். மகள் வளர்ந்து வேலைவாய்ப்பையும் பெறுகிறாள். இப்போது இவரது மகள் நியூஜெர்சியிலிருந்து ஒகஸ்டாவுக்குப் போக அப்பாவை உடன் அழைக்கிறாள். அவர் நியூயார்க்கிலிருந்து நியூஜெர்சிக்கு மகளிடம் வருகிறார். பயணத்தின் நோக்கம் மகளின் பாய்பிரண்டின் பிறந்த நாளில் கலந்து கொள்வதற்கு. சிறுவயதில் வாழ்ந்த வாழ்க்கையை மறக்கக் கூடாது என்பார் அப்பா. மகள் அந்த வகையில் நண்பர்களை நேசிக்கிறாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் மகளுக்கு.

இந்தப் பயணத்தில் இவர் முதன்முதல் குடியிருந்த ஊரின் வழியாக செல்லும் வாய்ப்பு அமைகிறது. அது அவருக்கு சந்தோசம் அளிக்கிறது. டோநட் சாப்பிடும் கடை, சலவைக்கடை எல்லாம் மகளுக்குக் காட்டி அவளின் சிறு பிராயத்து மகிழ்வான காலத்தை நினைவூட்டிவிட நினைக்கிறார். அந்த இடத்தில் நிறுத்தி டோநட்டும் காப்பியும் சாப்பிட நினைக்கிறார். அந்த இடம் பற்றிய விழிப்புணர்வோடு பார்த்துக்கொண்டே வருகிறார். இடம் வரவும் எக்ஸிம் 241 என்று கத்துகிறார். கார் ரொம்ப வேகத்தில் வெகுதூரம் போய் விடுகிறது. அங்கு சாப்பிட்ட சூடான காப்பி, மகள் பொய்க்கோபப்பட்ட விதம் என பழைய நினைவுகள் எல்லாம் வருகிறது. மகளுக்கு அந்த நினைவே இல்லை. சலவைக்கடை கழிவுநீர், பூமாதேவி எதுவுமே நினைவில் இல்லை. அவள் இசையில் மூழ்கியபடி வேகமாக ஓட்டுகிறாள். ‘அங்கே பார் பூமாதேவி’ என்கிறார். மகள் திரும்பவில்லை. அவளுக்கு அது அர்த்தமாகவில்லை. “என்னப்பா பூமாதேவி?  என்கிறாள். அவளுடைய உள்ளத்தில் அது பற்றியெல்லாம் எந்தவித அக்கறையும் இல்லை. அவள் சிறுவயதில் வாழ்ந்த சுற்றுப்புறம் முக்கியமாகப்படவில்லை. இவள் பழைய தலைமுறையல்ல. புதிய தலைமுறை. முழுக்க கனடியனாக மாறிய தலைமுறை என்பது தெளிவாகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு குடியேறிய முதல் தலைமுறையினருக்கு யாழ்ப்பாணம் மறக்க முடியாத ஊராக இருக்கிறது. அது பூமாதேவி. மகளுக்கு வாழ்ந்த இடம் பற்றிய அக்கறை கூட இல்லை. பின் எப்படி அப்பா வாழ்ந்த யாழ்ப்பாணம் நினைவிற்கு வரும். அப்பாவிற்கு இங்கு குடிவந்து நடந்த தெரு, குடித்த காப்பி, துணி உலர்த்திய இடம் எல்லாம் மகத்துவமான நினைவாக மலர்கிறது. மகளுக்கு இது முக்கியத்துமே இல்லாமல் நினைவிலிருந்து மறைகிறது. தான் வாழ்ந்த இடமே முக்கியத்துவம் இல்லாமல் போகும்போது. தன் தாய் தந்தையரின் பூமி எப்படி அவர்களுக்கு முக்கியத்துவமாகப் படும் என்பதைச் சொல்கிறது. புதிய தலைமுறை அந்தந்த பருவங்களைக் கூட கழற்றி விட்டுக்கொண்டே வளர்கின்றனர். அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. எதிர்காலம் ஒன்றே குறிக்கோள். அதை நோக்கியே ஓடுகின்றனர். தன்னுடைய விருப்பம் மட்டுமே முக்கியத்துவமுடையதாக இருக்கிறது. மின்னல் வேகத்தில் கார் ஓட்டுகின்றனர். அதன் வேகத்தைப்போல பழைய விசயங்கள் பின்னால் விருட்டென்று மறைகின்றன. தன்னோடு பணியாற்றும் மூத்த வயதினரை பெயர் சொல்லி அழைக்கும் உயர் பதவியில் இருப்பவர்கள். மூத்தோர்களின் அனுபவமோ, அவர்களின் உறவு பிணைப்புக்களோ இவர்களுக்குத் தேவை இல்லை. இது புதிய தலைமுறையின் உலகம். வெளிநாடுகளில் இருக்கும் தாய் தந்தையர் இதை உணர்கின்றனர். தொப்புள் கொடி உறவு அறுந்துபோன துயரத்தை ‘பூமாதேவி’ மிக நுட்பமாகச் சொல்கிறது. மூத்தோருக்கு இது ஒரு கையறு நிலை.

இலங்கையிலிருந்து தப்பித்து ஆஸ்திரேலியாவில் காலூன்றுகிறது ஒரு குடும்பம். கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்கின்றனர். பெண் குழந்தை தனிமையில் வளர்கிறது. 12 வயது வந்த குழந்தைக்கு காய்ச்சலும் தலைநோவும் வருகிறது. அம்மா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறாள். குழந்தை கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. வேலைக்குச் சென்றவர்கள் வீடு திரும்ப எப்போதும் இரவாகி விடும். பள்ளி விட்டு வந்த குழந்தை தனிமையில் விளையாடுகிறது. பின்பக்கத்து வெள்ளைக்கார பையனுடன் சேர்ந்து விளையாடுகிறது. அவனுக்கு இவளைவிட ஐந்து வயது அதிகம். மாலையில் அவன் தேடி வருகிறான். தாய் இனிமேல் வராதே என்று துரத்துகிறாள். குழந்தை தன் கர்ப்பத்தை கலைக்க மறுக்கிறது. எனக்கு விளையாட குழந்தை வேண்டும் என்று அடம்பிடிக்கிறது. பின் மருத்துவர் நடக்கவிருக்கும் பிரச்சனைகளைச் சொல்லி சம்மதிக்க வைக்கிறார். அந்த இடத்தை விட்டு மாற்றிப்போக முடிவெடுக்கின்றனர். இப்படியான புதிய வாழ்க்கைச் சூழலில் தமிழர்களின் வாழ்க்கை முறைக்குள் புதிய சிக்கல்கள் தோன்றுவதைத் தடுக்க முடியாமல் போகிறது என்பதை மாத்தளை சோமுவின் கதை சொல்கிறது.

மேற்கத்திய நாடுகளில் வாழும் தமிழர் வாழ்க்கைக்குள் நிகழும் மாற்றத்தின் வேகம் மலேசிய சிங்கப்பூர் தமிழர்களிடம் இல்லை. ஆசிய பண்பாடு இந்திய பண்பாட்டின் விழுமியங்களை உள் வாங்கி இருக்கிறது. உடன்பிறந்தவர்களுக்கு உதவவேண்டும் என்ற எதிர்பார்ப்பு தாய் தந்தையரிடம் இருக்கிறது. தம்பி பள்ளியில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் காணாமல் போகிறான். அண்ணன் அலைய வேண்டியிருக்கிறது. பெற்றோர் தம்பியைச் சரியாக கவனிக்கவில்லை என்று சண்டையிடுகின்றனர். தமிழ்நாட்டு கதை போலவே இருக்கிறது. (ரெ. கார்த்திகேசு – மாணிக்கம் காணாமல் போனான்).

கட்டிட வேலை செய்யும் தகப்பன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு மூன்று சீட்டு ஆடுகிறான். பணத்தைத் தினமும் இழக்கிறான். வீட்டை அக்கறையுடன் கவனிப்பதில்லை. இவனைக் காதலித்து வந்தவள் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள். மூத்தவன் பள்ளியில் ஆசிரியையின் பணத்தைத் திருடி செலவு செய்கிறான். ஒருநாள் பிடிபடுகிறான். வீட்டில் வந்து பள்ளி நிர்வாகம் எச்சரிக்கிறது. தகப்பன் விசயம் அறிந்து அடித்து சூடு வைக்கிறான். உடலும் நெஞ்சமும் ரணமாகிறது. பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலம் காவல்துறைக்குத் தெரிய வருகிறது. தகப்பனுக்குச் சிறைதண்டனை கிடைக்கிறது. தவறு செய்த மகன் கட்டிட வேலைக்குச் செல்கிறேன் என்கிறான். ‘அது உன் தகப்பனோடு போகட்டும். படித்து முன்னேறு. நான் உழைக்கிறேன்’ என்கிறாள் தாய். தமிழர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்கிறது இக்கதை. தமிழ்க் குடும்ப வாழ்வு அப்படியே இருந்தாலும் மலேசிய சட்டம் குழந்தைகளுக்கு ஆதரவாக இருப்பதால் தண்டனை பெறுகிறான் தகப்பன். (ரெ. கார்த்திகேசு – கொப்புளங்கள்)

அகதியாக பிரான்ஸ் தேசம் வந்து பிழைக்கும் தமிழனுக்கு வேறு எந்த உறவும் கிடையாது. ஒருநாள் வேலை முடிந்து வரும்போது ஒரு குட்டி நாய் கட்டிடத்தின் அடியில் முனகுகிறது. அதனை எடுத்துக்கொண்டு வந்து வளர்க்கிறான். நாள்தோறும் மாலைநேரம் நடைபயிற்சி செய்யும் போது உடன் அழைத்து வருகிறான். மூன்று மாதம் நன்றாக பழகிய நாய் இப்படி வரும்போது காணாமல் போய் விடுகிறது. தேடுகிறான். அது விபச்சாரத் தொழில் நடத்தும் நைஜீரிய இளம் அழகியிடம் இருக்கிறது. ஒரு ஆடவனுடன் பேரம் பேசி ஓட்டலுக்குள் நாய்க் குட்டியோடு போகிறாள். அவள் வரும்வரை காத்திருந்து இந்த குட்டி என்னுடையது என்கிறான். அவள் மூன்று மாதத்திற்கு முன் இதைத் தவறவிட்டேன். அது மட்டுமல்லாமல் வேறு ஊருக்குச் சென்றிருந்ததால் இதனை கவனிக்க முடியவில்லை. இதுவரை நீ கவனித்ததற்கு நன்றி என்கிறாள். முதலில் விபச்சாரத்திற்காக காத்துக்கிடப்பவன் என நம்பி இன்று என்னால் முடியாது என்று சொன்னபோதுதான் தான் நாயை பெற வந்திருப்பதாகக் கூறுகிறான். நாய்க்குட்டி அவளுடையது என உறுதியாகிறது. இந்த நாய்க்குட்டியை நான் உனது வீட்டில் வந்து பார்த்துச் செல்ல முடியுமா என்கிறான். முகவரி தருகிறாள். ஒரு நாய்க்குட்டியின் மூலம் ஒரு தமிழனுக்கும் நைஜீரிய விபச்சாரிக்கும் பந்தம் ஏற்படுகிறது. இரு கருப்பு இனங்களும் உதிரியான வாழ்க்கையை வாழ்கிறது. சேர்ந்து வாழ நேர்கிறது. (கலா மோகன் – நைஜீரிய இளம் விபச்சாரியும் நானும் எனது நாயும்).

(8)

வெளிநாடுகளில் வெளிமாநிலங்களில் இருக்க நேர்கிற காலங்களில் வித்தியாசமான மனிதர்களையும் வித்தியாசமான பழக்கவழக்கங்களையும் வித்தியாசமான சமூக உறவுகளையும் பார்க்க நேர்ந்து வெளிப்படுத்திய கதைகள் உள்ளன. அ.முத்துலிங்கத்தின் ‘பூங்கொத்து கொடுத்த பெண்’ ‘ராகு காலம்’, குரல்செல்வனின் ‘வித்தியாசம் ஏதாவது’, நாஞ்சில் நாடனின் ‘மொகித்த’ போன்ற கதைகளை இவ்வகைக் கதைகளாகக் கொள்ளலாம். அந்தந்த தேசத்தில் வியப்பான ஒன்று நமது பார்வையில் புதிய பார்வைகளைத் தருகிறது.

நல்ல இளம் அழகியும் புத்திக்கூர்மை மிக்க ஸைராவிற்கு எந்த நிறுவனத்திலும் வேலை கிடைப்பதில்லை. இதற்குத் தடங்கலாக இருக்கும் மதச்சார்பானவர்கள் எப்படி பண்பாட்டிற்கு எதிராகவும் இருக்கின்றனர் என்பதை விலகி நின்று ‘பூங்கொடுத்த பெண்’ கதை சொல்கிறது. கதைசொல்லி வேலை நிமித்தமாக பாகிஸ்தான் வருகிறான். அவனுடைய அலுவலகத்திற்கு வேலை கேட்டு விண்ணப்பிக்கிறவர்களில் ஸைராவும் ஒருவர். 21 வயது நிரம்பியவள். இளம் வாழாவெட்டி. இரு திருமண உறவும் முறிந்து வாழ்பவள். அவளுக்கு மூத்த கணவர் வழிபிறந்த ஐந்து வயது பையனும்; உண்டு. எந்த வேலைக்கு விளம்பரம் வந்தாலும் விண்ணப்பம் அனுப்புகிறாள். அதில் தேர்ச்சியும் பெறுகிறாள். நேர்காணலில் மிகச் சரியான பதிலைச் சொல்கிறாள். எனினும் வேலை மட்டும் தர மறுக்கின்றனர். தனக்கு ஏன் வேலை கிடைப்பதில்லை என்பதைப் புரிந்த பெண்ணாகவும் இருக்கிறாள். இருப்பினும் தன் ஆளுமையை இழக்காமல் திரும்பத் திரும்ப விண்ணப்பம் போடுகிறாள். மற்றவர்கள் போல் அல்லாமல் விண்ணப்பத்தை அச்சடித்து அனுப்புகிறாள். நேர்காணலில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து பதில் சொல்கிறாள். பாதி கால் தெரிய செருப்பு அணிகிறாள். அந்தத் பாதத்தின் அழகு மிரட்டுகிறது. மற்றப் பெண்கள் முக்காடிட்டு அடக்க ஒடுக்கமாக வர, இவள் தலையை மூடுவதில்லை. கூந்தலை அருவி போல ஒரு பக்கத்து கண்வழி விழச் செய்து கொள்கிறாள். கேட்ட கேள்விக்கு மேசையைப் பார்த்து பதில் சொல்லாமல் முகத்தைப் பார்த்து சொல்கிறாள். நீளமான வார்ப்பை தோளில் ஆட வருகிறாள். செல்கிறாள். இரண்டு மண முறிவுக்குப் பின்னும் வேலைக்காகப் போராடுகிறாள். மகனை கிறித்துவ பள்ளியில் படிக்க வைக்கிறாள். இக்காரணங்களினால் ஸைராவிற்கு வேலை தர மறுக்கிறது ஆண் உலகம். ஆனாலும் பாகிஸ்தானில் எங்கு பார்த்தாலும் ஸ்ரீதேவியின் படமுள்ள சுவரொட்டிகள் தென்படுகின்றன. சிரித்தபடி, இடுப்பை காட்டிய படி, கவர்ச்சி காட்டியபடி சுவர்களில், மூன்று சக்கர வண்டிகளின் பின்படுதாக்களில் ஸ்ரீதேவியின் படத்தை ரசிக்கிறார்கள். திருமண நிகழ்வுகளில் தடை செய்யப்பட்ட முஜ்ரா நடனப்பெண்களை அழைத்து வந்து இரவில் நடனமாட விட்டு அவர்கள் ரசிக்கின்றனர். வீடுகளை வாடகைக்கு விடுகின்றனர். அவ்வீட்டு பெண்களை ஒரு அறையில் போட்டு ஒளித்து வைக்கின்றனர். தனித்து சுய உழைப்பால் தலை நிமிர்ந்து நிற்க விரும்பும் ஸைரா போன்ற பெண்களை ஆணாதிக்க உலகம் விடுவதில்லை. ஸைரா என்றால் சிரிப்பு அகலாதவள் என்று பொருள். பெயரில் மட்டும் உன்னதம் இருக்கிறது. அந்த சிரிப்பை ஆண்கள் பறித்துக்கொண்டதை தமிழனின் பார்வையில் சொல்கிறது முத்துலிங்கத்தின் கதை.

முத்துலிங்கத்தின் மற்றொரு கதை ‘ராகுகாலம்’. கதை நைரோபியில் நடக்கிறது. மொரிசியஸில் இருந்து வந்த வேலாயுதத்திற்குக் கார் ஓட்டுநராக வருகிறான் மரியோங் கோமா. வந்த இரண்டு நாட்களிலேயே அங்கு துப்புரவு பணி செய்யும் பெண்ணைத் தன்வசப்படுத்தி உறவு கொள்கிறான். அப்படிப்பட்ட முரட்டு ஆசாமி ஜாதகத்தை நம்பி வேறு மனிதனாக மாறுவதை இக்கதை சொல்கிறது. வேலாயுதன் என்ற முழுப் பெயரை அவனால் உச்சரிக்க முடியாது. வராது. மிஸ்டர் டொன் (யுதான்) என்று உச்சரிக்கிறான். வேலாயுதன் கடைபிடிக்கும் சடங்கு சம்பிரதாயங்களை கண்டு மரியோ வியக்கிறான். புதிய காருக்கு பூசணிக்காயைச் சுற்றி கார் சக்கரத்தில் வைத்து நசுக்குவதை, வேலாயுதத்தின் மனைவி நெற்றியில் இரண்டு குங்குமப் பொட்டு வைத்திருப்பதை, மகள் ஒரு பொட்டு வைத்திருப்பதை, அதிசயமாகக் கேட்டு விளக்கம் பெறுகிறான். ஒருநாள் வேலாயுதம் வியாபாரம் நிமித்தமாக வெளிநாடு செல்லக் காத்திருக்கிறார். மரியோ தாமதமாக வருகிறான். பத்து மணிக்கு முன்பே வீட்டை விட்டு கிளம்ப திட்டமிட்டிருந்தது. மரியோவின் தாமதத்தால் அன்றைய பயணத்தையே ஒத்திப்போடுகிறார். விமானத்திற்குச் செல்ல நிறைய நேரம் இருந்தும் ரத்து செய்தது மரியாவிற்கு ஆச்சரியமாக இருக்கிறது. பத்து மணிக்கு அடுத்து ராகுகாலம் பிறந்ததால் ரத்து செய்வதை அறிகிறான். இம்மாதிரி பல விசயங்கள் மரியாவிற்குப் புதுமையாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. ஆனால் வேலாயுதமும் மனைவியும் ஆசார சீலங்களைக் கடைப்பிடிக்கும் போது மகள் தலைகீழாக இருக்கிறாள். நீச்சல் குளத்திலும் அசைவ ஹோட்டல்களிலும் ஆப்பிரிக்கத் தோழியுடன் யாமசொமா இரைச்சியை விரும்பி உண்கிறாள். ‘ராகுகாலம்’ என்பது என்ன என்பது பற்றி விரிவாகத் தெரிந்து கொள்கிறான். இந்த மரியோ மெல்ல மெல்ல இந்திய ஜாதக நம்பிக்கைக்கு ஆட்படுகிறான். இட்லி, சாம்பார், தோசை உணவிற்கு மாறுகிறான். சிவராத்திரி, கந்தசஷ்டி பற்றியெல்லாம் தீவிரமாக சிந்திக்கிறான். வேலாயுதம் காலக்கெடு முடிய வேறு நாட்டிற்குப் போகிறார். மரியோ, வேலையில்லாமல் அலைகிறான். அவனுடன் பணியாற்றிய தமிழன் (கதைசொல்லி) ஒருநாள் இவனைப் பார்க்கிறான். ஒட்டக சிவிங்கி போல மெலிந்து நெற்றியில் திருநீறு பூசி, அதிலே குங்குமப்பொட்டு இட்டு விடுகிறான். “நீ ஏன் வேலைக்குச் செல்வதில்லை” என்கிறான் தமிழன். நேர்முகத் தேர்விற்கு ராகுகாலத்தில் அழைத்திருந்ததால் போகவில்லை என்றான்.
கீழைத்தேய சடங்கு சம்பிரதாயங்களில் வெளிநாட்டினர் ஈர்க்கப்பட்டு மடத்தனமாக வீழ்வதையும் தமிழர் குடும்பங்களில் இளைய தலைமுறையினர் சம்பிரதாயங்களை பொருட்படுத்தாமல் தாண்டிச் செல்வதையும் இக்கதை குறிப்பு காட்டுகிறது.

வேலை நிமித்தமாக பம்பாய் புறநகர்ப்பகுதியில் குடியேறுகிறான் தளவாய். அவன் குடியேறிய வீட்டின் மேல்தளத்திற்கு பீதாம்பரி மொகித்தே தன் குடும்பத்தோடு குடியேறுகிறார். அவர் பெஸ்ட் பேருந்துவில் நடத்துநராக இருக்கிறார். குடி வந்த தினமே எவ்வித கூச்சமும் இல்லாமல் பாத்திரங்களைக் கேட்டு வாங்கிப் பயன்படுத்துகின்றனர். அவர் மால்வன் இனத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர். பௌத்தர். இரு குடும்பங்களும் கொண்டு கொடுத்துக் கொள்கிறது. தளவாய் குடியிருக்கும் இடத்திலிருந்து துறைமுகப் பகுதிக்கு வேலைக்குச் செல்ல இரண்டு பேருந்து மாற வேண்டியிருக்கிறது. மொகித்தே வந்தபின் ஒவ்வொரு முறையும் தளவாயிடம் டிக்கெட்டுக்குரிய பணம் வாங்காமல் போகிறார். தளவாய்க்கு பயம், சுற்றி இருப்பவர்கள் ஒரு மாதிரி பார்ப்பது இம்சிக்கிறது. பிடிபட்டால் கேவலமாகி விடும் என்று நினைக்கிறார். மொகித்தேயிடமே பணத்தை நீட்டினாலும் நீங்கள் வாங்காமல் போவது தனக்கு பதட்டமாகவும் வெக்கமாகவும் இருப்பதை ஒருநாள் தளவாய் சொல்கிறான். தயவுசெய்து இனிமேல் வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறான். ‘பெஸ்ட்’ பேருந்துவில் பணியாற்றுபவரின் உறவினர் ஒருவர் எப்போதும் இலவச சீட்டில் பயணிக்கலாம். இது அரசு தரும் சலுகை. இது தெரியாதா தளவாய். நீ எனக்குச் சொந்தக்காரன் இல்லையா? என்று சொல்லி சிரிக்கிறார். உள்ளுரில் தாயாதிகள் சின்ன சின்ன விசயங்களுக்கு மண்டைகளை உடைக்கும் போது கசப்பு ஏற்படுகிறது. 1000 கி.மீ அப்பால் பிழைக்க வந்த இடத்தில் ஒருவன் சகோதரனாக பார்க்கிறான். இப்படியான மனிதர்களையும் புலம்பெயர்ந்த இடத்தில் காண முடிகிறது.

குழந்தைகளின் பிறந்த நாளுக்காக ஒவ்வொரு குடும்பமும் முன்கூட்டியே பரிசுப் பொருள்களை வாங்கி வைத்திருக்கிறது. மூளை வளர்ச்சி குன்றிய டாம் கரோல்ஸ்கி தம்பதியின் குழந்தைக்குப் பிறந்தநாள் வருகிறது. பிறந்தநாள் விழாவை சிறப்பாகக் கொண்டாட மிஸ் ரெயின்போ பலூன்களுடன் வருகிறாள். பலூன்களில் குழந்தைகளுக்கு விதவிதமான பட்டாம்பூச்சிகளை வரைந்து தந்து மகிழ்ச்சியூட்டுகிறாள். பரிசுப் பொருட்களைப் பிரித்து மகிழ்கின்றனர். தமிழ்க் குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசுகின்றன. கதை மனநலம் குன்றிய குழந்தைக்கும் அறிவாற்றல் உண்டு என சொல்ல வருகிறது. (குரல்செல்வன் – வித்தியாசம் ஏதாவது). அக்கதையின் பின்னணி, புதிய பண்பாட்டுக் கூறுகளை தமிழ்க் குழந்தைகளும், பெற்றோர்களும் ஏற்று இணைந்து வாழ்வதைக் காட்டுகிறது. புலம்பெயர்ந்த நாடுகளில் சக மனிதர்களுக்கு உதவி செய்தும் உறவு பேணியும் வாழ்வதையும் காணமுடிகிறது.

(9)

சில கதைகளில் பெற்றோர்களின் விருப்பங்களுக்கு உட்பட்டு வேலையை தேர்வு செய்ய வேண்டிய சூழலுக்கும் உள்ளாகின்றனர். சாமி மூர்த்தியின் ‘சுமை’ கதையில் அப்பா நகரச் சுத்தி பணியில் இருக்கிறார். நகரச்சுத்தி தொழிலுக்கு ஆள் எடுக்கும் வாய்ப்பு வருகிறது. நன்றாகப் படிக்கும் மகனின் படிப்பை நிறுத்தி அந்தத் தொழிலுக்குப் போகச் சொல்கிறார். தந்தை செய்த பணிக்கு முன்னுரிமை தரப்படுகிறது. அரசு, கல்விதான் மனிதனை உயர்ந்த இடத்தில் கொண்டு வந்து வைக்கும் என்கிற வாசகத்தை முன்வைக்கிறது. பெற்றோர்கள் வேலை கிடைக்கிறதே என்பதற்காக மறுபடியும் தாங்கள் பார்த்த அடிப்படை தொழிலிலேயே பிள்ளைகளைச் சிக்க வைக்கின்றனர். சிங்கப்பூர், மலேசிய தமிழ்ப் பெற்றோர்களின் மனநிலையை ‘சுமை’ கதை சொல்கிறது.

குழந்தைக்கு நல்ல ஷூ வாங்கித் தராத பெற்றோர்களும், தமயன்மார்களும் எம்.ஜி.ஆர், சிவாஜி பட காசெட்டுகளை வாங்கிப் பார்க்கின்றனர். அவருடைய பிள்ளைகள் ரஜினி, கமல் படங்கள் பார்க்கின்றனர். இப்படி தமிழ் சினிமா மோகம் சிங்கப்பூர் குடும்பங்களிலும் ஆட்டுவிக்கிறது. (சை. பீர்முகமுதுவின் – ‘பாதுகை’)

தமிழ்க் குடும்பங்களிலிருந்து படிக்காமல் பொறுக்கிகளாக வளர்ந்து ஆர்ப்பாட்டம் செய்யும் ரவுடிகளைப் பற்றி புதுமைதாசனின் ‘உதிரிகள்’ கதை சொல்கிறது. விநோத உரு வரையப்பட்ட பனியன்களை அணிந்து கொண்டு கத்தி, செயின் கம்பிகளை இடுப்பில் சொருகிக்கொண்டு ரவுடிகளாகத் திரிகின்றனர். தமிழ்க் கலைநிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களுக்குச் சென்று கலாட்டா செய்கின்றனர். பணம் பறிப்பது, படிக்கும் பெண்களைத் தொந்தரவு செய்வது, சீரழிப்பது, தட்டிக் கேட்கிறவர்களை அடிப்பது, பழி வாங்குவதுமாக பொறுக்கி வாழ்க்கை வாழும் தமிழ் இளைஞர்களை மலேசியாவில் அறிய முடிகிறது. (புதுமைதாசன் – உதிரிகள்).

தங்கள் பூர்வீக வரலாற்றை மறந்து நல்ல வேளையில் அமர்ந்ததும் விருந்து, குடி, கொண்டாட்டம் என்று போகத்தில் செல்பவர்களும் உண்டு. மலேசியாவை விட சிங்கப்பூர், சிங்கப்பூரைவிட ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியாவைவிட அமெரிக்கா என்று வெளிநாட்டு மோகத்தில் இருக்கின்றனர். (இராம. கண்ணபிரான் – நாடோடிகள்) மலேசிய, சிங்கப்பூரில் தமிழ் இனம் உழைத்து முன்னேறிய வரலாற்றை மதிக்காமல் அம்மக்களுக்குப் பின் நின்று ஆற்றலைத் தராமல், சுகதுக்கங்களில் பங்கெடுக்காமல் மேலைமோகம் கொண்டு வெளிநாடு செல்லும் சுயநலமுடையவர்களைக் கண்டிக்கிறது இக்கதை.
சாவு போன்ற காரியங்களை முன்நின்று செய்பவர்கள் மக்கள் தரும் பொதுப்பணத்தில் கால்பங்கு செலவு செய்து முக்கால் பங்கை ஒதுக்கி தோட்டத் துறவு வாங்குவோரை தோலுரிக்கிறது ப.கோவிந்தசாமியின் கதை. எங்கிருந்தாலும் மனிதனிடம் அற்பத்தனங்கள் வெளிப்படவே செய்கின்றன.

பெரும்பாலான மலேசிய சிங்கப்பூர்வாசிகளின் முன்னோர் வரலாறு துயரம் நிரம்பியவை. அவர்கள் முன்னேறி வரப்பட்ட பாடுகளை இக்கதைகள் சொல்கின்றன. உதிரிகளாக சிதைந்து அலைய நேரிட்ட இரண்டாம் உலகப் போர்ச் சூழலைப் பேசுகின்றன. மலேசிய, சிங்கப்பூர் நாடு முன்னேற தமிழர்கள் செய்திருக்கும் மாபெரும் தியாகங்கள் இக்கதைகளில் அடிநாதமாக ஒலிக்கின்றன.
அரசியல், சமூகப் பொருளாதாரக் காணரங்களால் உலகின் பல்வேறு நாடுகளில் புலும்பெயர்ந்து வாழ்ந்த தமிழர்களின் துயர வாழ்வையும் பண்பாட்டு மோதல்களையும் முதல்தலைமுறையினரின் கதைகள் சொல்கின்றன. அடுத்து அந்த நாட்டு மக்களாக மாறிய அடுத்தத் தலைமுறையினரின் வாழ்வு மேலை பண்பாட்டினால் தாக்கத்திற்குள்ளாகி பல்வேறு மாற்றங்களை ஏற்றுக்கொண்டு முன்நகர்கிறது. மேலைநாடுகளில் புதிய தமிழ்ச்சமூகம் உருவானதற்குக் காலம் ஒரு காரணமாக அமைகிறது. அகதிகளாக, அடிமைகளாக, பணியாளர்களாகச் சென்ற தமிழர்களின் பண்பாடு அந்தந்த தேசங்களின் பண்பாட்டுடன் முரண்பட்டும், இயைந்தும், பிறழ்ந்தும் உருமாறியும் வந்த காரணத்தின் கோலத்தை இக்கதைகளில் காணமுடிகிறது. இவை பண்பாட்டு பொருளாதார நெருக்கடிகளில் விளைந்த வேறொரு வாழ்வை சொல்கின்றன.

– நிறைவுற்றது

பிற படைப்புகள்

Leave a Comment