முகங்களின் கோட்டுச்சித்திரம் – தானாவதி நாவல்

by olaichuvadi

 பிரவின் குமார்

”ஒரு குக்கிராமம் என்றிருந்தால், நான்கைந்து செல்போன் ரீசார்ஜ் கடைகள் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கடையில்தான் நான் வேலை செய்கிறேன்’’ – வா.மு.கோமுவின் சமீபத்திய சிறுகதை ஒன்றின் தொடக்கம் இப்படியாக இருக்கிறது. ஒரு கணம் நிதானித்து இந்த வரியை கூராய்ந்து பார்த்தோமேயானால் கிராமங்கள் பற்றி நமக்குள் இருக்கும் சித்திரம் நிஜத்தில் கலைந்து போய் இருப்பதை உணர முடிகிறது. இன்றைக்குத் தமிழக கிராமங்கள் தனது பாரம்பரியக் கூறுகளை இழந்து, நகர நாகரிகத்தின் நவீன வாழ்க்கையை பாவித்துக் கொண்டிருக்கும் சூழலை நாம் இவரது கதைகளில் தொடர்ச்சியாகப் பார்க்க முடிகிறது. 80களின் தமிழ்த் திரைப்படங்கள் காட்டிய போலியான சித்தரிப்புகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு கிராமியத்தை அதன் முழு யதார்த்தத்தோடு பதிவு செய்பவை இவரது கதைகள். ’அழுவாச்சி வருதுங் சாமி’ சிறுகதைத் தொகுப்பில் உள்ள கிராமிய யதார்த்தக் கதைகளாகட்டும், மேற்கத்திய இசங்களின் பாதிப்பில் எழுதப்பட்ட ’மண்பூதம்’ சிறுகதைத்தொகுப்பில் உள்ள கதைகளாகட்டும் வா.மு.கோமுவின் புனைவுலகம் எளிய மனிதர்களின் கொண்டாட்டங்களால் நிறைந்திருக்கிறது. வாழ்வின் எப்படியான சூழலையும் அநாசயமாய்க் கடந்து போகும் மனிதர்கள் இவரது எழுத்துகளில் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருப்பார்கள். இந்நாவலிலும் மழைக்கு முளைத்த காளான்களை பறிக்கும் சிறுவர்கள் வருகிறார்கள், விவசாயக்கூலிகள் வருகிறார்கள், விவசாயக் கூலி வேலையைத் துறந்து சிப்காட் பணிக்குச் செல்பவர்கள் வருகிறார்கள். இன்றைய கிராமங்களின் அசலான முகத்தை கோட்டுச் சித்திரமாய் வரைவதே இவரது படைப்புகள்.

கோழிப்பாளையம் எனும் ஊரில் வசிக்கும் மணமுடிக்காத ஒண்டிக்கட்டைகள் நான்கு பேரது வாழ்வைக் கொண்டு பின்னப்பட்டிருக்கிறது ‘தானாவதி’. திருமணத்துக்கும் அந்தக் கிராமத்துக்குமே ஏழாம்பொருத்தம். அவ்வூருக்குள் ஒரு பெண் மணமுடித்துக் குடிபுகுந்து பல காலம் ஆகியிருக்கிறது. திருமணம் என்பது இங்கே சமூக அந்தஸ்தாகப் பார்க்கப்படும் சூழலில் மணமாகாமையின் வலிகளைப் பேசுகிறது இந்நாவல். ஆனால் கோமுவின் எழுத்துகளுக்கே உரித்தான எள்ளல் மிகுந்து காணப்படுகிறது. அந்த எள்ளலான கதையோட்டம் மணமாகாமையின் துயரங்களை நமக்குள் கடத்துவதற்கு ஓரளவு தடையாகவும் இருக்கிறது. இந்நாவலை நாம் இவரது முந்தைய ‘எட்றா வண்டியெ’ நாவலின் தொடர்ச்சியாகக் கூடப் பார்க்கலாம். அந்நாவலில் தலித் இளைஞன் சாமிநாதனின் திருமணச்சிக்கலே பிரதானமானதாக இருக்கும். இந்நாவல் நான்கு இளைஞர்களின் மணமாகாமையை மையக்கருவாகக் கொண்டிருக்கிறது. ‘தானாவதி’ என்றால் கொங்கு வட்டார வழக்குப்படி திருமணத்தரகர் என்று பொருள். தனது திருமணத்துக்காக ஜாதகம் பார்த்துப் பார்த்து இறுதியில் தானே ஜோசியகாரனாகி, தானாவதிக்காரனாகவும் ஆகி விடுகிறான் சுப்ரமணி. கேரளாவில் பெண்ணெடுத்து வந்து ஏமாறுகின்றனர் சின்னசாமியும், பழனிச்சாமியும். மணமுடிக்காத வாழ்வின் இருத்தல் மீதான நம்பிக்கையை இழந்து தன்னையே மாய்த்துக் கொள்ளும் வேலுச்சாமி என இதன் மையப்பாத்திர அமைப்புகளே நாவலை வலுவாகத் தாங்கி நிற்கின்றன. சவக்குழி வெட்டி அதனுள் தன்னைத்தானே புதைத்துக் கொண்டு மாயும் வேலுச்சாமியின் மரணம் வாசகனுக்குள் கனத்த அதிர்வை ஏற்படுத்துகிறது.

தொடர்ச்சியாக கோமுவை வாசிக்கும் வாசகனால் அவரது முந்தைய நாவல்களிலிருந்து இந்நாவல் வேறுபட்டு நிற்பதை உணர முடியும். துளியும் காமம் கலக்காத கோமுவின் படைப்பு இதுவாகத்தான் இருக்கக்கூடும். பாலியல் மற்றும் உறவுச் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டு கதை வடித்த படைப்பாளி முற்றிலும் அவற்றிலிருந்து விலகலைக் காட்டியிருப்பது கவனிக்கத்தக்கது. எழுத்தில் வித்தியாசம் காட்ட முனைவது என்பது தன்னை தானே பரிசோதனைக்குள்ளாக்குவது. படைப்பாளிகள் என்பவர்கள் தொடர் பரிசோதனைகளை மேற்கொள்பவர்களே என்றாலும் பாலியல் குறித்தான விவரணைகளுக்குத் தேவை இருந்தும் அதனை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறார் என்று தோன்றுகிறது. பாலியல் தேவைக்கான வடிகால் இல்லாத மணமுடிக்காத இளைஞர்களின் வாழ்வின் காமம் வெளிப்படுத்தப்படாமல் இருப்பது சற்று நெருடத்தான் செய்கிறது.

வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்
விலை: ரூ.140

 

பிற படைப்புகள்

Leave a Comment