மண்ணும் ஒரு உறவுதான் – கண்மணி குணசேகரன்
நேர்காணல்: பு.மா.சரவணன் ஓவியம்: ஜீவா

by olaichuvadi

 

முதன்முதலாக கண்மணி குணசேகரன் எனக்கு அறிமுகமானது, தமிழினி வசந்தகுமார் அண்ணன் மூலமாகத்தான். கண்மணியைப்பற்றி வசந்தகுமார் அண்ணன் மிகவும் சிலாகித்துக் கூறியதுடன், கண்மணியுடைய படைப்புகளில் பெரும்பாலானவற்றைக் கொடுத்துப் படிக்கச்சொன்னார். பார்த்தவுடன் பச்சக்கென்று ஒட்டிக்கொள்வது என்போமே, அதைப்போல வெகு எளிதில் மனவீட்டில் வந்து அமர்ந்துகொண்டார் கண்மணி. அவர் பெரும் கதைசொல்லி. சாதாரணமாகப் பேசும்போதே பல கதைகளையும், நாட்டு வழக்கையும் வெகு இயல்பாக சொல்லிக்கொண்டே போவார். வெள்ளந்தியான மனசு. பேச்சினூடாக அவர்சொல்லும் நிகழ்வுகள் நிழற்படம்போல நம்முன்னே நகர்ந்து செல்லும். தந்திரங்கள் நிறைந்த இவ்வுலகில், யாதொரு கள்ளமுமில்லா வெகு அழகான மனிதன். புதுமைப்பித்தனுக்கு ஒருமுறை, மிக நெருக்கடி கொடுத்தபோது சில நிமிடங்களில் சில சிறுகதைகளை எழுதித்தந்தாராம். எப்படி இது என வினவியபோது, “எல்லாம் மனசுக்குள் கொட்டிக் கிடக்குதுவோய்” என்று படித்தது நினைவு. அதைப்போல கண்மணியிடம் கொட்டிக்கிடக்கும் ஏராளமான கதைகளை இனிவருங்காலம் வெளிக்கொணரட்டும். அவருடனான ஒரு நேர்காணல்…

உங்களைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திற்கும் வடக்கே, நெய்வேலிக்கும் மேற்கே, முந்திரிக் காடுகளும் வெரகாலு நெல் விதைக்கும் பெயரளவு வயக்காடுகளும் செம்மண்பாவிய புஞ்சைகளும் கொண்ட எனது ஊர் மணக்கொல்லை. அப்பா அய்யாதுரை அம்மா சின்னப் பிள்ளை. விடிந்தால் கொல்லைக் காடு, சாய்ந்தால் வீடு என பொழுது முப்பது நாழிகையும் கொல்லை வெளிகளில் முந்திரிகளில் கழியும் விவசாயக் குடும்பத்தில் அண்ணன், அக்காவுக்கு பிறகு மூன்றாவதாய் நான். (கணக்குப் படி இடையில் இரண்டு இறந்து போனதையும் கொண்டால் நான் ஐந்தாம் வகுப்புவரை பக்கத்து ஊரான இருளக்குறிச்சியிலும் பத்தாவது வரை மேற்கே ஆலடி அரசினர் உயர்நிலைப் பள்ளியிலும் பிறகு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உளுந்தூர் பேட்டையிலுமாக ஓடிய எனது கல்விக்காலம். பின்னர் தந்தை பெரியார் போக்குவரத்துக் கழகம் செஞ்சிக் கிளையில் தொழிற்பழகுனராய் சேர்ந்து பின்னாளில் தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம் விருத்தாசலம் கிளையில் 1999 லிருந்து தொழிலாளியாக வேலை செய்து வருகிறேன். தற்போதும் பிறந்த ஊரான மணக்கொல்லையிலேயே வசித்து வருகிறேன்.

திருமணமாகி காசிமணி என்கிற மனைவியும் தமிழ்மதி, அறிவுமதி, இளமதி என மூன்று மகன்களும் உள்ளனர்.

எழுத்து உங்களுக்கு வசப்பட்டது, வசப்பட்டதின் காலம், காரணம் எப்போது எனக் கூறமுடியுமா?

1987 ல் உளுந்தூர்பேட்டை ஐடிஐக்கு நித்தமும் போகிற சைக்கிள் பயணத்தில் ஒருநாள் சாலையோர பொட்டை மண் புழுதி பூசிக் கிடந்த நொச்சிச் செடியை பார்த்து கவிதை எழுதத் தொடங்கிய நான் சக மாணவர்களால் கவிஞன் என போற்றிப் புகழப் பட்டு அவர்களின் வேண்டுகோள்களுக்காக காதல் கவிதைகள் எழுதினேன். பிறகு உஷா போன்ற வார பத்திரிக்கைகளில் வரவேண்டும் என்பதற்காக லஞ்சம், வானம், நட்சத்திரம், லாட்டரி, வறுமை போன்ற தலைப்புகளில் நிறைய எழுதிக் கொண்டிருந்தேன்.

பின்னர் 1991 ல் தந்தைப் பெரியார் போக்குவரத்துக் கழகம் செஞ்சிக் கிளையில் தொழிற்பழகுனராக வேலை செய்து கொண்டிருந்தபோது கூட வேலை செய்து கொண்டிருந்த மூத்த தொழிலாளி எனது கவிதை ஆர்வம் அறிந்து விழுப்புரத்தில் நடந்த ஒரு நூல் வெளியீட்டுக்கு அழைத்துப் போனார். அங்குதான் சனங்களில் கதை என்கிற புத்தகம் வாங்கினேன். மண் மக்கள் சார்ந்து ஒரு புதுவகை மாதிரியாய் எழுதப் பட்டிருந்த அந்தக் கவிதைகளை படித்த பிறகு அதுகாறும் எழுதிகொண்டிருந்த கவிதைகள் எல்லாமும் ஒன்றுமில்லாமல் ஆகி பின் அதுபோல் எழுத ஆரம்பித்தேன்.

எழுத்தாளர் பிரபஞ்சன் ஒரு நேர்காணலில் முதன்முதலில் எழுத வருகிறபோது யார்முகத்தில் விழிக்கிறாயோ அதுபோலவே அமைந்து விடுகிறது உனது எழுத்து என்பது மாதிரி குறிப்பிட்டிருந்தார். நான் பேராசிரியர் த. பழமலய் முகத்தில் முழித்தவன். அவரை, அவரது படைப்புகளை கண்டபிறகுதான் எனக்கு எழுத்தே பிடிபட்டது. அந்த சூட்டில் வெளிவந்த எனது தலைமுறைக்கோபம் பலரின் பாராட்டை பெற்றுத் தந்து இலக்கிய உலகில் முனை ஊன்றுவதற்கு ஒரு இடத்தையும் கொடுத்தது.

2007 ஆண்டில் சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் “நெய்தல் விருதும்“, தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் அகராதி வகைப்பாட்டில் பரிசு பெற்றும் இருந்தீர்கள். அதன் பின்னர் விருதுகள் அளிக்கப்பட்டனவா? இல்லை எனில், கவனத்தில் கொள்ளப்படாதத்தை எப்படி உணர்கிறீர்கள்?

முப்பத்தி ஐந்து வயதிற்குள்ளான படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் சன்ஸ்கிருதி உறுதியாக எனக்குத்தான் என அதிலுள்ளவர்கள் ஆர்வ மிகுதியில் என்னிடம் சொல்லியிருந்தார்கள். கடைசி நிமிடத்தில் கைநழுவிப்போனது. அதற்கு முன்பு ஒரு ‘ஆண்டு சிறந்த சிறுகதை’ போட்டியிலும் கடைசி நேரத்தில் எனது பெயர் மாற்றப்பட்டது என அறிந்தேன். திருப்பூரில் தரும் ஒரு விருதும் அப்படித்தான் சொல்லி மாறிப்போனது. இப்படி கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போய்விட்ட மூன்று நான்கு சம்பவங்களுக்கு பிறகு தேர்வுக் குழுவில் சொத்து சாமீன் கொடுக்கிற மாதிரி வலுவான ஆள் இருந்து முன்கை எடுத்தால்தான் உண்டு என்பதை உணர்ந்து பிற்பாடு விருது, பரிசு பற்றியெல்லாம் யோசிப்பது இல்லை.

ஆனாலும் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் நினைவாக முதன்முதலில் எனக்கு வழங்கப்பட்ட இளம்படைப்பாளிகளுக்கன அந்த விருதை என் வாழ்நாளில் பெற்ற உயரிய விருதாக மதிக்கிறேன். காரணம் நானறிந்த வகையில் சுந்தரராமசாமி விருது வழங்கும் நெய்தல் அமைப்பு மட்டுமே அந்த விருதுக்கு தேர்ந்தெடுத்த விதத்தை விருது வழங்கும் போதும் அதற்கு முன்பு கட்டுரையாய் (எனக்கு அந்திமழையில் வந்தது) வெளியிட்டும் அதன் உண்மை தன்மையை விளக்கியிருந்தார்கள். விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் விபரம். இறுதிச்சுற்றில் வந்தவர்கள், இறுதிச் சுற்றிலிருந்து விருதுக்கு தேர்வு செய்ததற்கான சிறப்புக் காரணங்கள் யாவும் வெளிப்படையாக இருக்கும் அதை படிக்கும் போது மெய்யாலுமாகவே மனதுக்கு பெரும் மகிழ்வுதான்.

எவ்வளவு பெரிய விருதாக இருந்தாலும் அதன் வெளிப்படைத்தன்மை இன்மையால் பலரின் கசப்பான கருத்து போலவேதான் எனது மதிப்பீடுகளும். அதேநேரம் தமிழில் பெரிய பெரிய விருதுகளைப்பெற்ற, பெறுகிறவர்களோடு சிலசமயம் ஒப்பிட்டு பார்க்கையில் அவர்களுக்கு இணையாகவோ அல்லது அவர்களைத் தாண்டியோ நான் எழுதியிருக்கிறேன் என்பதை நினைக்கும் போது விருதை கடந்துபோய்க் கொண்டிருக்கிற பெரும் உற்சாகத்தையே உணர்கிறேன்

வட்டார வழக்கை பயன்படுத்துவது உணர்வுப் பூர்வமாகவா? இல்லை மண்ணுக்கு உறவாக இருப்பதாலா?

வாய்க்கால் மண்ணெடுத்து விளக்கி துலக்கம் பெறுகின்றன, பற்கள். கிணற்று மேட்டு வெள்ளைப் பார் மண்ணில் தலைகசக்கி பூப்போல் பொலிவாகின்றன தலைமுடிகள். வாழ்ந்து  உழன்ற மண்ணின் கரைசலை ஊற்றிய பின்பே போகின்றன உயிர்கள். சொர்க்கம் சேர் கைலாசம் சேர் பிடி மண்ணில் மறையத் தொடங்குகிறது உடல். மண்ணாப் பூடோ மாக்குன்னுப் பூடோ மண்ணை வாரி விட்டுக்கொண்டு விலகுகின்றன உறவுகள். இதன் ஊடாக வாழ்ந்து கொண்டிருப்பவனுக்கு மண்ணும் ஒரு உறவுதான். அந்த உறவுப் பிணைப்பில்தான் எனது படைப்புகள் திட்டமிடல் இல்லாமல் தொடர்ந்த வட்டார வழக்காகவே மிளிர்ந்து கொண்டிருக்கிறது.

அஞ்சலை மிக முக்கிய படைப்பாகப் பேசப் படுகிறது. எனினும் அதன் வீச்சு, வாசகர்களைச் சென்று அடைந்த எண்ணிக்கை உங்களுக்குத் திருப்தி அளிக்கிறதா?

இப்போதெல்லாம் ஒரு படைப்பு எழுதுவதை விடவும் அதனை வெளியிட்ட பிறகு அதற்கு பின்னால் செய்யப்படுகின்ற பின்னெடுப்பு வேலைகள்தான் மிக முக்கியமாக அமைகிறது. அந்த அடிப்படையில்தான் அப்படைப்பின் வீச்சும், விரிவும் அமைகிறது. எனக்கு இதில்தான் சிக்கல். ஒரு குக்கிராமத்தில் குந்திக் கொண்டு அதிலும் விவசாயம் பார்த்துக் கொண்டு, இரவு பகல் என மாறிமாறி பணிமுறை கொண்ட பணிமனை வேலையும் பார்த்துக் கொண்டு எழுதுவதே எனக்கு பெரிய பாடாக இருக்கிறது. இதில் எழுத்துக்கு பிறகு பின்னெடுப்பு வேலை செய்வதற்கு வாய்ப்பே இல்லை. இப்படிப்பட்ட சூழலிலும் அஞ்சலை நாவல் ஒரு பரவலான வாசகர்களை சென்றடைந்திருப்பதாகவே திருப்தி கொள்கிறேன்.

அஞ்சலையின் படைப்பில் தொடர்ந்த அவலங்களை கண்ணுறும் போது, அதை ஆணாதிக்கத்தின் கூறுகளாக எடுத்துக்கொள்வதா அல்லது எவ்வாறான சூழலிலும் ஒரு பெண் தன்னுடைய இயக்கத்தை தொடரவேண்டும் என்ற உந்துதலாகக் கொள்வதா?

இரண்டையும்தான் இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். இரண்டாம்தாரமாக தன்னைக் கட்டிக் கொள்ள சம்மதிக்காத சின்ன அக்கா வீட்டுக்காரனால் தொடங்கும் சிக்கல்தான். தான் தான் அப்பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து வைக்க வேண்டும் என்கிற ஒப்படைப்பை தனது மோசமான எண்ணத்தால் சரியில்லாதவனுக்கு பேசி முடிப்பது ஒரு ஆணாதிக்கக் கூறுபாடே. இதுவே இவங்கெடக்கறான் சடையன் என்று அஞ்சலையின் அம்மா பாக்கியமே தனது விருப்பத்துக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்கு சமூகம் பழக்கப்பட்டிருக்குமானால் இந்த இக்கட்டிற்கு வேலையே இல்லை. அதனால்தான் தொடர்ந்து ஆண்களின் உலகத்தால் அஞ்சலை அல்லல் தொல்லல் அடைகிறாள். அடைந்து கொண்டுமிருக்கிறார்கள். இதுதான் அடித்தட்டு மக்களின் இன்றளவும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இதிலிருந்து மீளவேண்டும், இயக்கத்தை தொடரவேண்டும் என்பதுதான் நமது விருப்பமும். அதை முன்னெடுப்பதாகத்தான் படைப்பும் இருக்கவேண்டும்.

சேரி மக்களிடம் மட்டும் அல்ல, எல்லா சமூகத்தினரிடமும் பெண்களின் வாழ்க்கையும் இவ்வாறுதானே உள்ளது, குறிப்பாக பொருளாதாரத்தில் மிகப் பின்தங்கி இருக்கும் எந்தச் சமூகத்துப் பெண்களும் இவ்வாறான எதிர் நீச்சல் வாழ்க்கை வாழத்தானே செய்கிறார்கள்?

உண்மைதான். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி இருக்கிற சமூகத்தில் இப்படியான எதிர்நீச்சல் நிகழ்கிறது என்பது உண்மைதான். ஆனாலும் ஒரு படைப்பாளியான எனக்கு என் கண்ணெதிரில் நிகழ்ந்த இந்த சிக்கலும் அதை நோக்கிய எதிர்நீச்சலும் பெரிதாகத் தெரிகிறது. இதைவிடவும் மோசமான சிக்கலும் எதிர் நீச்சலும் பல பகுதிகளில் நிகழ்ந்து கொண்டிருக்கலாம். அவைகளை பற்றி படைப்புகளில் வரும்போது இது சாதாரணமாக போய்விடக்கூடும்.

நெடுஞ்சாலை நாவலின் இரண்டாவது பகுதி இன்னம் செறிவாக இருந்திருக்கலாம் என்பது பற்றி…

நெடுஞ்சாலை போக்குவரத்துக் கழகத்தில் சி.எல் லாக வேலை செய்பவர்களைப் பற்றியதான படைப்பு. வீடு என்கிற முதல் பகுதியில் அவரவர்களின் வாழ்க்கைப் பாடுகளை மாறி மாறிச் சொல்வதாய் அமைகிறது. நாடு என்கிற பகுதியில் ஒரே நேர்கோட்டு நெடுஞ்சாலை பதிவுதான். சரியில்லாத ஒரு பேருந்து, நெடுஞ்சாலையில் ஓட்டிப் பழக்கமில்லாத ஓட்டுனர், நடத்துனர் இவர்களினூடாக ஒரு பேருந்து இயக்கத்தில் என்ன நடக்கிறது என்பதை இயல்பாக சொல்லவேண்டும் என்பதுதான் என் எண்ணம். பொதுவாகவே ஒரு பேருந்து, இரயில் போன்ற பயணப் பகுதிகளை படித்து அல்லது படமாக பார்த்துச் செல்கையில் அவைகளின் வேகத்திற்கு ஏற்ப முடிவும் கூடுதல் அரிபிரியோடு நிகழவேண்டும் என நம் மனசுக்குள் பதிந்துவிடுகிறது. அப்படியான ஒரு விறுவிறுப்பிற்காக இன்னும் மேலும் மேலும் சம்பவங்களை சேர்க்கவேண்டும் என எனக்கு விருப்பமில்லை. அதனால் அப்படித் தோன்றியிருக்கலாம்.

வந்தாரங்குடி நிலத்தை இழந்த மக்களின், அதன் வாழ்வுரிமைக்காகப் போராடிய மக்களின் உணர்வையும், வாழ்க்கைச் சிக்கல்களையும் அழகாக, உணர்வு பூர்வமாக கூறுகிறது. எனினும் தமிழ் நாட்டில் நிலத்தைக் கூறுபோட்டு விற்றவனும் அவனேயாக இருப்பது, அதாவது பெரியநிறுவனங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் போது போராடும் குணமும், தானாக கூறு போட்டு விற்க வரும் போது கொண்டாடிக்கொண்டும் அல்லவா இருக்கிறான்? இந்த முரணை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பொதுவாக நிலம் என்பது விவசாயத்திற்கானது என்பது மாறி ஒரு முதலீட்டுக்கானது என்கிற இடத்துக்கு இப்போது வந்துவிட்டது. பெருந்தொகையை கண்ணில் காட்டும்போது ‘மண்ணே தெய்வம்’ என்றிருப்பவனைக்கூட மயக்கமடையச் செய்துவிடுகிறது. நிறுவனங்கள் பெருமளவில் ஆக்கிரமிப்புகள் செய்கிறபோது அது பெரிய சமூகப் பிரச்சைனையாக கவனம் கொள்கிறது. கூறு போட்டு விற்கும்போது சிறு சிறு அளவில் நடைபெறுவதால் தனிமனித அளவில் சுருங்கி விடுகிறது. அதுமட்டுமல்லாமல் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும்போது அதன் மதிப்பை அரசு அல்லது நிறுவனங்கள்தான் நிர்ணயிக்கின்றன. அவைகள் சற்றேறக்குறைய அடிமாட்டு விலைக்கு அமைந்து விடுவதால் பிரச்சினையாகிறது. ஆனால் தனித்தனியாக கூறுபோட்டு விற்கும் போது விற்பவன் விருப்பப்படி விலை நிகழ்கின்றன. அந்த அளவில் பெரும் தொகையை பெற்றுக் கொள்வதில் பரிமாற்றங்கள் கமுக்கமாக போய்விடுகின்றன.

கதை கவிதை நாவல் இதில் தங்களுக்கு நிறைவு தருவது?

கதை கவிதை நாவல் இன்னும் நடுநாட்டுச் சொல்லகராதி என எனது படைப்புப் பணிகள் எல்லாமுமே என்னை நிறைவாகவே வைத்திருக்கிறது. அப்படி இருப்பதால்தான் தொடர்ந்த எல்லாவற்றையுமே கையோடு கொண்டுவந்த படியே தான் இருக்கிறேன். வயது, குடும்ப சூழல் போன்றவற்றால்  நாவல் போன்றவைகள் எழுதும் போது கூடுதல் காலம் தேவைப்படுகிறது தவிர மற்றபடி எல்லா படைப்புகளும் என்னை நிறைவாய்தான் வைத்திருக்கின்றன.

கிராமத்துக் கலைகளில் கவர்ந்தது?

கிராமத்துக் கலைகளில் என்னை மிகவும் கவர்ந்தது தெருக்கூத்துதான். அதுமட்டும்தான் இவர்களின் வாழ்க்கையில் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. தொழில் முறையாக ஆடும் தெருக்கூத்து சமாக்கள் நிறைய இருந்தாலும் அப்பாக்கள் தாத்தாக்கள் காலத்தில் ஒவ்வொரு ஊரிலும் சமாப் போட்டு கூத்து ஆடியிருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்களும் புருதி எழுதி வைத்து மனப்பாடம் செய்து தெருக்கூத்தில் எதாவது ஒரு வேஷத்தில் ஆடியிருக்கிறார்கள். ஏர் ஓட்டுவது போல், முந்திரிக் கொட்டைப் பொறுக்குவது போல் இவர்களுக்கு தெருக்கூத்தும் வாழ்வில் ஒரு அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது. கொல்லை வெளிகளில், முந்திரிக் காடுகளில் இவர்களது பாட்டும் வசனமும் தெருக்கூத்து அல்லாத காலங்களிலும் வெளியெங்கும் வேஷங்கட்டிக் கொண்டு நிற்கும்.

ஒப்பாரிப் பாட்டு வகை நம்மை விட்டு அழிவதை எப்படி உணர்கிறீர்கள்?

ஒப்பாரிப் பாட்டு வகை அழிவதை  சக மனிதர்கள் மீதாக சமூகம் வைத்திருக்கும் அக்கறை, பாசம் இவைகள் குறைந்து வருவதாகவே உணருகிறேன். ஒருவரைப் பற்றி சொல்வதற்கும், பேசுவதற்கும் நிறைய விஷயங்கள் இருந்தன. அவர் இறந்துவிடுகிற போது அவர்களின் மேன்மையை, சிறப்பை எளிதில் மறந்துவிட முடியாது.

முன்பெல்லாம் அந்தி எழவு என்கிற ஒரு சடங்கு சமூகத்தில் இருந்தது. மாலை நேரங்களில் இறப்புக் கொடுத்தவரின் இல்லத்திற்கு சென்று அவரின் தாயாரையோ, அம்மாவையோ கட்டி அழுதுவிட்டு வருவார்கள். கருமகாரியம் வரை இந்த சடங்கு நடந்து கொண்டுவரும். இப்படி செய்வதால் இறப்பு கொடுத்தவரின் மனத்துயரை, இறுக்கத்தை இறக்கி வைக்க ஏதுவாக மிகக்குறுகிய காலத்தில் சமூக நீரோட்டத்தில் அவர்களும் இயல்பாய் கலந்து கொள்ள வகை செய்யும். இப்போதெல்லாம் அந்த சடங்கு முற்றிலுமாய் நின்று போய்விட்டது. ஒப்பாரி நாங்கள் கூட்டாக இருக்கிறோம் ஒன்றும் கவலைப்படவேண்டாம் என்கிற பெண்களின் சார்பாக சமூக தேறுதலை கொடுக்கக் கூடியது.

இப்போதெல்லம் மறுநாளில் நடக்கிற பால்தெளி என்கிற சடங்குமுறை முற்றிலும் மாறி அன்றே முடித்துவிடுகிற ‘ஒடம்பால்’ வந்து விட்டது. அழுவோ தொழுவோ இறப்புக் கொடுத்தவர் தானாக தேறி வந்து கொண்டால்தான் உண்டு. ஒருவரின் மரணம் ஒன்றும் சொல்வதற்கில்லாமல் ஊமையாகவே முடிந்துவிடுகிறது.

கூத்து இன்ன பிற தமிழகக் கலைகள் அழிந்து வருவது, தமிழினத்தின் அடையாளத்தை இழப்பதாக ஆகாதா?

இழந்துதான் போகும்.

மாறிவரும் கலாச்சார சூழல் ஒரு பக்கம் என்றாலும் தமிழின் கலைகள் அழிந்து போவதற்கு திராவிட இயக்கங்களின் எழுச்சி ஒரு முதன்முதல் காரணமாக ஆதிமுதலே அமைந்துவிட்டன. குறிப்பாக தமிழினத்தின் கலைகளான உடுக்கை, பம்பை, சிலம்பம், தெருக்கூத்து, கரகம், பொய்க்கால்குதிரை போன்ற கலைகள் யாவும் தெய்வத்தின் பெயரால் அல்லது தெய்வங்களின் பெருமைகளை பாடுபொருட்களாக கொண்டவைகளாகத்தான் இருந்து வந்தன. சாமியில்லை என்கிற நிலைப்பாட்டைக் கொண்ட திராவிட இயக்கங்களின் ஆட்சியில் தெய்வங்களுக்கு எதிரான கருத்துகள் மேலோங்க மேலோங்க இவைகளை உள்ளடக்கிய கலைகளும் அழிய தலைப்பட்டு விட்டது.

அடுத்து நமது சினிமாவும் ஊடகங்களும் இதை கூடிய சீக்கிரத்தில் ஊற்றி மூடுவதற்கு கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றன. எந்தவொரு பண்டிகை நடந்தாலும் தொலைக்காட்சிகளில் நடிகர், நடிகைகள் தான் நிறைத்துக் கொண்டு நிற்கிறார்கள். அரசியல் சினிமாவிலிருந்து வருவதால் ஆள்பவர்கள் சினிமாக்காரர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஆயிரத்தில் ஒரு பங்குக்கூட நம் தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு கொடுப்பதில்லை.

நிறைய கலைகள் செத்துப் போய்விட்டன. மீதி இருப்பவைகளும் பாலுக்கு செத்த பிள்ளையாய் கண்ணில் உயிரை வைத்துக் கொண்டு கிடக்கின்றன. ஒரு இனத்தின் கலைகள் அழிந்து போய்விட்டால் அந்த இனமும் அழிந்துதான் போகும்.

நடுநாட்டுச் சொல்லகராதி போன்று வட்டாரசொல்லகராதிகள் போன்று கடந்த பத்தாண்டுகளில்தான் வெளிவருகிறது. பல நூறு ஆண்டுகளாக தமிழ் அகராதி தொகையாகராதி, பேராகராதி, நிகண்டு என சொற்செறிவுகளின் மொத்தமாக இருந்ததை நாம் மொழியின் ஆழத்தை இழந்து பகுதி மொழி சொற்பதிவுகளே போதும் என்ற மன நிலையை உருவாக்கிவிடாதா?

வட்டார வழக்கு அகராதி வருகையால் மொழிக்கு இன்னும் கூடுதல் அதிகாரத்தை வழங்குவதாகத்தான் அமையும். நிறைய வளமான சொற்கள் மொழிக்கு கிடைக்கும். பாசன ஏரியின் கலுங்கின் (மதகு) அடித்திறப்பிற்கு சேத்துவாரி, சேறடிக் கட்டை, சேத்துமடை பலவாறான சொற்கள் நடுநாட்டு வட்டாரத்தில் உள்ளன. இது போன்று இன்னும் பலவட்டாரங்களில் பல சொற்களை கொண்டிருக்கலாம். அதுபோல் சுடுகாட்டில் பிணத்தின் வசத்தை மாற்றி எடுத்துச்செல்கிற நுழைவாயில் இடத்திற்கு அரிச்சந்திரன் முடக்கு, அரிச்சந்திரன் மறைப்பு, பாடத் திருப்பி, பாட மாத்தி என பல்வேறு பெயர்கள் வழங்குகின்றன. இப்படியான சொற்களால் மொழிக்கு பலம் தானே.

நீர் நிறைந்த ஏரியின் மதகில் தண்ணிர் திறக்கவேண்டும் என்றால் அடியில் போய் நீருக்கடியில் மூழ்கிதான் திறக்க வேண்டும். திறக்கவும் சிரமம். திறந்து விட்டாலும் சீராக இல்லாமல் அளவுகடந்த தண்ணிர் வெளியேறும். இதற்கு மாற்றாக திறக்க எளிதாகவும் குறைந்த அளவில் தண்ணீர் வெளியேறுகிறமாதிரியும் மதகின் மேல் புறத்தில் ஒரு திறப்பு வைத்திருப்பார்கள். அதற்கு நாழிவாசல் என்று பெயர். இந்த சொல்லானது தமிழ் லெக்சிகனில் கூட இல்லை. எம்நடுநாட்டுப் புறத்தில் இருக்கிறது. ஆக அரிதான சொற்களை தேடிப்பிடித்து வழக்கத்தில் கொண்டு வருவதற்கும் வட்டார அகராதிகள் முயல்கின்றன.

ஆனால் இந்த பயன்பாடெல்லாம் தமிழ் சூழலில் நிகழும் என்கிற நம்பிக்கையெல்லாம் எனக்கில்லை. அதற்கு மேல் நமது மொழிப் புலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத அரசும் அதற்கு மேல் பந்தலில் போட்ட சுமையாய் நிற்கிற தமிழ் பேராசிரியர்களும். இந்த கந்தரகோலத்தில் வட்டார வழக்கு அகராதிகள் நீங்கள் பயப்படுவது போல் எந்த இக்கட்டையும் மொழிக்கு ஏற்படுத்திவிடாது என்பது என் எண்ணம்.

அடுத்த படைப்பு எதைக் குறித்து என குறிப்பிடமுடியுமா?

அடுத்து பேரழகி என்கிற நாவலை எழுதிக்கொண்டிருக்கிறேன். தோழியின் திருமணத்திற்கு வந்த ஒரு அழகான பெண்ணின் அழகில் மயங்கி அழகழகாய் புகைப்படங்களை எடுக்கிறான் ஒரு புகைப்படக்கலைஞன். அதில் ஒரு அழகான அவளின் புகைப்படத்தால் அவளது வாழ்க்கையில் நடக்கிற சிக்கல்களை, நடப்புகளை சொல்கிற நல்ல நாவல். போன ஆண்டிலேயே முடித்துவிட நினைத்தேன். இடையில் நடுநாட்டுச் சொல்லகராதி கூடுதல் சொற்களுடன் மீளுருவாக்க வேலை நடந்ததால் தாமதப் பட்டுவிட்டது.

ஒரு பேட்டியில் உங்களுடைய எழுத்தை பிறரிடம் கொடுத்து வாசித்து அவர்கள் சொல்லும் விமர்சனங்களில் தேவையானவற்றை  திருத்தம் செய்து பின்னர் வெளியிடுவதுதான் படைப்பு சிறப்பாக அமைய உதவும் எனக் கூறியிருந்தீர்கள். யதார்த்தத்தில் படைப்பவனின் உலகத்தை, அவனின் மனவோட்டத்தை, பிறர் உணர முடியுமா? படைப்பு வெளிவருவதற்கு முன் பிறர்  விமர்சனத்தை அடிப்படையாக வைத்து திருத்துவது படைப்பை நீர்த்துப் போகச்செய்யாதா?

பொதுவாக கரைக்கிறவன் ஒன்றை நினைத்துக் கொண்டு கரைத்தால் குடிக்கிறவன் ஒன்றை நினைத்துக் கொண்டு குடிப்பான் என்பார்கள். படைப்பும் அப்படித்தான் நான் உணருகிறேன். நாம் என்னதான் சிறப்பாக எழுதினாலும் அதிலுள்ள சிற்சில குறைகள் நமக்கு தெரியாமல் போய்விடுவதற்கான பாதிப்பு நிறையவே உண்டு. அதை அச்சாக்குவதற்கு முன்பு பிறரிடம் படிக்கக் கொடுக்கையில் முடிந்தவரை குறைகள் நீங்கி செழுமையடையலாம். அது நாம் படிக்கக் கொடுப்பவரை பொறுத்தது. சொல்கிற கருத்து சரியாக இருக்குங்கால் அதை ஏற்றுக்கொள்ளலாம். பிரதிகளை குட லாப்ரேஷன் செய்பவர்களிடம் நாம் இழந்துதான் போக வேண்டிவரும். எனக்கு அப்படியெல்லாம் இதுவரை ஏற்பட்டதில்லை.

என்னைப் பொறுத்தவரையில் ஒரு சிறுகதை எழுதினால்கூட யாரிடமாவது காட்டி கருத்துக் கேட்டுத்தான் வெளியிடுவேன். இதுகாறும் அந்த செயற்பாடு எனக்கு  நன்மை பயப்பதாகவே இருந்து வருகிறது.

 

பிற படைப்புகள்

Leave a Comment