சமகால கொங்கு மண் படைப்பாளிகளில் தனக்கானதொரு பிரத்யேகமான இடத்தினை நிறுவிக் கொண்டவர் வா.மு.கோமு. திருப்பூர் பின்னலாடைத் தொழில் வளர்ச்சிக்குப் பிறகு அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிகழ்ந்த கிராமிய வாழ்வியல் மாற்றத்தை எழுத்தில் கொண்டு வந்தவர். கிராமங்கள் மீதான புனிதப்படுத்தப்பட்ட பிம்பத்தை நகைப்புக்குள்ளாக்கி அசலான கிராமியத்தை அப்படியே கண் முன் விரித்தவர். இவரது எழுத்துகளைப் போலவே பேச்சிலும் எள்ளல் இயல்பாக வெளிப்படுகிறது. தீவிரமான உரையாடலை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளோடு சென்றோம். ஆனால் வெகு இயல்பான, கலகலப்பான உரையாடலாய் அது இருந்தது…
உங்கள் குடும்பப் பின்னணியிலிருந்து தொடங்கலாம். உங்களது தந்தை முத்துப்பொருநன் தீவிர இலக்கிய வாசிப்பாளர் மற்றும் கவிஞர் என சொல்லியிருக்கிறீர்கள். உங்களது பதின் பருவ நாட்களிலேயே கல்குதிரை, செம்மலர், தாமரை, சிரித்திரன் அஃ போன்ற சிற்றிதழ்களை பார்த்ததை நினைவு கூர்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கான எழுத்துக்கான தொடக்கப்புள்ளி அதுதான் என்று சொல்லலாமா?
தந்தையிலிருந்து தொடங்குவது இச்சமயத்தில் கூட மகிழ்ச்சியாக இருக்கிறது. என் தந்தையார் அச்சமயத்தில் தமிழகத்தில் வெளிவந்து கொண்டிருந்த அனைத்து சிற்றிதழ்களுக்கும் சந்தா கட்டி நக்குணூண்டு கிராமத்துக்கு வரவைத்தவர். எண்பதுகளின் தொடக்கத்திலிருந்து நான் தினமும் என் வீடு வரும் சிற்றிதகளை பார்த்திருக்கிறேன். எனக்கான தனி புரிதல்களுடன் நான் வாசிக்க ஆரம்பித்தது எண்பதுகளின் இறுதியில்தான். முன்பாக ராஜேஷ்குமார், பி.கேபி, சுபா இவர்களின் தீவிர வாசகன் நான். இவர்களுக்குப் பிறகுதான் என் தந்தையாரின் சேமிப்பில் இருந்த சுஜாதாவின் நாவல்களை வாசித்தேன். திருடி வாசித்தேன் என்பதே இங்கு பொருந்தும். என் திருட்டு வேலையை உணர்ந்தவர் உலகின் மாபெரும் திருடனாய் இருந்தார். அவ்வப்போது ஒரு குயர் நோட்டில் நான் கொலைகள் பல செய்து துப்பறிந்து கொண்டிருந்தேன். சிலவற்றில் காதலைப் பிழிந்து ஊற்றிக் கொண்டிருந்தேன். காதலை அப்படி நான் பிழிவதற்கு டி.ராஜேந்தரின் திரைப்படங்கள் கூட உதவின. அவற்றை நானறியாமல் அவரும் சுட்டு வாசித்து மகிழ்ந்திருக்கிறார். ஒரே வீட்டில் இரண்டு புத்தகத் திருடர்கள்!
அச்சமயத்தில் (70-பதுகளின் தொடக்கம்) இத்தனை புத்தகங்கள் அவர் வாசித்தும் மகிழ்ந்தும் இருக்க யார் அவரைத் தூண்டியது? யார் அந்தத் திரியை பற்ற வைத்தது? என்று இன்றுவரை தெரியவில்லை எனக்கு. அந்த ஆள் இன்று உயிருடன் இருந்தால் அல்லது இருப்பது தெரிந்தால் அந்த ஆளை நான் நட்பு அடிப்படையில் சென்று சந்தித்து சொறுவி விட்டு வரவேண்டும். நக்குணூண்டு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியில் இருந்தவர் பொட்டாட்டம் அந்த வேலையை மட்டும் பார்த்திருக்கலாம். அதையும் முழுமையாக முடிக்க இயலாதபடி மரித்துப் போனார். நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ சரியாய் ஒட்டாமலிருக்க அவரது இலக்கிய வாசிப்பு பயன்பட்டிருக்கிறது. ’இவிங்களுக்கெல்லாம் என்னா தெரியும்?’ என்கிற கெவுருத்தியை அவரிடம் வளர்த்தியிருக்கிறது. தனக்கு உடல்நிலையில் கோளாறு இருக்கிறது என்றும் அதற்கு என்ன பண்டலாமென்றும் அவர் யாரிடமும் விசாரியாமல் அவராக மருத்துவமனை சென்று தவறான மருந்துகளை உண்டு கடைசியில் கிட்னி செயலிழந்து விடைபெற்றார். அவர் கவிஞராக தன்னை வளர்த்திக் கொள்ள முயற்சிகள் பல செய்தவர். மாடியில் ஓலைகளால் வேயப்பட்ட குடில் அமைத்து தன் பிற்காலத்தில் புனைவு எழுத்தின் பக்கமாய் நகரும் திட்டமெல்லாம் அவரிடம் இருந்தது வெட்டியாய்!
நானும் அவருடனேயே கிளம்பியிருக்க வேண்டியவன். காசத்தின் பிடியில் சிக்குண்டு அவரின் பொறவுக்கே சென்றிருக்க வேண்டியவன். கொஞ்சமாய்த் தேறி வந்ததும் முதல் வேலையாக சேகரிப்பில் இருந்த அவரது புத்தகங்களை எடைக்குப் போட்டுப் பிழைத்தேன். நீங்கள் கேட்ட புள்ளி அதன் பிறகுதான் வீரியமாக வெளிப்பட்டது.
பாலியல் சார்புடையவற்றைப் பேசும் கதைகளை நீங்கள் கையாண்டது தனித்துவமான எழுத்தை முன் நிறுத்த வேண்டும் என்பதற்கா? அல்லது உங்கள் இயல்பில் இருந்து எழுந்ததா?
இரண்டும் கூடிய நிலைதான். என்னிடம் இன்னமும் தனித்த திறமைகள் பல இருக்கலாம். சிலவற்றை சிலர் கண்டறிந்திருக்கிறார்கள் அப்போது. தஞ்சையில் சுகன் என் கதைகளை ரசித்து அவரது சிற்றிதழில் வெளியிட்டார். அடுத்து மனுஷ்யபுத்திரன் வந்தார். நான் ரொம்ப ரொம்ப பழைய பார்ட்டி என்பது யாருக்குமே தெரியாது. மண்பூதம், கள்ளி வந்த சமயத்தில் நான் புதிய எழுத்தாளன் ஆனேன். சிற்றிதழில் எழுதும் சுதந்திரத்தை நாவல் வடிவிலும் எனக்கு வழங்கினார் மனுஷ்யபுத்திரன். எனது கள்ளி நாவல் சரியாகப் போகவில்லையோ! என்ற கவலை எனக்கிருந்தது. பதிப்பாளருக்கு என் நாவலால் நட்டமாகி விட்டதோ? என்ற கவலையில் துரும்பாய் இளைத்து விடுவேனோ? என்ற பதட்டத்தில் திரிந்தேன் ஒரு வருட காலம். பின்பாக நான் சாந்தாமணியை எழுதினேன்.
சாந்தாமணி என் முதல் காதலி. அவளுக்காக எண்பதுகளின் இறுதியில் நோட்டு நோட்டாய் கவிதைகள் எழுதியவன். சாந்தாமணி ‘அன்புள்ள ஆத்தான் கதல் கதல் கதல்’ என்று எழுதுபவள். சாந்தாமணி நாவல் வெளிவந்தபோது நானும் மனுஷ்யபுத்திரனும் இணைந்து எழுதிய நாவல் என்றார்கள் என் சோப்பு டப்பா வாயிலாக! (அலைபேசி) நான் என்ன சொல்வது? ’ஆமாங்க பாஸ்! கண்டுபுடிச்சுட்டீங்க!’ என்பேன். பின்பாக மங்கலத்து தேவதைகள்! உலகமயமாக்கலால் கிராமியம் சென்று கொண்டிருக்கும் பாதை எது? என்று தெள்ளத் தெளிவாக சொல்லப்பட்ட நாவல் மங்கலத்து தேவதைகள்.
சாந்தாமணியிலும், மங்கலத்து தேவதையிலும் எல்லாமே ஓவர்! என்றவர்கள் எல்லோரும் அதனை ரசித்து இரண்டு நாட்களில் வாசித்து முடித்தவர்கள். புதிய வாசிப்பாளர்கள் கூட சாந்தாமணியை கீழே வைக்காமல் வாசித்து முடித்திருக்கிறார்கள்.
எல்லாக்கதைகளையும் உண்மையை கலந்து கட்டி எழுத்தாக்குவது ஆரம்பத்திலிருந்தே பழகி விட்டமையால் இப்போது எதையும் எளிதாக எழுத கைவரப்பெற்றிருக்கிறேன். எழுத்தே வராத நண்பன் கூட ‘இதை எழுதேண்டா?’ என்று குப்பையாய் எதையோ போதையில் சொல்வான். சரி! என்று சொல்லி நகர்கிறேன். இன்னமும் நானே உணர்ந்த விசயங்களை சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன். அது பாலுறவியலாகட்டும் அல்லது வாழ்வியலாகட்டும்.
உங்களை எழுதத் தூண்டியவர்கள் என அசோகமித்திரனையும், ராஜேந்திரசோழனையும் குறிப்பிடுகிறீர்கள்… ஆனால் அவர்கள் இவ்வளவு வெளிப்படையாக பாலியல் சார் கதைக்களத்தை அணுகவில்லையே?
ராஜேந்திரசோழனின் எழுத்துக்களில் கிராமியம் தூக்கலாய் இருந்தது. வாசிப்புக்கு என் தந்தையார் ஒரு எழுத்தாளரின் அனைத்து புத்தகங்களையும் தன் சேகரிப்பிலிருந்து கொடுப்பார். முதலாக அசோகமித்திரனை அவர் முழுமையாகத் தந்தார். அடுத்து அஸ்வகோஸ். அஸ்வகோஸ் எனக்கு பெயரே பிடித்தமானதாய் இருந்தது. ராஜேந்திரசோழனும் அவர்தான் என்பதை தந்தையார் விளக்கினார். அசோகமித்திரனிடமும், சுஜாதாவிடமும் நான் கற்றுக் கொண்டது சிறுகதைகளின் தொடக்கத்தையும் முடிவையும் மட்டுமே! ஒரு கதை எங்கிருந்து தொடங்க வேண்டும்? எங்கே சென்று நிறுத்த வேண்டும்? அவ்வளவுதான்.
ராஜேந்திரசோழன் எனக்கு பிடித்தமான எழுத்தாளராய் இருக்கக் காரணமே என் கிராமிய வாழ்வுதான். அவருக்குப் பிறகும் சிலர் கிராமிய வாழ்வை பதிவு செய்தார்கள். ஆனால் அவர் அளவுக்கு அந்தக் கதைகள் என்னை ஈர்க்கவில்லை. இந்த இருவரையும் நான் வாசிக்காமல் போயிருந்தால் இந்த நேரம் நான் ஸ்னேக் ஐ டிடக்டிவ் ஏஜென்ஸி வைத்து பிரவீன் பிரீத்தி இருவரையும் பைக்கில் பறக்க வைத்து (இருவருக்கும் இருபத்தைந்து வருடமாகியும் இன்னமும் கல்யாணமே ஆகியிருக்காது!) துப்பறிந்திருப்பேன்.
ராஜேந்திரசோழனிடம் பாலுறவியல் தூக்கலாக வரவில்லை. அது மறைபொருளாக மட்டுமே இருந்திருக்கிறது. சாருநிவேதிதாவின் முதல் நாவல் ’எக்ஸிஸ்டென்சியலிசமும் ஃபேன்சி பனியனும்’ நாவலில் மூக்கு நோண்டும் விசயம் வரும்! அதை ரசித்தேன். அந்தப்பழக்கம் எனக்கும் அந்த சமயத்தில் இருந்ததால்.
எந்தக் கதைக்களனை எழுத்தாளன் அணுகினாலும் பூரண திருப்தியை எழுதி முடித்த பிறகு கூட அடைய முடிவதில்லை. அவற்றில் பாக்கி இருப்பதாய் எண்ணி முழு மன நிறைவு கொள்ளாமல் இருப்பான். அவன்தான் எழுத்தாளன். பாலுறவியலை நான் அணுகியிருக்கிறேன் என்றால் அதை பூரணமாக நான் இன்னமும் சொல்லி முடித்துக் கொள்ளவில்லை. ஏற்கனவே சொல்லி முடிக்கப்பட்ட விசயங்களை புதிதாக எழுத வருபவன் தொடவேண்டிய அவசியமில்லை. பழையவற்றில் உள்ள போதாமைகளை முடித்து வைக்க முயற்சியெடுக்கிறேன். என்னிலிருந்து ஒருவர் நான் சொல்லியவற்றில் போதாமைகள் இருப்பின் சொல்ல வரலாம்! இது தொடரும்.
ஜி.நாகராஜனின் தாக்கம் உங்களது எழுத்தில் இருக்கிறது என்று சொல்லலாமா? ஏனென்றால் உங்களுக்குள்ளான ஒற்றுமை நீங்கள் இருவருமே நாயகப் பாத்திரமாக முன் வைத்தது உங்களைத்தான்…
இப்படியெல்லாம் துப்பறிந்து கண்டறிவதும், நான் நினைப்பதே சரியென்று சொல்வதும், சரியாய் இருக்குமென நம்பிக் கொள்வதும் இங்கே தொன்று தொட்டு நடந்து வருகிறது! போகிற போக்கில் எடுத்து வீசுவது என்பார்கள் இதை! விமர்சிக்க கூடிய நல்ல வாசகர்கள் மெளனம் காக்கிறார்கள். ஜி.நாகராஜன் என்கிறபோது கந்தன் வருகிறான். கோமு என்கிற போது பழனிச்சாமி வருகிறான். புதுமைப்பித்தன் இவருக்கும் முன்பு எழுதியவர். அவர் தமிழில் போதாமைகளை உணர்ந்து தமிழுக்கு சில நல்ல மொழிபெயர்ப்புகளையும் தந்திருக்கிறார். ஜி.நாகராஜனுக்கு ஆங்கிலம் தண்ணிபட்ட பாடு. தண்ணி போட்ட பாடு. கந்தனை அவர் தாண்டவில்லை. தாண்டுவதற்கு முயற்சியும் எடுக்கவில்லை. எழுத்தாளனுக்கு நீட்சி என்றொன்று வேண்டும் என நினைக்கிறேன். நான் பழனிச்சாமியையும் தாண்டி விட்டேன். இப்போது என் புத்தகங்களில் வரும் பழனிச்சாமி நானல்ல! இவன்தான் என நினைத்துப் படிக்கும் பழக்கம் நீடிக்கவே கூடாது. அதற்கு வழியையும் நான் ஏற்படுத்தவில்லை.
‘குட்டிப்பாப்பா – ஒரு பாலியல் தொழிலாளியின் சரிதம்’ பரவலாகப் பேசப்பட்ட எனது சிறுகதை. நிச்சயமாக நான் ஜி.நாகராஜனை வாசித்து முடித்து விட்டு வந்து பதினைந்து வருடங்களுக்கு பிற்பாடு எழுதிய கதை. பலராலும் பேசப்பட அக்கதையில் விசயம் இருக்கிறது. ஜி.நாகராஜனை அந்த இடத்தில் ஒரு சிறுகதை வழியாகத் தாண்டுகிறேன். பலரும் பேசவேண்டும் என்பதற்காக நான் பல பாப்பாக்களின் சரிதத்தை எழுதத் துவங்கலாம். ஆனால் அவைகள் எல்லாமே செய்யப்பட்டவைகளாக மாறும் அபாயம் நேரிடும்.
ஒன்று சொல்லத் தோன்றுகிறது. தனக்கான அனுபவங்களை எழுதி முடித்த பின் நிறுத்திக் கொள்வது ஒரு வகை. மற்றொன்று அதை தொடர்வதற்கு சாமார்த்தியமே இல்லாமல் தொடர்வது. இறுதியாக ஜி.நாகராஜனின் தாக்கம் என் எழுத்தில் இதுவரை இல்லை என்றே நம்புகிறேன். அவரின் எந்தக்கதைகளும் என் ஞாபகத்தில் இல்லை. டெர்லின் சட்டை அணிந்த மனிதர் ஞாபகத்தில் இருக்க அவர் என்ன செய்தார்? என்று கூட ஞாபகமில்லை. இதை மறுதலிப்பதாக நினைக்க வேண்டியதில்லை. நாம் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்க அவசியமில்லை என்கிறேன்.
நார்வீஜியன் வுட் என்கிற நாவலை அறுபதுகளின் இறுதியில் முரகாமி எழுதியிருக்கிறார். அதை தமிழில் நாம் வாசிக்க 2015 வரை காத்திருக்க வேண்டியிருகிறது. “என்னை நினைச்சு ஒரு நாளாச்சும் சுய இன்பத்தில் ஈடுபட்டிருக்கியா” என்று காதலி தன் காதலனிடம் வினவுகிறாள். அதற்காக அவனைத் தூண்டுகிறாள். சந்திக்கையில் எல்லாம் அந்த அனுபவம் எப்படி இருந்தது? என்று ஆர்வமாய் வினவுகிறாள். நாம் எந்த அளவில் பின் தங்கியிருக்கிறோம் என்பது அந்த நாவலை வாசித்து முடித்த பிறகு உணர்ந்தேன்.
சாதியக்கட்டமைப்பைத் தவிர்த்து விட்டு நாம் எந்த நிலப்பரப்பையும் எழுதி விட முடியாத சூழலே இருக்கிறது. உங்களது பெரும்பாலான கதைகளில் தலித் வாழ்வியல் மற்றும் அவர்களின் உரையாடல்கள் இருக்கின்றன. அம்மக்களுடனான உங்களது உறவு எப்படிப்பட்டது?
பெரும்பாலான கதைகளில் அவைகள் இருப்பதற்குக் காரணம் அவர்களோடு ஒட்டி என் வாழ்வும் நகர்ந்து வந்ததுதான். தலித்திய படைப்புகள் என்பது இன்னதுதான் என்ற வரைமுறைகளை மறுதலித்து அது முற்றிலும் வேறானது என்பது என் கதைகளில் காணக்கிடைக்கலாம். அது வலிந்து எழுதப்பட்டதல்ல. உள்ளது உள்ளபடியே சொல்லிச் செல்வது. பூமணி ‘வெக்கை’ எழுதுகையில் இது தலித்தியப் படைப்பு என்று சொல்லி எழுதவில்லை. படைப்பை படைப்பாகப் பார்க்காமல் அரசியலாகப் பார்க்கும் பழக்கமெல்லாம் இப்போதுதான் முளைத்திருக்கிறது. தலித்தியம் பேசப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் எனது கள்ளி நாவல் வெளிவந்தது. அது என் நாவல்களில் சிறந்த படைப்பு என்கிறார்கள். வாழ்வு முறைமையை அப்படியே சொல்லிச் செல்வது இலக்கியம் என்றால் அந்தளவில் அந்த வெற்றியை நானும் கொண்டாடுகிறேன். அம்மக்களுடன் உறவே இல்லாமல் அப்படி ஒரு படைப்பு வந்திருக்க சாத்தியமில்லை. ‘எட்றா வண்டியெ’ நாவலில் வரும் சாமிநாதன் இன்று மூன்று குழந்தைகளுக்கு தகப்பன் என்று நான் சொல்கையில் நீங்கள் நம்பலாம்.
நான் கற்று வந்த படைப்புகளில் சாதியம் தூக்கலாகவே இருந்தன. அந்தந்த நிலப்பரப்பின் ஆணிவேராகவும் சாதியம் இருந்தன. ஏனோ இவைகளை இப்போது திரும்ப எழுதுவதில் எனக்கு சலிப்பாய் இருக்கிறது. நான் இம்மாதிரியான முட்டுக்கட்டைகளில் இருந்து விடுபடவே யோசிக்கிறேன்.
ஒடுக்கப்படுகிறவனின் வலியை ஒடுக்கப்படுகிறவானால்தான் உயிரோட்டமாக எழுத முடியுமா?
ஒடுக்கப்படுகிறவன் முதலாக படிப்பறிவு பெற்றவனா? தான் ஒடுக்கப்படுகிறோம் என்றே தெரியாமல் வாழ்பவன் அவன். அவனைப்பற்றியும் அவன் வாழ்க்கை முறை பற்றியும் நேராகவும் அரசல் புரசலாக அறிந்தவர்களும் எழுத்தாளர்கள் அல்ல! ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து தொழில் ரீதியாக மேலே வந்தவனுக்கும் கதை எழுதிக் கொண்டிருக்க நேரமில்லை. நேரமின்மை காரணமாக தன் தாத்தா அப்பன் கால விசயங்களை நினைத்து கறுவிக் கொள்ளவும் நேரமில்லை. பின்னால் திரும்பிப் பார்க்க அவன் நினைக்க மாட்டான். இந்த வாழ்க்கை வாழ உகந்ததுதான் என்ற முடிவில் நகருவான்.
ஒடுக்கப்பட்டவன் எழுத வருகையில் அவன் எழுத்தில் வெறும் வெட்டியான கோபத்தை மட்டுமே கண்டேன். அது ஒரு பதிவு என்கிற வகையில் மட்டுமே பார்க்க முடிந்தது. நாம் திரும்பத் திரும்ப இந்த ஏகாந்த உலகில் இதனை பேசத்தான் வேண்டுமா? உலகின் எந்த மூலையிலும் துக்ககரமான, பரிதாபம் கொள்ள வைக்கிற விசயங்கள் நடந்தேறிக் கொண்டேதான் இருக்கும்!
அசலான கிராமிய வாழ்வு உங்களுக்குக் கிடைக்கப் பெற்றிருக்கிறது. உலகமயத்தின் காரணமான நகர்மயமாக்கலின் விளைவுகள் கிராமிய வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் என்னவாக இருக்கிறது?
பெண்கள் வீட்டை விட்டு ஊருக்குள் நுழையும் கம்பெனி வேன்களில் சம்பாதிக்க மகிழ்வாய் கிளம்புவதும், மாலையில் மகிழ்வாய் வீடு திரும்புவதும், அவர்கள் கையில் தகவல் தொடர்பு சாதனம் இருப்பதுமாய் தாக்கம் சிறப்பாகவே இருக்கிறது. தன் திருமணத்துக்கு தானே சம்பாதித்துக் கொள்வது இரட்டிப்பு மகிழ்ச்சிதான். தனக்கான வாழ்க்கை முறையை அவர்கள் இருபது வயது நெருங்கும் முன்னரே அமைத்துக் கொள்கிறார்கள்! இந்த வாய்ப்பெல்லாம் என் காலத்தில் இல்லை.
என் கதைகளின் கிளைகள் இங்கிருந்தும் உற்பத்தியாகின்றன. ஏனெனில் மேலே சொன்ன நல்ல விசயங்கள் எல்லோருக்கும் நடப்பதில்லை.
உங்களது பகுதி மக்களின் வாழ்க்கையை திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு முன் பின் என இரண்டாகப் பிரிக்கலாமா? இரண்டுக்குமான வேறுபாடுகள் என்ன?
கண்டிப்பாகப் பிரிக்கலாம். வயதுக்கு வந்ததும் சில காலம் ஆடுமாடுகள் மேய்த்து சுற்றுவதும், பட்டி ஆடுகளை விருத்தி செய்வதிலும், காடுகளில் மழைக்காலங்களில் சோளம் விதைத்து கிடந்ததும், பின்னர் மாப்பிள்ளை அமைந்தால் கட்டிச் செல்வதுமான நடைமுறையில் இருந்த கிராமியம் மாறிவிட திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சி உதவி புரிந்திருக்கிறது. அதையே குறையாகவும் பேசுகிறார்கள். வளர்ச்சி ஒரு புறம் நடந்து கொண்டே இருக்கையில் இம்மாதிரி கிராமிய அழிவுகள் நடக்கத்தான் செய்யும். இதை அனைவரும் உணர்ந்தே ஏற்றுக் கொள்கிறார்கள். தென்னை, வாழை என்று தோட்டமாய் இருந்த பகுதிகள் என் கண்முன்னே ஐயங்கார் நகராகவும், அண்ணா நகராகவும் மாறியிருக்கின்றன. அந்த நகரங்களில் எத்தனை குடிதண்ணீர் கிணறுகள் இருந்தன? அது எப்படி மூடப்பட்டு நிரவப்பட்டது? இப்போது அங்கே முளைத்து நிற்கும் கட்டடத்தின் உரிமையாளர் எதற்காக வாஸ்து கலரென்று ஆரஞ்சு வர்ணமடித்திருக்கிறார்? என்று கூட நாம் பேசலாம்.
எழுத்தாளன் ஒரு அரசியலைக் கொண்டிருக்க வேண்டும் என்கிற கருத்தில் நீங்கள் உடன்படுகிறீர்களா? உங்கள் பார்வையில் எழுத்தாளன் என்பவன் யார்?
பொழுது போக்குக்கு எழுதுபவர்களுக்கு அரசியல் தேவையில்லை என்றே நினைக்கிறேன். முன்பாக நானே பொழுது போக்குக்கு எழுத வந்தவன். அப்போது நிறையப் பிடிவாதங்களைக் கொண்டிருந்தேன். அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பது எழுத்தாளனுக்கு ஒரு காலத்தில் அழகையும் மனநிறைவையும் தந்து கொண்டிருந்தது உண்மைதான். அது இப்போது கதைக்காகாது.
உங்களது நடுகல் பதிப்பகம் மூலம் கொங்கு மண் சார்ந்த படைப்பாளிகளின் நூல்களைப் பதிப்பித்திருக்கிறீர்கள். ஒரு எழுத்தாளருக்கும் பதிப்பாளருக்குமான வேறுபாட்டை என்னவென உணர்கிறீர்கள்?
எழுத்தாளன் எப்போதுமே முழுச் சோம்பேறி. ‘எழுதுனாப் போவுது!’ என்ற மனநிலையில்தான் இருந்து வந்தான். முழுநேர எழுத்தாளர்கள் இப்போது அப்படி இருக்க முடியாது. முழுநேர எழுத்தில் வெற்றி பெற்றவராக எஸ். ராமகிருஷ்ணனை பார்க்கிறேன். முன்பெல்லாம் இது சாத்தியப்படாத ஒன்றாக இருந்தது. அவரது வெற்றி என்னையும் சில நேரங்களில் புத்துணர்வு கொள்ளச் செய்யும். அது அப்போதைக்கு மட்டுமே என்பதே என்னிடம் இருக்கும் குறை.
நடுகல் பதிப்பகம் நண்பர்கள் முயற்சியால் தொடங்கப்பட்டது. கொங்கு மண் படைப்பாளிகள் புத்தகங்கள் அதில் வந்துள்ளனதான். கள்ளம் (மறுபதிப்பு), குருத்தோலை ஆகிய நூல்களைக் கொண்டு வந்த போது அச்சகம் நோக்கி படையெடுத்து, ப்ரூஃப் பார்த்து வெளியீடு வைத்து என்று ஆத்தாவிடம் குடித்த பாலே வெளிவந்து விட்டது. எதையும் எளிதாக நினைப்பதால் நடைபெற்றுவிடும் சிரமங்கள் இவைகள். இருந்தும் இதற்கெல்லாம் அசராமல் யாரிடமேனும் லைட்டாக ஃபோனில் புலம்பி விட்டு அடுத்த பணிக்கு ஓடி விடுவேன். இதுதான் என் இயல்பு. எழுத்தாளன் பதிப்பகப் பணிகளை தன் தலையில் எடுத்து வைத்துக் கொண்டால் சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். படைப்பு மனநிலை கூட பாதிக்கும். ஆனால் அதையும் தாண்டி வருவது சவாலான விசயம்தான்.
தலித் இலக்கிய வகைமையில் எழுதப்பட்ட படைப்புகள் குறித்த உங்களது பார்வை என்ன? தலித் இலக்கியத்துக்கான தேவை இன்றளவும் இருப்பதாக நினைக்கிறீர்களா?
முன்பே சொன்னது போல நான் முழு நேர எழுத்தாளன். எனக்கு இலக்கிய வகைமைகள் பிடித்திருக்கின்றன. ஒன்றிலேயே தங்கிவிட நான் தலித் போராளி அல்ல. இதுவரை வெளிவந்த தலித்தியப் படைப்புகளை திரும்பப் பார்த்தால் தேறுவன என்று எத்தனையை வெளியில் எடுப்பீர்கள்? தலித் இலக்கியத்துக்கான தேவைகள் இன்றளவும் இருக்கிறது. என்னால் சொல்ல முடிந்ததை சொல்லி முடித்து விட்டு அடுத்த நகர்வுக்கு சென்று விட்டேன். போதாமைகளை வேறு ஒருவர்தான் முழுமைப்படுத்த வரவேண்டும்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாய் என் படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. நவீனத்துவம் உள்நுழைந்த போது அதைப்பற்றிய முழுமையான புரிதல் இன்றியே பல முயற்சிகளை சிறுகதை வடிவில் செய்திருக்கிறேன். இப்போது நவீனத்துவ புரிதல்கள் எனக்குண்டு என்றாலும் அதிகம் நவீனம் சார்ந்து எழுதுவதில்லை. எல்லோருக்குமான எழுத்தாக எழுதும் முயற்சியில் நடைமுறையில் சாத்தியப்படும் வகையில் அவைகள் இப்போது சென்று கொண்டிருக்கின்றன.
எழுத்தாளனுக்கான கருத்துச் சுதந்திரம் குறித்தான உரையாடல் சமீபமாக வலுப்பெற்றுள்ளது. பெருமாள் முருகன் மற்றும் புலியூர் முருகேசன் என இரண்டு கொங்கு எழுத்தாளர்கள் தத்தம் தங்களது கதைகளுக்காக தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு கொங்கு மண்ணின் எழுத்தாளனாக இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
எழுத்துச் சுதந்திரம் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்து, நுகர்ந்து பார்த்து கொறிப்பதற்காக எலி எடுத்துவரும் தேங்காய் பிசிறு என்று நினைத்தால் இப்படி ஏதேனும் நடக்கலாம். பிசிறில் விஷம் தடவப்பட்டிருந்தால்? பெயர், ஊரென சில கோப தாபங்களை அப்படியே பதிவு செய்தால் இது நிகழவே செய்யும். புனைவு எழுத்து பற்றி எழுத்தாளர்கள் அறிந்திருக்கிறார்கள். அதை சரியாகப் பயன்படுத்த தவறக்கூடாது! புலியூர் முருகேசனை ஒரு நண்பராக பார்க்கலாம். ஒரு விமர்சகராக வாசிப்பாளராக பார்க்கலாம். எழுத்தாளராக தோற்றுப் போனவர்.
சூழலியல் என்கிற கருத்தாக்கம் தற்போது தீவிரமாக எழுந்து வருகிறது. சூழல் குறித்த பதிவுகளை உங்கள் எழுத்தில் முன் வைக்க விரும்புகிறீர்களா?
சூழலியல் என்கிற கருத்தாக்கம் இயற்கை சீர்குலைவுக்கு ஆட்படுத்தப்படும்போது தீவிரப்படுகிறது. என் எழுத்தில் சூழலியல் பதிவுக்கான முயற்சிகளை குறைந்த அளவே இதுவரை செய்திருக்கிறேன். அதை தீவிரப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. சிறுவர் இலக்கியம் வாயிலாகவும் அதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறேன்.
பொதுக்கண்ணோட்டத்தில் கிராமிய வாழ்வியல் எனும் பிம்பம் புனிதப்படுத்தப்பட்டிருப்பதன் காரணமாகத்தான் உங்களத் கதைகள் எதிர்மறையானதாக அணுகப்ப்படுவதாக நினைக்கிறீர்களா? அதாவது உங்களின் மீது குத்தப்பட்டிருக்கும் செக்ஸ் எழுத்தாளர் என்கிற முத்திரை குறித்து…
இந்தியாவில் காதல் என்ற வார்த்தையை உச்சரித்தாலே அவன் செக்ஸ் பற்றி பேச ஆரம்பிக்கிறான் என்கிறார்கள் என்று ஓஷோ சொல்லியிருக்கிறார். இன்னமும் அவர் சொல்வது மாதிரி தன் மனைவியின் உடலைக்கூட முழுமையாக ரசித்திராவன் இருக்கிறான் என்று நான் சொல்கிறேன். என் கதைகள் எதிர்மறையாக அணுகப்படுவது குறித்து நான் கவலை கொள்வதில்லை. விசயங்களை சொல்லிவிட வேண்டும் என்கிற ஆவல்தான் எனக்கு. செய்தித்தாள்களில் நாம் பார்க்கிறோம் தினமும். வக்கிரம் ஆண்களிடத்திலும் பெண்களிடத்திலும் வளர்ந்து வளர்ந்து பெரிய விருட்சமாய் நிற்கிறது.
தெரிந்த முகம் இருக்குமோ? என்ற அச்சத்தில் காலைக்காட்சி ஓடும் தியேட்டர்களுக்கு செல்வது வழக்கம். அங்கே வரிசையில் நிற்பவர்கள் வயது முதிர்ந்தவர்கள். அவர்களெல்லாம் அங்கே ஏன் வந்தார்கள்? பெண்ணின் முழு உடலை திரையில் காண! இன்று அலைபேசியில் இந்தா! என்று வீசி எறிந்து கிடக்கிறது! என் கதைகள் கிராமங்களில் வாசிக்கப்பட்டால் கிராமவாசிகள் அதனை அதன் உண்மைத் தன்மையை உணர்ந்து கொள்வார்கள். என் கதைகள் கிராமங்களில் வாசிக்கப்படுவதில்லை. கிராமங்களை புனிதமென நினைக்கும் நகரவாசிகள் வாசிக்கிறார்கள்.
இதுவரையிலும் நான் எழுதியது பெண்களுக்காகத்தான். என் எழுத்து பெண்களுக்கான எழுத்து. இதை நான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். ஆண்களுக்கான புத்தகத்தையோ, நாவலையோ நான் எழுதத் தொடங்கவே இல்லை. பெண் எப்படி ஆணால் பயன்படுத்தப்படுகிறாள்? அதிலிருந்து அவர்கள் மீள்வதற்கான வழிகள் உள்ளனவா? இவைகள்தான் என் எழுத்துகள். ஆண் பார்வையில் இந்த நாவல்கள் வாசிக்கப்படும்போது செக்ஸ் எழுத்தாகத்தான் தெரியும்.
பாலியல் என்பது வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கம்தான் என்றாலும் அதனை அப்பட்டமாக எழுத்தில் கொண்டு வருவது நமது பண்பாட்டு சூழலுக்கு உகந்ததுதானா? உறவு மீறலை எழுதிய தி.ஜா, ஓரினச்சேர்க்கையை எழுதிய கரிச்சான் குஞ்சு போன்றவர்கள் இதன் பின்னுள்ள உளவியலையும், சிக்கல்களையும் அணுகினார்களே தவிர பாலுறவு குறித்த வர்ணனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லையே?
எழுத்தாளன் தன் மீதான பிம்பங்கள் உடைந்து விடுமோ? என்ற அச்சத்தில் பயந்து பயந்து எழுதினால் அது எழுத்துக்கு செய்யும் துரோகமென நினைக்கிறேன். சரியாகச் சொல்ல முயற்சி செய்கையில் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும். அவர்கள் காலகட்டம் ரொம்பப் பிந்தையது. சில கட்டுப்பாடுகள், ஒழுக்கம் சார்ந்த நியதிகள் இருந்திருக்கலாம். இப்போதும் அவைகள் உண்டு. நியதிகள் தளர்ந்திருக்கின்றன. ஒளிந்து ஒளிந்து சொல்லிக் கொண்டிருக்க அவற்றில் எதுவுமில்லை. பாலுறவியல் வறட்சி மிக்க இங்கே எந்த நிபந்தனைகளையும் தளர்த்தவோ, கூட்டவோ யாருமில்லை.
எளிய மனிதர்களே உங்கள் கதாப்பாத்திரங்கள்… அவர்களின் கொண்டாட்டங்களே உங்களது கதைகள்… உங்களது வாழ்க்கைச் சூழல் இப்படியான மனிதர்களை உங்களுக்கு அடையாளங்காட்டுகிறதா? இல்லை நீங்களாக உருவகப்படுத்திக் கொள்கிறீர்களா?
இதுவரையிலான என் எழுத்துகள் எல்லாமே சந்தித்த, பார்த்த மனிதர்களின் நடவடிக்கைகள்தான். உருவகப்படுத்தியும் சில நான் எழுதியிருந்தாலும் எழுத்து அந்தக் கதைகளை காப்பாற்றியிருக்கிறது. எழுத்தில் வந்து விட்டதால் அப்படி பாகுபாடு செய்து கொண்டிருக்க இயலாதுதான். மபக்கோவ், குபக்கோவ் என்றெல்லாம் கூகிளில் தட்டிப் பார்த்தால் மபக்கோவ் யார்? குபக்கோவ் யார்? அவருக்கு ஒரு நாளில் எத்தனை முறை யூரின் வரும்? எழுதிக் கொண்டிருக்கையில் அவர் வீட்டினருகே புரட்சிக்காரர்கள் குண்டு போட்டார்களா? அன்றிலிருந்து அவருக்கு காதுகேளாமை நோய் வந்ததால் மீதி நாட்களை எவ்விதம் ஓட்டினார்! என சரமாரியாய் தகவல்கள் வரும். நான் இன்னும் அப்படி நுழைந்து தேடலில் இறங்கியதில்லை. சில தகவல்கள் தேவைப்பட்டதால் ஒருமுறை கப்பல் என்று கூகிளில் தட்டினேன். டைட்டானிக் கப்பல் மூழுகியது பற்றியே வந்தன! சலித்துப் போய் வெளியேறிவிட்டேன். ஆக குபக்கோவ் குனிந்தார், மபக்கோவ் மண்டியிட்டார் என்று தனி புத்தகங்கள் போடலாம் நான்! யாருக்கு என்பதுதான் இங்கு கேள்வியே!
குடும்ப நாவல் என்கிற தலைப்பில் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். வேடிக்கை என்னவென்றால் அதில் வரும் பழனிச்சாமியிடம் கண்டிப்பாக கார் இருக்கிறது! அவன் மனைவிக்கும் தனியே கார் இருக்கிறது! காரோட்டத் தெரியாத நான் கதையை நன்றாக எழுதுவேன்.
சமகால கொங்கு மண் சார்ந்த படைப்பாளிகள் பற்றிய உங்களது பார்வை என்ன?
சமகால கொங்கு மண் கவிஞர்களை எனக்குப் பிடிக்கும். மகுடேசுவரன், இளங்கோ கிருஷ்ணன், இசை, பாலைநிலவன், வே.பாபு, சு.வெங்குட்டுவன், ஷாராஜ் என்று இந்த பட்டியல் தொடரும். அதே போல என்.ஸ்ரீராம், மு.ஹரிகிருஷ்ணன், கே.என்.செந்தில், செல்லமுத்து குப்புசாமி என்று கதைகள் படைக்கும் எழுத்தாளர்களின் பட்டியலும் நீளும். க.சீ. சிவக்குமாரின் கன்னிவாடி சமீபத்தில்தான் வாசித்தேன். அதில் நான்கைந்து கதைகள் மண்ணின் எழுத்து என்றால் இதுதான் என்று சொல்கிற மாதிரியான கதைகளாக இருந்தன. நிலக்காட்சியை தன் எழுத்தில் நிதானமாக சொல்பவர் என்.ஸ்ரீராம். காய்ந்த நிலத்தின் வெடிப்பினுள்ளிருந்து பூச்சிகளின் சப்தம் கூட கேட்கிறது. உன்னதம் என்கிற இதழை கவுந்தப்பாடியிலிருந்து பிரதிபலன்களை எதிர்பாராமல் கொண்டு வந்த கெளதம சித்தார்த்தனை நாம் ஒதுக்கவே முடியாது. அவர் மண்ணில் முளைத்த நவீன கதை சொல்லி.
உங்களது கவிதைகளை கவிதை என்கிற வடிவ இலக்கணத்துக்கான கட்டுடைப்பு என்று சொல்லலாமா?
எனது கவிதைகளை நான் கவிதைகள் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை இதுவரை. இது கவிதைதான் பார்க்க, என்பது போலான வடிவ நேர்த்திக்குள் கொண்டு வந்து வைத்து விட முடியும். கட்டுடைப்புக்கு நான் தகுதியானவன் அல்ல! அப்படி யாரேனும் அது பற்றி பேசினால் ‘‘ஆமாம் செமக் கட்டுடைப்பை நிகழ்த்தினேன் அப்போதே!’’ என்பேன்.
பெண்களுக்கான கதைகளைத்தான் எழுதி வருவதாகக் கூறுகிறீர்கள். ஆனால் உங்களது எழுத்துக்கான எதிர்வினையாற்றுபவர்களில் பெண்களே பெரும்பான்மையினராக இருக்கிறார்களே?
எதிர்வினையாற்றுபவர்களிடம் சிலபல தகவல்களை சொல்கையில் அவர்கள் அதை ஏற்றுக் கொண்ட நிகழ்வுகள் சில நிகழ்ந்துள்ளன. போக என் புத்தகங்கள் வந்தால் வாசிப்பது அவர்கள்தான் முதலாக. என்னை எழுதத் தூண்டியவர்களும், என்னை எழுத்தில் இருக்கச் செய்பவர்களும், என் எழுத்தைப் போற்றுபவர்களும் பெண்கள்தான். இதில் ஒரு சின்ன குழப்பம் எனக்கு இருக்கிறது. பாலகுமாரன் வாசகிகள் சிலர் என் எழுத்துப்பக்கம் திரும்பியதுதான் அது!
உங்களது கதைகளாகட்டும் நாவல்களாகட்டும் அதன் உரையாடல்கள் வெகு யதார்த்தமான தொணியில் கொங்கு வட்டார மொழியில் சரளமாகச் செல்கின்றன. கொங்கு மொழி குறித்த உங்களது அவதானிப்பு எப்படிப்பட்டது?
கள்ளி எழுதுகையில் நான் உரையாடல்களில் அதிக கவனம் செலுத்தவில்லை. அடுத்து வந்த சாந்தாமணி நாவலில் உரையாடல்களை நான் வேண்டுமென்றே எழுதினேன். அதை ஒரு பயிற்சியாக செய்து பார்த்தேன். என் புத்தகங்களில் தேவையில்லாத வர்ணனைகள் வராது. குட்டியூண்டு வந்தாலும் உடனே தாவிச் சென்றிருப்பேன். காதைக் கிட்டக்கே கொடுத்தால் உங்ளிடம் உண்மையொன்றைச் சொல்வேன். சினிமாவுக்கான நகர்வில் உரையாடல்கள்தான் தேவை! கொங்குமொழி என்று கூட பிரித்துப் பார்க்க அவசியமில்லை. எந்த மொழியிலும் உரையாடல்கள் அழகானவைகளாகவே இருக்கும்.
எழுத்து மட்டுமே உங்களது முழு நேர தொழில். இலக்கியத்தில் பைசா தேறாததால் வெகுஜன எழுத்துக்கு நகர்ந்ததாகக் குறிப்பிடுகிறீர்கள். ஆண்டுகள் கடந்தாலும் இலக்கியவாதியால் தன் எழுத்துகளின் வாயிலாக பொருளாதார தன்னிறைவை அடைய முடிவதில்லை என்பதை நாம் அவலம் என்றே சொல்லலாமா?
இதில் சில நெளிவு சுழிவுகள் எனக்குத் தெரியவில்லை என்று கூட எடுத்துக் கொள்கிறேன். நான் பரிசுகள் என்று வாங்கியது கிடையாது. பரிசுகள் மீது நான் கவனமும் செலுத்தவில்லை. அதை வாங்கிக் கொள்வதற்கான வழிகள் தெரியாது. நான் இருக்கும் இடம் இப்படி. எங்கும் நகரமுடியாத வாழ்வியல் சூழலில் இருக்கிறேன். வெகுஜன எழுத்து முதலாக நான் கற்றுக் கொண்டு வந்த இடம்தான். கள்ளியை, சாந்தாமணியை திரும்பவும் வெகுஜன எழுத்தாக என்னால் மாற்ற முடியும். பொருளாதார தேவையை இலக்கியம் எப்போதுமே பூர்த்தி செய்ததில்லை. ஏதாவது பணியில் இருந்து கொண்டு அல்லையில் இந்தப்பயிரை வளர்க்கலாம். முன்பு எழுதியவர்களும் அப்படித்தான் செய்தார்கள்.
12 நாவல்கள் எழுதியிருக்கிறீர்கள்… நாவலுக்கான வடிவு பிடிபட்டு விட்டதாக நினைக்கிறீர்களா? குறுகிய காலத்துக்குள் நாவலை எழுதும்போது அதன் வீரியம் குன்றாமல் எழுத முடிகிறதா?
என் நாவல்கள் அனைத்துமே 15 அல்லது 20 நாட்களில்தான் எழுதப்பட்டிருக்கின்றன. எழுதும் நாவலோடு அதிக நாட்கள் என்னால் வாழ முடியாது. நாவலுக்கான வடிவம் இப்போது ‘தானாவதி’ எழுதிய பிறகு பிடிபட்டு விட்டது. சிறுகதைகள் நான் எழுதத் துவங்கிய காலத்திலிருந்து மூன்று மணி நேர அளவில் முடித்து விடுவது வழக்கம். நாவல் என்பதால் பத்து பதினைந்து நாட்களாகிறது. அதை வைத்துக் கொண்டு மாதக் கணக்கில் பாலீஷ் செய்வது என் இயல்புக்கு ஒத்து வராதது. என்ன சொல்ல வருகிறோம் இந்த நாவலில்? அதை நேராகச் சொல்லி விடுவதில் குறியாய் இருப்பேன். நாவல்களைப் பொறுத்த வரைக்கும் நான் இன்னும் பரிசோதனைகளைத்தான் மேற்கொண்டு வருகிறேன். நிலக்காட்சி சிறப்பாக அமைந்த நாவலில் கதாபாத்திர வார்ப்புகளில் கோட்டை விட்டிருப்பேன். நேர்த்தியாக சொல்லப்பட்ட கதையில் நிலக்காட்சி இல்லாமல் போயிருக்கும். ஆகவே என் நாவல்களில் எதையுமே நான் பர்ஃபெக்ட் என சொல்ல மாட்டேன்.
துயரத்தைக் கூட எள்ளலோடு அணுகுகிறீர்கள்… உங்களது எழுத்தில் இயல்பாகவே எள்ளல் தொடர்ந்து கொண்டே இருப்பதன் காரணம் என்ன?
காசம்! காசத்தில் நான் காணாமல் போயிருந்தால் என் ஒரு புத்தகம் கூட வெளிவந்திருக்காது. துக்கம் எல்லாருக்கும் இருக்கிறது. துக்கத்தை எழுத்தில் வடிப்பது ஒரு கலையாக பார்க்கப்பட்டு வந்தது முன்பு. எழுத்தில் துக்கத்தை எதற்காக வடிக்க வேண்டும்? வாசிப்பவர்களுக்கும் ஏதேனும் துக்கம் இருக்கலாம். அதை மறக்கத்தான் சினிமா ரசிகன் தியேட்டருக்குச் செல்கிறான். வாசிப்பு அனுபவம் மிக்கவன் புத்தகத்தை கையிலெடுத்துக் கொள்கிறான். அங்கேயும் துக்கம் என்றால் ‘‘யாரு எழுதுனது எழவு?’’ என்று அட்டையை பார்ப்பான். இன்னொரு விசுக்கா அந்தப் பெயரை புத்தகச் சந்தையில் பார்த்தால் தொடவே மாட்டான். தொடர்ந்து எதோ ஒரு வகையில் உடல் பற்றியான வருத்தம் இருந்து கொண்டேயிருக்கிறது எனக்கு. அதிலிருந்து மீள்வதற்கான வழியாய் நான் எழுத்தைப் பயன்படுத்துகிறேன்.
யதார்த்தவாதக் கதைகளையே பெரும்பான்மையாக எழுதியிருக்கிறீர்கள். அதன் வாயிலாகத்தான் ஒரு அசலான சித்திரத்தை பதிக்க முடியும் என நினைக்கிறீர்களா?
நிச்சயமாக! சுத்தி வளைத்து எழுதினாலும் சொல்லப்படும் விசயத்திற்கு வந்துதானே ஆகவேண்டும். போக நம்மைச் சுற்றியுள்ள எல்லோரும் சர்ரியலிசத்தையோ சாம்பார்ரசத்தையோ முழுமையாக அறிந்தவர்கள் இல்லையே! யதார்த்தவாதக் கதைகள் அழிவு என்கிற சமயத்தில்தான் நான் எழுத வந்தேன். இப்படிச் சொல்வதே எளிதாக இருக்கிறது. தோற்றிருந்தால் வேறு வடிவத்துக்குச் சென்றிருப்பேனே!
உங்களது கதாப்பாத்திர அமைப்பு குறிப்பிட வேண்டிய ஒன்று. பழனிச்சாமி, தோழர் பெரியசாமி போன்ற பாத்திரங்களில் இருப்பது நீங்கள்தானா? இல்லை இது போன்ற கதாப்பாத்திரங்களை எப்படி உள்வாங்குகிறீர்கள்?
என்னோடு எத்தனையோ நண்பர்கள் பழகுகிறார்கள். எல்லோரையும் நான் கூர்ந்து கவனிக்கிறேன். எல்லோர் செயலும் ஒன்றைப்போலவேதான் இருக்கிறது. வித்தியாசப்படும் நபரை சந்தித்தால் உள்வாங்கிக் கொள்கிறேன். அவர்களின் நடவடிக்கையிலேயே வித்தியாசம் தட்டுப்படும். ‘அட்டக்கத்தி அரவிந்தசாமி’ என் கோவை நண்பர் பேரெழில்தான். அவர் அலைபேசி வாயிலாக புளுகுவது அண்டப்புளுகு என்பதைக் கண்டறிய இரண்டு மூன்று அலைப்பேச்சே போதுமானது. ஆனால் தொடர்ந்து அவர் என்னை அட்டாக் செய்தால் ஏதேனும் ஒரு வகையில் சிறுகதையாக மாறிவிடுகிறது. நீண்ட கால நண்பர் நாவலாக கூட உருவெடுத்து விடுகிறார். பழனிச்சாமி நான்தான் என்பதை வாசகர்கள் பலர் சொன்னார்கள். மகிழ்ச்சி! நானாகவே இருந்துவிட்டுப் போகிறேனே! ஆனால் அதை உடைக்கும் வேலையையும் நானே எழுத்தில் செய்தாக வேண்டும்.
25 ஆண்டுகள் கழித்து ‘நடுகல்’ இதழை மீண்டும் வெளிக்கொணர்கிறீர்கள். அக்காலத்தைய சிற்றிதழ் சூழலுக்கும் இன்றைய சூழலுக்கும் இடையே எவ்வளவு பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன?
நடுகல் 1991-ம் ஆண்டு திருப்பூரிலிருந்து நான் கொண்டுவந்த சிற்றிதழ். இலக்கிய இதழாக அது வெளிவருகையில் கதைகளைக் காட்டிலும் கவிதைகளே அதிகப்படியாக வந்தன. மாற்று இதழ்கள் வந்து குவிந்தன. கதை எழுதுவதற்குதான் ஆட்கள் இல்லை. வரும் கதைகளும் இலக்கிய வலுவற்ற வெகுஜனத்தன்மை கொண்ட கதைகளாக இருந்தன. இப்போது 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடுகல்லை கொண்டு வருவதாக அறிவித்ததும் என் மெயிலில் கதைகள் நிறைய வந்தன. இன்று கவிஞர்கள் அளவுக்கு கதை எழுதுபவர்களும் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான விசயம்.
ஒன்பது கதைகள் பிரசுரத்துக்குத் தேர்வாகின என்றால் பதினைந்து கதைகளுக்கும் மேலாக வெளியிட முடியாமல் போனதுதான் நிகழ்ந்திருக்கிறது. இது ஒரு ஆரோக்கியமான மாற்றம்தான். புனைவை எழுத பலரும் ஆவலோடு முன் வருகிறார்கள் அவர்களில் பலரிடமிருந்து தீவிரமான படைப்புகளும் வெளிப்படுகின்றன. ஆனால் அபுனைவை எழுதத்தான் ஆட்கள் இங்கு குறைவாக இருக்கிறார்களோ எனத் தோன்றுகிறது.