புலிக்கலைஞன் உறங்கிக் கொண்டிருக்கிறார்
கிருஷ்ணமூர்த்தி

by olaichuvadi

சோகமித்திரனை ஐந்து முறை சந்தித்திருக்கிறேன் எனும் விஷயத்தை நண்பர்களிடம் பகிர்வதே மகிழ்ச்சியாக இருக்கிறது. எழுத்தின் அளவில் அசோகமித்திரனுக்கும் எனக்கும் இடையில் குறைந்தது இரண்டு தலைமுறைக்கான படைப்புகள் கிடக்கின்றன. ஆனாலும் எழுத்தின் தீரா வேட்கை கொண்டவராகவே அசோகமித்திரன் ஒவ்வொருமுறையும் தென்பட்டார். தொடர்ந்து வாசிப்பதும், அதை பகிர்வதும் அவருக்கான வாடிக்கை. மேலும் அறிவார்ந்த விஷயங்கள் சார்ந்த தேடலும் அவருக்கு தொடர்ந்து இருந்தது.

வாசிப்பதன் வழியே கிடைப்பது அறிவு. அதைத்தக்க இடத்தில் வாழ்க்கையுடன் பொறுத்துவது ஞானம். வாழ்வின் எள்ளலுடன் இவ்விரண்டையும் அவருடைய கதாபாத்திரங்கள் செய்யக்கூடியன. சுருங்கச் சொன்னால் தன்னிறைவான கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார். மேலும் அக்கதாபாத்திரங்களை சமூகத்தின் அங்கங்களாகவும் உணரச் செய்திருக்கிறார். இந்த செயல் அவருடைய வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கிடைத்தது என்பதை அவருடன் உரையாடுகையில் எளிதில் உணர முடியும்.

அவர் தங்கியிருந்த அறைகளில் பலகணிகள் நிச்சயம் இருக்கும். தண்டீஸ்வரத்திலும் தி.நகரிலும் அவரை சந்தித்திருக்கிறேன். இரண்டு இடங்களிலும் பலகணிகள் இருந்தன. தண்டீஸ்வரத்தில் அவரை சந்தித்த பொழுது வாசலில் தக்காளி விற்றுக் கொண்டிருந்தவனின் குரல் கேட்டது. பேச்சினூடே ஏற்பட்ட மௌனத்தை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. மௌனம் கலையும் பொழுது அந்த தக்காளி விற்பவனின் அன்றாடத்தையும் அவனுடைய காய்களை யாரும் வாங்குவதில்லை எனும் ஏக்கத்தையும் பகிர்ந்து கொண்டார்.

தி.நகரில் அவரை சந்திக்கச் சென்ற நேரம் வர்தா புயல் முடிந்திருந்த சமயம். சென்னை முழுக்க மரங்கள் வீழ்ந்து கிடந்திருந்தன. முருகேசன் தெருவிலும் அதன் சாயல்களை உணர முடிந்தது. அசோகமித்திரனிடம் இது சார்ந்து பேச ஆரம்பிக்கும் பொழுது ஜான் டீர் கம்பேனியின் இந்திய வருகையையும் அவர்களின் சாதனங்களைக் கொண்டு இது மாதிரியான தருணங்களில் எப்படி மரத்தை அறுத்தனர் என்பதையும் குழந்தைத் தனமான சத்தங்களோடு சொல்லத் துவங்கினார். மேலும் அது இந்தியாவுக்குள் நுழைந்த காலகட்டத்துக்கும் இப்போதிருக்கும் வேகம் மிகு காலக்கட்டத்துக்குமான இடைவெளியை அவருடைய குரலில் உணர முடிந்தது.

சமூகத்தில் நிலவும் அரசியல் ரீதியான விஷயங்கள், சினிமா சார்ந்த தகவல்கள், புதிய கண்டுபிடிப்புகள், அதில் புரியாத பகுதிகள், செய்தித்தாள்களின் வழியே சமூகம் என்று தேடல் தீராத எழுத்தாளராகவே தென்பட்டார். அந்த தருணத்திலெல்லாம் என்னுள் எழும் ஒரே கேள்வி எது இவருக்கான உந்து சக்தி ? ஒருமுறை கூட என்னால் கண்டறிய முடிந்ததில்லை.

எழுத்து அவருக்கு திமிரையும் அகங்காரத்தை யும் கற்றுக் கொடுக்கவில்லை. அசோகமித்திரனின் குணத்துக்கு ஏற்பவே எழுத்து அமைந்தது. விடுதலை குறுநாவல் சார்ந்து நண்பர் கேட்கும் பொழுதும், ஒற்றன் நாவல் சார்ந்த பேச்சு எழும் பொழுதும், பிரயாணம் சிறுகதை சார்ந்து பேசத் துவங்கும் பொழுதும் அந்தந்த கதைகளின் பாத்திரங்களைப் பற்றி அவரும் சிலாகிக்க ஆரம்பித்தார். ஒரு மனிதனை இரண்டு பேர் வெவ்வேறு தருணத்தில் சந்தித்திருக்கின்றனர். அந்த ஒரு மனிதன் சார்ந்த மதிப்பீட்டை இருவரும் அளித்தால் எப்படி இருக்கக்கூடுமோ அப்படியானதே அவருடைய கதைகளைப் பற்றி அவரிடம் பேசுவது.

கதைகளின் வழியே உலவவிட்ட மனிதர்கள் யார் யாரிடமோ பேசுகிறார்கள். அவ்வாசகர் தன்னை சந்திக்கும் பொழுது தன் கதாபாத்திரங்களுடன் என்ன உரையாடியிருப்பார்கள் என அறிய விழையும் அவருடைய குணம் ஒவ்வொரு முறையும் என்னை சிலிர்க்க வைத்தது. எழுதும் வரை மட்டுமே எழுத்தாளனின் பிடியில் கதைமாந்தர்கள் இருக்கிறார்கள். பின் அவர்கள் நெடும் பயணத்தை வாசகர்களிடம் மேற்கொள்கிறார்கள். அந்த கதை மாந்தர்களின் நிலையை வாசகர்கள் தான் எழுத்தாளனிடம் சொல்ல வேண்டியிருக்கிறது. இதை அவருடனான உரையாடலில் கண்டடைந்த பேருண்மை என்றே கருதுகிறேன்.

எழுத்தை விட வாழ்க்கையையே சவால் நிறைந்ததாக, சுவாரஸ்யம் நிரம்பியதாக பார்த்தார். வரலாறுகளின் வழியேவும், அறிந்து கொள்ளும் விஷயங்கள் வழியேவும் சிதைவுறும் வாழ்க்கை மீதுதான் அவருக்கான கவலை நிலைபெற்று இருந்தது. ‘தண்ணீர்’  நாவல் சார்ந்த உரையாடலின் போது நண்பரொருவர் காந்தி உப்புக்காக சத்தியாகிரகத்தை மேற்கொண்டார். நாடுதழுவிய போராட்டமாக அமைந்தது. அது போல தண்ணீரை மையப்படுத்தி மாபெரும் அரசியல் விஷயத்தை அவர் ஏன் எழுதவில்லை எனக் கேட்டார். அசோகமித்திரனிடம் கேட்க வேண்டிய கேள்வி தான் எனினும் வாசகனின் அளவில் பதிலளிக்க முயற்சித்தேன். தண்டி போராட்டத்தில் கலந்து கொண்ட பல்லாயிரம் மக்களும் அந்த உப்புக்காக தான் போராடினார்கள். ஒரு நாளின் சாப்பாட்டில் நாம் கலந்து கொள்ளக்கூடிய உப்பின் அளவு சிட்டிகையில் கணக்கிடக் கூடியது. அந்த சிட்டிகையின் பின்னே இருக்கும் அரசியலை அவர்களுக்கு எடுத்துரைத்து வீட்டினைக் கடந்து ஒட்டு மொத்த இந்தியாவுக்காகவும் பொதுவாக போராட களமிறங்கினார்கள்.

அந்த சிட்டிகை உப்புக்காக ஓர் உரையாடல் ஒவ்வொரு வீட்டிலும் நிகழ்ந்திருக்கிறதல்லவா? அந்த உரையாடலை எழுதுபவர்தான் அசோகமித்திரன் என்றேன். என் கருத்து எந்த அளவு சரி எனத் தெரியவில்லை. ஆனால் அவருடைய படைப்பின் அளவில் இந்த உரையாடலை உணர முடிந்தது. ஒவ்வொரு வீட்டுற்குள்ளும் ஓர் அரசியல் நிலைபெற்று இருக்கிறது. அதற்கான தீர்வு கிடைக்கும் பொழுது தான் வீட்டைக் கடந்த சமூகத்தை சிந்திக்க துவங்குவார்கள். வீடும் சமூகமும் வேறு வேறு அல்ல என்பதை உணர்த்த ஓர் உரையடால் தேவைப்படுகிறது. அதை அசோகமித்திரனின் கதாபாத்திரங்கள் எளிமையாக செய்து முடிக்கின்றன.

பிரதான கதாபாத்திரத்துக்கு ஒவ்வாதது என சமூகம் புறந்தள்ளும் மனிதர்களிடம் அறியப்படாத வாழ்க்கை ஒளிந்து கொண்டிருக்கிறது. அந்த வாழ்க்கை சில தேவைகளை முன்வைத்து நகர்கிறது. அந்த தேவைகளின் ஒலியை தன் வாழ்நாள் முழுக்க பதிவு செய்தவர் அசோகமித்திரன். அவருடைய கதைகளை வாசித்ததில்லை எனச் சொல்பவர்களிடம் புலிக்கலைஞன் எனும் சிறுகதையை பரிந்துரைப்பேன். அவரை மீள்வாசிப்பு செய்வதற்கும் வாசிக்காதவர்கள் வாசிப்பதற்குமான தருணமாக இதைக் கருதுகிறேன். அவரின் எழுத்து வழியே பலதரப்பட்ட மனிதர்களை சந்திப்பதற்கான தருணமும் கூட. அவரவர்களின் வாழ்க்கையை அவரவர்களின் இடத்திலிருந்து, அவரவர்களின் நியாயங்களிலிருந்து பேச கற்றுக் கொடுத்த குருவாகவே நினைவில் தேங்கி நிற்கிறார்.

மனித வாழ்க்கை பகிர்ந்தளிக்கப்பட வேண்டியது. பகிர்ந்தளிப்பதற்கான குரலொலி கேட்கவில்லையெனில் அங்கு எழுத்தாளனின் பணி தேவைப்படுகிறது எனும் போதனையை வாழ்க்கையின் வழியேவும் எழுத்தின் வழியேவும் சொல்லிய புலிக்கலைஞன் உறங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை இத்தருணத்திலும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

பிற படைப்புகள்

Leave a Comment