மரபீனி மாற்று கடுகு – அடகு வைக்கப்பட்ட இந்திய விவசாயப் பொருளாதாரம்
அருண் நெடுஞ்செழியன்

by olaichuvadi

நீரும் நிலமும்  சந்தைப் பொருளாக  மாற்றப்பட்டுள்ள உலகில் தானிய விதையும் சந்தையின் புதிய வரவாக சேர்ந்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக உணவு தானிய விதையான  மரபீனி மாற்று கடுகுக்கு மரபணு பொறியியல் ஒப்புறுதிக்குழு அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக பசுமைப் புரட்சி யின் பெயரில் இந்திய விவசாயிகளின் மீது பொருளாதார யுத்தத்தைத் தொடுத்து, தற்சார்பு வேளாண் பொருளாதாரத்தை அழித்த இந்திய அரசும் அதன் உடன் கூட்டாளியான பன்னாட்டு நிறுவனங்களும் தனது இறுதி யுத்தத்தை மோடி அரசின் ஆட்சி காலத்திலேயே நிகழ்த்தி முடிக்கத் துடிப்பதையே இந்த அனுமதி காட்டுகிறது!

கடந்த அரை நூற்றாண்டு காலத்தில், பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை நலன்களுக்காக இந்திய விவசாயிகளின் கைகளில் இருந்த மரபு விதை உரிமை பறிக்கப்பட்டது. சாணம் பூசப்பட்ட வைக்கோல் கோட்டையில் விதைகளை சேகரிக்கிற காலம் என்பது கடந்த காலத்துக்கு சொந்தமான பழங்கதையாகிப் போனது! பல நூறு ஆண்டுகளாக, இந்தியாவின் லட்சக்கணக்கான  கிராமங்களில் நிலவிய மரபான நெல் சேகரிக்கிற முறைகளும் நீர்ப் பாசன பங்கீட்டு முறைகளும்  சில பத்தாண்டுகளில் “யானை கட்டி போரடித்த” கதையாடலில் மற்றொன்றாகிப் போனது!

வேளாண்மைக்கான  உரங்களும்,  பூச்சிக் கொல்லி மருந்துகளும் டன் கணக்கில் அமெரிக்காவில் இருந்தும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும்  இறங்கின. பன்னாட்டு உயிரி தொழில்நுட்ப ஆய்வுகள் உள்நாட்டு தட்ப வெப்பத்துக்கு ஏற்ற மரபு விதைகளை விவசாயிகளிடம் இருந்து பறித்தன. இன்று விதைக்கும்,உரத்துக்கும்,பூச்சக் கொல்லி மருந்துக்கும்,நீருக்கும் கடன் பட்டு மாளாமல் கொத்துக் கொத்தாக இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர்.

ஒரு சில பன்னாட்டு  உயிரி தொழில்நுட்ப  நிறுவனங்களின்  குளிரூட்டப்பட்ட கார்ப்பரேட் அறைகளில் இருந்து உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டின் விவசாயிகளுக்கு மரண சாசனம் எழுதப்பட்டு வருகிறது!

கடுகு உற்பத்தியை அதிகரிக்கவும் எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும் இந்த மாற்றத்தை கொண்டு வருவது அவசியம் என வழக்கம்போல போலி பிரச்சாரத்தின் வழியில் கருத்தியல் நியாயம் வழங்க முயற்சிக்கிறது அரசு. மரபீனி மாற்றக் கடுகு மீதான ஆய்வுக்குத் தலைமையேற்ற தில்லி பல்கலைக் கழக ஆய்வாளரே, இந்த ஆய்வை பரிசீலித்து அனுமதிக்கிற ‘மரபணு பொறியியல் ஒப்புறுதிக்குழு(GEAC)’  உறுப்பினராக உள்ளது, அரசு மீதான நம்பகத் தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது.

இந்திய விவசாயத் துறையைஅந்நிய நிறுவனங்களுக்கு அடகு வைக்கும் போக்கு இன்று நேற்றல்ல ஆங்கிலேய ஆட்சியில் இருந்து, இந்தியா அரசியல் சுதந்திரம் அடைந்த கால கட்டத்தில் இருந்தே துவங்கிவிட்டது. அமெரிக்காவில் விளைவிக்கப்பட்ட வேளாண் பொருட்களின் உபரியை இந்திய சந்தைகளில் விற்பனை செய்து லாபத்தை ஈட்டியது. டன் டன்னாக அமெரிக்காவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது. இதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகளை எளிதாக்குவதற்கு பி எல் 480 என்ற கொள்கை மாற்றத்தையே அப்போதைய அமெரிக்க ஆளும்வர்க்கம் மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக உர இறக்குமதி, பூச்சிக்கொல்லிஇறக்குமதி, தொழில்நுட்ப இறக்குமதி என இந்திய வேளாண் துறை அந்நிய சார்பிலான துறையாக நேரு காலத்தில் மாற்றப்பட்டது. அதன் பாரிய வெளிப்பாடாக இந்தியாவின் மூன்று மற்றும் நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தை அமெரிக்க உரக்கம்பெனிகளுக்கும், விதை நிறுவனங்களுக்கும், லாபம் தருவதற்கு ஏற்ப உள்நாட்டு வேளாண் பொருளாதாரத்தில் மாற்றங்களை கொண்டுவந்தது நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு.

நிலச்சீர்திருத்தம், உற்பத்தி பொருளுக்கான ஆதரவு விலை நிர்ணயம், நீர்மேலாண்மை போன்ற அடிப்படை அம்சங்களில் மாற்றங்களை  மேற்கொள்ளாமல் பசுமைப் புரட்சி என்ற தொழில்நுட்ப மேற்பூச்சு வேலைகளின் ஊடகாக உற்பத்தி பெருக்கம் என்ற பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது. அதன் அவலம் இன்றளவிலும் தொடர்கிறது! அதன் ஒரு பகுதியாகத்தான் பிடி பருத்தி தற்போது முதல் முறையாக உணவுப் பொருளில் மரபீனி மாற்று பயிருக்கு அளிக்கப்பட்டிருக்கும் அனுமதியைப் பார்க்கவேண்டும்.

இந்திய அரசு, மரபீனி மாற்று பயிர்களில் ஆர்வம் கொள்வதற்கு இரு முக்கிய காரணங்கள் உள்ளதாக தேவேந்திர சர்மா சுட்டிக் காட்டுகிறார்.முதலாவதாக, இந்திய சந்தையில் மரபீனி மாற்றுப் பயிரை நுழைப்பதற்கு பன்னாட்டு உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் வழங்குகிற அதீத அழுத்தம் ஒரு முக்கிய காரணமாகும். அறிவியல் ரீதியாக மரபீனி மாற்றுப் பயிர் மீதான ஆதரவுக் கருத்துக்களை உருவாக்குவதற்கும், அரசியல் ரீதியான கருத்தை உருவாக்குவதற்கும் இந்நிறுவனங்கள் நிதிக் கொடைகளையும் வழங்குகின்றன. இரண்டாவதாக, இந்திய வேளாண் விஞ்ஞானிகள், உயிரி தொழில்நுட்பத்தை சர்வரோக நிவாரணி போல பூதாகரமாக்கிக் காட்டுகிறார்கள். கடந்த முப்பதாண்டுகால அனுபவத்தில் அறிவியல் ரீதியாக ஒரு உருப்படியான மாற்றத்தையும் சாதிக்க இயலாத இவர்கள்,தங்களின் வேலைகளை தக்கவைத்துக் கொள்வதற்கே இதை ஆதரித்து நிற்கின்றனர்.

தற்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு மரபீனி மாற்று கடுகை சந்தைக்கு கொண்டு வருவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ள மரபணு பொறியியல் ஒப்புறுதிக்குழுவின் செயல்பாடுகள் முடிவுகள் அனைத்தும் ரகசியமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எவ்வாறு உணவு பொருட்களின் மரபீனி மாற்ற தொழில்நுட்பத்தால் சமூக பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது? என வெளிப்படையாக இக்குழு அறிவிப்பதில்லை!

மரபீனி மாற்று பயிர்களை இந்தியாவில் நடைமுறைக்கு கொண்டுவருவது தொடர்பாக ஆய்வு செய்த முக்கிய நான்கு குழுவின் அறிக்கையும் இந்தியாவில் மரபீனி மாற்ற பயிர் நடைமுறையை எதிர்த்தே ஆய்வு முடிவை அளித்துள்ளது. பிடி கத்திரிக்காய் குறித்த ஜெயராம் ரமேஷின் அறிக்கை, சொபொரி குழு அறிக்கை, பாராளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை, மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் குழு அறிக்கை ஆகிய நான்கு அறிக்கையும் இந்தியாவில் மரபீனி மாற்றுப் பயிர் அறிமுகத்துக்கும் பயன்பாட்டுக்கும் எதிராகவே உள்ளது. உயிரி பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் குறித்த அம்சங்களில் போதிய கவனம் கொள்ளவில்லை என இந்த அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

அமெரிக்காவில் அறிமுகம் செய்யபப்பட்டுள்ள மரபீனி மாற்றுப் பயிர்கள் அனைத்தும் அந்நாட்டு மக்களின் உயிரையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் பணயமாக வைத்து நடைமுறைப் படுத்தி வருகின்றன. அமெரிக்காவில் நிகழ்ந்து வருகிற கேடுகளை தேவிந்திர சர்மா இவ்வாறு சுட்டிக் காட்டுகிறார்.

“அமெரிக்காவில், மரபணு மாற்றுப் பயிர்களின் நச்சுப் பரவலால், பத்து கோடி ஏக்கருக்கும் மேலான நிலங்களில், பூதாகரமான களைகள் முளைக்க ஆரம்பித்து விட்டன. இந்தப் பூதாகரக் களைகளை அழிக்க மிக அதிக சக்தி வாய்ந்த பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன் படுத்த வேண்டியதாயிற்று. ஆனால், இந்தக் களைகள் மிகக்குறுகிய காலத்தில், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கெதிரான எதிர்ப்பாற்றலைப் பெற்றுவிட்டன. விளைவு, களைகளை, மனித உழைப்பால், அறுத்தெரிய வேண்டியதாயிற்று”

1994ல் மரபணு மாற்று தக்காளி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் அமெரிக்காவில், நோய்கள் பரவியது. ஒவ்வாமை 400% விழுக்காடு அதிகரித்தது; மூச்சிறைப்பு நோய் (ஆஸ்துமா ) 300 விழுக்காடு அதிகரித்தது ; ஆட்டிசம் (Autism) 1500 விழுக்காடு அதிகரித்தது. மேற்கூறியவைகள் எல்லாம், சில எடுத்துக் காட்டுகள் மட்டுமே. வளர்ச்சியடைந்த நாடுகளில், அமெரிக்காதான் மிகவும் நோய்வாய்ப்பட்ட நாடாகும், என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. இதற்கு மரபணு மாற்று உணவுப்பயிர்கள்தான் காரணம் என்று நேரடியாகச் சொல்ல முடியாது. ஆனால், அப்படியில்லையென்று மறுத்துவிடவும் முடியாது.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறையில் உள்ள ஒரே மரபீனி மாற்றுப் பயிரான பிடி பருத்தி அறிமுகாமனது நடைமுறையில் அனைத்து வகையிலும் தோல்வியடைந்துள்ளது.இந்தியாவில் பிடி பருத்தி அறிமுகமாகி விதைகளின் மீதான விவசாயிகளின் உரிமையைபறித்ததோ தவிர அதிக உற்பத்திைய சாத்தியப்படுத்தவில்லை.

பாஜகவின் 2014 தேர்தல்  அறிக்கையில், முறையான அறிவியல் ஆய்வுகள்,சமூகப் பாதுகாப்பு அம்சங்களை கவனத்தில் கொண்டு மரபீனி மாற்றுப் பயிர் அனுமதி குறித்து முடிவு எடுக்கப்படும் எனக் கூறியதற்கு மாறாக தற்போது, எந்த ஆய்வும் இல்லமால்  மரபீனி மாற்று பயிர் மீதான முடிவை நேர்மாறாக நடைமுறைப் படுத்த துடிக்கிறது மோடி அரசு!

இந்த முடிவானது சிறு குறு விவசாயிகளை விவசாயத்தில் இருந்து வெளியேற்றும்,கடுகு மீதான நாட்டின் தற்சார்பு நிலையானதுபறி போகும்.நாட்டு மக்களின் உடல் நலப் பாதுகாப்பு மீதான ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கையாகும்.மோடி அரசைப் பொறுத்தவரை கடுகோடு தனது ஏகாதிபத்திய விசுவாச வேளாண் கொள்கை முடிவை நிறுத்திக் கொள்ளப்போவதில்லை.கடுகைத்  தொடர்ந்து கோதுமை, நெல் என அடுத்ததடுத்த உணவுப் பயிர்களிலும் மரபீனி மாற்று விதைகளை கொண்டுவருவதை துரிதப்படுத்தும். நாம் என்ன செய்யப் போகிறோம்?

பிற படைப்புகள்

Leave a Comment