தமிழ்ச் சிறுகதைகளில் புலம்பெயர்ந்தோர் நிலை – 2
சு.வேணுகோபால்

by olaichuvadi

(4)

புலம்பெயர்ந்தவர்களின் உள்ளத்தில் அவர்கள் சிறு வயதில் விளையாடிய செம்மண் பூமிகள், மரத்தில் ஏறி விளையாடிய தருணங்கள், பறித்து உண்ட கனிகள், ஒவ்வொரு மரத்தின் தனித்தசுவை, அம்மாவிடம் வாங்கிய திட்டும் அடியும் சந்தோஷமளிக்கின்றன. நினைவுகளால் நிரம்பிய பூமியிலிருந்து நிரந்தரமாகப் பிரிய நேரிடுவது பதட்டத்தையும் துக்கத்தையும் உண்டு பண்ணுகின்றன. அவர்கள் உண்டு விளையாடிய புளியமரம், தென்னைமரம், பனைமரம், ஆலமரம், கமுகு தற்போது எப்படியிருக்கும் ஷெல்வீச்சிலிருந்து தப்பித்து இருக்குமா என்ற ஏக்கம் எழுவதைத் தடுக்க முடிவதில்லை. அவர்கள் நீந்தி விளையாடிய நதி, கிணறு, குளம் எல்லாம் ருசியானவையாத் தோன்றுகின்றன. மேலை நாட்டு மினரல் வாட்டரிலும், குளோரின் தண்ணீரிலும் தங்கள் ஊர் தண்ணீரின்ருசி இல்லை என உணர்கின்றனர்.

பழனம்பழத்தில் செய்த திண்பண்டம், பினாட்டுப்புழுக்கொடியும், முசுட்டை இலை போட்டு உண்ட ஒடியல் கூழ், குரக்கன்புட்டு, பழையசோறு, முருங்கைக்கூட்டு, எலும்பிச்சை சாரு ஊற்றிக்கடைந்த கீரை என அம்மா செய்த உணவுப் பண்டங்களின் சுவை ஜெர்மனியில் டின்களிலும் பாக்கெட்டுகளிலும் தரப்படும் சூப்புகளில் இல்லாதது போல உணர்கின்றனர்.

மேலை நாட்டு பழக்க வழக்கங்கள், தட்பவெட்ப நிலைகள் எல்லாம் அந்நியமாகத் தோன்றுகின்றன. சொந்த மண்ணில் வாழ்ந்த வாழ்க்கையோடு அகதிகளாக இருக்க நேர்கிற வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்கிற மனநிலை புலம்பெயர்ந்தவர்களிடம் ஏற்படுகிறது. சொந்த மண்ணில் வாழ்ந்த வாழ்க்கை உயர்வாகத் தெரிகிறது. எண்ணெய் தட்டுபாடு இல்லாமல் அரிக்கேன் விளக்கில் படித்தக்காலம் பொற்காலமாகத் தோன்றுகிறது. ஐரோப்பிய பனிக்காலத்தை விட ஈழத்து சோழகக் காற்று இனிமையாகப்படுகிறது. பெற்ற குழந்தையைத் தனது தாய் தந்தையர்களிடம் காட்டவும் அவர்கள் கொஞ்சி மகிழ முடியாத சூழலை இழப்பாகக் கருதுகின்றனர். ஜெர்மானியர்களின் இனவெறித் தாக்குதலிலிருந்து தப்பித்து அமெரிக்கா சென்ற இஸ்பெல் கோல்ட்பேர்கர்; வயதான காலத்தில் தான் வளர்ந்த தேசத்தில் சாக விரும்பி வந்தது போல தாமும் போய்விட வேண்டும் என்று நினைக்கின்றனர்.

பிழைப்பு தேடி ஆஸ்திரேலியா வந்தவனுக்கு அவன் வாழ்ந்த கடற்கரையோர வானம், கோயிலின் விரிந்த மணல் வெளி, அலையெழுப்பும் கடல், நாதஸ்வர இசை, ஆடி அமாவசையில் தீர்த்தமாட திரளும் மக்கள், வானில் பறக்கும் பறவைகள், காகங்கள், வட்டமாக முக்கோணமாக பறக்கும் பறவைகள், சின்னப் பூச்சியாய் பறந்து போகும் விமானங்கள் என தன் ஊரில் பார்த்த நினைவுகள் மீண்டெழுந்து சோகத்தை உண்டாக்குகின்றன. (மாத்தனைசோமு– சொந்தசகோதரர்கள்).

தங்க நிறமாகத் தெரியும் உதயச்சந்திரன் கனடாவில் ஏதோ ஆபத்தைக் குறிப்பது போல நீலச்சந்திரனாகத் தெரிகிறது.  10,000 மைல் தொலைவில் இலுப்பைபூ கொட்டுகிற இரவில் எண்ணெயை மிச்சம்பிடிக்க திரியைக் குறைத்து குழந்தைகளை அரவணைத்துத் தூங்கிய நினைவுகள் வாட்டுகின்றன. ரோடு போடுபவர்களுக்குக் கல் சுமந்தாவது சொந்த ஊரில் பிழைக்க மனம் விரைகிறது. (கொழுத்தாடுபிடிப்பேன்).

வளர்த்த பூனைக்குட்டிகள், அதன் சேட்டைகள், வைத்த மல்லிகைச் செடிகள், நெல்லி மரங்கள், இவற்றிக்கெல்லாம் நீர் ஊற்றுகிறார்களா என கேட்கத் துடிக்கிறது. (தமிழ்நதி– என் பெயர் அகதி). மழைக்காலம் தொடங்கும் முன்னமே விதை நெல் வாங்கி நாற்று விடுவதும். ஐப்பசியில் நடவு நடுவதும், மாசியில் அறுவடை செய்து சூட படிப்பதும், பங்குனியில் நெல் மூட்டைகளை வாங்க யாழ்பாணம், சுனனாகம்,  நெல்லியடி பக்கங்களிலிருந்து வியாபாரிகள் வந்து வாங்கிப் போகும் காட்சிகள் அகதியாக வந்த விவசாயின் மனதில் தோன்றி அலைக்கழிக்கிறது. (தாமரைச்செல்வி– ஓட்டம்).

அகதிகளாகச் சென்ற இடங்களில் நேரும் அந்நியத்தன்மை, அவமானம், சோதனைகள், விசாரணைகள், நாடற்றத்தன்மை, உரையாடல் அற்றத்தன்மை, எல்லாம் ஒன்று திரண்டு மனதை இம்சைப் படுத்துகின்றன. இவற்றையெல்லாம் மீறி அகதிகளாக இருக்க வேண்டிய சூழல் அவர்களை நிர்பந்திக்கின்றன.  இன மோதல்களுக்கிடையிலும் வாழ்ந்த சில அழகிய நினைவுகள் அழகாக அவர்களுக்குத் தோன்றுகின்றன.  இந்த ‘இழந்தஏக்கங்கள்’ மேலை நாடுகளில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பிள்ளைகளுக்கு இல்லாமல் போய்விடுகிறது. அதுவும் பெற்றோர்களை பாதிக்கிறது.

மனிதமனம் உன்னதங்களைச் சிறிய அளவில் கொண்டிருப்பதைப் போலவே அற்பத்தனங்களையும் கொண்டிருக்கிறது.  கனடாவிற்கு அகதிகளாக வந்தவர்கள் அரசாங்கத்தை ஏமாற்றி உதவித்தொகை பெறுவதற்கும் பழகிக் கொள்கின்றனர். மனைவியை விட்டுப் பிரிந்துவிட்டதாக விண்ணப்பித்து பணம் பெறும் வழியைக் கைக்கொள்கின்றனர். பல்வேறு குறுக்கு வழிகளில் அகதிகளாக வந்தவர்கள் வசதி வாய்ப்பைப் பெறுகின்றனர். இலங்கையில் செய்தித்தாள் போட்ட பொடியன்களும் சைக்கிள் கடை வைத்திருந்தவர்களும் அகதிகளாக வந்து நான்கைந்து ஆண்டுகளிலேயே டீ ஆறு காரில் பயணிக்கும் செல்வ வளத்தை ஏதோ வகையில் திரட்டி விடுகின்றனர்  (ஒருசாதம்) உழைத்து முன்னேறிய மக்கள்,  முன்னேற முடியாமல் வேலையில் பட்டழுந்தும் மக்கள் இவர்களை மனரீதியாக விமர்சனம் செய்யவும் செய்கிறார்கள்.  தவறுகளில் சிக்கி சிறை செல்பவர்களுக்கு ஐந்து நேரங்களுக்கு இரண்டு மூன்று முட்டை வீதம் பத்து முட்டை, நாலு நேரம் மீன் துண்டு, மூன்று நேரம் ஒவ்வொரு கோழிக்கால், நாலு நேரம் சாலட் (வேகவைத்தகீரை) வகைகளும் உணவும் கிடைக்கிறது. (கொழுத்தோடுபிடிப்பேன்) பணிசெய்யும் இடங்களில் சில பெண்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு புழுங்குகின்றனர். சிற்றின்பத்திற்காகவே படைக்கப்பட்ட உடம்பு, கலிபோர்னியா திராட்சைக் கண்கள், நடையில் ஒய்யாரம், ஒரே சமயத்தில் நான்கு காதலர்கள் – பல தொலைபேசி அழைப்புகளும் என வாழும் பெண்களைக்கண்டு ஏங்கவும் செய்கின்றனர். (பூமாதேவி)

ஐரோப்பிய வாழ்க்கை முறையில் உள்ள நல்ல அம்சங்களையும் இவர்கள் பார்க்கின்றனர். குழந்தையின் பராமரிப்பிற்கு அரசு பணம் தருகிறது. கர்ப்ப காலம் முதல் குழந்தை பெற்று வளர்ப்பது வரை அரசு உதவுகிறது. குழந்தைகளில் ஆண் பெண் என்கிற பாகுபாடற்ற தன்மைகளைக் காண முடிகிறது. இவ்வளவு இருந்தும் குழந்தை பெற்றெடுக்க அஞ்சும் தாய்மார்களும் உண்டு. கம்பெனிகள் குழந்தை பெற்றெடுக்காத தாய்மார்களுக்கு வேலைவாய்ப்பு தருவதால் கருப்பையைச் செயலிழக்கம் செய்து கொள்கின்றனர்.  ‘ஹோமோசெக்ஸ்’ தம்பதிகள் இருக்கின்றனர்.

அகதிகளுக்குப் பணம் தருகின்றனர். நடந்து கொண்டிருக்கும் போதே இளம் மனைவியையோ, காதலியையோ மூர்க்கமாகக் கட்டியணைத்து முத்தம் தருகின்றனர். காமவாய்ப்பட்டுத் தழுவுகிறார்கள். இந்த சுதந்திர உணர்வு இவர்களுக்கு இல்லை. அப்படித் தழுவ ஒரு காதலி கிடைப்பதில்லை. மனைவியிருந்தாலும் அப்படி தழுவ முடிவதில்லை. நிறமும் ஏழ்மையும் பண்பாடும் தடுக்கிறது. (சொந்தசோதரர்கள்). எந்த நேரத்திலும் குழாயை இடது பக்கம் திறந்தால் சுடுநீரும் வலது பக்கம் திறந்தால் குளிர்நீரும் வருகிறது. சத்தற்ற உணவு, வேர்வை, புழுதி, வறுமை இல்லாத சுத்தமான நாடாக இருப்பது பிடிக்கிறது. இந்த வாழ்க்கை முறை இவர்களுக்கு புதிதாக இருக்கிறது. அடுத்த தலைமுறை தமிழர்களுக்கு இயல்பாக மாறுகிறது.

தனது உழைப்பாலும் திறமையாலும் புலம்பெயர்ந்த இடங்களில் நேர்மையாக முன்னேறிய தமிழர்களும் உண்டு.  அப்படி முன்னேறிய ஒருவரின் கதையை அ. முத்துலிங்கத்தின் ‘ஒருசாதம்’ கதை விவரிக்கின்றது.

சிவலிங்கம் படிப்பில் அக்கறையற்று இருந்தாலும் புத்திக்கூர்மைமிக்க மாணவன். படிப்பு முடிந்து ஒரு பெரிய தனியார் கம்பெனியில் தலைமைப் பொறுப்பிலிருக்கிறான்.  பிரமாண்டமான வீடு, ஜீப், கார், டிரைவர், காவலர்கள், தோட்டக்காரர்கள் என அவனுக்கு கம்பெனி நியமிக்கிறது.  பத்தாயிரம் பேர் வேலை செய்யும் கம்பெனியில் விரல் விட்டு எண்ணிவிடும் தமிழர்கள்தான் அங்கு வேலை செய்கின்றனர். இவனது பதவி உயர்ந்தது. மற்றவர்கள் அனைவரும் சிங்களவர்கள்.  1977-ல் இனக்கலவரம் மூழ்கிறது.  சிவலிங்கம் மனைவியோடு தப்பித்து தமிழகம் வருகிறான்.  அங்கிருந்து கனடாவிற்கு அகதியாச் செல்கிறான்.  வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது.  உயர்பதவியில் இருந்து கனடா போனவனுக்கு வாட்ச்மேன் வேலை கிடைக்கிறது.  என்ன உயர்பதவியில் இருந்து அனுபவத்தோடு வந்தாலும் மேலைநாடுகளில் படிப்படியாக உயரவேண்டியநிலை. கம்பெனி நிர்வாகத் தலைவருக்குக் கண்ணில் படும்படியாக வணங்கி நின்று அவருக்குப் பிடித்தமான ஒரு சந்தர்ப்பத்தில் பேசுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி ஐந்தாறு ஆண்டுகள் தொடர்ந்து கணிணியில் ஏற்பட்டப் பிழையை நீக்க முடியாமல் இருந்ததை நீக்கித் தருகிறான்.  கணக்கில் தவறுதலாக நிகழ்ந்த ஒரு சதம் ஆறு ஆண்டுகளில் கம்பெனி பல கோடி இழந்த இழப்பைக் கண்டுபிடிக்கிறான்.  நிகழ் ஆண்டில் இழக்க இருந்த பெருந்தொகையைத் தடுக்கிறான். பின் அக்கம்பெனியில் கிடுகிடுவென பதவி உயர்வு பெற்று வீட்டின் கடனை அடைக்கிறான். அந்த முன்னேற்றத்தைக் குறிக்கும் விதமாக வீட்டிற்கு ஒரு சதம் என பெயர் வைக்கிறான். வீட்டிற்கு வரும் நண்பர்கள் இதனை அறியாமல் ‘ஒருசாதம்’ என வாசிக்கின்றனர்.  விருந்து உபச்சாரத்தைச் சிறப்பாக செய்வதால் இப்படி பெயர் வைத்திருக்கிறார் என நம்பும் நண்பர்களுக்கு இப்படியாக கதை இருப்பது தெரிய வருகிறது.  கனடா போன்ற தேசங்களில் குடியேறிய தமிழர்கள் இரு வழிகளில் முன்னேறி வந்த கதையைச் சொல்கிறது. 

(5)

புலம் பெயர்ந்த தமிழர்கள் பல்வேறு நாடுகளில் பொருளாதாரப் பிரச்சனைகளில் சிக்குண்டு தவிப்பதைப் பல கதைகள் சொல்கின்றன. வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிய – அனுப்பி வைக்கப்பட்ட பிள்ளைகளின் உழைப்பில் பணத்தை எதிர்பார்த்திருக்கின்றனர்.  மோசமான இனக்கலவரச் சூழலில் பணத்தைத் திரட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெற்றோர்களின் கடனை அடைக்க இரவும் பகலும் பாடுபடுகின்றனர். பெற்றோர்கள் எதிர்பார்க்கும் பணத்தைத் தொடர்ந்து அனுப்ப முடியாத சூழலும் உருவாகிறது.  வேலைவாய்ப்பு இழக்கும் போதெல்லாம் தன்னைத்தானே வெளிநாடுகளில் தக்க வைத்துக்கொள்வது சிரமமாகிவிடுகிறது.  ஈழத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தாலே அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்ற பதட்டம் வந்து விடுகிறது.  பிரான்சில் இருந்தாலும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் குடும்பத்தின் ஏழ்மையோடு தினம் போராட வேண்டியிருக்கிறது. வெளிநாடு செல்ல பணம் திரட்டிக் கொடுத்த கொழும்பு மாமாவிற்கு வாரம் வாரம் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. வயிறார உண்டு உறங்க முடிவதில்லை. தாய் தந்தையரோடோ,  உதவி செய்த சுற்றத்தோடோ பேசும்போதெல்லாம் தொலைபேசியின் வினாடிகளைக் கவனித்து கைக்காசு முடியும் முன் பேசி முடிக்க வேண்டியிருக்கிறது.  ஒரே சமயத்தில் மூன்று நகரங்களில் தன்னுடைய தீராத பொருளாதாரப் பிரச்சினைப் பின்னப்பட்டிருப்பதை, ஓரிடத்தில் வாழ முடியாது வெவ்வேறு இடம் இருந்தபடி இருப்பதை கலாமோகனின் ‘மூன்று நகரங்களின் கதை’ சொல்கிறது. கடிதங்களோ, தொலைபேசி அழைப்புகளோ வந்தால் நிம்மதி போய் விடும் என்றஞ்சி தொடாமலே இருக்கின்றனர். நிம்மதியைப் பறிக்கும் பொருளாதாரப் பிரச்சனையிலிருந்து சில மணி நேரம் விடுபட நண்பர்கள், பக்கத்து அறைக்காரர்கள் யாரேனும் கொஞ்சம் விஸ்கி வாங்கி தந்தால் அமைதி கிட்டும் என நாடுகின்றனர். இப்படியான பொருளாதார பிரச்சனைகளோடு மேலை நாடுகளில் வாழ வேண்டியிருப்பதை ‘மூன்று நகரங்களின் கதை’ சொல்கிறது.

அகதிகளாக வந்தவர்களுக்குக் குடும்பத்தினர் ஓடியாடி பணம் திரட்டியனுப்பிய கோலம் வந்து உறுத்துகிறது. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை ஊரில்படும் கஷ்டங்கள் காட்சிகளாக விரிகின்றன. பணம் அனுப்பத் தாமதமானால் பெற்றோர்களின் புலம்பல் கனடாவிற்கோ, பிரான்சிற்கோ வந்துவிடுகிறது. வட்டியோடு கடனை மெல்ல தீர்க்க வேண்டியிருக்கிறது.  அகதிகளாக வந்தவர்களில் படித்தவர்கள் நல்ல வேலையில் அமர்ந்ததும் ஊரில் கடனை வேகமாகத் தீர்க்கிறார்கள். நிலப்புலங்களும் வாங்குகிறார்கள்.  இதனைக் காரணமாகக் காட்டி அடிமட்ட வேலை செய்பவர்களை நச்சரிக்கவும் செய்கின்றனர். வீட்டை சுத்தம் செய்யவோ, விடுதிகளைச் சுத்தம் செய்யவோ, தெருக்களைச் சுத்தம் செய்யவோ ஈடுபடும் தமிழர்களை வெள்ளையர்கள் ஏளனமாகப் பார்க்கின்றனர். முகம் கொடுத்துப் பேசுவதில்லை. பணிக்கு வரும் நபர்களின் அட்டைகளை வாங்கி வெறுப்பில் ஓங்கி முத்திரை இட்டுத் தள்ளி விடுகின்றனர். கையில் தருவதில்லை. சோதனைச்சாவடியின் தடுப்பு மரக்கட்டைக்கு அடியில் நழுவிச் சிதறிக் கிடக்கும் சில்லறைக் காசுகளை பொறுக்கிச் சேமிக்கின்றனர். ஒரு காலத்தில் மெக்ஸிக்கோவிலிருந்து வந்து இங்கு நிரந்தரக்குடிகளாக மாறியவர்கள் கூட கருப்பன் என்று வெறுக்கின்றனர். சீன தேசத்து பணக்கார மஞ்சள் நிறத்தவர்களும் தமிழனை வெறுக்கின்றனர்.

சீன இளம்பெண் தமிழ் இளைஞனை ஒரு ஆடவனாகக்கூட கண்டுகொள்வதில்லை.  இளம்பெண்ணிடம் இனிமையாகப் பேசப் போதிய சொற்கள் இல்லாமல் சுருங்கிப் போகின்றனர். காதல் எண்ணத்தையோ, காம எண்ணத்தையோ வெளிப்படுத்த முடியாமல் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. தொலைக்காட்சிப்பெட்டி கூட இல்லாத இரண்டே அறையில் ஒடுங்குகின்றனர். பணக்காரர்கள் வேண்டாம் என ஒதுக்கித் தள்ளிய குளிர்பெட்டியைத் தெருவிலிருந்து தூக்கி வந்து வைத்துக்கொள்கின்றனர். கடும் பனி வாட்டி எடுக்கிறது. பனிச்சிறையில் அகப்பட்டது போல மூச்சை அடைக்கிறது.  பனிக்காலம் வந்தால் ஊருக்கு அனுப்ப வேண்டிய பணத்தில் குளிருக்குப் பொருட்களை வாங்க வேண்டியிருக்கிறது. வீட்டு உடைமையாளன் உஷ்ணத்தை எப்போது கூட்டுவான் என காக்க வேண்டியதிருக்கிறது. பணியிடங்களில் வெறுக்கும் பெண்களிடம் ஏன் வெறுக்குகிறீர்கள் எனக்கேட்க முடிவதில்லை. தனிமை ஒடுக்குகிறது. பொருள்களோடு பேசிக் கொள்ள வேண்டிய நிலை. இரவு வேலை நடுஇரவிற்கு மேல் போகும்போது உண்ண விருப்பமில்லாமல் தூக்கத்தில் மூழ்குவதும், எலிகளை மிதிக்காமல் படுக்கைக்குச் செல்வதும், தெருவில் பொறுக்கிய பணத்தையும் உழைத்துச் சேர்த்த பணத்தையும் எண்ணிப்பார்ப்பதும் நடக்கிறது. ஒரு சீனனைப்போல ஒரு கார் வாங்க எண்பத்து மூன்று வருடங்களாகும் என்பதை மனக்கணக்கு போட்டு உழைப்பில் மூழ்கும் இளைஞர் பற்றிய கதை‘கரும்பு அணில்’.

மேலை நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களின் நிலை மட்டும்தான் இப்படி என்பதில்லை.  கீழைநாடுகளுக்கு வேலைதேடிச் சென்றவர்களின் நிலையும் இதுதான்.  தமிழகத்திலிருந்தும் ஈழத்திலிருந்தும் சிங்கப்பூர், மலேசியாவிற்கு வேலை தேடிவந்தவர்களுக்கு விமானத்தை விட்டு இறங்கும் வரை ஒரு இனிமையான கனவு பூமியாகத் தோன்றுகிறது. மறுநாளிலிருந்து சொந்த மண்ணில் கிடந்து உழன்றதை விட வேறு விதமான துன்பங்களைத் தரும்பூமியாக மாறுகிறது.  ஞாயிற்றுக்கிழமைகளில் கூடிப் பேசிக்கொள்கின்றனர். விடிந்தால் நடுங்கும் குளிரில் ஏஜெண்டுகளின் லாரிகளில் ஏறி வேலை செய்யும் இடங்களுக்கும் செல்கின்றனர்.

அதிகாலையில் கூட்டத்தோடு கூட்டமாகக் குளித்து தயாராக வேண்டும். மழை வெயில் பனி எந்த தட்பவெப்பநிலையிலும் இரவு ஏழுமணி வரை வேலை செய்ய வேண்டும்.  பத்து மணிக்கு இருப்பிடத்திற்கு வந்து உப்பில்லாத சாப்பாட்டையோ அரைகுறை சமையலையோ உண்டு  மூட்டைப்பூச்சியுடன் உறங்க வேண்டும். தொலைபேசியில் ஊருக்குத் தொடர்பு கொண்டால் பணம் கரையுமே என பேசுவதைத் தள்ளிப்போடுவது; ஓவர் டைம் வேலைகளில் சிறிது பணத்தை மிச்சம் பிடிப்பது என அன்றாட பணிச்சூழல் நடக்கிறது.

சிங்கப்பூர் சென்று உள்ளுரில் மாடி வீடு, நிலப்புலம் வாங்குவோரைக் கண்டு மற்றக் குடும்பத்தினர் தாங்களும் செல்வச் செழிப்புடன் வாழ ஆசைப்படுகின்றனர்.  நிலங்களை விற்று அக்காள், தங்கை, மாமா, பெரியப்பா என உறவுகளிடமிருந்து பணத்தைத் திரட்டி தங்கள் பிள்ளைகளையும் மலேசியாவிற்கு ஏற்றி விடுகின்றனர்.

கடின வேலையிலிருந்து விடுபட்டுத் திரும்பிச் செல்ல நினைத்தாலும் குடும்பம் விடுவதில்லை.  கடனை அடைத்ததும் அப்பா பக்கத்து நிலங்களை வாங்க வேண்டியிருக்கிறது. வட்டிக்கு விட்டு பணம் சேர்க்க வேண்டியிருக்கிறது. சொந்தங்களிடம் இழந்த மரியாதையை மீட்க அங்கேயே கிடக்க வேண்டியிருக்கிறது. சொந்தங்கள் தன் பையனையும் அழைத்துப்போ என நச்சரிக்கின்றனர்.  ‘சரி’ என்று தலையாட்ட வேண்டிய நிர்ப்பந்தங்கள் வந்து விடுகிறது. ஆங்கிலம் தெரியாது அவமானங்களைப் பெற்று சிமெண்ட் கலவையிலும் கிரேனிலும் இரவு பகல் இடுப்பு வலி தாளமுடியாது வேலை செய்வது இவர்களுக்குத் தெரிவதில்லை. சிலரை வந்த ஓராண்டிலேயே ‘ஒர்க்கிங் பெர்மிட்டை’ கேன்சல் செய்து துரத்துகின்றனர். கடனும் அவமானமும் வந்து கழுத்தை நெறுக்குகிறது.  இந்த நிலையை எம்.கே. குமாரின் ‘அலுமினியப் பறவைகள்’எடுத்துரைக்கிறது.

ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் பிரச்சனை வேறானது.  துப்பாக்கிகளுடன் நுழைந்த ராணுவம் இளைஞர்களை இழுத்துக் கொண்டு போகிறது. பலர் காணாமல் போகின்றனர்.  அவர்களின் கைகளுக்குச் சிக்காமல் தப்பித்துக் கொழும்பிற்கு ஓடி–சிங்களவர்களின் கார்செட்டில் பெரும் வாடகை கொடுத்து ஒளிந்து, ஆறு மாதம் ஏஜெண்டிடம் நடையாக நடந்து பணம் கட்டினாலும், திருமணம் செய்தால்தான் விசா தருவது சுலபம் என அறிவுறுத்த அவசர அவசரமாக ஒரு பெண்ணைப் பிடித்து வந்து மண முடித்து டூரிஸ்ட் விசாக்களில் அகதிகளாக ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தஞ்சமடைகின்றனர். வேறுவகையிலும் வருகின்றனர்.  சவுதி அரேபியாவிற்கோ, இந்தியாவிற்கோ போய்த்திரும்பிய இறந்து போன அண்ணன் மாமன்மார்களின் பாஸ்போர்ட்டில் பெயரை மாற்றிக் கொணர்ந்து விடுகின்றனர்.

சிங்கள இமிகிரேசன் அதிகாரிகளுக்கு 40 ஆயிரம் ஐம்பதினாயிரம் லஞ்சம் கொடுத்துத் தப்பிக்கின்றனர். சிலரிடம் ஒரு இலட்சம் இரண்டு இலட்சம் என ஏஜெண்டுகள் வாங்கி வைத்துக் கொண்டு ஆறுமாதம் இழுத்தடித்து விசா பெற்றுத்தராமல் 50 ஆயிரம் அறுபதாயிரத்தைத் திருப்பித்தந்து ஏமாற்றும் தொழிலும் நடக்கிறது. இதையெல்லாம் மீறித்தான் அகதிகளாக மேலை நாடுகளுக்கு வருகின்றனர்.

அப்படி ஆஸ்திரேலியாவிற்கு வந்த தம்பதிகள் குமாரும் – சாந்தாவும். அதே விமானத்தில் போலி பாஸ்போர்ட்டில் வந்த நாகலிங்கத்தை அழைக்க வந்த ராசண்ணன்குமாரிடம் அறிமுகமாகிறார். இவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகச் சொல்கிறார்.  செல்போனில் பதினாறு வீடுகள் கொண்ட இரண்டாவது மாடியில் ஒரு பழைய வீட்டை வாடககைக்கு எடுக்கிறார்கள். நாற்காலி கூட இல்லாத வீடு.  ராசண்ணன் சனிக்கிழமை ஓவர்டைம் முடித்து விட்டு வருவதாகச் சொல்கிறார். தெரியாத ஊருக்கு வந்த தமிழனுக்கு மற்றொரு தமிழன் உதவ வருவதைப் பெருமையாக நினைக்கின்றான். ராசண்ணன் வருகிறார். ஒரு கிழிந்த மெத்தையைப் பரிசளிக்கிறார். மற்ற பொருட்கள் வாங்க அறுநூறு டாலரை எடுத்து வைக்கும்படி தொலைபேசியில் சொல்கிறார். சனிக்கிழமை பொருட்களை ஒரு டிரக் வண்டியில் கொண்டு வருகிறார். 600 டாலரோடு வண்டி வாடகைக்கு 40 டாலரையும் வாங்கிக் கொண்டு செல்கிறார்.  புதிதாக தஞ்சமடைந்த ஒரு அகதி குடும்பத்திற்கு முன்னே குடியேறிய அகதி பெருந்தன்மையோடு உதவியதாக முதலில் நினைக்கின்றனர். அந்த பழைய மெத்தையும் பொருட்களும் அகதிகளுக்காக ‘வின்சன்ட் பால்சொசைட்டி’இலவசமாகத் தந்த பொருட்கள். நான்காண்டுகள் பயன்படுத்தி விட்டு புதிதாக வந்த அகதிக் குடும்பத்திற்கு பணமாக விற்று ஏமாற்றுகிறார். ஒரு தமிழனே அகதியாக வந்த மற்றொரு தமிழனை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அற்பத்தனத்தை மாத்தளை சோமுவின்‘சொந்தசோதரர்கள்’கதைசொல்கிறது.

முன்னமே குடியேறிய அகதி புதிதாக குடியேறிய தமிழ் அகதியை ஏமாற்றுவது ஒரு புறம் என்றால் ஏற்கனவே இருப்பவரை ஊரிலிருந்து வந்தவர் ஏமாற்றும் விநோத போக்கை மா. இளங்கண்ணனின் ‘சுற்றிப்பார்க்க வந்தவர்’ கதை வெளிப்படுத்துகிறது.  இது சிங்கப்பூர்கதை.  செட்டிநாட்டுப் பக்கமிருந்து ஊர்த்தலைவர் பினாங்கு, கோலாலம்பூர் எல்லாம் சுற்றியடித்து விட்டு சிங்கப்பூர் மணி குடும்பத்தைப் பார்க்க வருகிறார். மணி தினக்கூலி வேலைக்குச் செல்பவர். வாரம் நெருங்க நெருங்க பணமுடை ஏற்பட்டு திண்டாடுவார். ஊர்த் தலைவரை மணியின் மனைவி மனமுவந்து வரவேற்கிறார். குழந்தைக்குப் பொருள் வாங்க வைத்திருந்த பதினேழு வெள்ளியைக் கொண்டு வந்தவர்களைச் சிறப்பாக கவனிக்கிறாள். இவருடன் வந்த மணிலா சட்டை போட்ட அவரும் கோழிக் கறியை விரும்பி உண்கிறார். மணியின் மனைவி வந்தவர் தன் சொந்த ஊர்க்காரர் என்பதால் நன்றாக உபசரித்து பத்து வெள்ளியை உறையில் போட்டுத்தந்து அனுப்புகிறாள். இப்படி விருந்தினராக வந்தவர்கள் கிளம்பும்போது வேட்டி சட்டை, சீலை, மோதிரம், கடிகாரம், கொலுசு என பரிசுப் பொருட்கள் கொடுத்தனுப்புவது வழக்கம். அவரும் ஊர் வந்து சேர்கிறார்.

ஊரிலிருந்து கடிதம் வருகிறது.  வந்தவர் ஊர்த்தலைவர். அவர்களைச் சிறப்பாகக் கவனிக்கவில்லை. கோழிக்கறி, பத்து வெள்ளி பணம் என்பது மிகக் குறைவானது. தலைவர் மலேசியா, சிங்கப்பூர் என நம் மக்களைப் பார்க்க வந்ததே பணம் சேர்த்து நல்ல வீடோ, நிலமோ வாங்கத்தான். அதை உணர்ந்து உதவிகள் செய்து அனுப்பியிருக்க வேண்டும். நமக்கு அவரால் ஆக வேண்டிய காரியங்கள் உண்டு.  இனிமேல் இப்படியானத் தவறைச் செய்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மாமனார் கண்டித்து எழுதிய கடிதத்தைப் படித்து திகைக்கின்றனர்.  ஒரு இனத்தவரின் இம்மாதிரியானப் பழக்கங்கள் அங்குள்ளவர்களின் ஏழ்மையை, அன்றாடப் பிரச்சனைகளை அறியாமல் சுயநலத்தோடு வசூல் செய்ய வருபவர்களால் அவதிப்படவும் நேர்கிறது.

 (6)

சொந்த நாட்டில் படும் அவமானங்களும் துன்பங்களும் புலம்பெயர வைக்கின்றன.  புலம்பெயர்ந்து அகதியாக வந்த நாட்டில் வேறு வகையான கசப்புகளையும் வேதனைகளையும் அனுபவிக்கின்றனர். விசாரணை என்ற பெயரில் இராணுவம் தமிழ்க்குடும்பங்களுக்குள் அத்துமீறி நுழைகிறது. அண்ணன், தம்பி, தகப்பன், அம்மா இருக்க சகோதரியைத் தடவிக் கசக்குகிறது. திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி மோசமாக நடந்து கொள்கிறது. தடுக்க முனையும் சகோதரனை துவக்கால் சாத்துகிறது. ஆடவர்களை அழைத்துச் சென்று காணாபிணம் ஆக்குகிறது. எறிகணைகள் ஓய்ந்த நேரங்களில் தெருவில் பிணமாகக்கிடக்கும் சொந்தங்களைத் தாண்டி நாடு கடக்க வேண்டியிருக்கிறது. அப்படி அகதிகளாக வந்த தேசங்களில் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு விதமான அனுபவம் நேர்கிறது.

தமிழகம் வந்தால் வீடு கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. வெடிகுண்டு வைத்துவிடுவார்கள் என மறுக்கின்றனர். தம்பியோடு தப்பி  வந்த சகோதரியைத் தவறாகப் பார்க்கின்றனர்.  சுற்றுலா விசா முடியும் தருவாயில் காவல்துறைக்கு ஓயாமல் அலைய வேண்டியிருக்கிறது.  லஞ்சப்பணம், பெரும் தொகை தந்தபின் இருப்பதற்கு அனுமதிக்கிறது. சகோதரர்கள் லண்டன், ஜெர்மனி, பிரான்சில் இருப்பதாகச் சொன்னால்தான் வாடகைக்கு வீடு கிடைக்கிறது. முன் பணமும் வாடகையும் மற்றவர்களைவிட அதிகமாகத் தர வேண்டியதிருக்கிறது. எப்போதும் அச்சத்தோடு இருக்க வேண்டியிருக்கிறது. அகதி என்பதால் இங்கு நடக்கும் சுரண்டலைக் கேள்வி கேட்க முடியாமல் மௌனமாக இருக்க வேண்டியிருக்கிறது. (தமிழ்நதி– என் பெயர் அகதி).

அகதிகளாக வெளிநாட்டுக்கு ஓட வேண்டிய சூழலைப் பயன்படுத்தி ஏஜண்டுகள் கொள்ளையடிக்கின்றனர். ஜெர்மனிக்கு அனுப்புவதாகக் கூறி மாஸ்கோவில்இறக்கி விடுகின்றனர்.  பாஸ்போட்டுக்களைப் பறித்துக் கொண்டது வந்த பின்புதான் தெரிய வருகிறது. போலி பாஸ்போர்ட்டிற்குப் பெரும் பணத்தைப் பறித்துக் கொள்கின்றனர்.  இளம் பெண்களும் ஆண்களும் பத்துக்குப் பத்து அறையில் ஏழெட்டுப் பேர் தங்க வைக்கின்றனர். பாலியல் சீண்டல்கள், தொல்லைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. சில சல்லாபங்கள் நடக்கவும் செய்கின்றன. கற்பு கத்திரிக்காயைக் கொழும்பில் விமானம் ஏறும் முன் நிறுத்திக் கொள்ள வேண்டும். கொழும்பு ஏஜென்சிக்காரன் சிங்களன் தமிழ்காரனுக்கு மாற்றி விடுவான். பின் வங்காளி, வெள்ளைக்காரன் என ஏஜென்சிகளின் வழி அகதி நாட்டிற்குள் இறங்க வேண்டும். சந்தைப் பொருட்களைப்போல வெவ்வேறு நாட்டுப் பழைய விடுதிகளில் அடைத்து அடைத்து அனுப்புவான்.  அவர்களின் வேஷம் அவ்விடங்களில் வெளியாகும். மாஸ்கோவில் இறங்கி போலந்து காட்டு வழியில் குளிர்வாட்டியெடுக்க நடந்து நடந்து நாடு கடந்து வந்தால் ஜெர்மனிக்குள் உடனே நுழைந்து விட முடியாது. கூட்டத்தில் இயக்கவாதிகள் இருப்பதாக சந்தேகப்பட்டால் கூட்டமே சிறைக்குப் போக வேண்டும். அதிலிருந்து மீண்டு வருவது பெரும் பிரயத்தனம். பசி, களைப்பு, அச்சம் பிடித்தாட்டும்போது ஏன் வந்தோம் என்ற மன பேதலிப்பு பிடித்தாட்டும். மூன்று வேளையில் ஒருவேளை உணவு, படுக்க இடம் கேட்டு அகதி, அகதி என்று கெஞ்சி உள்நுழைய வேண்டியிருக்கிறது. (நிருபா– ‘தஞ்சம் தாருங்கோ’).

இந்திய முகங்களைப் பார்த்தாலே லண்டன் போன்ற மேலைநாடுகளில் போலீஸ் சோதனை மேற்கொள்கின்றனர். தமிழரின் நிறம் கேலிக்கும் கிண்டலுக்கும் உரியதாகிறது. வேற்றுமையிலிருந்து தப்பிக்க முடியாது. ‘பாக்கி’ (பாகிஸ்தானி) என்று வசைச்சொல் காதில் விழும். கட்டிட வேலை கிடைப்பது எளிது. பாகிஸ்தான், அல்ஜீரியா, பங்களாதேஷ் அகதிகளோடு வேலை செய்யும் சூழல் நேர்கிறது. தலையில் கோஷா போடாத பாகிஸ்தான் பெண்களின் அழகு வாட்டியெடுப்பதைக் காட்டிக் கொள்ளாமல் வேலையில் மூழ்க வேண்டும். பாஸ்போர்ட்டைத் தொலைத்தவர்கள் போலீஸ் தொல்லை அதிகம் இல்லாத வால்ரம்ஸ்டர் கம்யூனிட்டி சென்டர், பார்க்கிங் என்று மறைந்து கொள்வதுண்டு. லண்டனில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் குண்டு வைக்கும் போதெல்லாம் மற்ற தேசத்து அகதிகள் விசாரணைக்கு உட்பட வேண்டியிருக்கிறது.

லண்டனுக்கு வந்த அகதிகள் ஒரு வித அந்நியத் தன்மையில் தனிமையோடு போராட வேண்டியிருக்கிறது. பாலியல் உணர்வுகளை ஏக்கத்தோடு அடக்கிக் கொள்கின்றனர். பணத்தை மிச்சம் பிடித்து பாலியல் தொழில் செய்யும் வெள்ளைக்காரப் பெண்ணிடம் அணுகினால் ஏழை, கருப்பன், பிச்சைக்காரன் எனத் துரத்துகிறாள்;. விமானநிலையங்களில் கூட மூன்றாவது பிரிவில்தான் கீழைதேசத்து மக்கள் செல்ல வேண்டியிருக்கிறது. வெள்ளைக்காரர்களுக்கு உரிய ஓட்டலுக்குள் செல்ல முடியாது. வெள்ளைக்கார சர்வர்களிடம் பணிந்து பேசத் தோன்றுகிறது. மெட்ரோ ரயில் நடைபாதையில் கிதார் வாசிக்கும் கருப்பு இளைஞனை வெள்ளைக்கார இளைஞன் ‘நிறுத்து’ என்கிறான். அவன் பணிந்து விலகிச் செல்கிறான். இவ்விதமான நிறவேற்றுமையின் ஆதிக்கத்தை சுப்ரபாரதிமணியனின் ‘விமோச்சனம்’, ‘அறிவிப்பு’ கதைகள் காட்டுகின்றன.

ஒரு அழகான பெண்ணைப்  பார்த்து ‘உன்னை விரும்புகிறேன்’ என்று அகதி கூறியதைக் கேட்டு பெண் அலறுகிறாள். சுற்றி இருந்தவர்கள் அடித்து நொறுக்குகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டவன் என்றுதித்து சிறைக்குத் தள்ளுகின்றனர். (‘உதுமான்கனி– அகதி) சின்ன திருட்டுகளில் ஈடுபட்டவர்கள், சந்தேகத்தின் பேரில் பிடிபட்டவர்கள், போதைப்பொருள் உட்கொண்டவர்கள், பாஸ்போர்ட் இல்லாதவர்கள் இருண்ட சிறையில் கிடக்கின்றனர். கடைகளில் மறதியாக பொருளுக்குப் பணம் தராமல் வந்ததால் சீன குண்டர்கள் சிறைக்கு அனுப்பி வைக்கின்றனர்.  அந்த குண்டர்களுக்கு இதற்கு போனஸ் உண்டு.  குடிக்கத் தண்ணீர் கேட்டால் உரிய நேரத்தில் வராது.  சின்ன மூக்குத்தி கூட இருக்கக்கூடாது.  முழங்கால் தடுப்புச்சுவர் மறைப்பிலிருந்து மூத்திர வாசமும், துர்நாற்றமும் வீசியபடி இருக்கும். சிறையில் சீனப் பெண்களின் கூச்சல்  ஓங்கி ஒலிக்கும். அந்தப்பக்கம் இருக்கும் ஆண்களோடு கத்திப் பேசுவார்கள். ஆடைகளை மற்ற சிறைவாசிகளின் முன்னே கழற்றி குழாயில் அலசுவர்.  இப்படி பெண்களும் சிங்கப்பூர் சிறையில் சிக்கி வெளியேறுகின்றனர். பின் வாராவாரம் காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்து இடவேண்டும். (ஜெயந்திசங்கர் – நாலேகால் டாலர்’)

ஏஜெண்டினால் ஏமாற்றப்பட்டு பாஸ்போர்ட்டை தொலைத்து அரபு நாட்டில் வாழ நேர்ந்த ஒருவனின் கதையை (மீரான்மைதீனின்‘மஜ்னூன் கதை) விரிவாகச் சொல்கிறது. இளம் மனைவியை விட்டு வேலை தேடி வந்த தமிழன் ஏஜெண்டால் ஏமாற்றப்படுகிறான். பாஸ்போர்ட் இல்லாமல் ஒளிகிறான். காவலரிடம் பிடிபடாமல் இருக்க நான்கைந்து பேர் ஒன்றாக தங்கி வேலை செய்பவர்களுக்கு சமையல்காரனாகச் சென்று மறைந்து வாழ்கிறான். வெளியில் சென்று முடிவெட்ட முடியாது. சந்தேகத்தின் பேரில் மாட்டிக்கொள்ள நேரிடும். உ.பி.காரனின் உதவியோடு டாய்லெட்டில் அமர்ந்து வெட்டிக்கொள்கிறான். அவன் திடீரென மாரடைப்பால் இறக்க அங்கிருந்த நண்பர்கள் உடனே அங்கிருந்து ஓடிவிடும்படி சொல்கின்றனர். பாஸ்போர்ட் இல்லாதவனைக் கொலைக் குற்றவாளியாக்கிவிடுவர். அங்கு இஸ்லாம் பெயரில் வந்த இந்து இளைஞனுக்கு ஆபத்து ஏற்படும். உடுத்தியத் துணியோடு நடுஇரவில் அவ்விடத்திலிருந்து தப்பித்து வருகிறான்.  போலீஸ் வாகன ரோந்து பணியில் வருவதைக் கண்டு விழுந்தடித்து ஓடிப்போய் பிரமாண்டமான நகரின் குப்பைத்தொட்டியில் குதித்து மறைகிறான். அழுகிநாறும் இறைச்சித்துண்டுகளில் முகம் உரசுகிறது. துணியைத் தடவித் தேடி எடுத்துத் துடைக்கிறான். அந்த சானிட்டரி நாப்கின் துணியின் துர்நாற்றம் மூக்கைத் துளைக்கிறது. ஒவ்வாமையில் வாந்தி எடுக்கிறான். குப்பையைக் கிளறிக் கொண்டிருந்த பூனைகள் கத்துகின்றன. குப்பைக் கூளத்திற்கிடையில் செத்துப்போன பூனையின் பிணம்வேறு கிடக்கிறது. மனித மலமும் புழுக்களும் அழுகிய இறைச்சியுமாகக் குவிந்து கிடக்கும் குப்பையில் மூன்று மணி நேரம் பதுங்கியிருக்கிறான். 300 அடிக்குத் தள்ளி ஒரு லாரி வந்து நிற்கிறது. ஒளிந்து ஓடி ஏறிக்கொள்கிறான். அது அங்கிருந்து 400 கிலோ மீட்டர் தள்ளியுள்ள ஜித்தா போகும் வண்டி. உடம்பெல்லாம் கசடுகள் அப்பிக்கிடக்க பீரோவிற்குள் புகுந்து பதுங்குகிறான். மூச்சுத்திணறலோடு சொட்டுச்  சொட்டாக மூத்திரம் இறங்க வெகுதூரம் வருகிறான்.

ஜித்தாவில் வண்டி நின்றதும் வண்டியிலிருந்து வலிய விலங்கின் பிடியிலிருந்து தப்பியோடிய விலங்கைப் போல குதித்து ஓடுகிறான். அவனிடமிருந்து வீசும் துர்நாற்றத்தைக் கண்டு தெருவில் போவோர் விலகுகின்றனர். அந்த இடம் பலத். அவனைப் பார்த்த சிறுவர்கள் மஜ்னூன் மஜ்னூன் (பைத்தியக்காரன்) என்று அரபியில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.  பசியை அடக்க பிச்சை எடுக்கிறான். பல்வேறு நாட்டுக்காரனிடம் பிச்சை கேட்டு நிற்கிறான்.  சிறுவர்கள் காலி பெப்ஸிடின்களை அவன் மீது எறிந்தபடி கேலி செய்கின்றனர். பிச்சையிட விரும்பாதவர்கள் வானத்தைக்காட்டி (அல்லா தருவார்) விலகிச் செல்கின்றனர். பிச்சை கேட்கும் இவனுடைய தோற்றத்தைக் கண்டு சேன்ட்விச்சை தின்ற அரபியனும், பெப்ஸி குடித்துக் கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் பெண்ணும் பயந்து கொடுத்து விட்டு ஓடுகின்றனர். பாங்கு ஒலி கேட்க பள்ளி வாசலுக்குள் மற்றவர்கள் சென்றதும் பள்ளி கக்கூஸில் உடைகளைக் களைந்து குளித்து துணிகளை நாற்றத்தோடுஅலசிபோட்டுக் கொண்டு வெளியேறுகிறான். மலையாளி, எத்தியோப்பியன் என எல்லோரிடமும் கையேந்துகிறான். ஒரு எதியோப்பியன் இவனுக்குத்தங்க இடம் தருகிறான். அது பிரான்ஸ்காரன் விட்டுச்சென்ற பாழடைந்த வீடு. அங்கு கூட்டாக வேலை செய்யும் ஐந்து மலையாளிகளுக்கு சமையல் செய்து தருகிறான். கக்கூஸ் கழுவ வேண்டும். துவைக்க வேண்டும். அது ஜன்னல் இல்லாத அறை. ஆகாயத்தைப் பார்க்க முடியாது.  பகலின் வித்தியாசம் தெரியாது. அறையை விட்டு வெளியே போகக்கூடாது. போனால் திரும்ப வரக்கூடாது என்கின்றனர்.  அவர்கள் இல்லாத நேரம் பார்த்து வானத்தைப் பார்த்தால் நட்சத்திரங்களும் சில சமயம் தெரியாது. நிலவு பார்த்து நாளாகிறது. வெக்கைக் குவியர்த்து ஒழுகுகிறது. ஏசி போடக்கூடாது. துப்பில்லாதவன் என்று திட்டுகின்றனர்.

இங்கும் ஒரு நாள் போலிஸ் வந்து இரவில் தட்டுகிறது. கபர் குழியைவிட மோசமான கக்கூஸில் ஓடி ஒளிகிறான். கரப்பான் பூச்சியும் செத்தஎலியின் நொசநொசப்பும் வாடையும்தாக்குகிறது. மார்பிலும் வாயிலும் அடிக்கும் போலிசிடமிருந்து தப்பித்து மக்காவிற்கு ஓடுகிறான்.  (முகமது நபி மதினாவிலிருந்து மக்காவிற்கு தப்பியது வேறு) அங்கு மறுபடியும் பிச்சைக்காரனாக அலைகிறான். பாஸ்போர்ட் இல்லாத அகதிகளாக உம்ரா நகரில் இருப்பவர்களைப் பிடித்து லாரிகளில் ஏற்றிக் கொண்டு செல்கிறது. அரசு அறிக்கை வெளியிடுகிறது.  குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் பாஸ்போர்ட் இல்லாத அகதிகள் வெளியேற வேண்டும் என்கிறது. லாரிகளில் முண்டியடித்து ஏறுகின்றனர். இவனும் லாரியில் ஏறிவிட முனைகிறான். பாஸ்போர்ட் தொலைத்தவர்கள் அரபுநாடுகளில் படும் அவல நிலையை‘மஜ்னூன்’ கதை விரிவாகச் சொல்கிறது.

கதைசொல்லியின் பார்வையில் அரபு நாடுகளுக்கு வந்த மற்றவர்கள் எப்படி வாழ்கின்றனர் என்பதையும் சேர்த்து சொல்கிறது இக்கதை. மக்காவிற்கு உம்ரா செய்ய வருபவர்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிப் போகாமல் சிலர் இங்கேயே தங்கி விடுகின்றனர்.  இவர்களில் மலப்புரம், லக்னோ, பங்களாதேஷ், பாகிஸ்தான், இந்தியாவினர்உண்டு.  இவர்களின் பிச்சைக்காரத் தொழிலை ஒடுக்க அரசு சட்டம் போட்டு விரட்டவும் செய்கிறது. சிறைச்சாலையில் குளிர்சாதனம் கிடையாது. தண்ணீர் தேவைக்குக் கிடையாது. ஒரு வேளை ரொட்டித்துண்டு வீசப்படும். முண்டியடித்து அதனைப் பற்ற வேண்டும். ஆப்பிரிக்க தக்ரோனியப் பெண்கள் குழந்தைகளை முதுகிலோ வயிற்றிலோ கட்டிக்கொண்டு வெயில் சுட்டெரிக்க குப்பைத் தொட்டிகளிலும், சாக்கடைகளிலும் காலி டின்களைப் பொறுக்குகின்றனர்.  ரொட்டிக்காகப் பிச்சை எடுக்கின்றனர். இவர்களின் பத்து பனிரெண்டு வயது ஆண் பிள்ளைகளுக்கு வண்டி கழுவுவது வேலை. அவர்களைப் போலிஸ் துரத்தியடிக்க ஒடுகின்றனர். மறுபடியும் வந்து விடுகின்றனர்.  சிறைச்சாலையில் தினமும் மரணச் செய்தி வருகிறது. பலவீனமானவர்கள் பிழைப்பது சிரமம். எப்போதாவது இந்திய எம்பசியிலிருந்து அதிகாரிகள் வருவார்கள். அவர்களின் இரக்கத்திற்கு இவர் முகம் வர வேண்டும். உ.பி.காரர்கள் பாகிஸ்தானிபோல இருப்பதால் சிறையில் வாட்டி எடுக்கின்றனர். தமிழர்களை இலங்கைப் போராளிகள் என நினைத்து வதைக்கின்றனர்.  அங்கிருந்து விடுதலையாகிச் செல்ல வாய்ப்புக் கிட்டினால் பணம் தர வேண்டும். இல்லையென்றால் அடி உதையை வாங்கிக் கொள்ள வேண்டும். எம்பஸிக்காரர்கள் இந்தியர்களை நாய்களைவிட கேவலமாக ஏசுகின்றனர். இந்த அராஜகத்தைக் கண்டு பலர் பிடிபடாமல் அரபிய பாலத்தின் கீழ் சரணடைகின்றார்கள். கப்பல் பயணத்தில் ஏறிச்சாகவும் செய்கின்றனர். இங்கு வந்தத தக்ரோனிய பெண்கள் அரபிகளின் வீட்டுக்கு வேலைக்காரர்களாக செல்கின்றனர். அங்கு அத்தனை ஆண்களாலும் சீரழிக்கப்படுகின்றனர். யார் யாருக்கோ பெற்ற குழந்தைகளை வைத்துக்கொண்டு பிச்சையெடுக்கின்றனர். இப்படி பிறந்து ஆயிரக்கணக்கான குழந்தைகளைப் பிடித்து கப்பலில் ஏற்றி ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்புகின்றனர். அவர்கள், இவர்கள் எமது நாட்டுக் குழந்தைகள் அல்ல என திருப்பி அனுப்புகின்றனர். மறுபடியும் அவர்கள் அரபுநாட்டில் பிச்சையெடுக்கின்றனர்.

மலையாளிகள் பணம் சம்பாதித்து ஊரில் பெரியபெரிய வீடுகளைக் கட்டுகின்றனர். தமிழர்களைத் துப்பில்லாதவர்கள் என்று திட்டுகின்றனர். வேலை செய்யும் கடைகளில் பொருட்களைத் திருடி குப்பை வண்டியில் போட்டு விடுகின்றனர். குப்பை கொட்டும் இடத்தில் அந்தப் பொருட்களை சேகரித்து காசாக்கும் ‘குப்பைத் தொட்டித் திருடர்கள்’ இருக்கின்றனர்.  அரபியரின் வீடுகளில் வேலை செய்த திருடர்கள் இருக்கின்றனர். அரபியரின்வீடுகளில் வேலை செய்த தக்ரோனிய, இந்தோனேசிய பெண்களின் சடலமும் குப்பைக் கிடங்கில் வந்து கிடக்கிறது. விபச்சாரமும் நடக்கிறது. அரேபியாவிற்கு வேலைதேடிச் சென்றவர்களுக்குக் கிட்டும் அனுபவங்கள் இவை.

 லண்டனுக்கு அகதியாக வரும் தமிழர்கள் பெட்ரோல் நிலையங்களில் வேலை செய்கின்றனர். முக்கியமாக இரவு நேரங்களில். முதல் ஆறு மாதம் அகதிகள் அங்கு வேலை செய்ய முடியாது. அகதிகளுக்கு எண் தந்த பின்தான் வேலைக்குச் செல்ல முடியும். அதுவரை அகதிக்காசு வரும். ஆனால் குறைந்த ஊதியத்திற்கு பெட்ரோல் மையத்தில் வேலை செய்ய ஆட்கள் தேவை இருப்பதால் எண் இல்லாமலே இருப்பது போல சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.  லண்டனில் போலிஸ் கெடுபிடியும் சற்றுகுறைவு.

இரவு நேரங்களில் போக்கிரிகளின் தொந்தரவு வருகிறது. சில தமிழர்கள் கள்ளத்தனமாக கிரடிட் கார்டைப் பயன்படுத்தி பண மோசடி செய்ய பேரம் பேசுகின்றனர். ஒத்துக்கொண்டால் பெட்ரோல் போடும் பையனுக்குக் கமிஷன் உண்டு. கள்ளக்கார்டை அனுமதிக்கவில்லை என்றால் வெள்ளைக்கார ரவுடிகள் கேஷியரின் மண்டையை உடைப்பது நடக்கும். கள்ளக்கார்டு போட்டு திருடுபவர்கள் 30, 40 கார்டுகள் வைத்திருக்கின்றனர். சில குடிகாரர்கள் உரிய பணத்தைத்தராமல் சிகரெட் கேட்கின்றனர். தரவில்லையென்றால் பீரை ஓட்டையில் ஊற்றிவிட்டுச் செல்கின்றனர். அதனை அள்ளி வெளியில் ஊற்ற வேண்டும். பணம் தராமலே சிகரெட் கேட்பார்கள். தரவில்லை என்றால் கண்ணாடியில் எச்சிலைத் துப்பிவிட்டுச் செல்கின்றனர்.  அதனை உடனே துடைக்க வேண்டும். சில பெண்கள் சிகரெட் வாங்கும் சாக்கில் கதவைத் திறக்கச் சொல்கின்றனர். மார்புகளைக்  காட்டி பாலியலுக்கு அழைக்கின்றனர். ஆள்காட்டி விரலைக்காட்டி கரச்சல் தருகின்றனர். சிலசமயம் அவசரமாக டாய்லெட் போக கேட்டு  நுழைகின்றனர்.  நுழைந்ததும் கேசியருக்கு துப்பாக்கியைக் காட்டி பணத்தைப் பறிக்கின்றனர்.  லாரி ஓட்டி வரும் கருப்பு இனப்பெண் பணம் தராமல் பெட்ரோல் நிரப்பு என மிரட்டுகிறாள்.  இரவில் பணம் பெற்றுத்தான் பெட்ரோல் ஊற்ற முடியும் என்றால் லிவரைத்தூக்கி அடிப்பதுபோல ஓங்கி ‘கருப்பன்’ என்றும் ‘பக்கி’ என்றும் திட்டுகிறாள். சில சமயம் இளம்பெண்கள் கண்ணாடி கதவு பக்கம் நின்று ‘உன்னுடன்  செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்புகிறேன் வா’எனஅழைக்கிறாள். கென்ய நாட்டுக்கார ஓட்டுநர் பெட்ரோலுக்குச் சில்லறையாக கேஷ்கவுண்டரில் கொட்டி ஊற்றச் சொல்கிறான். ஒவ்வொன்றாக எண்ணுவதற்குள் லாவகமாக 25, 30 பென்ஸை குறைத்து விடுகிறார்கள். இந்த பெட்ரோல் நிலைய வேலைகளில் ஈடுபடும் தமிழர்களில் சிலர் பித்தலாட்டங்கள் செய்து பணம் சேர்ப்பதும் உண்டு. நியாயமாக நடக்கும் தமிழர்களுக்குத் தினம் தினம் இரவுகளில் இம்மாதிரியான அச்சத்தை ஏற்படுத்தும் காரியங்கள் நடப்பதுண்டு. (இளைய அப்துல்லாஹ்-பெற்றோர்ஸ் ரேஸன்) இந்த போக்கிரித்தனங்களிலிருந்து தப்பித்து தவறு செய்யாமலும், செய்ய விடாமலும் இருந்து வேலையைத் தமிழர்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதாகஇருக்கிறது.

இங்கிலாந்தில் இனவாதம் அங்கங்கு தலைதூக்கியபடிதான் இருக்கிறது. மொட்டைத் தலையன் பங்களாதேஷி பெண் முகத்தில் எச்சில் துப்புவது; முஸ்லீமின் மூன்று குழந்தைகளைக் கொல்வது;  பேட்டி தந்த அவரையும் தாக்குவது;  தாக்குதலில் அகதிகளுக்குக் கண் போவது; என சம்பவங்கள் நடக்கின்றன. அநாதையான பையனை எடுத்து வளர்த்த தந்தையேகெடுக்கிறான். அவன் இனவாத போக்கிரியாக மாறுகிறான். ஹிட்லர் செய்த இனப்படுகொலை இப்போது வேறு வகையில் நடக்கிறது. வெள்ளையர்களின் குடும்பச்சூழல் சிதைந்து போனதால் இந்த உதிரிகள் தோன்றுகின்றனர். போதைப் பழக்கத்திற்கு உள்ளாகின்றனர். சொந்த நாட்டிலும் அகதியாக வந்த நாட்டிலும் உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலையில் வாழ வேண்டியிருக்கிறது. (ராஜேஸ்வரிபாலசுப்ரமணியன் – அவள்ஒருஇனவாதி).

– தொடரும்…

பிற படைப்புகள்

Leave a Comment