பாவம் வண்ணத்துப்பூச்சிகள்!
– சத்தி வேல்
சுரேஷ்குமார இந்திரஜித் ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளனாக தன்னை நிரூபித்தவர். அவரின் முதல் நாவல், கடலும் வண்ணத்துப்பூச்சிகளும். காலச்சுவடு வெளியீடு. குறுநாவல் வகைமைக்குள் அடக்கிவிடும்படியான தோற்றம்; மொத்தம் 100 பக்கங்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆதித்ய சிதம்பரம். வழக்குரைஞராகப் பணியாற்றிக் கொண்டே ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருப்பவர். அவரின் இரட்டை மனிதன்(Dual Man) நாவலுக்கு நோபல் பரிசு கிடைக்கிறது. அதற்கான பாராட்டு நிகழ்வில் ஆ.சி உரையாற்றுவதாக நாவல் துவங்குகிறது. பால்யகாலத்தில் அவருக்கு உதவிய பாதிரியாரான செபாஸ்டியன் நாடாரின் மகள் ரெஜினாவைச் சந்திப்பதில் நாவல் நிறைவுறுகிறது.
ஆதித்ய சிதம்பரத்தின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சித்தரிப்பதில் கவனக்குறைவாகவே இருந்திருக்கிறார் சு.இ. அவரின் ஆரம்ப காலம், மத்திம காலம் போன்றவை கல்கி இதழுக்கான கதைவடிவில் இருக்கிறது. வாசிக்கும்போது ஆயாசமே முந்துகிறது. தொடக்கம் முதலே வாசிப்புத்தளர்ச்சியைத் தந்துவிடும்படியான நடை; கொட்டாவி விட்டுக் கொண்டேதான் நகர்ந்தாக வேண்டி இருக்கிறது.
மையப்பாத்திரமான ஆதித்ய சிதம்பரத்தின் வாழ்க்கைச் சம்பவங்கள் முகநூல் பாணியில் மொட்டையாக இருக்கின்றன. எங்கும் வாசகனுக்கான நற்தருணங்கள் வாய்க்கவில்லை; செயற்கையான கட்டுரைச் சாத்தியங்களே புலப்படுகின்றன. நோபல் பரிசு பெற்ற இரட்டை மனிதன் கதைச்சுருக்கமும் அம்புலிமாமா பாணியில் இருக்கிறது. ஒருவேளை, நோபல் பரிசின் தரத்தைப் பகடி செய்ய முயன்றிருக்கிறாரோ?
ஐந்து குறுநாவல்களின் பகுதிகளும் அப்படியே. இருபத்தோராம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் முயற்சிக்கப்பட்ட கதைபாணியோடு போட்டி போடும் வகையில் அவை இருக்கின்றன. அவற்றின் உள்ளடக்கங்களும் ஒவ்வாமையையே தந்தன.
”இந்த நாவலை எழுத மனதில் எண்ணம் தோன்றியபோது நாவலின் பின்னணியில் அழகிய புனைவாக வண்ணத்துப் பூச்சிகள் உருக்கொண்டன” என்று முன்னுரையில் சு.இ. குறிப்பிட்டிருப்பார். ஆனால், வண்ணத்துப்பூச்சிகள் இயல்பாகப் பறக்கவில்லை. அவரே வலிந்து பறக்கவிட்டிருக்கிறார். அவையும், சொல்லில் விளக்க இயலாக் கடுப்பையே சுமந்து பறக்கின்றன.
சு.இ-தான் நாவலை எழுதினாரா எனும்படியான பதைபதைப்பு நாவல் முழுதும் நீடித்தது. சொல்ல வேண்டாம் என்று நினைத்தாலும் சொல்லித்தான் ஆக வேண்டி இருக்கிறது. சமீபமாய் நான் வாசித்த நாவல்களில் ஆகத்தட்டையானது இந்நாவலே; ஆகத்தட்டையான எனது விமர்சனமும் இதற்கானதே.
கடலும் வண்ணத்துப்பூச்சிகளும் (நாவல்) ஆசிரியர்: சுரேஷ்குமார இந்திரஜித், விலை: ரூ.125 வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., 669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629001
—————————————————————–***————————————————————-
இச்சா – ஆலா பறவையின் குறிப்பு
– இரா.சிவ சித்து
“உயிர் தப்பிப் பிழைத்திருக்கும் என்னைப் போன்றவர்கள் உண்மையின் சாட்சியங்கள் அல்ல, நாங்கள் ஊமைகளாகவே மீண்டோம். மண்ணில் ஆழப் புதைக்கப்பட்டவர்களே முழுமையான சாட்சியங்கள்” ~ நாவலில் இருந்து
ஈழத்தில் இறுதிகட்டப் போர் நடந்து கொண்டிருக்கும்போது எனது வயது பதினேழு. முதிராத வயதில், இணையம் எனக்குக் கைவராத காலத்தில், தென்தமிழகத்தின் ஒரு மூலையில் பாலிடெக்னிக் படித்துக்கொண்டிருக்கும் என் வட்டத்திற்கு போர் பற்றிய சித்திரத்தை தந்துகொண்டிருந்தது என்னவோ தொலைக்காட்சிகளில் வந்த துணுக்குச் செய்திகள் மட்டும்தான். அதுவும் சோற்றுத்தட்டுடன் டீவியின் முன் அமரும்போது காணக்கிடைத்தது.
உண்டு உறங்கி அன்றாட வாழ்வைக்கழிக்கும் சராசரிகளிடம் இருந்து நான் தனித்து வேறுபட்டவன் என்று சொல்லத்துடிக்கும் இயல்பான குறுகுறுப்பு துளிர்விடும் அந்த சமயத்தில் (கஞ்சிப்பாட்டுக்கு திசைக்கொன்றாக பலர் சிதற அப்படி ஒரு எழவும் கிடையாதென்பது பின்னர் தெளிவானது) எங்களுக்கு புலிகள், போர், LTTE, காம்ரேட், சேகுவேரா, காஸ்ட்ரோ போன்றவற்றை வாய்வலிக்கப்பேசி தங்களை புத்திஜீவியாக காட்ட முயலும் மிகச்சாதாரணமான நட்பு வட்டம் ஒன்று இருந்தது. அந்த வட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் பெரிய அதிர்வலைகளை உண்டுபண்ணியது. போரின் கோரமாக எங்கள் கண்முன் வந்த ஒரே படம் வெட்டுப்பட்ட தலையுடன் பிரபாகரனின் இறந்து கிடந்து புகைப்படம் மட்டுமே!
போர் என்பது தயவுதாட்சண்யம் அற்றது என்றோ அன்பு, அறம், ஒழுக்கம், பண்பு, விசுவாசம், தியாகம் என்ற அத்தனை மனித மாண்புகளையும் கருணையே இன்றி காவு கொள்வதென்றோ போராளிகள், இராணுவம் தவிர்த்து இறந்தும் காணாமலும் போன அப்பாவிப் பொதுமக்களின் எண்ணிக்கை இன்றளவிலும் புதிர்தான் என்றோ அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை.
சேனல் 4 வெளியிட்ட காட்சிகளும், இருதரப்பும் போற்குற்றத்தை செய்தது என்ற உண்மையும் சேர்ந்து பலர்போல எங்களுடைய போர் பிம்பத்தையும் கலைத்துப்போட்டது என்பதே உண்மை. போர் என்பது, நல்லது Vs கெட்டது என்ற ரெண்டு எதிரிகள் மட்டும் பங்குகொண்டு மோதும் சண்டையல்ல, சாகச நாயகர்களின் சொல்லியடிக்கும் சூரச்செயலோ சவால் விளையாட்டோ அல்ல! எதிர்பாராதவை அத்தனையும் விஞ்சி நிற்கும் குரூர எதார்த்தம்.
*
“இலக்கியம், கோட்பாடுகள், விதிகள், சர்வதேச எழுத்துகள், உள்ளொளி தரிசனம், ஞானக்கிருக்கு, ஞானச்செருக்கு, மொழி, படிமம், பன்னாடை இதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு கொஞ்சம் கதைகள் தெரியும்” என்று சொன்ன எழுத்தாளர் ஷோபாசத்தியின் நான்காவது நாவல் ‘இச்சா’.
தன்னுணர்வு கொண்ட எந்த வாசகனும் ஷோபாவின் படைப்பை முதல் முறையாக அணுகும்போது இவற்றுள் எது நிகழ்ந்தது? எது புனைந்தது? என்ற கேள்விகள் தனக்குள் எழுவதை உணரமுடியும். அவருடைய எழுத்தின் முறை கூட அதுவே! ஷோபாவின் முதல் நாவலான ‘கொரில்லா’ அயல்நாட்டில் தஞ்ச விண்ணப்பம் கோரும் அகதி மனிதனின் விண்ணப்பத்தில் இருந்து துவங்கும். இரண்டாவது நாவலான ‘ம்’ வெலிகடைச் சிறையில் 1983ல் நடைபெற்ற படுகொலையைப் பின்புலமாகக் கொண்டது. மூன்றாவது நாவலான BOX கதைப்புத்தகம் (2015) வன்னிநிலத்தில் போரின் ஊடே வந்த உப வரலாற்றுப் பிரதி.
முந்திய நாவல்களில் உள்ளது போலவே காலவெளிகளை, எல்லைக்கோடுகளை கடந்து நீளும் போர் சாட்சியங்களின் நினைவுகளும் கதைகளும் பல உள்ளடுக்குகள் வழியே விரவிக்கிடக்கும் படைப்பு ‘இச்சா’. இந்த நாவலுக்கும் இதன் ஆழத்திற்கும் மதிப்புக்கொடுத்து அந்த பெயர் (இச்சா) பற்றிய விளக்கத்தை மேற்கொண்டு சொல்லாமல் ஒரே அடியாக கடைசி வரிக்கு தாவிச் செல்கிறேன்.
“உயிருள்ள ஆலாப் பறவையொன்றை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா!”
நான் சர்வநிச்சயமாக சொல்வேன். நாவல் முழுவதும் நீங்கள் வாசித்து வரும்போது இந்த இறுதிவரியை இவ்வளவு இலகுவாக கடந்து போய்விட முடியாது.
*
ஷோபாவின் “ஆயிரத்தொரு சொற்கள்” கட்டுரையை படித்ததுண்டா? வாய்ப்பு இருப்பவர்கள் படித்துப்பார்க்கலாம். பெல்ஜியத்தில் இருந்து இயங்கி வரும் ‘பஸ்ஸ போர்டா’ என்ற இலக்கிய அமைப்பின் பெயரில் அவர் அழைக்கப்பட்டு எழுத்தாளர் உறைவிடத்தில் இரண்டு மாதம் தங்கி எழுதிய அனுபவத்தை சொல்ல வந்ததோடு, வேறு ஒரு கதையையும் சொல்லியிருப்பார். அந்த உண்மையில் இருந்துதான் இந்தப் புனைவு தொடங்குகிறது.
நாவலில் வரும் எழுத்தாளர் அதே ‘பஸ்ஸ போர்டா’வில் தங்கி இருக்கிறார். ஒருநாள் காலையில் தனது மடிக்கணினியில் ஈஸ்டர் திருநாளில் வெடிக்கப்பட்ட குண்டுகள் மூலம் கொலையுண்ட மக்கள் பற்றிய செய்தியைப் பார்க்கிறார். பிரேதங்களும் புகைப்படங்களுமாக உள்ள செய்தியில் தனக்கு அறிமுகமான காவலதிகாரியான ‘மர்லின் டேமி’ பிரேதமாக இருப்பதைக் கண்டுகொள்கிறார்.
முன்பு டேமி ஒரு நேர்சந்திப்பில், ஒரு ஆவணத்தை எழுத்தாளரிடம் கொடுத்து விலகுகிறார். நாள்தோறும் தனது சிறைவாசத்தில் தன் கதையை எழுதிவரும் ‘ஆலா’ உடைய பல நூறுபக்க பதிவு அது.
பெண் புலிப்போராளியான ‘ஆலா’ விடுதலை புலிகள் சார்பாக தன்னை தற்கொலைப்படை தாக்குதலுக்காக தயார் படுத்திக்கொண்டு இலக்கை தாக்க முற்படும் போது பிடிபடுகிறார். கண்டிராஜவீதி சிறையில் அடைக்கப்பட்டு போற்குற்றவாளிகளை ஒரு சர்வாதிகார ஆட்சி எப்படி நடத்துமோ அதேபோல தன் கோரமுகத்தை ஆலாவிடமும் காட்டி தன் சித்திரவதைகளை நடத்துகிறது. தனிமையும் வெறுமையும் அழுத்தும் மனநிலையை பலவாறான நினைவுகளின் வழியும் கட்டுப்படுத்தப்பட்ட காமத்தின் உணர்வுகளின் வழியும் கடக்க முயலும் சிறைவாசியாக வரும் ஆலா தினமும் காகிதத்தில் தன் வாழ்வை எழுதுகிறாள். அவள் குரலின் வழியே நாவல் விரிகிறது. ஆனால் ஆலா நமக்கு இந்த முறையில் அறிமுகமாகவில்லை தனது குழந்தையுடனும் கணவன் வாமனுடனும் மேலை நாட்டில் வசிப்பவளாக தற்கொலைக்கு நிர்ப்பந்திக்கும் சகல காரணங்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பவளாகவே அறிமுகமாகிறாள்.
ஒரு கட்டத்தில் ஆலா விடுதலையும் ஆகிறாள். அதற்கு உறுதுணையாக நின்றவனான வாமதேவனை திருமணமும் செய்து கொள்கிறாள் (வாமன் கேட்டுக்கொண்டதற்கிணங்க). சிறையில் திருமணம் முடிந்த கையுடன் வாமதேவன் ஆலாவை தன்னுடன் மேலை நாட்டிற்கு அழைத்துச் செல்கிறான். போகும் வழியில் இணைப்பு விமானம் வர பன்னிரெண்டு மணி நேரம் தாமதமாக விடுதியில் காத்திருக்கும் போது மிருகத்தனமாக ஆலாவுடன் கலவியில் ஈடுபட்ட அதே வாமதேவன் அவள் உடலை அசூயையுடன் பின் பார்க்கிறான். இவருக்கு என்ன தேவை தியாக பிம்பமா? பெண் புலியை புணர்ந்த பெருமையா? என்று ஆலா குழம்புகிறாள்.
வாமதேவனின் எண்ணம் என்னவோ நான் ஒரு போராளிக்கு சமூகத்தில் மறுவாழ்வு அளித்தேன் என்ற பேறும் ஆலா மூலம் பிறக்கும் குழந்தையும்தான். ஆலா மீது அவன் தன் அதிகாரத்தை மட்டுமே செலுத்துகிறான். ஒரு வகையில் ஈழத்தின் பெயரைச் சொல்லி ஒரு பிம்பத்தை உருவாக்கும் சிலருடைய மாதிரியாகத்தான் வாமதேவன் நாவலில் வருகிறான். ஆலாவின் தந்தை ஒரு கூத்துக்கலைஞர் அவர் கூத்தில் எடுத்து நடிக்கும் பாத்திரம் கண்டிராஜனை எதிர்த்து கழகம் செய்த மந்திரியின் மனைவியுடைய பாத்திரம். மந்திரி குடும்பம் அரசபையில் தண்டனைக்கு நிறுத்தப்படுகிறது. மந்திரியின் இரண்டு குழந்தையுமே தலைவெட்டி கொல்லப்படுகிறார்கள். கண்டியரசனோ கடைசி குழந்தையைக் கொல்ல வேறு ஒரு வழி சொல்கிறான். நெல் குத்தும் உரலில் போட்டு உலக்கையில் இடித்து கொள்வதே அது. அழுதுகொண்டே மந்திரி மனைவி அதை செய்கிறாள்.
ஆலா, தனது இருபத்தி நான்கு வயதில் ஒரு புள்ளியில் அந்த மந்திரியுடைய மனைவியின் இடத்தில் வந்து நிற்பது போலத்தான் என்னால் உணரமுடிகிறது.
*
ஷோபாவை புலி எதிர்ப்பாளர் என்ற பார்வையில் அணுகும் பலர் உண்டு. ஆனால் அவர் போர் எதிர்ப்பாளர் என்ற தன் அரசியலில் நின்றே தமது படைப்புகளை முன்வைக்கிறார். போர் மேகம் சூழ்ந்த நிலத்தில் வன்முறையை தேர்ந்தெடுக்கும் எந்த குழுவுமே தன்னளவில் ஒரு சர்வாதிகாரத்தைத்தான் கையில் எடுக்கிறது. இயக்கம் (விடுதலை புலிகள்) பெண் புலிப்போராளிகளுக்கு காதலித்ததற்காக மரணதண்டனை விதிக்கிறது. சிங்கள பேரினவாதமோ புலிக்கு ஒரு வாய் தண்ணீர் கொடுத்ததற்கு தலையை வெட்டிக்கொல்கிறது.
பதின்வயதின் துடிப்பு, அவர்களின் வலி, மூர்க்கம், சோகம், அந்த வயதில் அவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகள் என அனைத்தும் அவர்களை ஒன்றும் அற்றவர்களாக உணர வைக்கிறது. ஒரு கட்டத்தில் தன் ஒரே மூலதனம் தன்னுடல்தான் என்றும் அதை இயக்கத்திற்கு ஒப்புக்கொடுப்பதன் மூலம் தன் உடலை ஒரு கொலைகருவியாக்கலாம் என்றும் நம்பும்படியாகிறது. இயக்கத்தில் ஆண்களும் பெண்களும் இளமையின் பெருபான்மையான எந்த உணர்வின் பாலும் ஆட்பட அனுமதி மறுக்கப்பட்டவர்களே! அதே மன உலகத்தில் அவர்கள் தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள அவர்களுக்குள் உருவேற்றப்பட்ட எண்ணமே ‘மாச்சிமை பொருந்திய மரணம்’ என்ற கருத்தாக்கம்.
ஆலா என்பது அவள் இயற்பெயர் அல்ல. அது இயக்கம் அவளுக்கு வைத்த பெயர். குருவியினும் சிறிய பறவையின் பெயர். தன்னுடை மாட்சிமை பொருந்திய மரணத்தை தேடிய ஆலாவின் வாழ்குறிப்பு ‘இச்சா’ (நாவலை வாசித்து முடித்தபின் இந்த வரியை உதடுகள் சொல்லிக்கொண்டது)
“உயிருள்ள ஆலாப் பறவையொன்றை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா!”
நிச்சயம் நாவலை நீங்கள் முடிக்கும் தருவாயில் இந்த வரியை அவ்வளவு இலகுவாக கடக்க முடியாது.
இச்சா (நாவல்), ஆசிரியர்: ஷோபா சக்தி, விலை: ரூ.290 வெளியீடு: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, சென்னை – 5 பேச: 9444272500
————————————————————–***—————————————————————-
தீம்புனல்
இந்நாவலைப் படித்து முடிக்கையில் சமகாலத் தமிழ்ச் சமூகத்தின் சிக்கலான சுழல் வட்டப் பாதைகளில் ஒரு நீண்ட பயணத்தைக் கடந்து வந்த பிரமிப்பும் பேருவகையும் ஏற்படுகிறது. இது குடும்பங்களின் கதை அல்ல. இது கிராமங்களின் கதை அல்ல. தமிழக சாதியப் பொருளாதார உறவுகளில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக நடந்திருக்கும் மாற்றங்களைத் துல்லியமாகச் சொல்லும் முதல் நாவல் இது. குடும்ப உறவுகளிலும் நிகழ்ந்த மாற்றங்களுக்கும் நில உறவுகளில், உற்பத்தி உறவுகளில் நிகழ்ந்த மாற்றங்களுக்குமான தொடர்புகளை மிக நேர்த்தியாக இந்நாவல் அடையாளம் காண்கிறது.
கார்ல் மார்க்ஸின் மொழிநடை ஓர் எதார்த்தவாத நாவலின் எல்லைகளை மீறாமல் கவித்துவமான சித்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறது. மிகத்துல்லியமான காட்சிப்படிமங்கள் அவரது கவித்துவமான சித்தரிப்புகள் மூலம் எழுகின்றன. இந்தச் சித்தரிப்புகள் காலம், இடம், பொருள் சார்ந்து வாசகனை முழுமையாகத் தனக்குள் இழுத்துக் கொள்கின்றன. பாத்திரங்கள் தம்மளவில் முழுமை பெற்றவையாகவும் இயல்பு மீறாதவையாகவும் இருக்கின்றன. உரையாடல்களின் வழியே நாவல் தன் பாதையைத் தானே உருவாக்கிக்கொண்டு செல்கிறது.
– முன்னுரையில் மனுஷ்ய புத்திரன்
தீம்புனல் (நாவல்), ஆசிரியர்: ஜி.கார்ல் மார்க்ஸ், விலை: ரூ.350, வெளியீடு: எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி -2, பேச: 9942511302
————————————————————***——————————————————————
எழுத்தாளர் அபிமானியின் இரு புதிய நாவல்கள்
வெளியீடு: தடாகம், 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை – 41