வெளிச்ச நகரத்தின் கரு நிழல்கள்: கோகோலின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் கதைகள்
சித்துராஜ் பொன்ராஜ்

by olaichuvadi

1

                1828-இல் தனது பத்தொன்பதாவது வயதில் நிகோலே கோகோல் உக்ரனைவிட்டு ரஷ்யாவின் அன்றைய தலைநகரமான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்குக்கு மிகப் பெரிய கனவுகளோடு நுழைந்தார். கோகோலின் காலத்தில் நாட்டுப்புறமாகக் கருதப்பட்ட உக்ரைனோடு ஒப்பிடுகையில் பீட்டர்ஸ்பர்க் மாநகரம் உலகின் அற்புதங்களில் ஒன்றாகவும், நட்சத்திரமண்டலம்போல் ஒளிமிகுந்ததாகவும் கோகோலுக்குத் தோன்றியதில் வியப்பில்லை.

நவீன ரஷ்ய இலக்கியத்தின் ஆரம்பப்புள்ளி என்று போற்றப்படும் அலெக்ஸாண்டர் புஷ்கினுடனான சந்திப்பும், ரஷ்ய இலக்கிய வரலாற்றில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனைகளும் கோகோலைப் பொறுத்தவரையில்அப்போது இன்னமும் வெறும் கனவுகளாகவே இருந்தன.

மர்மமானவர் என்றும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எல்லையில்லா பேராசையுடையவர் என்றும் தனது பள்ளிக்கூடத் தோழர்களால் வர்ணிக்கப்பட்ட கோகோல் செயிண்ட் பீட்டஸ்பர்க்குக்கு வந்த மூன்று ஆண்டுகளிலேயே உக்ரைன் நாட்டின் நாட்டுப்புற வாழ்வையும் நாட்டார்  நம்பிக்கைகளையும்  விவரிக்கும் ‘திகாங்கா பண்ணையில் மாலை நேரங்கள்’ (Evenings on a Farm near Dikanka) என்ற கதைகளின் தொகுப்பை 1831ல் அவருடைய இருப்பத்திரண்டாவது வயதில் வெளியிட்டார்.

‘சின்ன ரஷ்யா’ என்றே ரஷ்ய பெருநிலத்தின் மக்களால் அழைக்கப்பட்ட உக்ரைன் அவர்களில் பெரும்பாலோருக்கு விசித்திரங்கள் நிறைந்த பூமியாகவே தோன்றியது. தெற்கத்தி நிலங்களுக்கே உரிய சூரிய வெளிச்சமும், பழத்தோட்டங்களும் நிறைந்தபகுதியாக உக்ரைன் ரஷ்யப் பொது கற்பனையில் நிலைத்துவிட்டிருந்தது. ஏறத்தாழ உக்ரைனிய மொழியும் ரஷ்ய மொழியும் ஒன்றுபோலவே இருந்தபோதும், ரஷ்யநிலத்தின்மீதுபடையெடுத்து வந்த துருக்கியர்களுக்கு எதிராகவும் போலந்துகாரர்களுக்கு எதிராக உக்ரைனியர்கள் போரில் நடத்திய வீரதீரச் சாகசங்களுக்கு ரஷ்யர்களுக்கிடையே மரியாதை இருந்த போதும், ரஷ்யர்கள் உக்ரைனிய மக்களை நாட்டுப்புறத்தார்களாகவே பார்த்தார்கள்.

தொங்கு மீசையுடன், முழுக்க மழித்த தலையின் உச்சியில் குடுமி வைத்து, தொளதொளவென்று பலூன்களாக உப்பிப் பெருத்திருக்கும் கால்சட்டைகளை அணிந்தவர்களாகவும் மொழிநயமில்லாதவர்களாகவும் குடியிலும் பாட்டிலும் பெருவிருப்பமுடையவர்களாகவும் மூட நம்பிக்கைகள் மிகுந்தவர்களாகவுமே உக்ரைனியர்கள் ரஷ்யர்களின் கண்களுக்குத் தோன்றினார்கள்.

பாரீஸ், லண்டன், ரோம் போன்ற உலகத் தலைநகரங்களின் நவநாகரிக நடையுடை பாவனைகளில் ஊறியவர்களாக பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளைப் பேசுவதே நாகரிகத்தின் உச்சம் என்று கருதிய செயிண்ட்பீட்டர்ஸ்பர்க் மக்கள் உக்ரைனைச் ‘சின்ன ரஷ்யா’ என்று அழைத்ததில் நுண்ணிய அரசியலும் மெல்லிய பரிகாசமும் இல்லாமல் இல்லை.

உக்ரைனைப் பற்றியும் அதன் மக்களைப்பற்றியும் ரஷ்யர்கள் கொண்டிருந்த கற்பனைகளுக்குத் தீனி போடும் வகையிலேயே இளம் கோகோலின் திகாங்கா கதைகள் அமைந்திருந்தன. உக்ரைனின் நாட்டுப்புற வாழ்வு, மாலை நேரங்களில் நடக்கும் மதுவிருந்து கேளிக்கைகள், அந்திசாயும் நேரங்களில் உக்ரைனில் சொல்லப்படும் அமானுஷ்யக் கதைகள், உக்ரைனியர்களின் விசித்திரமான உடைகள், கொண்டாட்டங்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களால் திகாங்கா கதைகள் நிறைந்திருக்கின்றன.

தனது கண்களுக்குப் பிரம்மாண்டமாய்த் தெரிந்த தலைநகரத்தின் பேரிரைச்சலில் தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளவும், அதன் இலக்கியச் சூழலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் முன்னேற வேண்டும் என்ற வெறியுடைய இளைஞன் எடுத்த முதல் முயற்சியாகவே நாம் கோகோலின் திகாங்கா கதைகளைக் கருதலாம்,

ஆனால் கோகோலின் எழுத்துகளைப் பின்னாளில் ரஷ்ய இலக்கியச் சூழல் ஏற்றுக் கொண்டாடியபோதும் அவர் கடைசிவரையில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்துக்கு அந்நியனாகவே தன்னை உணர்ந்தார் என்பதும் உண்மைதான். ‘இறந்த ஆன்மாக்கள்’, ‘அரசாங்க ஆய்வாளர்’ போன்ற நூல்களை எழுதிப் பின்னாளில் புகழின் உச்சிக்குப் போன கோகோல் தனது வாழ்க்கையின் கடைசி பதினாறு வருடங்களில் பன்னிரண்டை வெளிநாட்டிலேயே கழித்ததே இதற்குச்சாட்சி.

திகாங்கா கதைகளுக்குப் பின் 1831ம் வருடம் தொடங்கி 1842 வரைக்கும் கோகோல் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தை மையமாக வைத்து எழுதிய ஐந்து கதைகள் அவருடைய ‘செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் கதைகள்’ என்று அழைக்கப்படுகின்றன.

கோகோலின் படைப்புகளில் மிகச் சிறந்தவற்றில் ஒரு பகுதியாகக் கருதப்படும் இந்தக் கதைகளில் கோகோல் ரஷ்யாவின் புகழ்மிக்க தலைநகரத்தையும் அதன் போலித்தனங்களையும் அதில் வாழும் நடுத்தர வர்க்கத்து மக்களின் வாழ்க்கைச்சித்திரங்களின் வழியாக விமர்சனம் செய்கிறார்.

பத்தொன்பது வயது கோகோலின் கண்களுக்குக் கனவுகளை நிறைவேற்றித்தரும் இடமாகத் தெரிந்த செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் அவருடைய முப்பத்து மூன்றாவது வயதிற்குள் பொய்யும் போலித்தனங்களும் நிறைந்ததாகவும், அச்சுறுத்தும் நிழல்கள் நிறைந்திருக்கும் கருணையற்ற இடமாகவும் மாறி விடுகிறது.

2

                போலித்தனம் என்பது கண்முன்னால் எல்லோருக்கும் தெரிவதாக நாம் எண்ணிக்கொண்டிருக்கும் காட்சிக்கும் உண்மையான நிலவரத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்றும் சொல்லலாம். செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் கதைகளில் அச்சுக்கு வந்த வருடத்தின் அடிப்படையில் முதல் கதையாக 1834ல் வெளிவந்த ‘நெவ்ஸ்கி ப்ராஸ்பக்ட்’ கருதப்படுகிறது. இக்கதையில் கோகோல் இரண்டு வெவ்வேறு ஆண்களின் கதைகளைச் சொல்கிறார்.  முதல் கதையில் வரும் பிஸ்கார்யேவ் என்ற ஓவியன் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தின் முக்கியச் சாலையான நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்ட்டில் ( ‘ப்ராஸ்பெக்ட்’ என்றால் பெரிய சாலை. இன்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தின் முக்கியச் சாலையாக நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்ட் இருக்கிறது) ஓர் அழகிய பெண்ணைக் காண்கிறான். அவள் அழகிலும் நளினத்திலும் சொக்கிப் போகும் பிஸ்கார்யேவ் அவள் நிச்சயமாக உயர்குடியில் பிறந்த பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொள்கிறான். அகலமானதும் மிக நீளமானதுமான நெவ்ஸ்கி சாலை நெடுக பிஸ்கார்யேவ் அவளைப் பின் தொடர்ந்து போகிறான்.

அந்தப் பெண் ஒரு கட்டடத்துக்குள் திரும்பி நான்காவது மாடியில் இருக்கும் தனது வீட்டிற்குள் போகிறாள். அவளை விடாமல் பின் தொடர்ந்து போகும் பிஸ்கார்யேவுக்கு அங்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பெண் நுழைந்த இடம் ஒரு விபச்சார விடுதி. அவள் ஒரு விபச்சாரி. இதைப் பார்த்து அதிர்ச்சியடையும் பிஸ்கார்யேவ் குழம்பிப் போனவனாய் அங்கிருந்து கிளம்பி விடுகிறான். ஆனால் அவனால் அவ்வளவு அழகும் நளினமும் உடைய ஒரு பெண் விபச்சாரியாக இருக்கக் கூடும் என்று நம்ப முடியவில்லை. தனது இருப்பிடத்திற்குப் போன பின்பும் அவளையே சிந்தித்துக் கொண்டிருக்கிறான்.

ஒரு நாள் கனவில் அந்தப் பெண்ணைக் காண்கிறான். கனவில் அவள் பணக்காரியாகவும் நல்லொழுக்கம் உள்ளவளாகவும் அவனுக்குத் தோன்றுகிறாள். பிஸ்கார்யேவ் தன் விருப்பம்போலவே அவள் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியின் உச்சத்துக்குப் போகும் நேரத்தில் அவனுடைய கனவு கலைகிறது. அவன் மீண்டும் அந்தப் பெண்ணின் நினைவுகளால்அவதியுறுகிறான். இவ்வளவு லட்சணமானவள் இப்படிச் சீரழிந்தவளாக இருப்பாளா என்று எண்ணி துன்பத்திற்குள்ளாகிறான். அவனால் தூங்க முடியாமல் போகிறது தூங்கினால்தான் மீண்டும் அந்தப் பெண்னைத் தூய்மையுள்ளவளாகவும் உயர்ந்த குடியில் பிறந்தவளாகவும் காண முடியும் என்பதால் பிஸ்கார்யேவ் அபினை உட்கொள்கிறான்.

வேறொருசந்தர்ப்பத்தில் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதுபோல் கனவு வரவே உண்மையிலேயே அவளைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவுடன் அவளைத் தேடிப் போகிறான்.  அவள் விடியவிடியக் குடித்துவிட்டுக் காலை ஏழு மணிக்குத்தான் வீட்டிற்கே திரும்பியதாகச் சொல்கிறாள். அவனைப் பரிகாசம் செய்கிறாள். இதனால் மனதுடைந்தவனாகப் பிஸ்கார்யேவ் தன் இருப்பிடத்துக்குத் திரும்பித் தன் கழுத்தைத் தானே அறுத்துத் தற்கொலை செய்து கொள்கிறான்.

நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்ட் சிறுகதையில் சொல்லப்படும் இரண்டாவது கதையில் பிரொகோவ் என்ற இளம் ராணுவ அதிகாரி அதே நெவ்ஸ்கி சாலையில் அவனைக் கடந்து போகும் திருமணமான அழகிய ஜெர்மானிய பெண்ணைப் பின் தொடர்கிறான். அவள் ஒரு குடிகார ஜெர்மானிய தொழிலாளியின் மனைவி என்று அவனுக்குத் தெரிய வருகிறது. எப்படியாவது அவளை அடைய வேண்டும் என்று நினைக்கும் பிரொகோவ் அடிக்கடி அவர்கள் வீட்டிற்குப் போகிறான். அந்தப் பெண்ணைத் தொட்டுத் தொட்டுப் பேசியும், அவளுக்கு லேசான முத்தங்களைக் கொடுத்தும் சின்னச் சின்ன அத்துமீறல்களைச் செய்கிறான்.

ஒரு நாள் அவள் கணவன் வீட்டில் இல்லாததை அறிந்துகொண்டு  அவள் வீட்டிற்கு போகிறான். பிரொகோவ் அவளைப் பலவந்தமாக அடைய முனையும் நேரத்தில் அவளுடைய கணவனும் அவன் நண்பர்களும் வீட்டிற்குள் நுழைகிறார்கள். மூக்கு முட்டக் குடித்திருக்கும் அவர்கள் பிரொகோவ்வை அடித்துத் துவைக்கிறார்கள். அந்த இடத்தை விட்டு அகலும் பிரொகோவ் உயர் ரக கேக்குகளைத் தின்றும், பழைமைவாத செய்தித்தாளைப் படித்தும், மாலையில் நாட்டிய நிகழ்ச்சியொன்றுக்குப் போய் நாட்டியமாடியும் ஆறுதலடைகிறான்.

3

                காதலிக்கும் பெண் விபச்சாரி ( ‘ஊருக்கே மனைவி’) என்றாலும்கூட அவளைத் தூய்மையானவளாகக் கருதித் தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளும் பிஸ்கார்யேவுக்கும் திருமணமான ஒரு பெண்ணைத் தன் காம இச்சைக்காக விபச்சாரம் செய்யத் தூண்டும் பிரொகோவ்வுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் காட்டும் கதையாக ‘நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்ட்’ தோன்றினாலும் கோகோல் இந்தக் கதையில் வைத்திருக்கும் சமூக விமர்சனம் அதைவிட ஆழமும், நுணுக்கமும் கொண்டது.

பிஸ்கார்யேவ்வும், பிரொகோவ்வும் பெண்களிடம் காட்டும் அணுகுமுறை ஒன்றுக்கு ஒன்று நேரெதிராகத் தோன்றினாலும் அடிப்படையில் அவர்கள் இருவரின் சமூகப் பார்வையும் ஒன்றாகத்தான் இருக்கிறது. பிஸ்கார்யேவ் தான் காதலிக்கும் பெண் அழகானவள் என்றாலும்கூட அவள் சமூகப் படிநிலையில் அடிமட்டத்திலிருக்கும் விலைமகள் என்பதால் அவளை ஏற்க முடியாதவனாகத் தவிக்கிறான். சமூகத்தின் கீழ்நிலையில் இருக்கும் ஒருத்தி அழகுள்ளவளாகவும் நளினமானவளாகவும் இருக்கக் கூடும் என்பதை அவன் மனம் ஒப்புக் கொள்ள மறுக்கிறது. சாரமே இல்லாத தனது கனவுகளின் வழியாக தோன்றும் மன பிரமையின்அடிப்படையில் அவள் அவனுடைய அன்புக்குத் தகுதியானவள்தான் என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறான். தன் காதலை அந்தப் பெண் நிராகரித்துவிட்டாள் என்பதைவிட சமூகப் படிநிலையில் தன்னைவிட தாழ்ந்த நிலையில் இருக்கும் பெண் தன்னைப் பரிகாசம் செய்துவிட்டாள் என்பதே அவன் தற்கொலைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.

திருமாணமான பெண்ணை அடைய நினைக்கும் பிரொகோவ் தான் அரசாங்க ஊழியன் என்பதால் எப்படியும் அவள் தன்னிடம் படிந்து விடுவாள் என்று நம்புகிறான். சாதாரண தொழிலாளியாக இருக்கும் அவள் குடிகாரக் கணவனும் தன்னுடைய அதிகாரத்துக்கு எதிரே எதுவும் செய்ய முடியாது என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறான்.

சமூகப் படிநிலைகளும் சமூகத் தகுதியில் தன்னைவிடத் தாழ்ந்தவர்களிடம் அலட்சியமும் அகம்பாவமும் வேரூன்றியிருந்த அக்கால ரஷ்யச் சமூகச் சூழலின் மீது கோகோலின் விமர்சனமாக  ‘நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்ட்’ கதைஅமைந்திருக்கிறது.

கோகோல் வாழ்ந்த செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரச் சூழலைப் பொறுத்தவரை சமூக ஏற்றத் தாழ்வுகளைப் பற்றிய இந்தப் பலமான எண்ணம் வெறும் தனிமனித விருப்பு வெறுப்புகளினால் தீர்மானிக்கப்படும் விஷயமாக இருக்கவில்லை.

கோகோல் விமர்சனம் செய்யும் இந்த ஏற்றத் தாழ்வுகள் ஜார் மன்னரை ஈடிணையில்லாத தலைவராகக் கொண்டிருந்த அரசாங்க இயந்திரத்தால் முன்மொழிந்து ஆதரிக்கப்பட்ட சமூகப் படிநிலைகளாகவே இருந்தன. 1722ம் ஆண்டில் போயார் பிரபுக்களுடன் ஏற்பட்ட போராட்டத்தில் வெற்றி பெற்றுத் தனது அதிகாரத்தை நிலைநிறுத்திய பிறகு அரசாங்க ஊழியர்கள் இராணுவ அதிகாரிகள் ஆகியோரின் பதவிகளைப் பதினான்கு படிநிலைகளாகப் பிரித்து ஜார் பீட்டர் ஒரு பட்டியலை வெளியிட்டார். பதவி படிநிலைகளின் பட்டியல் என்று அறியப்பட்ட இந்தப் பட்டியலின்படியேதான் எல்லா ரஷ்யர்களின் சமூகத் தகுதியும் அளக்கப்பட்டது.

ஒருவர் தன் சொந்த முயற்சியாலோ ஜார் மன்னரின் அபிமானத்தைப் பெற்றோ பதவி உயர்வைப் பெற்று உயர்ந்த சமூகத் தகுதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றாலும்கூட அன்றாட சமூக வாழ்வில் இந்த படிநிலைப் பட்டியலே 1917 புரட்சிவரையிலும் ஒவ்வொரு ரஷ்யனின் சமூக உறவுகளையும் நிர்ணயித்து வந்தது.

பட்டியலின் ஒரு படிநிலையில் இருந்தவர்கள் அதே படிநிலையில் உள்ளவர்களோடுதான் உறவு வைத்துக் கொண்டார்கள். தங்களைவிட உயர்ந்த படிநிலைகளில் உள்ளவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்வதையும் அதிர்ஷ்டமிருந்தால் பெரிய இடத்தில் திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதையும் அவர்கள் பெரும் பேறாகக் கருதினார்கள். அதே சமயம் கீழ்த்தட்டுகளில் இருந்த ரஷ்யர்கள் அவர்களுக்குமேலே இருந்தவர்களுக்குச் சேவகம் செய்யவும் அவர்களுக்கு துல்லியமாக வரையறுக்கப்பட்ட சடங்குபூர்வமான மரியாதைகளைத் தரவும் பழகிக் கொண்டார்கள்.

ரஷ்யர்களை எந்தளவுக்கு இந்த சமுதாயப் படிநிலைகள் ஆட்டிப்படைத்தன என்பதை நெவ்ஸ்கி ப்ராஸ்பக்ட் கதையில் கோகோல் பிஸ்கார்யேவ்வுக்கும் பிரொகோவ்வுக்கும் தந்த பெயர்களில் இருந்தே கண்டு கொள்ளலாம் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள். இவை இரண்டு மிகச் சாதாரணமான பெயர்கள்.

தினமும் மக்கள் கூட்டம் புழங்கும் நெவ்ஸ்கி சாலையைப்போலவே சமூகப் படிநிலைகளும் பீட்டர்ஸ்பர்க்கில் வாழ்ந்த ஒவ்வொரு ரஷ்யனின் வாழ்வில் அசைக்க முடியாத ஓர் அங்கமாகி இருந்தன என்பதற்கு பிஸ்கார்யேவ், பிரொகோவ் என்ற சாதாரண பெயர்களைக் கொண்டிருந்த இரு சாதாரணர்களே சாட்சியாகிறார்கள். 

அரசாங்க இயந்திரத்தால் தூக்கி நிறுத்தப்பட்ட சமூக ஏற்றத் தாழ்வுகளின் அடையாளமாகவே கோகோல் இந்தக் கதையின் மையப் புள்ளியாக நெவ்ஸ்கி சாலையைப் பயன்படுத்துகிறார். கதையின் ஆரம்பத்தில் நெவ்ஸ்கி சாலையின் நடப்புகளைக் காலை நேரம் தொடங்கி காலவாரியாகப் பிற்பகல் வரை பத்து பக்கங்களுக்குக் கோகோல் வர்ணிக்கிறார். நெவ்ஸ்கி சாலைக்குக் கதையில் தரப்படும் அதிகப்படியான கவனம் கதையின் சம்பவங்களோடு சாலைக்கும் ஏதோ தொடர்பு இருப்பதை வலியுறுத்துவது போல் இருக்கிறது.

ரஷ்ய நாகரிகத்தின் அடையாளம் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம். செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தின் அடையாளம் நெவ்ஸ்கி சாலை. சமூக ஏற்றத் தாழ்வுகளை அதிகார மையம் சாத்தியமாக்குவது போலவே இக்கதையில் நடக்கும் சமூக உறவுச் சிக்கல்களை நெவ்ஸ்கி சாலையே தனது  இருப்பினால் சாத்தியப்படுத்துகிறது.

அதேசமயம் அதிகார மையத்திற்குக் கறுப்புப் பக்கங்கள் இருப்பது போலவே ஒளி மிகுந்த, நவ நாகரிக செல்வச் சீமான்களும் சீமாட்டிகளும் உலவும் ஆடம்பரமான கடைகளையுடைய நெவ்ஸ்கி சாலைக்கும் நிழல் மண்டிய பக்கங்கள் உண்டு.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கின் மாணிக்கம் என்று பாராட்டப்பட்ட இதே நெவ்ஸ்கி சாலையில்தான் பிஸ்கார்யேவ் தேடிப் போகும் பெண் தன் விபச்சாரத் தொழிலைத் தொடர்கிறாள். ஜெர்மானியத் தொழிலாளி தனது நண்பர்களோடு மூக்கு முட்டக் குடித்துவிட்டுத் தள்ளாடி நடக்கிறான். ரஷ்ய மொழியில் ஒரு வார்த்தைகூடத் தெரியாத திருமணமான ஜெர்மானிய பெண்ணொருத்தி இளம் ராணுவ அதிகாரியான பிரொகோவ்வால் பலவந்தப்படுத்தப்படுகிறாள்.

4

ரஷ்ய சமூகத்தில் இருந்த இந்த ஏற்றத் தாழ்வுகள் எளிதில் தகர்க்க முடியாதவையாக இருந்தன.  அரசாங்கத்தின் உத்தரவால் எல்லா இடத்திலும் அவை வியாபித்திருந்ததால் நடுத்தர வர்க்கத்து ரஷ்ய மக்களின் மீது ஏற்றப்பட்ட பெரும் பாரமாக, அவர்களை முடக்கிப் போடும் வாதமாக அவை இருந்தன. கண்ணுக்குப் புலப்படாத சமூக ஏற்றத் தாழ்வு என்னும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட பல ரஷ்யர்கள் தீவிரமான மன உளைச்சலுக்கு உள்ளானார்கள். மன உளைச்சலிலிருந்து தப்பிக்க குடியிலும் வன்முறையிலும் தஞ்சம் புகுந்தார்கள். பலர் தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டார்கள்.

சிலர் பைத்தியமானார்கள்.

கோகோலின் ‘செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் கதைகளில்’ இரண்டாவது கதையான ‘பைத்தியக்காரனின் நாட்குறிப்பு’ 1835ம் ஆண்டு வெளிவந்தது.  கதையில் ஒன்பதாம் படிநிலையில் கவுன்சிலர் பதவியில் இருக்கும் அக்ஸெண்டி போப்பிஷ்ச்சின் தனது மேலதிகாரியின் மகளான சோஃபியின் அழகில் மயங்கி அவளைக் காதலிக்கிறான். ஜார் பீட்டர் நிர்ணயம் செய்த பதவிப் படிநிலைப் பட்டியலின்படி ஒன்பதாவது படிநிலை என்பது உயர்நிலை பதவிக்கு ஒரு நிலை கீழிருப்பது. எட்டாவது படிநிலைக்கும் மேலான அதிகாரிகள் மட்டுமே தங்கள் பட்டங்களைத் தங்கள் வாரிசுகளுக்கு விட்டுச் செல்ல முடியும் என்ற சட்டமிருந்தது.

சோஃபியோடு ஒப்பிடுகையில் தனது தாழ்ந்த நிலையை அக்ஸெண்டி உணர்வுபூர்வமாக மட்டுமின்றி உடலின் வழியாகவும் உணர்வதாகக் கோகோல் காட்டுகிறார். கோச் வண்டியிலிருந்து இறங்கும் சோஃபியின் உடம்பு சிறு பறவையின் உடம்பைப்போல் இருப்பதாக அக்ஸெண்டி நினைக்கிறான். மாறாகச் சமூகத்தில் அவளைவிட தாழ்ந்த நிலையில் உள்ள அக்ஸெண்டியின் உடம்பு கனமானதாய், நளினமில்லாததாய்த் தரையோடு கட்டுண்டதாக இருக்கிறது. இருவருக்குமிடையே இருக்கும் சமூக ஏற்றத் தாழ்வினால் சோஃபியை அடைய முடியாது என்று புரிந்து கொள்ளும் அக்ஸெண்டி மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு மெல்ல மெல்லப் பைத்தியமாகிறான். சோஃபியின் நாயும் வேறொரு நாயும் பேசிக் கொள்வது அவனுக்குப் புரிவதாக நினைக்கிறான். நாய்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று கடிதங்களைப் பரிமாறிக் கொள்வதாகவும் அக்கடிதங்களில் எழுதியிருக்கும் நாய்பாஷையைத் தன்னால் படிக்க முடியும் என்றும் நம்புகிறான். மன நோய் முற்ற அக்ஸெண்டிக்குக் காலத்தை நிர்ணயம் செய்ய முடியாமல் போகிறது. அவன் நாட்குறிப்பில் இன்னின்ன மாதம் நாற்பத்து மூன்றாம் தேதி என்று எழுதுகிறான்.

சோஃபிக்கு வேறொரு ஆணுடன் திருமணம் நிச்சயமாக அக்ஸெண்டி முற்றிலும் பைத்தியமாகி விடுகிறான் அவனை மனநோய் காப்பகத்தில் அடைக்கிறார்கள். அங்கு தன்னை ஸ்பெயின் நாட்டின் அரச குமாரனாகவும், அவன் அடைக்கப்பட்டுள்ள அறை ஸ்பெயின் என்றும் நம்பத் தலைபடுகிறான். கடைசியில் காலத்தை உணர்ந்து கொள்ளும் ஆற்றலைப்போல் இடத்தை அறிந்து கொள்ளும் ஆற்றலும் அவனிடமிருந்து கழன்று போகிறது. ஸ்பெயினும் சீனாவும் ஒரே நாடுதான் என்று அவன் நம்புகிறான்.

முற்றிய நிலையிலிருக்கும் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உண்மையை உணர்ந்து கொள்ளும் ஆற்றலை இழக்கிறார்கள். அவர்களைச் சுற்றியிருக்கும் யதார்த்தம் மெல்ல நழுவிப்போய் அவர்கள் தங்களுக்கு ஆறுதலளிக்குமென்பதற்காக ஏதோ ஒரு மாற்று யதார்த்தத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். இந்த மாற்று யதார்த்தம் மன நோயால் உருவானதாகவோ, குடியினாலோ போதை பொருளாலோ உருவாக்கிக் கொண்டதாகவோ இருக்கக் கூடும். நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்ட் சிறுகதையில் வரும் ஓவியன் பிஸ்கார்யேவ் கனவில் கிடைக்கும் மாற்று யதார்த்தத்துக்காக ஏங்குகிறான். ‘பைத்தியக்காரனின் நாட்குறிப்பில்’ வரும் அக்ஸெண்டி தனது ஒன்பதாம் படிநிலைப் பதவியைத் தாண்டி மேல் நிலைக்கு முன்னேறும் ஒரே வழியாகத் தன்னை ஸ்பெயினின் ராஜ குடும்பத்தில் ஒருவனாகக் கற்பனை செய்து கொள்கிறான்.

பிஸ்கார்யேவ்வின் தற்கொலை அவனுக்குத் தடைபடாத நீண்ட உறக்கத்தைத் தந்து அவனுடைய கனா காணும் வாய்ப்பை நிரந்தரமாக்கித் தருகிறது. கல்லறையைப்போல் இருளோ என்று கிடக்கும் மனநோய்க் காப்பக அறை அக்ஸெண்டிக்கு ஸ்பெயினின் ராஜகுமாரனாகத் தன்னைக் கற்பனை செய்து கொள்ளும் வாய்ப்பை நிரந்தரமாக்கித் தருகிறது.

5

                காட்சிக்கும் நிஜத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிய முடியாத நிலையே பைத்தியம் என்றால், காட்சியை வைத்தே நிஜத்தை எடைபோடுவதும் பைத்தியத்தின் வகைமையில் சேரும்.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் கதைகளில் கடைசி இரண்டு கதைகளாக ‘மூக்கு’, ‘மேலங்கி’ ஆகிய இரண்டிலும் மனிதர்களின் மிக மேலோட்டமான லட்சணங்களை வைத்தே செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மக்கள் மற்றவர்களின் மதிப்பைக் கணக்கிடுவதாகக் கோகோல் சித்தரிக்கிறார்.

1836ல் வெளிவந்த ‘மூக்கு’ சிறுகதையின் தொடக்கத்தில் நாவிதனான ஈவான் யாகோலெவிச் காலை உணவின்போது சாப்பிடும் ரொட்டியின் உள்ளே ஒரு மூக்குகிடைக்கிறது. வியக்க வைக்கும் வகையில் அந்த மூக்கின் வடிவத்தையும் அளவையும் வைத்துக் கொண்டே அது தனது நெடுநாள் வாடிக்கையாளரான கோவலெவ் என்ற அரசாங்க அதிகாரியின் மூக்கு என்று கண்டு கொள்கிறான். அந்த மூக்கைத் தூக்கி எறிந்துவிட்டு வரும்படி ஈவானின் மனைவி அவனை வற்புறுத்துகிறாள். ஈவான் மூக்கை ஆற்றுக்குள் தூக்கியெறியும்போது போலீஸ்காரனால் கைது செய்யப்படுகிறான். இதற்கிடையில் மூக்கில்லாமல் படுக்கையிலிருந்து எழும் கோவாலெவ் மூக்கில்லாமல் எப்படி வெளியே போவது என்று திண்டாடுகிறான். மேலும் மூக்கில்லாமல் போனால் பெண்கள் அவனை ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்கள் என்று பதறுகிறான். பெரும் பெண் பித்தனான கோவலெவ்வுக்கு இந்த நினைப்பு மிகுந்த வேதனையைத் தருகிறது.

காணாமல் போன அவனுடைய மூக்கைப் பற்றி தலைமை போலீஸ் அதிகாரியிடம் புகார் கொடுப்பதற்காக முகத்தைக் கையால் பொத்திக் கொண்டே கோவாலேவ் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் தெருக்களில் நடக்கிறான். அப்போது அவன் மூக்கு அவனைவிட உயர்ந்த அதிகாரியின் உடுப்பில் தெருவில் நடந்து போவதைக் கோவாலெவ் பார்க்கிறான். கோவாலெவ் மூக்கைத் துரத்திக் கொண்டு ஓடும்போது மூக்கு நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்ட்டிலுள்ள காஸான் தேவாலயத்துக்குள் போகிறது. தன்னைவ்விட உயர்ந்த அதிகாரியின் சின்னங்களை அணிந்திருக்கும் மூக்கிடம் கோவாலெவ் நெருங்கிப் போய் அது தன்னைவிட பதவியில் உயர்ந்தது என்பதால் மிகுந்த தயக்கத்துடனும் பயத்துடனும் தனது முகத்துக்குத் திரும்பி வந்துவிடும்படி மன்றாடுகிறான். ஆனால் மூக்கு மறுக்கிறது. தேவாலயத்துக்கு வந்த ஒரு அழகான இளம்பெண்ணிடம் கோவாலெவ்வின் கவனம் ஒரு கணம் திரும்பவே அதைப் பயன்படுத்திக் கொள்ளும் மூக்கு தேவாலயத்தைவிட்டுத் தப்பித்துப் போகிறது.

கோவாலெவ் போலீஸாரிடம் புகார் கொடுத்தும் எவ்வித பயனும் இல்லாமல் தன் வீட்டுக்குத் திரும்புகிறான். செய்தித்தாளில் தொலைந்துபோன தனது மூக்கைப் பற்றி விளம்பரம் கொடுக்கிறான். ஆனால் மூக்கைத் தொலைத்தவன் என்ற அவப்பெயர் தனக்கு வந்துவிடும் என்று அஞ்சி ‘இன்னின்னாருக்குத் தெரிந்தவனான என்னுடைய மூக்கு தொலைந்து போய் விட்டது’ என்பதுபோல் விளம்பரம் தருகிறான்.

களைத்துப்போய் கோவாலெவ் வீட்டிற்குத் திரும்புகிறான். அப்போது போலீஸ்காரர் ஒருவர் அவன் வீட்டின் கதவைத் தட்டி செயிண்ட் பீட்டஸ்பர்க்கிலிருந்து தப்பித்து ஓட முயலும்போது அவன் மூக்கு பிடிபட்டதாகச் சொல்கிறார். அவனுடைய மூக்கை கோவாலெவ்விடமே ஒப்படைக்கிறார். ஆனால் மருத்துவரை அழைத்து வந்தும்கூட கோவாலெவ்வால் தனது மூக்கை மீண்டும் முகத்தில் ஒட்ட முடியவில்லை. அவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் தாயார்தான் அவன்மீது செய்வினை வைத்துவிட்டதாக நினைத்து கோவாலெவ் அவளுக்கு மிகுந்த ஆத்திரத்தில் கடிதம் எழுதுகிறான்.

சில நாட்களுக்குப் பின் கோவாலெவ் தூக்கத்தைவிட்டு எழும்போது அவனுடைய மூக்கு மீண்டும் முகத்தில் பொருந்தியிருப்பதைக் காண்கிறான். கோவாலெவ் மறுபடியும் வேலைக்குப் போகவும், பெண்களைத் தேடவும் தயாராகிறான்.

‘மேலங்கி’ சிறுகதையில் (1842) அகாகி பாஷ்மாச்கின் என்ற ஒன்பதாவது படிநிலை கவுன்சிலரின் கந்தலாகிப் போன மேலங்கியைப் பார்த்து அவனுடைய அலுவலகத்தில் வேலைபார்க்கும் இளம் ஊழியர்கள் பரிகாசம் செய்கிறார்கள். அகாகி தனது மேலங்கியில் உள்ள ஓட்டைகளைத் தைத்துத் தர முடியுமா என்று பெட்ரோவிச் என்ற தையற்காரனிடம் கேட்கிறான். தைத்துத் தரும் நிலைமையை எல்லாம் மேலங்கி தாண்டிவிட்டது என்று பெட்ரோவிச் அகாகியிடம் சொல்கிறான். மேலங்கியைப் பற்றிய நினைப்பு அவன் மனதை எந்நேரமும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, அகாகி வாயையும் வயிற்றையும் கட்டிக் கடைசியில் புது துணி வாங்கிப் பெட்ரோவிச்சை வைத்து ஒரு புதிய மேலங்கியைத் தைத்துக் கொள்கிறான். அந்தப் புதிய அங்கியை அலுவலகத்துக்கு அவன் அணிந்து கொண்டு செல்லும்போது அவனுடைய மேலதிகாரி அகாகியின் புதிய மேலங்கியைக் கொண்டாடும் விதமாக ஒரு விருந்துபசரிப்பை நடத்துகிறார். விருந்துபசரிப்பு முடிந்து வீட்டிற்குப் போகும் வழியில் திருடர்கள் அகாகியின் மேலங்கியைத் திருடுகிறார்கள். மனமுடைந்து போன அகாகி சக ஊழியன் ஒருத்தனின் பேச்சைக் கேட்டு மிகவும் உயர் பதவியில் இருக்கும் ஒருவரின் உதவியை நாடுகிறான். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அரசாங்க அதிகாரிகளை அவனையும் அறியாமல் குறை கூறுகிறான். இதைக் கேட்டுக் கோபமடைந்த அதிகாரி அகாகியை மிகக் கடுமையாக ஏசுகிறார். இதனால் அகாகி மிகுந்த அதிர்ச்சிக்கும் பாதிப்புக்கும் உள்ளாகிறான். விரைவில் இறந்தும் போகிறான்.

மூக்கும் மேலங்கியும் மனிதர்களுக்கு எந்த வகையிலும் இன்றியமையாத பொருள்கள் அல்ல. மூக்கின் மேல்பகுதியோ மேலங்கியோ தொலைந்து போனால்கூட மனிதர்களால் எப்படியாவது உயிர் வாழ்ந்துவிட முடியும். ஆனால் அவை சமூகத்தில் மனிதர்களின் மதிப்பை நிலைநாட்டும் கௌரவ சின்னங்கள்.

ஒரு மனிதனின் உண்மையான தகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவனுடைய வெகு மேம்போக்கான அம்சங்களான மூக்கையும் மேலங்கியையும் வைத்து அவனை எடைபோடும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கின் பைத்தியக்காரத்தனத்தை கோகோல் இந்தக் கதைகளின் வழி விமர்சனம் செய்கிறார். செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மக்களின் இந்தப் போலித்தனத்தைக் கோகோல் இந்த இரண்டு கதைகளிலும் தோலுரித்துக் காட்டும் விதம் மிகவும் ரசிக்கத்தக்கது.

கோவாலெவ்வின் மூக்கை மட்டும் வைத்துக் கொண்டு ஈவான் யாகோவ்லெவிச் அது கோவாலெவ்வின் மூக்கு என்று அடையாளம் கண்டு கொள்கிறான். உயரதிகாரின் சீருடையிலிருக்கும் மூக்கு செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கின் பிரதான சாலையான நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்ட்டில் தடையின்றி எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாகப் போய் வருகிறது. ரஷ்யாவின் மிக முக்கியமான தேவாலயங்களில் ஒன்றாகக் கருதப்படும் காஸான் தேவாலயத்தில் பிரார்த்தனையில் கலந்து கொள்கிறது. அதை யாரும் விநோதமாகப் பார்க்கவில்லை.

ஆனால் மூக்கில்லாமல் போனாலும் மற்றபடி முழு மனிதனாகவே இருக்கும் கோவாலெவ் சுதந்திரமாக வெளியே போக முடியாமல் இருக்கிறான்.

‘மேலங்கி’ கதையில் சாதாரணமாக தங்களைவிட மூத்த அதிகாரியைப் பரிகாசம் செய்யத் தயக்கம் காட்டக்கூடிய இளநிலை ஊழியர்கள் மேலங்கி இற்றுப்போகும் நிலையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காகத் தயக்கமே இன்றி அகாகியைக் கேவலப்படுத்துகிறார்கள். அதே சமயம், தனக்குக் கீழுள்ளவர்களை மதிக்கத் தேவையே இல்லாத மேலதிகாரிஅகாகியின் புதிய மேலங்கி நிமித்தமாக அவனுக்கு ஒரு விருந்துபசரிப்பை ஏற்பாடு செய்கிறார்.

’நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்ட்’, ‘பைத்தியக்காரனின் நாட்குறிப்பு’ ஆகிய கதைகளில் தனிமனிதர்களை மட்டுமே பாதித்த மனப்பிறழ்ச்சி ‘மூக்கு’ சிறுகதையிலும், ‘மேலங்கி’ சிறுகதையிலும் மொத்த செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தையே பாதிப்பதாகக் கோகோல் காண்பிக்கிறார்.

கோகோலின் பார்வையில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகர மக்கள் எல்லோருமே தங்களைச் சுற்றியிருக்கும் மனிதர்கள், பொருள்களின் உண்மையான மதிப்பை அறிய முடியாதவர்களாக பளபளப்பான பொருள்களில் மதிமயங்கிவிட்ட பைத்தியக்காரர்களாகவே காட்சியளிக்கிறார்கள். அக்ஸெண்டியை அடைத்துவிட்ட மனநோயாளிகள் விடுதியைப்போலவே செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மாற்றப்படுகிறது. உண்மை மதிப்பீடுகளைத் தொலைத்துவிட்டவர்களாக வெளிச்சம் மிகுந்த அந்த நகரத்தின் மனிதர்கள்உருமாறுகிறார்கள்.

6

                 கோகோலின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் கதைத் தொகுப்பின் ஐந்தாவது கதையான ‘ஓவியம்’ கதையில் வறுமையில் சிரமப்படும் இளம் ஓவியன் கிழவன் ஒருவனின் ஓவியத்தை செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் கடை ஒன்றில் பார்க்கிறான். ஓவியத்திலுள்ள கிழவனின் கண்கள் அச்சமூட்டும் வகையில் தத்ரூபமாக இருக்கின்றன. ஏதோ ஒரு உந்துதலால் இளம் ஓவியன் தனது கையிலுள்ள பணத்தையெல்லாம் கொடுத்து அந்த ஓவியத்தை வாங்குகிறான். ஓவியத்தை வாங்கி வீட்டில் மாட்டிய பின் ஓவியன் மூன்று முறை கிழவன் பை நிறைய பணத்தோடு ஓவியத்திலிருந்து வெளியே வருவதுபோல் கனவு காண்கிறான். பின்னர் ஓவியத்தின் சட்டத்திற்குள் ஆயிரம் பொற்காசுகள் ஒளித்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு பிடிக்கிறான். அந்தப் பணத்தை வைத்து அவன் சொகுசாக வாழ்ந்தாலும் அவன் வரையும் ஓவியங்கள் மெல்ல மெல்ல ஆரம்பக் காலத்தில் இருந்த தங்கள் உயிரோட்டத்தை இழந்து வருவதை அவன் காண்கிறான்.

தனது கலை தன் கையை விட்டுப் போகும் கவலையால் மெல்ல மனநோயாளியாக மாறும் ஓவியன் சிறந்த ஓவியங்களையெல்லாம் வாங்கி அவற்றை எரிக்க ஆரம்பிக்கிறான். கடைசியில் நோய்வாய்ப்பட்டு இறந்தும் போகிறான். கதையின் பிற்பகுதியில் அந்த ஓவியம் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் வட்டித்தொழில் நடத்திய ஒரு விசித்திரமான கிழவனின் ஓவியம் என்று வாசகனுக்குத் தெரிய வருகிறது. அந்தக் கிழவன் யாருக்கும், எந்தத் தொகையும் கொடுக்கக் கூடியவனாக இருந்திருக்கிறான். ஆனால் அவனிடம் கடன் வாங்கியவர்களில் பல பேர் அகால மரணமடைகிறார்கள். பலர் தங்கள் இயற்கையான சுபாவத்தைவிட்டு தீய குணமும் வன்முறையும் உடையவர்களாக மாறுகிறார்கள்.

வட்டிக்குவிடும் அந்தக் கிழவன்தான் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம். எந்தத் தொகையையும் யாருக்கும் தரும் ஆற்றல் உடையது. அதன் கண்கள் அசாத்திய வெளிச்சத்தோடு பளபளப்பவை. ஆனால் அந்தப் பெருநகரத்தோடு தொடர்பு கொண்டவர்கள் தங்கள் இயல்பைக் கண்டிப்பாக இழப்பார்கள்.

சிலர் தாங்களே அழிந்து போகவும் கூடும்.

‘ஓவியம்’ கதையில் வரும் இளம் ஓவியனுக்கு நிகழ்ந்ததைப்போல் அவருடைய திகாங்கா கதைகள் போன்ற ஆரம்பக்கால எழுத்திலிருந்த உயிரோட்டத்தை செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் திருடிக் கொண்டதாகக் கோகோல் நினைத்தாரா என்பது இந்தக் கட்டுரையின் நோக்கத்துக்கு அப்பாற்பட்ட கேள்வி. ஆனால் கோகோலின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் வாசம் ஒரு எழுத்தாளனாய் அவரைப் பலமாகப் பாதித்தது என்பது சந்தேகத்திற்குஇடமில்லாதது. சமூகச் சீர்கேடுகளாலும் போலித்தனங்களாலும் மனிதர்களிடையே ஏற்படக்கூடிய சீரழிவைப் பேசிய கோகோலின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் கதைகள் பிற்கால ரஷ்ய இலக்கியத்தின் உன்னத வளர்ச்சிக்கு ஒரு புதிய பாதையை அமைத்துத் தந்தன. 

அந்த உன்னத வளர்ச்சிக்குக் காரணமானவர்களில் மிக முக்கியமானவரான தஸ்தவ்யஸ்கியே கோகோலின் இந்தப் பங்களிப்பை உணர்ந்து கொண்டிருக்கிறார்.  “நாங்கள் (எழுத்தாளர்கள்) எல்லோரும் கோகோலிடமிருந்துதான் வந்தோம்” என்று தஸ்தவ்யஸ்கி சொன்னதாக ஒரு குறிப்பு இருக்கிறது.

பிற படைப்புகள்

Leave a Comment