முன் செல்லாத கதைகள்
கே.என்.செந்தில்

by olaichuvadi

 

பிராந்திய மொழிகளுக்கிடையிலான ஊடாட்டாங்களும் பாய்ச்சல்களும் தமிழுடன் கணிசமாக நிகழ்ந்த மொழிகளென மலையாளம், கன்னடம், வங்கம் ஆகிய மூன்றைச் சொல்லலாம். அவற்றிலும் கொடுத்தவற்றைக் காட்டிலும் பெற்றவைகளே அதிகம். ஆம். இங்கிருந்து சென்றவற்றை கணக்கிட்டால் நிதானமாக கூறிவிட முடியும் என்கிற அளவிற்கு அவை சொற்பமான ஆக்கங்களே. ஆனால் பெற்றவைகளைச் சொல்லத் தலைப்பட்டால் மூச்சு முட்டும்படிக்கு எறும்பு வரிசை போல ஒன்றையடுத்து ஒன்றென அதன் எண்ணிக்கை நீளமாக வந்து கொண்டே இருக்கக்கூடும். அவ்வகையில், 2015-ல் ஆங்கிலத்தில் வெளியான இத்தொகுதி மிகக் குறுகியகால இடைவெளியில் மறுஆண்டே இங்கு மொழிபெயர்க்கப்பட்டுவிட்டது. அதற்கான முதன்மைக்காரணம் யுவ(புரஸ்கார்) விருதின் மூலம் ஆசிரியர் மீது விழுந்த வெளிச்சமே. ஆயினும் முன் தீர்மானங்கள் ஏதுமின்றி வாசிக்க கையிலெடுத்த போதும் இத்தொகுப்பு ஏமாற்றத்தையே அளித்தது.

தமிழில் எவ்வாறு மிகச்சாதாரண ஆக்கங்கள் யுவ விருதுக்கு இதுகாறும் தெரிவு செய்யப்பட்டதோ அது போன்றேதான் இந்நூலின் தேர்வும் என்பது புலனானது. பெறுமொழிக்கு எவ்வித மலர்ச்சியையும் நல்காத, ஊட்டத்தை அளிக்காத கதைகள் இவை. தமிழ்ச்சிறுகதைகள் பழகித் தோய்ந்த தடங்களையும் வேறு மொழியாக்கங்கள் வழி முன்பே அடையப் பெற்று விட்ட உணர்ச்சிகளையுமே பெயர், இடம், வாழ்நிலைகளை மாற்றிப் போட்டு இக்கதைகளும் அளிக்கின்றன. அலுப்பூட்டும் கருப்பொருளைக் கொண்டிருக்கும் சில கதைகளைக் கடக்கையில் அவை போதாமையின் பள்ளத்தில் கிடப்பதை, பல பத்தாண்டுகளுக்கு முன்னரே இங்கு மென்று துப்பிய சக்கைகளை தன் கூடாரம் என அக்கதைகள் அமைத்துக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.

பத்துக் கதைகளைக் கொண்டிருக்கும் ஹண்ஸ்டா செளவேந்திரசேகரின் ‘ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்’ ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள ஆதிவாசிகளான சாந்தால் இன மக்களை உள்ளும் புறமுமாகப் பிணைத்துள்ள வாழ்க்கையின் இடர்களை, அவர்கள் பொது சமூகத்துடன் அதன் நீரோடத்துடன் கலக்க முடியாத நிலைமையை, சுரண்டலின் வெவ்வேறு முகங்களைக் காட்டித் தருகிறது. மட்டுமல்ல அவர்களது வெகுளித்தனத்தை நகைப்பதற்கும், ஆக்கிரமித்து அடிமை செய்வதற்கும் ‘பண்பட்டசமூகம்’ ஒருங்கே பயன்படுத்திக் கொள்வதையும் சேர்த்தே சொல்கிறது. மருத்துவரான இத்தொகுதியின் ஆசிரியர் சேகர் அதே பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். எனவே அவர் நேரில் கண்டவையும் பெற்றவையுமே கதைகளாக ஆகியிருக்கலாம் என யூகிக்க இடமுண்டு.
இவர்களது வாழ்க்கைப் பின்னணி – குறிப்பாக சாந்தால் பழங்குடிகளின் – அதன் பேதங்களுடன் கால் நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தமிழில் மொழிபெயர்ப்பின் வழியாக வந்து சேர்ந்துவிட்டது. மஹா ஸ்வேதா தேவி தன் வாழ்க்கையை அர்ப்பணித்து அவர்களை முன் நிறுத்தி எழுதிய ஆக்கங்களே அவை. அவரே தெரிவு செய்து அளித்த கதைகளின் தொகுப்பு (மஹாஸ்வேதாதேவியின்சிறுகதைகள்- தமிழில்: என்.எஸ்.ஜெகந்நாதன், நேஷனல்புக்டிரஸ்ட்) 1999-ம் ஆண்டு வெளி வந்துள்ளது. இதற்கும் முன்பே அவரது நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டு விட்டன. புதிய தலைமுறையைச் சேர்ந்த சேகரின் இக்கதைகள் மஹா அளிக்காத எதையும் தரவில்லை. மாறாக பல படிகள் கீழ் நோக்கி (கருப்பொருளிலும் கதை சொல்லலிலும் நுட்பத்திலும்) சென்றிருக்கின்றன. மஹா அவர்களது வாழ்க்கை சார்ந்து அளித்த நுண்ணிய தகவல்கள் (பாயன்), அவர்களுக்கே உரித்தான பிரத்யேகச் சூழல்கள் (பேஹுலா), பிரச்சனைகளின் தீவிரங்கள்(திரெளபதி), ‘மூடநம்பிக்கை’எனச் சமூகம் கருதும் பலவும் அவர்களது வாழ்க்கை முறைமைகளில் ஒன்றெனக் காட்டிச் செல்லும் நுட்பம் (மாலையும் காலையும் நீ அம்மா), அந்தச் சுரண்டலைக் கூட வெகு உக்கிரமாகச் சொல்லிச் செல்லும் நேர்த்தி போன்றவை சேகரின் கதைகளில் வசப்படவில்லை.

முற்போக்கு அம்சங்கள் மஹாவின் கதைகளில் உள்ளது (விதை, வேட்டை) என்ற போதும் மனதின் அல்லல்களைக் குறித்தும் அவர் எழுதியிருப்பதை (ராங் நம்பர்) நினைவுபடுத்திக் கொள்ளலாம். புதியவர் ஒருவரை துறைபோகியவருடன் ஒப்பிடுவது சார்ந்து மாற்றுக்கருத்துகள் இருக்ககூடும். அப்புதியவர் இதுவரை தன் இனமக்கள் சார்ந்து மொழிப்புலத்தில் என்னென்ன நடந்திருக்கிறது என அறிந்திருப்பதும் அதிலிருந்து முன்னகர்ந்து சென்றிருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பதும் தவறில்லை.

சாந்தால் பழக்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் மைய நீரோட்டத்தில் கலந்து அரசுப்பணிக்கும் பிற வேலைகளுக்கும் செல்கையில் சந்திக்க நேரும் பிரச்சனைகளின் மீது கவனம் கொண்டிருக்கும்,அதிலும் 21ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அந்த இனமக்களின் இத்தகைய நெருக்கடிகளை எதிர்கொள்வதைச் சொல்லும் தொகுப்பின் முதல் கதை ‘அசைவம் சாப்பிடுகிறவர்கள். தங்கள் இடத்திலிருந்து பணி மாற்றத்தின் பொருட்டு குஜராத்தின் வதோராவுக்கு வருகிறார்கள். அங்கு யாரும் அசைவம் உண்பதில்லை. வீடு வாடகைக்கான அலைச்சலிலும் கூட அது குறித்துத் தீர விசாரித்த பின்பே வீடு தர ஒப்புக்கொள்கிறார்கள். அந்த இடத்தில் முட்டை வாங்குவது கூட இமாலாயச் சாதனைக்கு ஒப்பானது. இதிலிருந்தே அதன் தீவிரத்தைப் புரிந்து கொள்ளலாம். சைவம் மட்டுமே சாப்பிட அனுமதிக்கப்பட்டிருக்கிற அந்த ஊரில் பெஸ்ட் பேக்கரிக் கலவரம் கொழுந்து விட்டு எரிகையில் அந்த நபர்களே எவ்வாறு நடந்து கொள்கிறார்கள்? யாரையெல்லாம் கொளுத்துகிறார்கள் என்று காட்டும் சேகர் அதன் மூலம் அதற்குச் சம்பந்தப்பட்டவர்களை மிக நேரடியாக விமர்சிக்கிறார். இது தொகுப்பின் நல்ல கதைகளுள் ஒன்று.

நிலக்கரிச் சுரங்கத் தொழில் ஜார்க்கண்டில் உருவாக்கி விட்டிருக்கும் விரும்பத்தகாத மாற்றங்களால் பழங்குடிகள் நிலமிழந்து நிர்கதியாக நிற்கும் துயரம், அவர்களின் மீது நிகழ்த்தப்படும் அத்துமீறல்கள் போன்றவை சில கதைகளின் களன்களாக அமைந்துள்ளன. மஹா ஸ்வேதா தேவி எழுதிய காலத்துக்கும் இப்போதுள்ள காலத்துக்கும் எவ்வித மாற்றமும் அங்கு நிகழ்ந்து விடவில்லை என்பது புரிகிறது. சுரண்டலின் களன்களும் முதலாளிகளின் முகங்களுமே மாறியுள்ளன. வேறெந்த வித்தியாசமுமில்லை அம்முதலாளிகள் நவீனமானவர்கள் என்பது தவிர. ‘புலம்பெயரத் தகுந்த மாதம் நவம்பர்’கதையில் சாந்தால் இனத்தைச் சேர்ந்த 20 வயது பெண் குடும்பத்தின் வறுமையில் தன் பசியை தற்காலிகமாக ஆற்றிக் கொள்ள ஜவான் ஒருவனுடன் அவன் அளிக்கும் ஐம்பது ரூபாய்க்கும் தின்பண்டத்துக்கும் விலைபோகிறாள். இதன் உட்பொருளை மட்டும் எடுத்துக்கொண்டால் புதுமைப்பித்தன் ‘பொன்னகரம்’(1934) கதையை இங்கு முப்பதுகளிலேயே எழுதிவிட்டிருப்பது தெரிய வரும். சூழ்நிலையின் வேறுபாட்டைக் கடந்து அது உணர்த்த விரும்புவதன் சாரம் ஒன்றென்பதைக் காணலாம்.

தொகுப்பில் எடுத்துப் பேசத்தக்க மற்றொரு கதை ‘ஏற்றத்தாழ்வுஇல்லை’. கதையில் அந்தச் சாந்தால் இன மருத்துவரின் மனதில் உறைந்திருக்கும் வரலாற்றுப் பழியுணர்வு, அவர் செயல்படும் முறையை ஏதோ ஒரு விதத்தில் சமன் செய்கிறது. இக்கருப்பொருளைச் சேகர் கையாண்டிருக்கும் நேர்த்தியால் இது வலுவான கதையாகமாறியிருக்கிறது.

தொகுப்பின் தலைப்புக்கதையான ‘ஆதிவாசிகள் இனி நடனமாட மாட்டார்கள்’தங்களது நிலங்களைப் பிடுங்கி வெளியேற்ற முனையும் பன்னாட்டுக் கம்பெனிகளை எதிர்த்து புகழ் மங்கிவிட்ட ஆதிவாசி நடனக்குழு ஜனாதிபதியின் முன் ஆட மறுப்பது பற்றியது. அவர்களுள் மூத்தவர் இதன் பொருட்டு பெறும் அடியின் வலியிலிருந்து தன் மொழியில் சொல்லிச்செல்லும் கதை இது. இதன் வெவ்வேறு சாயைகள் கொண்ட கதைகள் மொழியாக்கங்கள் வழி முன்னரே இங்கு அறிமுகமாகிவிட்டன.

பிற கதைகளைப்பற்றிக் குறிப்பிட்டு எழுத எழுதுவுமில்லை. துயரக் குடும்பமொன்றில் பிறந்த குழந்தை காய்ச்சலில் விழுகிறது. அம்மா வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். ஜிலேபி கேட்கிறது குழந்தை. வேலை முடித்து வாங்கி வருவதற்குள் இறந்து போய்விடுகிறது. இது போன்ற துயர நாடகங்களைத் தமிழ்க்கதைகள் கடந்து வந்து அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது. ‘பகையாளியோடு உணவு உண்ணுதல்’ என்ற குறிப்பிடத்தக்க கதையைத் தவிர மீதமிருப்பவை மேற்சொன்ன வகைப்பாட்டுக்குள் அடங்கிவிடுபவைதான்.
ஆழம் அதிகம் இல்லாத எழுத்து என்பதால் லியோ ஜோசப் சரளமாக மொழிபெயர்த்திருக்கிறார். நவீன தமிழ்ச் சிறுகதைகளின் மீது இத்தொகுதி எவ்வித சலனங்களையும் உருவாக்காது. வேறு மொழியில் இருந்து நூல்கள் தெரிவு செய்யப்படும்போது அதன் பெறுமதிப்பு குறித்தும் அதன் வருகை உருவாக்கும் பலன்களைப் பற்றியும் யோசிப்பது நல்லது. அத்தகு எண்ணங்களால் தூண்டப்பட்டு தேர்வு செய்த கதைகளின் தொகுதி அல்ல இது.

(சேலம் தக்கை அமைப்பு நடத்திய சிறுகதை நூல்கள் விமர்சனக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் கட்டுரைவடிவம்)

‘ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்’- ஹண்ஸ்டா செளவேந்திரசேகர், தமிழில் : லியோஜோசப் – பக்.192 ; விலை. ரூ.180, எதிர்வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி-642002.

 

பிற படைப்புகள்

Leave a Comment